இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் டாப்-10 டூ-வீலர்களில், 100-125சிசி செக்மென்ட்டைச் சேர்ந்த கம்யூட்டர் செக்மென்ட் வாகனங்களின் ஆக்கிரமிப்பை அதிகமாகப் பார்க்கலாம். குறைவான விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள், அதிக மைலேஜ் மற்றும் ரீ-சேல் மதிப்பு, போதுமான பெர்ஃபாமென்ஸ் மற்றும் வசதிகள், விலைக்கேற்ற தரம் மற்றும் டிசைன் என இவற்றின் ப்ளஸ் பாயின்ட்கள் அதிகம். ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், டிவிஎஸ் ஆகிய இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் அதிக மாடல்களைக் கொண்டிருக்கின்றன. “இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவில் 100சிசி பைக்குகளுக்கு எதிர்காலம் இருக்காது” எனக் கூறிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவரான ராஜீவ் பஜாஜ், பின்னாளில் டிஸ்கவர், பிளாட்டினா, CT 100 என 100சிசி செக்மென்ட்டில் வரிசையாக மாடல்களைக் களமிறக்கினார்.
''இந்தியாவின் கிடைக்கக்கூடிய விலை குறைவான பைக்'' என்ற பெருமையைக் கொண்டிருக்கும் பஜாஜின் CT 100, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 பைக்குகள் என்றளவில் விற்பனையாகி வருகிறது. இதற்குப் போட்டியாக ஹீரோ HF டான் - டிவிஎஸ் ஸ்டார் ஆகிய பைக்குகள் இருந்தாலும், இவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, என்ட்ரி லெவல் பட்ஜெட் பைக் செக்மென்ட்டில், தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் பஜாஜ் CT 100 பைக்குக்குப் போட்டியாக, ஒரு பைக்கைத் தயாரித்து வருகிறது டிவிஎஸ். தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்கைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரான பாலமுருகன். ஸ்பை போட்டோக்களைப் பார்க்கும்போது, இது சில சர்வதேச சந்தைகளில் கிடைக்கக்கூடிய டிவிஎஸ் நிறுவனத்தின் பட்ஜெட் பைக்குகளான ஸ்டார் HLX 100 அல்லது ஸ்டார் HLX 125 பைக்காக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.
ஆனால், இதில் இந்தியாவுக்கு ஏற்ப சில மாற்றங்களை இந்நிறுவனம் செய்திருப்பது தெரிகிறது. 17 இன்ச் Block Pattern டயர்கள், வட்ட ஹெட்லைட்டுக்குச் சிறிய ஃபேரிங், வித்தியாசமான க்ராஃபிக்ஸ், பின்பக்கத்தில் சற்றே தடிமனான காயில் ஸ்ப்ரிங் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். மேலும், இது ஒரு பட்ஜெட் பைக்தான் என்பதை, சில்வர் நிற அலாய் வீல்கள், க்ரோம் மட்கார்டு, பின்பக்க கேரியர், நீளமான சிங்கிள் பீஸ் சீட், டிரம் பிரேக்ஸ், குறைவான பாடி பேனல்கள் பறைசாற்றுகின்றன. ஸ்டார் HLX 100 பைக்கில் இருப்பது, ஸ்டார் ஸ்போர்ட் பைக்கில் இருக்கும் 99.7 சிசி DuraLife இன்ஜின்தான்; இதுவே ஸ்டார் HLX 125 பைக் என்றால், இந்தியாவில் விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்ட ஃப்னிக்ஸ் பைக்கில் இருந்த அதே 124.53 சிசி EcoThrust இன்ஜின்தான்! இரண்டுமே 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தவிர, Single cradle tubular ஃப்ரேம், முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் - பின்பக்க ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் என இந்த இரு பைக்குகளுக்கும், மெக்கானிக்கலாகச் சில ஒற்றுமைகளும் இருக்கின்றன.
CT 100 B Spoke, CT 100 Alloy, CT 100 ES Alloy எனும் 3 வேரியன்ட்களில் CT 100 பைக்கை பஜாஜ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. எனவே, இதற்கான பதிலடியாக, ஸ்டார் HLX 100 மற்றும் ஸ்டார் HLX 125 ஆகிய இரண்டு பைக்குகளையும் டிவிஎஸ் இங்கே அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில், CT 100 பைக்குடன் ஒப்பிடும்போது, அதிக செயல்திறன் மற்றும் சைஸ் - பெரிய பிரேக்ஸ் மற்றும் பெட்ரோல் டேங்க் - குறைவான எடை மற்றும் டயர் அளவு - அதிக வீல்பேஸ் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் - செல்ஃப் ஸ்டார்ட் ஆகிய வசதிகளை இவை கொண்டிருக்கின்றன. எனவே, கச்சிதமான விலையில் இவை வெளிவந்தால், பஜாஜ் CT 100 பைக்குக்கு ஒரு புதிய போட்டியாளர் வந்துவிட்டது!