மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 9 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம்ஓவியங்கள்: ஹாசிப்கான்,கண்ணா

2011-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள் ஓய்ந்திருந்த சமயம் அது. வாக்குப்பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்துதான் வாக்குகள் எண்ணப்பட்டன. அந்த இடைவெளியில், தேர்தல் செலவுக்காக, கட்சித் தலைமை கொடுத்த தொகையில் செலவு போக மீதி பணம் 11 லட்சத்தை, ஒரு சூட்கேஸில் போட்டு போயஸ் கார்டனில் ஒப்படைத்தார் அந்த வேட்பாளர். அரசியலில் அரிதான அந்த 'சின்சியாரிட்டி’, ஜெயலலிதாவை ஆச்சர்யப்படுத்தியது. வாக்குகள் எண்ணப்பட, அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்க, அந்த வேட்பாளரும் எம்.எல்.ஏ-வாக ஜெயித்தார். ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றபோது அந்த 'சின்சியர்’ எம்.எல்.ஏ., அமைச்சர் ஆனார். '11 லட்சம்’ என்ற சின்ன மீனைப் போட்டு 'கால்நடை துறை’யையே கைப்பற்றிய அந்த 'மிஸ்டர் சின்சியர்’... டி.கே.எம்.சின்னையா! 

அதன் பிறகு, 'கொடி கட்டும் சாதாரணத் தொண்டனுக்குக்கூட, தேசியக் கொடி பொருத்திய காரில் செல்லும் பெருமையைக் கொடுப்பது அகில இந்தியாவிலேயே ஒருவர்தான். அவர் எங்கள் அம்மா...’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தார் சின்னையா. கொடி கட்டிக்கொண்டிருந்தவர், கொடி கட்டிய காரில் போகும் ஃப்ளாஷ்பேக் இங்கே...

'ஸ்டாண்டர்டு’ தொழிலாளி!

சென்னை, தாம்பரம் சி.எஸ்.ஐ கார்லி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்ததோடு படிப்புக்கு டாட்டா காட்டிவிட்டார் சின்னையா. வேலை தேடியும் கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சியில் சபாநாயகராக இருந்த முனுஆதி, சின்னையாவுக்குத் தாய்மாமன். அவருடைய சிபாரிசில், தாம்பரம் ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் அப்ரன்டீஸாகச் சேர்ந்தார் சின்னையா. மெஷின் ஆபரேட்டர். வாரச் சம்பளம்தான். இரண்டு வருடங்களுக்குப் பின்னரே வேலை நிரந்தரம் ஆனது. ஆனால், அடுத்த ஒரு வருடத்தில் கம்பெனியே மூடப்பட்டது. வறுமை வயிற்றைக் கிள்ள, மாமன் முனுஆதியிடம் சேர்ந்துகொண்டார்.

மந்திரி தந்திரி - 9 !

அப்போதுதான் அரசியல் பாடம் படிக்கத் தொடங்கினார் சின்னையா. 'முனுஆதியின் உறவினர்’ என்ற அடையாளத்தோடு அ.தி.மு.க-வுக்குள் வலம் வந்தார். கட்சிக் கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டுவது, கொடி கட்டுவது, ஆள் திரட்டுவது, மைக் செட் ஏற்பாடுகள்... என அசராமல் வேலை செய்தார். இருப்பினும் ஏனோ முனுஆதி, சின்னையாவைக்  கழட்டிவிட்டார். வறுமை மீண்டும் கழுத்தை இறுக்க, என்ன செய்வது எனத் தெரியவில்லை சின்னையாவுக்கு. ஆனால், இனி அரசியல்தான் எதிர்காலம் என மட்டும் தெரிந்தது. அப்போது தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க துணைச் செயலாளராகவும் இருந்த எல்ல.ராஜமாணிக்கத்தின் விசுவாசி ஆனார். அதன் பலன்... தாம்பரம் நகர 11-வது வார்டு துணைத் தலைவர் பதவி!

1986-ம் ஆண்டு, தாம்பரம் நகராட்சி கவுன்சிலராகப் போட்டியிட்டு வென்றபோது சின்னையாவுக்கு வயது 24. அதன் பிறகு 15 வருடங்கள் போட்டியிட்ட அனைத்து  உள்ளாட்சித் தேர்தல்களிலும் அடுக்கடுக்கான தோல்விகள். 2006-ம் ஆண்டு கவுன்சிலர் தேர்தலில் பெரும்பாடுபட்டு ஜெயித்தபோதுதான் சின்னையா முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. 20 வருடங்களாக முட்டிமோதினாலும், சின்னையாவால் தாம்பரத்தைத் தாண்டி ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இனி எல்ல.ராஜமாணிக்கத்தை மட்டுமே நம்பினால் வேலைக்கு ஆகாது என நினைத்தவர், பலப்பல தொடர்புகள் மூலம் 'மன்னார்குடி சர்க்கிளை’ நெருங்கினார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருக்கம். தன்னை வளர்த்துவிட்ட எல்ல.ராஜமாணிக்கத்தின் மகன் எல்.ஆர்.செழியனுக்குப் போட்டியாக தாம்பரம் தொகுதியில் நிற்க விருப்ப மனு கொடுத்தார் சின்னையா. 'அட... இது என்ன கூத்து?!’ என, தொகுதிக்குள் அதை யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால், வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டபோது அதில் தாம்பரம் தொகுதி வேட்பாளர்... சின்னையா. பலருக்கும் அதிர்ச்சி. மன்னார்குடி ரிமோட் மூலம் விழுந்த சிக்னல் அது. தேர்தல் செலவையே கடன் வாங்கித்தான் சமாளித்தார். சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக ஸீட்... முதன்முறையாக எம்.எல்.ஏ... முதன்முறையாக அமைச்சர்... என அடுத்தடுத்து அதிர்ஷ்டம் அடிக்க, இப்போது பெரியய்யா ஆகிவிட்டார் சின்னையா. அதனால் அவரைப் பற்றி வாசிக்கப்படும் புகார்களும் பெரிதினும் பெரிதாகவே இருக்கின்றன!

சின்னையா பிரதர்ஸ்!

சின்னையாவுக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைக்கும் வரை, அவருடைய அண்ணன், தம்பி... என யாருமே சீனில் வரவில்லை. ஆனால், இப்போது தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் 'சின்னையா பிரதர்ஸ்’ ஆதிக்கம்தான் எனப் புகார்கள் பறக்கின்றன.

மந்திரி தந்திரி - 9 !

சின்னையாவின் மூத்த சகோதரர் பாஸ்கர், தாலுகா அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொள்கிறார். கட்டட அனுமதி, பத்திரப்பதிவு விவகாரங்கள் போன்றவை அவர் வசம். வாடகை வீட்டில் இருந்துகொண்டு மருந்துப் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கரின் வளர்ச்சி, பலரையும் வாய் பிளக்கவைத்தது. சின்னையாவின் மற்றொரு சகோதரர், அய்யாவுவின் கட்டுப்பாட்டில் ஏரியாவின் டாஸ்மாக் பார், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சங்கதிகள்.

சின்னையாவின் சகோதரர்களில் டி.கே.எம்.பாபு என்கிற 'மாஜினி’யின் பெயர்தான் ஏகத்துக்கும் வறுபடுகிறது. 'அரசு அதிகாரிகளை, டி.கே.எம்.பாபு அநியாயத்துக்கு வேலை வாங்குகிறார்’ எனப் புலம்பல்கள். பாபுவிடம் இருந்து அழைப்பு வந்தாலே அலறுகிறார்களாம் அதிகாரிகள். 'எம்.ஜி.ஆர் காலத்துக் கட்சிக்காரரான கருணாகரன் என்கிற கமல்ராஜ், பெருங்களத்தூர் பேரூராட்சி செயல் அதிகாரியாக இருந்தார். டி.கே.எம்.பாபுவின் ஆதிக்கத்துக்கு மசியாத அவரை, டிரான்ஸ்ஃபர் என தூக்கியடித்திருக்கிறார்கள்’ என்கிறார்கள் கட்சிக்காரர்கள். இத்தனைக்கும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைத் துணைச் செயலாளரான பாரதிராஜாவின் தந்தைதான் கருணாகரன். டி.கே.எம்.பாபுவிடம் பாரதிராஜா பேசும் ஆடியோ உரையாடலில், 'உங்க அப்பா சாதாரண இ.ஓ. உங்க அப்பாவை நீதான் திருத்தணும். அவரை இடம் மாத்துறதுக்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் சினிமா சைடுக்குப் போயிட்டேன். அதான் ஆறு மாசமா கண்டுக்கலை...’ என நீள்கிறது. அ.தி.மு.க முகாம்களை இழந்திருந்த சமயம், சினிமாவிலும் ஈடுபட்டிருந்தார் டி.கே.எம்.பாபு. காரணம், அமைச்சர் சின்னையாவின் சினிமா மோகம்!

சினிமாவுக்குப் போன சின்னையா!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்தபோதும், பிறகு ஜாமீனில் விடுதலையாகி பதவி இல்லாமல் இருந்தபோதும் 'மாநில முதலமைச்சர்’ தொடங்கி அடிமட்டத் தொண்டன் வரை போட்டி போட்டு பால்குடம், அலகு, தீச்சட்டி, காவடி... எனத் தூக்கிக்கொண்டிருந்தபோது சின்னையா அந்த சீனில் அவ்வளாகத் தட்டுப்படவில்லை. காரணம், 'அந்தச் சமயம் பினாமி பெயரில் சினிமா தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்’ எனக் குமுறுகிறார்கள் சொந்தக் கட்சியினரே.

' 'கடைசிப் பக்கம்’ என்ற பெயரில் தயாரிப்பில் இருக்கும் படத்தின் இயக்குநர் மாஜினி. அதாவது சின்னையாவின் அண்ணன் டி.கே.எம்.பாபு. முன்னர் ஒரு தனியார் சேனலில் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த பாபு, தம்பி அமைச்சரான பிறகு தன் நெடுநாள் கனவான இயக்குநர் அவதாரம் எடுத்துவிட்டார். க்ரைம் திரில்லராக உருவாகிக் கொண்டிருக்கும் 'கடைசிப் பக்கம்’ படத்தைத் தயாரிக்கும் 'மாஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம், என்.டி.ராஜு என்பவர் பெயரில் பதிவாகியிருக்கிறது. ஆனால், நிஜத்தில் வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுக்கும் புரோக்கர் வேலை பார்க்கும் ராஜு, எப்படி கோடிக்கணக்கில் செலவுசெய்து படம் எடுக்க முடியும்? தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் கில்டில், தன்னையும் ஒரு தயாரிப்பாளராகப் பதிவுசெய்திருக்கும் ராஜு, அங்கு குறிப்பிட்டிருக்கும் முகவரியில் வசிக்கவில்லை. பெயருக்குத்தான் அவர் தயாரிப்பாளர். படத் தயாரிப்பு தொடங்கி இயக்கம் வரை அனைத்தும் டி.கே.எம்.பாபு மேற்பார்வையில்தான் நடக்கிறது. அதற்கு அமைச்சரின் ஆதரவும் அமோகம்...’ என கார்டனுக்கும் தலைமை அலுவலகத்துக்கும் ஆதாரங்களோடு புகார் தட்டுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

மந்திரி தந்திரி - 9 !

அரசியலில் வளரத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், தாம்பரத்தில் சில பார்ட்னர்களோடு சேர்ந்து 'மாஸ் மீடியா’ என்ற கம்ப்யூட்டர் சென்டரை ஆரம்பித்தார் சின்னையா. அப்போது தாம்பரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த எஸ்.ஆர்.ராஜாதான் இந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தாராம். அதனாலேயே அப்போது நகரச் செயலாளர் பதவியைப் பறிகொடுத்தார் சின்னையா. தன் பதவி பறிபோக 'மாஸ் மீடியா’வே  காரணமாக இருந்தாலும், அதன் மீதான மோகம் மட்டும் சின்னையா வுக்குக் குறையவில்லை. அதனால்தான் massmedia06@gmail.com என்கிற தனிப்பட்ட இ-மெயிலை இப்போதும் வைத்திருக்கிறார் சின்னையா. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சின்னையா கொடுத்திருக்கும் இ-மெயில் முகவரியும் இதுதான். 'மாஸ் மீடியா’ மீதான பாசம்தான் 'மாஸ் பிக்சர்ஸ்’ ஆகிவிட்டதாம்!

தலை தப்புவது அதிகாரி புண்ணியம்!

'தேர்தல் வேட்புமனுவில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சின்னையாவின் மொத்த சொத்தாகக் குறிப்பிடப்பட்டிருப்பது 36 லட்சம். அதுவும் ஒன்பதில் ஒரு பாகம் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது படப்பை, கிழக்குக் கடற்கரைச் சாலை, செம்பாக்கம், சிட்லபாக்கம், கிழக்குத் தாம்பரம்... போன்ற ஏரியாக்களில் சில சொத்துக்கள் வாங்கப் படுகின்றன...’ என, சின்னையா மீது புகார் வாசிக்கிறார்கள் கட்சிக்காரர்கள். சின்னையா வைப் பற்றி இப்படி புகார் மழை பொழிந்தாலும், அமைச் சரவையில் அவரை அசைக்க முடியவில்லை. பல தடவை நிகழ்ந்த அமைச்சரவை மாற்றங்களில் சின்னையாவின் தலை மட்டும் தப்பித்துக்கொண்டே இருக்கிறது. காரணம், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாம். அதிகார வட்டத்தின் மையத்தில் இருக்கும் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சின்னையாவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்தப் பாசத்தின் அடிப்படையில் சின்னையாவைக் காப்பாற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மெனக்கெடுவார்.

போயஸ் கார்டன், தலைமை அலுவலகம், ஐவர் அணி, போலீஸ், நீதிமன்றம்... எனப் பலதரப்புக்கும் செல்லும் சின்னையா பற்றிய புகார்களை, 'அம்மா’வின் பார்வைக்குக் கொண்டுபோகாமல் தடுப்பதில் அந்த அதிகாரி அதிக அக்கறை எடுத்துக்கொள்வாராம். இதனாலேயே சின்னையாவின் கொடி தாழாமல் உயர உயரப் பறந்துகொண்டே இருக்கிறது!

துறையில் சாதித்தது என்ன?

வேளாண்மையின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது கால்நடைப் பிரிவு. விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தை கால்நடை பராமரிப்புத் துறைதான் செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் ஐந்து ஆண்டுகளில், 60,000 பயனாளிகளுக்கு தலா ஒரு கறவைப் பசு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

'கடந்த நான்கு ஆண்டுகளில், 48,000 கறவை மாடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தினமும் 1,29,044 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. அவற்றில் 80,000 லிட்டர் பால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தினால் கொள்முதல் செய்யப்படுகிறது’ என, சட்டசபையில் புள்ளிவிவரம் படித்தார் சின்னையா. உண்மைதான். சாலையில் பால் ஆறாக ஓடும் அளவுக்கு வெண்மைப் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், 'உற்பத்தியான பாலை, அரசின் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யவில்லை’ என, பாலைக் கொட்டி போராட்டம் நடத்துகிறார்கள் விவசாயிகள். ஆட்சியாளர்களோ, 'இலவசக் கறவை மாட்டால் பால் உற்பத்தி அதிகரிப்பு’ என மார்தட்டிக்கொள்கிறார்கள். இந்தக் கொள்முதல் சிக்கல்களைக் கண்டுகொள்ளாமல், 'பால் கொடுக்கும் பசு 'அம்மா’ என அழைக்கும் அந்த அழைப்புக்கு என்ன அர்த்தம் என இப்போதுதான் நாட்டுக்கே புரிகிறது. எங்களைக் காப்பாற்றுவதற்கும் ஓர் அம்மா இருக்கிறார் என்ற பாசத்தின் அழைப்பு அது’ எனச் சட்டசபையில் ரைமிங் பாடிக்கொண்டிருந்தார் சின்னையா.

மந்திரி தந்திரி - 9 !

விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, கால்நடை பராமரிப்புத் துறைக்கு 'நல் ஆளுமை’ விருதும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் துறையின் அமைச்சர் சின்னையாவுக்கு 2013-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் வழங்கினார் ஜெயலலிதா. இன்னொரு பக்கம், கறவை மாடுகள் திட்டத்தில் நடந்த தில்லுமுல்லுகளைத் தோலுரித்தது மத்தியத் தணிக்கை அறிக்கை.

ஐந்து ஆண்டுகளில் கிராமத்து ஏழைப் பெண்கள் 60 ஆயிரம் பேருக்கு இலவசக் கறவை மாடு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் 12 ஆயிரம் கலப்பின பசுக்கள் வழங்கப்பட்டுவருகின்றன. ஒரு மாடு வாங்க, போக்குவரத்துச் செலவு எல்லாம் சேர்த்து 35 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்தியத் தணிக்கைத் துறை ஸ்கேன் செய்தபோது அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள்!

2011-12, 2012-13 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 24 ஆயிரம் மாடுகள் வாங்கப்பட்டன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 1,170 பயனாளிகளில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே கறவை மாடுகளை வைத்திருந்தார்கள். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருந்த 210 பேர் தகுதியற்றவர்கள் எனக் கண்டறிந்தது தணிக்கைத் துறை.

'தேவையான அளவுக்குப் பால் தரும் கலப்பின ஜெர்சி பசுக்கள் வாங்க, ஆந்திர மாநிலம் ஏற்ற இடம் அல்ல’ என மாடுகளை வாங்குவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு சொல்லியிருக்கிறது. ஆனாலும், ஆந்திராவில் உள்ள புங்கனூர் பலமனேர், பீலேரு சந்தைகளில் மாடுகளை வாங்கினார்கள். இலக்கை அடைவதற்காக, தரம் குறைந்த மற்றும் வயதான மாடுகள் வாங்கப்பட்டன. பசு மாட்டின் ஆரோக்கிய நிலை, கறக்கப்படும் பாலின் அளவு போன்றவற்றை நான்கைந்து நாட்கள் கவனித்த பிறகுதான் மாடுகள் வாங்க வேண்டும், ஐந்து வயதைத் தாண்டாத பசு மாடுகளைத்தான் வாங்க வேண்டும் என்பதெல்லாம் விதிகள். ஆனால், ஆய்வின் முடிவில் 950 பசுக்களில் 329 பசுக்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவை. ஐந்து மாவட்டங்களில் வாங்கப்பட்ட 441 கறவை மாடுகளில் 20 சதவிகித மாடுகள், மடி வற்றிய மலட்டு மாடுகள் என அதிர்ச்சி அறிக்கை கொடுத்தது தணிக்கைத் துறை.

'ஒரு நாளைக்கு, குறைந்தது 10 லிட்டர் அளவுக்குப் பால் தரும் பசுக்களை, தொடர்ந்து மூன்று வேளை பால் கறந்து சரிபார்த்து வாங்க வேண்டும் என்பது திட்டப் பரிந்துரை. ஆனால், பசுக்களை வாங்குவதற்கு முன் ஒருமுறைகூட அப்படி பால் கறந்து சரிபார்க்கப்படவில்லை’ என 364 பயனாளிகளில் 235 பேர் தெரிவித்திருக்கிறார்கள். 'பயனாளிகளைத் தேர்வுசெய்வதில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், திட்டத்தின் பலன்கள் தேவையும் தகுதியும் உடைய பயனாளிகளுக்குப் போய்ச் சேரவில்லை. கறவை மாடுகள் வாங்கும் முறையில் குறைபாடுகள் இருந்ததால், தரம் குறைந்த மாடுகள் மற்றும் குறைந்த அளவில் பால் தரும் மாடுகள் வாங்கப்பட்டன. இதனால் கிராமப்புற ஏழைப் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல் மற்றும் மாநிலத்தின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கம் நிறைவேறவில்லை’ என அணுகுண்டுகளை வீசியது தணிக்கைத் அறிக்கை. இத்தனைக்கும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது ஒரு வருட நடைமுறை மட்டுமே. திட்டம் செயல்பாட்டில் இருக்கும் அத்தனை வருடங்களுக்கும் கணக்கிட்டால், கோல்மால்களைச் சொல்லி மாளாது என்கிறார்கள் விவசாயிகள்!

ஈமு கோழி மோசடியில் லட்சம் லட்சமாகப் பணத்தை இழந்தனர் விவசாயிகள். அதுபோக, போதிய உணவின்றி ஈமு கோழிகள் ஆங்காங்கே செத்து விழுந்தன. எல்லா மோசடிகளும் அரங்கேறிய பின்னர் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட அரசு, மிச்சம் இருக்கும் ஈமு கோழிகளுக்குத் தீவனம் வாங்கிப் போட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், கைவிடப்பட்ட சுமார் 12 ஆயிரம் ஈமு கோழிகளைப் பராமரிக்க, நான்கு கோடி ரூபாய் வரை செலவானது. அவற்றில் சுமார் 8 ஆயிரம் ஈமுக்களை ஏலம் விட்டதில் சுமார் 12 லட்சம் வரை கடந்த ஆண்டு கிடைத்தது. ஈமு மோசடி, சட்டசபையில் எதிரொலித்தபோது, 'ஈமு கோழித் தொழிலை, அரசு அங்கீகரிக்கவும் இல்லை; உதவி செய்யவும் இல்லை. இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் மக்கள் இனிமேலாவது ஜாக்கிரதையாகவும் அதிக விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்’ என்றார் சின்னையா.

கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்தவர்கள் தலைமறைவான பிறகு, மக்களுக்கு அறிவுரை சொல்ல அமைச்சர் எதற்கு? வீட்டில் இருக்கும் அப்பத்தா சொல்லுமே அப்படி ஆயிரம் அறிவுரைகளை! 

திரைமறைவு தி.மு.க பாசம்!

மந்திரி தந்திரி - 9 !

'தாம்பரம் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-க்களான எஸ்.ஆர்.ராஜா, வைத்தியலிங்கம் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார். அதனால்தான் தி.மு.க ஆட்சியில்கூட தாம்பரம் ஏரியாவில் சின்னையா பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசியது. பெருங்களத்தூர் பேரூராட்சி தி.மு.க  தலைவர் சேகரும் சின்னையாவும் ஒன்றாக ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்தவர்கள். அந்தப் பழைய பாசம் இப்போதும் தொடர்கிறது. சேகரும் சின்னையாவின் சகோதரர் டி.கே.எம்.பாபுவும் ஒன்றாக வலம்வருகிறார்கள். அவர்கள் சேர்ந்து இருக்கும் படங்களையும் தாம்பரம் வட்டாரத்தில் சகஜமாகப் பார்க்கலாம். தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வைத்தியலிங்கத்துடன் சின்னையா இருக்கும் படங்கள் வாட்ஸ்அப்பில்கூட வலம் வருகின்றன’ என பழைய வரலாறுகளை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள் தாம்பரம் அ.தி.மு.க-வினர்!   

ஜெகஜ்ஜால கில்லாடி!

'கரன்சியைக் கொட்டினால்தான் அ.தி.மு.க-வில் வளர முடியும்’ என்கிற சித்தாந்தத்தை உடைத்தவர் சின்னையா. செலவே செய்யாமல் கட்சிக்குள் வளர்ந்தவர். அப்போது காஞ்சிபுரம்

மந்திரி தந்திரி - 9 !

மாவட்டச் செயலாளராக இருந்தவர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். ஒரு முக்கிய நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னர், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிச் செயலாளர்களும் ஒன்றியச் செயலாளர்களும் பொதுக்கூட்டங்களை நடத்துங்கள்’ என ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டது கட்சித் தலைமை. மற்ற அனைவரும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பரபரக்க, சின்னையா மட்டும் ராஜேந்திரன் வீட்டுக்குப் போய், பரிதாபமாக நின்றார்.

'அண்ணே... நான் பெரிய பணக்காரன் இல்லை. என் குடும்பத்துல யாரும் தொழிலதிபர்கள் கிடையாது. என்னைத் திடீர்னு கூட்டம் போடச் சொன்னா, நான் எங்கே போவேன்? நீங்க ஏதாவது உதவி பண்ணாத்தான் கூட்டம் நடத்த முடியும்’ எனக் கண்ணீர்விட்டார். சின்னையா கூட்டம் நடத்தாவிட்டால் அது தனக்குத்தான் பாதிப்பு என எண்ணிய ராஜேந்திரன், ஒரு தொகையை சின்னையாவிடம் நீட்டியிருக்கிறார். கூட்டமும் நடந்து முடிந்தது. கூட்டம் முடிந்து காரில் ஏறப் போன ராஜேந்திரனிடம், 'அண்ணே, இன்னும் கொஞ்சம் சில்லறை செலவு இருக்கு. அதுக்குப் பணம் கொடுங்கண்ணே...’ எனக் கேட்டு வாங்கி செட்டில் செய்தாராம் சின்னையா. 'மா.செ’-வுக்குப் பணம் கொடுக்கும் பகுதிச் செயலாளர்கள் மத்தியில், மாவட்டத்திடம் இருந்தே பணத்தைக் கறந்த சாமர்த்தியசாலி சின்னையா!  

மந்திரி தந்திரி - 9 !

** அமைச்சராவதற்கு முன்பு, குடிசைத் தொழிலாக மாவு அரவை மில் வைத்திருந்தார். 

** பொங்கல் பிரியர். திருமணம், விஷேசம், வெளியூர், ஹோட்டல்... என எங்கெங்கும் 'பொங்கல் இருக்கா?’ எனக் கேட்டு வாங்கி ருசிப்பார்.

மந்திரி தந்திரி - 9 !

** ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர். மந்த்ராலயாவில் உள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் சென்றுவிடுவார். வீட்டில் உள்ள ராகவேந்திரர் படத்துக்கு வியாழக்கிழமைதோறும் பூஜை செய்வார். தன் மகனுக்கு 'ராகவேந்திரா’ எனப் பெயர் வைத்திருக்கிறார். 

** சின்னையாவின் இயற்பெயர் பாலாஜி. ஆனால், லோக்கலில் அவரை 'சின்னையா’ என்றே பலரும் அழைக்க, அது அவருக்குப் பிடித்துவிட, பெயரையே அப்படி மாற்றிக்கொண்டார்.

மந்திரி தந்திரி - 9 !

** 1986-ம் ஆண்டு கவுன்சிலர் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டபோது சின்னையாவுக்கு வயது 24. முதிர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, அப்போது தாடி வைத்தார் சின்னையா.அது பழகிவிடவே தாடியை அப்படியே தொடர்கிறார்!

மந்திரி தந்திரி - 9 !

** 10-ம் வகுப்புக்குப் பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., வரலாறு படித்தார். சில பாடங்களில் அரியர்ஸ் விழுந்தன. ஆனாலும் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் வைத்து, இரண்டு வருடங்களுக்கு முன்னரே அனைத்து அரியர்களையும் ஒரே மூச்சில் க்ளியர் செய்தார். 

உளவு பார்க்கும் போலீஸ்!

சின்னையா மீது தொடர் புகார்கள் குவிவதால், அவரைச் சுற்றியிருப்பவர்களைக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறதாம் உளவுப் பிரிவு. உளவுத் துறையின் ஸ்கேனில், கிழக்குத் தாம்பரத்தில் உள்ள காந்தி பார்க், அடையாறு ஆவின் பூத் அருகில் இருக்கும் ஒரு வீடு ஆகியவை இடம் பெற்றுள்ளனவாம்!

சின்னையாவின் காந்தி கணக்கு!

** முன்னர், ஒரு புல்லட் பைக் வைத்திருந்தார் சின்னையா. வண்டலூரில் உள்ள கே.என்.ராமச்சந்திரனின் பெட்ரோல் பங்க்கில்தான் அந்த புல்லட்டுக்குப் பெட்ரோல் நிரப்புவார். 'கட்சிக்காரன்’ என்ற பாசத்தில் பல சமயம் அங்கே சின்னையாவால் காந்திக் கணக்கு எழுதப்பட்டுள்ளது. அப்படியும் சில நேரங்களில் பெட்ரோல் இல்லாமல் புல்லட்டைத் தள்ளிக்கொண்டிருப்பார் சின்னையா. தள்ள முடியாவிட்டால், தாம்பரம் காவல் நிலையத்தில் பைக்கை பந்தாவாக நிறுத்திவிட்டு, கட்சிப் பிரமுகர் ஒருவரின் டூ-விலரில் டபுள்ஸ் அடித்துக்கொள்வார்!

**  'எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்துகொண்டு, எம்.ஜி.ஆர் சத்துணவுக் கூடத்தை இடிக்கக் காரணமாக இருந்தார் சின்னையா’ என்பது அவர் மீதான சென்சேஷனல் குற்றச்சாட்டு. சென்னை ஆலந்தூர் நோபல் தெருவில் இருக்கும் சத்துணவுக் கூடம், பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்பின் நுழைவாயிலுக்கு இடைஞ்சலாக இருந்ததாம். அதனால் அந்தச் சத்துணவுக் கூடத்தைக் குறைவாக மதிப்பிட்டும், அது இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தீர்மானம் இயற்றி இடித்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் சின்னையா உள்பட இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனச் சொல்லி ஆதாரங்களோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சரவணன்.

மந்திரி தந்திரி - 9 !

**  தொகுதிக்குள் இப்போது சின்னையாவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது சரவணன்தான்.''சின்னையாவுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்ததும் பகுதிச் செயலாளர் பதவியை ஒருவருக்கு வாங்கித் தருவதற்காக 20 லட்ச ரூபாயை சின்னையாவிடம் கொடுத்தேன். ஆனால், சொன்னபடி சின்னையா பதவியை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி தலைமை அலுவலகத்தில் புகார் கொடுத்தும் சின்னையா மீது நடவடிக்கை இல்லை. அதனால் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அது டிஸ்மிஸ் ஆனது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்'' என்கிறார் சரவணன். இந்த வழக்கு, சின்னையாவை உறுத்திக்கொண்டே இருக்கிறது!