மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 03

அஞ்ஞானச் சிறுகதைகள்
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

ன்ஷூரன்ஸ் ராமலிங்கம், யாராவது மாட்டுவார்களா எனப் பார்த்தபடி நின்றார். கட்டுமஸ்தான ஒருவன் எதிரே வரவும் உற்சாகமானார். வந்தவன், ''வணக்கம் சார்... உங்களைத் தேடித்தான் வந்தேன். லைஃப் இன்ஷூரன்ஸ் முடிஞ்சுபோச்சு'' என்றான்.   

அஞ்ஞானச் சிறுகதைகள் - 03

ராமலிங்கம் குழப்பமாக, 'ஏற்கெனவே நீ கட்டிருக்கியா... ஞாபகம் இல்லையே?'' என இழுத்தார். அதிகமான பாலிசிதாரர்களைச் சேர்த்துவிட்டதால், சமயங்களில் முகங்கள் மறந்துவிடுகிறது.

'அது சரி... ஒண்ணும் பிரச்னை இல்லை. ரெனியூவல் பண்ணிக்கலாம். இப்போ வாகனங்களுக்குக்கூட நான் இன்ஷூரன்ஸ் ரெடி பண்ணித் தர்றேன். வாகனம் ஏதாவது வெச்சிருக்கியா?'' எனப் புன்னகைத்தார்.

'வாகனம்... இதோ பக்கத்தில்தான் நிக்குது. வாங்க'' என்றான் அவன். ராமலிங்கம் எட்டி நடந்தார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 03

''உங்களைத் தேடித்தான் வந்தேன். உங்க லைஃப் இன்ஷூரன்ஸ் முடிஞ்சுபோச்சு'' என மீண்டும் சொன்னவனின் கைகளில் ஒரு சுருள் கயிறு இருப்பதை அப்போதுதான் கவனித்தார். அவர் சுதாரிப்பதற்குள் திருப்பத்தில் அவன் வாகனம் நின்றிருப்பதைப் பார்த்தார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 03

கறுப்பாக, தலையில் இரு கொம்புகளுடன்!

(சஸ்பென்ஸ் விலக, மஞ்சள் மனித முகத்தை தலைகீழாகப் பார்க்கவும்!)

'மொபைலில் ஆயிரம் ஸ்மைலி ஸ்டிக்கர் இருக்குது. ஆனா, முகத்துக்கு நேரா புன்னகைக்க நேரம் இல்லை’ என்கிறான் கார்ப்பரேட் சித்தன்!

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது நம்மூர் பழமொழி. இது ஜேவியர் பெரேஸுக்குத் தெரியுமா என எனக்குத் தெரியாது. ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கிராபிக் டிசைனர், பெரேஸ். குண்டூசி முதல் சட்டை பட்டன் வரை அன்றாடம் உபயோகிக்கும் சின்னச் சின்ன பொருட்களைக்கூட கலைநயத்துடன் மாற்றுகிறார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 03

தான் உண்டு தன் கணினி உண்டு என இருந்தவருக்கு, 2012-ம் ஆண்டின் கோடை காலத்தில் இப்படி ஓர் ஐடியா தோன்றியது...

இரண்டு சி.டி-களைக் கண்களாக வைத்து, மீதி உருவத்தைக் கோட்டோவியமாக ஓர் ஆந்தை படம் வரைந்திருக்கிறார். அதை இன்ஸ்டாகிராமில் ஏற்றி பார்வைக்குவிட, அந்த மினிமலிச கிரியேட்டிவிட்டி, மேக்ஸிமம் லைக்ஸ் குவித்திருக்கிறது.

கட்டிங் பிளேயரையே கால்களாகக்கொண்ட கவ்பாய், பேப்பர் கிளிப் ட்ரம்பட், ஸ்பைரல் சுருள் முதலையின் முகம் என, சின்னச்சின்ன பொருட்களுடன் லைன் ட்ராயிங் சேர்க்க, அவருடைய படைப்புகள், நெட்டிசன்களின் லைக்குகளாலும் ஷேர்களாலும் படைத்தது எல்லாம் 'வைரலாறு’!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 03

இப்படி... ''சின்னச்சின்ன பொருட்களில் எப்படி ஐடியா பிடிக்கிறீர்கள்?'' எனக் கேட்டால், 'இந்தச் சின்ன பொருட்கள் மிக அழகானவை. ஆனால், அதை என் ஓவியத்தில் சேர்ப்பது வழியாக அதற்கு மேலும் ஒரு பரிமாணத்தை நான் கொடுக்கிறேன்' என்கிறார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 03

இவரின் கைவண்ணத்தில் ஒரு பூ, கிராமபோன் ஓவியமாக மாறியிருக்கிறது. 'அந்தப் பூவுக்காக ஒரு குழந்தையைப்போல தினமும் தெருத்தெருவாக அலைந்தேன். கடைசியில் என் வீட்டுக்குப் பின்புறத்தில் அதைக் கண்டெடுத்தேன்’ என 'ரசவாதி’ நாவலில் வரும் சான்டியாகோபோல குதிக்கிறார்.

பெரிய பெரிய விஷயங்களில் மட்டும் அல்ல, இதுபோல சின்னஞ்சிறிய விஷயங்களில்கூட அழகும் கலையும் வாழ்க்கையும் இருக்கிறது என இன்ஸ்டன்ட் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் இந்த இன்ஸ்டாகிராம் கலைஞன்!

இன்டர்ஸ்டெல்லர் புக் செல்ஃபும்,  இலக்கிய வாசகனும்!

2016-ம் ஆண்டு புக்ஃபேர் ஆரம்பித்தபோது விண்வெளிக்குக் கிளம்பிய வாசகன், வார்ம்ஹோல் வழியாக காலத்தில் சறுக்கிக்கொண்டு வந்து விழுந்த இடம் எது என முதலில் புரியவில்லை. புக் செல்ஃப்களுக்கு மத்தியில்தான் இருக்கிறோம் என்பதைப் பிறகு உணர்ந்தான். மிதந்தபடி புத்தகங்களின் இடைவெளி வழியாக, வெளியே எட்டிப் பார்த்தபோது சிலவற்றைக் கவனித்தான். காலம், மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களின் பல ஸ்க்ரீன்கள்போல வெவ்வேறு படங்களாக ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு சிறுவன் ஜாலியாக பூந்தளிர், ராணி காமிக்ஸ், சிறுவர் மலர் பலமுக மன்னன் ஜோ... ஆகியவற்றை ரசித்துப் படித்துத் திரிவதைப் பார்த்தான். அது அவனேதான் என்பதைக் கண்டு வியந்தான். இலக்கிய விசனமோ விம்மலோ இல்லாத அந்தச் சிறுவன், காக்கைக் காளியையும் வேட்டைக்கார வேம்புவையும் படித்து ரசித்துச் சிரிப்பதைப் பார்க்கும்போது, இப்போது இவனுக்குப் பொறாமையாக இருந்தது. தான் அப்படியே இருந்திருக்கலாமோ என நினைத்துக்கொண்டான். அடுத்த புத்தக அடுக்கை நோக்கி மிதந்து சென்று, ஒரு புத்தகத்தை விலக்கி எட்டிப்பார்த்தான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 03

அங்கே தான் 8-ம் வகுப்பு படிக்கும் காலத்தை கண் முன்பு கண்டான். திகிலும் மர்மமும் நிறைந்த மாத நாவல்களும் சினிமா சேதிகளும் அரசியல் அரட்டைகளும் நிறைந்த வாரப் பத்திரிகைகளை, கைகளில் வைத்துக்கொண்டு தான் திரிவதைப் பார்த்தபோது அவனுக்கு கண்ணீர் மல்கியது. பல கொலைகள் கண் முன்னால் நடப்பதையும், ரத்தம் சிதறுவதையும், துப்பறியும் நிபுணர்களுக்கு அவர்களின் நளினமான பெண் உதவியாளர்கள் பாயின்ட்கள் எடுத்துக் கொடுப்பதையும் அவன் பார்த்தான்.  

சற்று தள்ளி இன்னொரு புத்தகத்தை விலக்கிப் பார்த்தபோது, தான் 10-ம் வகுப்பில் நண்பர்களுடன் காடு-மேடுகளில் ஒளித்துவைத்து ஏதோ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். இவன் வாசித்துக்காட்ட நண்பன் ஒருவன் ஜொள்ளு ஒழுகக் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு கைகளில் சமூகத்தையே கேள்விக்குள்ளாக்கும் கவிதைப் புத்தகங்களும் கதைப் புத்தகங்களுமாக அவன் திரிவதைக் கவனித்தான். ராதுகா பதிப்பகப் புத்தகங்களின் ஸ்டெஃபி புல்வெளியினூடாகத் திரிவதையும், அவன் முகத்தில் புரட்சி ஒரு தீப்பிழம்பாக எப்போதும் இருப்பதையும் கவனித்தான். தன்னை ஒரு போராளியாகக் கற்பனை செய்துகொண்டு, புரட்சிக்கான தருணத்தை எண்ணியபடி நாட்களைக் கடத்துவதைப் பார்த்தான்.

பிறகு, வாசகன் மீண்டும் காலத்தின் வெற்றிடத்தில் நீந்தியபடி இன்னொரு புத்தக அடுக்கை நெருங்கி, இடைவெளியினூடாக எட்டிப்பார்த்தான். இப்போது அவன் நவீன இலக்கிய வாசகன் ஆகிவிட்டிருந்த சமீபகாலங்களை, கண்ணாடியில் தெரியும் பிம்பம்போல பார்த்தான். ஒரு மிதப்பு அவன் கண்களில் தெரிந்தது. இந்திய ஞான மரபுகளில் இருந்து மார்கேஸின் லத்தீன் அமெரிக்க மகோந்தா நகரம் வரைக்குமான, பரந்து விரிந்த தன் அறிவை அவனே வியந்து திரிந்தான். இலக்கிய அரசியலின் நுட்பங்களையும் அறச் சிக்கல்களையும் அவன் கேள்விகேட்டுத் திரிவதையும் பார்த்தான். இலக்கியவாதிகள் போடும் சண்டை, சச்சரவுகளினால் பலன் அடைவது வாசகனா... இலக்கியமா... இலக்கியவாதியா... என்கிற பெரும்குழப்பம் அவனுக்கு இருப்பதை அவன் கவனித்தான். மூன்றும்தான் எனச் சமாதானம் சொல்லிக்கொள்கிற பக்குவமும், தனக்கு வந்திருப்பதைக் கண்டு பெருமைகொண்டான். பிறகு மெள்ள விலகி, மீண்டும் முதலில் பார்த்த புத்தக அடுக்கை நோக்கிச் சென்று எட்டிப்பார்த்தான்.

அங்கே அவன் வாண்டு மாமாவின் மடியில் கிடந்து, கதை கேட்பதைக் கண்டு, தனக்குத்தானே பெருமூச்சு விட்டுக்கொண்டு, காலத்தில் ஏறி, மீண்டும் பூமியை நோக்கி பீதியுடன் திரும்பினான்.

ஆனால், அங்கே 2085-ம் ஆண்டு புக்ஃபேர் நடந்துகொண்டிருந்த தளத்தில் வந்து இறங்கிவிட்டான். புத்தகங்கள் எல்லாம் மின்னணு வடிவில் விற்பனையாவதைக் கண்டு வெளியே வந்தவன், மக்கள் திரளாக லிச்சி ஜூஸ் குடிப்பதையும், அப்பளத்தில் மிளகாய்த் தூள் போட்டு உடைத்து உடைத்துச் சாப்பிடுவதையும் பார்த்ததும் மிகுந்த பரவசத்துக்கு உள்ளானான்!