மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 டைனமோ - 16

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

'வருங்காலத்தை மாற்றவே முடியாது எனச் சிலர் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், வருங்காலம் என்பதே நாம் உருவாக்குவதுதான்’ நிகழ்காலத்தின் டாப்மோஸ்ட் மேஜிக் நிபுணர் டைனமோ (என்கிற ஸ்டீவன்) சொல்லும் மந்திர வார்த்தைகள் இவை. மேஜிக்தான் அவரது வாழ்க்கை. ஆனால், அவரது மாஜி வாழ்க்கை, எந்த மேஜிக்கும் இல்லாத கறுப்புப் பக்கங்களால் நிரம்பியதே. 

'ஸ்டீவன்... போ... உள்ளே உட்காரு’  பவுலும் பென்னும் வழக்கம்போல மிரட்டினார்கள். ஸ்டீவனும் குப்பைகள் போடும் சற்றே பெரிய டிரம்முக்குள் சென்று உட்கார்ந்தான். உடலைச் சுருக்கி; கை, கால்களை ஒடுக்கி. மறுத்தால் உதைப்பார்கள். எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ ஸ்டீவனுக்குத் திராணி இல்லை. பூஞ்சையான உடம்பு; தைரியம் பழகாதவன். ஆகவே, மற்ற சிறுவர்களுக்கு ஸ்டீவன் ஒரு சப்பாணி. அவமானங்களை அசட்டுச் சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் ஓர் அடிமை.

சிறு குன்றுபோன்ற பகுதியின் உயரத்தில் இருந்து டிரம்மை ஸ்டீவனோடு சேர்த்து உருட்டிவிடுவார்கள்.

நம்பர் 1 டைனமோ - 16

360 டிகிரி சுழலில், கட்டுப்பாடற்ற வேகத்தில் அது உருண்டு ஓட, ஸ்டீபனை பயம், வலி, வேதனை எல்லாம் கவ்வும். சமதளத்தை அடைந்ததும், சமநிலை இழந்து வெளியில் வந்து விழுவான். புதிய காயங்கள் கிடைத்திருக்கும். கதறி அழத் தோன்றும். வேண்டாம், அவர்கள் கூடுதலாகக் கிண்டல் செய்வார்கள். வீட்டில் இரவுகளில் மொத்த கண்ணீரும் பீறிட்டு ஸ்டீவனின் தூக்கத்தைக் கரைக்கும்.

இங்கிலாந்தின் பிராட்போர்டு நகரில் 1982-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஸ்டீவன் ஃப்ரெய்ன், குறைமாதத்தில் பலவீனமாகப் பிறந்தான். சில வாரங்கள் இன்குபேட்டர் அவனைச் சுமந்தது. அவனது 17 வயது தாய் நிக்கி, பிரிட்டனைச் சேர்ந்தவர்; தந்தை பாகிஸ்தானி. அவர் பெயர், ம்ஹூம், ஸ்டீவன் அவரது பெயரைக்கூட எங்கும் சொன்னது இல்லை. அவன் வாழ்க்கையில் 'உருவாக்கியதை’த் தவிர தந்தைக்கு என எந்த ரோலும் கிடையாது. குற்றங்களின் நண்பர்; நிரந்தர சிறைவாசி. ஸ்டீவனை அள்ளி அணைத்து வளர்த்ததெல்லாம் அவனது தாய்வழி தாத்தா - பாட்டிதான். அவர்கள் வாழ நேர்ந்த டெல்ப் ஹில் எஸ்டேட், கொலை, கொள்ளை, போதை, வன்முறை எல்லாம் பின்னிப் பிணைந்த பகுதி. அதனால், ஸ்டீவனின் நான்காவது பிறந்த நாளின்போது, நிக்கி ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு யாரும் வரவில்லை.

ஸ்டீவன் படித்த பள்ளியும் முரடர்கூடம். புகையும் போதையும் பள்ளி வளாகத்திலேயே சகஜம். அங்கேதான் பவுலும் பென்னும் ஸ்டீவனை வலுக்கட்டாயமாக நண்பர்கள் ஆக்கிக்கொண்டார்கள்... அவனது பாக்கெட் மணிக்காக. அவனிடம் பணம் இல்லை என்றால், டிரம் தண்டனை அல்லது சிறு நீர்த்தேக்கத்தில் அவனைத் தூக்கி எறிவார்கள். குளிர் நீரில் மூச்சு முட்ட, உயிருக்குப் பயந்து அரைகுறை நீச்சலில் தப்பிக் கரையேறுவான். இந்த வன்முறைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே ஸ்டீவன் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கொள்வான். டி.வி-தான் அவனுக்கு ஆறுதல். ஃபேன்டசி படங்கள் என்றால் உயிர். ஏதுமற்ற நிராதரவான சூழலில், எதையாவது புதிதாக உருவாக்கி, வென்று காட்டும் 'மெக்கைவர்’ என்ற துப்பறியும் ஹீரோவின் நாடகங்கள் அவனுக்குப் பிடிக்கும். தவிர, சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் முன் தன்னை மறந்துகிடப்பான். 'உன் திறமையை நீயே சந்தேகப்படாதே. உன்னால் முடியும் தம்பி!’ என அவர்கள் ஸ்டீவனுக்குள் உரக்கக் கூவினார்கள்.

ஸ்டீவனின் தாத்தா, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். போர்க்களத்தில் சக வீரர்களை உற்சாகப்படுத்த சின்னச் சின்ன மேஜிக்குகள் செய்தவர். ஸ்டீவனின் ஒன்பதாவது வயதில், தாத்தா அவனுக்கு மேஜிக் செய்து காண்பித்தார். வெவ்வேறு நீளம் கொண்ட இரண்டு ஷூ நாடாக்களை ஒரு நொடியில் சுருட்டி விரித்து, ஒரே நீளமாக்கினார். சிவப்புத் தீப்பெட்டியில் பச்சைத் தீக்குச்சிகளையும், பச்சைத் தீப்பெட்டியில் சிவப்புக் குச்சிகளையும் போட்டுக் குலுக்கி, சிவப்பில் சிவப்புக் குச்சிகள், பச்சையில் பச்சைக் குச்சிகள் வரும்படி மாற்றினார். ஸ்டீவன் வாய் பிளந்தான். 'இதையெல்லாம் கற்றுத்தர மாட்டேன். நீயே முயற்சிசெய்து பார்’ என்றார் தாத்தா. தன் 12-வது வயதின் இரவு ஒன்றில், 'பசங்க, ரொம்பக் கொடுமைப்படுத்துறாங்க தாத்தா’ என டிரம் விஷமங்களை எல்லாம் சொல்லி அழுதான் ஸ்டீவன். 'ஒரே நொடியில் உன் எதிரியின் பலத்தைக் காலிசெய்யும் மேஜிக் வேண்டுமா?’ என்ற தாத்தாவின் கேள்வியே, ஸ்டீவனுக்கு அசுரபலம் தந்தது. அவர் அந்த மேஜிக்கையும் கற்றுக்கொடுத்தார்.

மறுநாள்... பவுலும் பென்னும் ஸ்டீவனை மடக்கி டிரம்மில் உட்காரச் சொல்ல, 'நீயே என்னைத் தூக்கி வை’ என, தன் கைகளை முன்னே நீட்டினான் ஸ்டீவன். பவுல் அசால்ட்டாக பொடியன் ஸ்டீவனைத் தூக்க வந்தான். ஓர் இன்ச்கூட தூக்க முடியவில்லை. ஸ்டீவன் தம் கட்டவில்லை. சாதாரணமாகவே நின்றான். பவுல் மீண்டும் மீண்டும் முக்கி எக்கி முயற்சி செய்தும்... ம்ஹூம். விதிர்விதிர்த்துப்போனான் பவுல். எங்கு இருந்து இவ்வளவு பலம்... எப்படி? - பவுலும் பென்னும் மாறி மாறிக் கேட்க, எந்தப் பதிலும் சொல்லாமல் கெத்துடன் தன் பாதையில் நடந்தான் ஸ்டீவன். அந்த ஒற்றை நிகழ்வு, ஸ்டீவனின் தன்னம்பிக்கையை, தைரியத்தை, ஆளுமையை எல்லாம் தூண்டிவிட்டது. இனி, தாத்தா சொல்மிக்க 'மந்திரம்’ இல்லை.

நம்பர் 1 டைனமோ - 16

ஸ்டீவன், மேஜிக் பயிற்சியில் முழுமூச்சுடன் இறங்கினான். பகல் இரவு  தூக்கத்தில்கூட புதிய யோசனைகள் உதித்தன. தாத்தா கைகொடுத்தார். வகுப்பில் ஒருநாள் அந்த சிவப்பு - பச்சைத் தீப்பெட்டி மேஜிக்கை ஸ்டீவன் செய்து அசத்த, மாணவர்கள் வாய் பிளக்க, எப்போதும் இவனை உதாசீனப்படுத்தும் மாணவிகளும் 'வாவ்’ உதிர்த்தனர். ஸ்டீவன், தன் சப்பாணி இமேஜை நிரந்தரமாக உடைத்தெறிந்தான். ஆனால், அவனை வதைப்பதற்கு என்றே வந்து சேர்ந்தது வயிற்றுவலி.

எதைச் சாப்பிட்டாலும் வலி; சாப்பிடாவிட்டாலும் வலி. கூடவே அதிக ரத்தப்போக்கும். ஏகப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு நோயின் பெயரைச் சொன்னார்கள். 'க்ரோன்’ என்ற குடல் அழற்சி நோய். சிறுகுடல், பெருங்குடல், உணவுப் பாதை... என ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி, வயிற்றில் கட்டிகளை உருவாக்கும் தீர்வற்ற நோய். தற்காலிக நிவாரணத்துக்கு மருந்துகள் உண்டு. மற்றபடி நோயைச் சகித்துக்கொண்டு வாழவேண்டியதுதான். ஸ்டீவன் அந்த மனநிலைக்குத் தயாராக, சில காலம் பிடித்தது. படித்துக்கொண்டே குடும்பத்துக்கு உதவ, பகுதி நேர வேலைகளுக்கும் சென்றான். மீதி நேரங்களில் ஒரே சிந்தனை... மேஜிக். சீட்டுக்கட்டில் ஏதேதோ வித்தைகள் அவனுக்கு எளிதில் வசப்பட்டன. பர்த்டே பார்ட்டிகளில் சிறிய அளவில் மேஜிக் ஷோ நடத்த ஆரம்பித்தான். கேட்காமலேயே 'கேக்’கும், கேட்டால் பெட்ரோலுக்குக் காசும் கொடுத்தார்கள். அந்த விழாக்களில் புதிய தொடர்புகள் கிடைத்தன; அடுத்தடுத்த வாய்ப்புகளும். சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு, கிளப், நாய் கண்காட்சி, பார் என, வெவ்வேறு இடங்களில் மேஜிக் ஷோ நடத்தினான். கிடைக்கிற டிப்ஸ், டீன்-ஏஜ் மனதைத் திருப்திப்படுத்தியது. ஸ்டீவன் பள்ளிப்படிப்பை முடித்தபோது, அவன் பெயர் பிரிட்டனின் மேஜிக் வட்டாரத்தில் அறியப்பட்ட ஒன்றானது.

கல்லூரிக்குள் நுழையும் முன்பு, சுமார் ஒரு வருட காலம் அமெரிக்காவுக்குச் சென்றுவரும் வாய்ப்பு ஸ்டீவனுக்குக் கிடைத்தது. அங்கே அவனுக்குத் தன் எதிர்கால 'மேஜிக்’ குறித்த, பல ஆலோசனைகள் கிடைத்தன. மேஜிக் நிபுணர்களின் 'மெக்கா’வான லாஸ்வேகாஸ் நகரத்தில் மேடையேற வேண்டும் என ஆசை வளர்த்தான். ஆனால், நியூ ஓர்லென்ஸ் நகரத்தின் தெருக்களில் சிலர், சாதாரண மக்கள் முன்பு மேஜிக் செய்துகொண்டிருப்பதை வியந்து பார்த்தான். மேடையில் குறிப்பிட்ட பிராப்பர்டீஸை வைத்துக்கொண்டு மேஜிக் செய்வதைவிட, மக்களோடு மக்களாக நின்று, சாதாரண பொருட்களில், அசாதாரண மேஜிக் செய்வதுதான் அசத்தல் சவால். அவனது எண்ணம் மாறியது. ஸ்டீவன், 'ஸ்ட்ரீட் மேஜிக்’ மீது காதல்கொண்டான். அமெரிக்காவில் சந்தித்த தந்திரக்கலை நிபுணர் அப்போலோ ராபின்சன் சொன்ன வார்த்தைகள் தெளிவைக் கொடுத்தன... 'உண்மையில் மேஜிக் என எதுவும் கிடையாது. பார்வையாளர்களுக்குத்தான் அது மேஜிக். பார்வையாளர்கள் இல்லையேல், மேஜிக் அர்த்தம் இல்லாதது. அதனால் பார்வையாளர்களை அதிகபட்சம் பரவசப்படுத்துவதே மேஜிக்கின் உன்னத இலக்கு.’

2001-ம் ஆண்டு நியூயார்க்கில் சுமார் 2,000 மேஜிக் நிபுணர்கள் கலந்துகொண்ட சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பையும் ஸ்டீவன் ஏற்படுத்திக்கொண்டான். தன் ரோல்மாடலான உலகின் தலைசிறந்த மேஜிஷியன் டேவிட் காப்பர்ஃபீல்டின் அனுபவ உரை, அவனுக்குள் சில மேஜிக்குகளை நிகழ்த்தின. தவிர, அங்கே அத்தனை நிபுணர்கள் மத்தியில், மேஜிக் நிகழ்த்தும் அரிய வாய்ப்பும் ஸ்டீவனுக்கு அமைந்தது. தனக்குக் கைவந்த சீட்டுக்கட்டு மேஜிக் சிலவற்றைப் பிசகாமல் செய்து அசத்த, கூட்டத்தில் ஒருவர், 'இந்தப் பையன் ***** டைனமோ!’ எனக் கெட்ட வார்த்தை கலந்த அமெரிக்க ஸ்லாங்கில் சிலாகித்துக் கத்தினார். அது என்ன டைனமோ?! நன்றாக இருக்கிறதே. என் மேஜிக்குக்கு இதையே பெயராக வைத்துக்கொண்டால் என்ன? ஸ்டீவன், அந்த நொடியில் 'டைனமோ’ ஆனார்.

பிரிட்டனுக்குத் திரும்பிய பின்னர் கல்லூரி படிப்பைத் தொடர முடியவில்லை. க்ரோன் நோய் தீவிரமானது. தாங்க முடியாத வலி. மருத்துவமனையே வாழ்விடமானது. செத்துவிடலாமா எனத் தோன்றியது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு சீனியர் டாக்டர் இரண்டு வாய்ப்புகளை முன்வைத்தார். 'மருத்துவமனையிலேயே தங்கி தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டு வாழ வேண்டும் அல்லது ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும். ஆனால், ஆபரேஷனில் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது’. குடும்பத்தினர் மனமுடைய, டைனமோவும் விரக்தியின் உச்சத்தில். இப்படி மருத்துவமனையிலேயே சிறைப்பட்டால் என் எதிர்காலம்? தூங்க இயலாத மூன்று இரவுகளுக்குப் பின், மரணத்துக்குச் சவால்விட முடிவெடுத்தார் டைனமோ. 'ஆபரேஷனுக்குச் சம்மதம்.’ பல மணி நேரம் நடந்த ஆபரேஷனில், நோயின் தீவிரத்தைக் குறைக்க சிறுகுடலில் பாதியையும், வயிற்றில் பெரிய கட்டியையும் வெட்டி எடுத்தார்கள். டைனமோ பிழைத்துக்கொண்டார்.

புத்தம்புது வாழ்க்கை. ஆனால், கேள்வி ஒன்று நெஞ்சை அடைத்தது. ஒருவேளை நான் இறந்துபோயிருந்தால்? எதையுமே சாதிக்காமல் அடையாளம் இல்லாத ஸ்டீவனாகத்தானே அழிந்துபோயிருப்பேன்? கிடைத்திருப்பது மறு வாய்ப்பு. இறுதி வாய்ப்பு. மீண்டும் நோய் என்னைத் தின்று தீர்ப்பதற்குள் மேலே, உயரே, உச்சத்துக்குச் செல்ல வேண்டும். எப்படி? மேஜிக் எல்லாம் நிகழப்போவது இல்லை. ஆனால், மேஜிக்கால் நிகழும். என்னால் நிகழ்த்த முடியும்.

ஆறு மாத மருத்துவக் காவலில் இருந்து விடுதலையான டைனமோ, உடனடியாக தன் மேஜிக் காட்சிகள் அடங்கிய டி.வி.டி ஒன்றை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டான். அதில் சிலரது ராப், பாப் இசையையும் இணைக்கத் திட்டம். இளவரசர் சார்லஸ் நடத்திவந்த ட்ரஸ்ட்டில் இளம் தொழில்முனைவோருக்கு லோன் கொடுத்தார்கள். கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் காட்டி, அவர்களிடம் 2,000 பவுண்டு லோன் வாங்கினான். உடனே ஒரு கேமரா, ஒரு லேப்டாப், ஒரு டி.வி.டி ரைட்டர் வாங்கினான். டி.வி.டி-யில் வேறு என்ன சிறப்பு செய்யலாம்? யோசித்த டைனமோ, Snoop Dogg போன்ற சில இசைப் பிரபலங்களைக் கெஞ்சிக் கூத்தாடி சந்தித்து, ஓரிரு நிமிடங்கள் அவகாசம் கேட்டு மேஜிக் செய்தார். அவர்கள் அனிச்சையாக வாய் பிளந்த காட்சிகளைப் பதிவுசெய்துகொண்டார். பிரபலங்களின் காட்சிகளோடு Dynamo's Underground Magic என்ற டி.வி.டி வெளியானது. சில வாரங்களில் 5,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

நம்பர் 1 டைனமோ - 16

அதன் தொடர்ச்சியாக இளவரசர் சார்லஸைச் சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது. லோனுக்கு நன்றி சொல்லும் விதமாக சார்லஸுக்கு என ஒரு மேஜிக் நிகழ்த்தினார் டைனமோ. அவர் முன் சில சீட்டுகளை விரித்து ஒரு சீட்டை நினைத்துக்கொள்ளச் சொன்னார். சார்லஸும் நினைத்துக்கொள்ள, அடுத்த சில நொடிகளில், டைனமோவின் கைபடாமலேயே அந்த 'இளவரசச் சீட்டு’ கட்டில் இருந்து தனியே பிரிந்து அந்தரத்தில் மிதந்தது. வியப்பில் விக்கித்துப்போனார் சார்லஸ். டைனமோவுக்கு 'ராஜ வெளிச்சம்’ கிடைத்தது. 2007-ம் ஆண்டு சார்லஸின் ட்ரஸ்ட் நடத்திய விழா ஒன்றில், நடிகர் வில் ஸ்மித் உள்ளிட்ட வி.வி.ஐ.பி-க்கள் முன்னிலையில் சில நிமிடங்கள் மேடையேறும் வாய்ப்பு டைனமோவுக்கு அமைந்தது. இதில் அசத்தினால், அது நிரந்தர விசிட்டிங் கார்டு என உள்மனம் அடித்துச் சொன்னது.

மேடை ஏறிய டைனமோவிடம், தொகுப்பாளினி ஏதோ கேள்வி கேட்க, அவர் 'எக்ஸ்கியூஸ் மீ...’ எனத் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஒரு போலோ மிட்டாயை வாயில் போட்டார். அடுத்த நொடியில் அது அவரது தொண்டைக்குள் சிக்கியதுபோல இருமினார். தன் கழுத்து செயினைக் கழற்றினார். அதைக் கொண்டு தன் கழுத்தை இறுக்கினார். செயினின் இரு முனைகளும் டைனமோவின் கைகளில் இருக்க, அதன் நடுப்பகுதி கழுத்தைத் துளைத்து தொண்டைக்குள் சென்றது. மீண்டும் அதைப் பிடித்து வெளியே இழுத்தார். செயின் போலோவை ஒரு டாலர்போல அணிந்துகொண்டு வெளியில் வந்தது. ஒரு துளி ரத்தம் இல்லை, சிறு காயம் இல்லை. அரங்கமே வெளிறிப்போனது.  வில் ஸ்மித் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, டைனமோவின் திறமையை வார்த்தைகளால் உச்சி முகர்ந்தார். டைனமோவின் புகழ் ஒளி, எல்லைகள் தாண்டியும் பரவ ஆரம்பித்தது.

அபுதாபியில் உலக பில்லியனர் ரிச்சர்டு பிரான்ஸனுடன் டின்னர் உண்ணும் வாய்ப்பு டைனமோவுக்கு. அவரது மகன் சாம் பிரான்ஸன் டைனமோவின் ரசிகர். தந்தையிடம் அறிமுகப்படுத்தினார். டைனமோ ஒரு நாணயத்தை தன் கையில் இருந்து மறையச் செய்து, ரிச்சர்ட்டின் கைக்கடிகாரத்துக்கு அடியில் இருந்து எடுத்தார். அடுத்த சில நொடிகளில் அவரது கைக்கடிகாரத்தையும் காற்றில் மறையவைக்க, அந்த பில்லியனர் துள்ளி எழுந்தார். சட்டென அந்தத் திறமைசாலி முன் மண்டியிட்டு மரியாதை செலுத்தினார். டைனமோ சிலிர்த்துப்போனார். சிறு வயதில் உருவத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட இந்தப் பிறவியை, இன்று உலகக் கோடீஸ்வரர் தலைவணங்கிக் கௌரவப்படுத்துகிறார். கண்கள் கசிந்தன.

மேஜிக் வாய்ப்புகள் வளமாகின. வருமானமும் பலமானது. ஆனால், அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தவித்தார் டைனமோ. டி.வி-யில் ஒரு ஸ்லாட்டுக்காக ஏங்கினார். சேனல்கள் தண்ணி காட்டின. ஒருமுறை சேனல்4 எக்ஸிகியூட்டிவ் முன் மேஜிக் வீடியோவை டெமொ செய்தபோது, அவர் மொபைலை நோண்டியபடி கொட்டாவி விட்டார். 'நிகழ மறுத்த அற்புதமாக’ டி.வி வாய்ப்பு தள்ளிக்கொண்டேபோனது. ஒருகட்டத்தில் தன்னுடன் இணைந்து வேலை செய்ய நல்ல ஓர் அணியை உருவாக்கி, தானே களத்தில் இறங்கினார் டைனமோ. ஷோவுக்கான பெயர் Dynamo : Magician Impossible.

தெருக்களில் இறங்கினார். மக்கள் மத்தியில் சின்னச் சின்னதாக மேஜிக் செய்தார். கண்ணாடி சுவர் ஒன்று இருக்க, அது இல்லாததுபோல அதனுள் உட்புகுந்து சாதாரணமாக நடந்துபோனார். ஓர் இடத்தில் நடந்துகொண்டிருக்கும்போதே, மேலாடை மட்டும் சட்டென தரையில் படர, டைனமோ காற்றில் கரைந்துபோனார். மக்கள் ஆச்சர்யத்தில் உறைந்துபோக, அவை அனைத்தையும் படம் பிடித்தார்கள். அப்படியே பிரபலங்களையும் தேடிப் போனார் டைனமோ. ஸ்டூலில் உட்கார்ந்து இருந்த நடிகை லிண்ட்ஸே லோஹனின் ஒரு கையை தன் ஒரு கையால் பிடித்தார். லிண்ட்ஸேவை அப்படியே ஸ்டூலில் இருந்து ஒருசில அடிகள் மேலே மிதக்கவைத்து தரை இறக்கினார்.  Tinie Tempah என்ற ராப் பாடகர் முன்னிலையில் அவரது சி.டி ஒன்றை எடுத்து, அதன் அட்டைப் புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த சன் கிளாஸை நெற்றிக்கு உயர்த்தினார். உச்சபட்சமாக ஒருநாள் டைனமோ எந்த அறிவிப்பும் இல்லாமல் லண்டனின் தேம்ஸ் நதியில் இறங்கி, தரையில் நடப்பதுபோல் நீர் மேல் சாதாரணமாக நடக்க ஆரம்பித்தார். திகைப்பில் கூடிய கூட்டம், தங்களையே கிள்ளிப் பார்த்துக்கொண்டது. தேம்ஸில் டைனமோவின் நடை, செய்தித்தாள்களில் இடம்பிடித்தன. யு கே டி.வி-யில் டைனமோவின் நிகழ்ச்சிக்கு நேரம் கிடைத்தது.

'மேஜிஷியன் இம்பாஸிபிள்’ நிகழ்ச்சியின் முதல் அத்தியாயம், 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்த அடுத்த சில மணி நேரங்களில், டைனமோ ட்விட்டரில் டிரெண்டு. ஃபேஸ்புக்கில் சில ஆயிரம் லைக் பெற்று இருந்த அவரது பக்கம், ஒரே இரவில் அரை மில்லியன் லைக் தொட்டது. யுகே டி.வி-யின் வரலாற்றில் முதன்முறையாக 1.3 மில்லியன் பார்வையாளர்களை ஒரு நிகழ்ச்சி பெற்றது. இமாலய வெற்றி. அடுத்து இதைவிடப் பெரிதாக, வித்தியாசமாக என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி டைனமோவைத் துரத்த ஆரம்பித்தது.

அசரவில்லை. புதிய புதிய யோசனைகளுடன் மேஜிக்குக்குப் புதிய பரிமாணம் கொடுக்க ஆரம்பித்தார் டைனமோ.

ஒருநாள் மாலை, 80 அடி உயர லாஸ் ஏஞ்சலஸ் டைம் கட்டடத்தின் உச்சியில் இருந்து எதையும் பிடிக்காமல் கீழ்நோக்கி கிடைமட்டமாக நடந்து வந்தார். ரியோ டி ஜெனீரோ நகரின் புகழ்பெற்ற மீட்பர் இயேசு சிலையின் கீழ் நின்று, மக்கள் மத்தியிலேயே இயேசு போல கைகள் விரித்து காற்றில் எழுந்தார். இப்படி புவியீர்ப்பு விசைக்கு எதிராக, டைனமோ செய்யும் மேஜிக்குகள் ஏராளம். 2014-ம் ஆண்டு மேஜிஷியன் இம்பாஸிபிள் சீஸன்-4, வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. 192 நாடுகளில் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி, டைனமோவுக்குக் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. நூற்றாண்டு கடந்த லண்டனின்         'தி மேஜிக் சர்க்கிள்’ அமைப்பு, உலகில் உள்ள லட்சக்கணக்கான மேஜிக் நிபுணர்களில், சுமார் 300 பேருக்கு மட்டுமே 'கோல்டு ஸ்டார்’ அந்தஸ்து வழங்கியுள்ளது. அதில் டைனமோவும் ஒருவர்.

க்ரோன் நோயின் அவஸ்தைகள் தொடர்ந்தாலும் அதையெல்லாம் மேஜிக்கால் மறந்துவிட்டு, புதிய உயரங்களைத் தொட்டுக்கொண்டே இருக்கிறார் டைனமோ. அந்த ஒல்லி மனிதரின் வாழ்நாள் இலக்கு... ' 'மேஜிக்’ எனச் சொன்னாலே டைனமோவின் பெயர் நினைவுக்கு வர வேண்டும். அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்’!

டைனமோ டௌன்... டௌன்!

நம்பர் 1 டைனமோ - 16

லண்டனில் ஓடும் இரண்டு மாடி பஸ்ஸுக்கு வெளியே, அதன் மேல் பாகத்தை தன் வலது கையால் மட்டும் பிடித்தபடி, நகரை வலம்வந்தது டைனமோவின் லேட்டஸ்ட் ஹாட் மேஜிக். ஆனால், டைனமோ ஊரை ஏமாற்றுகிறார். அவர் மேஜிஷியனே அல்ல. அவர் தேம்ஸ் நதியில் நடந்தது இப்படித்தான், லாஸ் ஏஞ்சலஸ் டைமில் நடந்தது இப்படித்தான், லிண்ட்ஸே லோஹனை மிதக்கவைத்தது இந்த முறையில்தான் என டைனமோவின் மேஜிக்கை உடைக்கும் தியரிகளை, பலரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் டைனமோ, லண்டனின் 1,016 அடி உயர ஷார்டு டவரின் உச்ச கோபுரங்களுக்கு இடையில் அந்தரத்தில் மிதந்தபோது, அவருடன் கட்டப்பட்டிருந்த கயிறு தெரிந்தது என விவகாரம் கிளம்பியது. இந்தச் சர்ச்சைகளுக்கு எல்லாம் டைனமோ அமைதியாகச் சொல்லும் ஒரே பதில், 'மேஜிக் என்பது மக்களை ஏமாற்றுவதோ, முட்டாள் ஆக்குவதோ அல்ல. அவர்களுக்கு ஆச்சர்யத்தைப் பரிசாக அளிப்பது, வியப்பை விருந்தாகத் தருவது, அற்புதக் கணங்களை உருவாக்கித் தருவது... அவ்வளவே. நான் செய்யும் மேஜிக்குகள் சாதாரணமானவையே. அதன் தியரியை விளக்க ஆரம்பித்தால், உங்களால் ஒரு நிமிடம்கூட முழுதாகக் கேட்க முடியாது. என் மேஜிக்கை மட்டும் ரசியுங்கள். அதன் பின் உள்ள ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்’!

கங்கை மேஜிக்!

நம்பர் 1 டைனமோ - 16

திடீரென மக்கள் மத்தியில் தோன்றி, அங்கு உள்ள சாதாரண பொருட்களைக்கொண்டு அற்புத மேஜிக்குகளை நிகழ்த்துவார் டைனமோ. மக்கள் ஆச்சர்யத்தில் உறைந்து நிற்கும் நொடியில் இயல்பாக நடந்து போய்விடுவார். 'மேஜிஷியன் இம்பாஸிபிள்’ நிகழ்ச்சிக்காக இந்தியா வந்த டைனமோ, மும்பை, வாரணாசியில் நிகழ்த்திய ஸ்ட்ரீட் மேஜிக் நிகழ்ச்சி படு ஹிட். எபிசோடின் இறுதியில் இரவில் கங்கை நதியில் மிதக்கவிடப்பட்டு, அணைந்த விளக்குகளை எல்லாம், காற்றில் தன் கை அசைவில் எரியவைக்கும் டைனமோவின் மேஜிக் சிலிர்ப்பின் உச்சம்!