மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் - 18

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

1978ம் ஆண்டு. வீட்டில் ஓய்வாக இருந்த ரிச்சர்டு வில்லியம்ஸ், சுவாரஸ்யமே இல்லாமல்தான், அந்த டென்னிஸ் ஆட்டத்தைப் பார்க்க ஆரம்பித்தார். பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் அது. ருமேனியாவைச் சேர்ந்த வெர்ஜினியா ருஸிச் பட்டம் வென்றார். அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை 40 ஆயிரம் டாலர். தூக்கிவாரிப்போட்டது ரிச்சர்டுக்கு. 'என்னது... டென்னிஸில் ஒரு பட்டம் வென்றால், இவ்வளவு பணமா?! நானும் என் மனைவியும் சேர்ந்து வருடம் முழுக்க ஓடியோடி, முட்டி தேய உழைத்தாலும், இதைச் சம்பாதிக்க முடியாதே! மறுநாள் செய்தித்தாள்களிலும் பார்த்து 'பரிசுத்தொகையை’ உறுதிசெய்துகொண்ட ரிச்சர்டு, தன் மனைவி ஆரசினிடம் வந்தார். அழுத்தமாகச் சொன்னார். 'இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார் ஆக்க வேண்டும்!’ 

இவை ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன வார்த்தைகள் அல்ல. ரிச்சர்டு, அந்தக் கணத்தில் இருந்து தன் வார்த்தைகளை நிஜமாக்குவதற்காக வாழ்வைப் புதிதாக ஆரம்பித்தார். இரு மகள்களைப் பெற்று, டென்னிஸ் 'பால்’ ஊட்டி, சீராட்டி வளர்த்து, டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார்களாகவும் ஆக்கினார். அந்தச் சகோதரிகள்தான்... வீனஸ் வில்லியம்ஸ் - செரீனா வில்லியம்ஸ். ஒற்றை வரியில் எளிதாகச் சொல்லிவிட்டாலும், அவர்கள் இந்த 'நம்பர் 1’ இடத்தை அடைய, கடந்துவந்த பாதை லேசுப்பட்டது அல்ல.

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் - 18

ஆரசின், அப்போது நர்ஸாகப் பணிபுரிந்தார். முதல் கணவர் மூலமாக அவருக்கு ஏற்கெனவே மூன்று மகள்கள் (யட்டுண்டு, லிண்ட்ரியா, இஷா) உண்டு. முதல் கணவர் இறந்ததும் இரண்டாவதாக ரிச்சர்டைத் திருமணம் செய்தார். 1980-ம் ஆண்டு வீனஸ் பிறந்தாள். அடுத்த 15 மாதங்களில், அமெரிக்காவின் மிச்சிகனில் செரீனா பிறந்தாள். விவரம் அறியாத வயதில் இருந்தே ரிச்சர்டு தம் மகள்களை டென்னிஸுக்கும் டென்னிஸ் சார்ந்த வாழ்க்கைக்கும் பழக்கினார். வீனஸும் செரீனாவும் தவழப் பழகியது டென்னிஸ் பாலை நோக்கி நகர்ந்துதான்; நடக்கப் பழகியது டென்னிஸ் மட்டையைப் பிடித்துக்கொண்டுதான். தினமும் வீட்டுக்கு அருகில் உள்ள டென்னிஸ் கோர்ட்டுக்கு, குடும்பத்தில் உள்ள ஏழு பேரும் சென்றுவிடுவார்கள். ரிச்சர்டே தன் மகள்களுக்கு டென்னிஸ் பயிற்சி அளித்தார். அவர், டென்னிஸ் வீரர் இல்லை. ஆனால், எப்போது 'சபதம்’ எடுத்தாரோ, அப்போது இருந்தே டென்னிஸ் நுணுக்கங்களைக் கற்கத் தொடங்கியிருந்தார். ரிச்சர்டு, செக்யூரிட்டி சர்வீஸ் ஒன்று நடத்திவந்தார். பெரிய வருமானம் இல்லை என்றாலும், இருப்பதைக்கொண்டு திருத்தமாகப் பயிற்சி கொடுத்தார். டென்னிஸ் பந்துகள் தேய்ந்து, கொஞ்சம் கிழிந்துபோனாலும் விட மாட்டார். 'அப்பா, இந்தப் பந்து எழும்பவே இல்லை. புதுப் பந்து வேணும்’ என மகள்கள் கேட்டால், 'விம்பிள்டன் களத்தில் பந்து அதிகம் எழும்பாது. அதைத் திருப்பி அடிக்க நிறைய வலு தேவை. அதற்கான பயிற்சி இது’ என்பார். ஏனெனில், ரிச்சர்டு தன் மகள்களுக்குள் 'டென்னிஸ் வீராங்கனை ஆக வேண்டும்’ என வெறும் கனவை விதைக்கவில்லை. 'கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்ல வேண்டும்’ என்ற பெரும் கனலை வளர்த்தார்.

தன்னைவிட ஒரு வயது பெரியவளான வீனஸின் கார்பன் காப்பியாகத்தான் செரீனா வளர்ந்தாள். வீனஸைப் போலவே உடை அணிவது. வீனஸ் விரும்பி உண்பதையே தானும் கேட்பது. அவளைப்போலவே டென்னிஸ் விளையாட முயற்சியும் பயிற்சியும் மேற்கொள்வது... இப்படி ஒவ்வொன்றிலும். ஆனால், வீனஸுடன் விளையாடித் தோற்றுப்போனால் மட்டும் செரீனா அழுவாள். சில சமயங்களில் பொய் ஸ்கோர் சொல்லி அக்காவை ஏமாற்றுவாள்.

'நீ லவ், நான் 2’ (டென்னிஸில் லவ் என்றால் 0 புள்ளி) என செரீனா பொய் சொன்னாலும் வீனஸ் விட்டுக்கொடுத்துவிடுவாள். அவளுக்கு தங்கை மீது அத்தனை லவ்.

'நீ எதுவாக நினைக்கிறாயோ, முதலில் மனதில் அதுவாகவே மாறிவிடு. இங்கே சாதாரணமாக டென்னிஸ் விளையாடுவதாக நினைக்காதே. இதுவே விம்பிள்டன்; இதுவே பிரெஞ்சு ஓப்பன், யு.எஸ் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன். இந்த எண்ணங்களே உன் வாழ்க்கையை, வருங்காலத்தை வடிவமைக்கும்’ - ரிச்சர்டின் போதனைகள், சகோதரிகளின் டென்னிஸ் போதையைக் குறையவிடவில்லை. இருந்தாலும் பெரியவள் மீது கூடுதல் கவனம் செலுத்தினார். செரீனாவைவிட வீனஸை அதிகப் போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்தார். 'டாடி, எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என செரீனா நச்சரித்தால், 'நீ இன்னும் தயாராகவில்லை’ என்பார் ரிச்சர்டு.

10 வயதுக்கு உட்பட்டோருக்கான டென்னிஸ் போட்டி ஒன்றில் 9 வயது வீனஸின் பெயரை மட்டும் கொடுத்திருந்தார் ரிச்சர்டு. 'அவளால் முடியும் என்றால், என்னால் முடியாதா?’ -   8 வயது செரீனா தனக்குள் குமுறினாள். போட்டியில் கலந்துகொள்வதற்கான படிவத்தை, தந்தைக்குத் தெரியாமலேயே நிரப்பிக் கொடுத்தாள். பெற்றோர் வீனஸை அந்தப் போட்டிக்கு அழைத்துச் செல்லும்போது இவளும் கமுக்கமாகக் கிளம்பிச் சென்றாள். வீனஸ், தன் முதல் சுற்றில் விளையாடி ஜெயித்தாள். ரிச்சர்டு, 'செரீனா எங்கே?’ எனத் தேட ஆரம்பித்தார். 'உங்க சின்ன பொண்ணுதானே, அங்க மேட்ச்ல இருக்கா பாருங்க!’ என்றார் போட்டி அமைப்பாளர். இன்னொரு கோர்ட்டில் தன் ஆவேசத்தைக் காட்டிக்கொண்டிருந்தாள் செரீனா. தன் பெற்றோர் வந்ததைக் கவனித்தும், கண்டுகொள்ளாமல் மட்டையுடன் சீறினாள். 'கமான் செரீனா’ என அவர்கள் உற்சாகப்படுத்த, அந்தச் சுற்றில் செரீனா வென்றாள். அவள் முகத்தில் தன்னம்பிக்கையின் தாண்டவம். ரிச்சர்டு அவளை அள்ளி அணைத்துக்கொண்டார். அடுத்தடுத்த சுற்றுகளில் சகோதரிகள் இருவரும் சளைக்காமல் ஜெயித்தனர். ஃபைனல் வீனஸுக்கும் செரீனாவுக்கும். இங்கே 'பொய்ப் புள்ளிகள்’ சொல்லி ஏமாற்ற முடியாதே! நம்பிக்கையுடன் களம் இறங்கினாள் செரீனா. நேரடி செட்களில் தோற்றுப்போனாள். அழவில்லை. வீனஸ், வின்னர் கப்பை தன் தங்கையிடம் கொடுத்துவிட்டு, ரன்னர் கப்பைத் தனக்கு வைத்துக்கொண்டாள்.

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் - 18

ரிச்சர்டு குடும்பத்துடன் ஃப்ளோரிடாவின் வெஸ்ட் ஃபாம் பீச் நகரத்துக்கு இடம் மாறினார். அது டென்னிஸுக்கு உகந்த பிரதேசம். வீனஸும் செரீனாவும் அங்கே ரிக்கி என்கிற பயிற்சியாளரிடம் தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொண்டனர். ரிச்சர்டும் இன்னொரு பக்கம் பயிற்சி அளிப்பதைத் தொடர்ந்தார். தன் மகள்களின் விளையாட்டில் வலிமை சேர்க்க, அவர்களை பையன்களோடு விளையாடவைத்தார். வில்லியம்ஸ் சகோதரிகள் அமெரிக்க டென்னிஸ் சங்கத்தில் ஜூனியர் அளவில், தேசிய அளவில் வீழ்த்த முடியாதவர்களாக 'உச்சத்தில்’ இருந்தனர். 1991-ம் ஆண்டு 46 போட்டிகளில் 43-ல் வென்று, செரீனா 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 'நம்பர்1’ அந்தஸ்தில் இருந்தாள்.

அந்தச் சூழலில்தான் ரிச்சர்டு, 'என் மகள்கள் இனி ஜூனியர் அளவில் விளையாட மாட்டார்கள்’ என அறிவித்தார். அவர்களை 'புரொஃபஷனல்’ வீரர்களாக்க தீவிரப் பயிற்சி கொடுக்கப்போகிறேன் என வெளியில் சொன்னாலும், உள்ளே 'இனவெறிக் காயங்கள்’ மறைந்திருந்தன. ஜூனியர் லெவல் போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகள் விளையாடச் சென்றாலே, வெள்ளைக்காரப் பெற்றோர்கள் முகம் சுளித்தார்கள். Nigger என்ற சொல் (கறுப்பு இனத்தவர்களைக் குத்திக்காட்டும் அவச்சொல்) எங்கும் ஒலித்தது. 'இதுங்க காட்டுத்தனமா விளையாடுதுங்க’ போன்ற சுடுவார்த்தைகள் நெஞ்சைத் துளைத்தன. ஆகவே, ரிச்சர்டு உறுதியாக முடிவெடுத்திருந்தார். 'இனி நானே உங்களுக்குப் பயிற்சி அளிக்கிறேன். வீட்டில் இருந்தபடியே படியுங்கள். கொஞ்சம் பொறுங்கள். காலங்காலமாக நம் முன்னோர்களும் நாமும் அனுபவித்துவரும் இந்த இனவெறித் தாக்குதல்களுக்கு, வருங்காலத்தில் டென்னிஸால் பதில் சொல்வோம்!’

வீட்டுக்கு அடுத்தே டென்னிஸ் கோர்ட் இருந்தது. அடுத்த மூன்று வருடங்கள், வில்லியம்ஸ் சகோதரிகள் சிந்திய வியர்வையால், அந்த கோர்ட் எப்போதும் ஈரமாகவே இருந்தது.

1995-ம் ஆண்டு, செப்டம்பர் 25, 'பெல் சேலஞ்ச்’ என்ற தொடரில் களம் இறங்கினார் செரீனா. அனி மில்லர் என்ற வீராங்கனை, செரீனாவை 6 - 1, 6 - 1 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். செரீனா உடைந்துபோகவில்லை... உணர்ந்துகொண்டார். 'நான் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை.’ அடுத்த பல மாதங்களுக்கு செரீனா எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை. திகட்டத் திகட்டத் தீராத பயிற்சி. இன்னொரு புறம் வீனஸ் கவனம் பெறத் தொடங்கியிருந்தார். செரீனாவும் வீனஸும் இரட்டையர் பிரிவில் ஆட ஆரம்பித்திருந்தனர். களத்தில் வீனஸிடம் இருந்து நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார் செரீனா. டாப் ரேங்கில் உள்ள வீரர்களுடன் கத்துக்குட்டி வீரர்கள் மோதுவதை டென்னிஸில் ‘Open era’  என்பார்கள். 1997-ம் ஆண்டு, 304-வது ரேங்கில் இருந்த கத்துக்குட்டி செரீனா, 7-வது ரேங்க் மேரி பியர்ஸுடன், 4-வது ரேங்க் மோனிகா செலஸுடன் மோதினார்; தோற்கடித்தார்; அதிர்வுகளை உண்டாக்கினார். உலகம் செரீனாவையும் கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தது. அந்த ஆண்டு இறுதியில் செரீனாவின் WTA ரேங்க் 99; வீனஸ் 22.

1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பன். செரீனாவின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி. (ஜனவரியில் ஆஸ்திரேலியன் ஓப்பன், மே-ஜூனில் பிரெஞ்சு ஓப்பன், ஜூன்-ஜூலையில் விம்பிள்டன், ஆகஸ்ட்-செப்டம்பரில் யு.எஸ் ஓப்பன் ஆகிய நான்கு பிரதான தொடர்களும் டென்னிஸ் உலகில் கிராண்ட் ஸ்லாம் எனப்படுகின்றன. இவை அதிகப் பரிசுத் தொகைக்கும் புகழுக்கும் உரியவை.) முதல் சுற்றில் வென்ற செரீனாவுக்கு, அடுத்த சுற்றில் எதிர்ப் போட்டியாளர் அக்கா வீனஸ். சகோதரிகள் முதன்முதலில் மோதும் தொழில்முறைப் போட்டி. வீனஸே ஜெயித்தார். செரீனாவுக்கு வருத்தம் இல்லை. என்றாலும், உள்ளுக்குள் ஒரு கேள்வி கொக்கிப்போட்டு இழுத்தது. 'என் சகோதரிதான் என்றாலும் அவளை வென்று என் வலிமையை நிரூபிப்பது எப்போது?’. அதே ஆண்டில் ஆறு வெவ்வேறு போட்டிகளில் கால் இறுதிக்கு முன்னேறிய செரீனா, ஆறிலும் 'ஆறா’ மனக்காயத்துடன் வெளியேறினார். இருந்தாலும் ஆண்டு இறுதியில் ரேங்கில் முன்னேற்றம். 20.

1999-ம் ஆண்டு. செரீனா வெற்றியுடன் ஆரம்பித்தார். Open Gaz de France தொடரைக் கைப்பற்றினார். முதல் சாம்பியன் பட்டம். அடுத்தது ஒரு தொடரின் ஃபைனலில் ஸ்டெஃபிகிராபை வென்று நிமிர்ந்தார். முதன்முதலாக டாப்-10க்குள்... ரேங்க் 9. பிரெஞ்சு ஓப்பனில் வீனஸுடன் சேர்ந்து டபிள்ஸ் ஃபைனலில் அடைந்த வெற்றியின் மூலம் வில்லியம்ஸ் சகோதரிகள் வரலாற்றில், தங்கள் முதல் கிராண்ட் ஸ்லாமைப் பதிவுசெய்தனர். ஆனால், காயத்தினால் செரீனா விம்பிள்டனில் இருந்து விலகினார். விரைவில் மீண்டவர், யு.எஸ் ஓப்பனில் முழு உத்வேகத்துடன் களம் இறங்கினார். அவரது ஆக்ரோஷ சர்வீஸ்கள் 'ஏஸ்’களாகப் புள்ளிகளை உயரச் செய்தன. கிம் கிடுகிடுக்க, கோன்சிதா மார்டினெஸ் கோட்டைவிட, மோனிகா செலஸ் மண்டியிட, லிண்ட்சே டேவன்ஃபோர்டு 'அடச்சே’வென வீழ, ஃபைனலில் மார்ட்டினா ஹிங்கிஸை 6-3, 7-6 என நேர் செட்களில் வீழ்த்தி முதல் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாமை ருசித்தார் செரீனா.

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் - 18

2000-ம் ஆண்டு வீனஸ், விம்பிள்டன் (ஒற்றையர், செரீனாவுடன் இணைந்து இரட்டையர்), யு.எஸ் ஓப்பன் என கிராண்ட் ஸ்லாம்களை அள்ள, டென்னிஸ் உலகில் வில்லியம்ஸ் சகோதரிகளின் ஆதிக்கம் அழுத்தமாக வேர் பிடித்தது. இன்னொரு பக்கம் நீறுபூத்த நெருப்பாக 'கறுப்புச் சகோதரிகள்’ மீதான வெள்ளை வெறுப்பும் வளர்ந்தது. 2001-ம் ஆண்டு அது குப்பெனப் பற்றியது. அப்போது நடந்த இண்டியன் வெல்ஸ் தொடர் ஒற்றையர் பிரிவில் செரீனாவும் வீனஸும் அரை இறுதிக்குத் தகுதி பெற்றனர். அரை இறுதிப் போட்டி ஆரம்பிக்கும் முன் செரீனா களத்தில் பயிற்சி செய்துகொண்டிருக்க, 'வீனஸ் காயம் காரணமாக, போட்டியில் இருந்து விலகுகிறார்’ என அறிவிப்பு வந்தது. காயம் உண்மைதான். ஆனால், மக்கள் கொந்தளித்துவிட்டார்கள். போட்டி திடீரென ரத்தானதால் விளம்பரதாரர்களும் கோபம் காட்ட, 'இது ரிச்சர்டு செய்த மேட்ச் ஃபிக்ஸிங்’ என மீடியா முணுமுணுத்தது. வீனஸின் விலகலால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற செரீனா, கிம் கிளிஸ்டர்ஸுடன் மோதக் களம் இறங்கினார். செரீனா உள்ளே இறங்கிய கணத்தில் இருந்தே ரசிகர்கள் தங்கள் வெறுப்பை, கசப்பை, இன துவேஷத்தை நான்கு திசைகளில் இருந்தும் 'சர்வீஸ்’ செய்தனர். திணறிப்போனார் செரீனா. மைதானத்தில் செரீனாவுக்கு ஒரே ஆதரவாக அமர்ந்திருந்த ரிச்சர்டும் வீனஸும்கூட வெலவெலத்துப்போயிருந்தனர்.

செரீனாவால் ஆட்டத்தில் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. கிம் எடுக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் அதிர்ந்த அரங்கம், செரீனாவின் புள்ளிகளுக்கு வெறுப்பு ஒலியையே உமிழ்ந்தது. முதல் செட் 4-6 என நழுவிப்போனது. அழ வேண்டும்போல் இருந்தது செரீனாவுக்கு. அங்கு இருந்து ஓடிவிடலாம் எனத் தோன்றியது. 'கூடாது, போராடு. இதே அவமதிப்பை, உதாசீனத்தைத்தான் உன் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாகச் சுமந்துவந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கறுப்பின வீரர்களும், இந்தத் தீயில் விழுந்து எழுந்தவர்களே. நீயும் அவர்களைப்போல ஒடுங்கி வீழப்போகிறாயா... இல்லை, நிமிர்ந்து மீளப்போகிறாயா?’ உள்ளுக்குள் ஒரு குரல். சர்வீஸ்களில் உதறல் இருந்தாலும், ஏதோ ஒரு வேகத்தில் வெகுண்டெழுந்து அடுத்த செட்டைக் கைப்பற்றினார் செரீனா. 6-4.         'நீ கிம்முக்கு எதிராக ஆடவில்லை. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் எதிராக ஆடுகிறாய். உன் கோபத்தை, வலிமையை, அர்ப்பணிப்பை முழுமையாகக் காட்டு. உன்னை நிரூபிக்கவேண்டிய தருணம் இது’! மூன்றாவது செட்டில் செரீனாவுக்குள் மூர்க்கம். 6-2. வெற்றி. பாதிக் கூட்டம் சலசலத்துக் கலைய, மீதிக் கூட்டம் தம் வெறுப்பைத் தொலைத்து அந்தப் பெண்ணுக்காகக் கை தட்டியது. டிரெஸ்ஸிங் ரூமுக்குள் ஓடிய செரீனா, தன் வாழ்வில் அதிகபட்சக் கண்ணீரைச் சிந்தினார். இனி இண்டியன் வெல்ஸில் விளையாடவே மாட்டேன் என அறிவித்தார்!

இந்தக் காயங்களுக்கு எல்லாம் மருந்தாக 2002-ம் ஆண்டு, பிப்ரவரியில் வீனஸ் முதன்முதலாக ஒற்றையர் பிரிவில் 'நம்பர்1’ ரேங்குக்கு முன்னேறினார். 'எனக்கும் அந்த இடத்தின் ருசி வேண்டும்’. செரீனா பின்தொடர்ந்தார். களங்களில் ருத்ர தாண்டவம். அதே ஜூலையில் செரீனா 'நம்பர் 1’ ரேங்கில். பிரெஞ்சு, விம்பிள்டன், யு.எஸ் மற்றும் 2003-ம் ஆண்டின் ஆஸ்திரேலியன் ஓப்பன்... எனத் தொடர்ந்து நான்கு ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம்களை வென்று நின்றார் செரீனா. (இதை 'செரீனா ஸ்லாம்’ என்கிறார்கள்.)

அடுத்த 57 வாரங்களுக்கு, செரீனாவை யாராலும் நம்பர்1 ரேங்கில் இருந்து அசைக்க முடியவில்லை. ரிச்சர்டு, 'ஈன்ற பொழுதினும் தம் மகள்களை நம்பர்1 எனக் கேட்ட தந்தை’யாக உவந்து நின்றார். ஆனால், 2003-ம் ஆண்டு செரீனாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பூகம்பம். எங்கிருந்தோ வந்தவனாக இதயத்தில் நுழைந்து, அன்பைக் கொட்டி, நேசம் வளர்த்த 'பாய் ஃப்ரெண்டு’ ஒருவன் (ஒரு கால்பந்து வீரர்), செரீனாவைக் காதல் மயக்கத்தில் மூழ்கடித்துவிட்டுக் காணாமல்போனான். செரீனாவின் பாசத்துக்குரிய மூத்த சகோதரி யட்டுண்டு, வன்முறை நிகழ்வு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டாள். காதல் தோல்வி, சகோதரியின் இழப்பு இரண்டில் இருந்தும் மீள இயலாமல் செரீனா துடித்துக்கொண்டிருக்க, காயங்களும் அவரை முடக்கிப்போட்டன. விதி, நேரடி செட்களில் வெற்றிகளை வீழ்த்தியது. கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் இறந்த காலம் ஆகின. மன அழுத்தத்தில் இருந்து மீள, பல மாத சிகிச்சையும் தேவைப்பட்டது. 2006-ம் ஆண்டின் இறுதியில் செரீனாவின் ரேங்க் 95.

ஏதோ ஒரு பொழுதில் செரீனாவுக்குள் பிரேக் பாயின்ட் மின்னல். இத்துடன் முடிந்துபோவதற்கா இத்தனை காலம் போராடி வந்தாய்? செரீனா, தனது பழைய மேட்ச் வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தார். தன்னை மீட்டெடுத்தார். 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பன் சாம்பியன் பட்டம் வெற்றிக் கதவை மீண்டும் திறந்தது. மீண்டும் டாப் 10 ரேங்கில் இடம்பிடித்தார். விட்ட நம்பர்1 ரேங்கை 2009-ம் ஆண்டில் தட்டிப் பறித்தார்.

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் - 18

அதற்குப் பின், பெரும்பாலும் ஏறுமுகம்தான். செரீனாவைக் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடினாலும், நேற்றைய டென்னிஸ் நட்சத்திரங்கள் புகழாரம் சூட்டினாலும், வெள்ளை ஆதிக்க டென்னிஸ் உலகில் மன, இன, பாலினரீதியாக செரீனா எதிர்கொள்ளும் துன்பங்களும் கொஞ்சநஞ்சம் இல்லை. 'செரீனா பெண்ணே அல்ல; பாலினச் சோதனை செய்தால் ஆண் என்பது தெரிந்துவிடும்’, 'செரீனாவின் டென்னிஸ் ஆட்டமுறை தவறானது’, 'செரீனாவுக்கு ஊக்க மருந்து சோதனை அவசியம்’, 'அழகில் நம்பர் 1, மரியா ஷரபோவாதான். செரீனா ஒரு கொரில்லா’ - செரீனா மீது காட்டப்படும் அருவருப்பான இனவெறுப்பு தீரவில்லை. இருந்தாலும் தன் தொடர் வெற்றிகளால், சாதனைகளால் கறுப்பு வெறுப்பாளர்களைத் தொடர்ந்து தோற்கடித்துக் கொண்டே இருக்கிறார் செரீனா.

2009-ம் ஆண்டு தொடங்கி 2015-ம் ஆண்டு வரை செரீனா வென்றுள்ள கிராண்ட் ஸ்லாம்களின் எண்ணிக்கை 18 (ஒற்றையர், இரட்டையர் இரண்டும் சேர்த்து). 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் தங்கம், கூடவே நான்கு கிராண்ட் ஸ்லாம் வெற்றி என 'கோல்டன் ஸ்லாம்’ சாதனை. 2014-ம் ஆண்டு யு.எஸ் ஓப்பன், 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியன், பிரெஞ்சு, விம்பிள்டன் எனத் தொடர்ந்து நான்கு கிராண்ட் ஸ்லாம் வெற்றி. மீண்டும் 'செரீனா ஸ்லாம்’ சாதனை. 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கி இப்போது (2015, ஜூலை) வரை ரேங்கிங்கில் நம்பர் 1. அதோடு 32 வயதில் நம்பர்1 இடத்தைப் பிடித்த சீனியர் வீராங்கனை என்றொரு சாதனை. 2015-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி கீஜிகி பட்டியலின்படி செரீனாவின் புள்ளிகள் 13,191. அடுத்த இடத்தில் இருக்கும் ஷரபோவாவின் புள்ளிகள் 6,490. இரண்டாம் இடத்தில் இருக்கும் வீரரைவிட ஒரு மடங்கு அதிகப் புள்ளிகளுடன் இருப்பது புதிய வரலாற்றுச் சாதனை. இந்த நூற்றாண்டில் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக, யாரும் நெருங்க முடியாத உச்சத்தில் வீற்றிருக்கும் செரீனா, தன் வாழ்வில் இருந்து சொல்லும் அனுபவ மொழி இதுவே.

'என் வாழ்க்கை முழுக்க நான் போராட மட்டுமே கற்றுக்கொண்டிருக்கிறேன்; அதே சமயம் எந்தச் சூழலிலும் சிரிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒருபோதும் புன்னகையைத் தவறவிடாமல் இருந்தால் போதும். எப்போதும் எல்லாம் நடக்கும்’! 

செரீனா ஸ்டைல்!

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் - 18

நேர்த்தியாக, பலமாக, வேகமாக சர்வீஸ் போடுவதில் செரீனா கில்லாடி. எதிரியின் சர்வீஸைத் திடத்துடன் எதிர்கொண்டு, அதிரடியாகத் திசைமாற்றிவிடுவதிலும் வல்லவர். இரண்டு கைகளையும் பின்னால் கொண்டுசென்று அடிக்கும் பேக்ஹேண்ட் ஷாட்கள் செரீனாவின் பலம். எதிராளி தன்னைவிட மூன்று அல்லது நான்கு புள்ளிகள் அதிகம் இருக்கும்போதுகூட, மீண்டுவந்து செட்டைக் கைப்பற்றி, தன் வலிமையைப் பலமுறை நிரூபித்திருக்கிறார் செரீனா!

செரீனா Vs வீனஸ்

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் - 18

தன் ரோல்மாடல் வீனஸைவிட, தான் பலமானவள் என செரீனா பலமுறை நிரூபித்திருக்கிறார். வீனஸுக்கு எதிராக 26 முறை மோதிய செரீனாவுக்கு 15-ல் வெற்றி. அதில் 8 கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளும் அடக்கம். அவற்றில் ஆறில் செரீனா வென்றிருக்கிறார். வீனஸ் வென்ற ஒற்றையர் பட்டங்களின் எண்ணிக்கை 46; செரீனா 65. இரட்டையர் பிரிவில் இருவரும் இணைந்து 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 3 ஒலிம்பிக் தங்கங்களையும் வென்றிருக்கிறார்கள். வீனஸின் தற்போதைய ஒற்றையர் ரேங்க் 15.