Published:Updated:

நடுவுல கொஞ்சம் வகுப்பைக் காணோம் !

பாரதி தம்பி

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்பது சினிமா; 'நடுவுல கொஞ்சம் வகுப்பையே காணோம்’ என்பது தமிழகப் பள்ளிகளின் யதார்த்தம். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ப்ளஸ் ஒன் பாடமே நடத்தப்படுவது இல்லை. 10-ம் வகுப்பு முடித்து ப்ளஸ் ஒன் சேர்ந்ததுமே, நேரடியாக ப்ளஸ் டூ பாடங்களை நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒரு வருடம் படிக்கவேண்டிய ப்ளஸ் டூ பாடங்களை, இரண்டு ஆண்டுகள் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளின் 'ஓராண்டு பாடம்; ஈராண்டு படிப்பு’ என்ற இந்தக் கொலைவெறித் திட்டத்தின் சித்ரவதையைத் தாங்க முடியாமல் கதறுகின்றனர் மாணவர்கள். 

பள்ளிகள் ஏன் இப்படிச் செய்கின்றன என்ற கேள்விக்கான பதில் வெளிப்படையானது. அவர்களைப் பொறுத்தவரை ஸ்டேட் ரேங்க் எடுக்கும் அல்லது அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்கியாக வேண்டும். அப்போதுதான் தங்களின் சந்தை மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு இன்னும் அதிகக் கட்டணம் வசூலிக்கலாம். எனவே அவர்களைப் பொறுத்தவரை 'பயன்படாத’ ப்ளஸ் ஒன் பாடங்களைக் கடாசிவிட்டு, 'பயன்தரக்கூடிய’ ப்ளஸ் டூ பாடங்களின் மீது மட்டும் கவனம் செலுத்துகின்றனர். சொல்லப்போனால், இது 9-ம் வகுப்பிலேயே தொடங்கிவிடுகிறது. 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதற்காக, 9-ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல், நேரடியாக 10-ம் வகுப்புப் பாடங்களை நடத்துகின்றன பல தனியார் பள்ளிகள்.

நடுவுல கொஞ்சம் வகுப்பைக் காணோம் !

இது ஒரு கல்வி மோசடி!

''இந்த மோசமான கலாசாரத்தைத் தொடங்கிவைத்தவை 'நாமக்கல் மாடல்’ பள்ளிகள்தான். வெறுமனே ப்ளஸ் டூ மதிப்பெண்ணை மட்டுமே இலக்காகக்கொண்ட அவர்களுக்கு, ப்ளஸ் ஒன் என்பது தேவை இல்லாத தொந்தரவாகத் தெரிந்தது. 'அதை நடத்தினாலும் ஒன்றுதான், நடத்தாவிட்டாலும் ஒன்றுதான். ப்ளஸ் ஒன் படிப்பதால், என்ன பலன்? அந்த நேரத்தில் ப்ளஸ் டூ பாடங்களைப் படித்தால், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்ணாவது கிடைக்கும்’ என்றுதான் இதை ஆரம்பித்தார்கள். யாரோ ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக எங்கும் பரவிவிட்டது. இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கணிசமான தனியார் பள்ளிகளில் ப்ளஸ் ஒன் பாடம் நடத்தப்படுவதே இல்லை'' என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ இரண்டுமே அரசுப் பொதுத்தேர்வாக இருப்பதாலும், மேல்நிலைக் கல்விக்கான நுழைவுவாயிலாக அதன் மதிப்பெண்கள் இருப்பதாலும், இந்த இரண்டு தேர்வு முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. எனவே தனியார் பள்ளிகள் இதை வைத்து குறுக்குவழியில் கல்லா கட்டுகின்றன. ஆனால், ஓர் ஆண்டு படிப்பை இரண்டு ஆண்டுகள் படிப்பதும், ஓர் ஆண்டு படிப்பையே நடத்தாமல் இருப்பதும் பச்சையான கல்வி மோசடி; உலகின் வேறு எந்த நாட்டிலும் நடக்கவே நடக்காத அவலம். மாணவர்களின் கல்வியுடன் விளையாடும் இந்த இழிவான செயலை, எந்த நாட்டு அரசும் அனுமதிக்காது; கண்டும்காணாமல் இருக்காது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் இது மிகவும் வெளிப்படையாக நடக்கிறது. இந்த ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்து ப்ளஸ் ஒன் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில், இப்போதும் அதுவேதான் நடைபெறப்போகிறது.

இப்படி ப்ளஸ் ஒன் பாடங்களைப் படிக்காமல் விடுவதால், மாணவர்கள் என்ன மாதிரியான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது? தமிழ்நாட்டின் பல்வேறு கல்வியாளர்களும் இணைந்து சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தக் கேள்விக்கான விடையைத் தருகிறது.

திணறும் மாணவர்கள்

''இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் கணிதத்தில் 9,710 பேரும், கணக்குப் பதிவியலில் 5,167 பேரும், வேதியியலில் 1,049 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல 10-ம் வகுப்பில் 100-க்கு 100 வாங்கியோரின் எண்ணிக்கையும் ஏராளம். ஆனால் இப்படிக் கடினமாக உழைத்து ஏராளமான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில் பலர் மேற்படிப்புகளில் முதலாம் ஆண்டில் தோல்வியடைவது ஏன்? உதாரணத்துக்கு, 2014-ம் ஆண்டில் ஐ.ஐ.டி படிப்புக்கான JEE நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு 14-வது இடத்தைத்தான் பெற முடிந்தது. முதல் 10 இடங்களை ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், உ.பி., மகாராஷ்டிரா, டெல்லி, ம.பி., பிகார், ஹரியானா, ஜார்கண்ட், மே.வங்கம் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு யிணிணி தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,58,981. இதில் 21,818 (14.7%) மாணவர்கள் ஒன்றுபட்ட ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையோ வெறும் 3,974 (2.5%) பேர்தான். இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, நம் பள்ளிகளில் ப்ளஸ் ஒன் பாடங்கள் நடத்தப்படாததுதான். ஏனென்றால், JEE தேர்வில் ப்ளஸ் ஒன் பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு எழுதுவோர் பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்கள் என்பதாலும், அவர்கள் ப்ளஸ் ஒன் பாடங்களைப் படித்திருப்பது இல்லை என்பதாலும், கேள்விகளுக்குச் சரியான பதில் அளிக்க முடியாமல் திணறுகின்றனர்.


Higher Secondary  என்பது, ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ ஆகிய இரு வகுப்புகளும் சேர்ந்த  ஒருங்கிணைந்த படிப்பு (Integrated Course) . இவை தனித்தனி வகுப்புகள் அல்ல. இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தைக் கவனித்தாலே, இதைப் புரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, இயற்பியல் பாடத்தை எடுத்துக்கொண்டால்  Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics, Atomic Physics, Electronics...  எனப் பல உட்பிரிவுகள் உண்டு. இவற்றில் ஒருசில பாடங்களை ப்ளஸ் ஒன்னிலும், ஒருசில பாடங்களை ப்ளஸ் டூவிலும் நடத்தும் வகையில் பாடத் திட்டம் பிரிக்கப்பட்டிருக்கும். ப்ளஸ் ஒன் பாடங்களை நடத்தாமல் விடும்போது, அந்தப் பாடங்களின் அடிப்படைகளையே மாணவர்கள் அறியாமல் போகின்றனர். இவை இல்லாமல் ஒருவர் இயற்பியலின் மற்ற இயல்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. இது மற்ற பாடங்களுக்கும் பொருந்தும். 9-ம் வகுப்புக்கான புவியியலில் தமிழ்நாட்டின் புவியியல் குறித்த பாடம் உள்ளது. 10-ம் வகுப்பில் இந்தியப் புவியியல் பாடம் உள்ளது. 10-ம் வகுப்புப் பாடங்களை மட்டும் படித்து, 9-ம் வகுப்புப் பாடங்களைப் படிக்காத ஒரு மாணவர், தமிழ்நாட்டின் புவியியல் குறித்த அடிப்படைகளை அறியாதவராக ஆகிவிடுகிறார். இப்படி அடிப்படைகளில் பலம் இல்லாமல் போவதால்தான், தமிழ்நாட்டு மாணவர்களால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற இயலவில்லை’ என்கிறது அந்த அறிக்கை.

அறிவியல் ஆய்வுகள், கோட்பாடுகள் குறித்த தியரி, ப்ளஸ் ஒன் வகுப்பில் நடத்தப்படுகிறது. அந்தத் தியரியைச் செயல்படுத்திப் பார்க்கும் வகுப்புதான் ப்ளஸ் டூ. 'தியரியே தேவை இல்லை’ என்றால், ஒரு விஷயம் குறித்தான அடிப்படையே தெரியாமல்போய்விடும். அது அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் கட்டுவதைப் போன்றது. அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு இரண்டு, மூன்று ஆண்டுகள் ஃபெயில் ஆகியிருந்தாலும் பிற்காலத்தில் வாழ்வில் சிறந்தவர்களாக உருவாகியிருக்கிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் கூற முடியும். ஆனால், படிக்காமலேயே தாண்டிச் செல்வது ஆபத்தானது. இது உருவாக்கும் உளவியல் தாக்கத்தையும் கவனிக்க வேண்டும். எது தேவையோ, அதை மட்டும் படித்தால் போதும் என்ற நிலையானது, வாழ்வில் சுய ஆதாயம் தராத அனைத்தையும் ஒதுக்கித் தள்ளலாம் என்ற நிலையை உருவாக்குகிறது. தனக்கு ஆதாயம் தராத மற்றதைப் பற்றி சிந்திப்பதைக்கூட மறுக்கிறது.

பேக்கேஷிங் டீச்சிங்

பல தனியார் பள்ளிகள், ப்ளஸ் ஒன்னுக்கு ஆசிரியர்களை நியமிப்பதே இல்லை. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஆகிய இரு வகுப்புகளுக்குமான பாடங்களை நடத்தித் தர ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துக்கொள்கின்றன. அதாவது, அவர்கள் அந்தப் பள்ளியின் மாத ஊதியம் பெறும் ஆசிரியர்களோ, வேலை பார்ப்பவர்களோ அல்ல; ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெறுவதைப்போல, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகளை நடத்துவதற்கு பேக்கேஜிங் முறையில் நியமிக்கப்பட்டவர்கள். இப்படி எல்லாம் விவரமாகத் தொழில் செய்து ஒரு வருடப் படிப்பை நடத்தாமல் தாண்டிச் செல்வது தனியார் பள்ளிகளின் சாமர்த்தியம் அல்ல. பிள்ளையின் அறிவுடன், எதிர்காலத்துடன் விளையாடும் ஆபத்து. ஒரு படிப்பின் பயன், மதிப்பெண்ணுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது அறிவை வளர்க்கிறது; புரிதலை விசாலமாக்குகிறது. நம் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பின் பாடங்களும் அடுத்தடுத்த வகுப்பு பாடங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் வளர்ச்சி, முதிர்ச்சிக்கு ஏற்ப பாடத் திட்டத்தின் செறிவு அதிகரிக்கப்படுகிறது. இது ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட கண்ணி. இதில் எது ஒன்றும் பயனற்றது அல்ல. இந்த ஏணியில் ஏறிச் செல்ல எல்லா படிகளுமே அவசியமானவை. இடையில் ஏதோ ஒன்றை உருவினால், மொத்தக் கல்விச் செயல்பாட்டின் பயனும் பூஜ்ஜியம் ஆகிவிடும். திடீரென ஒரு வகுப்பைத் தாவிச் சென்றால், அதுவரையில்  சீரான ஒரு கல்விச் செயல்பாட்டுக்குப் பழக்கப்பட்ட மாணவர்களின் மனம் தடுமாறிப்போகும். முக்கியமாக, ஒரு வருடப் படிப்பை இரண்டு ஆண்டுகள் நடத்தி, திரும்பத் திரும்பப் படிக்க வைப்பதால், மாணவர்கள் பாடங்களின் மீது வெறுப்பு அடைந்துவிடுகின்றனர். படிப்பின் மீது கொஞ்சம்கூட ஆர்வம் இல்லாமல்போய்விடுகிறது.

அரசுப் பள்ளிகளின் நிலை என்ன?

கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கைப் பெருக்கம் மற்றும் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கை இழப்புகளை ஈடுசெய்யவேண்டிய நெருக்கடியில் இருக்கிறது அரசுக் கல்வித் துறை. அப்படி செய்ய வேண்டுமானால், கல்வியின் உள்ளடக்கத்தில் இருந்து பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் வரை நேர்மறையில் அணுகிச் செய்யவேண்டியவை ஏராளம் இருக்கின்றன. ஆனால் கல்வித் துறையோ, 'தனியார் பள்ளிகளைப்போல அதிக மதிப்பெண்; அதிக ரிசல்ட்’ என்ற மேல்பூச்சில் மட்டும் கவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. சென்னை மேயர் சைதை துரைசாமி, கடந்த ஆண்டு, 'தனியார் பள்ளிகளைப்போல, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் ப்ளஸ் ஒன்னிலேயே ப்ளஸ் டூ பாடங்களை நடத்த முயற்சி எடுப்போம்’ என வெளிப்படையாக அறிவித்தார். இப்படி சில அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளைப்போல, ப்ளஸ் ஒன்னிலேயே ப்ளஸ் டூ பாடங்களை நடத்துகின்றனர். அவற்றைத் தவிர்த்த மற்ற அரசுப் பள்ளிகளில் 'சி.இ.ஓ கேட்பார்; அமைச்சர் கேட்பார்’ என்ற நெருக்கடியில், ஆசிரியர்களின் கவனம் 10-ம் வகுப்பின் மீதும், ப்ளஸ் டூ-வின் மீதும் இருக்கிறது. ப்ளஸ் ஓன் பாடங்கள் முறையாக நடத்தப்படுவது இல்லை.

''இது உண்மைதான் என்றாலும், ஒப்பீட்டளவில் ப்ளஸ் ஒன் பாடங்கள் முழுமையாக நடத்தப்படுவது அரசுப் பள்ளிகளில்தான். இதற்கு இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பேப்பர்-1, பேப்பர்-2 ஆகிய தேர்வுகளில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தனர். இத்தனைக்கும் உயிரியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்த இவர்கள், ஏன் உடற்கூறியல் பாடத்தில் தோல்வியடைந்தனர் எனப் பார்த்தால், அந்தப் பாடம் ப்ளஸ் ஒன்னில் வருகிறது. அவர்கள் படித்திருக்கவில்லை; அதனால் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டனர். அதே மருத்துவக் கல்லூரிகளில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் உடற்கூறியல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

அதைப்போலவே காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த ஜோதி என்கிற பெண் 986 மதிப்பெண் பெற்று, சீனாவில் மருத்துவம் படிக்கச் சென்றார். அவளுடன் 12 பேர் சென்றனர். முதல் ஆண்டு படிப்பில் சீன மொழிப் பாடம் தவிர்த்து, இரண்டு பேப்பர்கள். ஜோதி மட்டும்தான் 90-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று இரண்டு பேப்பர்களிலும் தேர்ச்சி பெற்றார். உடன் சென்ற 12 பேரும் தோல்வியடைந்தனர். அவர்கள் அத்தனை பேரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து, ஜோதியைவிட அதிக மதிப்பெண் பெற்றவர்கள். ப்ளஸ் ஒன் பாடங்களைப் படிக்காததால் தோல்வியடைந்துவிட்டனர்'' என்று நடைமுறை உதாரணம் சொல்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இந்தியாவைத் தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும், உயர்கல்வி என்பது பள்ளிக் கல்வி மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. குறிப்பிட்ட பாடத்தில் ஆர்வமும் தகுதியும் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள். இங்கு ப்ளஸ் டூ மதிப்பெண் என்பது உயர்கல்விக்கான நுழைவாயிலாக இருப்பதால், தனியார் பள்ளிகள் அதை ஆதாயம் ஈட்டும் டோல்கேட் போல பயன்படுத்துகின்றன.

''அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஆகிய இரண்டு ஆண்டுகளையும் முழுமையாகப் படித்து, முடிந்தவரை அதிக மதிப்பெண் எடுக்கின்றனர். ஆனால் தனியார் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகள் ப்ளஸ் டூ பாடங்களைப் படிக்கும் மாணவர்கள், மதிப்பெண் எண்ணிக்கையில் இவர்களைத் தாண்டிவிடுவதால், அரசுக் கல்லூரிகளில் தரமான இலவசக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களோ, தனியார் கல்லூரிகளில் தரமற்ற கட்டணக் கல்வியில் சிக்கிக்கொண்டு சேமிப்பையும் சொத்துக்களையும் இழந்து கல்விக் கடனாளியாகிப் பரிதவிக்கின்றனர். எனவே, ப்ளஸ் ஒன் பாடங்களை நடத்தாமல் விடுவது சமூகத்தின் வர்க்க வித்தியாசத்தை அதிகப்படுத்தி, ஏழைகளை இன்னும் பின்னுக்குத் தள்ளுகிறது. இதை இந்தக் கோணத்திலும் கவனிக்க வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் கல்யாணி.

நடுவுல கொஞ்சம் வகுப்பைக் காணோம் !

பெற்றோரின் நிலை என்ன?

நியாயமாகப் பார்த்தால், எதிர்மறைக் கல்வியைப் போதிக்கும், பிள்ளைகளின் எதிர்கால சிந்தனைமுறையையே பாதிக்கும் இத்தகையப் பள்ளிகளை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆனால் அவர்களோ, ப்ளஸ் ஒன்னிலேயே ப்ளஸ் டூ பாடங்களை நடத்தும் பள்ளிகள்தான் தரமானவை எனக் கருதுகின்றனர். அத்தகைய பள்ளிகளாகத் தேடிப்பிடித்துப் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். 'இப்போ ப்ளஸ் ஒன் படிக்கலைனா என்ன? அதைப் படிச்சு என்ன ஆகப்போகுது?’ என்பது அவர்களின் கேள்வி. 'சீரான அறிவு வளர்ச்சி. ஒரு விஷயம் குறித்த முழுமையான அறிவு’ என்பதை எல்லாம் அவர்கள் புறங்கையால் நிராகரிக்கிறார்கள். 'இதெல்லாம் எங்களுக்கும் தெரியும் சார். இப்போ என்ன யூஸ்?’ எனக் கேட்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை எதுவாக இருந்தாலும் மேகி நூடுல்ஸ் மாதிரி இரண்டு நிமிடங்களில் பயன் தர வேண்டும். அப்படியானால், இரண்டு ஆண்டுகள் ப்ளஸ் டூ பாடங்களைப் படிப்பதால் என்ன ஆதாயம்? பிள்ளை ப்ளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் எடுத்தால், அரசுக் கல்லூரியில் ஃப்ரீ ஸீட் வாங்கலாம். தனியார் கல்லூரிகளில் லட்சம், லட்சமாகக் கட்டவேண்டிய பணம் மிச்சம். குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க தனியார் பள்ளிகள் நினைத்தால், அந்தப் பள்ளிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் குறுக்குவழியை பெற்றோர் மனம் யோசிக்கிறது.

நடுவுல கொஞ்சம் வகுப்பைக் காணோம் !

ஆசிரியர் சங்கங்கள்தான் இந்த மோசடியை அம்பலப்படுத்த வேண்டும். அவர்களோ, கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள், தங்கள் பிள்ளைளை இந்த மோசடியான தனியார் பள்ளிகளில்தான் படிக்கவைத்துள்ளனர். சொல்லப்போனால் இதுபோன்ற மேல்நிலை வகுப்புகளை மட்டுமே கொண்ட தனியார் பள்ளிகளை நாமக்கல் பகுதியில் முதன்முதலில் உருவாக்கியவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். இந்தக் குற்றத்தை நிகழ்த்துபவர்களாகவும் பயனாளிகளாகவும் இருப்பதால் அவர்கள் தயங்கி, ஒதுங்கிக்கொள்கின்றனர்.

தீர்வுதான் என்ன?

மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் சிதைத்து, அடிப்படைகள் தெரியாத கூடுகளாக மாற்றி, எதிர்கால தலைமுறையைக் கெடுக்கும் இந்த அநீதியான கல்விமுறைக்கு என்னதான் மாற்று? அதற்கு கீழ்காணும் பரிந்துரைகளை கல்வியாளர்கள் முன்வைக்கிறார்கள்.

நடுவுல கொஞ்சம் வகுப்பைக் காணோம் !

தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் இப்போது 'டிரைமஸ்டர்’ அதாவது முப்பருவத் தேர்வுமுறை இருக்கிறது. இதை 10-ம் வகுப்பு, ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கும் நீட்டிக்கலாம். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மதிப்பெண்ணின் சராசரியை மேற்படிப்புக்காகக் கணக்கில்கொள்ளலாம்.

நடுவுல கொஞ்சம் வகுப்பைக் காணோம் !

 ஆந்திராவில் நடைமுறையில் உள்ளதைப்போல ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுத் தேர்வு வைக்கலாம்.

நடுவுல கொஞ்சம் வகுப்பைக் காணோம் !

 கல்லூரியில் உள்ளதைப்போல ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஆகிய இரு ஆண்டுகளுக்கும் செமஸ்டர் முறை கொண்டுவரலாம். அதாவது வருடத்துக்கு இரண்டு தேர்வுகள் வீதம் நான்கு தேர்வுகள். அதன் சராசரி மதிப்பெண்ணைக் கணக்கில்கொள்ளலாம்.

நடுவுல கொஞ்சம் வகுப்பைக் காணோம் !

 குறைந்தபட்சம் ப்ளஸ் ஒன் வகுப்புக்கு 20 சதவிகிதம், ப்ளஸ் டூ-வுக்கு 80 சதவிகிதம் என மேல்நிலை வகுப்புக்கான மதிப்பெண் வழங்கும் முறையை மாற்றலாம்.

- இப்படி பலவிதமான யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஒரு குழுவை உருவாக்கி ஆய்வுசெய்ய வேண்டும். எங்கெங்கும் தனியார் பள்ளிகள் நிறைந்து இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், மக்களிடம் தனியார் பள்ளி மோகம் மிதம்மிஞ்சி பரவி இருந்தாலும், இன்னமும் 70 சதவிகிதம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். அவர்களை அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்த்தெடுப்பதன் மூலம்தான் எதிர்கால தமிழ்நாட்டை வளம் மிக்கதாகவும் மாற்ற முடியும். அரசு, இதன் முக்கியத்துவம் உணர்ந்து விரைந்து வினையாற்ற வேண்டும்!

தண்டிக்க முடியுமா?

ப்ளஸ் ஒன் பாடங்களை நடத்தாமல்விடுவது, கல்வித் துறை விதிகளின்படி குற்றமா? இதற்காகத் தண்டிக்க முடியுமா? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது,

''அதிகாரிகள் நினைத்தால் நிச்சயம் தண்டிக்க முடியும். ஒவ்வொரு வகுப்புக்கான பாடத் திட்டமும் கால அட்டவணையும் வரையறுக்கப்பட்டவை. முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியில் ஆய்வு செய்ய செல்லும்போது குறிப்பிட்ட பாடவேளையில் குறிப்பிட்ட பாடம்தான் நடத்தப்பட வேண்டும். வேறு பாடம் நடத்தப்பட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். இது அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டுக்கும் பொருந்தும். ஆனால், இதுவரைக்கும் ப்ளஸ் ஒன் வகுப்பில் ப்ளஸ் டூ பாடம் நடத்தப்பட்டது என்ற காரணத்துக்காக துறைரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக எனக்கு நினைவு இல்லை'' என்கிறார்.