எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கண்ணாடி
எதிர்காலத்தில் நமது தோற்றம் எப்படி இருக்கும் எனக் காட்டும் ஆளுயரக் கண்ணாடியை, அந்த அறிவியல் கண்காட்சியில் வாங்கியிருந்தார் தொழிலதிபர் வெங்கடாசலம். வேலையாட்கள், கண்ணாடியை அவர் அறைக்குள் சிரமப்பட்டு வைத்துவிட்டுச் சென்றனர்.
கண்ணாடியை பேக் செய்திருந்த பேப்பரைக் கழற்றிவிட்டு, '20 வருடங்களுக்குப் பிறகு...’ என ட்யூன் செய்துபார்த்தார். அவர் உருவம் தெரியவில்லை. திடுக்கிட்டு வருடங்களைக் குறைத்தார்.

10 வருடங்களுக்குப் பிறகு... அப்போதும் தெரியவில்லை. ஐந்து வருடங்கள்... உருவம் இல்லை. ஒரு வருடம்... இல்லை. ஆறு மாதங்கள்... ஒரு வாரம்... இல்லை.
இன்று... உருவம் தெரியவே இல்லை.
இன்னும் சில மணித்துளிகளாவது... சட்டென அவர் உருவம் தெரிந்த மறுகணம், கனமான அந்தக் கண்ணாடி அவரை நோக்கிச் சரிந்தது!
விஷுவல் கார்னர்
தண்ணீர் பெண்கள்
'தண்ணீரைக் காதலிக்கும் பெண்களா இல்லை...’ எனப் பாடலைத் தவறாகப் பாடத் தோன்றுகிறது... நியூயார்க்கைச் சேர்ந்த கிராஃபிட்டி ஆர்ட்டிஸ்ட் ஸீன் யெரோவின் ஓவியங்களைப் பார்த்தால்.

பிறந்து வளர்ந்த ஹவாய் தீவில் எப்போதும் தண்ணீரும் சர்ஃப் பலகையுமாகத் திரிந்த ஸீனுக்கு, நியூயார்க் வந்து தன் ஓவியத் திறமையைக் காட்ட அதே தண்ணீரும் சர்ஃப் பலகையும்தான் 'கால்’ கொடுத்திருக்கின்றன. நியூயார்க்கில் 'ஸ்ட்ரீட் ஓவியங்கள்’ என்கிற வரையறைக்குள் வரும் கிராஃபிட்டி ஓவியங்கள் பிரபலம். பொதுவெளிகளில் இருக்கும் சுவர்களையோ இன்னபிற வஸ்துக்களையோதான் கிராஃபிட்டி ஆர்ட்டிஸ்ட்கள் தங்கள் கேன்வாஸ்களாகப் பயன்படுத்துவது வழக்கம். பிரபல கிராஃபிட்டி ஆர்ட்டிஸ்டான 'தலைமறைவு ஓவியன்’ பேங்க்ஸி பற்றி முன்பு விகடனில்
ஒரு கட்டுரை வந்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்த வகையான ஒரு கிராஃபிட்டி ஆர்ட்டிஸ்ட், ஸீன் யெரோ.
வழக்கமான பாணியில் அல்லாது ஏதாவது வித்தியாசமாக சீன் போட வேண்டும் என நினைத்த ஸீனுக்கு, கண்களில் பட்டதுதான் கடல் நீரைத் தொட்டு நிற்கும் பிரமாண்டமான சுவர்கள்.
சர்ஃப் போர்டில் பிரஷ§ம் பெயின்ட்டுமாக, தண்ணீரில் மிதந்தபடி தனக்குத் தேவையான ஒரு

சுவரைக் கண்டுபிடித்ததும் மளமளவென வேலையை ஆரம்பித்துவிடுவார். அத்தனையும் பெண்களின் அழகான 'ஹைப்பர் ரியலிஸ்டிக்’ உருவப் படங்கள். தண்ணீருக்குள் இருந்து தலை காட்டுவதைப்போல தோற்றமயக்கம் தருபவை.
'என் தோழிகளில் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து போட்டோ எடுத்துக்கொண்டு வரையப் புறப்படுவேன். உருவப் படங்களாக இருந்தாலும் நுட்பமான 'எமோஷன்’கள் அந்தப் பெண்களிடம் இருக்கும். அதை உற்று நோக்கினால் மட்டுமே நீங்கள் கண்டடைய முடியும்’ என்கிறார் ஸீன்.
ஸீன் யெரோவின் இந்தத் தண்ணீர்ப்
பெண்களைக் கண்டால், ஆச்சர்யத்தில் மனம் தளும்பாதோர் யாரோ (சும்மா ஒரு கவிதை டச் ஃபினிஷிங்)!
ஷார்ட் ஃபிலிம்
THE PAVEMENT ( 2015 /4 min/ USA)
டெய்லர் ஏங்கெல் இயக்கிய 'தி பேவ்மென்ட்’ ஒரு ஃபிலிம் நாயர் (டீக்கடை அல்ல - Film noir என்றால் ஸ்டைலிஷான ஹாலிவுட் கிரைம் நாடகம்) வகைக் குறும்படம். டெய்லர் அடிப்படையில் எடிட்டர் என்பதால், இந்த நான்கு நிமிடப் படத்தில் எடிட்டிங்கில் கண்ணாமூச்சி ஆடி, பார்ப்பவரை மூச்சு வாங்க வைக்கிறார்.
ஒரு சிறிய வழக்கமான சம்பவம். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் விதத்தில் விரிந்து, பார்ப்பவர்களை யோசிக்கவைக்கிறது என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். படம் முடியும்போது கதையை ரசிகர்களே தங்கள் கற்பனையில் முன் பின்னாக முழுமையாக்கிப் பார்த்துக்கொள்ள முடிவதே இதன் சுவாரஸ்யம்.

'ஒரு கவிதையைப்போல ரிதமிக்காக ஒரு குறும்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசைதான் இந்தப் படம்’ என்கிற டெய்லர் ஏங்கெல், சினிமாக்காரர்களின் 'குலவழக்கப்படி’ விரைவில் முழு நீளத் திரைப்படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கலாம்.
படத்தின் லிங்க்: www.youtube.com/watch?v=wQMG_V3piR0>

'எந்திரன்’ படத்தில் 'ரெட் சிப்’ பொருத்தப்பட்ட சிட்டி, நெகட்டிவ் கேரக்டராக மாறுவதைப் பார்த்தோமே! அதேபோல எதிர்காலத்தில் 'ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ ( AI ) துறையின் கண்டுபிடிப்பாக வரவிருக்கும் 'கில்லர் ரோபோ’க்களுக்குக் கடிவாளம் போட வேண்டும் என 'ரெட் ஃப்ளாக்’ காட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்.
ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள், நோம் சாம்ஸ்கி போன்ற தத்துவவியலாளர்கள், ஆப்பிள் கோஃபவுண்டர் ஸ்டீவ் வோஸ்னியாக் உள்பட பலர், சில வாரங்களுக்கு முன்பு ஒரு திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட AI துறை நிபுணர்கள், விஞ்ஞானிகள் கையெழுத்திட்டிருந்த கடிதம் அது.
நம் ஊரில், 'அனுமதி இல்லாமல் ட்ரோன்ஸ் பறந்தது. இளைஞர் கைது’ என்றெல்லாம் செய்திகளைப் படித்திருப்பீர்கள். 'ட்ரோன்ஸ்’ என்பது பறக்கும் குட்டி ரோபோக்கள்தான். இன்றைய தினத்துக்கு பறந்துகொண்டே படம் எடுக்கவும் (கல்யாண வீட்டில் மாப்பிள்ளை அழைப்பை பறவைக் கோணத்தில் படம் எடுக்கப் பயன்படுத்துவதுபோல), மொட்டைமாடியில் நேரடியாக பார்சல் டெலிவரி பண்ணவும், இதுபோன்ற இன்னபிற விஷயங்களுக்கும், ஒரு குட்டி ஹெலிகாப்டர்போல இவற்றைப் பயன்படுத்தலாம் என்பது டெக்னாலஜி ஆறுதல்.
ஆனால், எதிர்காலத்தில் (டெக்னாலஜியின் அசுர வேகத்தில் இப்போதெல்லாம் எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை.) இந்த வகையான ட்ரோன்களுடன் சில ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் சமாசாரங்களைச் சேர்த்தால், ஆளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொல்லும் ரோபோக்களாக அவை செயல்படும் என அலாரம் அடிக்கிறார்கள் மேலே சொன்ன விஞ்ஞானிகள்.
உதாரணத்துக்கு.... ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்லும் சாலையில் ஒரு குறிப்பிட்ட மனிதரைத் தேர்ந்தெடுத்து, பறந்தபடி கீழ் இறங்கி அவர் நெஞ்சுக்கு நேராகப் போய் சுட்டுக் கொல்லக்கூட முடியும். அவரைப் பற்றிய தகவல்கள் பக்காவாக புரோகிராம் செய்யப்பட்டிருந்தால் போதும். யுத்தக் களங்களில் மறைந்திருக்கும் வீரர்களையோ, குழிகளில் பதுங்கி இருக்கும் மக்களையோ இப்படி தேடிப்பிடித்து இந்த கில்லர் ரோபோக்களால் துவம்சம் செய்ய முடியும் என கிலியாக்குகிறார்கள்.
AI என்பது மனிதக் கண்டுபிடிப்புகளில் மகத்தானது. அது பல வழிகளில் மனிதனுக்கு உதவ முடியும். ஆனால், இந்த மாதிரி பேராயுத விளையாட்டுகளுக்கு அதைப் பயன்படுத்தினால், விபரீதம் அதீதமாக இருக்கும் எனக் கவலைப்படுகிறார்கள். தென் கொரியா, இப்போதே வடகொரியா பார்டர்களுக்கு இதுபோன்ற ரோபோக்களை அனுப்பி ட்ரையல் பார்க்கிறது. இப்போதைக்கு மனிதன் இயக்கினால் மட்டுமே அது சுடும் என்பது அரைகுறை ஆறுதல்.
ஹ்யூமன் ரைட் வாட்ச் போன்ற அமைப்புகள், இந்த கில்லர் ரோபோக்களுக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடங்கிவிட்டார்கள். டெக்னாலஜி டெரரிஸ்ட்களின் 'ரெட் சிப்’பை உருவ நாம் ஒவ்வொருவரும் 'வசீகரன்’களாக மாறத்தான் வேண்டியிருக்கிறது!
சேஃப்ட்டி பின்கள்
சின்னச் சின்ன 'புராடக்ட் டிசைன்’களின் 'நானோ ஹிஸ்டரி’ சொல்லலாம் என உத்தேசம்.
இந்த வாரம்... சேஃப்ட்டி பின்.

அவசரத்துக்கு உபயோகம் ஆகும் 'சேஃப்ட்டி பின்’களை அதன் கண்டுபிடிப்பாளர் தன் அவசரப் பணத் தேவைக்காகத்தான் கண்டுபிடித்தார் என்பது தெரியுமா? 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த 'வால்டர் ஹன்ட்’ என்கிற மெக்கானிக் நண்பரிடம் வாங்கிய 15 டாலர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க, ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உருவாக்கியதுதான் சேஃப்ட்டி பின்.
கிரேக்கத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே 'ஃபிபுலா’ எனப்படும் இணைப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட மனித எலும்புகளின் இணைப்புகளை மாதிரியாகக் கொண்டவை; பல நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்தவை. அவற்றை அடிப்படையாகக்கொண்ட எளிய வடிவம்தான் வால்டர் ஹன்டின் சேஃப்ட்டி பின்.
தனது கண்டுபிடிப்பை பேட்டன்ட் வாங்கி, ஒரு பிரபல கம்பெனிக்கு விற்றுவிட்டு தன் நண்பனின் கடனை அடைத்தார் வால்டர் ஹன்ட். அவருக்குத் தெரியாது பிற்காலத்தில் 'இத்தனூண்டு’ சேஃப்ட்டி பின்னை வைத்துக்கொண்டு, அந்த கம்பெனி கோடிகளில் டாலர் சம்பாதிக்கப்போகும் விஷயம்.
குறிப்பாக, குழந்தைகளின் உடைகளுக்காக அந்தக் காலத்தில் உபயோகிக்கப்பட்ட இந்தப் பின்களை, குழந்தைகள் அடிக்கடி விழுங்கிவிடுவார்களாம். அதை எடுப்பதற்கு என்றே, மருத்துவர் செவாலியர் ஜாக்சன் என்பவர் ஸ்பெஷலாக இன்னொரு மருத்துவ உபகரணத்தையும் கண்டுபிடித்தார் என்பது அபாய உபாயச் செய்தி.

பிற்காலத்தில் 'பங்க் ராக்’ என்னும் மியூசிக் வகையறா ஆட்களின் ஃபேஷன் சிம்பலாக இந்த சேஃப்ட்டி பின்கள் இருந்திருக்கின்றன என்பது 'பின்’னணித் தகவல்!