Published:Updated:

'அஃக்’ முதல் ஃ வரை ...

தமிழ்மகன், கதிர்பாரதி படங்கள்: எம்.உசேன்

'சிறகிலிருந்து பிரிந்த 
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது.’

- கவிஞர் பிரமிள் எழுதிய மிகப் பிரபலமான கவிதை இது. தான் நடத்திய 'அஃக்’ இதழில் இதைப் பிரசுரித்து, பிரமிளை வெளிச்சமிட்டுக் காட்டியவர் பரந்த்தாமன். அடிப்படையில் கவிஞரான பரந்த்தாமனுக்குச் சொந்த ஊர் சேலம். கவிதை, பத்திரிகை, வடிவமைப்பு, இரவு-பகல் பாராத அச்சுக்கோப்பு, இலக்கியப் புத்தகங்களைப் பதிப்பிக்க 'பிருந்தாவனம்’ என்ற பிரின்ட்டிங் பிரஸ் ஆரம்பித்தது... எனச் சலிக்காத இலக்கிய தாகத்தோடு வாழ்வு என்னும் பெருவெளியில் பறந்து - திரிந்து, அலைந்து - களைத்து, உழைத்து - ஓய்ந்த 'அஃக்’ பரந்த்தாமன், இப்போது சிறகில் இருந்து பிரிந்த ஓர் இறகாக, சென்னை மதுரவாயலின் ஒதுக்குப்புறமான ஒரு முதியோர் இல்லத்தில் உதிர்ந்துபோய் கிடக்கிறார்.

எட்டு ஆண்டுகளாக இவர் நடத்திய 'அஃக்’ இதழ்தான் சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், நகுலன், பிரமிள், வெங்கட் சுவாமிநாதன், வண்ணதாசன், கலாப்ரியா, அம்பை... போன்ற தமிழ் இலக்கியவாதிகளின் படைப்புகள் பிரசுரமாவதற்கான பிரதானக் களம். புத்தகம் மற்றும் பத்திரிகையின் நேர்த்தியான வடிவமைப்புக்காக மூன்று முறை தேசிய விருது வென்ற 75 வயது பரந்த்தாமனை, வாழ்வின் தீராத  பக்கங்களில் ஒரு சருகைப்போல உதிர்த்து உலர்த்திப்போட்டிருக்கிறது காலம்.

'அஃக்’ முதல் ஃ வரை ...

''அவர் எங்க ஹோமுக்கு வரும்போது பாதி கோமாவில் இருந்தார். கை - கால்கள் எல்லாம் செயல்படாத நிலையில்தான் பரந்த்தாமனோட மகள் இங்கே அவரைச் சேர்த்தாங்க. மூளைக்கு வேண்டிய ரத்தத்தை எடுத்துட்டுப் போற நரம்பு அவருக்கு பாதிக்கப்பட்டிருக்கு. உயர் ரத்த அழுத்தத்தால் சிறுநீரகப் பாதிப்பும், முதுமையின் தனிமையால் மனப்பிறழ்வும் ஏற்பட்டிருக்கு'' என்கிறார் பரந்த்தாமனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர்.

முதியோர் இல்லத்தின் முதல் மாடியில் இருந்து பணிப்பெண் உதவியுடன் தரைத் தளத்துக்கு இறங்கி வருகிறார் பரந்த்தாமன். உடலில் முதுமையின் தள்ளாட்டம். இருக்கையில் அமர்ந்ததும் படபடவெனப் பேச ஆரம்பிக்கிறார்...

''நான் சீக்கிரமே சென்னைக்குப் போயிருவேன். அங்க போனதும் மறுபடியும் 'அஃக்’ பத்திரிகையைக் கொண்டுவருவேன். அது இன்டர்நேஷனல் தரத்துக்கு இருக்கும்.

10 லட்சம் காப்பி பிரின்ட் பண்ணி உலகத் தமிழர்கள் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் அனுப்பப்போறேன். வண்ணதாசன்தான் இணை ஆசிரியர். தி.க.சி., பிரமிள், வ.ஐ.ச.ஜெயபாலன்... எல்லாரும் எழுதுறதா சொல்லியிருக்காங்க. தரமான படைப்புகளுக்குத்தான் முன்னுரிமை. அதுல காம்ப்ரமைஸே கிடையாது. வண்ணதாசனுக்கு ஒரு சிறப்பிதழ் கொண்டுவரணும். நடிகர் கமல் தலைமையில் எனக்கு

100 கோடி ரூபாய் நிதி தர்றதா சொல்லியிருக்காங்க. அதுக்காகக் காத்திருக்கேன்.

'அஃக்’ முதல் ஃ வரை ...

ஜெயகாந்தன் ஆவி என்கிட்ட தினமும் பேசிக்கிட்டு இருக்கு. எனக்கு ஞானபீடம் விருது தர்றதுக்கு சிபாரிசு பண்றேன்னு சொல்லிருக்கு. அநேகமா அடுத்த வருஷம் ஞானபீடம் விருது எனக்குத் தருவாங்க. அப்துல் கலாமும் தமிழ்நாடனும் யாருக்கும் தெரியாம தினமும் என்னை வந்து பார்த்துட்டுப் போறாங்க. அடுத்த ஜனாதிபதியா என்னை சிபாரிசு பண்றேன்னு அப்துல் கலாம் சொல்லியிருக்கார். நான் ஜனாதிபதி ஆகிட்டா, நம்ம தமிழ்நாடன்தான் உப ஜனாதிபதி. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்துல ஜி.கே.வாசன் ஏற்பாடு பண்ற கவியரங்கத்துல நான், வைரமுத்து, நா.முத்துக்குமார்... எல்லாரும் கவிதை பாடப்போறோம். என்னோடது எல்லாம் பழைய கவிதைகள்தான். என் மனைவி இறந்துட்டா... நான் உயிரோட இருக்கேன்'' - நினைவின் நரம்புகள் அறுந்து, சிதறி ஏதேதோ பேசுகிறார் பரந்த்தாமன். எனினும், அவரது பேச்சு முழுவதும் பத்திரிகை... பத்திரிகை... என்பதாகவே சுழல்கிறது.

''உப ஜனாதிபதியா ஆகப்போற எழுத்தாளர் தமிழ்நாடன், நல்ல அறிவு படைச்சவர். மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கியிருக்கார். சேலத்துல அவர்தான் எனக்கு அணுக்கமான நண்பர்'' என்கிறார். ஆனால், தமிழ்நாடன் இறந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது பரந்த்தாமனுக்குத் தெரியவில்லை. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மூத்த ஆளுமை ஒருவர், நம் கண்முன்னே உடலும் மனமும் தடுமாற வீழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கவே பதறுகிறது.  

''என்கிட்ட இப்போ பத்து ஸ்க்ரிப்ட் இருக்கு. அதை சினிமாவா எடுக்கப்போறேன். பாலுமகேந்திராகூட ஒருதடவை சண்டை  போட்டுட்டேன். நல்ல மனுஷன்... மறுபடியும் அவரைப் போய் பார்க்கணும்'' என்பவருக்கு, பாலுமகேந்திராவின் மரணமும் தெரியவில்லை. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த எத்தனையோ பேரில் பரந்த்தாமனும் ஒருவர். தன் வாழைத் தோட்டத்தை விற்றுவிட்டு சினிமா எடுக்க வந்தவர்!

ஒருமுறை, சேலத்துக்கு வந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமியை நேரில் போய் பார்த்திருக்கிறார்

'அஃக்’ முதல் ஃ வரை ...

பரந்த்தாமன். 'என் கதைகளைப் படிச்சிருக்கியா?’ என அழகிரிசாமி கேட்க, 'ஒரு கதைகூட படிச்சது இல்லை’ என உண்மையைச் சொன்ன பரந்த்தாமனை, அழகிரிசாமிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போது தன் வீட்டுக்கு வந்த அழகிரிசாமியிடம், கதவில் ஒட்டிவைத்திருந்த சினிமா, கவிதை, கதை சம்பந்தமான படங்களைக் காண்பித்திருக்கிறார். 'நீ சினிமாவுக்கு வர்றியா... உன்னை இயக்குநர் மல்லியம் ராஜகோபால்கிட்ட சேர்த்துவிடுறேன்?’ என அழகிரிசாமி கேட்க, சென்னைக்கு வந்திருக்கிறார் பரந்த்தாமன். சென்னை வந்த பிறகு சினிமா உலகத் தொடர்புகள் கிடைத்தாலும், அவரது எண்ணம் முழுக்க தேர்ந்த வடிவமைப்பில், தான் விரும்புகிற எழுத்துக்களைப் பிரசுரிக்கும் பத்திரிகையாக 'அஃக்’ இருக்க வேண்டும் என்பதுதான். அதுதான் வடிவமைப்புக்கும் அச்சுக்கும் சேர்த்து தேசிய விருது அங்கீகாரம் பெற்றது. இதுவரை வேறு எந்தப் பத்திரிகைக்கும் கிடைக்காத உச்ச அங்கீகாரம் இது.

'பஞ்சாலையில் இரும்பு ராட்டை இழுத்து வேலை செய்த என் அம்மாதான், வட்டிக்கு வாங்கிய பணத்தில் அச்சகம் வைக்கவும்,  'அஃக்’ பத்திரிகை நடத்த தன் புராவிடன்ட் ஃபண்டு பணத்தையும் தந்தார்கள். 'அஃக்’  பத்திரிகைக்காகத்தான் பிருந்தாவனம் பிரின்டர்ஸ்; கல்யாணப் பத்திரிகையும் பில் புக்கும் நோட்டீஸும் அடித்து வியாபாரம் செய்ய அல்ல. ஆள் வைத்து கூலி கொடுக்க முடியாததால், ஒரே நாளில் நானே அச்சுக்கோக்கக் கற்றுக்கொண்டேன். என் மனைவி சத்தியபாமாவுக்கும் கற்றுத்தந்தேன். கையால் அச்சுக்கோத்து காலால் டிரெடிலை மிதித்து 'அஃக்’ பத்திரிகையையும், 'கலைக்க முடியாத ஒப்பனைகள்’, 'பால்வீதி’, 'கூட்டுப்புழுக்கள்’ ஆகிய புத்தகங்களையும் அச்சிட்டேன். தொடர்ந்து நடத்த பணம் இல்லாததால் 'அஃக்’ இதழை நிறுத்திட்டேன்; அச்சகத்தை வித்துட்டேன்’ - இவை 'அஃக்’ இதழ்களின் தொகுப்புரையில் பரந்த்தாமன் குறிப்பிட்டிருக்கும் துயரம் தோய்ந்த வார்த்தைகள். 'கலைக்க முடியாத ஒப்பனைகள்’ புத்தகம்தான் வண்ணதாசனின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

எவரையும் அவ்வளவு சீக்கிரத்தில் பாராட்டிவிடாத கவிஞர் ஆத்மாநாம், 'பரந்த்தாமன் மாதிரி கலாபூர்வமாக பத்திரிகை நடத்த மற்றவர்களால் முடியாது’ என இலக்கியவாதிகள் நிரம்பிய அரங்கத்தில் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

''சலுகை என்ற தலைப்பில் வெளியான

'அழகாய் இல்லாததாலே

அவள்

எனக்கு

தங்கையாகிவிட்டாள்!’ - என்ற என் கவிதை, இன்றும் பலரது பாராட்டுக்களையும் வசவுகளையும் எனக்குப் பெற்றுத் தந்துகொண்டிருக்கிறது. அந்தக் கவிதை முதலில் வெளியானது 'அஃக்’ இதழில்தான். தாகூரின் கீதாஞ்சலியைத் தழுவி நான் எழுதிய 20-க்கும் அதிகமான கவிதைகளை 'அஃக்’ இதழில் வெளியிட்டவர் பரந்த்தாமன். பிரமிளின் புகழ்பெற்ற ணி=னீநீ2 கவிதையும், பிரம்மராஜனின் 'உள் மலர்கள்’  சிறுகதையும், அவரது ஏராளமான ஓவியங்களும் 'அஃக்’-ல்தான் வெளிவந்தன. நான்கைந்து வருடங்கள் எழுதாமல் இருந்த சுந்தர ராமசாமி, 'பசுவைய்யா’ என்ற பெயரில் மிக முக்கியமான கவிதைகளை எழுதியதும் 'அஃக்’-ல்தான். பரந்த்தாமனுக்கு, ஜெயகாந்தன் மேல் அதிக ஈடுபாடு. அவர் பேசும் தொனி, உடை அணியும் பாணி, காதுகளுக்குக் கீழ் வரை கன்னத்தைத் தொடுவதுபோல் பெரிய கிருதா... எல்லாம் ஜெயகாந்தன் போலவே இருக்கும். ஜெயகாந்தன்கூட 'அஃக்’-ல் எழுதியிருக்கிறார். அது, நான் வேலை இல்லாமல் இருந்த காலகட்டம். வண்ணதாசனின் 'கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதைப் புத்தகத்தை அச்சிடுவதற்காக பரந்த்தாமனிடம் கொண்டுபோய் கொடுத்தது நான்தான். எத்தனையோ இலக்கியவாதிகளுக்கு உந்துசக்தியாக இருந்தவர், இன்று நினைவுகள் தப்பிப் போராடிக்கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது'' என்கிறார் கவிஞர் கலாப்ரியா.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், பரந்த்தாமனுக்கு எழுதிய கடிதங்களில் இப்படிச் சொல்கிறார்...

'அஃக்’ முதல் ஃ வரை ...

'என்ன சார் ஆச்சு 'அஃக்’? பத்திரிகை என்பது, அம்புட்டு லேசு இல்லை. ஏதோ அறிவித்துவிட்டீர்கள். ஒரு இதழையாவது தக்கிமுக்கிக் கொண்டுவந்துவிடுங்கள். அல்லது நகுலன் 'குருக்ஷேத்திரம்’ மாதிரி ஒரு புத்தகமாக ஆக்கிவிடுங்கள். உங்களுக்குத் தலைவணங்குகிறேன். தேன்கூட்டை எத்தனை தரம் அழித்தாலும் திரும்பவும் திரும்பவும் அது கூடுகட்டித் தேன் நிரப்பும். அயராத உங்கள் செய்கை உணர்ச்சிவயப் படச் செய்கிறது என்னை. போராடுவதே வாழ்க்கை.

தங்கள் பிரியமுள்ள

கி.ராஜநாராயணன்.

இப்படி இலக்கிய வேட்கைகொண்டு வாழ்க்கையோடு போராடிக் களைத்த பரந்த்தாமனை, இப்போது தப்பிப்போன நினைவுகளோடும், உடலை வதைக்கும் நோய்களோடும், தள்ளாத முதுமையோடும் கவனிக்கக்கூட ஆள் இல்லாத தனிமையில் தவிக்கவைத்துவிட்டது காலம். இவரது ஒரே மகன் நந்தலாலாவுக்கு நிரந்தர வேலை இல்லை. இவரும் கொஞ்ச நாட்கள் மனநிலை சரியில்லாமல் இருந்தவர்தான். இப்போது தேறிவந்திருக்கிறார். இவரது மகள் ஸ்ருதி,  தந்தையைப் பராமரிக்க தன்னால் இயன்ற பொருள் உதவி செய்கிறார். ஆனாலும் அது போதுமானதாக இல்லை.

இலக்கியம் 'வாழ்வின் ஆவணம்’ என்பார்கள். அந்த இலக்கியத்தை ஆவணப்படுத்துவதில், காலம் எல்லாம் முன்நின்ற பரந்த்தாமனின் வாழ்வு அலங்கோலமாகக் கலைந்துகிடக்கிறது. பரந்த்தாமனுக்கு  இன்று உடனடித் தேவை... அவரது மனதையும் உடலையும் சீராக்கும் மருத்துவச் சிகிச்சை. வாழ்வில் இளைப்பாறுதல் பருவத்தில் நிலைகுலைந்து, ஆறுதலும் ஆதரவும் இல்லாமல் தவிக்கிறார் பரந்த்தாமன்.

உங்களால் முடிந்தால் உதவுங்களேன்!

எப்படி உதவுவது? 
வணக்கம்,


அஃக் பரந்த்தாமன் அவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் தெரிவித்ததற்கு, நன்றி. முதியோர் இல்லம் ஒன்றில் பரந்த்தாமன் தங்கியிருப்பதற்கான வாடகைக்கும் அவரது மன-உடல் நலச் சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கும்தான் நிதி தேவைப்படுகிறது. தங்களின் உதவியை 'HELP TO PARANTHAMAN' எனக் குறிப்பிட்டு காசோலை, மணியார்டர், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் அனுப்பலாம்.

பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான தகவலை info@vasancharitabletrust.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தெரிவியுங்கள். தொடர்பு எண்ணை அவசியம் குறிப்பிடுங்கள். தங்களின் பண உதவிக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80-G படி வரிவிலக்கு உண்டு. நன்றி!

தகவல் உதவிக்கு:
கதிர்பாரதி 9940239103


தங்கள்,

ஆசிரியர்
ஆனந்த விகடன்
757, அண்ணாசாலை
சென்னை 600002


மணியார்டர் அல்லது காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:

VASAN CHARITABLE TRUST
757, ANNA SALAI
CHENNAI-600002

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான (Online Transactions)
வங்கி கணக்கு விவரம்:


NAME :VASAN CHARITABLE TRUST,
HDFC BANK, Branch Name:CHENNAI - ITC CENTRE - ANNA SALAI

A/C NO: 00040330019032

RTGS/NEFT/IFSC Code :HDFC0000004,
Micr Code: 600240002,

ADDRESS:
759, ITC CENTRE, ANNA SALAI,
Opp T.V.S.
CHENNAI
TAMIL NADU - 600 002.