ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200
பக்குவம் பழக்குங்கள்!

கடைவீதியில் ஒரு பெண், தன் கணவரிடம் ‘நம்ம குழந்தை அதைக் கேட்கிறான், இதைக் கேட்கிறான்’ என்று அடுக்கினாள். ஆனால், அவள் கூறியதை, கணவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. ஷாப்பிங் முடிந்ததும் ``குழந்தை கேட்டதை வாங்கலையே... உங்ககிட்டே காசுக்கா பஞ்சம்!’’ என்று சிடுசிடுத்தாள். ``சின்ன வயசிலேயே `கேட்டது எல்லாமே கிடைக்கும்’ என்ற எண்ணத்தை குழந்தையின் மனதில் ஏற்படுத்திவிடாதே... எதிர்காலத்தில், நினைத்தது கிடைக்காதபோது ஏற்படக்கூடிய ஏமாற்றங்களையும் குழந்தை பழகிக் கொள்ள வேண்டும். பேசாமல் வா’’ என்று கூறி மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார்.
அந்தக் கணவரின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தாலும், ‘எதை யும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்’ குழந்தைகளுக்கு உண்டாக வழி வகுப்பது பயனுள்ளதாகவே இருக் கும் என எனக்குத் தோன்றியது.
- எம்.ஏ.நிவேதா, திருச்சி
அதிசய தம்பதி!

தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவள் மாமியார் வீட்டில் இல்லாததால் அவளிடம் விசாரித்தேன். ``என் மாமியார் தபால் வழியில் பட்டப்படிப்பு படிக்கிறார். அதற்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) எழுத சென்றிருக்கிறார்’’ என்றாள். ``ஏண்டி, இனி அவங்க படிச்சு அரசு வேலைக்கா போகப் போறாங்க?’’ என்று கேட்டேன். ``நாம் படிச்சவங்க... அரசு வேலையிலா இருக்கோம்?! அவங்க படிக்க ஆசைப்பட்டாங்க, என் மாமனார் உயிரோடு இருந்த போது அவருக்குப் பயந்து படிக்கலை. இப்போ என் கணவர் அதை நிறைவேற்றி வைக்கிறார். படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் போதும். வயசு தேவையில்லை” என்றாள்.
பெரியவர்களின் சராசரி ஆசையைக்கூட நிறைவேற்றாத இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில் என் தோழியும், அவள் கணவரும் ‘அதிசயமாக’ தோன்றினர்.
- எஸ்.சுப்புலட்சுமி, புதுக்கோட்டை
சுத்தம்... இருவழி பாதை!

பொதுவாக பஸ் ஸ்டாண்ட் கழிவறைகள் அசுத்தமாக இருப்பது தான் தமிழக மரபு. ஆனால், மாவட்டத் தலைநகரமான ஓர் ஊரில் பஸ் ஸ்டாண்ட் கழிவறையின் வெளியே சுவரில் எழுதியிருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன். அந்த வாசகம்... `அன்பான வேண்டுகோள். நீங்கள் கழிவறைக்குள்ளே போகும்போது உள்ளே எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்கள் வெளியே வரும்போது சுத்தம் செய்துவிட்டு வாருங்கள்!’ இந்த வேண்டு கோளின்படியே உள்ளே மிகவும் சுத்தமாக இருந்தது. எல்லா பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளும் இப்படி இருந்தால், `ஆரோக்கியம் பாதிக்கப் பட்டுவிடுமோ?’ என்ற பீதி யாருக்கும் வராது.
- பி.பார்வதி பாலகிருஷ்ணன், ராசிபுரம்
அதிர்ச்சியின் எல்லை!

நகரப் பேருந்தில் பயணம் செய்துகொண் டிருந்தேன். அப்போது, மாணவன் ஒருவன், இரட்டை வரி நோட்டில் (கையெழுத்து நோட்டு) வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்தான். பஸ்ஸிலோ ஏகப்பட்ட கூட்ட நெரிசல். அவனை நெருங்கி ``கையெழுத்து நன்றாக வரும் விதத்தில் எழுத வேண்டிய இந்த வீட்டுப்பாடத்தை ஓடும் பஸ்ஸில் உட்கார்ந்து எழுதலாமா?’’ என்று நான் கேட்க, அவன் கூறிய பதில் தூக்கிவாரிப் போட வைத்தது. “எழுதாமப் போனா அந்த குண்டு மிஸ் திட்டும். அதான் அவசர அவசரமா எழுதறேன்’’ என்றான், மிகவும் அலட்சியமாக! அதோடு நில்லாமல், ``என்னை எழுதவிடுங்க. சும்மா தொணதொணன்னு கேள்வி கேட்காதீங்க’’ என்றானே பார்க்கலாம்!
கருத்தாய் செய்ய வேண்டிய வீட்டுப்பாடத்தை கடமைக்காக செய்வதால் என்ன பயன்? அவன் வீட்டுப்பாடத்தை எழுதினானா என்று கவனிக்காமல் அனுப்பிய பெற்றோரை நொந்துகொள்வதா... அல்லது, ஏனோதானோ என்ற மனப்போக்குடன் கல்வி கற்கும் இந்த மாணவனை நொந்துகொள்வதா?!
- மங்கையர்க்கன்னி, ஈரோடு
ஓவியங்கள்: சேகர்