மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 11 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா

வடி பூந்தமல்லி நெடுஞ்சாலை. கீற்றுக்கொட்டகையில் செயல்படும் சிறிய ஹோட்டல் அது. கேரளாவில் இருந்து பிழைப்பு தேடி, ஆவடிக்கு வந்த சாகுல் அமீது என்கிற நாசர்தான் அந்த ஹோட்டலை நடத்திக் கொண்டிருந்தார். அரைக்கால் டவுசர் போட்ட சிறுவன் ஒருவன், ஹோட்டலுக்குத் தேவையான தண்ணீரை, ப்ளாஸ்டிக் குடங்களில் சைக்கிளில் கட்டிக் கொண்டுவருவான். அந்தச் சிறுவன், சாகுல் அமீதின் மகன். அன்று தந்தைக்கு உதவியாகக் குடங்களை சைக்கிளில் கட்டி தண்ணீரைக் கொண்டுவந்த அந்தச் சிறுவன்தான், பிற்காலத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆன எஸ்.அப்துல் ரஹீம். அரசியலில் ஒருமுகச் சிந்தனையுடன் செயல்பட்டது, தலைமைக்கு விசுவாசமாக இருப்பது என அப்துல் ரஹீமுக்கு அமைச்சர் பதவி கிடைக்க, நியாயமான காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால், அந்தப் பதவிக்கு அவர் என்ன நியாயம் செய்தார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி! 

அப்துல் ரஹீம் குடும்பத்துக்கு, கேரளாதான் பூர்வீகம். ஆனால் தந்தை சாகுல் அமீது, 50 ஆண்டுகளுக்கு முன்பே ஆவடியில் குடியேறிவிட்டார். கேரளா பாசம் காரணமாக சாகுலுக்கு எம்.ஜி.ஆர் மீது ஈர்ப்பு. அது அப்துல் ரஹீமுக்கும் ஒட்டிக்கொண்டது. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க-வைத் தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பிறந்தவர் அப்துல் ரஹீம். அதனால் கட்சி தோன்றியபோது நடந்த பரபர நிகழ்வுகள் எதுவும் அவருக்குத் தெரியாது. எம்.ஜி.ஆர் படங்கள் மூலமே அவர் மேல் மரியாதையும் பாசமும் கொண்டார். இவையே அவரை  அ.தி.மு.க உறுப்பினராக்கின; பின்னாட்களில் சிவப்பு விளக்கு காரில் செல்லும் அளவுக்கு உயர்த்தின.

மந்திரி தந்திரி - 11 !

தனியார் பள்ளியில் படிக்க வசதி இல்லாமல், ஆவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார் அப்துல் ரஹீம். எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட் பற்றிய கவலை இல்லாமல், ஹோட்டல் வேலைகளில் மும்முரமாக இருந்தார். ரிசல்ட் வந்த பேப்பரை வாங்கிப் பார்த்துவிட்டு, அதில் தன் நம்பர் இல்லை எனத் தெரிந்ததும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. அதோடு படிப்புக்கு 'டாட்டா’ சொல்லிவிட்டு அப்பாவின் ஹோட்டல் வேலைகளில் மூழ்கினார். அதுவும் கொஞ்சம் காலம்தான். வேலை அலுத்துவிட்டது. ஏதேனும் கம்பெனியில் வேலைக்குச் சேர நினைத்தால், அது அவ்வளவு சுலபம் அல்ல என உறைத்தது. ஒப்பந்த வேலையில் சேரக்கூட சிபாரிசு இருந்தால்தான் முடியும் என்பதைப் புரிந்துகொண்டார். லோக்கல் அரசியல் புள்ளியான நகரச் செயலாளர் முல்லை தயாளனிடம் சிபாரிசு கடிதம் கேட்டு நின்றார். அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் மரியாதை, செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றை அங்கேதான் பார்த்தார் அப்துல். முல்லை தயாளனைச் சுற்றி நடந்த நிகழ்வுகளும் சூழலும் அப்துல் ரஹீமுக்கு 'அரசியல் போதை’யை உண்டாக்கின.

ஆவடி அ.தி.மு.க-வில் பிரபலமானவர் 'முயல்’ மோகன். அவரோடு நெருக்கத்தை உண்டாக்கிக்கொண்டார் அப்துல் ரஹீம். ஆனால், ஒரு விவகாரம் காரணமாக 'முயல்’ மோகன் தற்கொலை செய்துகொள்ள, அந்த வெற்றிடத்தில் தனக்கான செல்வாக்கை விதைத்துக்கொண்டார் அப்துல் ரஹீம்.

பலருக்கு லோக்கல் புள்ளிகள் மூலம்தான் அரசியலில் லிஃப்ட் கிடைத்திருக்கும். ஆனால், அப்துல் ரஹீமோ எல்லை தாண்டி வேறு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் நட்பு பாராட்டினார். திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளராக ஜெயக்குமார் இருந்தபோது ஏற்பட்ட நெருக்கம் அது. அதன்பின் வளர்மதி பொறுப்பாளர் ஆனார். நாளடைவில் ஜெயக்குமாரும் வளர்மதியும் அப்துலுக்கு அரசியல் ஆசான்கள் ஆனார்கள். அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கிய அப்துல் ரஹீம், 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாகக் களம் இறங்கினார். ஜெயக்குமார் தயவால் அந்த ஸீட் கிடைக்க, ஆவடி நகராட்சியில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார் அப்துல்.

ஐந்து ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக 2001-ம் ஆண்டு மீண்டும் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். ஆவடி நகராட்சியின் துணைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தபோது எதிர்பாராதவிதமாக அப்துல் ரஹீமுக்கு ஜாக்பாட் அடித்தது.

48 வார்டுகளைக் கொண்ட ஆவடி நகராட்சியில் அ.தி.மு.க-வுக்கு மொத்தம் 13 கவுன்சிலர்களும் தி.மு.க-வுக்கு 12 கவுன்சிலர்களும் இருந்தனர். தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க-வுக்குத் துணைத் தலைவர் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், லோக்கல் தி.மு.க புள்ளி ஒருவர் இதை விரும்பவில்லை. அந்தப் புள்ளியும் அப்துல் ரஹீமும் தோஸ்து. தி.மு.க-வினர் மறைமுக ஆதரவோடு அ.தி.மு.க கவுன்சிலரான அப்துல் ரஹீம் துணைத் தலைவர் ஆனார். தி.மு.க-வோடு மறைமுகக் கூட்டணி போட்டு பதவியைக் கைப்பற்றிய சாமர்த்தியசாலியாக உருவெடுத்தார் அப்துல் ரஹீம். இதற்காக அப்போது உதவிய தி.மு.க புள்ளியோடு இப்போதும் திரைமறைவு நட்பு தொடர்கிறது அவருக்கு. அவர்கள் சேர்ந்து இருக்கும் படங்கள் கார்டன் வரை ரவுண்டு அடிக்கின்றன.

கவுன்சிலர், நகராட்சித் துணைத் தலைவர் என உயர ஆரம்பித்தவருக்கு, ஆவடி நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர், நகரச் செயலாளர் பதவிகள் அடுத்தடுத்து தேடிவந்தன. உள்ளாட்சியிலும் உட்கட்சியிலும் அரசியல் கற்க ஆரம்பித்தார். பெரிய அளவில் பெர்ஃபாமென்ஸ் பண்ணாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சிக்குள் வளர ஆரம்பித்தார். 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது முறையாக கவுன்சிலராக வெற்றி பெற்ற சூட்டோடு, இரண்டாவது முறை துணைத் தலைவர் போஸ்ட்டிங்கும் கிடைத்தது. இப்போதும் முன்புபோலவே அரசியல் பகடை ஆடப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விக்டரி மோகன் நகராட்சித் தலைவர் ஆகிவிட, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி. தி.மு.க கூட்டணி மெஜாரிட்டியாக உள்ள ஆவடி நகராட்சியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மீண்டும் துணைத் தலைவர் ஆனார். இப்போதும் மறைமுகக் கூட்டணிதான். ஆனால், உட்கட்சிக் குழப்பம் காரணமாக அப்துல் ரஹீமுக்குத் திடீர் சறுக்கல். நகரச் செயலாளர் பதவி பறிபோனது. கவுன்சிலர், துணைத் தலைவர்... அடுத்து என்ன? சட்டமன்ற உறுப்பினர்தானே! அதற்கு குறிவைத்தார் அப்துல் ரஹீம். காலமும் அவருக்குக் கூடி வந்தது.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரையில், ஆவடி என்ற ஒரு தொகுதியே இல்லை. ஆனால், மறுசீரமைப்பில் பல தொகுதிகள் காணாமல்போய், புதிய தொகுதிகள் முளைத்தன. அப்படித்தான் பூந்தமல்லியில் இருந்து பிரிக்கப்பட்டு, ஆவடி தொகுதி உதயமானது. அதைக் குறிவைத்து காய்கள் நகர்த்த ஆரம்பித்தார் அப்துல் ரஹீம். கவுன்சிலர் ஸீட்டுக்கு உதவிய ஜெயக்குமார், எம்.எல்.ஏ ஸீட் கிடைக்க உதவினார். அதோடு வளர்மதியின் தயவும் கிடைக்க, ஆவடி அ.தி.மு.க வேட்பாளர் ஆனார் அப்துல் ரஹீம். ஸீட் கிடைத்துவிட்டது... ஜெயிக்க வேண்டுமே! உட்கட்சிக் குழப்பங்களைச் சரிசெய்யக் கிளம்பினார். எதிரிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து ஆதரவு கேட்டார். எதிர் முகாமில் மறைமுக ஆதரவு கொடுப்பவர்களுடன் கை குலுக்கினார். முன்னர் அப்துல் ரஹீம், நகராட்சித் துணைத் தலைவர் ஆக மறைமுக ஆதரவு கொடுத்த தி.மு.க புள்ளியும் ஆவடியைக் குறிவைத்திருந்தார். ஆனால், அந்தத் தொகுதி கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்குப் போய்விட, வழக்கம்போல தேர்தலில் அவர் 'சைலன்ட் மோடு’க்குச் சென்றுவிட்டார். உள்ளடி வேலைகள் நடக்க, தி.மு.க-வினரின் ஓட்டுக்களையும் சேர்த்து வாங்கி, எம்.எல்.ஏ ஆனார் அப்துல் ரஹீம்.

எம்.எல்.ஏ வரை உயர்ந்ததே அப்துல் ரஹீமுக்கு ஆனந்த அதிர்ச்சிதான். அதோடு திருப்தி மனநிலையில்தான் இருந்தார். அமைச்சர் பதவி பற்றி அவர் யோசிக்கவே இல்லை. ஆனால், அவர் எம்.எல்.ஏ-வாக காலம் எப்படி உதவியதோ, அதேபோல அமைச்சர் பதவியைப் பிடிக்கவும் காலம் உதவியது.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மூவர்தான் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அமைச்சரவையில் இஸ்லாமியச் சமூகப் பிரதிநிதித்துவத்துக்காக திருச்சியில் கே.என்.நேருவை ஜெயித்த மரியம் பிச்சை அமைச்சர் ஆக்கப்பட்டார். அமைச்சராகப் பதவியேற்று ஒரு வாரத்துக்குள் நடந்த சாலை விபத்தில் மரியம் பிச்சை இறக்க, முஹம்மத்ஜான் அமைச்சர் ஆனார். எதிர்பாராமல் கிடைத்த மந்திரி அந்தஸ்தை முஹம்மத்ஜானால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. வஃக்பு வாரிய சிக்கல், லோக்கல் பஞ்சாயத்து... என அவர் மீது புகார் மழை பொழிய, பதவியில் இருந்து கல்தா கொடுத்தார்கள். வேறு வழியே இல்லாமல் எம்.எல்.ஏ-வாக எஞ்சியிருக்கும் ஒரே முஸ்லிமான அப்துல் ரஹீமுக்கு, மன்னார்குடி சிபாரிசு எதுவும் இல்லாமலேயே கேபினெட்டில் இடம் கிடைத்தது. உற்சாகத்தில் திளைத்தாலும், தானாகக் கிடைத்த வாய்ப்பை எந்தச் சந்தர்ப்பத்திலும் நழுவவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் அப்துல் ரஹீம்.

துறையில் சாதித்தது என்ன?

திட்டமிட்டுக் காய் நகர்த்தி, அமைச்சர் பதவியைக் கைப்பற்றாததாலோ என்னவோ, துறை நடவடிக்கைகளுக்கு என அப்துல் எந்தத் திட்டமும் தீட்டுவதே இல்லை!

மந்திரி தந்திரி - 11 !

பல்லாயிரக்கணக்கான இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடஒதுக்கீடு என்கிற முக்கியப் பிரச்னை,  பிற்படுத்தப்பட்டோர் துறையின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது. தற்போது தமிழ்நாட்டில்               69 சதவிகிதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் என இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், பெரும்பான்மை மக்களின் தேவைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவருகிறது. ஆனால், அதற்கு மாறாக இடஒதுக்கீட்டை

50 சதவிகிதம் எனக் கட்டுப்படுத்தி, தீர்ப்பு அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனாலும், 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டை உறுதிசெய்து நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இடையில் பல திருப்பங்களுக்குப் பிறகு, 'தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை ஏன் ரத்துசெய்யக் கூடாது?’ என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம். 'தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நிறைவேற்றினால்தான் இடஒதுக்கீட்டைத் தொடர  முடியும்’ என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சிக்கலான இந்த இடஒதுக்கீடு விவகாரம் பற்றிய அடிப்படையை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் புரிந்துகொண்டதாகவும் அதன் தீவிரத்தை உணர்ந்துகொண்டதாகவும் தெரியவில்லை. இந்தப் பிரச்னை குறித்து முதலமைச்சர் மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியுமா? பிறகு, துறை அமைச்சரின் பொறுப்புதான் என்ன? அரசின் 'கண்டும் காணாத’ தவறான அணுகுமுறையால், இடஒதுக்கீட்டுக்கு எப்போது வேண்டுமானலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு அமலில் இருக்கிறது. 'அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், இந்த இடஒதுக்கீடு உயர்த்தித் தரப்படும்’ என திருச்சியில் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்ததோடு, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் சொன்னார் ஜெயலலிதா. ஆனால், அது அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகள் பெரும்பாலானவை, சொல்லிக்கொள்ளும் தரத்தில் செயல்படுவது இல்லை. தரமான உணவு, சுத்தமான அறைகள், சுகாதாரமான கழிப்பிடம்... என அடிப்படைப் பராமரிப்புகூட இல்லாமல் மோசமான நிலையில் செயல்படுகின்றன விடுதிகள். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை பலர் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். இதை மீட்கும் நடவடிக்கை ஆமை வேகத்தில்தான் நடந்துவருகிறது.

பிறகு அமைச்சர் என்னதான் செய்கிறார்? 'பேருக்கு’ அமைச்சராக ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார் எனச் சொல்லத் தோன்றுகிறது. முக்கியஸ்தர்கள் மறைந்தால், அரசின் சார்பில் அஞ்சலி செலுத்துவது, ஹஜ் பயணிகளை விமான நிலையத்தில் வழியனுப்புவது, அ.தி.மு.க சார்பில் நடத்தப்படும் இஃப்தார் விருந்தில் பங்கேற்பது, எழுதிக் கொடுத்ததை சட்டசபையில் வாசிப்பது என 'அமைச்சர்’ பதவிக்கு பங்கம் வராத வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார் அப்துல் ரஹீம்.

ஒரு நபர் 'அமைச்சர்’ என்ற அந்தஸ்தை அனுபவிப்பதற்காக மட்டுமே ஒரு துறை 'செயல்படும்’ விநோதம் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்!

க்ரைம்... க்ரைம்..!

'அப்துல் ரஹீமின் குடும்பத்தினர் சிலர் சாராயக் கடைகளையும், தி.நகரில் க்ளப் ஒன்றையும் நடத்திவந்தனர். அவர்களில் அப்துல் ரஹீமின் சகோதரர்களில் ஒருவர் அதிகாரம், செல்வாக்கு எனக் கோலோச்சினார். சென்னையைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவர் கேரளாவில் பதுங்கியிருந்தபோது, அவருக்குத் தேவையான உதவிகளையும் அமைச்சர் முகாமில் ரத்தச் சொந்தம்தான் செய்ததாகத் தகவல். அப்துல் ரஹீமின் தந்தை சாகுல் அமீது தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை நடத்தியதாகப் புகார் எழ, அவரை போலீஸ் 'அழைத்து’ப் போனதை ஆவடியே வேடிக்கை பார்த்தது’ என்கிறார்கள் உள்ளூர் ர.ரக்களும் காக்கிகளும்!  

மந்திரி தந்திரி - 11 !

'ரியல் புயல்’ வளர்ச்சி!

'ஹோட்டல் வேலைக்குப் பிறகு சில கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தார் அப்துல். வில்லங்க வியாபாரத் தொடர்புகள் உண்டாகும் சின்னச்சின்னக் கரைச்சல்களில் சிக்கி போலீஸ் ஸ்டேஷன் வரை போனார். சாராயக் கடைகள் முளைத்தபோது அதில் அவருடையக் குடும்பம் வருமானத்தைப் பார்த்தது. அரசியலில் தீவிரமாகக் குதித்த பிறகு, ரியல் எஸ்டேட் பிசினஸுக்குத் தாவினார். அமைச்சரான பிறகு ஆக்கிரமிப்புப் புகார்களும் எழுந்தன. அவர் பெயரைச் சொல்லி, மருத்துவர் ஒருவரிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தைப் பிடுங்கிய விவகாரம் கார்டன் வரை போயிருக்கிறது!

மார்க்கெட் மல்லுக்கட்டு!

ஆவடி நகராட்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஆகியவற்றைக்கொண்டு மார்க்கெட் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. வியாபாரிகளிடம் கடைகளை ஒதுக்க ஆளும் கட்சியினர் கணிசமாகக் காசு பார்த்துவிட்டார்கள். இன்னொரு பக்கம் நகராட்சியைச் சேர்ந்தவர்களும் தொகையை வசூலித்துவிட்டனர். இதனால் கடைகளை ஒதுக்குவதில் தகராறு. ஆனாலும் மார்க்கெட்டைத் திறந்துவைத்தார் அமைச்சர். விவகாரம் நீதிமன்றப் படியேற, திறக்கப்பட்ட மார்க்கெட்டுக்குப் பூட்டு போடப்பட்டது. பணம் கொடுத்த வியாபாரிகள் ஏமாந்து நிற்கிறார்கள்! கட்டப்பட்ட கடைகளும் காற்றாடிக்கொண்டு இருக்கின்றன.

மந்திரி தந்திரி - 11 !

அமைச்சரின் நிழல்கள்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதீஷ், சின்ன வயது முதலே அப்துல் ரஹீமுக்கு நண்பர். அந்த பால்ய நட்பு இப்போதும் தொடர்கிறது. சதீஷ§டன் சேர்ந்துதான் ரியல் எஸ்டேட் தொழிலை விரிவுபடுத்தினார் அப்துல் ரஹீம். வேறு ஒரு கட்சியில் இருந்தாலும் சதீஷ்தான் அமைச்சருக்கு வலது கரம். சதீஷ§க்கு அடுத்தபடியாக கவுன்சிலர் குச்சிபாபு அமைச்சரின் அரசியல் டீலிங்க்குகளைக் கவனித்துக்கொள்கிறார். குச்சிபாபு மீது ஏகப்பட்ட எகிடுதகிடுப் புகார்கள் ஆவடியில் வாசிக்கப்படுகின்றன!

அரிவாள் மிரட்டல்... அரண்ட அமைச்சர்!

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை அமைச்சர் அப்துல் ரஹீமே கண் ணாரக் கண்ட சம்பவமும் அரங்கேறியது. பூந்தமல்லி குளக்கரையைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார் அப்துல் ரஹீம். விழா முடிந்து புறப்பட்டபோது, பைக்கில் வந்த இருவர் திடீர் எனக் கூட்டத்துக்குள் புகுந்தனர். அமைச்சரின் உதவியாளர்களுடன் தகராறு ஏற்பட, பைக் ஆசாமி ஒருவன் திடீர் எனப் பின்புறம் இருந்து மூன்று அடி நீள அரிவாளை உருவினான். அப்துல் ரஹீமும் அவருடன் வந்த இன்னோர் அமைச்சர் ரமணாவும் அரண்டு நின்றனர். பட்டப்பகலில் மெயின் ரோட்டில் அரிவாளில் கெத்து காட்டிவிட்டுப் பறந்தார்கள் அந்த அரிவாள் பார்ட்டிகள்!

உளவாளி நண்பன்!

தன்னைப் பற்றிய எந்தப் புகாரும் வெளியில் கசியாமல் பார்த்துக்கொள்வதில் அப்துல் ரஹீம் கில்லாடி. அவரைப் பற்றிய புகார் கார்டனுக்கோ தலைமை அலுவலகத்துக்கோ போனால், அடுத்த நிமிடம் அந்தத் தகவல் அப்துலுக்கு வந்துவிடும். காரணம், உளவுத் துறையைச் சேர்ந்த ஒருவரை தன் கைக்குள் வைத்திருக்கிறாராம் அப்துல். இதனால் கட்சிக்குள் யார் அப்துலுக்கு எதிராக 'காய்’ நகர்த்தினாலும் முன்கூட்டியே சுதாரித்துக்கொள்கிறார்!

காதலுக்கு மரியாதை!

* ஆவடி நேரு பஜாரில் கீரை வியாபாரம் செய்து வந்த ஓர் அம்மாவின் மகள் மகாலட்சுமி. கொடுக்கல் வாங்கல் விவகாரங்களைக் கவனித்துக்கொண்டிருந்த சமயம் அப்துலின் பார்வையில் பட்டார் மகாலட்சுமி. அது காதலாக மாறியது. திருமணத்துக்கு எதிர்ப்பு எழும் என்பதால், நண்பர்கள் உதவியுடன் காதலி மகாலட்சுமியை அழைத்துச் சென்றுவிட்டார். மகாலட்சுமியின் அம்மா போலீஸில் புகார் கொடுக்க, ஆவடி போலீஸார் அப்துலை ஸ்டேஷனில் வைத்து 'ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்’ கொடுத்திருக்கிறார்கள். பின்னர் சமரசம் பேசி ஜமாத்தார் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி அப்துலுக்கும் பானுவுக்கும் நிக்காஹ் செய்துவைத்தார்கள். பானு யார்? 'மகாலட்சுமி’தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறி 'பானு’ என பெயர் மாற்றிக்கொண்டார்.

* திருநெல்வேலியில் அடிதடி, அதிரடிப் பஞ்சாயத்தின் மூலம் வில்லங்கங்களை பைசல் செய்யும் ஒரு க்ரைம் டீமுடன் அமைச்சருக்குத் தொடர்பு இருப்பதாக, கட்சிக்குள்ளேயே தகவல்கள் அலையடிக்கின்றன.