
முகில்
'கடவுள் இருக்கிறாரா... இல்லையா?’ தெரியாது. ஆனால் 'கூகுள்’ இருக்கிறது. கடவுள் குறித்த தேடல் என்றும் ஓயாது. ஆனால், நவீன யுகத்தில் தேடல்களின் கடவுள் கூகுளே!

பெரும் தவம் இருந்து பெறுவதற்கு அரிய வரம் பெற்றது எல்லாம் புராண காலம். வேண்டியவற்றை சிங்கிள் க்ளிக்கில் மைக்ரோ நொடிகளில் கண்டடைதல் கூகுள் காலம். 'புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும். அது இந்த உலகையே புரட்டிப்போட வேண்டும்’ என ஒரு சிறுவனின் மனதில் உருவான தேடல்தான், இன்று 5.97219 X 1024 கி.கி எடைகொண்ட பூமிப்பந்தையே, சில 100 கிராம் எடை உள்ள ஸ்மார்ட்போன்களில் அடக்கி விட்டது. அந்தத் தேடலின் நாயகன்... லாரி பேஜ்!
1973-ம் ஆண்டு. அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தார் லாரி. அவருடைய தந்தை கார்ல், கணினித் துறையில் ஆய்வுப் படிப்பை முடித்தவர்; மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர். தாய் குளோரியாவும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்றுக்கொடுக்கும் பணியில் இருந்தவரே. ஆக, லாரி பேஜ் தவழ்ந்தது, தத்தி நடந்தது, வளர்ந்தது... எல்லாமே கணினியும் கணினி சார்ந்த திணையில்தான். நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போதே, ஹோம்வொர்க்கை வேர்டு புராசஸரில் டைப்செய்து பிரின்ட் எடுத்துச் சென்று ஆசிரியரைத் திகைக்கச்செய்தான் லாரி. கம்ப்யூட்டரையும் வீட்டில் இருக்கும் மற்ற கருவிகளையும் பிரித்து மேய்ந்து, பின்பு அவற்றை ஒன்றுசேர்த்து சீர்செய்தலே அவனது பொழுதுபோக்கு.

லாரியின் சிறு வயதில், பேசுவதற்குத் தயக்கம் இருந்தது. கார்ல், அதைக் களைய நினைத்தார். ஓய்வு நேரங்களில் மகனோடு பல விஷயங்களில் விவாதங்கள் நடத்தினார். அந்தப் பயிற்சியால் கருத்தாழத்துடன் பேசக் கற்றுக்கொண்டான் லாரி. அவனின் எட்டாவது வயதில், பெற்றோரின் விவாகரத்து நிகழ்ந்தது. மணம் முறித்த கார்லோ, குளோரியாவோ, புதிதாக மணம் முடித்து வந்த 'சித்தி’ ஜாய்ஸோ, லாரியின் மனம் முறியவிடவில்லை. இயல்பு வாழ்க்கை தொடர்ந்தது.
கடந்த இரு நூற்றாண்டுகளில் அசாத்தியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய நிகோலா டெஸ்லாவின் வாழ்க்கைப் புத்தகத்தை, தன் 12-வது வயதில் படித்தான் லாரி. இயற்பியல், மின்சாரவியல், இயந்திரவியல் துறைகளின் அற்புத மேதை டெஸ்லா. மாறுதிசை மின்னோட்டத்தைக் (AC) கண்டறிந்தவர். ஆனால், டெஸ்லாவால் எடிசன் போல வணிகரீதியாக வெற்றிபெற முடியவில்லை. தொழிலில் பல நஷ்டங்களைச் சந்தித்து, வறுமையில் உழன்று தன் 86-வது வயதில் ஒரு தோல்வியாளராகவே இறந்துபோனார். புத்தகத்தைப் படித்து முடித்து உடைந்து அழுதான் லாரி. கூடவே ஒரு விஷயமும் மனதில் ஆழப் பதிந்தது. 'கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவன் வெற்றியாளன் அல்ல; அதை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசேர்த்துச் சாதிப்பவனே உண்மையான வெற்றியாளன்!’
பள்ளிப் படிப்புக்குப் பின் லாரி, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவனாகச் சேர்ந்தான். கணினியியல் படிப்பு. அங்கே தலைமைப் பண்புடன் நிர்வாகத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அவனுக்கு அமைந்தன. கற்பனையாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அதைச் சந்தைப்படுத்தும் போட்டிகள் சிலவற்றில் தன் நண்பர்களுடன் கலந்துகொண்டான். அனுபவம் வளர்ந்தது. படிப்பு முடிந்தது. அடுத்து? கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டில் பிஹெச்.டி படிக்கும் வாய்ப்பு. இந்த இடத்தில் படிக்கலாமா... வேண்டாமா என, மாணவர்கள் கல்வி வளாகத்தைச் சுற்றிப்பார்த்த பின் முடிவெடுக்கும் வசதி அமெரிக்காவில் உண்டு.

ஸ்டான்ஃபோர்டை லாரி சுற்றிவர உதவியாக உடன் வந்த சீனியர் மாணவர், செர்கே பிரின். ரஷ்யப் பெற்றோருக்குப் பிறந்தவர்; யூதர்; அமெரிக்காவில் வளர்ந்தவர். லாரி பேஜைப் போலவே அதிபுத்திசாலி. ஆகவே, பேஜுக்கும் செர்கேவுக்கும் ஆரம்பத்திலேயே ஆகவில்லை. கருத்து வேறுபாடுகள். ஏட்டிக்குப்போட்டி விவாதங்கள். டாம் - ஜெர்ரி போல மோதிக்கொண்டார்கள். லாரிக்கு, செர்கேவை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், ஸ்டான்ஃபோர்டு பிடித்திருந்தது. அங்கே சேர்ந்தார்.
பிஹெச்.டி-க்காக இணையம் சார்ந்த ஆராய்ச்சி செய்ய, லாரி ஆசைப்பட்டார். 90-களின் பிற்பகுதியில்தான் இணையம் புகழ்பெற்று வந்தது. தினமும் எண்ணற்ற இணையதளங்கள் முளைத்துக்கொண்டிருந்தன. சுவாரஸ்யம் இல்லாமல் இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு பொழுதில் லாரியின் மூளைக்குள் ஒரு பல்பு பிரகாசித்தது. யோசனை இதுதான். ஏபிசிடி.காம் என்ற இணைய தளத்துக்கான இணைப்பு (Link), வெவ்வேறு இணையதளங்களில் குறிப்பிடப் பட்டிருக்கலாம். அப்படி எத்தனை இணையதளங்களில் ஏபிசிடி.காம் லிங்க் ஆகியிருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் அந்தத் தளத்தின் 'புகழ் அளவை’க் கணக்கிடுவதே அடிப்படை யோசனை. ' BackRub ’ என அந்த ஆய்வுக்குப் பெயரிட்ட லாரி, அதற்கு என Crawler என்ற புரோகிராமையும் எழுதினார். அது, குறிப்பிட்ட ஓர் இணையதளத்துக்கு / இணையப்பக்கத்துக்கு எத்தனை பேர் லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என்ற பட்டியலை சில நிமிடங்களில் கொட்டியது. ஆனால், அந்தப் பட்டியலில் உள்ள எத்தனை இணையப்பக்கங்கள் நிஜமாகவே தகவல்கள் உடையவை எனக் கண்டறியவேண்டிய சவால் இருந்தது. அப்படிக் கண்டறிவதன் மூலம், தகவல் செறிவு உள்ள பக்கங்களைப் பட்டியலின் முதல் வரிசையிலும், செறிவற்ற பக்கங்களை பின்வரிசையிலும் தள்ளிவிடலாம் என நினைத்தார். இதற்காக, லாரிக்கு அந்த எதிரியின் உதவி தேவைப்பட்டது. வேறு யார்? செர்கேதான்!
இணையம் என்ற பிரமாண்ட சமுத்திரத்தில் எது தேவை, எது குப்பை எனத் தகவல்களைத் தரம் பிரிக்கும் ஆய்வு ஒன்றில்தான் செர்கே அப்போது ஈடுபட்டிருந்தார். அதில் அவர் கில்லாடி. லாரி, தன் ஆய்வு பற்றி சொன்ன யோசனை செர்கேவுக்குப் பிடித்திருந்தது. ஆக, 1996-ம் ஆண்டு டாமும் ஜெர்ரியும் BackRub ஆய்வுக்காக நண்பர்கள் ஆனார்கள். இந்தத் தருணத்தில் லாரியின் தந்தை இறந்துபோக, துக்கத்தில் துவண்ட நண்பனை, ஆய்வில் கவனம் செலுத்துமாறு மீட்டுவந்தார் செர்கே. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை எல்லாம் உறிஞ்சி எடுத்துச் சேமிக்க வேண்டும் என்றால் ஏகப்பட்ட கணினிச் சக்தி தேவைப்படுமே! 'உங்ககிட்ட இந்த கம்ப்யூட்டர் சும்மாதானே இருக்கு. எங்க ஆய்வை முடிச்சுட்டு திரும்பத் தந்துடுறோம். ப்ளீஸ்...’ - லாரியும் செர்கேவும் அங்கும் இங்கும் கெஞ்சிக் கூத்தாடி கணினிகளைச் சேமித்தார்கள். லாரி பேஜ், சுமார் ஏழரைக் கோடி இணையப்பக்கங்களை, Pagerank என்ற சூத்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் நுட்பத்தை உருவாக்கினார். செர்கே, ஒவ்வோர் இணையதளத்தின் தகவல்களை ஆராய்ந்து 'சூப்பர்’, 'ஓ.கே’, 'குப்பை’ எனச் சீர்தூக்கித் தரம் பிரிக்கும் சூட்சுமத்தை உருவாக்கினார். இருவரது கடுமையான உழைப்பில் BackRub வடிவம் பெற்றது. அதை இயக்கிப்பார்த்த ஸ்டான்ஃபோர்டின் பேராசிரியர் ராஜீவ் மோட்வானி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். 'கண்ணுங்களா... நீங்க உருவாக்கி இருக்கிற தொழில்நுட்பம் சாதாரணமானது அல்ல; அட்சயப்பாத்திரம்’!
அப்போது வரை, இணையத்தில் தேவையானதைத் துல்லியமாகத் தேடி எடுக்கும் உருப்படியான ஒரு தேடல் இயந்திரம் (Search engine) இல்லை. வெறும் வார்த்தைகளைக் கொண்டு தேடி, தேவையற்ற குப்பைகளை எல்லாம் தேடிக் கொட்டும் தெளிவற்ற தேடல் இயந்திரங்களே இருந்தன.
உதாரணத்துக்கு, 'காந்தி’ எனத் தேடினால் வெறுமனே, 'காந்தி காந்தி காந்தி’ என்ற வார்த்தை ஓர் இணையப்பக்கம் முழுவதும் நிரப்பப்பட்டு இருந்தால், அது முதலில் பட்டியலாகி எரிச்சலைக் கொடுக்கும். BackRub உதவியோடு அந்தக் கச்சடா பக்கங்களை நீக்கி, தேவையானவற்றை மட்டும் பேஜ்ரேங்க் அடிப்படையில் பட்டியலிட்டுக் கொடுக்கும் தெளிவான தேடல் பொறியை உருவாக்குங்கள்’ - ராஜீவ் ஆலோசனை கொடுத்தார். த்ரில்லான லாரியும் செர்கேவும் தூக்கம் தொலைத்தனர்.
இந்த அற்புத ஆய்வுக்காக, ஸ்டான்ஃபோர்டு நிர்வாகம் 10 ஆயிரம் டாலர் பணம் கொடுத்தது. லாரி, அதைக் கொண்டு நவீன கம்ப்யூட்டர்களை வாங்கவில்லை. விலை குறைந்த, அதே சமயம் செயல்திறன்மிக்க உதிரி பாகங்களை வாங்கினார். சக்திமிக்கக் கணினிகளை உருவாக்கிக்கொண்டார். ஒவ்வோர் இணையதளத்தையும் மொத்தமாக டௌன்லோடு செய்து, வார்த்தை வார்த்தையாகத் தேடுவது கடினமான, நேரம் பிடிக்கும் காரியம் அல்லவா? ஆக, தளங்களில் உள்ள தலைப்புகளை மட்டும் டௌன்லோடு செய்து, அதன் மூலம் தேடினால் சுலபம் என யோசனை சொன்னார் லாரி. இருவரும் கருத்துகளால் முட்டி மோதி, தேடலை எளிமையாக்கும் வழிவகைகளை உருவாக்கினார்கள். சரி, தேடல் இயந்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்? ஷான் ஆண்டர்சன் என்ற நண்பர் பரிந்துரைத்த கூகுள் ப்ளெக்ஸ் என்ற வார்த்தையின் சுருக்கமாக 'கூகுள்’ (googol) என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர். (1-க்குப் பின் 100 பூஜ்ஜியங்கள்கொண்ட எண் (googol) . தளத்தின் பெயரைப் பதிவுசெய்யும்போது ஷான், தவறுதலாக google.com எனப் பதிவுசெய்துவிட்டார். ஆரம்பத்திலேயே 'பிழை’. ஆனால், சரித்திரப் பிழை. (googol.com என்ற வேறொரு தளம் அதற்கு முன்பே இருந்ததால், பின்பு முயற்சித்தும் அந்தப் பெயர் கிடைக்கவில்லை.)
அடுத்த என்ன? கையில் அசாத்தியக் கண்டுபிடிப்பு ஒன்று இருக்கிறது. அதைத் திறமையாக வணிகம் செய்து, மக்களுக்குப் பயன்படும் விதத்தில் பரப்ப வேண்டும். இதில் பணம் கிடைத்தால்தான் ஆய்வை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும். லாரியும் செர்கேவும் ஸ்டான்ஃபோர்டு ஆய்வுப் படிப்பில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு கூகுளைக் கவனிக்கக் களம் இறங்கினார்கள். லாரி, கூகுள் தேடல் தொழில்நுட்பத்தை மற்ற இணையதளங்களில் பயன்படுத்தும் வகையில் விற்க முயற்சி செய்தார். சொன்ன விலை ஒரு மில்லியன் டாலர். 'தொழில்நுட்பம் சூப்பர். காசுக்கெல்லாம் வாங்க மாட்டோம். தேடல் சேவையைக் கொடுப்பதால், எங்களுக்கு என்ன லாபம்?’ எனப் பலரும் ஒதுங்கிக்கொண்டனர். அந்தச் சமயத்தில் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனர்களின் ஒருவரான ஆன்ட்டி பெக்டொல்ஷமை, லாரியும் செர்கேவும் சந்தித்தனர். 'முட்டாள் தேடல் இயந்திரங்களால்’ வெறுப்பு அடைந்திருந்த அவருக்கு, அதிமேதாவி கூகுள் அவ்வளவு பிடித்திருந்தது. 'ஓ.கே நான் முதலீடு செய்கிறேன்’ என Google.Inc. என்ற பெயரில் ஒரு லட்சம் டாலருக்கான காசோலை எழுதிக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஆனால், Google.Inc . என்றொரு நிறுவனமே இல்லையே. காசோலையை எப்படிப் பணமாக்குவது? விஷயத்தை உற்றார், நண்பர்களிடம் சொன்னார்கள். 'ஆன்ட்டியே முதலீடு செய்திருக்கிறாரா..?’ என்ற வியப்பில் மேலும் சிறு முதலீடுகள் சேர்ந்தன. கலிஃபோர்னியாவில் சூஸன் என்பவர், சிறு அறையும், கார் பார்க்கிங்கும் சேர்ந்த பகுதியை வாடகைக்குக் கொடுத்தார். பூவா... தலையா போட்டுப்பார்த்து இருவரும் பதவி பிரித்துக்கொண்டார்கள். லாரி பேஜ் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி; செர்கே சேர்மன். மூன்றாவதாக கிரெய்க் என்கிற சக மாணவரும் இணைந்தார். 1998-ம் ஆண்டு டாப் 100 வலைதளங்கள் என PC Magazine இட்ட பட்டியலில் கூகுளும் இடம்பிடித்தது.
1999-ம் ஆண்டு, கூகுளுக்குப் பெரிய அலுவலகம் பிடித்தார் லாரி. பல கட்டங்களில் வடிகட்டி புதிய பணியாளர்களைச் சேர்த்தார். எந்த விளம்பரமும் இன்றி கூகுளின் பெயர் பரவியது. தினமும் 70 லட்சம் தேடல்கள். (அதுவே 2014-ம் ஆண்டு ட்ரில்லியன்!) சர்ச் இன்ஜின்களின் சூப்பர் ஸ்டாராக கூகுள் உருவெடுத்தது. ஆனால், பைசா தேறவில்லை. வருமானத்துக்கு வழி? வேறு என்ன, கூகுளில் விளம்பரங்களை அனுமதிப்பதே. இணையத்தில் அடர்நிறப் பட்டைகளில் மின்னும், எங்கிருந்தோ குதித்துக்கொண்டுவரும் விளம்பரங்கள் என்றாலே லாரிக்கு அலர்ஜி. ஆனால், கூகுள் ஆயுள் நீடிக்க அவை தேவை என்ற கட்டாயத்தில் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், கண்களை உறுத்தாத, யாரையும் தொந்தரவு செய்யாத வரி விளம்பரங்களை மட்டுமே கூகுள் தேடலில் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டார். வருமானம் கொஞ்சம் வரத் தொடங்கியது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக Fashion அறிமுகமானது. தேடும் விஷயத்துக்கு ஏற்ப விளம்பரங்களைத் தூவுவது. அதாவது fashion எனத் தேடினால், அருகில் உள்ள துணிக்கடை, நகைக்கடை (வரி) விளம்பரங்கள் தோன்றும் உத்தி. இது கூகுளின் விளம்பர வருமானத்தைப் புஷ்டியாக்கியது.
இதற்கு மேல் லாரி பேஜின் வளர்ச்சிப் பாதையில் நாம் கூகுள் வேகத்தில் பயணம் செய்யவிருப்பதால், 'ஸீட் பெல்ட்’ அணிந்துகொள்ளுங்கள். 2000-ம் ஆண்டு மே மாதத்தில் கூகுள் தேடல் 10 மொழிகளில் அறிமுகமானது. (இப்போது தமிழ் உள்பட 150 மொழிகள் உள்ளன.) அந்த டிசம்பரில் பிரௌசர்களில் கூகுள் டூல்பார் அறிமுகமானது. அதாவது எந்த பிரௌசரிலும் கூகுள் பக்கத்துக்குச் செல்லாமலேயே கூகுள் தேடலை மேற்கொள்ளும் வசதி. முதலில் டூல்பார் குறித்த ஐடியாவை வெஸ்லே சான் என்கிற புராஜெக்ட் மேனேஜர் சொன்னபோது, 'மொக்கை யோசனை’ என முகத்தில் அடித்தார் லாரி. ஆனால், வெஸ்லே விடாப்பிடியாக டூல்பாரை உருவாக்கி, லாரியை இயக்கிப்பார்க்கச் செய்தார். அசந்துபோனார் லாரி. அதுவரை 'அதிரடி பாஸ்’ ஆக தடதடத்துக்கொண்டிருந்த லாரி, டூல்பார் விஷயத்துக்குப் பின், தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். தன் பணியாளர்கள் புதிய ஐடியாக்களைச் செயல்படுத்திப் பார்ப்பதற்காகவே, வாரத்தில் ஓரிரு நாள் நேரம் ஒதுக்கினார். கூகுள், பல பரிமாணங்களில் மெருகேறத் தொடங்கியது.
9/11 தாக்குதலின்போது அதுகுறித்த செய்திகளைத் தேடி இணையத்தில் நெரிசல் அதிகரிக்க, செய்தித் தளங்கள் பாரம் தாங்காமல் செயல் இழந்தன. அப்போது கூகுள், மற்ற தளங்களின் செய்திகளை எல்லாம் தொகுத்துக் கொடுத்து உலகை ஆசுவாசப்படுத்தியது. அந்தக் கணத்தில் 'கூகுள் நியூஸ்’ சேவைக்கான தேவையை உணர்ந்து உடனடியாக அதையும் ஆரம்பித்தார் லாரி. 'தேவையை உருவாக்குதல் கடினம். ஆனால், தேவைப்படுவதை, மக்களின் எதிர்பார்ப்பைவிட சில மடங்கு அதிகத் தரத்துடன் செம்மையாக வழங்கினால் செழிப்பாக ஜெயிக்கலாம்’ லாரியின் பிசினஸ் ஃபார்முலா. அதற்காகவே 2002-ம் ஆண்டு Google Labsஐ உருவாக்கினார். புதிய புதிய யோசனைகள் கூகுள் தயாரிப்புகளாக அங்கே செயல்வடிவம் பெறத் தொடங்கின.

அதே சமயம் அக்கம்பக்கத்தில் தென்படும் 'லட்டு ஐடியா’க்களையும் கூகுளுடன் இணைக்க லாரி தயங்கவில்லை. (2003-ம் ஆண்டு புகழ்பெற்றுக்கொண்டிருந்த Blogger, 2006-ம் ஆண்டு வீடியோ பகிர்வுகளால் ஹிட் அடித்துக்கொண்டிருந்த YouTube... ஆகியன சில உதாரணங்கள்.) கூகுள் இமெயில் சேவைக்கான (Gmail) ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. மற்ற இமெயில் சேவைகளைவிட அதிவேகம், பல புதிய வசதிகள் இரண்டும் முக்கியம் என்பது லாரியின் கட்டளை. புராஜெக்ட் மேனேஜர் பவுல், ஒருமுறை லாரிக்கு ஜிமெயிலைப் பரிசோதித்துக் காண்பித்தபோது, அவர் 'வேகம் பத்தாது’ என்றார். 'லோடு ஆக ஒரு செகண்டுதானே ஆகிறது’ என்றார் பவுல். 'இல்லை, 600 மில்லிசெகண்டு ஆகிறது. அது இன்னும் குறைய வேண்டும்’ என்றார் லாரி. 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி gmail களம் இறக்கப்பட்டது. மற்ற மெயில் சேவைக்காரர்கள், ஒரு நபருக்கு 20 எம்பி, 40 எம்பி என கஞ்சத்தனம் காட்டிய இடத்தில், ஜிமெயில் ஒரு ஐ.டி-க்கு 1 ஜிபி காலி இடம் வழங்கி, கவனம் ஈர்த்தது. பின் அதிலேயே Gtalk என்ற அரட்டை சேவை. அந்த அரட்டை தானாக 'ஹிஸ்ட்ரி’யில் பதிவாகிவிடும் எனும் வசதி. வந்த கொஞ்ச காலத்திலேயே ஜிமெயில் உலகம் விரும்பும் உன்னத மெயிலாக ஆட்சியைப் பிடித்தது.
நல்ல லாபத்தில் இயங்க ஆரம்பித்திருந்த கூகுள், 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி நாஸ்டாக் பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிட்டது. ஆரம்பத்திலேயே சுமார் 1.2 பில்லியன் வரை கூகுள் திரட்ட, அன்றே லாரி பேஜும் செர்கே பிரினும் பில்லியனர் ஆனார்கள். சம்பளம் தவிர, கூகுளின் பங்குகளையும் வைத்திருந்த நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் ஒரே பகலில் மில்லியனர் ஆனார்கள். கூகுள் புக்ஸ், கூகுள் மேப்ஸ், கூகுள் டிரான்ஸ்லேட், கூகுள் காலண்டர், கூகுள் குரோம் என அடுத்தடுத்து ஹிட் அடித்துக்கொண்டிருந்த லாரி, பல நாடுகளில் அலுவலகங்களைத் திறந்தார். (2004-ம் ஆண்டு இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத்.) இணையத்தின் திசையெங்கும் கூகுள் ஆட்சி பரவ ஆரம்பித்தது.
அடுத்து? மக்களின் கைபேசிகளில் கூகுளையும் அதன் பிற சேவைகளையும் கொண்டுசெல்ல வேண்டும். லாரி, அதற்கான வேலைகளில் 2004-ம் ஆண்டிலேயே இறங்கியிருந்தார்.
Android Inc. நிறுவனம், மொபைல்களுக்கான எளிய ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கும் பணிகளில் இருந்தது. 2005-ம் ஆண்டு கூகுள், ஆண்ட்ராய்டை வாங்கியது. 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ஆப்பிளின் முதல் தலைமுறை ஐபோன்கள் பெரும் பரபரப்பை உருவாக்கின. ஆப்பிள் விலை அதிகம். எளியவர்களின் மொபைலிலும் கூகுளின் சிரிப்பைக் காண நினைத்த லாரி, ஆன்ட்டி ரூபின் என்பவரோடு இணைந்து உழைத்து, 2008-ம் ஆண்டு அக்டோபரில் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைச் சந்தையில் களம் இறக்கினார். இன்று ஸ்மார்ட்போன் உலகம்... ஆண்ட்ராய்டு வசம்.
கூகுளின் CEO லாரி, இன்று உலகின் சக்திமிக்க தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கண்டுபிடிப்பாளர். அடுத்த இலக்காக செயற்கை அறிவுத்திறன் (Artificial Inteligence) சார்ந்த புராஜெக்ட்களில் (கூகுள் கிளாஸ், ஓட்டுநர் இல்லா கார்கள், ரோபோக்கள்) தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவர் எடுத்த முடிவுகளில் தோல்விகளும் நஷ்டங்களும் சறுக்கல்களும் உண்டு. கூகுளின் சில சேவைகள், அத்துமீறுகின்றன; நம் தகவல்களைத் திருடுகின்றன; பிரைவசியைப் பாதிக்கின்றன என்ற தீராத சர்ச்சைகளும் உண்டு. ஆனால், வெறும் தேடல் இயந்திரமாகத் தொடங்கிய கூகுளின் தேடல்கள் எல்லையற்று விரிவடைந்துகொண்டே செல்கின்றன. இன்று மட்டும் அல்ல, இனி என்றும் கூகுள் இன்றி அமையாது உலகு என அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் லாரி பேஜ்!
காதலால் மோதலா?

2007-ம் ஆண்டு லூசிண்டா என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட லாரிக்கு, இரண்டு குழந்தைகள்.

2015-ம் ஆண்டு ஜூலை மாதக் கணக்குப்படி, லாரியின் சொத்து மதிப்பு 34 பில்லியன் டாலர். உலக பில்லியனர்களில் 19-வது இடத்தில் இருக்கிறார்.


லாரிக்கு, பல வருடங்களாக குரல்வளையில் பிரச்னை உண்டு. அந்தப் பிரச்னையினால் மீட்டிங்குகளில் சில முறை பேச முடியாமல் போனதும் உண்டு. இப்போது அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

செர்கே - அன்னி இருவரும், நீண்ட காலம் காதலித்து, திருமணம் செய்துகொண்டவர்கள். 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். காரணம், செர்கேவுக்கும் கூகுளில் பணிசெய்யும் அமண்டா என்கிற பெண்ணுக்கும் தொடர்பு. இதை விரும்பாத லாரி, இப்போது செர்கேவுடன் பேசிக்கொள்வது இல்லை என்பதே தற்போதைய கூகுள் கிசுகிசு!
லாரி பேஜின் ஏழு பிசினஸ் மந்திரங்கள்!

புதிய யோசனையின் வெற்றி வாய்ப்பை மட்டும் பார். யோசனை சொல்பவர்களின் வயதையோ, அனுபவத்தையோ ஆராயாதே!

எப்போதும் போட்டியாளர்களைக் கவனத்தில் கொள்ளாதே!


குறைந்த கால லாபங்கள் தேவையற்றவை. நீண்ட காலம் நிலைத்துப் பலன் கொடுக்கும் விஷயங்களில் கவனம் செலுத்து.

தேவைகளை உருவாக்காதே... தேவைக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கு.

பலன் அளிக்காது என உறுதியாகத் தோன்றும் விஷயத்தோடு மல்லுக்கட்டி, நேரத்தை விரயமாக்காதே.

தீயவற்றைச் செய்யாதே. அவற்றைத் தீண்டாமலேயே பணம் சம்பாதிக்க முடியும்.

சிறந்த கண்டுபிடிப்புகள் கவனம் பெறும். ஆனால், உன்னதமான கண்டுபிடிப்புகளே உலகை ஆளும்!