மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

இயற்கையின் கொடை கெண்டை

“ஹேய்ய்ய்ய்... நான் ஒரு மீனைப் பிடிச்சுட்டேன்” எனக் குஷியாகக் கத்தினான் அருண்.

ஞாயிறு விடுமுறையைக் கழிக்க, அவர்கள் ஒரு ஆற்றுப் பகுதிக்கு வந்திருந்தார்கள். ஆற்றுக்கு நடுவே, அந்தரத்தில் மந்திரக் கம்பளம் மிதந்துகொண்டிருந்தது. அதன் மீது அமர்ந்து, தூண்டிலைப் போட்டிருந்தார்கள். தூண்டிலில் சிக்கிய மீனை எடுத்த மாயா டீச்சர், பாதியளவு தண்ணீர் நிரம்பிய சிறிய கூடையில் போட்டார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

கூடைத் தண்ணீரில் துள்ளிய மீனைப் பார்த்தவாறே, “இது என்ன மீன் டீச்சர்?” எனக் கேட்டாள் கயல்.

“இது கெண்டை மீன். ஆங்கிலத்தில் கார்ப் (Carp). இதன் வாயின் கீழ்ப் பகுதியில், கரண்டி மாதிரி ஓர் அமைப்பு இருக்கும். அது, தண்ணீரில் உள்ள பாசிகளைக் கிண்டி இரையை எடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். அதனால், ‘கிண்டு மீன்’ எனப்பட்டது. அதுதான்  கெண்டை மீன் என மாறியது” என்றார் டீச்சர்.

“எங்க வீட்டிலும் கெண்டை மீன் வாங்கிட்டு வருவாங்க. ஆனா, அது வேற மாதிரி இருக்குமே டீச்சர்” என்றான் கதிர்.

“கெண்டை மீனில், 15 வகையான பேரினங்களும் 200-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இருக்கு கதிர். இதன் தாயகம் ஐரோப்பா மற்றும் ஆசியா. இப்போ, உலகம் முழுவதும் பரவி இருந்தாலும், தமிழ்நாட்டு நன்னீர்களில்தான் அதிகம் இருக்கு. பல வகையான கெண்டைகளைப் பார்க்கணும்னா, இப்படித் தூண்டில் போட்டால் போதாது; களத்தில் இறங்கணும்” என்ற மந்திரக் கம்பளம், சடார் என அவர்களைத் தண்ணீரில் சரித்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

“ஓவ்வ்வ்” எனக் கூச்சலிட்டவாறு அவர்கள் தண்ணீருக்குள் விழுந்தார்கள். உள்ளே செல்லச் செல்ல, அவர்களின் கால்கள், மீனின் வால்களாக மாறிவிட்டன. அழகாக நீந்த ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு அருகே மீன்களும் நீந்திக் கொண்டிருந்தன.

“ஐய்... இப்போ நான், ஷாலினிக் கெண்டை. எப்படி இருக்கே அருண் கெண்டை?” என்று அருணைத் தனது வாலால் அடித்தாள் ஷாலினி.

“பார்த்து ஷாலினிக் கெண்டை... யார் தூண்டிலிலாவது மாட்டிக்கப்போறே” என்றான் அருண்.

“மனிதன், பல நூற்றாண்டுகளாகச் சாப்பிடும் மீன்களில் கெண்டை முக்கியமானது. மிகவும் சுவையான மீன். நன்னீரில் மட்டும் இல்லாமல், உப்பு நீரிலும் வாழும். இவற்றுக்கு சிறப்பான ஒலியுணர்வு உறுப்பு இருக்கு. இரையைக் கண்டுபிடிக்கவும், எதிரியை அடையாளம் காணவும் இந்த ஒலியுணர்வைப் பயன்படுத்தும்” என்றார் மாயா டீச்சர்.

“இந்த மீன்கள் என்ன சாப்பிடும்?” எனக் கேட்டான் கதிர்.

“இதனுடைய வாய் சின்னதாக இருக்கும். கூர்மையான பற்களும் கிடையாது. தொண்டைக்குள் மிடற்றுப் பற்கள் என்று சொல்கிற மழுங்கிய பற்களே இருக்கும். அதனால், பிற மீன்களை வேட்டையாட முடியாது. பாசிகள், பூச்சிகளின் லார்வாக்கள், மெல்லுடலிகள் போன்ற சிறிய நீர் உயிரிகளையும் நீர்த் தாவரங்களையும் சாப்பிடும். தண்ணீருக்குள் மணற்பாங்கான பகுதியில் பொறுமையாக நீந்திச் சென்று, அங்கே கிடைக்கும் இரையைச் சாப்பிடும்” என்றது கம்பளம்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

அப்போது, அந்தப் பக்கமாக வந்த மீனை சுட்டிக்காட்டிய டீச்சர், “இதுதான் கெண்டை மீன் வகைகளில் ஒன்றான ‘கட்லா’. கெண்டை மீன் வகைகளில் பெரியது. ஆறு, ஏரி போன்ற நன்னீரில் வாழக்கூடியது. சாம்பல் நிறத்தில் பெரிய தலையும் அகன்ற உடலுமாக இருக்கும். தோப்பா மீன், கங்கைக் கெண்டை என்றும்  அழைப்பார்கள். கங்கை நதியைப் பூர்வீகமாக உடைய மீன். கூட்டு மீன் வளர்ப்பு முறையில், ஏரி மற்றும் குட்டைகளில் வளர்ப்பாங்க. ஐந்து அடி நீளம், 40 கிலோவுக்கும் மேற்பட்ட எடை இருக்கும். குறைந்த செலவில் அதிக லாபம் கொடுக்கும் மீன்” என்றார்.

“அதென்ன கூட்டு மீன் வளர்ப்பு?” எனக் கேட்டாள் கயல்.

“மீன் உற்பத்தியைப் பெருக்கவும், மீன் உணவுக்கான தேவையை நிறைவேற்றவும் இந்திய அரசு உருவாக்கிய திட்டம். பண்ணை வளர்ப்பு மூலம் ஒரு குளம், குட்டை அல்லது ஏரியில் பல வகையான மீன்களை வளர்ப்பாங்க. அதற்கேற்ற உணவுகள், அந்த நீரில் இயற்கையாகக் கிடைப்பதோடு, மீன்களை வளர்ப்பவர்களும் சில உணவு வகைகளைக் கொடுப்பாங்க. இந்திய தட்பவெப்பச் சூழ்நிலைக்கு மிகவும் ஏற்றதாக கெண்டை மீன்கள் இருப்பதால்,  கூட்டு மீன் வளர்ப்பு உற்பத்தியில், 85 சதவிகிதம் வளர்க்கப் படுகின்றன” என்றது கம்பளம்.

சிறிய தலை, உருண்ட நீளமான உடல், செதில் பகுதியில் ஆங்காங்கே சிவப்பு நிறத்துடன் இருந்த ஒரு மீன், ‘என்னைப் பற்றி சொல்லுங்க’ என்பது போல அருகே வந்தது.

“இது... ‘ரோகு’ மீன்தானே?” எனக் கேட்டாள்  ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

“பலே... சரியா தெரிஞ்சுவெச்சிருக்கே. கெண்டை மீன் வகைகளில் சுவையானது ரோகு. அழுகும் தாவரங்கள், மிதக்கும் பாசிகளைச் சாப்பிடும். மூன்று அடி நீளமும் 30 கிலோ எடை வரையும் வளரும். சுவை அதிகம் என்பதால், இதற்கான தேவையும் அதிகம். கூட்டு வளர்ப்பு மட்டும் இல்லாமல், தனியாகவும் பண்ணைகளில் வளர்ப்பார்கள். கட்லா, ரோகு தவிர கெண்டை மீன் வகையில் இன்னொரு முக்கிய வகை, ‘மிர்கல் கெண்டை’ (Mrigal carp). மூன்று அடி நீளத்துக்கு மிக வேகமாக வளரக்கூடியது. மக்கிய உணவுகள், நத்தை மற்றும் புழுக்களைச் சாப்பிட்டு வளரும். இந்த மீனின் வாய், கீழ்நோக்கித் திறந்த நிலையில் இருக்கும்” என்றார் டீச்சர்.

“இதைத் தவிர, சீன நாட்டைச் சேர்ந்த வெள்ளிக் கெண்டை(Silver carp), புல் கெண்டை (Grass carp) போன்றவற்றின் குஞ்சுகளையும் இங்கே இறக்குமதிசெய்து வளர்க்கிறாங்க. வெள்ளி போன்ற பளிச் வெண்மை நிறத்தில் உடல் இருப்பது, வெள்ளிக் கெண்டை. குளத்தின் மேல் பகுதியில் இருக்கும் தாவரம் மற்றும் நுண்ணுயிரிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சாப்பிடும். இதன் வாய், மேல் நோக்கி திறந்த நிலையில் இருக்கும். புல், பூண்டுகளை விரும்பிச் சாப்பிடும் கெண்டை மீன், புல் கெண்டை. தன் எடையைவிட பல மடங்கு உணவைத் தினமும் சாப்பிடும். இதனால், குளங்களில் வளரும் புற்கள் மற்றும் தாவரங்களைக் கட்டுப்படுத்தும்  காப்பாளனாகவும் இருக்கு” என்றார் டீச்சர்.

“அடேங்கப்பா! இயற்கை, எவ்வளவு அற்புதமாக ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்தி இருக்குது. கெண்டை மீனைப் பற்றி மட்டுமே இவ்வளவு விஷயங்கள் இருக்கே. மற்ற மீன்களைப் பற்றி தெரிஞ்சுக்க பல ஆண்டுகள் தண்ணீருக்குள்ளே இருக்கணும் போலிருக்கே!” என்றான் கதிர்.

“அதில் சந்தேகமே வேண்டாம். ரொம்ப நேரம் தண்ணீரில் இருந்தால், ஜலதோஷம் பிடிச்சுக்கும். அதனால், இன்னொரு முறை வேறு வகை மீன்களைப் பற்றி தெரிஞ்சுப்போம்” என்ற கம்பளம், அவர்களைச் சுமந்துகொண்டு நிலத்துக்கு வந்தது.

கே.யுவராஜன்

பிள்ளை