மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 ஜோஷ்வா வோங் - 17

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

மெரிக்காவின் ஃபார்ச்சூன் இதழ், கடந்த மே மாதம் இறுதியில் 2015-ம் ஆண்டின் உலகின் சக்திமிக்க 50 தலைவர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் மூன்றாம் இடம், தற்போதைய சீனா அதிபர் ஸீ ஜின்பிங்குக்கு; அதே பட்டியலில் 10-வது இடத்தில் இருப்பவர் ஹாங்காங்கைச் சேர்ந்த இளைஞன்  ஜோஷ்வா வோங்... வயது 18. இன்று இந்த வோங் என்ற சிற்றெறும்புதான், மகா பலம் பொருந்திய சீன டிராகனின் காதினுள் புகுந்து 'அரசியல் ஆட்டம்’ காட்டிக்கொண்டிருக்கிறது. இந்தச் சிற்றெறும்பைத் தன் 'கறுப்புப் பட்டியலில்’ கொட்டை எழுத்தில் எழுதிவைத்து, நசுக்கக் காத்திருக்கிறது சீனா அரசு. அப்படி என்ன பயம் காட்டிவிட்டார் வோங்? முதலில், யார் இவர்?

1996-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, ஹாங்காங்கில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஜோஷ்வா வோங். மாத வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் சாதாரணக் குடும்பம். பள்ளிக் கல்வியிலேயே 'பாடச்சுமை’ அதிகம். உயர்நிலைப் பள்ளியில்

'ஏ கிரேடு’ பெற்றால் மட்டுமே, ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைக்கும். அங்கே எதிர்நீச்சல் அடித்து, டிகிரி முடித்து, வேலை தேடி, திருமணம் செய்து, குழந்தை, சொந்த வீடு, கார்... வோங்கின் பெற்றோரும் இந்த ஸ்டீரியோ டைப் வாழ்க்கைக்கு வாக்கப்பட்டவர்களே. அவனது தந்தை ரோஜர், ஐ.டி நிறுவன ஊழியர்; தாய் கிரேஸும் சிறிய வேலை ஒன்றில் இருப்பவர். ஒழுங்காக சர்ச்சுக்குச் செல்லும் கிறிஸ்துவக் குடும்பம்.

நம்பர் 1 ஜோஷ்வா வோங் - 17

வோங்கை பள்ளியில் சேர்த்த சில வருடங்களுக்குப் பிறகுதான், அவனுக்கு எழுதுவதில், படிப்பதில் குறைபாடு இருப்பது தெரியவந்தது. டிஸ்லெக்ஸியா. எழுத்துக்களும் எண்களும் கண்கள் முன்பு நடனமாடும்; சொற்களை உச்சரிப்பதில் தடுமாற்றம் இருக்கும்; படித்தவற்றை நினைவில் வைத்திருப்பது சிரமம். இந்தக் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் கூனிக்குறுகி மற்ற குழந்தைகளுடன் சேராமல் விலகியே இருப்பார்கள். மகனின் குறைபாட்டைத் தெளிவாக உணர்ந்திருந்த ரோஜரும் கிரேஸும் வோங்கை மனம் தளரவிடவில்லை. நேரம் ஒதுக்கி, பொறுமையாக அவனுக்கு எழுத்துக்களைப் பழக்கினார்கள். கிரேடு குறைகிறதே என பரேடு நடத்தவில்லை. அவனை இயல்பான மாணவனாக உருவாக்க உள்ளன்புடன் உழைப்பைக் கொட்டினார்கள். காலப்போக்கில் வோங், எழுத்து மயக்கத்தில் இருந்து தெளிந்து எழுந்தான்.

சிறு வயதில் இருந்தே வீடியோ கேம்களிலும் கார்ட்டூன் சேனல்களிலும் ஆர்வம்கொண்ட சராசரி சிறுவனாகவே வோங் வளர்ந்தான். கற்பனை உலகில் சஞ்சரிக்கும் மகனுக்கு, நிஜ உலக நிதர்சனங்களையும் உணர்த்த நினைத்தார் ரோஜர். வோங்கை, ஹாங்காங்கின் சேரிப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். 'ஒரு பக்கம் மனிதர்கள் வாழ்ந்து கொழிக்கிறார்கள்; இன்னொரு பக்கம் இப்படியும் வறுமையில் உழலுகிறார்கள்’ என, சமுதாய ஏற்றத்தாழ்வைப் புரியவைத்தார். சமூக அக்கறையையும் அவனுள் விதைத்தார். அதே உணர்வுடன், வோங் தன் ஆசிரியரிடம், 'சமூகத்துக்கு நாம் எப்படி நன்மை செய்ய வேண்டும்?’ என ஒருமுறை கேட்டான். அவர் சொன்ன அல்ட்டிமேட் பதில், 'நன்றாகப் படித்து பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் இணைந்து அதிகம் சம்பாதித்து, ஏழைகளுக்குத் தர்மம் செய்ய வேண்டும்’!

வார இறுதிகளில் நடக்கும் பைபிள் வகுப்புகளில், மாணவர்கள் முன்பு பேச, கதை சொல்ல, பாட...  வோங்குக்கு வாய்ப்புகள் அமைந்தன. மேடை பயம் விலக, கூட்டத்தினரை ஈர்க்கும்படி பேசுவது எப்படி என்ற வித்தை அவனுள் இயல்பாகவே வளர்ந்தது. 2009-ம் ஆண்டு தீவுப் பகுதியான ஹாங்காங்கையும் மெயின்லேண்ட் சீனாவையும் இணைக்கும் விதத்தில் அதிவேக ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஒன்று அப்போது ஆரம்பிக்கப்பட இருந்தது. அமெரிக்க மதிப்புப்படி திட்ட மதிப்பு 9 பில்லியன் டாலர். ஆனால், 50 ஆண்டுகள் ரயில் ஓடினால் மட்டுமே போட்டதை எடுக்க முடியும். தவிர, ஹாங்காங்கின் சில கிராமங்களை அழித்துதான் ரயில் பாதை அமைய இருந்தது. அதில் ஏகப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்னைகள் வேறு. அந்த ரயில் திட்டத்தை எதிர்த்து 2009-ம் ஆண்டின் மத்தியில் ஆரம்பித்த மக்கள் போராட்டம், வருடங்கள் பல தாண்டியும் நீண்டது. இந்தப் போராட்டம் தொடர்பான செய்திகளை, விவாதங்களை உன்னிப்பாகக் கவனித்தான் வோங். ஒருமுறை கும்பலோடு கும்பலாக ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டான். ஆனால், ஒருகட்டத்துக்குப் பிறகு போராட்டம் வலுவிழந்து, தோல்வியடைந்தது.

14 வயது வோங்குக்கு, பெருத்த ஏமாற்றம். சமூகத்தைப் பாதிக்கும் எனத் தெரிந்தே அரசு ஒரு திட்டத்தைக் கையில் எடுத்தால், அதை ஒருபோதும் மக்களால் தடுத்து நிறுத்தவே முடியாதா? வோங், யோசிக்கத் தொடங்கினான்!

வோங் யோசித்துக்கொண்டிருக்கட்டும். அதற்குள் நாம் ஹாங்காங்கின் வரலாற்றை சற்றே புரட்டிப்பார்த்துவிடுவது மேற்கொண்டு நகர வசதி.

மெயின்லேண்ட் சீனாவுக்குத் தெற்குக் கடல் பகுதியில் கிடக்கும் ஒரு துண்டு தீவுப் பகுதியே ஹாங்காங். சற்றே பெரிய மீனவக் கிராமம். பண்டைய சீன ராஜ்ஜியத்தோடு இணைந்ததே 19-ம் நூற்றாண்டில்தான். தேயிலை வர்த்தகத்தில் சர்வாதிகாரம் செய்துகொண்டிருந்த சீனாவை முடக்க, கிழக்கு இந்திய கம்பெனியினர் சீனாவில் அபினைப் புகுத்தும் நாச வேலையில் ஈடுபட்டனர்.

சீனாவுக்கும் இங்கிலாந்துக்கும் 'அபின் போர்’ நடந்தது. சீனா தோற்று, தன் பல பகுதிகளை இழந்தது. அதில் ஹாங்காங்கும் ஒன்று. கி.பி.1842-ல் சீனாவிடம் இருந்து '155 வருடக் குத்தகைக்கு’ ஹாங்காங்கைப் பறித்துக்கொண்டது இங்கிலாந்து. அதைத் துறைமுக நகரமாக மாற்றத் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்து, உலகம் எங்கும் தன் காலனிகளை விலக்கிக் கொண்டாலும், ஹாங்காங்கை விடவில்லை. அதன் பின் ஆசியாவின் மிக முக்கிய வணிக மையமாக ஹாங்காங் வளர ஆரம்பித்தது. இங்கிலாந்து தன் வணிக லாபங்களுக்காக, அங்கே சலுகைகளை அள்ளித் தந்தது. வரிகள் மிகக் குறைவு, தொழில் தொடங்க லைசென்ஸ் தேவை இல்லை, கார்ப்பரேட்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு... இப்படி நிறைய.

சீனக் குடியரசின் கம்யூனிஸக் கொள்கைகள் எதுவுமே ஹாங்காங் மீது படர முடியவில்லை. அது, ஆசியாவில் ஓர் ஐரோப்பியத் தேசத்துக்கு உரிய வளர்ச்சியுடன் உயர்ந்து நின்றது. இவை எல்லாம் 1997-ம் ஆண்டு வரை. அப்போது இங்கிலாந்தின் 155 வருடக் குத்தகைக் காலம் முடிவுக்கு வந்தது. எனில், இனி ஹாங்காங் சீனாவுக்கா?

அதில் பல சிக்கல்கள் இருந்தன. சீனாவின் மூடிய பொருளாதாரக் கொள்கைகளும், ஹாங்காங்கின் திறந்த பொருளாதாரக் கொள்கைகளும் ஆகாத மாமியார் - வேண்டாத மருமகள். தவிர, வலதுசாரி இயல்புக்குப் பழகிய ஹாங்காங் குடிமக்கள், சீனாவின் இடதுசாரிக் கிடுக்கிப் பிடிக்குள் சிக்க விரும்பவில்லை. சீனாவும் ஹாங்காங்கின் வணிக வளங்களை இழக்க விரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழலில் இங்கிலாந்தும் சீனாவும் ஒரு முடிவுக்கு வந்தன. ஒரு நாடு-

நம்பர் 1 ஜோஷ்வா வோங் - 17

இரு கொள்கைகள். அதாவது ஹாங்காங்கின் வணிகச் சுதந்தரத்தில் சீன அரசு தலையிடாது. வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளை மட்டும் பார்த்துக்கொள்ளும். எனில், ஹாங்காங்கை ஆள்வது? அதற்கு என்ன, வணிக நகரம்தானே. சீனாவின் 'சிறப்பு நிர்வாகப் பிரதேசமாக’ ஹாங்காங் 1997-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்பட்டு, அதை நிர்வகிக்க ஒரு தலைமை நிர்வாகியை நியமித்தது.

அதாவது அம்பானியும் அதானியும் நம் தேசத்தை நேரடியாக ஆண்டால் எப்படி இருக்கும்... அதே. ஹாங்காங்கை ஆளும் (சீன ஆதரவு பெற்ற) பெருமுதலாளி. அவருக்குக் கீழ் ஒரு தலைமைச் செயலாளர். சட்டம், நிதி, போக்குவரத்து என ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட அளவில் உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் அடங்கிய 1,200 பேர் கொண்ட குழு உண்டு. 70 சட்டமன்ற உறுப்பினர்களும் அதில் அடக்கம். 70-ல் 40 பேர் மட்டும் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். ஏனையோர் தொழிலதிபர்கள். இந்த 1,200 பேரும் வாக்களித்து 'தலைமை நிர்வாகி’யைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த அரசியலமைப்பு முறையும் 2047-ம் ஆண்டு வரை மட்டுமே. அதன் பின் ஹாங்காங் சீனாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். இதுவே, இங்கிலாந்து - சீனா 1997-ம் ஆண்டு போட்டுக்கொண்ட புதிய ஒப்பந்தம்.

வருங்காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வரவிருக்கும் ஹைஃபை ஹாங்காங் இளைய தலைமுறையினரின் சிறகுகளை எல்லாம் முறித்து, இப்போதே 'கம்யூனிஸம் நல்லது’ என மூளைச்சலவை செய்துவிட்டால் வசதி அல்லவா. ஆகவே, 2012-ம் ஆண்டு ஹாங்காங் கல்வித் திட்டத்தில் கைவைத்தது சீன அரசு. Moral and National Education என்ற பெயரில் புதிய கல்வித் திட்டத்தைப் படிப்படியாக அமல்படுத்தவிருப்பதாகச் சொன்னது. 'ஜனநாயகம் ஆகாது... கம்யூனிஸமே சாலச் சிறந்தது’ என மாணவர்களை மறைமுகமாக அது மூளைச்சலவை செய்யும். அதிர்ந்துபோனான் ஜோஷ்வா வோங்... அவனைப்போலவே பலரும். ஏற்கெனவே ஹாங்காங் மாணவர்களை சிறு சிறு குழுக்களாக, சீனாவுக்கு அழைத்துச்சென்று மாவோயிஸப் புகழைத் திணிக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன.

2011-ம் ஆண்டு வோங், தன் பள்ளியில் ஸ்காலரிஸம் (Scholarism)  என்ற அமைப்பைத் தொடங்கியிருந்தான். சமூகப் பிரச்னைகள் குறித்து, விவாதங்கள் நடத்தும் சிறு மாணவர் அமைப்பு அது. அதன் மூலமாக சீனக் கல்வித் திட்டத்தை எதிர்க்கலாம் என வோங்கும் மற்றவர்களும் முடிவெடுத்தனர். பெரிதாக ஒன்றும் இல்லை. நோட்டீஸ் விநியோகித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது... செய்தார்கள். வோங்கே எதிர்பாராதவிதத்தில் மாணவர்களின், பெற்றோர்களின் ஆதரவு பெருகியது. 'சீனக் கல்வி வேண்டாம்’ என்ற பெட்டிஷனில் 10 நாட்களில் 1 லட்சம் பேர் கையெழுத்து இட்டனர். அதில் ஆசிரியர்களும் அடக்கம். மாணவர்கள் ஏதோ 'புரட்சி’க்குத் தயாராகிறார்கள்போல என மீடியாவும் மைக்குடன் வந்தது. வோங், முன்நின்று குரல்கொடுத்தான். 'எங்களுக்குப் பின்வரும் தலைமுறையினர் தங்கள் சுதந்திரத்தை இழந்து, வெறும் பொம்மைகளாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட சீனக் கல்வித் திட்டத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள்’ - தெளிந்த சிந்தனையுடன், திடமான நோக்கத்துடன் உறுதியாக வந்த ஒரு மாணவனின் குரல் இது. வோங்கை ஒரு தலைவனாக மற்ற மாணவர்கள் நிமிர்ந்து பார்த்த தருணம் அது.

நம்பர் 1 ஜோஷ்வா வோங் - 17

ஸ்காலரிஸத்தைப் போலவே வேறு சில மாணவர் அமைப்புகளும் உருவாகின. 'இணைந்தே போராடுவோம்’ என வோங், அந்த அமைப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இறங்கினான். சீனக் கல்விக்கு எதிரான மக்கள் கூட்டணி உருவானது. சுமார் 90 ஆயிரம் பேர் திரண்டு ஹாங்காங்கின் முக்கிய வீதிகளில் அமைதியாக ஊர்வலம் சென்று எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால், 2012-ம் ஆண்டு ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகியாகப் பதவியேற்றிருந்த (வியாபாரக் காந்தம்) லியுங் சன்-யிங் (Leung chun-ying)  மாணவர் போராட்டத்தை மதிக்கவே இல்லை.

பொதுவாக ஹாங்காங்கில் செப்டம்பரில் புதிய கல்வி ஆண்டு தொடங்கும். ஆனால், ஆகஸ்ட் இறுதி வரை, எதிர்ப்புகளை அரசு கண்டுகொள்ளாததால், வோங் புதிய திட்டத்தை வகுத்தான். ஆகஸ்ட் 30-ம் தேதி வோங் தலைமையில் 'கறுப்பு டிஷர்ட்’ மாணவர்கள் அரசு தலைமைச் செயலகம் முன்பு திரண்டார்கள். ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து முற்றுகையிட்டார்கள். 'புதிய பாடத்திட்டம் வாபஸ் ஆகும் வரை போராட்டம் வாபஸ் பெறப்படாது’ - வோங் முழங்கினான். மூன்று பேர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்தனர். ஆனால், லியுங், பேச்சுவார்த்தை நடத்தக்கூட ஆள் அனுப்பவில்லை. பள்ளி திறந்தது. 'பள்ளிக்குச் செல்வோம். ஆனால், இரவு நேரத்தில் போராட்டம் தொடரும்’ என அறிவித்தான் வோங். அந்த செப்டம்பர் முதல் வாரத்தின் ஒவ்வோர் இரவிலும், தங்கள் பிள்ளைகளுக்காக பெற்றோரும் அந்த வளாகத்தில் குவிய ஆரம்பித்தனர்.

'லியுங், ஹாங்காங் மக்களுக்கு அடிப்படை மரியாதைகூட தர மாட்டாரா? நாங்கள் ஓயப்போவது இல்லை. இன்னும் பல்கிப் பெருகி எங்கள் எதிர்ப்பைத் தீவிரப்படுத்துவோம்’ - அந்த இரவில் வார்த்தைகளால் சீறினான் வோங். கூட்டம் ஆர்ப்பரித்தது. வகுப்புகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். செப்டம்பர் 7-ம் தேதி

1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பரிக்க, போராட்டம் உலகின் கவனம் பெற ஆரம்பித்தது. சீனா, 'விட்டுத்தொலை’ என சிக்னல் கொடுக்க, செப்டம்பர் 8-ம் தேதி அன்று, 'சீனக் கல்வித் திட்டம் இப்போது அமல்படுத்தப்படாது’ என அறிவித்தார் லியுங். பெரும் வெற்றி. மாணவர்கள் தங்கள் போராட்டத்தால் எழுதிய புதிய வரலாறு இது!

15 வயது வோங், ஹாங்காங்கின் 'இளம் தலைவர்’ அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதே சமயம் போன் ஒட்டுக்கேட்கப்படுதல், வேவு பார்க்கப்படுதல் உள்ளிட்ட அரசின் கண்காணிப்புக்கும், அநாமதேய மிரட்டல்களுக்கும் ஆளாவது வாடிக்கையானது. அந்த அக்டோபரில் வந்த வோங்கின் 16-வது பிறந்த நாளுக்கு, ஹாங்காங்கே வாழ்த்தியது. அடுத்த இரு வருடங்களில் 18 வயது. அப்போது டிரைவிங் லைசென்ஸ் வாங்கலாம்; மது அருந்தலாம்; திருமணம்கூட செய்துகொள்ளலாம். ஆனால், என்னால் ஓட்டு போட முடியுமா? தன்னை ஆளும் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகூட ஹாங்காங் குடிமகனுக்குக் கிடையாது என்பது அவலம் அல்லவா! ஏன் இதற்காகவும் போராடக் கூடாது? ஹாங்காங் குடிமகன்களின் சுதந்திரம் எல்லாம் 2047-ம் ஆண்டு வரைதானா? அதற்குப் பின் சீனாவின் அடிமைகளாக வாழவேண்டியதுதானா? முடியாது. வருங்காலத் தலைமுறையினர் சுதந்திரமாக வாழ வேண்டும். அந்தச் சுதந்திரத்தைப் பெற்றுத்தருவது இன்றைய தலைமுறையினரின் கடமை. முந்தைய போராட்டத்தில் கிடைத்த வெற்றி, வோங்குக்கு முழு மனோதிடத்தைக் கொடுத்தது.

ஸ்காலரிஸம் உறுப்பினர்களுடன் கலந்து பேசினார். 'நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல பொருட்களும் 'மேட் இன் சீனா’; நம் தலைமை நிர்வாகியும் ஏன் 'மேட் இன் சீனா’வாக இருக்க வேண்டுமா? 2017-ம் ஆண்டில், எந்த ஒரு ஹாங்காங் குடிமகனுக்கும் தலைமை அதிகாரிக்கான தேர்தலில் நிற்கும் உரிமை வேண்டும். அப்போது 18 வயது பூர்த்தியான நாம் ஒவ்வொருவரும் வாக்களித்து, நம் 'தலைமை நிர்வாகி’யைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனநாயகம் மலர வேண்டும். நாம் மாணவர்கள். நம்மிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. நாம்தான் இந்தப் போராட்டத்தின் முன்வரிசையில் நிற்க வேண்டும். அரசு என்பது மக்களுக்கானதே. எந்தக் காலத்திலும் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படக் கூடாது. அரசுதான் மக்களைக் கண்டு பயப்பட வேண்டும்.’ சிந்தனைத் தெளிவுடன் வோங் முன்வைத்த கருத்துக்களுக்கு ஆதரவு பெருகியது. இதற்கான போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்தன.

அந்தக் குரல்கள் வலுப்பெறவும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி சீன அரசு பம்மாத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. '2017-ம் ஆண்டு தேர்தலில் ஹாங்காங் மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், தலைமை நிர்வாகிக்கான வேட்பாளர்கள் மூன்று பேரை மட்டும் நாங்கள் அறிவிப்போம்.’ அதாவது, சீன பொம்மைகளில் சிறந்த பொம்மையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை. வோங், தன் அமைப்பினரோடு முழுநேரப் போராட்டங்களில் இறங்கினார். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஸ்காலரிஸம் உறுப்பினர்கள், வகுப்புகளைப் புறக்கணித்தனர்; தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். கூடாரங்கள் முளைத்தன. இந்தக் கூடாரங்களை நாங்கள் கலைத்துவிட்டால், எதிர்காலத்தில் சீன அரசின் கொள்கைப்படி, ஹாங்காங்கில் எந்த

ஒரு தனி மனிதனுக்கும் சொந்த வீடுகூட இல்லாமல் போய்விடும். ம்ஹூம்... நாங்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.

மற்ற அமைப்புகளும் மாணவர் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்துகொண்டன. 'லியுங் உடனே பதவி விலக வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டும்’ - அனைவரும் இணைந்தே ஓயாது முழங்கினார்கள். போராட்டம் சர்வதேச மீடியாவின் கவனம் பெற, சீன அரசு அந்தச் 'சிற்றெறும்பை’ நசுக்க நினைத்தது. செப்டம்பர் 26-ம் தேதி போலீஸ், வோங்கை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றது. ஏதோ ஓர் அறையில் அடைத்தது. தனிமைச் சிறை.

போராட்டக்காரர்கள் வெகுண்டு எழுந்தனர். 'வோங்கை விடுதலை செய்.’ நிலைமை தகிதகிக்க, போலீஸ் வன்முறையை ஏவிவிட்டது. ஆனால், போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தவில்லை. வோங் ஏற்கெனவே தெளிவாக அறிவுறுத்தியிருந்தார், 'எந்தச் சூழலிலும் நம் போராட்டம் சாத்வீகமானதாகத்தான் இருக்க வேண்டும்’ என்று.

பெப்பர் ஸ்ப்ரே, ரப்பர் குண்டு, கண்ணீர்ப்புகை, நீர்ப் பாய்ச்சித் தாக்குதல் என்ற போலீஸ் களத்தில் இறங்க, போராட்டக்காரர்களின் குடைகள் விரிந்தன. அதுவும் எங்கெங்கும் மஞ்சள் வண்ணக் குடை. காயம் அடைந்தாலும் அவர்கள் கலையவே இல்லை. மறுநாள் கூட்டம் மேலும் அதிகமானது. உலகம் எங்கும் மீடியாவில் ‘HongKong's Umbrella Revolution’  எனச் செய்திகள் வலம்வர ஆரம்பித்தன. வோங்கை விடுவிக்க, 'ஆட்கொணர்வு மனு’ தாக்கல் செய்யப்பட்டது. செப்டம்பர் 28-ம் தேதி வோங் விடுதலையானார். 'அரசின் தவறுகள் அதிகரித்தால், நம் வலிமை மேலும் அதிகமாகும்’ என வோங் சொல்ல, கூட்டத்தில் உற்சாக முழக்கம்.

'எப்போது வேண்டுமானாலும் அரசு தொலைத்தொடர்பைத் துண்டிக்கலாம். ஆகவே, ஃபயர்சாட்டில் இணைந்திருங்கள்’ என வோங் அறிவிக்க, அது அனைத்து மொபைல்களிலும் டௌன்லோடு ஆனது. (ஃபயர்சாட் என்பது இணையம், தொலைத்தொடர்பு இல்லாவிட்டாலும் அருகில் இருப்பவர்களுக்கு ப்ளூடூத் மூலமாக செய்தி பரப்பும் அப்ளிகேஷன்.) அந்தக் கூடாரங்களைக் கலைக்க, அரசு குறுக்கு வழிகளையும் நாடியது. போராட்டக்காரர்கள் போர்வையில் ரௌடிகளை ஏவிவிட்டு வன்முறையை அரங்கேற்றியது. ஆனால், மாணவர்கள் கட்டுக்கோப்பாக தங்கள் ஒற்றுமை குலையாமல் அமைதி காக்க, அரசின் முகத்தில் கரி.

அக்டோபர் 21-ம் தேதி அரசு நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தையும் சவசவ. 'நாம் கேட்பதை எல்லாம் அரசு தூக்கிக் கொடுத்துவிடாது. இருந்தாலும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது’ - வோங்கின் வார்த்தைகளில் உறுதி அதிகமானது. எங்கெங்கும் மஞ்சள் குடைகள் நிறைய, நவம்பரிலும் முற்றுகை தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் கைதுகள் அரங்கேறின. நவம்பர் 27-ம் தேதி, வோங் மறுபடியும் கைதுசெய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளிவந்த வோங், டிசம்பர் 1-ம் தேதி முதல், தன் சகாக்கள் சிலருடன் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கினார். உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு ஐந்தாவது நாளில் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. டிசம்பர் 9-ம் தேதி, பொதுமக்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் இடையூறாக இருக்கும் முற்றுகையை அகற்றச் சொன்னது நீதிமன்றம். சுமார் 80  நாட்கள் நிகழ்ந்த முற்றுகைப் போராட்டம் இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.

2,000-ம் ஆண்டு தொடங்கி ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளுக்காக எத்தனையோ போராட்டங்கள் நிகழ்ந்திருந்தாலும், வோங் முன்னெடுத்த '2014-ம் ஆண்டு மாணவர் போராட்டம்’தான் மிகப் பெரியது; தீவிரமானது. அது மென்மேலும் வலுப்பெற்று வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட, பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டும் வேலைகளில் வோங் ஈடுபட்டிருக்கிறார். 1989-ம் ஆண்டு சீனா, கம்யூனிஸ அரசுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்திய தியான்மென் சதுக்கப் படுகொலைகள் நினைவிருக்கலாம். அதேபோன்ற ஒரு தாக்குதலை, தங்கள் பிள்ளைகள் மீதும் சீனா நிகழ்த்திவிடுமோ என்ற பயம் ஹாங்காங் மக்களுக்கு உண்டு. அதேசமயம் ஹாங்காங்கில் ரத்தம் பெருகி, வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டால் அது சீனாவின் பொருளாதாரத்திலும் சறுக்கல்களை ஏற்படுத்தும். பல நாடுகளும் ஹாங்காங்கில் முதலீடு செய்துள்ளதால், அது சர்வதேசத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தும். அதற்காக சீன அரசு இந்த 'மாணவர் புரட்சியை’ வெல்லவும் விடாது. அது வருங்காலத்தில் சீனாவுக்குள்ளேயே புரட்சிகள் வெடிக்கக் காரணியாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

இந்தச் சூழலில்தான் உலகம் ஜோஷ்வா வோங்கை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், அந்த மாணவர் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், ஹாங்காங்கில் மட்டும் அல்ல, உலகின் எதிர்கால வரலாற்றையே மாற்றியமைக்கக் கூடியது!

''நான் ஹீரோ அல்ல!''

நம்பர் 1 ஜோஷ்வா வோங் - 17

ஹாங்காங்கின் வருங்காலம் வோங்கின் கையில் இருக்கிறது என யாராவது அவரை முன்னிறுத்திப் பேசினால், உடனே மறுக்கிறார். 'என் சகாக்கள் போலீஸால் தாக்கப்படும்போது, எதுவும் செய்ய முடியாமல், ஏதோ ஓர் அறையில் அடைந்துதானே கிடந்தேன். நான் ஹீரோ அல்ல. தயவுசெய்து என்னை முன்னிலைப்படுத்தி போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு குடிமகனுமே ஹீரோதான்’ என்கிறார் வோங்.

கணக்குப் பிணக்கு!

நம்பர் 1 ஜோஷ்வா வோங் - 17

வோங், ஆரம்பத்தில் இருந்தே சராசரி மாணவரே. கணக்கு எப்போதுமே பிணக்கு. அரசியல் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாமல், பாடங்களில் பி, சி கிரேடுகளே பெற்றிருக்கிறார். ஆனால், அந்த ரிசல்ட்டைக்கூட பிரஸ்மீட் வைத்துச் சொல்லும் அளவுக்கு மீடியா அவரைத் துரத்துகிறது. ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காமல், இப்போது ஓப்பன் யுனிவர்சிட்டியில்தான் படிக்கிறார்!

'அவுட்ஸ்டாண்டிங்’ இளைஞன் !

நம்பர் 1 ஜோஷ்வா வோங் - 17

2014-ம் ஆண்டு டைம் பத்திரிகை அட்டையில் இடம்பிடித்த ஆசிய மாணவர், தி டைமின் ‘Young Person of the year 2014’ சிறப்பு பெற்றவர், டைம் 2014-ம் ஆண்டில் வெளியிட்ட 'உலகின் டாப் 25 இளைஞர்கள்’ பட்டியலில் இடம் பிடித்தவர்... இப்படிப் பல பெருமைகள் பெற்ற வோங் மீது, சீனா சுமத்தும் பட்டம், 'அமெரிக்கக் கைக்கூலி’. வோங்கை முடக்க, சீனா பலவிதங்களிலும் முயன்றுவருகிறது. சமீபத்தில்கூட வோங்கும் அவரது பெண் தோழியும் ஹாங்காங் தியேட்டர் ஒன்றில் கடுமையாகத் தாக்கப்பட்டனர். கடந்த மே மாதம் மலேசிய மாணவர் அமைப்பு ஒன்றின் கூட்டத்தில் கலந்துகொள்ள, மலேசிய விமான நிலையத்துக்குச் சென்று இறங்கிய வோங், அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார். 'வோங்கால் மலேசியாவின் அமைதிக்குப் பாதகம் வந்துவிடும். சீனாவின் பகையை நாங்கள் சம்பாதிக்க விரும்பவில்லை’ என மலேசியா பதில் அளிக்க, ஹாங்காங் திரும்பிய வோங், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக வீரியம் குறையாமல் உரையாற்றினார்!