மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 200

மருமகளின் கலக்கம்!

ன் தோழியின் மகளது வளைகாப்பு விழாவுக்கு சென்றிருந்தேன். எல்லோரும் சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டிக்க... மனையில் அமர்ந்திருந்த தோழியின் மகளின் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. இதைக் கவனித்த நான், தோழியிடம் விவரம் விசாரித்தேன்.

``அவளோட புருஷனும், மாமியாரும் ஆண் குழந்தைதான் வேணும்னு ஒரே பிடிவாதமா இருக்காங்களாம். பெண் குழந்தை பிறந்துட்டா என்ன ஆகுமோன்னு பயப்பட்டுக்கிட்டு இருக்கா” என்று அவள் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியுடன் கோபமும் பொங்கியது.

`ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை பிறந்தால் போதும்’ என்று தவமிருக்கும் குழந்தையில்லாத தம்பதியர் மற்றும் அவர்களின் பெற்றோர் பலர் இருக்க... இப்படி ஒரு குடும்பமா?’ என்று வேதனையாக இருந்தது. `கடவுள் அவர்களுக்கு நல்ல புத்தி தரட்டும்’ என்று வேண்டிக்கொண்டு, விழாவிலிருந்து விடைபெற்றேன்.

- எஸ்.ராஜம், சேலம்

சிலிர்க்க வைத்த சிவாச்சாரியார்!

ன்மிகப் பயணமாக தென் மாவட்டங்களிலுள்ள கோயில்களுக்கு குழுவினருடன் சென்று வந்தேன். கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஒரு பாடல் பெற்ற கோயிலின் அம்பாள் சந்நிதியில் தீபாராதனையை நாங்கள் கண்களில் ஒற்றிக்கொண்டோம். சிவாச்சாரியார் குங்குமம் கொடுக்க வந்ததும் கணவனை இழந்த பெண்மணி ஒருவர், கையை இழுத்துக்கொண்டு பின்னுக்குப் போனார். இதைக் கவனித்த அர்ச்சகர் ‘’எதுக்கு இப்படி ஓடி ஒளியறே? நீ என்ன தப்பு செய்தே? இந்தக் குங்குமத்தை வீட்டில் உள்ளவர்களுக்காவது கொண்டு போய் கொடு. கணவனுக்காக அணிவது மாங்கல்யமும் மெட்டியும்தான். பாக்கி எல்லாமே பிறந்தது முதல் பெண்களுக்கு உரியதுதான். மஞ்சள்தூள் போட்ட சாம்பாரை சாப்பிடலையா?’’ என்றார். பொட்டில் அடித்தது போல் அவர் சொன்னதிலுள்ள உண்மை புரிந்தது.

வயதானவரான அவரே அப்படிச் சொன்னது மனதுக்கு நிறைவாக இருந்தது. அவர் கூறியதை உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு, அனைத்து விசேஷ நாட்களிலும் கணவனை இழந்த பெண்களையும் கூப்பிட்டு உபசரிப்பதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளேன்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

`ஒன்லி பார்சல்..!’

ங்கள் ஏரியாவில் பெண்கள் நடத்தும் கையேந்தி பவன் ஒன்று உள்ளது. அங்கு எல்லா உணவு வகைகளும் வீட்டு சமையலின் சுவையில் இருப்பதால் கூட்டமாக இருக்கும். அதோடு மாலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்கெல்லாம் முடிந்து போகும். சமீபத்தில் அந்தக் கடையில் இரு நபர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். உடனே கடையை நிர்வகிக்கும் அந்தப் பெண்மணி வந்து “இங்க சாப்பிட எதுவும் குடுக்க முடியாது. வேணும்னா பார்சல் வாங்கிட்டு போங்க” என்றார். அவர்களும் பார்சல் வாங்கிச் சென்றனர்.

பிறகுதான் அவர்கள் குடித்துவிட்டு வந்தது எனக்குத் தெரிந்தது. போதையில் யார் வந்தாலும் அங்கே அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாதாம்; `ஒன்லி பார்சல்’தானாம்! இதனால் மற்ற வாடிக்கையாளருக்கு திருப்தியாக, இடையூறின்றி சேவை செய்ய முடிகிறதாம். பணத்துக்காக, `யார் வந்தாலும் வியாபாரம்தானே’ என்றில்லாமல், குறிக்கோள்படி கடை நடத்தி வரும் அவர்களைப் பாராட்டிவிட்டு வந்தேன்.

- ஆர்.திவ்யா, பசுமலை

குறையும் பளு... நிறையும் மனம்!

ஊரிலிருந்து வந்த என் மாமா குடும்பத்தை வழியனுப்ப ரயில் நிலையம் சென்றிருந்தேன். கால் டாக்ஸியை விட்டிறங்கியதும், ஒரு போர்ட்டரைக் கூப்பிட்டு சாமான்களை எடுத்துச்கொள்ளச் சொன்னார் மாமா. போர்ட்டர் சாமான்களுடன் முன்னே செல்ல, ‘’நாமே ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டிருக்கலாமே மாமா... எதுக்கு வீண் செலவு...?” என்றேன், நடந்துகொண்டே.

“அம்மாடி! நம்மைப் போன்றவர்கள் கூலியாகக் கொடுக்கும் பணத்தில் அந்தப் போர்ட்டரின் குடும்பமே பசியாறும். நாமும் சுமையின்றி ஃப்ரீயாக இருப்பதால், நம் குழந்தைகள், வயதானவர்களைக் கையைப் பிடித்து பாதுகாப்பாக படிகளில் அழைத்துச் செல்லலாம். அத்துடன் நாம் ரயிலில் ஏற வேண்டிய கோச்சுக்கு அருகிலேயே சரியாக ஊகித்து போர்ட்டரும் சாமான்களை வைப்பார். நம் பளுவும் குறையும்; மனதும் நிறையும்...” என்றார்.

மாமாவின் கூற்று மிகவும் சரியென்றே பட்டது எனக்கு.

- ஆர்.விஜயா ரவி, ஈரோடு

ஓவியங்கள்: சேகர்