
முகில்
'ஆப்பிரிக்கா’ என்றதுமே, உலக மனக்கண்ணில் தோன்றும் பிம்பம் எது? எலும்பும் தோலுமான ஓர் ஆப்பிரிக்கக் குழந்தை, கண்களில் தேங்கி வழியும் ஏக்கத்துடனும் பசியுடனும் பாத்திரத்துடன் கையேந்தியபடி சோகமாக நிற்பது.
'உலகின் தவறான பார்வை இது. ஆப்பிரிக்காவின் நிஜ பிம்பம், நிச்சயம் இது அல்ல. நான் அதை முழுமையாக மாற்ற விரும்புகிறேன். எனது ஆப்பிரிக்காவுக்குப் புதிய அடையாளம் கொடுக்க விரும்புகிறேன். அதை நோக்கிய பயணத்தில்தான் முழுமூச்சுடன் இயங்கிக்கொண்டிருக்கிறேன்’ - இப்படிச் சூளுரைப்பவர், ஆப்பிரிக்காவின் இளம் பில்லியனர், மாரா குரூப்ஸின் நிறுவனர்... ஆஷிஷ் தாக்கர். சபிக்கப்பட்ட கண்டத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிக்கொண்டிருப்பவர். வயது 34. பிறப்பால் ஆப்பிரிக்கர். ஆனால், இவரது பூர்விக வேர்கள் பரவிக்கிடப்பது குஜராத்தில்.
ஆஷிஷின் தந்தை ஜெகதீஷ். அவரது முன்னோர்கள், குஜராத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி.1890-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கிளம்பி, உகாண்டாவுக்குப் பிழைக்கச் சென்றவர்கள். அதேபோல ஆஷிஷின் தாய்வழிக் குடும்பத்தினரும் 1920-ம் ஆண்டு தான்சானியாவுக்குத் தொழில் தேடிச் சென்ற இந்தியர்களே. இரண்டு இந்தியக் குடும்பங்களும் ஆஷிஷின் பெற்றோரின் திருமணத்தால் இணைந்தன.
முதலில் கென்யாவில் வாழ்ந்த ஆஷிஷின் பெற்றோர், பின் உகாண்டாவுக்கு இடம் மாறினர். 1972-ம் ஆண்டு. ராணுவப் புரட்சியால் உகாண்டாவின் ஆட்சியை இடிஅமீன் அபகரித்திருந்த காலம். 'என் கனவில் கடவுள் வந்தார். 'உகாண்டா, கறுப்பர்களுக்கான நாடு’ என்றார். ஆகவே ஆசியர்களே, இங்கிருந்து ஓடிப்போய்விடுங்கள்’ - சர்வாதிகாரி கர்ஜித்தார். உயிருக்குப் பயந்து இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள்.

ஆஷிஷின் பெற்றோர் வெறுங்கையுடன் தஞ்சம் அடைந்த நாடு இங்கிலாந்து. இருவரும் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ந்தனர். இரண்டு பெண் குழந்தைகள். 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லெசெஸ்டர் நகரத்தில் ஆஷிஷ் பிறந்தான். கையில் கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, ஜெகதீஷ் சிறுசிறு வியாபாரங்களைச் செய்ய ஆரம்பித்தார். பின்னர் ஒரு துணிக்கடை. சொந்தமாக ஒரு சிறிய வீடு. ஆஷிஷிக்கு, சிறுவயதிலேயே தங்கள் கடை துணி ரகங்களின் தரத்தையும் விலையையும் போட்டியாளர்களின் கடைச் சரக்குகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பிசினஸ் புத்தி தன்னிச்சையாகவே வளர்ந்தது.
1993-ம் ஆண்டு. ஆஷிஷின் பெற்றோர், மீண்டும் தாங்கள் பிறந்த ஆப்பிரிக்க மண்ணுக்குத் திரும்ப முடிவெடுத்தார்கள். இங்கிலாந்தில் வீட்டையும் கடையையும் விற்றுவிட்டு குடும்பத்துடன் ருவாண்டா சென்றார்கள். அங்கே ஜெகதீஷ் புதிய வியாபாரத்தைத் தொடங்க, நைரோபியில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தான் ஆஷிஷ்.
1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். ஈஸ்டர் விடுமுறைக்காக ஆஷிஷ் வீடு திரும்பியிருந்த நேரம். ஹுட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டாவின் அதிபர் கொல்லப்பட, டூஸ்ஸி இனத்தவர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் அரங்கேறின. (இந்த 'ருவாண்டா இனப்படுகொலை’யில், 100 நாட்களில் சுமார் எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.) ஆஷிஷின் குடும்பத்தினரையும் மரணம் நிழலாகத் துரத்தியது. எங்கெங்கோ அடைக்கலம் புகுந்து, பின்னர் ஹோட்டல் ருவாண்டாவில் (Hotel des Mille Colline) தஞ்சம் அடைந்தார்கள். எந்தத் தோட்டாவில் தங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்ற பீதி விலகாத நாட்களில், விருந்தினர்களைக் காப்பாற்ற தன் உயிரையே பணயம்வைத்தார் ஹோட்டல் உரிமையாளர் பால்.
சில நாட்கள் கழித்து, ஐ.நா படை இவர்களை மீட்க வந்தது. இன்னும் வாழ்க்கை மிச்சம் இருக்கிறது. ஆஷிஷ் குடும்பத்தினர் முகத்தில் நிம்மதி. ஹோட்டலில் இருந்து கிளம்பும் முன், ஒரு ட்ரக் நிறையப் பிணங்கள் ஏற்றப்படுவதைப் பார்த்தான் ஆஷிஷ். ஐ.நா வீரர் ஒருவரிடம் ஓடிச்சென்று சொன்னான்... 'அவர்களில் யாராவது உயிரோடு இருக்கலாம். தயவுசெய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்’ ஆஷிஷின் மனதில் ஆப்பிரிக்க மக்கள் பற்றிய பல்வேறுவிதமான புரிதலை ஏற்படுத்தியதில், ஹோட்டல் ருவாண்டா நாட்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
ருவாண்டாவில் இருந்து தப்பித்து புருண்டி, பின்பு அங்கிருந்து தப்பித்து கென்யா, இறுதியாக உகாண்டாவின் கம்பாலாவுக்கு வந்தடைந்தனர். கைப்பையில் கொஞ்சம் துணிகள் மட்டுமே மிஞ்சின. ஜெகதீஷ், 1972-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை சம்பாதித்த அனைத்தையுமே பறிகொடுத்திருந்தார். மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். தெரிந்தவர்கள், அறிந்தவர்கள்கூட ஏதோ பயத்தில் விலகிச் சென்றார்கள். போகட்டும். நம் வாழ்க்கை நம் கையில். ஆஷிஷின் குடும்பம், புதிய பிள்ளையார்சுழியுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தது.
ஒருநாள், ஜெகதீஷின் நண்பர் ஒருவர் இரவு உணவுக்காக வீட்டுக்கு வந்திருந்தார். ஆஷிஷின் புதிய கம்ப்யூட்டரைப் பார்த்த அவர், விலை விசாரித்தார். அந்தச் சமயத்தில் ஆஷிஷின் பிசினஸ் மூளை விழித்துக்கொண்டது. தான் வாங்கிய விலையைவிட 100 டாலர் அதிகம் சொன்னான். 'என்னிடம் இதேபோல இன்னொன்றும் இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், அதையும் தருகிறேன்’ எனப் பொய் சொன்னான். அவர் சம்மதித்தார். அன்று இரவே ஆஷிஷ், தன் கம்ப்யூட்டரில் இருந்த ஃபைல்களை எல்லாம் நீக்கி, சுத்தம் செய்தான். புதிய கம்ப்யூட்டர்போல அந்த நபரிடம் விற்றதில் 100 டாலர் லாபம். கிடைத்த பணத்தில் மீண்டும் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி பள்ளி நண்பன் ஒருவனுக்கு எளிதாக விற்றான். சுலப லாபம்.
'இது நல்ல வியாபார வாய்ப்பு’ - உள்ளுக்குள் குதூகலம். உகாண்டா மக்கள் மத்தியில் ஃப்ளாப்பி, சிடி., கணினி, மவுஸ், மதர்போர்டு என ஹார்டுவேர் சமாசாரங்களுக்குப் பெரிய தேவை இருப்பது புரிந்தது. 1996-ம் ஆண்டு பள்ளி கோடை விடுமுறை. குடும்பக் கஷ்டத்தைத் தெளிவாக உணர்ந்திருந்த 15 வயது ஆஷிஷ், தன் தந்தையிடம் 'விடுமுறையில் வியாபாரம் செய்யப்போகிறேன்’ என்றான். அவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி 5,000 டாலர் கொடுத்தார். அதில் பாதித் தொகையில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்தான். துபாய் போக, வர டிக்கெட் எடுத்தான். மீதித் தொகையுடன் துபாய் கிளம்பினான். அங்கே கடை கடையாக ஏறி இறங்கி, விமானப் பயணத்தில் அனுமதிக்கப்பட்ட எடை அளவுக்கு ஹார்டுவேர் பொருட்களை வாங்கி, தன் பெரிய சூட்கேஸில் நிரப்பினான். உகாண்டாவில் கடை விரித்தான். மளமளவென விற்றன. அடுத்த வாரமே மீண்டும் துபாய் பயணம். அந்தக் கோடை விடுமுறை ஆஷிஷை பிசினஸ்மேன் ஆக்கியது.
'நான் படிக்கப்போகவில்லை. வியாபாரத்தைத் தொடர விரும்புகிறேன்’ என்றான் ஆஷிஷ். பெற்றோர் தாம்தூம் எனக் குதிக்கவில்லை. 'சரி... ஒரே ஒரு நிபந்தனை. ஒரு வருடம் வியாபாரத்தைக் கவனி. சரிவரவில்லை என்றால், மீண்டும் படிப்பைப் தொடர வேண்டும்’. இதற்கு ஆஷிஷ் ஒப்புக்கொண்டான். சனி, ஞாயிறுகளில் துபாயில் கொள்முதல் செய்து, திங்கள் டு வெள்ளி உகாண்டாவில் விற்பனை செய்வது என ஆஷிஷின் வாழ்க்கையில் சில மாதங்கள் கழிந்தன.
இது போதாதே! வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாமா? பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து ஏர் கார்கோவில் அனுப்பிவைக்க அதிகச் செலவு பிடிக்கும். 'கிரெடிட்’டில் சரக்குக் கேட்டால், 'ஆப்பிரிக்காவில் இருந்து வரும் உன்னை நம்பி கடன் தர முடியாது’ என துபாய் வியாபாரிகள் முறைத்தார்கள். என்ன செய்யலாம்?
ஆஷிஷ், துபாயில் ஓர் அலுவலகம் அமைக்க முடிவெடுத்தான். அரபு மொழி தெரிந்த துபாய் நண்பர் ஒருவர் மூலமாக அலுவகத்தைப் பதிவதற்காகச் சென்றபோது, அங்கு உள்ள அதிகாரிகள் சிறுவனைக் கண்டு முகம் சுருக்கினார்கள். 'வீட்ல பெரியவங்களைக் கூட்டிட்டு வா’ எனத் திருப்பி அனுப்பினார்கள். ஆஷிஷ், தன் தந்தையை துபாய்க்கு அழைத்துச் சென்று அலுவலகத்தைப் பதிவுசெய்தான். மாராவின் தொடக்கம் அது. துபாயில் அலுவலகம் இருந்ததால் ஆஷிஷால் 'கிரெடிட்’டில் பொருள் வாங்க முடிந்தது. இருந்தாலும் சிலர் யோசித்தார்கள். ஆஷிஷ், அடிக்கடி ஷேவிங் செய்துகொண்டான். அப்படியாவது மீசையும் தாடியும் சீக்கிரம் வளர்ந்து ஒரு பெரிய மனுஷத் தோரணை வருமே!
தன்னைப்போலவே கொள்முதலுக்காக அடிக்கடி துபாய் வரும் பிற ஆப்பிரிக்க வணிகர்களிடம் பேசினான். 'நான் உங்களுக்கு கிரெடிட்டில் பொருட்கள் தருகிறேன். நீங்கள் என்னிடம் வாங்குங்கள்’. ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அந்தப் புதியவர்கள் ஏமாற்றிவிட்டால்..? ஆஷிஷ் அவர்களோடு அவர்களது நாடுகளுக்கு (நைஜீரியா, கானா, கென்யா, எத்தியோப்பியா, தென் ஆப்பிரிக்கா)சென்றான். அவர்களது வீட்டில் சில நாட்கள் தங்கினான். நம்பிக்கை உண்டான பின்னரே, சரக்கு கொடுத்தான். வணிகம் வளர்ந்தது. ஆப்பிரிக்கர்கள் ஏமாற்றவில்லை.
ஐரோப்பியர் ஒருவர், புராஜெக்ட் ஒன்றுக்காக ஆஷிஷிடம் மொத்தமாகக் கொள்முதல் செய்தார். ஆனால், அவர் அளித்த 15 ஆயிரம் டாலருக்கான 'பின் தேதியிட்ட காசோலை’ வங்கியில் எகிறிக் குதித்தது. ஆஷிஷ் அதுவரை சம்பாதித்ததில் பாதிக்கும் மேல் பாழ். மீண்டும் பள்ளிக்குச் சென்றுவிடவேண்டியதுதானா? உள்ளுக்குள் உதறல். இருந்தாலும் விட்டத்தைப் பார்த்தபடி மனம் உடைந்து உட்காராமல், உத்வேகத்துடன் உழைத்து, விட்டதைப் பிடித்தார் ஆஷிஷ்.
முழு நேரமும் பிசினஸ் என ஆஷிஷ் முடிவெடுத்தபோது, வயது 16. பாடப்புத்தகங்களை எல்லாம் மறந்துவிட்டு, 'வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு’ புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தார். எழுத்தில் உணர்ந்ததை, தன் மனதில் விதைத்துக்கொண்டார். 'வறுமை அல்ல... என் வருங்காலத்தின் வளமை ஆப்பிரிக்காவில்தான் இருக்கிறது’ ஆப்பிரிக்க நாடுகளைப் புரிந்துகொள்ள, நிறையப் பயணங்கள் செய்தார் ஆஷிஷ். முதலில் ஆப்பிரிக்காவை ஒரே நாடாகக் கருதுவது தவறு. இது தனித்தனி நாடுகள் இணைந்த ஒரு கண்டம். நாட்டுக்கு நாடு கலாசாரம், பண்பாடு, அரசு, சட்டம், பிரச்னைகள், மக்கள் மனநிலை, சூழ்நிலை எல்லாமே மாறுபட்டவை. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் புரிந்துகொண்டால்தான், இங்கே தொழில் செய்ய முடியும். எங்கெங்கே என்னென்ன தேவைகள் இருக்கின்றன, எப்படிப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையெல்லாம் நிதானமாகக் கள ஆய்வு செய்தார். 'பெரிதாக யோசி... சிறிதாகத் தொடங்கு. இயல்பில் எது சாத்தியமோ, அதைச் செய். ஒரே இரவில் உலகப் பணக்காரனாக உயர்ந்துவிட முடியாது.’ ஆஷிஷின் சிந்தனையில் தெளிவு மிளிர்ந்தது.

ஒருபுறம் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் தொழில் தங்குதடையின்றி வளர்ந்துகொண்டிருக்க, ஆஷிஷ் புதிய கோதாவில் இறங்கினார். ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் பொருட்களைக் கொண்டுசெல்லும் விதவிதமான அட்டைப்பெட்டிகளுக்கு, சந்தையில் அதிகத் தேவையும் தட்டுப்பாடும் இருந்தன.
2001-ம் ஆண்டு உகாண்டாவில் Riley Packaging என்ற அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கினார். தரமான பொருளை, சரியான சமயத்தில் விநியோகித்து பெயரைச் சம்பாதித்துவிட்டால், ஆர்டர்களுக்குப் பஞ்சம் இருக்காது என்பது ஆஷிஷின் நம்பிக்கை. ஆகவே ரிஸ்க் எடுத்து, அதிக முதலீட்டில் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு மூலப்பொருளான காகிதத்தை வாங்கிக் குவித்தார். எதிர்பார்த்த வேகத்தைவிட, அதிக ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.
மறுநாள் காலையில் ஒரு ஆர்டர் சென்றாக வேண்டும். இரவில் இயந்திரம் கோளாறு ஆனது. தொழிலாளர்கள் கைகளைப் பிசைய, ஆஷிஷ் இயந்திரத்தின் 'மேனுவல்’ தேடி எடுத்தார். இரண்டு மணி நேரம் செலவிட்டுப் படித்தார். சட்டையை மடித்துவிட்டு களம் இறங்கினார். கோளாறு சரிசெய்யப்பட்டது. இயந்திரம் மீண்டும் இயங்கியது. குறித்த நேரத்தில் ஆர்டர் டெலிவரியானது. 'வெற்றி என்பதன் அளவீடு, சம்பாதிக்கும் பணம் அல்ல; நம் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிக்கை!’
ஆப்பிரிக்க அரசாங்கங்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்கத்தான் ஆஷிஷ் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. எந்த நிர்வாகமும் சரி கிடையாது. வறுமைக்கும் வன்முறைக்கும் வாக்கப்பட்ட மக்கள். லஞ்சமின்றி எதுவும் நடக்காது. நேர்மை, உண்மை, சட்டம் எதுவும் செல்லுபடியாகாது. ஆனால், இங்கேதான் வளமான வாய்ப்புகளும் தேவைகளும் இருக்கின்றன. நாட்டின் தேவையை, மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் தொழில் தொடங்கினால், அதன் ஆயுள் கெட்டி எனத் திடமாக நம்பினார் ஆஷிஷ்.
அதிகாரிகளை, முதலீட்டாளர்களை, முக்கியஸ்தர்களை... தேடித் தேடிச் சென்று சந்தித்தார். மணிக்கணக்காக உட்காரவைத்தால், பொறுமை காத்தார். அவமானப்படுத்தினால் துடைத்தெறிந்துவிட்டு, மறுநாள் மீண்டும் சந்தித்தார். எந்தக் குறுக்குவழியையும் நாடவில்லை. தன் திட்டத்தை, நோக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உரியவர்களுக்குப் புரியவைத்தார். காய்களை நிதானமாக நகர்த்தினார். தட்டத் தட்ட சில கதவுகள் திறந்தன. கிடைத்த வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்தினார்.
உகாண்டாவில் பயன்படும் வியாபார உத்திகள், கென்யாவில் எடுபடாது. தான்சானியாவில் ஆரம்பித்த தொழில் ஒன்றை அப்படியே காங்கோவில் 'காப்பி-பேஸ்ட்’ செய்தால், வேலைக்கு ஆகாது. இப்படி டன் டன்னாக சவால்கள். நைஜீரியாவில் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலைகளே இல்லை. ஆரம்பித்தால் ஜெயிக்கலாம். அந்த அரசு,
90 சதவிகிதத்துக்கும் மேல் சர்க்கரையை இறக்குமதிதான் செய்கிறது. அங்கே கரும்பு பயிரிட்டால், இனிக்க இனிக்க வெல்லலாம். இப்படிப் புதுப்புது யோசனைகள்.
ஆஷிஷ், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாகத் திட்டமிட்டு, புதிய தொழில்களை ஆரம்பித்தார் / ஆரம்பித்துக்கொண்டிருக்கிறார். அதில் உறுதியான சில கொள்கைகளும் உண்டு. ஆப்பிரிக்க மக்களுக்குத் தேவையான, அதிக பயன்கள் தரக்கூடிய, ஆப்பிரிக்காவை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் தொழில்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆப்பிரிக்காவின் தாதுக்களை வெட்டி எடுத்து, அதன் வளத்தை அழித்து லாபம் சம்பாதிக்கக் கூடாது.
'சீன டிராகன்களுக்கும் இந்தியப் புலிகளுக்கும் ஒரு காலம் இருந்தது. இப்போது ஆப்பிரிக்க சிங்கங்களுக்கான காலம்’ - இது ஆஷிஷ் அடிக்கடி சொல்லும் வாக்கியம். (தான்சானியா மொழியில் 'மாரா’ என்றால் 'சிங்கம்’ எனப் பொருள்.) கேட்பதற்கு பன்ச் டயலாக் மாதிரி தோன்றலாம். ஆனால், நிகழ்கால நிஜம் இது. ஆஷிஷ் தலைமையில் மாரா நிறுவனம் இப்போது, ஐ.டி செக்டாரில் (Mara Ison) கோலோச்சுகிறது; பி.பி.ஓ-வில் (Ison BPO) குரல் ஓங்கி ஒலிக்கிறது; கண்ணாடி தயாரிக்கும் (Egi MJG Float Glass) தொழிலில் பளபளக்கிறது; ரியல்எஸ்டேட் துறையில் (Mara Oysterbay City, Kingdom Kampala) வானுயர்ந்து நிற்கிறது; நிதித் துறையில் (Atlas Mara) பெரும்'பங்கு’ வகிக்கிறது; தொலைத்தொடர்பில் களைகட்டுகிறது; இயற்கை விவசாயத்தில் 'பசுமைப் புரட்சியை’ விதைக்கிறது. இன்னும்... இன்னும்.
ஆப்பிரிக்காவின் 22 நாடுகள் தவிர, ஐக்கிய அரபு நாடுகள், இந்தியாவில் கிளைகள், 11,000 பணியாளர்கள்... என மாரா குரூப்ஸ் சாம்ராஜ்யத்தின் எல்லை விரிவடைந்துகொண்டிருக்கிறது. ஆனால், மாராவின் தலைமையகம் துபாயில்தான் இயங்குகிறது. காரணம், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஆப்பிரிக்கா நேற்று வரை ஆகாத கண்டம். ஆப்பிரிக்க நிறுவனம் என்றாலே, 'அழுக்கான பழுப்புக் கம்பள வரவேற்பு’கூடக் கிடைக்காது. ஆனால் இன்று, மாராவின் வெற்றியால் ஆஷிஷ் அந்த எண்ணத்தை மாற்றி அமைத்திருக்கிறார். எங்களுக்கு ஆப்பிரிக்கா தெரியும். இங்கே என்ன எடுபடும் என்பதும் தெரியும். நீங்கள் 50 சதவிகிதம் முதலீடு செய்யுங்கள். நாங்கள் மீதியைக் கவனித்துக்கொள்கிறோம் என 'மாரா’த புன்னகையுடன் சர்வதேச நிறுவனங்களுடன் கைகோத்து வலம்வருகிறார் ஆஷிஷ்.
'நான் சிந்தித்தேன்... தொழில் தொடங்கினேன். உழைத்தேன்... ஜெயித்தேன்... வசதியாக வாழ்கிறேன்!’ என்பவன் வெறும் சுயநல வியாபாரி. ஆஷிஷ், அதற்கும் மேலே சிந்தித்தார். உகாண்டாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். மக்கள்தொகையில் பெரும்பான்மை 30 வயதுக்கும் கீழ். எனில், அவர்கள் உழைக்கத் தயங்காதவர்கள். வாய்ப்புகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர். அவர்களது முன்னேற்றமே, உகாண்டாவின் முன்னேற்றம். தீவிரமாகத் திட்டமிட்ட ஆஷிஷ், 2009-ம் ஆண்டு மாரா ஃபவுண்டேஷனைத் தொடங்கினார். ஒரே நோக்கம்தான்... ஆப்பிரிக்கா முழுவதும் வெற்றிகரமான இளம் தொழில்முனைவோரை உருவாக்குவது. ஒரு சோறு பத உதாரணம் இங்கே. பள்ளிக்குச் செல்லும் பெண் ஒருத்தி, குடும்ப வறுமை காரணமாக வேலை கேட்டு வந்தாள். அவளுக்குத் தையல் தெரியும். ஆஷிஷ், பள்ளிகளுக்குச் சீருடை தைத்துக் கொடுக்கும் ஆர்டரை வாங்கிக் கொடுத்தார். உண்மையாக உழைத்தாள். இப்போது அந்தப் பெண், மேலும் சிலரை வேலைக்கு வைத்து சம்பளம் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறாள்.
இப்படி சிறியதாகவோ பெரியதாகவோ மாரா ஃபவுண்டேஷன் மூலம் பயன்பெற்றவர்கள் மட்டும் 3,80,000-க்கும் மேல். தவிர, 'மாரா வுமன்’ என்ற பெயரில் பெண் தொழில்முனைவோரை உருவாக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார் ஆஷிஷ். மேலும், 'மாரா மென்டர்’ என்ற ஆன்லைன் கம்யூனிட்டி மூலம் உலகம் முழுவதும் உள்ள இளம் தொழில்முனைவோர்கள், பிசினஸ் முன்னோடிகளிடம் ஆலோசனை பெற உதவிவருகிறார். இன்று மாரா ஃபவுண்டேஷனுடன் கைகோக்க, உலகின் பல நாடுகளும் அமைப்புகளும் முனைப்பு காட்டிவருகின்றன.
2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஆப்பிரிக்காவின்
50 முக்கியஸ்தர்களில் ஆஷிஷ§ம் ஒருவர். ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ள '40 ஹிஸீபீமீக்ஷீ 40’ என்ற உலகின் இளம் நம்பிக்கைகளில் இடம்பிடித்திருப்பவர். உலகின் இளம் பில்லியனர்களுள் ஒருவரான ஆஷிஷ், எப்போதும் தன்னை அப்படி அடையாளப்படுத்த விரும்புவது இல்லை.
'நான் பில்லியனர் என்பதைவிட, இன்னும் பில்லியன்கணக்கான மக்களுக்கு 'மாரா’வை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன். எப்போதும் வணிகத்தில் சேரும் இடம் என எதுவும் கிடையாது. அது முடிவில்லாப் பயணமாக இருக்க வேண்டும். இப்போதைக்கு நான் சமுத்திரத்தில் ஒரு துளி. என் பயணத்தை இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன். நிச்சயம் ஒருநாள் பேரலையாக மாறுவேன்’.
அதுதான் ஆஷிஷ்!
சிங்கிள் சிங்கம்!

ஆஷிஷிக்கு, கடவுள் நம்பிக்கை அதிகம். ஆஞ்சநேய பக்தர். அடிக்கடி குஜராத் வருவார். அங்கே தன் மதகுருவான மொராரி பாபுவை வணங்கிச் செல்வார்.

ஆஷிஷ், மதுவை வெறுப்பவர்; சுத்த சைவம். விலை உயர்ந்த வாசனைத் திரவியங்கள் மீது விருப்பம் கொண்டவர்.

ஆஷிஷ், மாதத்தில் மூன்று வாரங்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் செலவிடுகிறார். துபாயில் இருக்கும் நாட்கள் குறைவே. தன் நேரத்தில் 40 சதவிகிதத்தை மாரா ஃபவுண்டேஷன் பணிகளுக்காகச் செலவிடுகிறார்.


'ஆப்பிரிக்காவுக்கு 'சிலிகான் வேலி’யைக் கொண்டுவருவது அல்ல; சிலிகான் வேலியில் ஆப்பிரிக்க நிறுவனங்களைக் கொண்டுசெல்வதே என் நோக்கம்’ என்பது ஆஷிஷ் ஸ்டேட்மென்ட்.

ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில், மாரா நிறுவனத்தின் வெற்றிக் கதை, பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

34 வயதான ஆஷிஷிக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. உலகின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், பில்லியனர்!
வானத்துக்கும் மேலே!
'வானமே எல்லை எனக் கிடையாது. அதற்கும் மேல செல்லலாம் அல்லவா?’ என்பது ஆஷிஷ் அடிக்கடி சொல்லும் வாசகம். அமெரிக்க நிறுவனமான Virgin Galactic மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ள பதிந்திருக்கிறார் ஆஷிஷ். அதற்காக பிலடெல்பியாவில் முறையான பயிற்சிகளும் எடுத்திருக்கிறார். இந்தப் பயணம் சாத்தியப்பட்டால், விண்வெளிக்குச் சென்ற கிழக்கு ஆப்பிரிக்காவின் முதல் நபர் என்ற பெருமை ஆஷிஷ§க்குக் கிடைக்கும்!