மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

டூ இன் ஒன் சேவை!

அனுபவங்கள் பேசுகின்றன !

தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவளுடைய மகன், தன் வயதுப் பிள்ளைகளுக்கு நோட் புக்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தான். ``என்னடா இது... நோட்டெல்லாம் தர்றே? தலைவர் ஆயிட்டியா?’’ என்று கிண்டல் செய்தேன். ``இல்லை ஆன்ட்டி, இறுதித் தேர்வு முடிந்ததும், பழைய நோட்டுகளில் உள்ள எழுதாத பக்கங்களைக் கிழித்து நோட்டுகள் தயாரித்து ஏழை மாணவர்களுக்குத் தந்துவிடுவேன். எழுதியசப்ஜெக்ட் தொடர்பான பகுதிகளை புதிதாக அந்த வகுப்பில் சேர வரும் மாணவனிடம் தந்துவிடுவேன். விடுமுறையில் ஒருமுறை படித்துவிட்டால், பள்ளி திறக்கும்போது அவனுக்கு சற்று எளிதில் புரியும்'’என்றான். தேர்வு முடிந்ததும், பழைய பேப்பர் கடைக்காரரிடம் நோட்டுகளைப் போட்டு காசாக்கும் எண்ணம் கொள்ளாமல்,  அதை மற்றவர்களுக்கு உதவும்படி மாற்றிய அவனை மனதார பாராட்டிவிட்டு வந்தேன். 

 
- அமுதா அசோக்ராஜா, திருச்சி

அர்த்தமுள்ள அணுகுமுறை!

அனுபவங்கள் பேசுகின்றன !

கோடை விடுமுறையில் சென்னையில் உள்ள எனது சித்தப்பா வீட்டுக்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்றிருந்தேன். ஒருநாள், ``என் பிள்ளைகள் மெரினா பீச் பார்த்ததே இல்லை. கூட்டிச் சென்று காட்டுங்க’’ என்றேன். உடனே அவர் ‘’நாளைக்கு காலை 5 மணிக்கு எழுந்து ரெடியா இருங்க” என்றார். அதே போல் மறுநாள் காலையில் அழைத்துச் சென்று பீச்சை சுற்றிக்காட்டிவிட்டு, ஒரு ஹோட்டலில் காலை சிற்றுண்டியையும் முடித்து கூட்டி வந்தார். அவரிடம் நான், ‘’ஏன் சித்தப்பா, எல்லோரும் சாய்ந்திரம்தானே பீச்சுக்குப் போவாங்க... நீங்க ஏன் காலையில கூட்டிட்டு போனீங்க?” என்றபோது அவர் தந்த விளக்கம், சிந்திக்க வைத்தது.‘’காலையில் பீச்சுக்குப் போனா... சூரிய உதயம், உடற்பயிற்சி, கப்பல், மீன்பிடி படகு என எத்தனையோ நல்ல விஷயங்களைப் பார்த்து ரசிக்க முடியும். இதுவே மாலையில் போனால்... கண்ட கண்ட தின்பண்டங்கள், காதல் கண்றாவிகள் என அவர்கள் ரசனை திசை திரும்பிவிடும்” என்றார்.`எவ்வளவு அர்த்தமுள்ள அணுகுமுறை!’ என வியப்பில் ஆழ்ந்தேன்.

- ராணி மகாலிங்கம், மதுரை

சுயநலவாதிகளே... சிந்தியுங்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன !

னக்கு வயது 62. கணவரை இழந்து, தனியே வசித்து வருகிறேன். ஒருமுறை தொலைதூரப் பேருந்தில் பயணிக்க வேண்டி வந்தது. பேருந்தில் படிக்கட்டுகள் உயரமாக இருந்ததால், அவசரமாக ஏற முடியவில்லை. ஒரு படி ஏறி முடித்தவுடன் கண்டக்டர் விசிலடிக்க, அதற்குள் வெளியே நிற்பவர்கள் தொற்றிக்கொள்ள, பேலன்ஸ் தவறி அப்படியே பின்பக்கம் சாய்ந்தேன். ஒரு தம்பி ஒரு கையால் தாங்கிப் பிடிக்க, நிகழ இருந்த பேராபத்து தடுக்கப்பட்டது. அதற்குள் வேறொருவர் ``பாவம் அந்தம்மா... முன்னால் இருப்பவர்கள் நகருங்கள்’’ எனக் கூற, முன்னால் ஐந்தாறு பேர் செல்லக் கூடிய அளவு இடமிருந்தும், யாரும் முன்னால் சென்று வழிவிடவில்லை. ``நாங்கள் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்க வேண்டும்’’ எனக் கூறி அப்படியே நின்றனர். அப்போது இன்னொருவர், ‘’இந்தக் கிழவி ஏன் பஸ்ஸில் வருகிறது. கால் டாக்ஸியில போக வேண்டியதுதானே..?’’ என்று கமென்ட் அடித்தார். எல்லோராலும் கால் டாக்ஸியில் செல்ல முடியுமா? `கிழவி’ என்று அவமரியாதையாக அழைத்தவர், கிழவர் ஆகவே மாட்டாரா..?


என்னதான் அவசரயுகம் என்றாலும், மனிதாபிமானத்தை மூட்டை கட்டி தூக்கி எறிவது நியாயம்தானா... சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்!


- விமலா சங்கரன், காஞ்சிபுரம்