மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 7

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

''நா இப்பிடியே மொட்ட மாடிக்குப் போயிக் குதிச்சுருவேன். மச்சான் அப்பிடியே அள்ளிக் கட்டி எம் பொண் டாட்டிட்ட ஒப்படைச்சுரு...''

போன வாரம் ராஜேஷிடம் இருந்து போன். பால்ய நண்பன் இப்போது இந்தியன் வங்கியில் துணை மேலாளர்.

 ''மாப்ள சென்னைக்கு வந்திருக்கேன். காஞ்சியில ரூம் போட்ருக்கேன். ஈவினிங் வந்துர்றா...''

''சந்திப்போம் மச்சான்...''

''உனக்கு கொரியன் நெப்போலியன் ஓ.கே - தான? சினிமாக்காரன் ஆனதும் ரெமி மார்ட்டினைத் தவிர எதையும் டச் பண்றது இல்லைனு சொல்வீங்களேடா...''

''சொன்னா நம்ப மாட்டே... இப்போ நான் சரக்கே அடிக்கிறது இல்ல.''

வட்டியும் முதலும் - 7

''பார்றா... கொரங்கு வாழப்பழம் வேணாங் குது. வாங்க பாஸு... வாங்க பாஸு...''

8 மணி வாக்கில் நான் ஹோட்டலுக்குப் போனபோதே, ராஜேஷ§ம் சுல்தானும் பாதி பிரேம்ஜி ஆகியிருந்தார்கள். சுல்தானும் எங்கள் செட்டுதான். மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றில் மேலாளராக இருக்கிறான்.

நான் குடிப்பதை நிறுத்திவிட்டதை ராஜேஷால் ஜீரணிக்க முடியவில்லை. ''அஞ்ஞ்ஞ்ஞ்சு வயசுல்ல்ல்ல... அர்ர்ருவாப் புடிச்சி... அர்ர்ர்றுத்துப் பழகுனவன் நீ... கிச்சுகிச்சுகிச்சு...'' என கோட்டா சீனிவாச ராவ் குரலில் நக்கலடித்தான். கொடுமையின் கொடுமை என்னவெனில், சரக்கு அடிப்பதை நிறுத்தியவர்கள், சரக்கு அடிப்பவர்களோடு உட்கார்ந்து சைடு டிஷ் தின்பதுதான்.

பொதுவாக, தண்ணி அடிக்கும்போது ஒருவனது உள் மற்றும் வெளிமுகப் பயணம் என்பது புத்தன், முத்தன், சத்தன், பித்தன், எத்தன், ரத்தன், சித்தன் என ஏழு நிலைகளைக்கொண்டது.

எதிர்பார்த்ததைப்போலவே அடுத்த பெக்கில் மிகப் பெரிய ஃப்ளாஷ்பேக்குக் கான டிரெய்லரை கட் பண்ண ஆரம் பித்தான் ராஜேஷ்.

''அன்னிக்குத் திருவாஞ்சியம் கோயில்ல சித்ராவைப் பார்த்தேன்டா. பொம்ம்ம்முனு பலூன் மாரி உப்பிட்டாடா மாப்ள. என்னைப் பார்த்தும் பாக்காமலே போயிட்டாடா. ஆர்.கே.வி. வாத்தி வீட்ல டியூஷன் போறப்போ நடந்தது எல்லாம் ஞாபகம் வந்துருச்சுறா...''

பள்ளிக்கூடம், நண்பர்கள், காதல்கள், வெட்டாறு, கீரந்தங்குடி திருவிழா, மாதா கோயில், எம்.ஆர்., பூண்டி கலைச்செல்வம் என போதையின் மம்பட்டி வெட்ட வெட்ட... ஆறாகப் பெருக்கெடுக்கின்றன நினைவுகள்.

வட்டியும் முதலும் - 7

அஞ்சாறு ரவுண்டு முடிந்ததும், ''எனக்கு எவனும் வேணாம் மாப்ள... செத்தா தூக்கிப்போட நீங்க மட்டும் வந்தாப் போதும்டா'' என அழ ஆரம்பித்தான் சுல்தான். அவனைச் சமாதானப்படுத்திவிட்டு, நான் ஒரு போன் பண்ண வெளியே வந்தேன்.

கொஞ்ச நேரத்தில் உள்ளே போய்ப் பார்த்தால், சென்டிமென்ட் முடிந்து ஆக்ஷன் ப்ளாக்...

''டேய்! உனக்கெல்லாம் என்னைப் புரியாதுறா...''

''நீ பேசாத... கௌம்பு மச்சான்... ப்ளீஸ்... கௌம்பிரு...''

''சரி, கௌம்புறேன்டா... இந்தா பார்றா முருகா... நண்பன் சொல்லிட்டான், நா கௌம்பிக்கிறேன். குட் பை...''

பால்கனி வழியாகத் தற்கொலைக்கு  குதிக்கப்போன ராஜேஷை நான் இழுத்து வந்து உட்காரவைத்தேன்.

அதற்குள்,

''நா இப்பிடியே மொட்ட மாடிக்குப் போயிக் குதிச்சுருவேன். மச்சான் அப்பிடியே அள்ளிக் கட்டி எம் பொண் டாட்டிட்ட ஒப்படைச்சுரு...''

என சுல்தான் கிளம்பினான். இரண்டு பேரையும் சமாதானப்படுத்திவிட்டு, வீட்டுக்குக் கிளம்புவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

அங்கிருந்து கிளம்பி வரும்போதுதான் போதைபற்றிய ஏராளமான நினைவுகள் எனக்குள் சுழன்றன. ஜாலி, கேலி, சிரிப்பு, அழுகை, அன்பு, பிரிவு, மரணம் என இந்த போதை எத்தனை எத்தனை மாயங்களை நிகழ்த்திவிடுகிறது? நேற்று நான் அவஸ்தைபட்டதைப்போல, நான் எத்தனை பேரை அவஸ்தைப் படுத்தி இருக்கிறேன். யோசித்துப் பார்த்தால், கடந்த 10 வருடங்களில் 'நைட்டு நான் எதாவது தப்பாப் பேசிட்டேனா?’ என்கிற கேள்வி என்னைத் துரத்திக்கொண்டே இருந்திருக்கிறது. இதை யாராவது என்னிடமோ, நான் யாரிடமோ கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம்!

சாராயத்துக்கும் எனக்குமான தொடர்பு அப்பாவிடம் இருந்து தொடங்கியது. கல்யாணமோ, கருமாதியோ, கறி விருந்தும் சாராயமும்தான் எங்கள் ஊரின் சந்தோஷமும் துயரமும். தெருவில் விசேஷம் விருந்து யாருக்கு என்றாலும், எங்கள் வீடுதான் கதைக் களம். அப்பாதான் கதை நாயகன். விருந்து நாளின் அதிகாலையில் தளபதி நடராஜன் மாமாவோடு வரும்போது, அந்த ராஜராஜ சோழனே உயிர்த்து வந்ததைப் போல இருக்கும் அப்பாவின் ஓப்பனிங் ஷாட். வீட்டில் பத்தாயம், மாட்டுக் கொட்டகைப் பரண், வெறகுக் கொட்டாயி, பைப்படி என எங்கெங்கும் சரக்கு பாட்டில்களின் புதையல் இருக்கும். பெண்கள் சமையலிலும் கூடத்து அரட்டையிலும் இருக்கும்போது, வீட்டைச் சுற்றிலும் ஆண்களின் சரக்கு தர்பார் நடக்கும். அப்பா கிடா மீசையைக் கையால் நீவி, 'ம்க்க்கும்... ம்க்க்கும்...’ எனக் கனைத்தபடி சமையல் கட்டளைகளைப் பிறப்பித்தபடி சாராய வீச்சத்தோடு அங்கும் இங்கும் நடந்துகொண்டே இருப்பார். விசேஷமும் விருந்தும் அன்றோடு முடிந்துவிடும். ஆனால், சாராயம் போகாது.

பெரும்பாலும் அப்பா தினமும் குடிப்பார். கண்கள் கலங்கி மின்ன அப்பா வீட்டுக்குள் நுழையும்போதே, அம்மாவின் பார்வையில் அக்னி மூளும். போதையில் அப்பா வாங்கி வந்த பக்கோடாவை எங்களுக்கு ஊட்ட வருவார். தலையைக் கோதி கை கால்களை அமுக்கிவிடுவார். திடுதிப்பென்று அம்மாவுடன் சண்டை வந்து சாப்பாட்டுத் தட்டை எட்டித் தள்ளிவிட்டு வெளியே போய்விடுவார். பற்பல அதிகாலைகளில் சாமி ரூமில் அம்மாவிடம் 'இனிமே குடிக்க மாட்டேன்’ என அப்பா சத்தியம் செய்யும் காட்சிகள் எங்களுக்குப் பழகிப் போய் இருந்தன.

அதே குடியினால்தான் அப்பா செத்துப்போனார். முதல் முறை தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரியில் சேர்த்தபோது, மிகவும் பலவீனமாக வராந்தாவைப் பிடித்தபடி நின்ற அப்பாவின் உருவம் எப்போதும் அழியாத சித்திரம். ஒரு முறை, தண்ணிக் காவலுக்குப் போகும்போது வரப்பில் படம் எடுத்து நின்ற பெரும் பாம்பை, போதையில் ஓர் அய்யனாரைப்போல நின்று 'ச்சூ... ச்சூ’ என அலட்சியமாக விரட்டிய அப்பாவா இவர்? அப்பா மட்டும் இல்லை... அவரது சாராய சகாக்கள் உதயசூரியன் மாமா, முள்ளால் மாமா, இப்போது கட்டாரி மாமா என எல்லோரும் அல்பாயுசில் போனதற்குக் குடிதான் காரணம்!

ஆனாலும் நானும் குடித்தேன். நடைபாதைகள், நண்பர்களின் அறைகள், அழுக்கு டாஸ்மாக்குகள், ஐந்து நட்சத்திர பார்கள், ரூஃப் கார்டன்கள், வி.ஐ.பி-களின் ஃபார்ம் ஹவுஸ்கள், கடற்கரை வெளிகள், இசை வழியும் கார்கள் என எங்கெங்கோ குடித்து இருக்கிறேன். பார்க் ஷெராட்டன் பார்ட்டியில் பிரகாஷ்ராஜுடன் சியர்ஸ் சொன்னதில் இருந்து, நெல்சன் மாணிக்கம் பாலத்துக்கு அடியில் விக்ரமாதித்யன் அண்ணாச்சியுடன் குடித்தது வரை... அது ஒரு கறுப்புச் சரித்திரம்.

வட்டியும் முதலும் - 7

அருள் எழிலனுடனும் சுரேஷ§டனும் குடிக்கும்போது நான் சே குவேராவின் ஜெராக்ஸ் ஆகிவிடுவேன். கடைசி பெக்கில் இருவரும் காலையில் எழுந்து கிளிநொச்சி போய், யுத்தக் களத்தில் நேரடியாகக் குதிப்பது என முடிவு எடுப்போம். அதிகாலையில் ஆட்டோவுக்கே காசு இருக்காது. பரமுவுடன் குடித்தால், பாடல்களில் நனையலாம். அவன் குடித்துவிட்டு 'அன்புள்ளம்கொண்ட அம்மாவுக்கு’ பாடினால் கரகரவென அழுவதைத் தவிர வேறு வழி இல்லை. பாக்கியம் சங்கர், இளையராஜா வெறியன். குடித்துவிட்டால், 'அழகிய கண்ணே’வில் இருந்து, 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்’ வரை ஏரியா எங்கும் இளையராஜா உருகி ஓடுவார். கூடவே, பாவாடை டான்ஸ் அவரது ஸ்பெஷல் அயிட்டம்!

க.சீ.சிவக்குமார் அண்ணனோடு குடிப்பது ரணகள அனுபவம். ''ஜெயகாந்தனும் சந்திர பாபுவும் சேர்ந்து குடிச்சதை இந்தத் தலைமுறை பார்த்தது இல்லை இல்லையா... நாம சேர்ந்து குடிக்கிறதைப் பார்த்துக் கட்டும்...'' என்பார். ஒரு முறை ராமநாதபுரத்துக்கு நண்பனின் கல்யாணத்துக்குப் போயிருந்தோம். கல்யாணம் முடிந்த கையோடு குடித்துவிட்டு, கடற்கரை போய் உருண்டு எழுந்ததில் உடலெங்கும் கடல். அப்போது தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷ னில் அண்ணனின் நண்பர் மகேந்திரன்தான் இன்ஸ்பெக்டர். அப்படியே இந்த மணல் கோலத்தோடு நாங்கள் போய் ஸ்டேஷனில் நின்றதைப் பார்த்து, மகேந்திரன் வெலவெலத்துப்போவார் என நினைத்தேன். ஆனால், அவர் அலட்சியமாகச் சிரித்தார்.

''சிவக்குமார் ஒரு ஃப்ளைட் டயர்ல தொங்கிக்கிட்டே வந்து இடுப்புல குண்டோட ஸ்டேஷன் மேல குதிச்சாலும் நான் அதிர்ச்சியாக மாட்டேன். ஏன்னா, அவன் குடிச்சா என்ன வேணும்னாலும் நடக்கும்.''

ஒரு சாயங்காலம்... வடபழனியில் இருந்து வந்துகொண்டு இருந்த என்னை நோக்கி, ஒரு ஆட்டோவில் இருந்து குதித்து ஓடி வந்தார் விக்ரமாதித்யன் அண்ணாச்சி.

''வா... எங்கேயாவது போய் உட்கார்ந்து பேசுவோம்...'' - பக்கத்திலேயே இருந்த ஒயின் ஷாப்புக்கு என்னை நெட்டித் தள்ளிக்கொண்டு போனார். பாதிக் குடியில் தடாரென மேஜை மேல் ஏறி நின்றபடி கவிதை சொல்ல ஆரம்பித்த அண்ணாச் சியை மொத்த பேரும் கலவரமாகப் பார்த்தார்கள்.

''ஏன் குடிக்கிறேன் நான் புத்தன் சிவனாக பித்தன் நான் குடிக்கிறேன் இந்தச் சமூகம்தான் என்னைக் குடிக்கவைத்தது இதன் அசிங்கங்கள் குடிக்கவைத்தன குடும்பத்தைப் பிரித்த பொருள் குடிக்க வைத்தது தேவதேவியிடம் கிடைக்காத அருள் குடிக்க வைத்தது...''

என அவர் சொல்லச் சொல்ல... அந்தக் கவிதையை நான் டிஷ்யூ பேப்பரில் எழுதினேன். இப்படியே அன்றைக்கு மட்டும் ஏழெட்டுக் கவிதைகள். வள்ளுவர் கோட்டத் தில் குதித்து, ''கலைஞர் வாழ்க'' என ஓடினார். அண்ணா சாலையில் குதித்து, ''அம்மா வாழ்க'' எனக் கத்தினார். திருவல்லிக் கேணியில் ஒரு பிச்சைக்காரரோடு சீரியஸாக உரையாட ஆரம்பித்தவரைக் கொண்டு போய் நண்பனின் மேன்ஷனில் சேர்ப்பதற்குள் எனக்கு டவுசர் கிழிந்தது. லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய ஒரு கட்டுரையில், ''விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் குடி கொண்டாட்டத்தின் குடி. என்னுடைய குடி வாழும் மரணத்தின் குடி'' என எழுதி னார். உண்மையில், கொண்டாட்டங்கள் எல்லாமே வாழும் மரணத்தின் குடிதான். ஒரு முறை ரமேஷ்வைத்யா அண்ணன் வீட்டுக்குப் போனபோது, அவர் குடித்துக்கொண்டு இருந்தார். அவருடைய அம்மா பக்கத்தில் உட்கார்ந்து, ''துன்பம் நேர்கையில், யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா'' எனப் பாடிக்கொண்டு இருந்த காட்சி என்றென்றும் மறக்க முடியாதது!

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் ஒட்டியுள்ள ஒயின் ஷாப்பில் அடிக்கடி ஒரு பெண்மணியைப் பார்த்து இருக்கிறேன். கைகள் நடுங்க ஒரு குவார்ட்டரை வாங்கி ஒரு ஓரமாக இருளில் ஒதுங்கி கல்ப் அடித்துவிட்டுப் போகும். அதைப் பார்க்க, அப்போது ஆச்சர்யமாக இருந்தது. அதன் பிறகு, கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கியிருக்கும் நண்பன் வினோத்தைப் பார்க்கப் போகும்போது, அங்கே ஒரு பெண்மணி உட்கார்ந்து குடித்துக்கொண்டு இருந்தது. வினோத்திடம் கேட்டபோது சொன்னார்,

''அது டெய்லி ஒரு ஃபுல் அடிக்கும் சார். மொத புருஷன் இதை விட்டு ஓடிட்டான். ரெண்டாவதா ஒருத்தனைச் சேர்த்துட்டு வந்துச்சு. கொஞ்ச நாள்ல அவன் காலையும் அடிச்சு முறிச்சுருச்சு. அவனும் ஓடிட்டான். இப்போ இதோ இந்த ஆளோடதான் இருக்கு. காலையில ஆரம்பிச்சா எப்பவும் போதைலதான் இருக்கும்.''

அந்தப் பெண்மணி குடித்துக்கொண்டு இருக்க, பக்கத்தில் அந்த ஆள் அதற்கு சைடு டிஷ் பரிமாறிக்கொண்டு இருந்ததைப் பார்க்க விசித்திரமாக இருந்தது.

சென்னைக்கு வந்த பிறகு, பப்களில், பார்களில் குடிக்கிற பெண்களைச் சாதாரண மாகப் பார்க்க நேரிடுகிறது. நள்ளிரவில் ஜெமினி பாலத்துக்குக் கீழே தள்ளாடியபடி ஆட்டோவை மறிக்கும் யுவதிகளைப் பார்க்கும்போது திகிலடிக்கிறது. ''ஏன்டா என்னைக் கல்யாணம் பண்ணே... ஏன்டா என்னைக் கல்யாணம் பண்ணே...'' என்றபடி நெசப்பாக்கம் தெரு ஒன்றில் ஒருவரை ஒரு அம்மா இழுத்துப்போட்டு அடித்துக்கொண்டு இருந்தது. நான் அவசரமாகத் தடுக்கப்போனபோது தெருக்காரர் என்னை மடக்கிச் சொன்னார், ''அய்யே தம்பி... ரெண்டு பேரும் ட்ரிங்ஸு...''

வட்டியும் முதலும் - 7

தொடர்ந்து குடிக்கும் நிறைய நண்பர்களிடம் பேசும்போது பெரும்பாலானவர் கள் உறவுகளில் சிதைந்தவர்களாகவே இருக்கிறார்கள். அம்மாவுக்கும் மனைவிக்குமான குடும்பப் பிரச்னையில் சிக்கித் தவிப்பவர்களாய், அன்பின் பிரிவில் துடிப்பவர்களாய், செய்த தவறுகளின் குற்ற உணர்ச்சிகளால் தூக்கம் இழந்தவர்களாய், தேடியது கிடைக்காத ஏமாற்றங்களால், ஏதேதோ ஏக்கங்களால், வலிக்கும் துரோகங்களால், இயலாமையின் மன அழுத்தத்தினால், சமயங்களில் காரணமே இல்லாமல் குடிக்கிறார்கள். ஒரு ஐ.டி. நண்பனைக் கேட்டால், ''ஸ்ட்ரெஸ் நண்பா...'' என்கிறான். குடிப்பது குற்றம், தவறு எனப் பயந்து நடுங்கியது எல்லாம் என் தலைமுறையோடு ஒழிந்துவிட்டது. இப்போது குடிப்பது சமூக மயமாக்கப்பட்டுவிட்டது. பகல்களில்கூட பார்கள் நிரம்பி வழிகின்றன. பதின்பருவத்திலேயே நிறையப் பேர் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெயில் எரிக்கும் சாலைகளில் குடித்துச் சுருண்டுகிடப்பவர்களை அதிகமாகக் காண நேர்கிறது. இவர்கள் எல்லாம் 'எங்கே போவது?’ என அறியாதவர்களா என நெஞ்சம் பதைபதைக்கிறது. எங்கெங்கும் குடித்துவிட்டு, யாரேனும் யார் மீதேனும் அன்பைப் பொழிகிறார்கள், சண்டையிடுகிறார்கள். மொபைலில் கூச்சலிடுகிறார்கள். குடித்துவிட்டு அனுப்பும் குறுந்தகவல்களாலேயே உடைந்த உறவுகள் எத்தனை எத்தனை!

நான் முன்பு தங்கியிருந்த விநாயகா மேன்ஷனில் பக்கத்து அறையில் கேசவன் என்பவர் தங்கியிருந்தார். மலையாளி. ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் அட்டெண்டர் வேலை பார்த்தார். தினமும் குடிப்பார். ''ஏன் சேட்டா இப்பிடிக் குடிக்கிறீங்க?'' என்றால், ''பொறத்தே நெஞ்சு நிறைய வொர்ரிஸ்...'' என்பார். திடு திப்பென்று அவரை மூன்று நாட்க ளாகக் காணவில்லை. நான்காம் நாளில் பெல்ஸ் ரோடு பிளாட்ஃபார்மில் செத்துக்கிடந்தார். எப்படியோ விசாரித்து மேன்ஷனுக் குத் தூக்கிவந்தார்கள். ஆபீஸில் இருந்து வந்த பி.எஃப். பணத்தை வைத்துக்கொண்டு குடித்தபடியே ஊர் சுற்றியிருக்கிறார். உடம்பு தாங்காமல் பிளாட்ஃபார்மில் விழுந்து அடிபட்டு செத்துப்போயிருக்கிறார். அவரது பாக்கெட்டில் இருந்ததாக ஒரு மொபைல் போனைக் கொடுத்தார்கள். அதில் டயல்டு காலில் கடைசி எண்ணாக, 'ஹோம்’ என இருந்தது!

நான் குடிப்பதை நிறுத்தியதற்கு இந்த 'ஹோம்’ ஒரு காரணம். சாராயம் உடலையும் காலத்தையும் தின்றுவிடுகிறது. போதையில் பேரற்புதம்போல் மின்னும் சிந்தனைகளும் பேச்சுகளும் விடியலில் பேரபத்தமான பூதங்களாக எழுந்து நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கின்றன. பல நேரங்களில் குடி, சர்க்கஸ் ஓனரை பஃபூனாக்கிவிடுகிறது. மேலும், சாராயம் சந்தேகப் பிசாசின் கஸின் பிரதர். சாராயத்தால் சில நல்ல இதயங்களை இழந்திருக்கிறேன். போதையில் நான் காயப்படுத்திய நட்புக்கும் அன்புக்கும் செய்யும் கைம்மாறென்பது, அதை நிறுத்துவதுதான் இல்லையா?  

தஞ்சை பிரகாஷ§க்கு குடிப் பழக்கம் கிடையாது. அவர் அடிக்கடி சொல்வார், ''சாராயம்தான் போதைனு பல பேர் நினைச்சுட்டு இருக்கான். அது தப்பு... கடவுள் மனுஷன் ரத்தத்துலயே கொஞ்சம் சாராயத்தைக் கலந்துவிட்டு இருக்கான். பணம், காதல், புகழ், படைப்பு, அதிகாரம், ஆன்மிகம்னு ஒவ்வொண்ணும் போதைதான். போதையை மாத்திப் போட்டா, பாதையே மாறிப்போகும். உன் போதையை சாராயத்துல இல்லை... நல்ல விஷயத்துல போடு!''

உண்மைதான். இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் போதை இருக்கிறது. ஒற்றைக் கோவணத்தோடு கரடு முரடான மலைப் பாதையில் அடிவானம் நோக்கி ரமணர் நடக்கிற ஒரு புகைப்படத்தில் மகத்தான போதை நிரம்பி வழிகிறது. பல ஆண்டுகள் அதிகார வெறியர்களின் வீட்டுக் காவலில் இருந்து வெளியே வந்து மக்களுக்குக் கை காட்டும் ஆங் சான் சூகியின் கண்களில் பெருகித் ததும்புகிறது உரிமைக்கான போதை.

எப்போதோ விகடனில் படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது...

''மனசே சரியில்லை பீச் போலாமா? பார்க் போலாமா? பார் போலாமா? பேசாம வூட்டுக்குப் போ நைனா!''

(போட்டு வாங்குவோம்)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan