Published:Updated:

நச்சு நீக்க... இயற்கை காக்க...

நச்சு நீக்க... இயற்கை காக்க...

நச்சு நீக்க... இயற்கை காக்க...

மிழ்நாட்டுக் காய்கறிகளில் பூச்சிக்கொல்லியின் அளவு மிகுந்து இருப்பதாகக் கூறும் கேரளா அரசு, நம் மாநிலத்தில் இருந்து செல்லும் காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதே காரணத்தை முன்வைத்து வளைகுடா நாடுகளும், தமிழ்நாட்டு விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்திவைத்துள்ளன. உண்ணும் உணவில் நஞ்சு கலந்திருக்கும் அபாயச் சூழல், உடல்நலத்தைக் கெடுத்து, இப்போது பொருளாதாரத்தையும் அசைத்துப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. 

இந்திய விவசாயத்தில் ரசாயனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துவருவதால், பாஸ்பரஸ், ஆர்சானிக், காரீயம், குரோமியம் போன்ற ஆபத்தான நச்சுக்கள் மண்ணில் அதிகரித்துவிட்டன. தாவரங்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான நைட்ரஜன் சத்து, தமிழ்நாட்டின் 96 சதவிகிதப் பகுதிகளின் மண்ணில் போதுமான அளவுக்கு இல்லை. தனக்குள் விழும் அனைத்தையும் மட்கவைத்து, தாவரங்களைச் செழிக்கவைத்து, உலகின் உயிர்ச்சூழலை உறுதி செய்யும் மண் தன் உயிர்ச்சத்தை இழந்தால், அது மனிதகுலத்துக்கு மட்டுமா... ஒட்டுமொத்த உயிர்ச்சூழலுக்கே பெரும் கேடு.

நச்சு நீக்க... இயற்கை காக்க...

இந்தச் சூழலின் அபாயம் உணர்ந்த கர்நாடகம், மத்தியப்பிரதேசம், ஒடிசா... உள்ளிட்ட பல மாநிலங்கள், இயற்கை விவசாய முறைக்கு மாறிவருகின்றன. முழுமையான இயற்கை வேளாண்மையை நோக்கி கேரளாவும் விரைந்து முன்னேறிவருகிறது. குட்டி மாநிலமான சிக்கிம், 100 சதவிகிதம் இயற்கை விவசாய மாநிலமாகவே தன்னைப் பெருமிதத்துடன் பிரகடனப்படுத்துகிறது. ஆனால், தமிழ்நாட்டின் நிலை? தமிழ்நாட்டின் வேளாண் கொள்கையை மாற்றி அமைப்பது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தன் ஆய்வு அறிக்கையை அப்போதே அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால், இப்போது வரை அந்த அறிக்கையின் நிலை என்ன எனத் தெரியவில்லை.

நமது உணவுப் பொருட்கள் நஞ்சாகிவிட்ட நிலையில், நமது மண் மலடாகிவரும் நிலையில், 'தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் அபாயகரமான நிலையை எட்டிவிட்டது’ என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் 'நாசா’ எச்சரித்திருக்கும் நிலையில்... இதுகுறித்த விழிப்புஉணர்வு பரவ வேண்டும். இயற்கை வேளாண் கொள்கை வரைவுக்கு, அரசு உடனடியாக ஒப்புதல் அளித்து செயல்படுத்த வேண்டும்.

இயற்கை என்னும் மாபெரும் தொடர் ஓட்ட தீபம், இப்போது நம் கரங்களில் இருக்கிறது. உயிர்த்துடிப்புள்ள  இந்தப் பூவுலகின் இருப்பைத் தக்கவைக்க, அடுத்த தலைமுறையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க... விரைந்து செயலாற்றுவோம்... இணைந்து வினையாற்றுவோம்!