மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 06

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

டாக்டர் ரங்கநாதன், தன் முன் படுக்கவைக்கப்பட்டிருந்த பாடகர் 'கானா’ கபாலியைப் பார்த்தார். ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தார் கபாலி. 

இந்திய சங்கீதத்தின் சாஸ்திரீய அம்சத்தையே சேதப்படுத்தும் இவர்களை போன்றவர்களைக் கடத்தி வந்து, குரல்வளை ஆபரேஷன் செய்துவிடுவதே ரகசியத் திட்டம். ரங்கநாதனின் சீக்ரெட் மிஷனின் முதல் பலியாடு கபாலி.

கபாலிக்குத் தெரியாமல், மறைந்த இசைமேதை இருங்கூர் சுப்ரமண்யரின் வோக்க‌ல் கார்டை கபாலிக்குப் பொருத்தப்போகிறார் டாக்டர் ரங்கநாதன். உதவிக்கு ஒன்று இரண்டு மருத்துவ மாணவர்கள். ஆபரேஷன் வெற்றி. எழுந்து உட்கார்ந்தார் கபாலி.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 06

''இப்போ கானா பாடு பாக்கலாம்'' என்றார் டாக்டர் ரங்கநாதன் நக்கலாக‌. கபாலி எப்போதும்போலவே பக்காவாகப் பாடினார். ரங்கநாதன் டென்ஷன் தாங்க முடியாமல் கத்தினார், ''ஹவ் இட் இஸ் பாசிபிள்? வோக்கல் கார்டை மாத்தின பிறகும், எப்படி அதே மாதிரி கானா பாடுறான்?'

ஒரு மருத்துவ மாணவர் பவ்யமாகக் குனிந்தபடியே டாக்டரின் அருகில் வந்து சொன்னான், 'சார்... அதுக்கு நாம அவரோட ரத்தம், நாடி, நரம்பு எல்லாத்தையும்தான் மாத்தணும்!''

அஞ்ஞானச் சிறுகதைகள் - 06

ரப்பர்

குமரி மாவட்டத்தில் தக்கலை தாண்டிய மேற்குப் பகுதிகளில் வாழும் மக்களின் பேச்சுவழக்கில் மலையாள வாசனை வீசும்; கூடவே ரப்பர் வாசனையும். ரப்பர் மரம், குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்தபோது, கேரளா வர்த்தகர்களால் குமரி மாவட்டத்துக்குள் கொண்டுவரப்பட்ட ஒன்று. பணப்பயிர் ஆசையைக் விவசாயிகளுக்குக் காட்ட பெருமளவு இயற்கை வனங்களையும் விவசாயத்தையும் அழித்து ரப்பர் கொண்டுவரப்பட்டது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால், கடந்த அரை நூற்றாண்டாக குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியை பொருளாதார வளம்கொண்டதாக மாற்றியதில் ரப்பரின் பங்கு 'அழிக்க’ முடியாதது.

தண்ணீர் வளம் இருக்க வேண்டும். ஆனால், அது தேங்கவும் கூடாது என்ற விதிக்கு ஏற்ப சரிவான புவியமைப்பைக்கொண்ட நிலங்களில் பயிர் செய்யப்பட ஆரம்பித்த ரப்பர், என் போன்றோரின் சிறு வயது ஞாபகங்களில் பதிந்துவிட்ட ஒன்று.

ரப்பர் மரத்தின் பட்டையை, பிரத்யேகமான ஒரு வெட்டுக் கத்தியால் அதிகாலையில் சீவிவிடுவார்கள். இதற்கு, 'ரப்பர் வெட்டு’ எனப் பெயர். சீவிய தடத்தின் வழியாக மரத்தில் இருந்து ஊறும் 'பால்’, ஒரு கொட்டாங்குச்சியில் சேகரமாகும். இப்படி நூற்றுக்கணக்கான மரங்களில் இருந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு சேகரமான பாலை ஓர் இரும்பு வாளியில் வழித்து ஊற்றினால், ஏக்கருக்கு ஏற்ற மாதிரி சில பல லிட்டர் பால் கிடைக்கும். அதை ஒரு செவ்வக வடிவமுள்ள பரந்த பாத்திரத்தில் ஊற்றி கூடவே கொஞ்சம் ஆசிடும் விட்டுவைத்தால், ஒரு மணி நேரத்தில் உறைந்து கெட்டியான வஸ்துவாக மாறும். அதை, கரும்பு மெஷின்போல இருக்கும் இயந்திரத்தில் நசுக்கி மேலும் சப்பையாக்கி வெயிலில் காயவைப்பார்கள். அப்படிக் காய்ந்தால், சில கிலோ தேறும். காய்ந்த ரப்பர் ஷீட்டுகளை எடைக்குப் போட்டு, காசு வாங்கிக்கொள்வார்கள். இது, அரை ஏக்கரோ... ஒரு ஏக்கரோ வைத்திருப்பவர்களின் ரப்பர் வியாபாரம்; நூற்றுக்கணக்கான ஏக்கர் வைத்திருக்கும் எஸ்டேட்களின் நடைமுறை வேறு.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 06

மரத்தில் இருந்து பாலை வழித்து எடுத்த பின்பு, மரத்திலும் சிரட்டையிலுமாக ஒட்டிக்கொண்டிருக்கும் காய்ந்த ரப்பரை 'ஒட்டுகறை’ எனச் சொல்வார்கள். நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது அந்த ஒட்டுகறையை எடுத்து சுருட்டிச் சுருட்டி கனமான கிரிக்கெட் பந்துபோல செய்வோம். 'பிரத்யேக’ வாசனை உள்ள இதை, காலால் உதைத்தால், நரம்புகளில் ஒரு மெல்லிய வலி ஓடும்.

ஏன் இவ்வளவு விலாவாரியாகச் சொல்கிறேன் என்றால், இந்த ரப்பரும் ரப்பர் சார்ந்த வாழ்வும் நமது தமிழ் சினிமாவில் எங்கும் பதிவாகவில்லை. 80-களில் வந்த சில தமிழ்ப் படங்களின் பாடல் காட்சிகளில், இந்த ரப்பர் மரத் தோட்டங்கள் பின்னணியாக மட்டுமே வருவதைக் கவனித்திருக்கிறேன். ஜெயமோகனின் முதல் நாவல் 'ரப்பர்’. ரப்பர் மரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்த பின்னணியில் சொல்லப்பட்ட கதை. குமாரசெல்வா, ஜெ.ஆர்.வி.எட்வர்டு போன்ற குமரி மாவட்ட எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளில் சில இடங்களில் ரப்பர் வாசனை வந்திருக்கிறது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 06

இன்றைய மார்க்கெட்டிங் யுகத்தில் 'புராடெக்ட் டிசைன்’ என்பது, சுவாரஸ்யமானதாக இருக்கவேண்டியது அவசியம். அதன் விஷ§வல் வடிவம், பார்வையாளர்கள் மனதில் ஏதோ ஒன்றை கம்யூனிக்கேட் பண்ணவேண்டும். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என நம்மவர்கள் சொல்வார்கள். அதன் டெக்னிக்கல் வடிவம் இது. உதாரணம், பல்லுக்கு வெண்மையை அளிக்கும் ஆர்பிட் போன்ற மிட்டாயின் பேக்கேஜ் கிட்டத்தட்ட மாத்திரைபோல இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். மெடிசின் போன்ற ஒரு நம்பிக்கையை வாங்குபவர்களின் மனதில் உருவாக்கிவிடுகிறது இல்லையா?

சமீபத்தில் நடந்த கேன்ஸ் விளம்பர விழாவில் (கேன்ஸ் திரைப்பட விழாபோலவே இதுவும் உலகப் பிரசித்தி) சிறந்த புராடெக்ட் டிசைன் விருது பெற்றது ஓர் இரும்பு மீன். அது பார்ப்பவர் மனதைத் தூண்டில்போட்டது. காரணம், வெறும் இரும்பு மீன் என்கிற வடிவம் மட்டும் அல்ல; அதன் பின்னணியும்கூட!

கனடாவைச் சேர்ந்த கிறிஸ்டோஃபர் சார்லஸ் என்கிற மாணவர், தன் பயோமெடிக்கல் படிப்பின் ஒரு பகுதியாக கம்போடியாவில் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறார். அதுதான் கம்போடியா மக்களிடம் காணப்பட்ட இரும்புச்சத்துக் குறைபாடு. இரும்புச்சத்து உள்ள உணவுகளை முறையாகச் சாப்பிட முடியாத வறுமை முதல் காரணம். பெரும்பாலும், விலை குறைவான‌ அலுமினியப் பாத்திரங்களை மட்டுமே சமையலுக்கு உபயோகிப்பதும் பிற‌ காரணங்களில் ஒன்று. 

பயோமெடிக்கல் மாணவரான கிறிஸ்டோஃபர் சார்லஸ், ஓர் எளிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார். சமையல் செய்வதற்கு முன்பு, கொதிக்கும் நீரில் ஓர் இரும்புத் துண்டை 10 நிமிடங்களுக்குப் போட்டுவைத்தால், உணவில் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்பதுதான் அது. அதை மக்களுக்கு அவர் அறிமுகம் செய்தபோது, எவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சாப்பிடும் உணவில் இரும்புத்துண்டைப் போட்டுக் கொதிக்கவைப்பதை அவர்களால் மனதில் 'ஜீரணிக்க’ முடிய‌வில்லை. யாரும் அதைச் செய்யாதபோது, தோல்வியுடன் கனடாவுக்கே திரும்பினார் சார்லஸ்.

சில மாதங்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவராக மறுபடியும் கம்போடியா வந்த சார்லஸ், இப்போது அதே இரும்பை மக்களுக்குக் கொடுக்கிறார். 'இதைச் சமைக்கும் நீரில் 10 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்’ என ஏற்கெனவே சொன்ன அதே செய்முறைதான். ஆனால், இந்த முறை அந்த இரும்புத்துண்டு மீன் வடிவத்தில் இருந்தது. கம்போடிய மக்களின் பாரம்பர்ய நம்பிக்கைக் குறியீடுகளில் ஒன்று 'அதிர்ஷ்ட மீன்’. சமைப்பதற்கு முன்பு இந்த இரும்பு மீனை தண்ணீரில் போடுவதில், மக்களுக்கு இப்போது எந்த மனக்குறை இல்லை. காரணம், அவர்களின் நம்பிக்கை!

இப்படி தொடர்ச்சியாக ஒன்பது மாதங்களுக்கு சார்லஸுடன் ஒரு குழுவே கிராமங்கள்தோறும் இரும்பு மீன்களை விநியோகித்துள்ளது. கிட்டத்தட்ட 50 சதவிகித 'அனிமீயா’ எனும் இரும்புச்சத்துக் குறைபாடு நிவர்த்தியானதாகப் பிறகு பதிவுசெய்திருக்கிறார்கள். இப்போது உலகம் முழுக்க இந்தத் திட்டத்தைக் கொண்டுபோகும் முனைப்பில் இருக்கிறார்கள்.

எந்த ஊராக இருந்தாலும் சரி, மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷ§வல் வடிவம் என்பது

அஞ்ஞானச் சிறுகதைகள் - 06

ஆழ்மனதில் நீந்திக்கொண்டிருக்கும்... இந்த இரும்பு மீனைப்போல!  

''கல்விதான் மாணவர்களுக்கு முதலீடு'' என்றான் நண்பன்.

''ஆனால் லாபம், கல்வி வியாபாரிகளுக்குத்தான்'' என்றான் கார்ப்பரேட் சித்தன்!