
விகடன் டீம், படங்கள்: எம்.உசேன் ஆ.முத்துகுமார்ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி
2014-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தன. திருவள்ளூர் தொகுதியில் வென்ற அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் வேணுகோபால், சத்தம் இல்லாமல் ஒரு சாதனை படைத்தார். 3.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. இதுதான் தமிழ்நாட்டிலே அதிகமான வாக்கு வித்தியாசம். ஆனால், திருவள்ளூர் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருந்த வருவாய்த் துறை அமைச்சர் பி.வி.ரமணாவுக்குப் பாராட்டுப் பத்திரம் கிடைப்பதற்குப் பதிலாக, 'கெட்-அவுட்’ ஓலைதான் கிடைத்தது. தேர்தல் முடிவு வெளியான சில நாட்களில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் ரமணா. காரணம், முதல் மனைவியின் பெயரை வேட்புமனுவில் மறைத்தாகச் சொல்லி, ரமணா மீது பாய்ந்த வழக்கு. பின்னர் நான்கே மாதங்களுக்குள் மீண்டும் அமைச்சரவையில் பால்வளத் துறையைக் கைப்பற்றினார். இதற்கெல்லாம் முன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராகவும் பின்னர் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராகவும் இருந்தவர் இவர். நான்கே வருடங்களில் நான்கு துறைகளுக்கு ரமணா மாற்றப்பட்டது ஏன்? முறைகேடு புகார்கள் கிளம்பினாலும் துறை மட்டும்தான் மாறியதே தவிர, அமைச்சர் பதவி 'பத்திரமாக’ இருக்கிறதே ஏன்..? உபயம் மன்னார்குடி லாபி அல்ல... ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி!
மெடிக்கல்ஸ் ஃபேன்சி ஸ்டோர் கூட்டணி!
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகில் உள்ள பெருமாள்பட்டு, ரமணாவின் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். ப்ளஸ் டூ முடித்துவிட்டு 'மெடிக்கல் ஷாப்’ வைக்கும் ஆசையில் டி.பார்ம் படித்தார் ரமணா. திருநின்றவூரில் அவருடைய தாயின் பெயரில் 'பிரேமா மெடிக்கல் ஷாப்’ வைத்தார். 1993-ம் ஆண்டு லலிதாவுடன் திருமணம். காஸ் ஏஜென்சி ஒன்றையும், லலிதா பெயரில் எடுத்து நடத்தத் தொடங்கினார். இரண்டு பிள்ளைகள் பிறந்து, வாழ்க்கை தினமும் சுபிட்சமாகவே கடந்தது. அப்போதுதான் ரமணாவின் மெடிக்கல் ஷாப்புக்கு அருகில் நிலைகொண்ட 'சுமதி ஃபேன்சி ஸ்டோர்’ ரமணாவின் குடும்பத்தில் புயல் வீசச் செய்தது. அந்த ஃபேன்சி ஸ்டோரை நடத்திய லதாவுக்கும் ரமணாவுக்கும் உண்டான பழக்கம், விறுவிறுவென அடுத்தடுத்த அத்தியாயங்களைக் கடந்தது. ஏற்கெனவே திருமணமான லதா, தன் கணவரைவிட்டுப் பிரிந்து 'இரண்டாவது மனைவி’ என்ற அந்தஸ்துடன் ரமணாவோடு இணைந்தார். விஷயம் தெரிந்து, ரமணாவின் பெற்றோரும் முதல் மனைவி லலிதாவும் கொதித்தனர். ரமணாவுக்கும் லதாவுக்கும் ஒரு குழந்தை பிறந்த தகவல் கேள்விப்பட்டவுடன், ரமணாவை வீட்டைவிட்டே துரத்தினர் அவருடைய பெற்றோர். அதனால் திருநின்றவூரில் இருந்து சென்னை அண்ணாநகருக்கு லதாவோடு இடம் பெயர்ந்தார் ரமணா. குடும்பச் சச்சரவுகளை மறந்து தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ரியல் எஸ்டேட் டு அமைச்சரவை!
காஸ் ஏஜென்சியோடு ரியல் எஸ்டேட் தொழிலிலும் இறங்கினார். அந்தத் தொடர்புகள் அரசியலில் கொண்டுவந்து சேர்த்தது. அ.தி.மு.க-வில் சேர்ந்தார். லோக்கல் புள்ளிகளின் உதவியோடு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பதவி வரை உயர்ந்தார். அடுத்தகட்ட லிஃப்ட்டுக்காகக் காத்திருக்கும்போது, டி.டி.வி.தினகரனின் பழக்கம் கிடைத்தது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆனார். அதோடு மதுபானத் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளருடன் இருந்த நெருக்கமும் ரமணாவுக்குக் கைகொடுத்தது. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட ஸீட் கிடைத்தது. தோல்வி. ஐந்து ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்து, 2011-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சராகவும் விஸ்வரூபம் எடுத்தார்.
அமைச்சர் பதவியில் ஆடு புலி ஆட்டம்!
சிலபல காரணங்களுக்காக துறைகள் மாறிக்கொண்டே இருந்தாலும், ரமணாவின் அமைச்சர் பதவிக்குப் பங்கம் வரவில்லை. இரண்டாவது மனைவி விவகாரம்தான் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி, 111 நாட்கள் அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றி வைத்திருந்தது. ரமணாவுக்கும் முதல் மனைவி லலிதாவுக்கும் 2.6.1993-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஆகாஷ் என்கிற மகனும், அஞ்சலி என்கிற மகளும் இருக்கிறார்கள். இந்த விவரங்களை 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுவில் மறைத்து, 'துணைவி’ பெயர் லதா எனவும், மகள் பெயர் வர்னிஷா எனவும் குறிப்பிட்டிருந்தார் ரமணா. 'சட்டப்படியான மனைவியின் பெயரை மறைத்து, இரண்டாவது மனைவியின் பெயரைக் குறிப்பிட்ட ரமணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலாஜி என்பவர் வழக்கு போட்டார். அந்த விவகாரம் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் களங்கத்தை உண்டாக்கவே, வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ரமணா அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மாதவரம் மூர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்த பால்வளத் துறையில் அதைக் காட்டிலும் அதிரிபுதிரிப் பிரச்னைகள் வெடிக்கவும், அவர் பதவியும் காலியானது. அப்போது ரமணாவின் இரண்டாவது மனைவி வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. அரசியல் காய்கள் நகர்த்தப்பட, பால்வளத் துறை அமைச்சர் ஆக்கப்பட்டார் ரமணா.
தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

துறையில் சாதித்தது என்ன?
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக ரமணா இருந்த காலத்தில் ஏகப்பட்ட புகார்கள். அந்தத் துறையில் அதிகாரிகள் ஒரு வருடத்துக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருக்க முடியாது. யார் எல்லாம் ஒரு வருடத்துக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் எனப் பட்டியல் எடுத்து, அவர்களைத் தடாலடியாகத் தூக்கியடிப்பார்கள். ஏன் இந்த ஏற்பாடு? அதிகாரிகள் விரும்பிய இடத்துக்கோ அல்லது பசையான ஏரியாவுக்கோ இடமாற்றம் வேண்டினால், வசூல் வேட்டை நடத்துவார்கள்.
அடுத்து... திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வில்லங்கம். வணிகவரித் துறை ரமணாவின் வசம் இருந்தபோது, திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதில் நடக்கும் முறைகேடுகள் சந்தி சிரித்தன. தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது வணிகவரித் துறைதான். ஆனால், தமிழ்ப் பெயர் மட்டுமே இருந்தால் வரிவிலக்கு கிடைக்காது; படத்தின் உள்ளடக்கத்திலும் சிலபல நிபந்தனைகள் உண்டு. அதைக் காரணமாகச் சொல்லி வரிவிலக்கு கிடைக்கவிடாமல் செய்துவிடுவோம் என மிரட்டி, முறைகேட்டில் ஈடுபட்டார்கள் அதிகாரிகள். லஞ்சம் - ஊழல் பாதிப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புஉணர்வை உண்டாகும் நோக்கில் எடுக்கப்பட்ட 'அங்குசம்’ படத்துக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தார் அந்தப் படத்தின் இயக்குநர் மனுக்கண்ணன். அது தொடர்பாக ரமணாவின் பி.ஏ சரத்பாபுவைச் சந்தித்தபோது, 'பெரிய பட்ஜெட் படத்துக்கு
50 லட்சம். சிறிய பட்ஜெட் படத்துக்கு 5 லட்சம். பணத்தில் ஒரு பகுதி மந்திரிக்கும் கொடுத்தாகணும்’ என பேரம் பேசினாராம் அவர். இதை மனுக்கண்ணன் குற்றச்சாட்டாகச் சொல்ல, சரத்பாபு தூக்கியடிக்கப்பட்டார். ஆனால், ரமணாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

பால் வளம்... சுயநலம்!
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, ஒரு லிட்டர் 17 ரூபாயாக இருந்த ஆவின் பால் இப்போது 34 ரூபாய். 2011-ம் ஆண்டு லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவுக்கு உயர்த்தினார்கள். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது எப்போதும் இல்லாத அளவுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 84 சதவிகிதம் அளவுக்கு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பால் விலையேற்றத்தால் ஆவினின் பால் உபபொருட்களான வெண்ணெய், நெய் ஆகியவற்றோடு காபி, டீ உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரித்தன. இதனால் சராசரிக் குடும்பத்தின் மாதந்திர பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் கூடுதல் சுமையானது. இந்த விலையேற்றம் ஆவின் பாலின் விற்பனையைப் பாதித்தது. அரசின் கட்டுப்பாடு, கண்காணிப்பு ஏதுமின்றி தனியார் பால் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டிவரும் நிலையில், ஆவினின் முறையற்ற நிர்வாகம் உண்டாக்கிய நிதிச் சுமையை பொதுமக்கள் மீது சுமத்தினார்கள்.
போதுமான குளிர்சாதனக் கிடங்குகள் இல்லாமல் பால் கெட்டுபோய்க்கொண்டிருக்கிறது. பாக்கெட்டுகளில் இருந்து பால் கசியும் புகார், தொடர்கதையாக இருக்கின்றன. தரம் குறைந்த ஃபிலிம் வாங்குவதே அதற்குக் காரணம் என்கிறார்கள் ஆவின் ஊழியர்கள். கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாக எழுந்த புகார், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் எதிரொலித்தன. மேகி நூடுல்ஸ்போல அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பால் பேடாவும் சர்ச்சையில் சிக்கியது. கோவையில் புளிப்பான பால்கோவாவை விற்பனை செய்ததும், அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள்.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆவின் நிர்வாகம் பிரமாண்ட பால் கலப்பட விவகாரத்தில் சிக்கியது. ஆளும் கட்சிப் பிரமுகரே ஆவினின் டேங்கர் லாரிகளைத் திசைதிருப்பி பாலைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்த சர்ச்சை உச்ச நீதிமன்றம் வரை சென்றது. தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன்தான் அந்த ஊழலின் சூத்ரதாரி. ஆவின் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்த வைத்தியநாதன், டேங்கர் லாரி கான்ட்ராக்ட் எடுத்து 83 வாகனங்களுக்கு அதிபராகி பெரும் புள்ளியாக மாறினார். அதிகாரிகள் துணையுடன் வைத்தியநாதன் நடத்திய ஊழலில் ஆவினுக்கு கோடிக்கணக்கில் இழப்பு. அதோடு பொதுமக்களுக்கும் கலப்பட பால் விநியோகிக்கப்பட்டது. சகட்டுமேனிக்கு எதிர்ப்பும் பரபரப்பும் உண்டானதால், வேறு வழி இல்லாமல் வைத்தியநாதனைக் கட்சியில் இருந்து கட்டம் கட்டினார் ஜெயலலிதா. அப்போதைய பால்வளத் துறை மந்திரியாக இருந்த மாதவரம் மூர்த்தியிடம் இருந்து துறையை ரமணாவுக்குக் கைமாற்றினார்.
அத்தனை பிரமாண்ட ஊழல் முறைகேடு நடந்த பிறகு, ரமணா வசம் வந்தது துறை. நடைமுறை சீர்கேடுகளைத் தீர்க்க முயற்சித்தாரா அமைச்சர்? ஆவின் பால் டேங்கர்களில் ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் பொருத்திக் கண்காணிக்கும் நடவடிக்கைகள்கூட முடுக்கிவிடப்படவில்லை!
வெற்றுப் புரட்சி!
'தமிழ்நாட்டில் இரண்டாவது வெண்மைப் புரட்சி ஏற்படுத்த, பால்வளத் துறை திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது’ என அவ்வப்போது ஜம்பமாக அறிவிப்பார் அமைச்சர் ரமணா. ஆனால், மறுபக்கம் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்யவில்லை எனச் சொல்லி, சாலையில் பாலைக் கொட்டி தொடர் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள். ஏன்? அது ஒரு ராஜதந்திர அரசியல்!
தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக இருக்கும் 4.29 லட்சம் உற்பத்தியாளர்களிடம் இருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்துகொண்டிருக்கிறது ஆவின். ஆனால், கடந்த சில மாதங்களாக உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை வாங்க மறுக்கிறது ஆவின். சில இடங்களில் வழக்கத்தைவிட குறைவாக பால் கொள்முதல் செய்கிறார்கள். 'நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் பால் இல்லை’ என சாக்குச் சொல்லிவிட்டு தனியார் பால் விற்பனையாளர்களிடம் இருந்து லிட்டர் 25 ரூபாய்க்கு மொத்தமாக பால் கொள்முதல் செய்கிறது. 'பாரம்பர்ய பால் உற்பத்தியாளர்களிடம் லிட்டர் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதைவிட, தனியாரிடம் 25 ரூபாய்க்கு வாங்குவது ஆவினுக்கு லாபம்தானே!’ எனத் தோன்றலாம்.
ஆனால், இதனால் சில அதிகாரிகளுக்கும், பால் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்களாக இருக்கும் ஆளும் கட்சியினருக்கும்தான் பெரும் லாபம்.
''இது அவர்களின் கூட்டுக் கொள்ளை நாடகம். ஆவின் கொள்முதல் செய்யாத பாலை வேறு வழி இல்லாமல் நாங்கள் தனியார் பால் விற்பனையாளர்களிடம் 'அடிமாட்டு’ விலைக்கு விற்கிறோம். அந்தப் பாலைத்தான் கூடுதல் லாபம் வைத்து ஆவினிடம் விற்கின்றன தனியார் நிறுவனங்கள். இது வெளிப்படையான லாபம். மறைமுக லாபமும் இதில் ஒளிந்திருக்கிறது. முன்னர் ஆவின் நிறுவனம் அதிக அளவில் பாலைக் கொள்முதல் செய்து மக்களுக்குத் தாராளமாக விற்பனை செய்தபோது, ஆவினின் போட்டியைச் சமாளிக்க முடியாமல், தனியார் நிறுவனங்கள் பால் விலையைக் குறைத்தன. அதே நிலை நீடித்திருந்தால் தனியார் பால் விலை மேலும் சரிந்திருக்கும். ஆனால், ஆவின் நிறுவனம் விலையை ஏற்றியதோடு கூடுதல் பால் கொள்முதலையும் சட்டென நிறுத்திக்கொண்டது. இதனால் ஆவின் பால் விற்பனை குறைந்து தனியாரின் விற்பனை அதிகரித்தது. இப்படி அறிவியல், விஞ்ஞானம், சந்தை நிர்வாகம்... என அனைத்து வியூகங்களையும் கலந்துகட்டி, தொலைநோக்கில் திட்டமிட்டு ஆவினை நட்டத்தில் ஆழ்த்துகிறார்கள் சில அதிகாரிகள்'' எனக் குமுறுகிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் லிட்டராக உள்ள பால் கொள்முதலை அதிகரிக்க, எந்தத் திட்டங்களும் நடைமுறையில் இல்லை. குளிரூட்டும் நிலையம் உள்பட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமலும், புதிதாக உண்டாக்காமலும் இருக்கிறது ஆவின். இதெல்லாம் அரசு நிர்வாகத்துக்கு ஜுஜூபி சவால்.
ஆனால், ஆவின் கொள்முதலை உயர்த்தி, தனியார் பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்ற தாய் உள்ளத்தோடு செயல்படுகிறது ஆவின் நிறுவனம். அதிக அளவு பாலை கொள்முதல் செய்தால், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்திருக்கலாம். அதன் மூலம் விற்பனை, ஏற்றுமதி இரண்டையும் அதிகரித்திருக்க முடியும். ஆனால், அதெல்லாம் நடந்தால் ஆவினுக்குத்தானே லாபம். ஆளும் கட்சியினருக்கு என்ன கிடைக்கும் என நினைத்திருப்பார்போல பால்வளத் துறை அமைச்சர் ரமணா. அதனால், 'வெண்மைப் புரட்சி’யைக் கண்டுகொள்ளாமல் ஆவினை 'அமைதிப் புரட்சி’யில் ஆழ்த்திவிட்டார்.
இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டால், இவர்களுக்கு என்ன வியர்த்தா வடிகிறது?!
பி.எஸ்ஸி. படித்தாரா?
திருவள்ளூர் தொகுதிக்கு 2011-ம் ஆண்டில் ஸீட் கேட்டு ரமணா விருப்ப மனு அளித்தபோது பி.எஸ்ஸி., மற்றும் டி.பார்ம் படித்தாகச் சொல்லியிருந்தார். ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலும் ரமணாவின் பெயருக்குப் பின் பி.எஸ்ஸி., டி.பார்ம்... எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் வேட்புமனுவிலும் சட்டமன்ற ஆவணங்களிலும் ரமணா பெயருக்குப் பின் 'டி.பார்ம்.’ மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்னை சி.எஸ்.பேஸ்ட் மேத்தா பார்மசி கல்லூரியில் 1990-ம் ஆண்டு டி.பார்ம் முடித்திருக்கிறார் ரமணா. அப்போ 'பி.எஸ்ஸி’ என்ன ஆச்சு என்பது ரமணாவுக்கே வெளிச்சம்!
ரமணாவின் காட்ஃபாதர்!
ஜெ., கேபினெட்டில் 'மன்னார்குடி’ லாபி மூலம் அமைச்சர் பதவியைத் தக்கவைத்திருப்பவர்கள்தான் மெஜாரிட்டி. ஆனால், ரமணாவுக்குப் பக்கபலமாக இருப்பதோ ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ரமணாவுக்குப் பிரச்னை வரும்போது எல்லாம் அந்த அதிகாரியின் கார்டன் செல்வாக்குதான் அவரைக் காபந்து பண்ணுகிறதாம். 'மனைவி-துணைவி’ சர்ச்சை வெடித்து ரமணாவின் பதவி பறிக்கப்பட்ட நான்கே மாதங்களில், மீண்டும் அவரை அமைச்சர் ஆக்கியதில் அந்த அதிகாரிக்கு முக்கியப் பங்கு உண்டாம். இதனால் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை, தன் அரசியல் குருவாக வழிபடுகிறார் ரமணா.
ஆடம்பரம் இங்கே... அனுமதி எங்கே?

திருவள்ளூர் வி.எம் நகரில் 5,000 சதுரஅடி காலி மனையை, இரண்டாவது மனைவி லதா பெயரில் 2007-ம் ஆண்டு வாங்கினார் ரமணா. இந்தக் காலி மனையில் இப்போது பிரமாண்ட வீடு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. கிரகப்பிரவேசம் நடக்கவில்லை. காரணம்? 'அந்த வீட்டு மனைக்கு நகர ஊரமைப்பு இயக்கத்தின் அனுமதி பெறப்படவில்லை. அந்த மனையில் வீடு கட்டுவதற்கான அனுமதியையும் நகராட்சி வழங்கவில்லை. அதாவது அனுமதி பெறாமலேயே பிரமாண்ட வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். அனுமதி பெறாமல் வீடு கட்டுவது நகராட்சிகள் சட்டத்தின்படி தவறு என்பது பாமரருக்குக்கூடத் தெரியாமல் போகலாம். அமைச்சருக்குக்கூடவா தெரியாது?’ என்கிறார்கள் அவரது கட்சியினரே. அந்த வீடு கட்டுவதற்கான ப்ளான் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டபோது, அனுமதி தரும் அதிகாரிகள் சிலர் தூக்கியடிக்கப்பட்டனராம். லதா பெயரில் மனை வாங்கப்பட்டபோது அதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய். இதை வேட்புமனுவில் சொல்லியிருக்கும் ரமணா, லதாவுக்கு பான் கார்டு இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி எனில், லதாவுக்கு அந்த 10 லட்சத்துக்கான வருவாய் எப்படி வந்தது?
அமைச்சரின் நிழல்கள்!
ரமணாவின் பொலிட்டிக்கல் பி.ஏ-வாக வலம்வந்தவர் மாணிக்கவேல் என்கிற கமல்ராஜ். 'கமல் இல்லாமல் ரமணா இல்லை’ என்ற பேச்சு கிளம்பவே, கமல் தற்காலிகமாக 'ஆஃப்’ செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதுவும் ரகசிய ஏற்பாடுதானாம். கமலின் உதவியாளர் ஜெயதேவன்தான் இப்போது ரமணாவின் நிழல்.

திருவாலங்காடு கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்தபோது பல லட்ச ரூபாய் கையாடல் புகாரில் கைதாகி, பணிநீக்கம் செய்யப்பட்டவர் இந்த ஜெயதேவன். நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயதேவனை தன் பி.ஏ-வாக வைத்திருக்கிறார் ரமணா. ரமணாவின் அமைச்சர் பதவி நிலைப்பதற்காக கேரளாவுக்கு அடிக்கடி சென்றுவருவார் ஜெயதேவன். அதனால் ரமணாவுக்கு அவர் மீது அபார நம்பிக்கை!
ஜெயதேவனுக்கு அடுத்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும் ஒன்றியச் செயலாளருமான ரவிச்சந்திரன், அமைச்சரின் இரண்டாவது நிழல். ரமணாவும் ரவிச்சந்திரனும் பல ஆண்டுகால நண்பர்கள். கான்ட்ராக்ட் முதல் கட்சிப் பதவி வரையில் ரவிச்சந்திரன் சொன்னால்தான் நடக்குமாம். ரமணாவைப் பார்க்க முடியாவிட்டாலும், ரவிச்சந்திரனைப் பார்த்தால் எந்தக் காரியமும் கைக்கூடும். இவர்களோடு ரமணாவின் இரண்டாவது மனைவி லதாவும் அவருடைய சகோதரரும் கட்சி போஸ்ட்டிங்குகளில் தலையிடுகிறார்களாம். அவர்கள் கைகாட்டுபவர்களுக்கே பலே பதவிகள் கிடைக்கிறதாம்!
திரைமறைவு தி.மு.க தொடர்பு!
கடந்த தி.மு.க ஆட்சியில் மு.க.ஸ்டாலினுடனும் தி.மு.க-வோடும் நெருக்கமாக இருந்த ஐசரி கணேசனுக்கும் ரமணாவுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி கார்டன் வரை ஆதாரங்களுடன் புகார் போனது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் நிலங்களை பலரிடம் இருந்து வாங்கி ஐசரி கணேசனுக்குக் கொடுத்த வகையில், ரமணாவுக்குக் கொழுத்த லாபமாம். ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில், நிலங்கள் விற்பனைக்கான பத்திரப்பதிவுகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கின்றன. அது தொடர்பாக கார்டனுக்கு அனுப்பப்பட்ட பத்திரங்களில் ஐசரி கணேசனும் ரமணாவும் போட்டோவில் ஜெகஜோதியாகச் சிரிக்கிறார்கள்.
நள்ளிரவு நாட்டாமை!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையான பிறகு, சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவு நேரத்தில் அமைச்சர் ரமணாவின் கார் ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே நின்று சில இடங்களைக் குறித்துக்கொண்டிருந்தார் ரமணா. அவருடன் வந்தவர்கள் இன்ச் டேப் பிடித்து அளந்துகொண்டிருந்தார்கள். 'இப்படி இரவிலும் மக்கள் தொண்டு செய்கிறாரே!’ என ஆச்சர்யத்துடன் கடந்துசென்றனர் பாவப்பட்ட பப்ளிக். ஆனால், உண்மையில் நடந்ததோ வேறு. விடுதலையான ஜெயலலிதா, தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போட வரும்போது அவர் பார்வையில் தன் பேனர்கள் படவேண்டும் என்பதற்காக, தோதான இடங்களில் ஃப்ளெக்ஸ் வைக்க வந்திருந்தார் ரமணா. அப்படி அண்ணா சாலையில் ஜெயலலிதாவுக்காக ரமணா வைத்த பிரமாண்ட பேனர் சரிந்து, அரசு பஸ் மீது விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. பொது இடங்களில் முறை இல்லாமல் பேனர் வைக்கக் கூடாது என்பது மாண்புமிகுவுக்குத் தெரிந்தும், 'அம்மா’வுக்கு முன் இதெல்லாம் எடுபடாது என நினைத்துவிட்டார்போல. பழுதான அரசுப் பேருந்துக்கு நஷ்டஈடு போனதாகத் தெரியவிவில்லை!