மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

புதியவர்களைக் கண்டாலே ஓடி ஒளிகிறாள். நண்பர்களே கிடையாது. யாருடனும் பேசுவது கிடையாது. எதற்கும் வெட்கம், தயக்கம், கூச்சம், பயம். தன் பால்யத்தில் இப்படி ஒதுங்கி, ஒடுங்கி, ஒளிந்து, வாழ்ந்த அந்தச் சின்னப் பெண், ஒருகட்டத்தில் தன் திறமையை உணர்ந்து, அதில் கவனம் குவித்து, கடுமையாக உழைத்து, மேலே... உயரே... உயர்ந்து, உச்ச நட்சத்திரமாக, இந்த நூற்றாண்டில் பல பெண்களுக்கு ரோல்மாடலாக மாறிய கதை இது! 

பியான்ஸே நோல்ஸ். பிறந்தது 1981-ம் ஆண்டு செப்டம்பர் மாதம். அமெரிக்காவின் ஹியுஸ்டன் நகரம். குடும்பத்தின் முதல் மகள். ஆப்பிரிக்கன் - அமெரிக்கத் தந்தை மேத்யூ, ஒரு விற்பனை மேலாளர். தாய் டீனா, பெண்களுக்கான அழகு நிலையம் நடத்திவந்தார். வசதிகளுக்குக் குறைவில்லை. சிறுவயது முதலே பியான்ஸேவுக்கு இசையை ரசிப்பதில் அதீத ஈடுபாடு இருப்பதை பெற்றோர் உணர்ந்தனர். சாதாரணமாக நடக்கும்போதே நடனம் ஆடுவதையும், தனிமையில் இருக்கும்போது ஏதாவது பாடலை முணுமுணுத்தபடியே இருப்பதையும் கவனித்தனர். வீட்டுக்குள் சரி. ஆனால், வெளியில் கூச்ச சுபாவத்தால் காணாமல்போய்விடுகிறாளே! வகுப்பில் எப்போது பார்த்தாலும் டெஸ்க்குக்குக் கீழே புதைந்துகொள்கிறாளாம். புகார் வருகிறது. இப்படியே விட்டால் இவளது எதிர்காலம்?

ஐந்து வயதில், மைக்கேல் ஜாக்சன் லைவ் ஷோவுக்கு பியான்ஸேவை அழைத்துச் சென்றபோது அவளிடம் வெளிப்பட்ட உற்சாகம், பெற்றோரின் நினைவுக்கு வந்தது. சரி, அவளுக்குப் பிடித்ததைச் செய்யச் சொல்வோம். ஆறு வயது பியான்ஸேவை பள்ளியில் நடன வகுப்பில் சேர்த்தனர். முதலில் தயக்கத்துடன் ஆரம்பித்தாலும், போகப்போக நடனம் அவளது கூச்ச சுபாவத்தைக் கூறுபோட்டு விரட்டியது. ஒருசமயம், டான்ஸ் மாஸ்டர் ஒரு பாடலைப் பாட ஆரம்பிக்க, அப்படியே அதைத் தொடர்ந்து பாடிய பியான்ஸே, உச்சஸ்தாயியில் அநாயாசமாகப் பாடி முடித்தாள். மாஸ்டர் இதை பெற்றோரிடம் சொல்ல, அவர்களது உதடுகளில் தீராத புன்னகை.

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

பள்ளியில் யாரும் தன்னைக் கவனிக்கக் கூடாது என்பதற்காகவே 'டல்’லான ஆடைகளை அணிவாள். அவளது பெரிய காதுகளை மற்றவர்கள் கேலி செய்தால் திணறுவாள். யாருக்கும் எதற்கும் பதில் பேச மாட்டாள். ஆனால், ஒருமுறை பள்ளி நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டிக்காக மேடையேற்றியபோது, 'இவளுக்குப் பேசக்கூடத் தெரியாதே’ என எல்லோரும் கேலி செய்துகொண்டிருக்க, 'நம்ம பியான்ஸேவா இவ?!’ என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவுக்குப் பாடிக் கலக்கினாள். ஏழு வயது பியான்ஸே, 15 வயது போட்டியாளர்களை எல்லாம் தோற்கடித்து முதல் பரிசை வென்றாள். பெற்றோர் தங்கள் மகளுக்குள் 'ஒரு நட்சத்திரம்’ மறைந்திருப்பதைக் கண்டுகொண்டனர்.

மேத்யூ, தன் வீட்டின் பின் பக்கத்தில் சிறிய மேடை ஒன்றை அமைத்தார். அங்கே பியான்ஸே, தன்னைவிட ஐந்து வயது சிறிய தங்கை சோலென்ஜுடன் ஆடிப்பாடி பயிற்சியெடுக்க ஆரம்பித்தாள். 'இயைபுத்தொடை’யுடன் தன் மகள் சுயமாக 'ராப்’ பாட, மேத்யூ அசந்துபோனார். அவளது குரலை மேம்படுத்த பயிற்சியாளரை ஏற்பாடு செய்தார். பாடல்களின் இசைக்கு ஏற்ப வரிகளைப் பாடி பயிற்சிபெற உதவும் 'கரோக்கி மெஷின்’ வாங்கிக் கொடுத்தார். தன் மகளை மரியா கேரே போல ஸி-ஙிஆக உருவாக்கக் கனவுகண்டார். (R&B என்றால் Rhythm and Blues, Soul, Funk, Pop, Hip Hop, Danceஎன அனைத்து வகையறாக்களிலும் தேர்ச்சி பெற்ற என்டர்டெய்னர்.) ஆகவே பாடல், நடனப் போட்டிகள் எங்கு நடந்தாலும் பியான்ஸேவை மேடையேற்றினார் மேத்யூ. அவளது படுக்கையறையில் கோப்பைகள் குடியேற ஆரம்பித்தன.

மேடையில் பாடும் பியான்ஸேவும், நிஜத்தில் மற்றவர்களிடத்தில் இயல்பாக இல்லாத பியான்ஸேவும் வேறு வேறா? அம்பி - ரெமோ போல இருவேறு மனநிலையில் வாழ்கிறாளா? Dissociative identity disorder -ஆக இருக்குமோ? பெற்றோருக்கே சந்தேகம். கொஞ்சம் வளர்ந்த பின், பியான்ஸேவே அதற்குப் பதில் அளித்தாள். 'மேடையேற வேண்டும் என்றாலே, என் அடிவயிற்றைப் பயம் கவ்வும். அப்போது எனக்குள் இருந்து இன்னொருத்தி வெளிப்படுவாள். அவளுக்கு நான் வைத்திருக்கும் பெயர் ஸாஷா ஃபியர்ஸ். அவள் என்னைவிடத் திறமையானவள்; பயமே இல்லாதவள்; எதையும் எதிர்கொள்பவள்; சக்தி மிக்கவள். மேடையில் நீங்கள் பார்ப்பது பியான்ஸே அல்ல; அவளது கற்பனை உருவமான ஸாஷாவைத்தான்’!

ஸாஷாவின் வெற்றிகள், பியான்ஸேவுக்கு அடையாளம் கொடுத்தன. பியான்ஸேவை முதன்மைப் பாடகியாகக்கொண்ட, லாடாவியா, கெல்லி உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய, 'நிவீக்ஷீறீs ஜிஹ்னீமீ’ என்ற சிறுமிகள் குழுவை உருவாக்கினார் மேத்யூ. பியான்ஸே, பாடல்கள் எழுதிப் பழகி, லோ பிட்ச்சுக்கும் ஹை பிட்ச்சுக்கும் இடையே துள்ளிக்கொண்டிருந்தாள். அவளது 13-வது வயதில் லிண்டான் என்கிற 'பாய் ஃப்ரெண்டு’ அமைந்தான். அடிக்கடி பேசிக்கொண்டார்கள். எப்போதாவது ஊர் சுற்றினார்கள். சினிமாவில் பாப்கார்ன் சிதறிய பொழுதில் முதல் முத்தத்தைப் பரிமாறிக்கொண்டார்கள். அந்தப் பருவத்தின் குறுகுறுப்பும் கிளுகிளுப்பும் பியான்ஸேவின் பாடல்களில் பரவச எரிபொருள் ஆகின.

முன்னணி சேனல் நடத்திய 'ஸ்டார் சர்ச்’ ஷோவில் பங்கேற்றது நிவீக்ஷீறீs ஜிஹ்னீமீ. முழு நம்பிக்கையுடன்தான் ஆடிப் பாடினார்கள். இறுதியில் ஒரு நட்சத்திர வித்தியாசத்தில் தோற்றுப்போனார்கள். டிரெஸ்ஸிங் ரூமில் கண்ணீர் பெருக்கெடுத்தது பியான்ஸேவுக்கு. 'இனி எல்லாம் அவ்வளவுதான்’ என தோழிகள் அவநம்பிக்கையில் மிதக்க, பியான்ஸே நிகழ்ச்சியின் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்தாள். பாடல் தேர்வில் இருந்து, நடன அசைவுகள் வரை பல தவறுகள் அவளுக்குப் புலப்பட்டன. 'தவறுகள் இல்லாமல், 100 சதவிகிதம் உழைப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தினால் வெற்றி வசப்படும்’ எனப் புரிந்துகொண்டாள்.

'வாய்ப்புக்காக’ பல்வேறு ஆடியோ நிறுவனங்கள் ஏறி இறங்கினார் மேத்யூ. முன்னணி நிறுவனமான 'கொலம்பியா ரெக்கார்ட்ஸி’ல் ஆடிஷனுக்கு வரச் சொன்னார்கள். அதற்கு முந்தைய நாள் பியான்ஸே நீச்சல் குளத்தில் போட்ட கும்மாளத்தில், ஆடிஷனில் 'கரகரக் காற்று’தான் வந்தது. மேத்யூ நொந்துகொள்ள, பியான்ஸே வாய்ப்பின் அருமையை, அதை வீணாக்கினால் நேரும் இழப்பை, வலியை உணர்ந்துகொண்டாள். இந்தச் சமயத்தில் மேத்யூ மிக முக்கியமான முடிவெடுத்தார். வேலையை விட்டார். முழு நேரமும் தன் மகளின் குழுவின் மேனேஜராக மாறி, வாய்ப்பு தேடினார். குடும்பத்தின் வருமானம் சரிய, டீனாவுக்கும் அவருக்கும் இடையே சண்டைகள். சொந்த வீட்டை விற்று, சிறிய வாடகை வீட்டில் குடியேறவேண்டிய அவலம். டீனா, அவரைப் பிரிந்தார். பியான்ஸே அடிக்கடி சர்சுக்குச் சென்று கதறி அழுதாள். எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாத மேத்யூ, தன் மகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்காக 'ஆர்ட்டிஸ்ட் மேனேஜ்மென்ட்’ கோர்ஸ் படித்தார். பியான்ஸே குழுவின் 'தலைவிதி’யை மாற்ற, புதிய பெயரை வைத்தார்... 'ஞிமீstவீஸீஹ்'s சிலீவீறீபீ’. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மேத்யூ, மீண்டும் கொலம்பியா ரெக்கார்ட்ஸிடம் கெஞ்சிக் கூத்தாடி மற்றோர் ஆடிஷன் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார். இந்த முறை பியான்ஸே குழுவினர் சொல்லி அடித்தார்கள். பியான்ஸே, ஹைஸ்கூல் படிப்புக்கு குட்பை சொன்னாள்.

அவர்கள் ஏற்கெனவே தயார்செய்து வைத்திருந்த ‘Killing Time...’  என்ற பாடலை கொலம்பியா, வில் ஸ்மித்தின் 'மென் இன் பிளாக்’ படத்தில் சவுண்டு ட்ராக்காக உபயோகித்தது. டெஸ்டினி’ஸ் சைல்டின் முதல் ஆல்பம் மொறுமொறுவெனத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், நாம் இடைவேளையாக மேற்கத்திய இசையுலகின் சில அருஞ்சொற்பொருட்களைத் தெரிந்துகொண்டு தொடர்வது வசதி.

Billboard  - இசைக்கான அமெரிக்காவின் பாரம்பர்ய வார இதழ். உலக அளவில் அங்கீகாரம் பெற்ற ஆல்பங்களில் இருந்து  Billboard Hot 100, Billboard 200 என்ற பாடல் தரவரிசைப் பட்டியல், வாரம் ஒருமுறை வெளியாகும். அதில் முதல் இடம் பெறுவது லேசுப்பட்டது அல்ல. அதேபோல அமெரிக்காவில் ஒரு ஆல்பம் அல்லது சிங்கிள் பாடல் ஐந்து லட்சம் பிரதிகள் விற்றால் கோல்டு, 10 லட்சம் பிரதிகள் விற்றால் ப்ளாட்டினம், ஒரு கோடி பிரதிகள் விற்றால் டைமண்ட் என ரிக்கார்டிங் கம்பெனி, விருதுகள் வழங்கும். இதுவே மியூசிக் வீடியோ என்றால், எண்ணிக்கை தனிக் கணக்கு. இந்த எண்ணிக்கை, பிரிட்டன் மற்றும் கனடாவில் மாறுபட்டது.

டெஸ்டினி’ஸ் சைல்டின் முதல் பாடல் 'ழிஷீ ழிஷீ ழிஷீ...’ சிங்கிளாக வெளிவந்தது. வரவேற்பும் நோ நோ நோதான். பியான்ஸே குழுவினர் சோர்ந்து உட்கார, ராப் பாடகர் வொய்ஃக்ளப் ஜீன் உள்ளே வந்தார். டெம்போவை ஏற்றி அவர் ரீமிக்ஸ் செய்ய, No No No - 2  வெளியானது. 'யெஸ்... யெஸ்... யெஸ்...’ என அமெரிக்கர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். பில்போர்டில் அமெரிக்காவில் நம்பர்-3. ப்ளாட்டின விற்பனை. பியான்ஸேவின் 16-வது வயதில் டெஸ்டினி’ஸ் சைல்டு ஆல்பம் வெளியாகி, அரை மில்லியன் காப்பிகள் விற்று, அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு பாதை அமைத்தது. அந்த மகிழ்ச்சியில் மேத்யூவும் டீனாவும் மீண்டும் இணைந்தனர்.

டெஸ்டினி’ஸ் சைல்டின் இரண்டாவது ஆல்பம் ‘The Writing's On the Wall’. பெண்களுக்கான அதிகாரத்துக்குக் குரல் எழுப்புவதாக பியான்ஸே எழுதிய பாடல்கள், 1999-ம் ஆண்டு வெளியாகி ஆஹா ஓஹோ ஹிட். ‘Say my name’  பாடல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் எனக் குழுவினருக்குப் பெரும்பெயரை வாங்கிக்கொடுத்தது... கூடவே இரண்டு கிராமி விருதுகளையும். (கிராமி குறித்து ஒரு கிராம் தகவல்: அமெரிக்காவில் வழங்கப்படும் இசைக்கான உயரிய விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கர் போல இசை உலகில் கிராமி.) ஆனால், வாழ்வின் முதல் கிராமி விருது பெற்ற சந்தோஷத்தைக் கொண்டாட முடியாத அளவுக்கு உடைந்துபோயிருந்தார் பியான்ஸே. காரணம், டெஸ்டினி’ஸ் சைல்டு உடைந்திருந்தது.

குழுவின் லாடாவியா, லிடோயா இருவரும் போர்க்கொடி பிடித்தனர். 'மேத்யூ எங்களுக்கு மேனேஜராக வேண்டாம். அவர் பியான்ஸேவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். எங்களை ஓரம் கட்டுகிறார். லாபத்தில் முறையான பங்கு தராமல் ஏமாற்றுகிறார்!’ - இப்படிப் பல குற்றச்சாட்டுகள். சமரசங்கள் கைகூடாத வேளையில் நீதிமன்றத்துக்குச் சென்றனர். தீவிர மன அழுத்தத்துக்கு உள்ளான பியான்ஸே, பல நாட்கள் அறையைவிட்டு வெளியே வரவே இல்லை. எங்கு சென்றாலும், தோழிகளின் விலகல் குறித்த கேள்விகளே துரத்தின. பின்னர் ஒருவழியாக நீதிமன்றத்துக்கு வெளியே அவர்களுக்கு 'செட்டில்’ செய்தார் மேத்யூ. குழுவில் பியான்ஸே, கெல்லி உடன் புதிதாக மிச்சேல் இணைந்தார்.

டெஸ்டினி’ஸ் சைல்டின் மூன்றாவது ஆல்பத்துக்காக பியான்ஸே குழுவினர் உருவாக்கிய ‘Independent Women’ , 'சார்லீஸ்        ஏஞ்சல்ஸ்’ படத்தில் சவுண்டு ட்ராக் ஆனது. மூவரையும் பாப் உலக ஏஞ்சல்கள் ஆக்கியது. பில்போர்டு ஹாட் 100-ல் தொடர்ந்து 11 வாரங்கள் நம்பர் ஒன்னாக இடம்பிடித்து, புதிய கின்னஸ் சாதனை படைத்தது. யார் விலகினாலும் டெஸ்டினி’ஸ் சைல்டு நீடித்திருக்கும் எனச் சொல்வதாக பியான்ஸே மூன்றாவது ஆல்பத்துக்கு வைத்த பெயர் 'Survivor’ . பியான்ஸேவின் கோபம், பாடல் வரிகளில் வெளிப்பட்டது. வெளியான முதல் வாரமே அமெரிக்காவில் எந்த ஒரு பெண்கள் குழு ஆல்பத்தைவிடவும் அமோக விற்பனை எனப் புதிய வரலாறு. மேலும் பல புதிய சாதனைகள்.Bootyliciousபாடலில் பியான்ஸேவின் 'பின்னசைவு’ நடனம், அந்தச் சொல் ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பெறும் அளவு பிரபலமானது.  

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

அதுவரையிலான பாய் ஃப்ரெண்ட் லிண்டான் இன்னொரு பெண்ணுடன் காமம் வளர்ப்பதை அறிந்த (வெர்ஜின்) பியான்ஸே வெறுத்து விலகினார். அமெரிக்க ராப் பாடகர், ஜே ஸீயின் அறிமுகம் கிடைத்தது. வன்முறையின் பின்னணியில் வளர்ந்தவர், சில காதல் தோல்விகள் கண்டவர்,  12 வயது மூத்தவர் என்பதைத் தாண்டியும் அவரை பியான்ஸேவுக்குப் பிடித்தது. 'ராப்’பில் விழுந்து, 'பாப்’பில் நுழைந்து, 'ஹிப்ஹாப்’பில் கலந்த உறவாக நேசம் வளர்ந்தது. பியான்ஸே ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். டெஸ்டினி’ஸ் சைல்டு குழுவுடன் உலகம் சுற்றி பல்வேறு மேடைகளை, பலதேச ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமிக்கவும் செய்தார். அப்படியே தனது முதல் தனி ஆல்பத்துக்கான வேலைகளையும் தொடங்கியிருந்தார். 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான பியான்ஸேவின் முதல் தனி ஆல்பம் Dangerously in Love,  ஆரம்ப வாரத்திலேயே அமெரிக்காவில் 3,17,000 காப்பிகள் விற்றுத் தீர்ந்தன. இன்னும் பல சாதனைகள். 'கிரேஸி இன் லவ்’ என ஜே ஸீ ராப் படிக்க, பியான்ஸே ஆடிய பாடல், உலகையே காதலில் கிறுகிறுக்கவைத்தது. ஆல்பத்துக்கு ஐந்து கிராமி விருதுகள் கிடைக்க, பியான்ஸே 'ஒன்பதாம் மேகத்தில்’ மிதந்தார்.

பியான்ஸே, ஜே ஸீயுடன் தீவிர காதலில் இருக்க, 'டெஸ்டினி’ஸ் சைல்டு’  இனி அவ்வளவுதான் என இசை உலகம் முடிவுகட்டிய வேளையில், மீண்டும் கெல்லி, மிச்சேலுடன் இணைந்தார் பியான்ஸே. Destiny's Fulfilled - நான்காவது மற்றும் இறுதி ஆல்பம். 2004-ம் ஆண்டு நவம்பரில் வெளியானது. பாடல்கள் பில்போர்டில் முதல் வரிசையில் பிரகாசித்தன. அந்த ஆல்பத்துடன் பிரியப்போகும் தோழிகளுக்காக ரசிகர்கள் கண்ணீர்விட்டனர்.

உலக பில்லியனர்களின் பிரைவேட் பார்ட்டிகளில் பாடுவதன் மூலம் கொட்டும் பணம், பிரிட்னி ஸ்பியர்ஸுக்குப் பதிலாக பெப்ஸியுடன் செய்துகொண்ட விளம்பர ஒப்பந்தம், ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட் அட்டையில் இடம்பெற்ற முதல் பாப் பாடகி எனப் புகழ் குவிய ஆரம்பித்தது பியான்ஸேவுக்கு. ஆனால் இவரோ, எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு தனது இரண்டாவது தனி ஆல்பம் வேலைகளில் கவனம் குவித்தார். பாப் ஸ்டார் ஆவது பெரிது அல்ல. இசையுலகின் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும். அதில் நீடித்து நிற்க வேண்டும். லட்சியம் தெளிவாக இருந்தது. சோறு, தண்ணீர், நேரம், காதல், கேளிக்கை மறந்து உழைத்தார். 2006-ம் ஆண்டு வெளியான ஙி'பீணீஹ் ஆல்பத்தின் சாதனை வெற்றி, பியான்ஸேவை உச்ச நட்சத்திரம் ஆக்கியது. 2007-ம் ஆண்டு ஒபாமாவுக்காக  பியான்ஸே - ஜே ஸீ இருவரும் ஜோடியாகப் பிரசாரம் செய்து, தேர்தல் நிதி திரட்டிக் கொடுத்து, ஒபாமாவின் வெற்றியைக் கொண்டாட... ஜோடி மேலும் ஹிட் ஆனது.

ஆறு வருடக் காதலுக்குப் பிறகு, 2008-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். உலகின் அதிகம் சம்பாதிக்கும் ஜோடி என ஃபோர்ப்ஸ் அவர்களை உச்சத்தில் வைத்தது. அடுத்த ஆண்டில் $122 மில்லியன் சம்பாதித்து, சக்தி வாய்ந்த ஜோடியாக கின்னஸிலும் இடம்பெற்றனர்.

பியான்ஸே, தன்னை மேடையில் வாழவைத்துக்கொண்டிருக்கும் ஸாஷாவுக்காக, தனது மூன்றாவது ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டார். I Am... Sasha Fierce. பில்போர்டில் ஹேட்ரிக் 'நம்பர் ஒன்’ ஹிட். மற்ற நாடுகளிலும் 'சிங்கிள் லேடீஸ்’ என்ற பாடல் வைரல் ஹிட். MTV, MOBO, BET என ஏகப்பட்ட விருதுகளுடன், ஆறு கிராமி விருதுகள். ஒரு பெண், ஆறு கிராமி விருதுகள் வாங்கியது புத்தம்புது சாதனை. (அதே விழாவில் ஜே ஸீ மூன்று கிராமி விருதுகள் வாங்கினார்.) I Am... World Tour என பியான்ஸே தன் ஆல்பத்தைப் பிரபலப்படுத்த உலகம் சுற்றக் கிளம்பினார். மீடியாவோ பியான்ஸேவின் வயிற்றைச் சுற்றிச் சுற்றியே வந்தது. வயிறு பெரிதாகத் தெரிகிறது, கர்ப்பம், பழைய மாதிரி ஆடுவதைத் தவிர்க்கிறார் என மசக்கைச் செய்திகள், பப்பாரஸி புகைப்படங்கள் வாடிக்கையாயின. 'நான் என் இயல்பில் வாழ விரும்புகிறேன். பப்பாரஸிகள் அவர்கள் வேலையைச் செய்கிறார்கள். தடுக்க முடியாது. அவர்களைச் சமாளிக்க, அவர்களோடு வாழப் பழகிவிட்டேன்’ - எம் டி.வி பேட்டியில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்க என்ன விலை கொடுக்க வேண்டும் எனத் தெளிவுடன் பேசினார் பியான்ஸே.

2011-ம் ஆண்டு எம் டி.வி வீடியோ மியூசிக் அவார்டு நிகழ்ச்சியில்,Love on Top பாடலைப் பாடி முடித்துவிட்டு, பியான்ஸே தன் வயிற்றைத் தடவியபடி சிரித்தார். அவரது கர்ப்பம் குறித்த ட்வீட்களால் ட்விட்டர் திணறியது. நொடிக்கு 8,868 ட்வீட்கள் எனப் புது சாதனை. அந்த நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதாகக் கூடுதல் சாதனை. மந்தமாக இருந்த 4-ன் விற்பனை, ப்ளாட்டினத்தைத் தாண்டி வளர்ந்தது.

2012-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பெண் குழந்தையைப் பிரசவித்தார் பியான்ஸே. (பெயர் Blue Ivy). ஜே ஸீ ஜனவரி 9-ம் தேதி Glory என தன் மகளுக்காக ஒரு புதுப்பாடலை வெளியிட்டார். பாடலின் முடிவில் குழந்தையின் அழுகுரல் ஒலிக்க, அல்லோலகல்லோல ஹிட். பில்போர்டில் இடம்பிடித்த பச்சிளம் குரலாக 'ப்ளூ ஐவி’ சாதனை படைத்தாள்.

பிரசவத்துக்குப் பின் ஒரே மாதத்தில் உடல் எடையை எல்லாம் குறைத்துக்கொண்டு பியான்ஸே, அடுத்தடுத்த வேலைகளில் களம் இறங்கினார். மற்றுமோர் உலக டூர். ஐந்தாவது ஆல்பம் 'Beyonce’. மீண்டும் ஒபாமாவுக்குப் பிரசாரம். இத்தனைக்கு மத்தியிலும் தாய்ப்பால் கொடுக்கத் தவறவில்லை. 'உங்கள் குழந்தைக்கு நீங்களே டயப்பர் மாற்றுகிறீர்களா?’ என அசட்டுக் கேள்விகளுக்கு எல்லாம் கோபப்படுவது இல்லை. பியான்ஸே மீண்டும் கர்ப்பம், ஜே ஸீயைப் பிரியப்போகிறார், விவாகரத்து பெறப்போகிறார்கள் என எப்போதும் சர்ச்சை செய்திகளுக்குப் பஞ்சம் இல்லை. எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு இசையே வாழ்க்கையாக, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கிறார். பியான்ஸே தன் வாழ்க்கையில் இருந்து சொல்லும் பாடம் இதுவே...

'நீ முதலில் உன்னை உயர்வாக எண்ண வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் உன்னை மதிப்பார்கள். உன் குறைபாடுகளை மறந்துவிடு. தன்னம்பிக்கையே மூலதனம். எப்போதும் தன்னம்பிக்கைதான் பெண்ணின் நிஜ அழகு!’

டப்ஸ்மாஷ் பியான்ஸே!

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

இதுவரையில் மேடை நிகழ்ச்சிகளில் பியான்ஸே போல வேறு எவரும் தொடர்ந்து கச்சித பெர்ஃபாமென்ஸ் கொடுத்தது இல்லை. அதற்காகக் கடுமையாகப் பயிற்சி செய்கிறார். அன்றைய மேடை நிகழ்ச்சியின் டி.வி.டி-யை இரவிலேயே பார்த்து, குறைகளைக் கண்டறிந்து, மறுநாளே குழுவினருக்குக் 'குறிப்புகளை’ வழங்கி, அடுத்த நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றிவிடுவார். சரியாக ரிகர்ஸல் செய்யாமல் மேடையேற மாட்டார். 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒபாமா கலந்துகொண்ட விழா ஒன்றில், பியான்ஸே பாடல் ஒன்றைப் பாடினார். அதில் சில தடுமாற்றங்கள். ஆடியோ பிரச்னை என்றார்கள். இல்லை, ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு பியான்ஸே வெறுமனே வாய் அசைத்தார் எனச் சர்ச்சை கிளம்பியது. பின்னர், பியான்ஸே அதை ஒப்புக்கொண்டார். 'ரிகர்ஸல் செய்ய நேரம் இல்லை’ என மன்னிப்பும் கேட்டார்!

நம்பர் 1 ரோல்மாடல்!

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

'ரிங் தி அலாரம்’ ஆல்பம் கவருக்காக, கயிற்றால் கட்டப்பட்ட இரண்டு முதலைகளுடன் போஸ் கொடுத்தது, அவ்வப்போது ஃபர் உடைகளை அணிந்து மாட்டிக்கொள்வது என, BETA விலங்குகள் நல அமைப்பின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார் பியான்ஸே.

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14
நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

  House of Deréon  - இது பியான்ஸே தன் தாய் டீனாவுக்காக வைத்துக்கொடுத்திருக்கும் ஆடை தயாரிப்பு நிறுவனம். பியான்ஸேவுக்கான ஆடைகளைப் பெரும்பாலும் வடிவமைப்பது டீனாதான். பியான்ஸேவின் தங்கை சோலென்ஜும் பாப் பாடகி, நடிகை. ஆனால், பியான்ஸே அளவுக்கு அவரால் ஜொலிக்க முடியவில்லை.

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

 ஃபோர்ப்ஸ் பட்டியல்படி 2014-ம் ஆண்டின் நம்பர் ஒன் பிரபலம் பியான்ஸே. உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும் தொடர்ந்து சில ஆண்டுகளாக இடம்பெற்றுவருகிறார். இதுவரை பெற்ற கிராமி விருதுகளின் எண்ணிக்கை 20. மற்ற இசை விருதுகள், சர்வதேச விருதுகளின் பட்டியல் மிக நீளம்.

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

 கேத்ரீனா புயல் நிவாரணம், ஹைதி நிலநடுக்க நிவாரணம், போதைக்கு அடிமையானவர்களை மீட்க நிதி உதவி, வேறு பல அவசியமான காரியங்களுக்காக நிதி திரட்டுவது... என பியான்ஸேவின் சமூக அக்கறை பக்கம் தனி.

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

 பியான்ஸே இதுவரை 10 ஹாலிவுட் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஏனோதானோவென நடித்துவிட்டுச் செல்லாமல், அந்தந்தக் கதாபாத்திரங்களுக்காக ஹோம்வொர்க் செய்து ஈடுபாட்டுடன் நடித்துக்கொடுக்கிறார்.

நம்பர் 1 பியான்ஸே நோல்ஸ் - 14

 'என் இரண்டு மகள்களுக்கும் ரோல்மாடல் பியான்ஸே!’ எனச் சொல்லியிருப்பவர்... அமெரிக்க அதிபர் ஒபாமா!