
விகடன் டீம்ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி, படம்: எஸ்.தேவராஜன்
குறுநில மன்னன் ஒருவன் ஆட்சி நடத்தும் பிராந்தியம் அது. மன்னனின் கோட்டைக்குள்ளேயே கோயில் ஒன்றைக் கட்டி வழிபட்டுவந்தாள் அரசி. அந்தக் கோயில்தான் காலப்போக்கில் கண்டரக்கோட்டை 'அரசியம்மன்’ ஆலயமாகப் பிரபலம் ஆனது. ஆட்சி நடந்த கோட்டையும் அரசி கட்டிய கோயிலும் ஒன்று சேர்ந்திருக்கும் கண்டரக்கோட்டைக்கு, பௌர்ணமி தவறாமல் வருகைபுரிவார் அந்த வி.ஐ.பி. எதிரிகளை வீழ்த்த... யாராலும் தன்னை வீழ்த்த முடியாத பலம் கிடைக்க நடத்தப்படும் 'நிகும்பலா’ யாகம், பௌர்ணமிதோறும் அங்கு சத்தம் இல்லாமல் அரங்கேறும்.
அரசியல் வளர்ச்சிக்கு, அண்டர்கிரவுண்டு வேலைகளை மட்டுமே நம்பினால் போதுமா? தெய்வ பக்தி, யாகம், ஜோதிடம் எல்லாம் வேண்டுமே என 'ஆன்மிக ஸ்கெட்ச்’ போட்டு செயல்படும் அந்த வி.ஐ.பி., தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
அண்ணனுக்கு ஜே !
கடலூர் - பண்ருட்டி அருகே குட்டி கோணாங்குப்பம், சம்பத்தின் பூர்வீகம். பிறகு மேல்குமாரமங்கலத்தில் குடியேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்ஸி. படித்த சம்பத், 10 பேர் சுத்தி நின்றாலும் வெளுத்து வாங்கும் கராத்தே வீரர். பட்டம் முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பியவர் 'வேலையில்லா பட்டதாரி’யாகக் கொஞ்ச காலம் பொழுதைக் கழித்தார். ஆரம்பத்தில், காலி தகர டிரம்களை வாங்கி கொஞ்சம் லாபம் வைத்து, இன்னொருவருக்குக் கை மாற்றிவிடும் வேலை பார்த்தார். அதில் கொஞ்சம் காசு கிடைக்க, சின்னதாக ரியல் எஸ்டேட் தொழிலில் கால் பதித்தார். ஆனால், அது கை கொடுக்கவில்லை.

அ.தி.மு.க-வில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார் சம்பத்தின் அண்ணன் தாமோதரன். அண்ணா கிராம ஒன்றியச் செயலாளராகவும் ஒன்றிய சேர்மனாகவும் இருந்த அண்ணனின் செல்வாக்கில், ஏரி மரங்களை குத்தகைக்கு எடுத்து, வெட்டி விற்கும் தொழிலில் ஈடுபட்டார் சம்பத். பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்தவருக்குள் அரசியல் கெமிஸ்ட்ரி ஊற காரணம், அண்ணன் தாமோதரனுக்குக் கிடைத்த மரியாதையும் செல்வாக்கும்தான். அந்த 'கெமிஸ்ட்ரி’யில் இன்னும் ஆசிட் ஊற்றியதுபோல, ஒன்றிய சேர்மனாக இருந்த தாமோதரனின் அந்தஸ்தும் எம்.எல்.ஏ என உயர்கிறது. அண்ணனோடு இறுக்கமாக ஒட்டிக்கொள்கிறார் சம்பத். எம்.எல்.ஏ அண்ணன் இருக்கும் தைரியத்தில், மரக்கட்டை மூலம் குவித்த பணத்தை மணல் குவாரியில் கொட்டி, இன்னும் இன்னும் தன்னை வளப்படுத்திக்கொண்டார் சம்பத். ஜெயலலிதாவின் 1991-96-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் இறுதியில், தாமோதரனுக்கு அமைச்சரவையிலும் இடம் கிடைக்கிறது. சிவப்பு விளக்குச் சுழலும் காரில் தாமோதரன் வலம்வந்தபோது, காக்கிகளின் சல்யூட்டையும் அதிகாரிகளின் கும்பிடுவையும் பார்த்த கணமே சம்பத் முடிவெடுத்துவிட்டார்... தானும் அமைச்சர் ஆவது என!
வளர்த்த கிடா...
அண்ணா கிராமம் ஒன்றியச் செயலாளர் பதவிக்கான தேர்தலில், தம்பி சம்பத்தை நிறுத்தினார் தாமோதரன். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் முத்து நர்சா ரெட்டியார். தேர்தலில் மோடி மஸ்தான் சித்து வேலைகள் காட்டி, சம்பத் ஜெயித்ததாக அறிவித்தார்கள். அந்தத் தேர்தல் மூலம் அரசியலின் சூழ்ச்சி வியூகங்களைக் கற்றுக்கொண்டார் சம்பத். கட்சிக்குள் தன்னை மெதுமெதுவாக ஸ்திரப்படுத்திக்கொண்டே வந்தவர், ஒருகட்டத்தில் வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைப்பதுபோல, அண்ணனின் இடத்துக்கே குறிவைத்தார்.
தம்பியின் எல்லை மீறல் தாமோதரனுக்கு எரிச்சலை உண்டாக்க, இருவருக்குள்ளும் அடிக்கடி மோதல் வெடித்தது. அண்ணன் அம்பாசிடர் காரில் வலம்வந்தால், தம்பி டாடா சுமோ வாங்கி டஃப் கொடுத்தார். துடிப்பும் தீவிரமுமாகச் செயல்பட்டதால், சம்பத்தின் கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்கியது. அதற்கு ஏற்ப 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைய, தாமோதரனின் அரசியல் செல்வாக்கும் சரிய ஆரம்பித்தது. அண்ணன் அரசியலில் கீழே இறங்க இறங்க... மேலே ஏறிக்கொண்டே வந்தார் தம்பி.
மன்னார்குடி டச் இருந்தால்தான் அ.தி.மு.க அரசியலில் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும் என்கிற பாலபாடத்தை, சம்பத்தும் நன்கு உணர்ந்திருந்தார். மன்னார்குடி வகையறாவுக்கு மிக நெருக்கமான சி.கே.சுப்ரமணியனுக்கு ஸ்கெட்ச் போட்டார். அவர் வீட்டில் தினமும் ஆஜர் ஆனார். அவருடைய தேவைகள் அனைத்தையும் குறிப்பு அறிந்து பூர்த்திசெய்தார். அந்த நேரத்தில்தான் நெல்லிக்குப்பம் தொகுதி இடைத்தேர்தலுக்காக பண்ருட்டி வந்தார் டி.டி.வி.தினகரன். அவரிடம் சம்பத்தை அறிமுகம் செய்தார் சி.கே.சுப்ரமணியன். அந்த அறிமுகத்தை, தன் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டார் சம்பத். முந்திரி காட்டி மந்திரி பதவிக்குக் குறிவைத்தார். பண்ருட்டி முந்திரியை டி.டி.வி.தினகரனுக்குக் கொண்டுபோய் கொடுத்தார். அதோடு பலா, வாழை... என மன்னார்குடி சொந்தங்களுக்கு வீடு வீடாகச் சென்று இறக்குமதியும் செய்தார். இந்தப் பண்டமாற்று, சம்பத்துக்கு தக்க பலனைக் கொடுத்தது. அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசியதில் 2001-ம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ பதவி கிடைத்து, வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் ஆனார். பின்னர் உள்ளாட்சித் துறை அமைச்சர். கூடவே மாவட்டச் செயலாளர் பதவி. சம்பத்தால் இரண்டு பதவிகளையும் சமாளிக்க முடியவில்லை. அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, இரண்டு பதவிகளையுமே பறிகொடுத்தார். இதனால் 2006-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட சம்பத்துக்கு ஸீட் கிடைக்கவில்லை. பரமபத ஏணியில் ஏறி சரசரவென உச்சாணிக்குச் சென்றவர், பாம்பு தீண்டியதுபோல தடாலடியாக வீழ்ந்தார். அந்தக் கெட்ட நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் மன்னார்குடி வகையறாவுக்கு நெருக்கமான தேசபந்துவும்தான் சம்பத்தைக் காபந்து பண்ணினார்கள். இதனால் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர், 2008-ம் ஆண்டு மீண்டும் மாவட்டச் செயலாளர் என, பதவிகள் கைக்கு வந்தன. இதற்கு இடையில் அ.தி.மு.க-வில் ஓரங்கட்டப்பட்டிருந்த சம்பத்தின் அண்ணன் தாமோதரன், தே.மு.தி.க-வில் ஐக்கியம் ஆனார். 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதிக்கான தே.மு.தி.க வேட்பாளர் தாமோதரன் என அறிவிக்கப்பட்டதும், அண்ணனுக்குப் போட்டியாக தம்பி சம்பத்தை அ.தி.மு.க வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. அண்ணனும் தம்பியும் மைக் கட்டிக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் பிரசாரம் செய்ததில், ஊர் ரெண்டுபட்டது. ஆனால், தேர்தலில் ஜெயித்தது தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி.

அடுத்த இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த சம்பத், 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து, அமைச்சரவையில் இரண்டாவது முறையாக இடம் பிடித்தார். முதலில் ஊரகத் தொழில் துறை, அடுத்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, பின்னர் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை, தொடர்ந்து சத்துணவுத் திட்டத் துறை... எனத் தாவித் தாவி, தற்போது வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருக்கிறார். இடையில் பல முறை அமைச்சர்கள் பந்தாடப்பட்டபோதும், சம்பத்தை மட்டும் ஏதோ ஒரு சக்தி காப்பாற்றிக்கொண்டே இருந்தது. இதனாலேயே, 'சிலருக்கு உடம்பில்தான் மச்சம்; சம்பத்துக்கோ மச்சம்தான் உடம்பே!’ என்கிறார்கள் கட்சியினர். காலச்சூழலில், அண்ணன் தாமோதரன் மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார்.
துறையில் சாதித்தது என்ன?
சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, ஊரகத் தொழில் துறை... என அடுத்தடுத்து துறைகள் மாறினாலும், சம்பத் எதிலும் சொல்லிக்கொள்ளும்படி ஸ்கோர் செய்தது இல்லை. எத்தனையோ நவீன மாற்றங்கள் நிகழ்ந்தாலும், சுமார் இரண்டு கோடி மக்களுக்குச் சேவை வழங்கும் பத்திரப் பதிவுத் துறையில் அதன் பிரதிபலிப்பு வீரியமாக இல்லை. ஆனால், கரன்சி புழக்கம் மட்டும் ஏகம். அதனால் முறைகேடுகளும் அதிகம். டிரான்ஸ்ஃபர் என்ற பெயரில் அதிகாரிகள் பந்தாடப்பட்டு, அதைத் தவிர்க்க, மகசூல் நடந்துகொண்டிருக்கிறது.
ஆள்மாறாட்டப் பதிவு மற்றும் போலி ஆவணப் பதிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்கூட சரிவர எடுக்கப்படுவது இல்லை. இதற்காக அமைச்சர் ஆய்வுக் கூட்டம் எல்லாம் போடுவார். ஆனால், ரிசல்ட்... பூஜ்ஜியம். மின் ஆளுமையைப் பயன்படுத்துவதிலும் முழுமை இல்லை. போலி ஆவணப் பதிவு, மோசடி மற்றும் ஆள்மாறாட்டங்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக, சார்பதிவாளர் அலுவலகங்களில் புகைப்படம் எடுத்தல் மற்றும் மின்னணு ரேகைப் பதிவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அதெல்லாம் கண்துடைப்பு நடவடிக்கைகளாக நடக்க, மோசடி பத்திரப் பதிவுகள் தொடர்கின்றன.

இத்தனைக்கும் தமிழ்நாடு பதிவுத் துறையின் முறைகேடுகளை, இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறையே தோலுரித்துக் காட்டியிருக்கிறது. 2012-13ம் ஆண்டுக்கான இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில், இந்தத் துறை தொடர்பாக நிறைய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. '2012-13ம் ஆண்டில் 135 சார்பதிவாளர் அலுவலகங்களின் பதிவுகள் குறித்த விவரங்களை ஆய்வுசெய்ததில், 351 இனங்களில் 1,271 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்களைக் குறைவாக மதிப்பிடுதல், தவறாக வகைப்படுத்துதல் போன்ற முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இதில், 93 இனங்களில் சொத்துக்களைக் குறைவாக மதிப்பிட்டதில் 11.07 கோடி ரூபாயும், 124 இனங்களில் ஆவணங்களைத் தவறாக வகைப்படுத்திய வகையில் 1,243.50 கோடி ரூபாயும், 132 இனங்களில் பிற வழிகளில் 16.70 கோடி ரூபாயும் முறைகேடுகள் நடந்துள்ளன’ என நீள்கிறது அறிக்கை.
'ஆவணப் பதிவுக்காக விவரங்கள் சேகரிக்க, 108 பயோ மெட்ரிக் கருவிகள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கருவிகளைப் பயன்படுத்தாததால் 85.61 லட்சம் ரூபாய் முடங்கியது. 22 சார்பதிவாளர் அலுவலகங்களை ஆய்வுசெய்ததில், 1,949 ஆவணங்கள், விடுமுறை நாட்களில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. 1,232 ஆவணங்களுக்கான ரசீதுகள், விடுமுறை நாட்களில் உருவாக்கப்பட்டிருந்தன’ என்றெல்லாம் பொளேர் முறைகேடுகள் மீது வெளிச்சம் பாய்ச்சியது அறிக்கை. தொடர்ந்து, '22 சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவான 9,353 ஆவணங்களை ஆய்வுசெய்ததில், அவை அந்தந்த அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதிக்கு முன்னதாகவே பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பதிவுப் பணிகளைக் கணினிமயமாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட, 'ரெஜிநெட்’ சேவை மையத்தில் 22 சார் பதிவாளர் அலுவலகங்களின் விவரங்களை ஆய்வுசெய்ததில், 1989-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலான பதிவுகளில், 69,958 ஆவணங்கள் குறித்த விவரங்கள் காணவில்லை. ஆவணப் பதிவின்போது சமர்ப்பிக்கப்படும் மின்னணு முத்திரைகளை அதன் பின் வேறு யாரும் பயன்படுத்தாத வகையில் கம்ப்யூட்டர் வாயிலாக அதை முடக்கிவைக்க, சார் பதிவாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 1,571 மின்னணு முத்திரைகள் சார்பதிவாளர்களால் முடக்கிவைக்கப்படவில்லை’ என்றும் அதிர்ச்சி கொடுத்தது தணிக்கைத் துறையின் அறிக்கை.
சென்னை பள்ளிக்கரணை ஏரியாவில், அரசுக்குச் சொந்தமான 66 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை ஒன்றுக்கு ஒரே நாளில் 66 லட்சத்துக்கு ஒரே ஆவணமாகப் பதிவுசெய்யப்பட்ட விவகாரம் நீதிமன்றப் படி ஏறியது. பத்திரப் பதிவுத் துறையில் நடக்கும் மோசடிக்கு இந்த வழக்கு ஒரு பயங்கர உதாரணம். 'பள்ளிக்கரணையில் அரசு நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பீடு இல்லாததால், அருகில் உள்ள கட்டடத்தின் வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. அதனால் இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை’ என நீதிமன்றத்தில் சொன்னது பத்திரப் பதிவுத் துறை. 'இந்த நிலத்தை வாங்குபவர் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ளாரா... இல்லையா? என்பதை அதிகாரிகள் சரிபார்த்திருக்க வேண்டும். பள்ளிக்கரணையில் ஓர் ஏக்கர் நிலம் ஒரு லட்சம் என விலை நிர்ணயித்து இருப்பதை கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லை. ஓர் இடத்துக்கு வழிகாட்டி மதிப்பீடு இல்லை என்றால், அருகில் உள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் பத்திரப் பதிவு செய்ய முடியாது. 66 லட்சத்துக்குப் பத்திரப் பதிவு செய்யப்பட்டிருப்பது மர்மமாக இருக்கிறது. இதை இப்படியேவிட்டால், புனித ஜார்ஜ் கோட்டை, உயர் நீதிமன்றத்தைக்கூட நில அபகரிப்பாளர்கள் யாருக்காவது விற்றுவிடக்கூடும்’ என்றது நீதிமன்றம்.

இந்த வழக்கு விசாரணையின்போது பத்திரப் பதிவுத் துறை கூடுதல் ஐ.ஜி ஆஜரானதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 'பத்திரப் பதிவு ஐ.ஜி-தான் நேரில் ஆஜராக வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்ட பிறகுதான் பத்திரப் பதிவு ஐ.ஜி முருகைய்யா ஆஜரானார். முறைகேடுகள் நீதிமன்றத்திலேயே சந்தி சிரித்தாலும், இதுவரை சொல்லிக்கொள்ளும்படி எந்தப் பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் விஜிலென்ஸ் சோதனைகள் நடத்தப்படவில்லை. அப்படி நடைபெறாமல் இருக்க தமிழ்நாட்டில் உள்ள எல்லா அலுவலகங்களும் கூட்டணி ஒப்பந்தம் அமைத்து பங்கு பிரித்து வேலை பார்க்கிறார்களாம்.
'மாநிலத்தின் மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்கை வணிக வரித் துறைதான் ஈட்டித்தருகிறது. அப்படிப்பட்ட துறையில் மலைமலையாகக் குளறுபடிகள். ஒவ்வோர் ஆண்டும் வணிகர் மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பட்ஜெட்டுக்கு முன்பு கூட்டம் நடத்தி ஆலோசனைகளைக் கேட்கிறது அரசு. ஆனாலும் வணிகர்களின் நலன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள், சிறு வணிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை அரசு கசக்கிப் பிழிகிறது’ எனப் புலம்புகிறார்கள் வணிகர் சங்க நிர்வாகிகள். 'அரசிடம் நிதி இல்லை. உடனே வரியைக் கட்டுங்கள்’ என ஏகத்துக்கும் கெடுபிடி காட்டுகிறார்களாம் வணிக வரி அதிகாரிகள்.
தமிழ்நாட்டில் முதன்முதலில் கணினி மயமாக்கப்பட்ட துறை, வணிக வரித் துறைதான். ஆனால், அதை முறையாகவும் முழுமையாகவும் செயல்படுத்தும் திட்டம் ஆமை வேகத்தில்தான் நகர்கிறது. வணிக வரி மூலம் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு மது விற்பனை மூலமே கிடைக்கிறது. ஆனால், வணிக வரித் துறையில் நடைபெறும் ஊழல்களால் வணிக வரி வருவாயை அதிகரிக்க முடியவில்லை. அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினால், ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி அளவுக்குக் கூடுதலாக வணிக வரி வசூலிக்க முடியும். அதேபோல் பத்திரப் பதிவுக் கட்டணமும் வழிகாட்டி மதிப்புகளும் அதிகமாக இருப்பதால், வணிக நோக்குடன் சொத்துகளை வாங்கும் பலரும் அதைப் பதிவுசெய்யாமல், பவர் ஆஃப் அட்டர்னி மூலம் விற்பனை செய்கிறார்கள். வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் தீர்வைகளைக் குறைத்து நடைமுறையை எளிமைப்படுத்தினால் வருவாயை அதிகரிக்க முடியும். ஆனால், அமைச்சருக்கு இதை எல்லாம் செய்ய எங்கே நேரம் இருக்கிறது?
'சட்டையில்லா சங்கரன், வேட்டியில்லா வேலன், சோப்பில்லா சொக்கி, புடவையில்லா பொம்மி, செருப்பில்லா சிங்காரம்... என யாரும் இருக்கக் கூடாது’ என்றார் அறிஞர் அண்ணா. மண்ணாளும் மகராசி ஆட்சியில் அதற்கும் மேலே சென்று மிக்ஸியில்லா மீனாட்சி, மின்விசிறியில்லா காமாட்சி, கிரைண்டர் இல்லா முனியம்மா, மடிக்கணினி இல்லா விசாலாட்சி என யாரும் இல்லை என்ற நிலை நோக்கி நடக்கிறது தமிழ்நாடு அரசு. நீங்கள் எங்களுக்கோ தங்கம்... எதிரிகளுக்கோ சிங்கம். உயிர் எழுத்தில் 'அ’ எடுத்து, மெய் எழுத்தில் 'ம்’ எடுத்து, உயிர்மெய் எழுத்தில் 'மா’ எடுத்து அழகுத் தமிழில் தமிழ்நாடே உங்களை 'அம்மா’ என்று அழைக்கிறது’ என யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பிப்பதையே தனது சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் சம்பத். இதில், யாரைச் சொல்லி நாம் நோவது!?

'புஸ்’வாண வாக்குறுதிகள்!

சோனங்குப்பத்தில் ஊனமுற்ற பெண்ணுக்கு அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக சம்பத்தின் விசுவாசி ஒருவர் பணத்தை வாங்கினார். அந்தப் பெண்ணுக்கு கோட்டாவில் வேலை கிடைத்துவிட, பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கிடைக்கவில்லை. புகார் ஓ.பன்னீர்செல்வம் வரை போக... பாய்ந்தது நடவடிக்கை. அந்தப் பெண்ணை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள்!

சட்டமன்ற அலுவலகத்தில் ஒருநாள் உட்கார்ந்தாலும் பதவிக்கு ஆப்புதான் என யாரோ சொல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக சம்பத்தின் கடலூர் சட்டமன்ற அலுவலகத்தில் பூட்டு தொங்கிக்கொண்டிருக்கிறது.

சம்பத்தின் அப்பா சின்னசாமி பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தப்பட்டுவருகிறது. 'அந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டதன் நோக்கம் பொதுநலம் அல்ல!’ எனச் சிரிக்கிறார்கள் உள்ளூர் அரசியல் புள்ளிகள்.

'கடலூர், பிச்சாவரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் திட்டு கடற்கரையை, மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவேன்’ எனத் தேர்தல் நேரத்தில் சம்பத் கொடுத்த வாக்குறுதி நமநமத்துக்கிடக்கிறது. இதேபோல் 'கடலூர் நகராட்சியின் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்திலும், மக்கள் பயன்படுத்தும் வகையில் அழகான பூங்காக்கள் அமைக்கப்படும். கடலூர் நகரின் அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்படும். நகரில் உள்ள குடிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்’ எனச் சொன்ன பல வாக்குறுதிகளும் 'புஸ்’வாணம்தான்.
மாற்றுக் கட்சியினருக்கு மரியாதை!
'தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்களுக்கு மட்டுமே கட்சி மற்றும் கூட்டுறவுப் பதவிகளை சம்பத் கொடுக்கிறார்’ எனக் குற்றச்சாட்டு படிக்கிறார்கள் ர.ர-கள். அதிலும் காங்கிரஸ், பா.ம.க., தி.மு.க-வைச் சேர்ந்தவர்களுக்குத்தான் பதவிகள் தரப்படுகின்றனவாம். கூட்டுறவுச் சங்கத்தில் கவரிங் நகையை வைத்து மோசடி செய்தவர்களும், ஏலச் சீட்டு நடத்தி கொள்ளை அடித்தவர்களும்தான் சம்பத்தால் பதவியில் நியமிக்கப்பட்டவர்கள். அண்ணா கிராமம் ஒன்றியக் குழுத் தலைவர் வேட்பாளருக்கு, கௌரிபாண்டியன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. அவரை மாற்றுவதற்காக சிலரைத் தூண்டிவிட்டு
சுந்தரி முருகன் வேட்பாளர் ஆக்கப்பட்டதிலும் சம்பத் தலை உருண்டது. சம்பத்தால் நியமிக்கப்பட்ட காமராஜ் என்பவர், புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்திவந்தபோது பிடிபட்டார்’ எனப் புகார்கள் குவிந்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்!
இரண்டாவது திறப்பு விழா!
கடலூர் ரயில்வே சுரங்கப் பாதை பணி முடிக்கப்பட்டு, திறக்காமல் 'மதமத’ என இருந்தார் சம்பத். சுரங்கப் பாதையைத் திறக்க, தொகுதி எம்.எல்.ஏ-வான சம்பத் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாததால், வெறுத்துப்போன மக்களே பாதையைத் திறந்துவிட்டனர். 'மந்திரி’ பதவிக்கு 'ஆப்பு’ விழுமோ எனப் பயந்து, கார்டன் வாசலில் குப்புற விழுந்தார் சம்பத். மக்கள் திறந்துவைத்த விஷயத்தை மறைத்து, இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் திறக்கவைத்தார்!

திரைமறைவு தி.மு.க பாசம்!
'சம்பத் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்தபோது, விழுப்புரம் தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்தவர் மின்னல் ராஜா. அவரோடு சம்பத்துக்கு நெருக்கமான நட்பு உண்டு. நரசிங்கம் புரத்தில் 'மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி நிலையம்’ தொடங்கப்பட்டபோது அதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்தார் சம்பத். உடற்பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா அழைப்பிதழில் சம்பத் பெயரும் இடம்பெற்றது. இதை அப்போது அமைச்சராக இருந்த பொன்முடிதான் திறந்துவைத்தார். நன்கொடை அளித்த காரணத்தால் சாலை விரிவாக்கத்துக்கு மரங்களை வெட்டும் டெண்டரை சம்பத்துக்கே கொடுத்தார் பொன்முடி!’ என முணுமுணுக்கிறார்கள் கடலூர் அ.தி.மு.க-வினர். இது தொடர்பான ஆவணங்கள் கார்டனுக்கு அனுப்பப்பட்டும் கண்டுகொள்ளப்படவில்லை!