
சந்தோஷ் நாராயணன்
'ஒருத்தன் மூளைக்குள்ள இந்த டிரான்ஸ்மீட்டர் சிக்னலை அனுப்பி, அவன் வாங்கவேண்டிய பொருட்களையும் பிராண்டையும் ஊடுருவச்செய்து, அவனை வாங்கவைக்கத் தூண்ட முடியும். அவன் மனசுக்குள்ள அந்த புராடெக்ட் பெயர் ஓடிக்கிட்டே இருக்கும். இனி விளம்பரங்கள் செய்ய டி.வி-யோ, ரேடியோவோ தேவை இல்லை. இது பயோஅட்வெர்டைஸிங். அவன் மூளை அந்த பிராண்ட் பேரைச் சொல்லிட்டே இருக்கும். அவன் வாங்கியே தீருவான்' என்றான் அந்த டிரான்ஸ்மீட்டரை உருவாக்கிய திவாகர்.

அசந்துபோன இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கிஷோர் ரத்தனி, உடனடியாக அந்த டிரான்ஸ்மீட்டர்களை வாங்க ஆர்டர் கொடுத்தார். விளம்பரங்களுக்கு என, கோடிகளைக் கொட்டிக்கொடுப்பது இனி மிச்சம்.
''என்னன்னே தெரியல தம்பி... காலையில இருந்தே பகவான் பெயர்தான் மனசுல ஓடிட்டே இருந்தது. ஏதோ நல்லது நடக்கப்போகுதுனு நினைச்சேன். நடந்துருச்சு பார்த்தீங்களா!'' என, வாய் நிறையப் பல்லாகச் சிரித்துவிட்டு, ''ஆமா... உங்களோட இந்த டிரான்ஸ்மீட்டருக்கு என்ன பெயர்

வெச்சிருக்கீங்க?' என்றார் கிஷோர்.
திவாகர் புன்னகையுடன் சொன்னான்...
'பகவான்'!
'' 'கற்க கசடற’னு சொன்னாங்க பெரியவங்க. 'கறக்க கசடற’னு சொல்றாங்க ஸ்கூல் ஓனருங்க' என, காலியான பர்ஸைத் தடவினான் கார்ப்பரேட் சித்தன்!
கபாலக் காதலன்!
ஆரஞ்சு கலர் பேப்பர் முதல் பர்த்டே கேக் வரை விதவிதமான பொருட்களில் விதவிதமான மண்டையோடுகளை, தினமும் ஒன்றாக 365 நாட்களும் மக்களின் பார்வைக்காக வெப்சைட்டில் வைப்பது - இதுதான் 'ஸ்கல் எ டே ஆர்ட்’ திட்டம்.

இப்படி ஒரு ஆர்ட் அகோரியாக ரௌத்திரத் தாண்டவம் ஆடியவர் நோவா ஸ்காலின். வெர்ஜீனியாவைச் சேர்ந்த டிசைனர்; ஆர்ட்டிஸ்ட். வழக்கம்போல ஆர்ட் ஸ்கூல் முடித்துவிட்டு நியூயார்க்கில் வேலை தேடித் திரிந்த நோவா, எதுவும் செட் ஆகாமல் தன் சொந்த ஊருக்குத் திரும்பி, 'ஏதாவது பண்ணணும். உலகமே தன்னைத் திரும்பிப் பார்க்கணும்’ என மண்டையைப் பிய்த்துக்கொண்டு யோசித்திருக்கிறார். விளைவு... இந்த மண்டையோடு சீரீஸ்.

2007-ம் ஆண்டில் ஒருநாள், தனது இணையத்தில் ஆரஞ்சு கலர் பேப்பரில் செய்த ஸ்கல்லை போஸ்ட் செய்திருக்கிறார். பார்வையாளர்கள் 'செம’, 'அருமை’, 'கலக்கல்’ போன்ற நம்மூர் ஃபேஸ்புக் லெவலில் கமென்ட்கள் போடாமல், விலாவாரியான பாராட்டுகளை எழுதிக் குவித்தனர். உடனே, ஒரு பொருளைக்கொண்டு ஒரு மண்டையோடு என வருடம் முழுக்க ஒரு ஆர்ட்டை தினம் தினம் பதிவேற்ற... வளமான வரவேற்பு. வருடக் கடைசியில் போனஸாக ஒரு மண்டையோட்டையும் பதிவேற்றி இருக்கிறார். காரணம், அந்த வருடம் லீப் இயராம். கபாலப் படங்களைப் பார்க்க http://skulladay.blogspot.in/p/original-skulls-1-122.html
'ஏன் மண்டையோடு?’ என்ற கேள்விக்கு, 'வாழ்க்கை ரொம்பச் சிறியது. 'அதுக்குள்ள நீ என்ன பண்ணப்போற?’னு ஒவ்வொருத்தருக்கும் ஞாபகப்படுத்த ஆசை...’ என ஜாலியாகப் பதில் சொல்கிறார் நோவா!

ஒரு திரைக்கதை எழுதுபவனுக்கும், அந்தக் கதாபாத்திரங் களுக்குமான தொடர்பை கதை மாதிரி எழுதிப் பார்த்தேன். அது இப்படி நீண்டது...

தன்னைத் துரத்தி வரும் போலீஸிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி, வழக்கம்போல எதிரில் ஓடும் ஆற்றில் குதித்துவிடுவதுதான் என்பது சிவாவுக்குத் தெரியும். ஆனால், இந்தத் திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் மதுசூதனுக்கு, இந்த மாதிரியான 'க்ளிஷே’க்கள் பிடிக்காது என்பதையும் சிவா ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு என்னதான் செய்வது? அடுத்த வரியை அவன் எழுதும் வரை பொறுத்துதான் ஆகவேண்டும். எதிரில் இருந்த ஆறு, இவனைக் கிண்டலாகப் பார்த்துச் சலசலத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் துரத்தி வந்த இரண்டு போலீஸ்காரர்களும், செய்வதறியாது நின்றிருந்ததைப் பார்த்து சிவா சிறிதாக ஆசுவாசப்பட்டான். மதுசூதனின் கைகளில் போலீஸுக்கே இந்தக் கதிதான் என்கிறபோது கிடைக்கும் ஆசுவாசம் அது.
என்ன நினைத்தானோ, மதுசூதன் பேனாவை மூடிவிட்டு, திரைக்கதைப் பேப்பரின் மீது கனமான ஒரு புத்தகத்தைத் தூக்கி வைத்துவிட்டு, சோம்பல் முறிக்கும் பாவனையில் கைகளைப் பின்னால் கோத்து நெட்டி முறித்தான். பிறகு, ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு பால்கனிக்குப் போனான்.
இப்போது திரும்பி, போலீஸ்காரர்களைப் பார்த்தான் சிவா. 'ஒரு சிகரெட் இழுத்தால் இதமாக இருக்கும்’ என சிவாவுக்கும் தோன்றியது. இந்த ஆற்றின் கரையும் குளிர்ந்த காற்றும், மதுசூதன் சிகரெட்டை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்ற விதமும் அவனுக்கு அப்படி ஓர் ஆசையைத் தூண்டியது. போலீஸ்காரர்களை நோக்கி மெள்ள நடந்தான். அவர்களும், இவன் அருகில் வருவதை விரும்பியதைப்போல சினேக பாவனையுடன் முகத்தை வைத்துக்கொண்டனர்.
''சிகரெட் ஏதாவது இருக்கா?'' என்றான்,
ஒரு போலீஸ்காரரைப் பார்த்து.
'இல்லையேப்பா... அந்த ஆளு எங்ககிட்ட சிகரெட் இருக்கிறதா கதையில எழுதவே இல்லையே...' என்றார் ஒரு போலீஸ்காரர்.
நியாயம்தான். திரைக்கதையின் முக்கியப் பாத்திரமான என் பாக்கெட்டிலேயே ஒரு சிகரெட் துண்டை வைக்க துப்பு இல்லாத இந்த ஆளா, துணைக் கதாபாத்திரத்தில் வரும் இந்தப் போலீஸ்காரரிடம் சிகரெட் இருப்பதாக எழுதிவிடப்போகிறான்? 'போலீஸ்காரரிடம் சிகரெட் கேட்டு, அவருடைய கதாபாத்திரத்தின் மதிப்பைக் குறைத்து, அவரை வெட்கமும் வேதனையும் படச் செய்திருக்க வேண்டாமோ?’ என சிவா நினைத்துக்கொண்டான்.
மதுசூதன் மறுபடியும் எழுத உட்கார இன்னும் நேரமாகும் என்பது, சிவாவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்லது ஒரு நாளோகூட ஆகலாம். 'இப்போது என்ன செய்வது?’ என்பதுபோல போலீஸ்காரர்கள் சிவாவைப் பார்த்தனர்.
''ஐயா... உண்மையில் நீங்க எதுக்காக என்னைத் துரத்திட்டு வர்றீங்கனு தெரியுமா?'' என்றான்.
''தெரியலையேப்பா... இந்த சீனை ஆரம்பிக்கும்போதே, 'இரண்டு போலீஸ்காரர்கள் சிவாவைத் துரத்திக்கொண்டு வந்தனர்’னு ஆரம்பிச்சு, எங்களை இப்படி ஆத்தோரம் விட்டுட்டுப் போயிட்டான். அது சரி... நீ அப்படி என்னதான் தப்பு பண்ண?'' - அப்பாவித்தனம் வழியும் முகத்துடன் கேட்டார் போலீஸ்காரர்.
பக்கத்தில் இருந்த போலீஸ்காரரும் ஆமோதித்து தலையாட்டி, இவன் பதிலுக்காக முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவர் பழைய படங்களில் வரும் நாகேஷைப் போல இருந்தார். இவ்வளவு நோஞ்சானாக இருக்கும் ஒரு போலீஸ்காரரிடம் இருந்து தப்பிக்கவா, தான் இந்த ஓட்டம் ஓடினேன் என நினைக்கும்போது சிவாவுக்கு வெட்கமும், மதுசூதன் மீது கோபமும் வந்தன.
''எப்படியும் அடுத்த சில பக்கங்களில் அது உங்களுக்குத் தெரியத்தான்போகிறது'' என்றான் சிவா.
''ஓ... உனக்கே தெரியாதோ?'' என அந்த நாகேஷ் போலீஸ் கேட்டது, நக்கலாகத் தோன்றியது.
கதையின் பிரதான பாத்திரமான தன்னை, ஓரிரு சீனில் மட்டுமே வந்துவிட்டுப் போகும் ஒரு துக்கடா பாத்திரம் கிண்டல்செய்கிறதே என சிவாவுக்குச் சின்னதாகக் கோபம் வந்தது.
''யோவ்... நான் சாதாரண ஆள் இல்லை கேட்டுக்க... மூணு கொலை பண்ணியிருக்கேன். அதுவும் பணத்துக்காகவோ, பதவிக்காகவோ இல்லை. இந்தச் சமூகத்துக்காக. அதனாலதான் இந்த ஓட்டம். நீங்க போலீஸ்தான். ஆனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடியாது'' என்றான்.
இன்னொரு போலீஸ்காரர் மெள்ள சிவாவை ஏறிட்டுப் பார்த்து, ''அது சரி... போலீஸ் ஒண்ணும் செய்ய முடியாதுனு எப்படிச் சொல்றே? அடுத்த ஷாட்லயே உன்னை நாங்க ரெண்டு பேரும் சுத்திவளைச்சுப் பிடிச்சுட்டோம்னு அந்த ஆளு எழுதிட்டா, உன் நிலைமை என்னாகும்... சொல்லு!?'' என்றார்.
நாகேஷ் போல இருந்த போலீஸ்காரர், இவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
''ஆங்... அவ்வளவு சீக்கிரம் மாட்டிருவோமா? இல்ல மாட்ட விட்ருவானா அவன்! நான் இந்த ஆத்துக்கு அக்கரையிலும் ஒருத்தனைக் கொல்லணும். அது வரைக்கும் உங்க கையில மாட்டுவேனா? நல்ல கதையால்ல இருக்கு'' என்றவாறு, சிவா தன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு சின்ன பாறை மீது உட்கார்ந்தான்.
அந்த போலீஸ்காரர்கள் வருத்தமான முகத்துடன், இவனை என்ன செய்வது எனத் தெரியாமல் பார்த்தனர். இவனுக்கு, போலீஸ்காரர்கள் மீது லேசாக இரக்கம் தோன்றியது. அந்த இரக்கம் மீது சற்று பெருமிதமும் கொண்டான்.
அந்த நாகேஷ் போலீஸ் இவன் பக்கம் நகர்ந்து வந்து, ''தம்பி, எனக்கு பசிக்கிற மாதிரி இருக்கு. அந்த ஆளு எழுதும்போது 'வெறும் லத்தியோடு ஓடிவர்றாங்க’னு எழுதிட்டான். இந்த லத்தியை என்ன சாப்பிடவா முடியும்?'' என இவன் மூக்குக்கு நேராக லத்தியை நீட்டிக் கேட்டார்.
இவனுக்கு, சிரிப்பதா... அழுவதா எனக் குழப்பமாக இருந்தது.
மதுசூதன் என்ன நினைத்தானோ, மீண்டும் வந்து திரைக்கதை பேப்பரை எடுத்து மறுபடியும் படித்தான். சிவாவும் போலீஸ்காரர்களும், விட்ட இடத்தில் மறுபடியும் ஓடிவந்து நின்றுகொண்டனர். படித்து முடித்த மதுசூதன், சடாரென பேப்பரைக் கசக்கி பக்கத்தில் இருந்த குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, மொபைல் போனை எடுத்து அழைத்தான்.
''டைரக்டர் சார்... நான் மதுசூதன் பேசுறேன். ஆமா... எழுதினேன். ஆனா, இந்த இடம் நல்லா வரும்னு தோணலை. இந்த போலீஸ்காரங்க துரத்துற சீனே வேணாம் சார். இதுக்கு ஆல்டர்நேட்டிவா ஒரு சீன் யோசிச்சிருக்கேன். அதைத் திரும்ப எழுதி அனுப்புறேன். எப்படி இருக்குனு பாருங்க'' என்றபடி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
குப்பைக்கூடையில் கசங்கிய பேப்பரில் இருந்த அந்த இரண்டு போலீஸ்காரர்களும், சிவாவை அப்பாவியாகப் பார்த்தனர்.
''என்னப்பா இப்போ என்ன பண்றது?'' என்றனர்.
சிவா, ஏதோ யோசிப்பதுபோல முகத்தில் பாவனை செய்தான். பிறகு, போலீஸ்காரர்களைப் பார்த்துச் சொன்னான், ''எனக்கே தெரியலைங்க... இனி என்ன நடக்கப்போகுதுனு!''
அந்த நாகேஷ் போலீஸ் கேட்டார்... ''நாங்க இப்படிக் குப்பையோட போய்டுவோம்.
நீ என்ன பண்ணுவ தம்பி?''
''நான் ஒண்ணும் பண்ண முடியாதுங்க. நானும் உங்ககூட குப்பைக்கு வரவேண்டியதுதான். இந்தத் திரைக்கதையில் இருப்பது ஒரே சிவா இல்ல; ஓராயிரம் சிவாக்கள்'' என்றான்!