
சந்தோஷ் நாராயணன்
டார்க் பிரவுன் ஷெல்லி!
கி.பி. 2500.
சந்தான கிருஷ்ணன், செவ்வாய்க் கிரகத்தின் பாதுகாப்பு நுழைவு வாசலில் ஸ்கேனிங்குக்காக நின்றிருந்தார். சில ரோபோக்கள், அவர் உடலை நியோ எக்ஸ்ரே ஒளியால் ஊடுருவி செக் செய்துகொண்டிருந்தன. விடுமுறையைக் கழிக்க பூமிக்குச் சென்றவர், இன்றுதான் திரும்பியிருந்தார்.
வயிற்றை ஸ்கேன் செய்த ரோபோ, திடீரென அலறியது.
‘Beep! Beep! extra terrestrial content: dark brown jelly. Beep! Beep!’ என அயோனிஸ ஸ்பீக்கர்கள் மின்குரலில் கத்தின.

ஸ்கேனரின் சிவப்புத் திரையில் தகவல் விரிந்தது.
நிறம்: டார்க் பிரவுன்
பொருள்: ஜெல்லி வகை
அளவு: 124 கிராம்
சுவை: ஸ்வீட்
சட்டென அவர் முன்பு விரிந்த மாயத்திரையில், கேப்டன் க்யூ ஒளிப்படமாகத் தோன்றிக் கேட்டார்.
'மிஸ்டர் சந்தான கிருஷ்ணன், பூமியில் நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள்?''
''திருநெல்வேலி சார்' என்றார் சந்தானம்!

கண்ணாடிக் கலைஞன்!
மனிதனின் எதிர்கால சவால்களில் ஒன்று, எலெக்ட்ரானிக் குப்பைகள். என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான விடை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதிலும் கென்யா போன்ற மூன்றாம் உலக நாடுகளை, மேற்கத்திய நாடுகள் கிட்டத்தட்ட 'டஸ்ட் பின்’களாக உபயோகித்துவருவது நாம் அறிந்த விஷயம். இந்தக் களேபரத்திலும் கவனம்கொள்ளவைக்கிறார் சைரஸ் கபிரு என்கிற ஆர்ட்டிஸ்ட். கென்யாவின் தலைநகர் நைரோபியைச் சேர்ந்த கபிரு, எலெக்ட்ரானிக் வேஸ்ட்களில் இருந்து கலையை உருவாக்குகிறார். வேஸ்ட்கள் கலையாக மாறுவதை விதவிதமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால், கபிரு பிரத்யேகமான 'கண் கண்ணாடிகளை’ உருவாக்கி, பார்வையாளர்களைப் புருவம் தூக்கச் செய்கிறார். 'சின்ன வயதில் என்னிடம் இருந்த பொம்மைக் கண்ணாடியை அப்பா உடைத்து எறிந்துவிட்டார். அதில் இருந்து கண்ணாடிகள் மீது எனக்குத் தீராத காதல்!’ என்கிற கபிரு, பிற்காலத்தில் ஆர்ட்டிஸ்ட்டாக ஆனபோது, இப்படி விதவிதமான கண்ணாடிகளைச் செய்து, தன் கவலையைத் தீர்த்துக்கொண்டார்.

இவர் உருவாக்கும் கண்ணாடிகளைப் பார்க்கும்போது, ஏதோ ஃபேன்டசி உலகில் நுழைந்துவிட்டதுபோல நாம் உணர்கிறோம். இதை, கலையாகவும் ஒரு ஃபேஷனாகவும் விற்பனைப் பொருளாகவும் பார்க்கும் கபிரு, 'இதை அணிந்துகொண்டு ஊருக்குள் நடந்துபாருங்கள். பொதுமக்கள் அனைவரின் கவனமும் உங்கள் மேல் விழும். அது ஒரு ஜாலி அனுபவத்தைத் தரும். உங்களுக்கு ஏதேனும் ஸ்ட்ரெஸ் இருந்தால், இதை அணிந்துகொள்வது ஒரு வகை தெரப்பிபோல’ எனச் சிரிக்கிறார்.
இந்தக் கண்ணாடிகளை ஓவியமாகவும் வரையும் கபிரு, எந்தப் பள்ளியிலும் ஓவியம் பயிலாதவர்.
'இன்றைய கென்யா இளைஞர்களின் வாழ்க்கையை பகடி செய்வதுகூட தன் படைப்பின் நோக்கம்’ என்கிறார்.

'நான் குப்பைகளைக் காதலிக்கிறேன். இந்தக் குப்பைகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறேன்’ என கபிரு சொல்லும்போது, அதை ஒரு கலைஞனின் கொண்டாட்ட வார்த்தைகளாக

எடுத்துக்கொள்வதா... ஒரு கென்யா இளைஞனின் விமர்சனமாக எடுத்துக்கொள்வதா என்பது, நமது பார்வையைப் பொறுத்தது!
''பத்துப் பிரச்னை, எட்டுப் பிரச்னைனு பாடம் எடுக்குறீங்க. எங்களுக்கு நீங்கதான்டா 'ஒரே ஒரு பிரச்னை''’ என சேனலை மாற்றினான் கார்ப்பரேட் சித்தன்!
வெங்கலம்

ரதீஷ் மாதவனின் 'வெங்கலம்’, ஒரு சமூக த்ரில்லர் நாவல். 'வெங்கலம் என்பது, வெறும் உலோகம் அல்ல; கடந்துபோன நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் ஓர் உருவகம்’ என, ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
நாவலின் மையப் பாத்திரமான சசிதரன், வேறு யாரும் அல்ல... ஆசிரியரே என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது. இந்த நாவல், குமரி மாவட்டத்தின் கடந்துபோன வரலாற்றின் ஒரு பகுதியை த்ரில்லர் வடிவில் நுட்பமாகப் பேசுகிறது. திருவிதாங்கூர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்த தெங்கு வீட்டில், பத்மநாபன் என்கிற தன் தாய்வழித் தாத்தாவின் பழைய நிலவறையில், அவர் சேகரித்துவைத்திருந்த வெங்கலப் பாத்திரங்களைத் தேடத் தொடங்கும் சசிதரனின் சொல் வழியாக வளர்கிறது நாவல்.
பழைமையின் களிம்பு வீச்சம் அடிக்கும், அந்த வெங்கலப் பாத்திரங்களின் மடிப்புகள் வழியாக எழுந்துவரும் கதை மாந்தர்கள், அவர்களின் கதைகள் என விரிகிறது சசிதரனின் தேடல். வருடம்தோறும் ஓணம் திருநாளின்போது அந்தப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்க்கும் நாராயணி அம்மாச்சியின் ஞாபகங்களில் இன்னும் ஒளிரும் காலத்தின் படிவுகள், அவளின் நடுங்கும் பேச்சின் வழியாக உதிர்கின்றன.
கரிய நிலவறைகளில் வெங்கலத்தைத் தேட உதவும் அம்மாச்சியின் பேத்தி அம்பிளிக்கும் சசிதரனுக்கும் இடையில் உருவாகும் காதலும் காமமும் வெங்கலத்தின் தாமிரம் மணம்கொண்டது. நாவலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் இதுவும் ஒன்று.
கடந்துபோன சமூகத்துக்கும் நடப்பு அரசியலுக்கும் இடையில் அல்லாடும் சோமன் குட்டி, இந்த நாவலின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம். அவனுடைய கிறுக்குத்தனங்கள், சசியின் வெங்கலத் தேடலை வேறொரு தளத்துக்கு நகர்த்திவிடுகின்றன. வெங்கலப் பாத்திரங்கள் வழியாக சமூக அரசியலையும் நுட்பமாகப் பேசுகிறார் ஆசிரியர்.
நாவலின் பிற்பகுதியில் வரும் தொலைந்துபோன வெங்கலக் கிண்டி ஒன்று, கதையை நகர்த்துகிறது. நகர்த்துவது என்ன... விரட்டுகிறது என்றே சொல்லலாம். அந்த வெங்கலக் கிண்டியின் வாயில் எழுதப்பட்டிருக்கும் ஒரு சொல், அரசாங்க ரகசியச் சொல் என்றும், அதன் வழியாக அவிழப்போகும் முடிச்சுகள் முக்கியமானவை என்றும் சசிதரன் உணரும்போது, நாவல் த்ரில்லர் வடிவத்தின் முழுமையை எட்டுகிறது. இவ்வளவு விறுவிறுப்பான வட்டார த்ரில்லர் நாவல் என்பது, நான் வாசிக்காதது. த்ரில்லர் என்ற பெயரில் சமூக மாற்றத்தையும் அரசியலையும் சுவாரஸ்யமாகப் புனைந்துள்ளார் ரதீஷ் மாதவன்!
(வழக்கமான புத்தக விமர்சனம் எப்படி எழுதுவது என, கற்பனையான ஒரு புத்தகத்துக்காக எழுதிப் பார்க்கப்பட்டது இது. மற்றபடி ஒரு நாவலுக்கு லீடு கொடுத்தாச்சு. எழுதுபவர்கள் காப்பிரைட்டில் கால் பங்கை எனக்கு அனுப்பிவைக்கவும்!)