மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 200 ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

‘லக்கி டிராப்’... இப்படியும் ஒரு ஃப்ராடு!

சென்னையில் உள்ள ஒரு மாலுக்கு சென்றபோது, ``இது லக்கி டிராப்... உங்கள் பெயர், தொலைபேசி எண்ணை எழுதி இந்தப் பெட்டியில் போடுங்கள்; தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சிறந்த பரிசுகள் உண்டு’’ என்று கூறினர். நானும் எழுதிப் போட்டேன். மறுநாளே தொலைபேசியில் தொடர்புகொண்டு ``வாழ்த்துகள்... நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள். இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு வர வேண்டும். சிறிதாக ஒரு தேநீர் விருந்து உள்ளது. உங்களுக்கு திருமணமாகி இருந்தால், உங்கள் கணவரும் வரலாம். இல்லையென்றால் உங்கள் அம்மா - அப்பா அல்லது அங்கிள் - ஆன்ட்டி யாருடனாவது வரலாம்’’ என்று கூறினர்.

நானும் என் கணவரும் சென்றோம். எங்களைப் போல பலர் வந்திருந்தனர்.  எங்கள் அனைவரையும் அமரவைத்து காஞ்சிபுரம் அருகே ஒரு மனை வாங்குமாறு மூளைச் சலவை செய்தனர். ``இத்துடன் நீங்கள் இன்ஷூரன்ஸ்கூட எடுத்துக்கொள்ளலாம். முன்பணம் செலுத்துபவர்களுக்கு பல இலவச கூப்பன்களும், பரிசுகளும் தருவோம்’’ என ஆசை காட்டினர். நாங்கள் அதனை நம்பாமல் வெறும் கையோடு வீடு திரும்பினோம். ஆனால், சிலர் முன்பணம் செலுத்தினர். சிறிது நாட்களுக்கு பின் அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

எனவே தோழிகளே... யாராவது இலவச பரிசு தருகிறோம் என்று கூறினால், தயவுசெய்து தீர விசாரித்து, தெளிவாக சிந்தித்துப் பாருங்கள்.

- பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

‘ராங்’ நம்பரிடம் `ரைட்’ நம்பர் வேண்டாமே..!

ன்று எங்கள் வீட்டு லேண்ட் லைனுக்கு ஒரு போன் வந்தது. நான் ‘ஹலோ’ சொன்னவுடன், எதிர்முனையில் ஒரு ஆண் பேசிக்கொண்டே போனார். அவர் பேச்சு சம்பந்தமில்லாமல் இருந்ததால், “உங்களுக்கு என்ன நம்பர் வேண்டும்?’’ என்று கேட்டேன். அந்த நபர் “உங்கள் நம்பர் என்ன?” என்று கேட்க, நான் என் நம்பரை கூறிவிட்டேன். அவர், “ராங் நம்பர்” என்று சொல்லி, போனை வைத்துவிட்டார்.

இந்த உரையாடலைக் கவனித்த என் கணவர், “எதிர்முனையில் பேசுபவர் நமக்கு அறிமுகம் இல்லாதவர் என்றால், நம் நம்பரை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நபருக்கு உன் போன் நம்பர் தெரிந்துவிட்டது. அந்த ஆள் வில்லங்கம் பிடித்தவனாக இருந்தால், மீண்டும் போன் வர வாய்ப்பு இருக்கு. அதனால கவனமா இரு” என்று எச்சரித்தார்.

அவர் கூறுவது சரிதானே... போனில் பேசும்போது, அலெர்ட்டாக இருப்போமே!

- யோ.ஜெயந்தி, கோயம்புத்தூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

குறையும் பளு... நிறையும் மனம்!

ரிலிருந்து வந்த என் மாமா குடும்பத்தை வழியனுப்ப, ரயில் நிலையம் சென்றிருந்தேன். கால் டாக்ஸியை விட்டிறங்கியதும், ஒரு போர்ட்டரைக் கூப்பிட்டு சாமான்களை எடுத்துச்கொள்ளச் சொன்னார் மாமா. போர்ட்டர் சாமான்களுடன் முன்னே செல்ல, ‘நாமே ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டிருக்கலாமே மாமா... எதுக்கு வீண் செலவு..?' என்றேன், நடந்துகொண்டே.

``அம்மாடி! நம்மைப் போன்றவர்கள் கூலியாகக் கொடுக்கும் பணத்தில் அந்தப் போர்ட்டரின் குடும்பமே பசியாறும். நாமும் சுமையின்றி ஃப்ரீயாக இருப்பதால், நம் குழந்தைகள், வயதானவர்களைக் கையைப் பிடித்து பாதுகாப்பாக படிகளில் அழைத்துச் செல்லலாம். அத்துடன் நாம் ரயிலில் ஏற வேண்டிய கோச்சுக்கு அருகிலேயே சரியாக ஊகித்து போர்ட்டரும் சாமான்களை வைப்பார். நம் பளுவும் குறையும்; மனதும் நிறையும்...'' என்றார்.

மாமாவின் கூற்று மிகவும் சரியென்றே பட்டது எனக்கு.

- ஆர்.விஜயா ரவி, ஈரோடு