மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 16 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம்படங்கள்: தே.தீட்ஷித், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி

2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி. சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த எஸ்.கோகுல இந்திரா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் ஆகியோர் கேபினெட்டில் இருந்து நீக்கப்பட்ட நாள். மூன்று பேர் 'அவுட்’ ஆக்கப்பட்டதால், பதிலுக்கு மூன்று பேர் 'இன்’ ஆனார்கள். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த என்.ஆர்.சிவபதிக்குப் பதிலாக ஒருவரை அமைச்சரவைக்குள் கொண்டுவர வேண்டும் எனத் தேடியபோது கிடைத்தவர்தான் பூனாட்சி.

மியூசிக்கல் சேர் விளையாட்டாக இருக்கும் 'அம்மா கேபினெட்’டில், எந்த எம்.எல்.ஏ-வுக்கு எப்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனத் தெரியாது. அதனால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பற்றிய உளவுத் துறை ரிப்போர்ட் எப்போதும் தயாராக இருக்கும். அப்படி ஒரு ரிப்போர்ட் தயாரிக்க, பூனாட்சி பற்றி விசாரித்துக்கொண்டிருந்தது உளவுத் துறை. இதைத் தெரிந்துகொண்டதும், 'அமைச்சர் பதவி மேல் எனக்கு ஆசை இல்லை. அந்த அளவுக்கு எல்லாம் நான் படிக்கலை. மந்திரி பதவி கொடுத்தாலும் எனக்குச் சமாளிக்கத் தெரியாது. அதனால அமைச்சர் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம்’ எனச் சொன்ன பூனாட்சி, கேபினெட்டில் இடம் பிடித்ததும் என்ன சொன்னார் தெரியுமா?

'எல்லா மாவட்டங்கள்லயும் அமைச்சர்களாக இருக்கிறவங்களே, அந்தந்த மாவட்டச் செயலாளர்களாக இருக்காங்க. இன்னும் ஏன், அம்மா என்னை மாவட்டச் செயலாளரா அறிவிக்காம இருக்காங்க?’ - அமைச்சர் பதவி, பூனாட்சி மனதில் அந்த அளவுக்கு கெத்து உண்டாக்கிவிட்டது. ஆனால், மனநிலையில் மட்டுமே அந்தத் 'தரம் உயர்வு’ நிகழ்ந்து இருக்கிறது. செயல்பாடுகளில்..? பார்ப்போம்!

மந்திரி தந்திரி - 16 !

ரசிகன் டு அரசியல்வாதி!

முசிறி அருகே இருக்கும் நெய்வேலியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன்தான் பூனாட்சி. விடலைப் பருவத்தில் பக்கத்து ஊர்களுக்கு நண்பர்களுடன் நடந்து சென்று தீவிரமாக சினிமாக்கள் பார்த்ததின் விளைவு, எம்.ஜி.ஆர் ரசிகர் ஆனார். முசிறியில் அப்போது இருந்த வளநாடு, அண்ணா டாக்கீஸ்களில் அடித்துப்பிடித்து எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்துவிட்டு வந்து, எம்.ஜி.ஆர் பாணியிலேயே நடை, உடை, பாவனைகளில் திரிவார் பூனாட்சி.

நிலம்கூட இல்லாத விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால், அவரால் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. செயற்கை வைரக்கல் செய்யும் வேலைக்குப் போனார். வேலையைக் கைவரக் கற்றதும், நெய்வேலியில் செயற்கை வைரக்கல் பட்டறை ஆரம்பித்தார் பூனாட்சி. ஆரம்பத்தில் களைகட்டிய தொழில், ஒருகட்டத்துக்குப் பிறகு நஷ்டம் அடைந்தது. உடனே கோரைப் பாய்க்குச் சாயம் போடும் தொழிலுக்கு மாறினார். அதுவும் கையைக் கடித்தது. எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது கட்சியில் இணைந்தார். கட்சி வேலைகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டார். அரசியலின் நெளிவுசுளிவுகள் புரிவதற்கு வெகுகாலமானது.

1993-ம் ஆண்டில் ஒன்றியச் செயலாளர் பதவிக்காக, தன்னை வளர்த்துவிட்ட பிரின்ஸ் தங்கவேலுவையே எதிர்த்து நின்றார் பூனாட்சி. தேர்தலில் தோற்றாலும், தங்கவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டதில் பூனாட்சி பிரபலம் ஆனார். ஆனாலும் கட்சியில் வளர்ச்சி இல்லை. அதுவும் பிரின்ஸ் தங்கவேலுவின் எதிர் அரசியலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல காலம் அமைதியாகவே இருந்தார்.

மந்திரி தந்திரி - 16 !

1996-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நெய்வேலி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக நின்று வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் வென்ற 18 பேர் தி.மு.க கவுன்சிலர்கள்; நால்வர் அ.தி.மு.க-வினர். சேர்மன் பதவிக்கு, தி.மு.க-வைச் சேர்ந்த இருவரிடையே போட்டி. அதில் ஒருவரான ராமச்சந்திரன் சேர்மன் ஆவதற்காக பூனாட்சி ஓட்டு போட்டதாக, அப்போதே கிளம்பியது குற்றச்சாட்டு.

2001-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பூனாட்சி மீண்டும் ஜெயித்தார். நெய்வேலி ஒன்றிய சேர்மன் பதவிக்கு பூனாட்சியின் பெயரை அறிவித்தது தலைமை. ஆனால், தேர்தலில் செலவு செய்ய பூனாட்சியிடம் பணம் இல்லை. எதிர் தரப்பிலோ போன முறை பூனாட்சியால் ஜெயித்த ராமச்சந்திரன் வேட்பாளர். இந்தச் சூழலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய காலதாமதமாகச் சென்றார் பூனாட்சி. இதனால் போட்டியின்றி ஜெயித்தார் தி.மு.க-வின் ராமச்சந்திரன். பூனாட்சிக்கும் ராமச்சந்திரனுக்கும் இடையிலான திரை மறைவுப் பாசம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்துக்கு வர, கொதிகொதித்தார்கள் ர.ர-க்கள். 'அம்மா’வுக்குத் தக்க சமயத்தில் தகவல் சேர்ப்பிக்கப்பட, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் பூனாட்சி.

டம்மி டு கேபினெட்!

சில காலம் கமுக்கமாக இருந்த பூனாட்சி, அப்போதைய திருச்சி மாவட்டச் செயலாளர் பரஞ்சோதியுடன் நெருக்கமானார். அவர் மூலம் மீண்டும் கட்சிக்குள் நுழைந்தார். 'ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு எந்தப் பதவியோ பொறுப்போ வழங்கப்படாது’ என்பது அ.தி.மு.க-வின் அடிப்படை விதி. 'இருந்துட்டுப் போகட்டுமே’ எனச் சொல்லி பூனாட்சிக்கு எம்.எல்.ஏ ஸீட்டே வாங்கிக் கொடுத்தார் பரஞ்சோதி. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்வராஜை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றார் பூனாட்சி.

2011-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மணச்சநல்லூர் தொகுதியில் அதே செல்வராஜை எதிர்த்துப் போட்டியிட, பூனாட்சிக்கு ஸீட் வழங்கினார்கள். அப்போது ஜெயலலிதாவிடம் பூனாட்சி, 'என்கிட்ட தேர்தல் செலவுக்குகூட காசு இல்லைம்மா!’ எனச் சொல்ல, 'அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்’ என்றாராம் ஜெயலலிதா. எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார் பூனாட்சி. முன் எப்போதையும்விட அமைதியாகவே இருந்தார். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது, முத்தரையர் சமுதாய பிரதிநிதித்துவத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூனாட்சி. தமிழ்நாடு அமைச்சரவையில் அதிகம் படிக்காத அமைச்சர்களில் ஒருவராக இடம்பிடித்த பூனாட்சியின் செல்வாக்கு மட்டும் அல்ல, செல்வப் பட்டியலும் மடமடவென உயர்ந்திருக்கிறது!

துறையில் சாதித்தது என்ன?

பட்டு வளர்ச்சி, கைத்தறித் தொழில், பனைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கதர் கிராமத் தொழில் என, கவனம் ஈர்க்காத துறைகளே, பூனாட்சிக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், அவர் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவே இல்லை.

பனைப் பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருட்களை வழங்குவதோடு, பனைப் பொருட்களைச் சந்தைப்படுத்தி பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழ்நாடு பனைப் பொருள் வளர்ச்சி வாரியம். இந்தியாவிலேயே முதன்முதலாக பனைத் தொழிலுக்கு என பிரத்யேகமாக தமிழ்நாட்டில்தான் பனைப் பொருள் வளர்ச்சி வாரியம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், பூனாட்சி தலைமையில், வாரியத்தில் எந்தக் காரியமும் நடைபெறுவது இல்லை. சமீபமாக இயற்கைப் பொருட்கள் மீது உண்டாகியிருக்கும் ஆர்வத்தைக்கூட வியாபார வாய்ப்பாகக் கருதவில்லை வாரியம். பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனை சாக்லேட், பனை நாரால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றைச் சந்தைப்படுத்த எந்த நவீன உத்தியும் வகுக்கப்படவில்லை. அம்மா குடிநீரை விற்பதில் காட்டிய அக்கறையை, பனைப் பொருட்கள் விற்பனையில் காட்டவில்லை என்கிற ஆதங்கம் பனைத் தொழிலாளர்களுக்கு உண்டு. பனைப் பொருள் விற்பனை அங்காடிகளைப் பெருக்கும் குறைந்தபட்ச முயற்சிகளில்கூட கவனம் செலுத்தவில்லை அமைச்சர்.

தமிழ்நாட்டில் காவிரிப் பிரச்னை, முல்லை பெரியாறுபோல காலங்காலமாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயம் 'கள் இறக்குவதற்கான அனுமதி’. சட்டசபைத் தேர்தல் சமயம், 'தென்னை மற்றும் பனைமர விவசாயிகளின் கள் இறக்க அனுமதி கேட்கும் கோரிக்கையை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம்’ என, பொள்ளாச்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முழங்கினார் ஜெயலலிதா. ஆனால், தன் தலைவி இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது அமைச்சருக்குத் தெரியுமா என்பதே நமக்குச் சந்தேகமாக இருக்கிறது.

டாஸ்மாக்கை மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில் 'கள் ஆரோக்கியமான பானம். உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. கள் இறக்க அனுமதி அளித்தால், கிராமப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். கள்ளைப் பதப்படுத்தி பாக்கெட்டுகளில் விற்பனை செய்யலாம்’ எனச் சொல்லிவருகிறார்கள் பனைத் தொழிலாளர்கள். ஆனால் அரசோ, வழக்கம்போல 'கள்’ள மௌனம் காக்கிறது.

உலக அளவில் மல்பரி பட்டு உற்பத்தியில் (சீனாவுக்கு அடுத்தபடியாக) இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆனால், தேவைக்கு ஏற்ப பட்டு உற்பத்தி இல்லாத சூழலில், தமிழ்நாட்டில்  கச்சா பட்டுத் தேவையின் அளவு சுமார் 3,000 மெட்ரிக் டன். ஆனால், 1,200 மெட்ரிக் டன்தான் இங்கு உற்பத்தியாகிறது. பற்றாக்குறையை, கர்நாடகம் மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதை மாற்றுவதற்கான முயற்சிகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. சென்னை தவிர, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பட்டு வளர்ப்பு நடைபெறுகிறது. ஆனால், ஏன் பற்றாக்குறை நிலை நீடிக்கிறது என அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்!

ஆனால்... எங்கே?!

'தந்தை பெரியார் பிறந்தார்... துணிவு பிறந்தது. அறிஞர் அண்ணா பிறந்தார்... ஆற்றல் பிறந்தது. புரட்சித் தலைவர் பிறந்தார்... ஈகை பிறந்தது. அம்மா தாங்கள் பிறந்தீர்கள்...  நல்லன எல்லாம் பிறந்தன. கிராமத் தொழில்களை இன்று ஊக்குவித்துவருகிறார் அம்மா. இன்றைய கிராம மக்களின் குடியிருந்த கோயிலாகத் திகழ்கிறார் அம்மா’ - நசிந்துகொண்டிருக்கும் கிராமத் தொழில்கள் மீது கவனம் குவிக்காத பூனாட்சி, 'அம்மா’வின் கவனம் ஈர்க்க இப்படி துதி பாடிக்கொண்டிருக்கிறார்!

ஏழை மாண்புமிகு!

2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது பூனாட்சியின் சொத்து மதிப்பு சுமார் 15 லட்சம். 2011-ம் ஆண்டு தேர்தலில் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 37 லட்சம். மிகக் குறைந்த அளவுக்கு சொத்து வைத்திருக்கும் எம்.எல்.ஏ-க்களில் ஒருவராக இருந்தார் பூனாட்சி. பான் கார்டுகூட இல்லை. வருமான வரிக் கணக்கும் தாக்கல் செய்யவில்லை. 2007-ம் ஆண்டு வரை ஒரு சுஸ¨கி மோட்டார் பைக் மட்டும் வைத்திருந்தார் பூனாட்சி. 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் செலவுக்கே காசு இல்லாமல் தவித்தார். அன்றைக்கு பான் கார்டுகூட இல்லாமல் சமாளித்தவருக்கு, இப்போது பான் கார்டு வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஜே.சி.பி., லாரிகள், டிப்பர் லாரி, டேங்கர் லாரி, டிராக்டர் என அவரைச் சுற்றி இருப்பவர்கள் வாங்கிக் குவிக்கிறார்களாம். அமைச்சரின் வீடும் பளபளவெனப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது!

ஆல் இல் ஆல் அருண்!

பிரபாகர், அருண்குமார், ஜெயந்தி என பூனாட்சிக்கு மூன்று பிள்ளைகள். இவர்களில் அமைச்சருக்கு 'ஆல் இன் ஆல்’ அருண்குமார்தான். முசிறி, மண்ணச்சநல்லூர் யூனியன்களில் அரசாங்க கான்ட்ராக்ட்கள் அருணின் சிக்னல் கிடைத்தால்தான் நகரும். அவரும் ஒரு கான்ட்ராக்டர்தான். சில இடங்களில் பிரபாகர் மூக்கை நுழைக்க, சகோதரர்களுக்குள் மோதல் வெடித்து, நீறு பூத்த நெருப்பாகப் புகைந்துகொண்டிருக்கிறது.

மந்திரி தந்திரி - 16 !

இடையில் மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள திருபஞ்சீலியில் இருந்து மூவாரம்பாளையம் வரை 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் போட்ட சாலையை ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி ஆய்வுசெய்தார். 'அது தரமற்ற சாலை’ என்றார். இது தொடர்பாக அந்தப் பகுதிவாசிகள் கேள்வி எழுப்ப, கோபத்தில் அருண்குமார் அவர்களை அடித்துவிட்டாராம். விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, சமரச முயற்சிகளை மேற்கொண்டார்கள். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுக்க, 'அருண்குமார் கான்ட்ராக்ட் எடுக்கவில்லை’ எனச் சாதித்துச் சமாளித்தார்கள்.

அமைச்சரின் நன்றிக்'கடன்’!

மந்திரி தந்திரி - 16 !

பூனாட்சி அமைச்சரான பின்னர், தன் அரசியல் குருவான பரஞ்சோதியைக் கண்டுகொள்வதே இல்லை யாம். 'வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துவிட்டது’ என, பரஞ்சோதி புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

மந்திரி தந்திரி - 16 !
மந்திரி தந்திரி - 16 !

 பாய் வியாபாரம் நடத்தியபோது, ஏவூர் கணேசன் என்பவரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்தார் பூனாட்சி. அரசியலில் ஓகோ வளர்ச்சி பெற்ற பிறகு, அப்போது கடன்

மந்திரி தந்திரி - 16 !

கொடுத்த ஏவூர் கணேசனுக்கு, கவுன்சிலர் ஸீட் கொடுத்து நன்றிக்கடன் செலுத்தினார் பூனாட்சி.

மந்திரி தந்திரி - 16 !

 அமைச்சராக இருந்தாலும் கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் எனத் துடிக்கிறார் பூனாட்சி. ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி.

பூனாட்சியின் தந்தை  பெரிய பூனாட்சி.  குடும்பக் குலதெய்வத்தின் பெயர்  பூனாட்சி. அதுவே அமைச்சரின் பெயரானது!

மந்திரி தந்திரி - 16 !

பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு,  செயற்கை வைரக்கல் பட்டறையில் சேர்ந்தார். பயிற்சி பெற்று சொந்தமாக 'பட்டறை’யைப் போட்டார். கடன் நெருக்கடி. அடுத்து பாய் வியாபாரம். அதுவும் இக்கட்டில் சிக்க, அரசியலுக்குள் என்ட்ரி!

தி.மு.க சேர்மன் ஜெயிக்க, பூனாட்சியின் திரை மறைவுப் பாசம் கை கொடுத்தது. கட்சியில் இருந்து கல்தா கொடுக்கப்பட்டார்!

மாவட்டச் செயலாளர் பரஞ்சோதியுடனான நெருக்கம், பூனாட்சியை மீண்டும் கட்சியில் கரை சேர்த்தது.

அந்தா இந்தாவென அமைச்சராகிவிட்டார். ஆனால், அமைச்சராக பாராட்டவோ, திட்டவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!  

ஆட்சிக் காலம் முடிவடைய இருப்பதால், இப்போது மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைக்கிறார்!