மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 49

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலி, ஓவியம் : மணி

பாரதிதாசன் பரம்பரை!

##~##

ரஸ்பரம் கண்ணாடிக் கோப்பைகளைத் தட்டி - CHEERS சொல்லி - ஒரு PEG உள்ளே போன பிறகு -

நிலவு - ஆண்பாலா பெண்பாலா விவாதம் தொடங்கியது.

விஸ்வநாத அண்ணன் கண்ணதாசன் அவர்களிடம் ''அண்ணே! 'குலமகள் ராதை’ படத்தில் நீங்களே ஒரு பாட்டு எழுதியிருக்கீங்க - 'பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்; அவன், இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்’னு!'' என்று ஆரம்பம் செய்தார்.

கண்ணதாசன் மெல்ல நகைத்துவிட்டு ''அடேய்! அந்தப் படத்துல வர்ற கதாநாயகன் பேரு சந்திரன்! நான் குறிப்பிட்டது - ககனத்துச் சந்திரனையல்ல; கதாநாயகன் சந்திரனை! 'அவனொரு நிலவோ’ன்னு - வாலி எழுதினது தப்பு; சந்திரன் - பெண்பால்! நீர் என்னய்யா சொல்றீர்?'' என்று என்னைக் கேட்டார் கவிஞர்.

'அண்ணே! சந்திரன் ஆண்பால்னு - சரித்திரரீதியாச் சொல்றேன்; அப்புறம், புராணரீதியாச் சொல்றேன்; அப்புறம், விஞ்ஞானரீதியாச் சொல்றேன், போதுமா?’ என்றேன் நான்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 49

கண்ணதாசன், கண்ணாலேயே எனக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

நான் நீண்ட விரிவுரை நிகழ்த்தினேன் - இடையிடையே தாகசாந்தி செய்து கொண்டே!

''அண்ணே! 'சிவகவி’ படம் பார்த்திருப்பீங்க... அரசவை நர்த்தகி டி.ஆர்.ராஜ குமாரி; அரசவைப் புலவன் எம்.கே.தியாகராஜ பாகவதர். நர்த்தகி புலவனை ஆசைப்படுவாள். அரண்மனையை ஒட்டிய ஒரு நந்தவனத்தில் - முழு நிலா இரவில் - பொய்யா மொழிப் புலவனிடம் தன் விரகத்தை விண்டுரைப்பாள். காமத்தின் காங்கைக்கு ஆற்றாது, விடுகின்ற பெருமூச்சில் மார்க்கச்சை கட்டவிழ்கிறது என்றெல்லாம் - நாணின்றி நவின்று; பசலையில் தன் பாதாதிகேசம் வெளிறிக் கிடக்கிறது எனக் கூச்சின்றிக் கூறி; கைக்கிளையில் கை வளை கழல்கிறது என்றெல்லாம் தன் மேல் கழிவிரக்கம் வருமாறு பேசி...

பொய்யாமொழியைத் தீண்ட; தன்னைப் புல்லுமாறு தூண்ட - புலவன், 'இது பொருந்தாக் காமம்’ எனப் புகன்று நந்தவனத்தை நீங்குவான்!

வெகுளியும் வெட்கமும் மேலிட - மறுநாள் மன்னன் முன் அந்த நர்த்தகி - தன்னைப் பொய்யாமொழிப் புலவன் கற்பழிக்க முயன்றானெனக் குற்றம் கூறி நிற்பாள்!

புலவன் - தான் நிரபராதி என்பான். 'ஆர் அதற்கு சாட்சி’ என்று அரசன் வினவ -

வானத்தில் நின்ற சந்திரன்தான் சாட்சி என்று புலவன் சொல்லி - சந்திரனை வேண்டிப் பாட -

தலையில் கிரீடம்; இடுப்பில் பட்டுப் பீதாம்பரத்தில் பஞ்சகச்சம் - இவற்றோடு சந்திரன் சபையில் தோன்றி -

'பொய்யாமொழிப் புலவர் நிரபராதி!’ என்று சொல்லிப் போவான்; சந்திரன், ஆண்பால் என்பதைப் படத்தைப் பார்த்தால் தெரியும்!

அடுத்து - புராணரீதியாகச் சொல்கிறேன். அண்ணே! உங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே அகத்தியர் கோயில் இருக்கு; அங்கு நவக்கிரகங்கள் இருக்கின்றன! சந்திரன் ஆண் என்பது அந்தச் சிலாரூபத்தைப் பார்த்தாலே புரியும். மேலும், சந்திரனின் மனைவி பெயர் ரோகிணி!

அடுத்து - விஞ்ஞானரீதியாகச் சொல்லுகிறேன். மலர்தல் என்பது பெண்ணுக்கு உரியது. அல்லி மலர்கிறது, சந்திரனைக் கண்டு; சந்திரன் பெண்பாலாக இருந்தால் இது சாத்தியமில்லை!''

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 49

கண்ணதாசன் என் விளக்கங்களில் CONVINCE ஆனார். 'அவனொரு நிலவோ?’ என்றெழுதியது சரிதான் என்றார்.

மறுநாள் -

எனக்குப் பிடித்த - 'OLD SMUGGLER’ - என் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்!

ர் உண்மையை உலகறியக் கூவுவேன். இந்த வயதிலும் என் மனத்தை சமநிலையில் வைத்திருப்பது - பகவத் கீதையல்ல; 'அர்த்தமுள்ள இந்து மதம்’!

பலமுறை படித்திருப்பினும் - படிக்கப் படிக்கப் புதிது புதிதாய் அறிவு கொளுத்தும் 'அர்த்தமுள்ள இந்து மத’த்தை, சனிக்கிழமைதோறும் தினத்தந்தியில் என் கண்கள் தேடும்!

கண்ணதாசன் இந்த மன்பதைக்கு வழங்கிய கருணைக் கொடை அது!

பிரபல திரைப்பட கதை வசனகர்த்தாவும்; இயக்குநரும்; படாதிபதியும் ஆன -

அமரர் திரு.வலம்புரி சோமநாதன் அவர்கள் என் நெருங்கிய நண்பர். இயக்குநர் பீம்சிங்கின் வலக்கரம் போன்றவர். இந்தி நடிகர் திரு.திலீப்குமார் தன் படங்களின் திரைக்கதைகளை எழுதத் தன்னுடன் பம்பாயிலேயே பல மாதங்கள் வலம்புரி சோமநாதனை வீட்டோடு வைத்துக்கொண்டதுண்டு.

'திருமணம்’; 'லலிதா’; 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’; - இவையெல்லாம் வலம்புரியின் படங்கள். ஆங்கில அறிவும் தமிழறிவும் ஒருசேரப் பெற்றவர்.

விகடனில் வெளியான எனது 'பாண்டவர் பூமி’யை வாரா வாரம் படித்து - 'நீர் மஹாபுருஷன்; நீர் மஹாபுருஷன்!’ என்று கண்ணீர் மல்கத் தொண்டையடைக்கத் தொலைபேசியில் கரைவார்!

ந்த வலம்புரி சோமநாதன்தான் - புதுக்கோட்டையில் தன் பொறுப்பில் நடந்த பத்திரிகையில், கண்ணதாசனுக்கு முதன்முதல் வேலை கொடுத்தவர்.

கண்ணதாசனுடைய எழுத்துப் பணி புதுக்கோட்டையில்தான் கன்னி முயற்சி யாக ஆரம்பம் ஆனது.

என்னுடைய எழுத்துப் பணியும் புதுக் கோட்டையில்தான் ஆரம்பம் ஆனது.

புதுக்கோட்டை இராமச்சந்திரபுரத்தில் இருந்து பூத்துக் கிளம்பித் தமிழ் வளர்த்த பதிப்பகங்கள் அற்றை நாளில் அனேகம் உண்டு.

பல சிற்றேடுகள் தோன்றி, பின்னாளில் பிரபலமான பல எழுத்தாளர்களுக்கு நாற்றங்காலாக விளங்கிய ஊர் புதுக்கோட்டை!

நான் என் இளமைக் காலத்தில் கவிதைப்பித்து தலைக்கேறித் திரிந்தேன். நிறைய நிறைய - சின்னச் சின்னக் கவிதைகள் எழுதி, சிற்றேடுகள் அதிகம் வெளியாகிக்கொண்டிருந்த புதுக்கோட்டைக்கு அனுப்புவதுண்டு.

அச்சில் என் கவிதை வராதா என நாவில் எச்சில் ஊற நின்ற காலம் அது!

புறப்பட்ட வேகத்திலேயே, புதுக்கோட்டையிலிருந்து என் கவிதைகள் திரும்பி வந்தன. அச்சு வாகனம் ஏற அருகதையற்றவையாக என் படைப்பு கள் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் -

நான் சோரவில்லை. 'என் கவிதையைவிட மட்டமான கவிதையெல்லாம் ஏற்கப் படுகின்றனவே’ என்று - பெட்டைப் புலம்பல்களில் ஈடுபட்டு, பிறரது எழுத்துகளைப் பரிகசிக்கும் பாவத்தைப் பண்ணவில்லை.

'என் குஞ்சு பொன் குஞ்சு’ எனக் காக்கைபோல் எண்ணாமல் - நான், செப்பு கவிதை செப்பு என ஓர்ந்தேன்; அது, செம்பொன் அல்ல எனத் தேர்ந்தேன்!

வேதாளம் முருங்கை மரம் ஏற ஏற - நான் விக்கிரமாதித்தன்போல் விடாக்கண்டனாயிருந்தேன்.

ரு நாள் ஒரு கடிதம் வந்தது - 'உங்கள் கவிதை பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டது’ என்று!

கடிதத்தை அனுப்பிய பத்திரிகையின் பெயர் 'கலைவாணி’; புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மாதம் இருமுறை ஏடு.

திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் உண்டு.'கலைவாணி’ பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித்து, நன்றி சொல்வதோடு அல்லாமல் அவர்பால் என் நட்பை நீட்டித்துக்கொள்ள வும் நினைந்து -

நான் புறப்பட்டேன் புதுக்கோட்டைக்கு. 'கலைவாணி’ ஆசிரியரைக் கண்டு கும்பிடு போட்டேன்.

உட்காரச் சொன்னார். கவிதையைப் பாராட்டினார். தன் வாயால் என் கவிதையைப் படித்து அதன் நயங்களை வெகுவாக சிலாகித்து, அடிக்கடி எழுதச் சொன்னார்.

கவிதை இதுதான்:

'நிலவுக்கு முன்னே
நீ வர வேண்டும்;
நீ வந்த பின்னே
நிலவெதற்கு வேண்டும்?’

- இப்படிப் போகும் அந்தக் கவிதை; ஒரு கப் காபி வரவழைத்துக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தினார் 'கலைவாணி’ ஆசிரியர்.

கதர்ச் சட்டை; கதர் வேட்டி; நெற்றியில் திருநீறு; நேர்கொண்ட பார்வை; காந்தியடிகளின்பால் மாளாக் காதல்!

நெடுநாளைய நண்பனோடு அளவளாவுதல்போல் என்னோடு அளவளாவினார்.

திருச்சி தேவர் ஹாலில், தான் எழுதிய நாடகம் அடுத்த வாரம் நடக்க இருப்பதையும், அதற்கு நான் வர வேண்டும் என்பதையும் உறுதிபடச் சொன்னார்.

நான் அந்த நாடகத்திற்குப் போயிருந்தேன். அற்புதமான நாடகம். உரையாடல்கள் எல்லாம், சமூகத்தைச் சாட்டையெடுத்து விளாசுதல்போல் வெறியும் நெறியும் சார்ந்ததாயிருந்தன.

அந்த நாடகத்தை அரங்கேற்றியது - முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன டி.கே.எஸ். சகோதரர்கள்!

நாடகம் முடிந்ததும், நாடக ஆசிரியரைச் சந்தித்து, என் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். மெல்லப் புன்னகைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.

என் முதல் கவிதையைத் தன் பத்திரிகையில் வெளியிட்ட அவர்தான் -

பின்னாளில், எம்.ஜி.ஆர். படத்தில் - நான் முதல் பாட்டு எழுதும் வாய்ப்புப் பெறக் காரணமாவார் என்று, நான் கனவிலும் கருதினேனில்லை!

'கலைவாணி’ ஏட்டில் கவிதை எழுதிவிட்டால்கூட -

'பொன்னி’யில் என் எழுத்து இடம் பெறவில்லையே என்று நான் ஏங்கிக்கிடந்தேன்.

திரு.முருகு.சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு - புதுக்கோட்டையிலிருந்து அந்நாளில் வெளியான மாத இதழ்தான், 'பொன்னி’!

திராவிட இயக்கத்தினர் கரங்களில் அது தவழும் அளவு - தமிழ் ஆர்வலர் நெஞ்சங்களில் அதற்கொரு நிலைபேறு இருந்தது!

'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்’ என்னும் வரிசையன்று -  

'பொன்னி’ ஏட்டில் இடம் பெற்று, இறவாப் புகழ் பெறும் கவிதைகளை யாத்தருளும் புலவர் பெருமக்களை - இருந்தமிழ்நாட்டோர்க்கு இனம் காட்டியது.

இன்று நம்மிடையே மூத்த கவிஞராய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியவர் -

திரு. சாமி.பழனியப்பன் அவர்கள், 'பொன்னி’ ஏடு சுட்டிய, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் தலையாயவர்.

கவிஞர் பெருமான் திரு.பழனியப்பன் அவர்களின் தந்தையார் பெயரும் - தமிழ்த் தாத்தாவின் பெயரும் ஒன்றாயிருப்பதே - இவர், தமிழ் வளர்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர், என்பதை உறுதிப்படுத்துகிறது!

ஆம்; கவிஞர் சாமி.பழனியப்பன் தந்தையார் பெயர் -

திரு. உ.வே.சாமிநாதன்!

திருச்சி வானொலி நிலையத்தில் நான் தற்காலிகக் கலைஞராகப் பணியாற்றிய நாளில் -

எனக்கு நெருங்கிய நண்பராயிருந்த திரு.என்.ராகவன் அவர்களின் உறவினர் திரு.சாமி.பழனியப்பன்.

வானொலி நிலையக் கவியரங்கத்தில் திரு.பழனியப்பன் பாடியபொழுது - நானும் கூட்டத்தில் ஒருவனாய் நின்று கேட்டவன்!

அவருடைய கவிதைகளை நான் - என் ஆரம்ப நாள்களில் நிறையப் படித்துப் பிரமித்துப்போயிருக்கிறேன் -

''பாரதிதாசனின் இன்னொரு புனை பெயரோ பழனியப்பன் என்பது’ என்று!

பழனியப்பனால் தமிழ் பெற்ற தகவு பேசத் தரமன்று; அவ்வளவு என்றால் அவ்வளவு!

என்னுள் இருக்கும், எள் முனையளவு தமிழும் பழனியப்பனார் பாக்களை என் இளமைக் காலத்தில் படித்ததனாலான பயனே!

சாமி.பழனியப்பன் பல கவிதைகளை இப்பசுந்தமிழ்நாட்டுக்கு வழங்கியிருப்பினும் -

அவர் யாத்த கவிதைகளிலெல்லாம் மேலான பெருங்கவிதை ஒன்று உண்டு!

அந்தக் கவிதையின் பேர்:

'பழநிபாரதி’!

ன் முதல் கவிதையைப் பிரசுரித்த  -

புதுக்கோட்டை 'கலைவாணி’ ஏட்டின் ஆசிரியரும் -

என் முதல் பாட்டு - எம்.ஜி.ஆருக்கு நான் எழுத வாய்ப்பு வழங்கிய பெருமகனாரும், ஒருவரே என்றேனல்லவா?

அவர்தான் -

அதிக எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய திரு. ப.நீலகண்டன் அவர்கள்!

திரு. ப.நீலகண்டன் எழுதியதுதான் - திருச்சி தேவர் ஹாலில் டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றிய நாடகம்; நாடகத்தின் பெயர்:

   'முள்ளில் ரோஜா!’

- அடுத்த இதழில் நிறைவுபெறும்