மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

ஒரு சுருக் முன்னுரை 

15-ம் நூற்றாண்டில், இத்தாலிய அரசவையில் உருவான நடனம் பாலே. (பாலெட் என்ற பிரெஞ்சு சொல்லுக்கு குதித்தல், தாவுதல் எனப் பொருள்.) இது பிறகு பிரான்ஸுக்கும் ரஷ்யாவுக்கும் பரவி, மேம்படுத்தப்பட்ட கலை வடிவமாக மெருகேறியது; உலக அளவில் பரவி செல்வாக்கும் பெற்றது... குறிப்பாக அமெரிக்காவில். பாலே என்பது, வெள்ளை இன மக்களுக்கான கௌரவமான கலை வடிவம் என, அங்கே பொதுப்புத்தியில் புதைந்த விஷயம். ஆனால், அந்த நிறவெறியை மீறி கறுப்பின வெறுப்பைத் தகர்த்தெறிந்து, தன் அசாத்தியத் திறமையால் 'நெருப்புப் பறவை’யாக பாலே உலகில் தனி அடையாளம் பெற்றிருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை இது!

ஒரு வரலாற்றின் கதை

1982-ம் ஆண்டு மிஸ்டி கோப்லேண்ட் பிறந்தது, அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தின் கான்ஸாஸ் நகரத்தில். தாயின் பெயர்  சில்வியா. உள்ளூர் கால்பந்து அணியின் சியர்கேர்ள். டக் கோப்லேண்ட், சில்வியாவின் இரண்டாவது கணவர். இருவருக்கும் பிறந்தது நான்கு குழந்தைகள் (இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்). மிஸ்டி நான்காவதாகப் பிறந்தவள். மிஸ்டியின் இரண்டாவது வயதில் சில்வியா, டக் கோப்லேண்டைப் பிரிந்தார். புதிய கணவர் ஹரால்டுடன் வாழ, நான்கு குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சலஸுக்குச் சென்றாள். அந்தப் பந்தத்தின் அடையாளமாக மீண்டும் ஒரு குழந்தை. ஹரால்டு ஐந்து குழந்தைகளையுமே அன்புடன் கவனித்துக்கொண்டார். ஆனால் அவரது மிதமிஞ்சிய குடிப்பழக்கம், சில்வியாவையும்  அவரையும் பிரியச் செய்தது.

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

மிஸ்டியின் எட்டாவது வயதில் அவளுக்கு மீண்டும் ஒரு புதிய தந்தையை அறிமுகப்படுத்தினார் சில்வியா. ராபர்ட். குழந்தைகளிடத்தில் அன்பற்ற மனிதர். ராபர்ட், சில்வியாவின் ஆறாவது குழந்தைக்கு தகப்பன் ஆனார். காதல் தேய்ந்து கட்டெறும்பான தருணத்தில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள். இந்த வாழ்க்கையும் நிலையற்றதா? அடுத்து அம்மா எங்கே அழைத்துச் செல்வாள்? மீண்டும் புதிய அப்பாவை அறிமுகப்படுத்துவாளோ? மிஸ்டிக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்குத் தன் நிஜத் தந்தை டக் கோப்லேண்டின் முகம்கூட நினைவில் இல்லை. அவரது புகைப்படத்தையும் பார்த்தது இல்லை. சில்வியா, இத்தாலியத் தாய்க்கும், ஆப்பிரிக்க-அமெரிக்கத் தந்தைக்கும் பிறந்தவள். டக், ஜெர்மானியத் தாய்க்கும், ஆப்பிரிக்க-அமெரிக்கத் தந்தைக்கும் பிறந்தவர். அவர்கள் இருவருக்கும் பிறந்த மிஸ்டி, இத்தாலிய-ஜெர்மானிய-ஆப்பிரிக்க-அமெரிக்கக் கலப்பினப் பெண். ஆனால் அவளது நிறம், மிஸ்டியைக் கறுப்பினப் பெண்ணாகத்தான் அடையாளப்படுத்தியது.  

1976-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்ற ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியாவின் வீடியோவைப் பார்த்த மிஸ்டிக்கு, ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் பிறந்தது. வீட்டின் பின்புறத்தில் இருந்த காலி இடம், மிஸ்டியின் ஜிம்னாஸ்டிக் களமானது.

8 வயது உடல், அவள் இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்க, அவளுக்கு நாடியா ஆக வேண்டும் என்ற கனவு. இன்னொரு பக்கம் 'மரியா கேரே’யின் இசை ஆல்பங்கள் மீது பெரும் காதல். டி.வி-யில் மரியா ஆட, அதன் கண்ணாடி பிம்பமாக இடுப்பை அசைத்து ஆடிக்கொண்டிருப்பாள் மிஸ்டி. அவளது சகோதரி எரிகா, அவர்களது டானா பள்ளியின் டிரில் டீமில் நட்சத்திரமாக இருந்தாள். 'டானா டிரில் டீம்’ பிரபலமானது. மிஸ்டிக்கு டிரில் மீது ஆர்வம் பிறந்தது. அதுவும் டீமின் கேப்டனாக வேண்டும் என்ற ஆசையும் வந்தது. அதற்கான தேர்வில் கலந்துகொள்ள எரிகாவிடம் நடனம் கற்றுக்கொள்ள நினைத்தாள். பயிற்சியில், 'உனக்கு ஆடத் தெரியவில்லை’ என எரிச்சலுடன் எரிகா விலகிச் செல்ல, மிஸ்டி அழுதாள். அழுது தீர்த்து, பின் தானே சுயமாக நடனம் அமைத்தாள்.

பள்ளியில் டிரில் டீமுக்கான தேர்வு. மிஸ்டி குழுவுடன் ஆடினாள். பின் கேப்டன் தேர்வுக்காக தனி நடனம். 'பே...பி’ என ஜார்ஜ் மிக்கேலின் குரல் ப்ளேயரில் அதிர, மிஸ்டி அதைத் தன் வாழ்க்கையின் வாய்ப்பாக நினைத்து, நிலம் அதிர ஆடி முடித்து, விட்டத்தில் பார்வையை நிலைநிறுத்தி சிலையாக நின்றாள். அந்த நம்பிக்கை அவளை கேப்டன் ஆக்கியது. சந்தோஷத்தில் தன் பார்பி பொம்மைக்கு முத்தங்களைக் கொட்டினாள். டிரில் டீச்சர் எலிசபெத்துக்கு மிஸ்டியை மிகவும் பிடித்துப்போனது. பாலே கற்றிருந்த எலிசபெத், டிரில்லிலும் பாலே கலந்தார். அதை மிஸ்டியின் உடல் கனகச்சிதமாக வெளிப்படுத்தியது. 'மிஸ்டி, உன் உடல் பாலே நடனத்துக்கு ஏற்றது. பாய்ஸ் - கேர்ள்ஸ் கிளப்பில் என் தோழி சிண்டி, பாலே கற்றுக்கொடுக்கிறாள். நீ அவளைச் சென்று பார்’!

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

எலிசபெத்தின் வார்த்தைகள் மிஸ்டிக்கு அந்நியமாகத் தோன்றின. எனக்கு டிரில்தான் பிடித்திருக்கிறது. நான் எதற்கு பாலே கற்க வேண்டும்? இருந்தாலும் எலிசபெத் சொன்னதற்காக பாய்ஸ் - கேர்ள்ஸ் கிளப்புக்குச் சென்றாள். அங்கே சிறு குழந்தைகள் முதல் பருவ வயதினர் வரை பலரையும் சிண்டி ஆட்டுவித்துக்கொண்டிருந்தார். மிஸ்டி, வெறுமனே உட்கார்ந்து பார்த்துவிட்டுத் திரும்பினாள். சில நாட்கள் இப்படியே கடந்தன. பாலே மீது பாசம் எல்லாம் வரவில்லை. 'எலிசபெத்திடம் என்ன சொல்வது?’ என்பதுதான் உறுத்தியது. ஒருநாள் மிஸ்டியைக் கவனித்த சிண்டி, அவளிடம் வந்தாள். அவள் எலிசபெத் அனுப்பிய சிறுமி எனப் புரிந்துகொண்டு மற்ற சிறுமிகள் முன்பு மிஸ்டியை நிறுத்தினாள். மிஸ்டியின் வலது காலை அவளது காது உயரத்துக்கு உயர்த்தி, ஒற்றைக் காலால் நளினமாக நிற்கச் செய்தாள். அவளுக்கு அது எளிதாகவே இருந்தது. 'எல்லோரும் இப்படிச் செய்யுங்கள்’ என அந்தக் கணத்திலேயே மிஸ்டியை மற்றவர்களுக்கு முன்னுதாரணம் ஆக்கினாள். மிஸ்டிக்கு, சிண்டியை மிகவும் பிடித்துப்போனது... அதனால் பாலேவையும்.

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

பாலே, வசதி படைத்தவர்களுக்கானது. அதன் நட்சத்திரங்கள் பலரும் ஐந்து வயதுக்குள்ளாகவே பாலேவைக் கற்க ஆரம்பித்தவர்கள். அப்போதே வளையப் பழகிய அவர்களது உடல், எப்போதும் வளைந்து கொடுக்கும். ஆனால், மிஸ்டி பாலேவுக்குள் பாதம் பதித்தபோது அவளுக்கு வயது 13. இருந்தாலும் ஆரம்பப் பயிற்சிகளை எல்லாம் அழகழாகக் கற்றுக்கொண்டாள். நடன அசைவுகள் ஒவ்வொன்றையும் மிஸ்டி புரிந்துகொள்ளும் வேகம், சிண்டியை ஆச்சர்யப்படுத்தியது. எதற்கும் வளைந்துகொடுக்கும் தன் தேகத்தின் துணையால் வெகுவிரைவிலேயே pointe எனும் பாலேவின் உயிர்நாடி வித்தையைக் கற்றாள். அதாவது  பாலே ஷூவுடன், பாதத்தை முன்னோக்கி வளைத்து, கால் விரல்களின் நுனியில் உடல் எடையை மொத்தமாகத் தாங்கி நிற்பது. Grand jete  என்ற (சில அடிகள் ஓடிவந்து, வலது காலை முன்னோக்கிக் கிடைமட்டமாகவும், அதற்கு இணையாக இடது காலை பின்னோக்கிக் கிடைமட்டமாகவும் வரும்படி உயரக் குதிப்பது) அடுத்த முக்கியமான நடன அசைவிலும் தேர்ச்சிபெற்றாள். சிண்டி, மிஸ்டியை உச்சி முகர்ந்தார். 'நீ பாலேவில் உச்சம் தொடப் பிறந்தவள்!’

தான் நடத்திவந்த பாலே ஸ்டுடியோவில் மிஸ்டிக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கிய சிண்டி, அவளது பாலே ஷூ, உடைகளுக்கான செலவுகளைப் பார்த்துக்கொண்டார். மிஸ்டிக்குப் பணப் பிரச்னை இல்லாமல் பாலே வரம் அமைய, வீட்டிலோ மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை. ராபர்ட், சில்வியாவின் குழந்தைகளை 'கறுப்பு இனத்தவர்களாகப்’ பிரித்துப் பார்த்து வன்முறை வளர்த்தார். சில்வியா குழந்தைகளுடன் வெளியேறினாள். மீண்டும் புதிய பாய் ஃப்ரெண்ட். ரே. சில மாதங்களில் மற்றொருவர் அலெக்ஸ். 'என் வாழ்க்கையில் இன்னும் எத்தனை அப்பாக்கள் வருவார்கள்?’ மிஸ்டிக்கு அம்மாவைப் பார்த்தாலே கோபம் வந்தது. அலெக்ஸ் தங்கியிருந்த வீடு பறிபோன சூழலில், அனைவரும் அழுக்கு அடைந்த 'மோட்டல்’ ஒன்றில் தங்கவேண்டிய சூழல். சில்வியாவுக்கும் வேலை இல்லை. தரையில் ஏதாவது காசு கிடந்தால், பொறுக்கிக்கொண்டு சென்று கிடைத்ததை உண்டு பசியாறும் அளவுக்கு வாழ்க்கை மோசமானது. மிஸ்டியின் நிலை அறிந்த சிண்டி, மோட்டலுக்கு வந்து சில்வியாவிடம் பேசினாள். 'நான் மிஸ்டியை என்னுடன் தங்கவைத்துக்கொள்கிறேன்’. சில்வியா தங்கமாகச் சம்மதித்தாள். சிண்டியின் கணவர் பாட்ரிக்கும் அவர்கள் மகனும் மிஸ்டியைத் தங்கள் குடும்ப உறுப்பினராகவே ஏற்றுக்கொண்டார்கள். மிஸ்டிக்கு அவசிய ஆக்ஸிஜன் கிடைத்தது.

பாலேவில் மிளிர எந்த ஒரு 'சுருக்கு வழி’யும் கிடையாது. இடைவிடாத பயிற்சிகளால் மட்டுமே கடைந்தெடுத்த பாலே அசைவுகள் வசப்படும். மிஸ்டிக்கு பாலே இயல்பாகவே வந்தது. சிண்டி, அவளுக்கு 'அட்வான்ஸ் பாலே’ சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். American Ballet Theatre - ABT, 1940-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவின் நம்பர்1 பாலே தியேட்டர். அதில் உறுப்பினராகிக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்து, அதன் நிகழ்ச்சிகளில் பாலே ஆடுவது என்பது ஆகப் பெரிய கௌரவம். அந்தக் கனவுகளை மிஸ்டிக்குள் விதைத்தார் சிண்டி. அவளது ஸ்டுடியோ நடத்திய பாலே நிகழ்ச்சிகளில் மிஸ்டி, ரசிகர்களின் கவனம் பெற ஆரம்பித்தாள்.

சிண்டியின் முயற்சியால் 'ஸ்பாட்லைட் அவார்ட்ஸ்’ என்ற பாலே போட்டியில் மிஸ்டி கலந்துகொண்டாள். ஜெயித்தால் பணம், ஸ்காலர்ஷிப், பெரிய பாலே ஸ்டுடியோக்களின் 'சம்மர் கேம்ப்’பில் கலந்துகொள்ளும் அழைப்பு எல்லாம் கிடைக்கும். மிஸ்டிக்குத் தீவிரப் பயிற்சி கொடுத்த சிண்டி, 32 முறை ஒற்றைக் காலின் விரல் நுனியால் நின்று, பம்பரமாகச் சுற்றுவதுபோல ((fouettes) ) நடனம் அமைத்திருந்தார். ஆனால், மேடை ஏறுவதற்கு முன் மிஸ்டியின் மனதில் அவநம்பிக்கை. 'என்னால் ஆட முடியாது’ என அழத் தொடங்கினாள். சிண்டி, அவளைத் தரதரவென பார்க்கிங்குக்கு இழுத்துச் சென்று காரில் இசையை ஓடவிட்டார். 'ஆடு’ என்றார். மிஸ்டி தயக்கத்துடன் ஆடத் தொடங்க,  சில அசைவுகளை மாற்றி, பம்பரச் சுற்றுகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தார். திருத்தப்பட்ட நடனத்தை நினைவில் வைத்து பிசிறு இன்றி மேடையில் ஆடிய மிஸ்டி, ஸ்பார்ட்லைட் அவார்டு வென்றாள்.

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

மிஸ்டிக்கு, பல பாலே நிறுவனங்கள் வாய்ப்பு கொடுத்தன. நியூயார்க் சிட்டி பாலே நிறுவனம் மட்டும் 'தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என பதில் அனுப்பியது. காரணம், வலி மிகுந்தது. மிஸ்டி ஒரு கறுப்பினப் பெண். 'மிஸ்டியை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?’ எனப் பிற்காலத்தில் அந்த நிறுவனம் வருத்தப்பட வேண்டும் என்ற வைராக்கியம் மிஸ்டிக்கு உருவாகியது. சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள பாலே நிறுவனத்தின் அழைப்பை ஏற்று, சம்மர் கேம்ப்புக்காக அங்கே நுழைந்தாள் மிஸ்டி. அங்கே எங்கும் வெள்ளை நிறத்தினர். இவளை அந்நியமாகப் பார்த்தார்கள். ஆனால், மிஸ்டியின் திறமை அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தது. கேம்ப் முடிவதற்கு முன்பாகவே, வருடம் முழுவதும் அங்கேயே தங்கிப் படிக்கும் வாய்ப்பு மிஸ்டிக்கு வழங்கப்பட்டது. ஆனால், மிஸ்டியின் குறிக்கோள் Emancipation  ஆக இருந்ததால், அவள் தன்மையாக மறுத்தாள்.

லாஸ் ஏஞ்சலஸுக்குத் திரும்பிய மிஸ்டியை, சில்வியா கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். 'சிண்டி, உன்னை ஆடவைத்து நிறையச் சம்பாதிக்கிறாள். உனக்கும் பணம் தராமல் ஏமாற்றுகிறாள். குடும்பத்திடம் இருந்து உன்னைப் பிரிக்கப் பார்க்கிறாள். எங்களுக்கு நீ வேண்டும். உனக்கு பாலே வேண்டாம்’ சுடுசுடு சொற்கள் சில்வியாவிடம் இருந்து தெறித்தன. மிஸ்டி, அதிர்ந்து நின்றாள். இதெல்லாம் அறிந்த சிண்டி, மிஸ்டியின் பாலே வாழ்க்கையைக் கருத்தில்கொண்டு ABT தாக்கல் செய்யச் சொன்னார். அதாவது, 18 வயது நிரம்பாதவர்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலையாகி, தங்கள் வாழ்க்கை குறித்த முடிவை தாங்களே எடுக்கும் உரிமை கோருவது. மிஸ்டி, அதைத் தாக்கல் செய்துவிட்டு தோழி வீட்டில் பதுங்க, வெகுண்டெழுந்த சில்வியாவோ 'தன் மகளைக் காணவில்லை. சிண்டி மீது சந்தேகம்’ என போலீஸ் புகார் கொடுக்க, நூடுல்ஸ் சிக்கல்கள். மீடியாவின் வாய்க்கு மிஸ்டி அவல். தன்னலம் இல்லாத குருவுக்கும், சுயநலமிக்க தாய்க்கும் நடுவில் திணறித் தவித்த மிஸ்டி, இறுதியில் பிரச்னைகளை எல்லாம் முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் சில்வியாவுடன் சென்றாள். 'இனி என் பாலே கனவுகள் அவ்வளவுதான்’... உடைந்து அழுதாள்!

1999-ம் ஆண்டின் கோடையில் Corps de ballet -யில் இருந்து சம்மர் கேம்ப் அழைப்பு வந்தது மிஸ்டிக்கு. சில்வியா அனுமதித்தாள். மகிழ்ச்சியை மிஸ்டி அனுபவித்தாள். நியூயார்க்கில் இரண்டு மாதப் பயிற்சியில் மிஸ்டி நிறையவே புதிதாகக் கற்றுக்கொண்டாள். இவள் பாலேவுக்காகவே பிறந்தவள் என கிஙிஜி உணர்ந்துகொண்டது. அதனால்தான், அவள் பள்ளிப் படிப்பை முடிக்க லாஸ் ஏஞ்சலஸ் திரும்பினாலும், அடுத்த ஆண்டின் சம்மர் கேம்ப்புக்காக மிஸ்டியை மீண்டும் அழைத்துக்கொண்டது.

இங்கே வசதிக்காக சில பாலே பதங்கள். 'கிளாசிக்கல் பாலே’ என்பது பழைமையான, பரிசுத்த பாலே வடிவம். 'நியோகிளாசிக்கல்’ என்பது 20-ம் நூற்றாண்டின் வடிவம். Contemporary  என்பது கிளாசிக்கல் பாலேவுடன் நவீன நடனத்தையும் கலந்து ஆடுவது. Pas de deux  என்பது குழு நடன ஆட்களைக் குறிப்பது. Contemporary என்பது ஆண்-பெண் ஜோடியாக ஆடுவது. Soloist   என்பதும், Principal என்பதும் தனி நபர் நடனம். ஆனால், சோலோயிஸ்ட்டைவிட பிரின்சிபல் உயர் அந்தஸ்து. மிஸ்டி, தன் 17 வயதில் Corps de ballet ஆட ஆரம்பித்தாள். ABT-ன் சோலோயிஸ்ட்டாக, பின்னர் பிரின்சிபலாக உயர வேண்டும் எனும் லட்சியக் கனவு அவளுக்குள் தனியே நடனமாடிக்கொண்டிருந்தது.

பாலேவிலும் காயங்கள் சகஜம். அடிக்கடி ஓடுவது, குதிப்பது, உடல் எடையை ஒரு புள்ளியில் குவித்து நிற்பது போன்ற அதீதப் பயிற்சிகளால், சிறு அளவில் எலும்பில் பிளவுகள் (Stress Fracture)  ஏற்படும். மிஸ்டிக்கு அப்போது இடுப்பின் கீழ்ப்பகுதி பாதிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு தினமும் 2-3 மணி நேரம் இடுப்பு பெல்ட் அணியவேண்டிய சூழல். 19 வயதில் அதற்கான சிகிச்சையில் இருக்கும்போதுதான், தான் இன்னும் பூப்பெய்தாத விஷயத்தை வெளியில் மருத்துவரிடம் பகிர்ந்தார் மிஸ்டி. மருத்துவர் சில மாத்திரைகளைப் பரிந்துரைந்தார். 10 நாட்களில் பலன். ஆனால், சிகிச்சை எல்லாம் முடிந்து மீண்டும் ஸ்டுடியோவுக்குத் திரும்பும்போது மிஸ்டியின் உடல் அமைப்பில் மாற்றம். மார்பின் அளவு, உடல் வளைவுகள், எடை எல்லாம் அதிகரித்திருந்தன. அவை பாலே உலகம் ஒப்புக்கொள்ளாத விஷயம். 'நீ உன் உடலைச் சீராக்க வேண்டும்’ என ABT -யினர் உதிர்த்த கம்பளிப்பூச்சி வார்த்தைகள், மிஸ்டியைக் கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது. உடல் மாறினாலும் தன் பாலே தரம் மாறவே மாறாது என தீவிரப் பயிற்சியால் நிரூபித்து, விமர்சித்தவர்களின் வாயை அடைத்தார் மிஸ்டி.

ஆனால், புதிதாகக் கிளம்பிய புயல் ஒன்று மிஸ்டியை உருக்குலைத்துப்போட்டது. Swan Lake  என்றொரு பாலே நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகை. அன்னங்களில் ஒன்றாக மிஸ்டியும் ஆடினார். 'கறுப்பு நிற அன்னம் எங்கும் கிடையாதே...’ - வெள்ளைக் கழுகுகள் காதுபடவே பேசின. நிகழ்ச்சியில் இருந்து மிஸ்டியின் பெயரை நீக்கினார்கள். நவீன யுகத்திலும் தீரா நிறவெறி. அமெரிக்காவில் கறுப்பு இனத்தைச் சார்ந்தவர் பாலேவில் பத்தோடு பதினொன்றாக ஆடலாம். பேய், பிசாசு, விலங்குகள், வில்லன் என 'ஒதுக்கப்பட்ட’ பாத்திரத்தில் நடிக்கலாம். ஆனால், என்றுமே உயரத்துக்குப் போக விட மாட்டார்கள்.

1950-ம் ஆண்டு ரேவன் என்கிற கறுப்பினப் பெண் பாலே ஆடத் துணிந்தபோது, ஒவ்வொரு முறையும் முகமெங்கும் வெள்ளை பெயின்ட் அடித்துக்கொள்ளவேண்டிய சோகம். அமெரிக்காவின் நிறவெறி அகங்காரத்தால், வெளிநாடுகளுக்கு அங்கீகாரம் தேடி ஓடிய கறுப்பு பாலே தேவதைகள் உண்டு. 'வெள்ளை’ மாளிகையில் 'கறுப்பு’ அதிபரே இருந்தாலும் நிறவெறிப் பிரச்னைகள் நிரந்தரமானவை. 'என் திறமையை மட்டும் பாருங்கள். என் தோலின் நிறத்தை ஏன் பார்க்கிறீர்கள்?’ - ஓங்கி அறைந்து உரக்கக் கேட்க வேண்டும் என மிஸ்டிக்குள் கோபம் பொங்கியது. யாரிடம் கேட்க? யார் தோள் கொடுப்பார்கள்? கறுப்பினப் பெண் ஒருத்தி பாலேவின் உச்ச நட்சத்திரம் ஆகவே முடியாதா? மிஸ்டி, ஸ்டுடியோவில் விடாமல் பயிற்சி செய்துகொண்டிருந்தபோதும், அறை அகலக் கண்ணாடியின் மூலையில் அவளது பிம்பம் கதறி அழுதுகொண்டிருந்தது.

ABT -ல் சோலோயிஸ்ட்டாக மாற கறுப்புத் தோல் தடை என்றால், வேறு ஸ்டுடியோவில் அதே வாய்ப்புக் கம்பளம் விரிக்கலாம். ஆனால், அது பேரரசியாக முடியாமல் தோற்று, இளவரசியாக ஒப்புக்கொண்டதற்குச் சமம் அல்லவா? மிஸ்டி, ABT-ன் பேரரசியாகத் தன்னை நிரூபிக்க விரும்பினார். பாலேவில் தான் எவ்வளவு முக்கியமானவள் என நிரூபிக்கும் கணத்துக்காகக் காத்திருந்தார். அப்போது போட்டி ஒன்றில் (Princess Grace Prize)  கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மிஸ்டி, முழு அர்ப்பணிப்புடன் ஆடினார். போட்டியில் தோல்வி. ஆனால், பெருவெற்றி! அந்த நடனம் மிஸ்டியை சோலோயிஸ்டாக ABT -யை அறிவிக்கவைத்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, ஒரு கறுப்பினப் பெண் ABT -ன் தனி நபர் நடனத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாறு. பத்திரிகைகளில் மிஸ்டியின் செய்திகள் நடனமாடின. மிஸ்டியின் நிகழ்ச்சிகளுக்கு அரங்குகள் நிறைந்தன. 2008-ம் ஆண்டு பாரம்பர்யமான மெட்ரோபாலிடன் ஓபராவில், ஸ்லீப்பிங் பியூட்டியாக மிஸ்டி, ரசிகர்களின் விழிகளில் பரவசம் நிறைத்தாள்.

ABT -ன் நட்சத்திரக் கலைஞர், மியூசிக் ஆல்பங்களில் நடிக்கும் வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள், டி.வி நிகழ்ச்சிகள்... என மிஸ்டியின் புகழ் ஓஹோ. 'நீங்கள் விரும்பும் பாத்திரத்தில் நடிக்கலாம்’- கிஙிஜி அறிவித்தது. 2012-ம் ஆண்டு மிஸ்டிக்கு ‘Fire Bird’  கதையில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. வழிதவறிப்போகும் இளவரசன் இவானை, இறவாத கொடூர வில்லன் ஒருவனிடம் இருந்து காப்பாற்றும் நெருப்புப் பறவையின் கதை. அந்த நெருப்புப் பறவையாக மேடையேற ஆசைப்பட்டார் மிஸ்டி. மிகவும் கடினமான நடன அசைவுகள் கொண்ட கனமான பாத்திரம். பயிற்சியில் காயங்கள் வாட்டின. பம்பரமாகச் சுழல முடியாதபடி வலி. மிஸ்டி, சுலபமான அசைவுகளை மட்டும் பயிற்சி செய்துவிட்டு, கடின அசைவுகளை மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டார்.

2012-ம் ஆண்டு ஜூன். மெட்ரோபாலிடன் ஓபரா. ரசிகர்கள் காத்திருந்தார்கள். சிவப்பு உடையில் அரிதாரம் பூசும்போதே, உடலெங்கும் வலி. 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்... மிஸ்டி கோப்லேண்ட் அஸ் ஃபயர்பேர்டு...’ என்ற அறிவிப்பு கேட்டதும், இசை கசிந்தது. மேடையில் நுழைந்தார் மிஸ்டி. எத்தனை நாள் கனவு இது... எத்தனை வருடக் காத்திருப்பு இது? இன்று இயலாமல்போனால், கறுப்பர்கள் பாலேவுக்கு லாயக்கற்றவர்கள் என்ற நிரந்தரக் களங்கம் என்னால் ஏற்பட்டுவிடும் அல்லவா? வெறி... வேட்கை! அதுவரை உடலை இறுக்கிப் பிடித்திருந்த வலி எல்லாம் வழிதவறிப் போனது. மிஸ்டி நெருப்புப் பறவையாக உருமாறினார். மலர்ந்து, மிதந்து, வளைந்து, நெகிழ்ந்து, காற்றில் பறந்து, சுற்றிச் சுழன்று, வெறியுடன் எழுந்து, கோபம் கலந்து... அப்போது மிஸ்டி ஆடியது வெறும் பாலே அல்ல... காலம் காலமாக கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் வெறுப்புக்கு, அடக்குமுறைக்கு எதிரான வீறுகொண்ட தாண்டவம். முடிவில் அரங்கம் அதிர்ந்தது. 'நிறமற்ற’க் கண்ணீர் பலரது கண்களில்!

தனித்துவமிக்க கறுப்பின தேவதையாக மிஸ்டி, பாலே உலகை இன்று ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். தன்னைப்போல் பல கறுப்பு நெருப்புப் பறவைகளை உருவாக்க வேண்டும் என்பது மிஸ்டியின் வாழ்நாள் லட்சியம். அது அவரால் மட்டுமே முடியும்!

'பத்து மடங்கு போராடுவோம்!’

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12
நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

கறுப்பினத் தந்தைக்கும், யூதத் தாய்க்கும் பிறந்த இவான்ஸ், மிஸ்டியின் நீண்ட கால பாய் ஃப்ரெண்ட். இருவரும் நியூயார்க்கில் சேர்ந்து வாழ்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளவில்லை.

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

 இரண்டாவது வயதில் தன் தந்தையைப் பிரிந்த மிஸ்டி, தன் 22-வது வயதில் அவரைச் சந்தித்து நெகிழ்ந்தார்.

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

 'கறுப்பினத்தில் பிறந்ததற்கு வருத்தம் அடைய ஒன்றும் இல்லை. போராட வேண்டும். மற்றவர்களைவிட நாம் 10 மடங்கு மேலானவர்கள் என உணர்த்த போராட வேண்டும்’ - மிஸ்டியின் உத்வேக மொழி இது.

நம்பர் 1 மிஸ்டி கோப்லேண்ட் - 12

 2015-ம் ஆண்டு ஏப்ரல் டைம் இதழ் அட்டைப் படமாக கௌரவம் பெற்றார் மிஸ்டி. 'பாலே உலகின் வழிகாட்டி’யாக டைம் இவரைப் புகழ்ந்துள்ளது. 1994-ம் ஆண்டுக்குப் பிறகு டைம் அட்டையில் இடம்பெற்ற நடனம் சார்ந்த நபர் மிஸ்டியே!