மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அன்பு அளிக்கலாமா?

##~##

வெ.கா., கடையநல்லூர்.

 'உலக மக்கள்தொகை நாள்’ என்று ஜூலை 11-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

நம்பர் 11-ஐ சற்றுக் கவனியுங்கள். ஓர் ஆண் - பெண் பக்கத்துப் பக்கத்தில் நிற்பதுபோல (அல்லது படுத்துக்...) தெரிகிறதா? இந்த உலக மக்கள்தொகைக்குக் காரணமே இந்த இரண்டு பேர்தான்! (அட, தமாஸுங்க! மற்றபடி என் பிறந்த நாளுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!)

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

வயதான தாத்தா - பாட்டிகளுக்கும்கூட இப்போது ஈகோ பிரச்னை வந்துவிடுகிறதே, ஏன்?

ஆன்மாவைப் போல ஈகோவுக்கும் வயசு எல்லாம் கிடையாது. வயசாளிகள் இன்னும் அதிகமாகவே முறுக்கிக்கொள் வார்கள். எனக்குத் தெரிந்த ஒரு தாத்தா வும் பாட்டியும் ஒரு வீட்டில் மாடியும் கீழு மாக வசிக்கிறார்கள். ரொம்ப காலமாகப் பேசிக்கொள்வது இல்லை. பசங்க போய் சேர்த்துவைக்கக் கூடாதோ?!

வாசுதேவன், நவிமும்பை.

எனக்குத் தெரிந்து கிளி ஜோசியம் கூறுபவர்கள் யாரும் பணக்காரர்கள் ஆகவில்லையே?

'இந்தத் தொழில் உங்களுக்கு மங்களகரமாக நடக்கும். வேறு தொழில் செய்ய வேண்டாம், தடங்கல்கள் ஏற்படும்’ என்று முதலிலேயே கிளி அவருக்கு ஜோசியம் சொல்லி இருக்கலாம்!

கண்.சிவகுமார், திருமருகல்.

அமலா பாலிடம் இல்லாத ஒன்று தமன்னாவிடம். அது என்ன? தமன்னாவிடம் இல்லாத ஒன்று நயன்தாராவிடம். அது என்ன?

ஹாய் மதன் கேள்வி - பதில்

முறையே கலர்... கவர்ச்சி!

வாசுதேவன், நவிமும்பை.

அந்தக் காலத்திய பல படங்களில் பியோனோ முக்கிய அங்கம் வகித்ததே; அதை ஏன் இன்றைய படங்களில் காண முடிவது இல்லை?

அப்போது பாடல்களின் பின்னணி யில் வயலின், சாக்ஸஃபோன், பியானோ என்று ஏதாவது குறிப்பிட்ட இசைக் கருவி முக்கியத்துவம் வகிக்கும். ஹீரோ வும் குனிந்து, வளைந்து வயலின் இசைப்பார். கூரையைப் பார்த்து சாக்ஸ் ஊதுவார், பார்ட்டியில் ஹீரோயின் மிதந்து ஆட போ-டை (Bow-tie) சகிதம் பியானோ வாசிப்பார். இப்போது ஏக காலத்தில் 50 இசைக் கருவிகள் பின்னணியில் ஒலிக்கின்றன. ஹீரோ 'சடுகுடு’ விளையாடுவதுபோல தாவித் தாவி ஒவ்வொன்றையும் வாசித்தால் பார்க்கச் சகிக்குமா? அதான்... விட்டுவிட்டார்கள்!

கி.ரவிக்குமார், நெய்வேலி.

ஒலிக்கும் ஓசைக்கும் என்ன வித்தியாசம்?

  ஓசை என்பது காதில் விழுகிற கட்டுப்பாடு இல்லாத சத்தம். ஒலி என்பது உங்கள் காதில் விழ வேண்டிய அவசியம் இல்லை. காதில் விழுகிற ஒலிக்கு ஓர் அளவு உண்டு. (எடையை கிராம்களில் அளப்பதுபோல ஒலியை ஹெர்ட்ஸ்களில் (HERTZ) அளக்கிறார்கள்.) காதில் விழும் ஒலிக்கு மேலேயும் கீழேயும் அல்ட்ராசானிக் - சப்சானிக் (ULTRA SONIC - SUBSONIC) என்று ஒலி உண்டு. ஆனால், மனிதக் காதில் விழாது. உ-ம். வெளவால் எழுப்புகிற ஒலி! மனசுக்குள் நினைத்தாலே பீதியை ஏற்படுத்தும் ஓசைகூட உண்டு - உங்கள் மனைவி விடப்போகும் டோஸ்!

ஜெ.டேவிட் ஆசீர், பனையூர்.

நம் நாட்டுக்கு எல்லா விதங்களிலும் மிரட்டல்கள் வந்துகொண்டே இருப்பது எதைக் காட்டுகிறது?

  எத்தனை மொழிகள், கலாசார வேற்றுமைகள் இருந்தாலும், இந்த அளவு ஒருமைப்பாட்டுடன் இயங்கும் மாபெரும் நாடு இந்தியா!

சில சமயம் இந்தியாவைப் பார்த்தால் 'பண்டிகை சமயத்தில் ரங்கநாதன் தெரு’ மாதிரி யும் தோன்றுகிறது. அதனால் வலிமை, கட்டுப் பாடு, கம்பீரம் கொஞ்சம் குறைச்சலாக உள்ள நாடு என்று எதிரிகள் நினைக்கிறார்கள். ஏன் அப்படி? இந்தியாவுக்குப் பெருமிதம் ஏற்படுத்தக் கூடிய சிறந்த தலைமை அமையாததுதான் காரணம்!

எஸ்.சண்முகசுந்தரம், வைத்தீஸ்வரன் கோவில்.

எனக்கு வாழ்க்கையே சூனியமாகத் தெரிகிறது... என்ன செய்வது?

சூனியத்தில்தான் ஒரு தக்குனூண்டு புள்ளி தோன்றியது. இந்த முற்றுப்புள்ளியைவிடப் பல லட்சம் மடங்கு சிறிய, 'மைக்ராஸ்கோப்’பில் பார்த்தால்கூடத் தெரியாத புள்ளி. அந்தப் புள்ளி திடீர் என்று

ஹாய் மதன் கேள்வி - பதில்

வெடித்தது. நேரம் அல்லது காலம் என்பது தோன்றியது அப்போதுதான். வெடித்த அந்தப் புள்ளிதான், அகண்ட கண்டமாகப் பரந்து விரிந்து, கோடானு கோடி சூரியன்கள் தோன்றின. ஆகவே, சூனியமாகத் தெரியும் உங்கள் வாழ்க்கையில் அந்த ஒரு சிறு புள்ளியை முதலில் கண்டுபிடியுங்கள், புதிய உலகங்கள் விரியும்!

ஜி.குப்புசுவாமி, சங்கராபுரம்.

லஞ்சம் என்பது ஓர் அன்பளிப்பு மாதிரிதானே?

அப்படிங்களா? சரி, இதிலே 'அன்பு’ எங்கே வந்தது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?!