மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 05

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

ஆப்

'மச்சி... இந்த ஆப் பேர் 'கிராவிட்டி’. 

என்னுடைய இன்வென்ஷன். இதை இன்ஸ்டால் பண்ணினா,

நீ கேட்கிற எதையும் ஏராளமா உன்னை நோக்கிக் கவர்ந்து இழுக்கலாம்'' - கடற்கரையில் உட்கார்ந்தபடி சொன்னான் தாணு.

'இதை எப்படி மச்சி போன்ல இன்ஸ்டால் பண்றது,

அஞ்ஞானச் சிறுகதைகள் - 05

வழக்கம்போலத்தானா..?'' என்றான் ஷிவ்.

இருவரும், இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு சயின்ஸ் மாணவர்கள்.

'அட லூஸு... இதை போனுக்காக நான் பண்ணலை. இது ஒரு ஹ்யூமன் பாடி ஆப். இதை அப்படியே முழுங்கிடணும். அது உன் உடம்புக்குள்ள போய் ஆட்டோமெட்டிக்கா இன்ஸ்டால் ஆகிடும். அப்புறம் நீ எதைக் கேட்டாலும் அது தாராளமா உன்னை நோக்கி வரும்' என்றான் தாணு.

'சூப்பர் மச்சி...'' என்றபடி விழுங்கினான் ஷிவ். தொண்டையில் சூடாக உரசிக்கொண்டு இறங்கியது. உடலில் அசாதாரண மாற்றத்தை உணர்ந்தான். மூச்சு இரைத்தது. தொண்டை வறண்டுபோவதுபோல இருந்தது.

''தண்ணி... தண்ணி...'' எனக் கேட்டான் ஷிவ்.

வழக்கத்துக்கு மாறான பேரிரைச்சல் கேட்கவும், தாணு திரும்பி ஒரு கணம் கடலைப் பார்த்தான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 05

ஒரு கணம்தான் பார்த்தான்!

''வேகமான வளர்ச்சினா என்னப்பா?'' என்றான் நண்பன்.

''கிராமங்கள் நகரங்களாவதும், நகரங்கள் நரகங்களாவதும்தான்!' என்றான் கார்ப்பரேட் சித்தன்!

மனிதன் எனும் ஏலியன்! 

இரண்டு செய்திகளைப் படித்தேன். நிலத்தடி நீர் 77 சதவிகிதம் குறைந்திருப்பதாக, மத்திய நிலத்தடி நீர் வாரியம் சொல்கிறது. சனிக் கிரகத்தின் மிகப் பெரிய நிலவான டைட்டானில், ஒருகாலத்தில் ஏரிகள் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறது நாசா அறிவிப்பு. இந்த இரு செய்திகளுக்கும் சுவாரஸ்யமான, அதே நேரம் நம்மைப் பயமுறுத்தக்கூடிய ஒரு தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். அதைக் கடைசியில் பார்க்கலாம்.

அறிவியலில் 'பான்ஸ்பெர்மியா (Panspermia)  தியரி’ ஒன்று இருக்கிறது. கற்பனை எனப் பெரும்பாலான அறிவியலாளர்கள் உதாசீனப்படுத்தினாலும், இந்த தியரியை ஆதரிக்கவும் ஒரு கும்பல் இருக்கிறது. விஷயம் சிம்பிள். மனிதர்கள் உள்பட உயிரிகள் அனைத்தும், இந்தப் பூமியில் உருவானது அல்ல; பிரபஞ்சத்தின் வேறு இடத்தில் இருந்து இங்கே வந்தவை என்பதுதான், அந்த தியரியின் உள்ளடக்கம்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 05

டாக்டர் எல்லிஸ் சில்வர் எனும் எக்காலஜிஸ்ட் இன்னும் ஒரு படி மேலே சென்று, 'மற்ற உயிரிகள் பூமியில் பிறந்தவைதான். ஆனால் மனிதர்கள் மட்டும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்கள்’ என, தன் 'HUMANS ARE NOT FROM EARTH' புத்தகத்தில் அடித்து சத்தியம் செய்கிறார். அதற்கான சில ஆய்வு உதாரணங்களையும் அவர் கொடுக்கிறார். அதில் முக்கியமான சில சங்கதிகளை மட்டும் பார்ப்போம்.

ஒன்று... மனிதர்களைத் துரத்தும் முதுகெலும்பு பிரச்னை. அதாவது மனிதர்கள் தோன்றிய கிரகத்தில் ஈர்ப்பு விசை குறைவாக இருந்திருக்கலாம். அவர்களுக்கு நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், பூமியின் ஈர்ப்பு விசையுடன் அவர்கள் முதுகெலும்பு இன்றும் போராடிக்கொண்டுள்ளது என்பது அவர் தியரி.

இன்னொன்று... பூமியில் விழும் சூரிய ஒளிக்கு ஏற்றவாறு மனிதர்களின் உடல் வடிவமைக்கப்படவில்லை என்றும், பிற விலங்குகளைப்போல மனித உடல் தொடர்ச்சியாக சூரிய ஒளியைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடன் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

இன்னொரு முக்கியமான விஷயம்... மனிதர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கான காரணம், அவர்களின் மூளையின் உயிரியல் கடிகாரம் 25 மணி நேரத்துக்கானதாக வடிவமைப்பட்டுள்ளது. தூக்கத்தை ஆய்வு செய்பவர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்களாம். எப்படி அந்த ஒரு மணி நேரம் அதிகமாக இருக்கிறது? இப்படி குழப்பமான பல காரணங்களை அடுக்கும் எல்லிஸ், அதனால்தான் மனிதர்கள், வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தவர்கள் என முடிவுக்கு வருகிறார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 05

அறிவு உலகம் இதையெல்லாம் நம்பாமல், சூடோ சயின்ஸ் எனப் புறங்கையால் தள்ளிக்கொண்டிருப்பது வேறு விஷயம். ஆனால், மனிதர்கள் பூமியில் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்க்கும்போது, இந்த தியரி உண்மையாக இருக்குமோ என, எனக்கும் சந்தேகம் வருகிறது.

முதலில் சொன்ன இரு செய்திகளை இந்த வகையில் இணைத்துப் பார்த்தால்... மனிதர்கள் ஒவ்வொரு கிரகமாகப் பயணித்து, அங்கே இருக்கும் தண்ணீர் வளங்களைக் காலி செய்துவிட்டு வேறு கிரகங்களை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்களோ எனும் சந்தேகம் வருகிறது. டைட்டனின் ஏரிகளை வற்றசெய்தவர்கள்தான் பிறகு பூமிக்கு வந்து, இப்போது இங்கே நிலத்தடி நீர் வளத்தையும் காலி செய்கிறார்களோ?

ஆனால், மற்ற கிரகங்களைப்போல அல்ல பூமி. இது மனிதர்கள் எனும் ஏலியன்களைவிட வலிமையான உயிர்க்கோளம். அது, தன்னுடன் இயைந்து செல்லாதவற்றை  அழித்துவிடும். உதாரணம், டைனோசர்கள். மற்ற கிரகங்களில் அழிவுகளை ஏற்படுத்திவிட்டு தப்பித்ததுபோல, இங்கிருந்து மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் தப்பிவிட முடியாது. ஏனென்றால், பூமியின் வாழ்க்கை கிறிஸ்டோஃபர் நோலனின் 'இன்டர்ஸ்டெல்லர்’ சினிமா அல்ல! 

சிரிக்கும் மனிதர்கள்!

'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது முன்னோர் வாக்கு. சீனாவைச் சேர்ந்த ஓவியர்

யூ மின்ஜுன் (Yue Minjun) ஓவியங்கள் அனைத்துமே சிரிக்கும் மனிதர்கள்தான். வெவ்வேறு பின்னணிகளில், விதவிதமான போஸ்களில் சிரிக்கும் மனிதர்களை வரைந்துகொண்டே இருக்கிறார் யூ.

'கடந்த 25 வருடங்களாக, சிரிக்கும் மனிதர்களை மட்டுமே வரைகிறீர்களே ஏன்?’ எனக் கேட்டால், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்களைச் சொல்லிவிட்டு அதற்கும் சிரிக்கிறார்.

மாவோ தலைமையில் சீனாவில் வந்த கம்யூனிச ஆட்சி, கலாசாரப் புரட்சி என்ற பெயரில் கலை, இலக்கியம், மதம் சார்ந்த விஷயங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அறிவுஜீவிகளைக்கூட விவசாயம் கற்றுக்கொள்ள நிர்பந்தப்படுத்தியது. மாவோவின் பார்வையில் இது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால், கலைஞர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் இது உவப்பானதாக இல்லை.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 05

மாவோ இறந்த 1976-க்குப் பிறகு, சீனாவில் ஒரு பெரிய மாற்றம் வருகிறது. கலாசாரம் மற்றும் பொருளாதாரரீதியாகக் குழப்பமான காலகட்டம். கம்யூனிசமும் இல்லாமல் முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரமும் இல்லாமல் கலவையான ஒரு நிலை. இது, இளம் வயது யூ மின்ஜுனின் கலைகளில் அபத்தமான, குழப்பமான, கேலியான சிரிப்பாக வெளிப்படத் தொடங்கியது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 05

'எனது ஓவியங்களில் சிரிப்பு என்பது மகிழ்ச்சியான ஒரு நிலைபோல தெரிந்தாலும், உற்றுப் பார்த்தால் அந்த அப்பாவித்தனமான சிரிப்புக்குப் பின்னால் ஒரு கையறுநிலை தெரியும்’ என, தத்துவார்த்தமாகச் சொல்கிறார் யூ.

அரசியல் கொலைகள் முதல் தியான்மென் சதுக்க மாணவர் போராட்டம் வரை, சீனாவின் அரசியல், கலாசார, பொருளாதார வரலாறு, யூவின் சிரிக்கும் மனிதர்கள் வழியாக இன்று உலகம் முழுக்க ஒரு காட்சிப் பொருளாகியிருக்கிறது. நம்மூரில் பேச்சுவழக்கில் 'அவன் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்’ எனச் சொல்வோம்... அது யூவின் ஓவியங்களுக்கு மிகச் சரியாகவே பொருந்துகிறது!