
முகில்
அவ ஒரு பையன்’ அல்லது 'அவன் ஒரு பொண்ணு’... லெவர்ன் காக்ஸ் தன் பள்ளிக்காலத்தில் அதிகம் கேட்ட வார்த்தைகள் இவை. பருவ வயதில் வெளியில் தனியாகச் செல்லும்போது, நான்கு எழுத்து ஆங்கிலக் கெட்டவார்த்தை சொல்லி பரிகாசம் செய்யாதவர்கள் குறைவே. ஒரு திருநங்கை அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் கடந்து வந்திருக்கும் காக்ஸ், இப்போது அமெரிக்காவில் நாடு அறிந்த பிரபலம்; சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கும் அசாத்திய நடிகை; சமூகப் போராளி. ஆனால், இன்றைக்கும் 'முன்னேறிய நாடான அமெரிக்கா’வின் வீதிகளில் ஒரு பெண்ணாக அவள் நடந்து செல்லும்போது காதில் விழும் வார்த்தைகள், 'அந்தா... ஆம்பள போகுது பாரு!’
சீழ்ப் பிடித்த சமூகத்தில் சகலத்தையும் சகித்துக் கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டும் என, காக்ஸ் ஒருபோதும் ஒடுங்கிப்போகவில்லை. வலிகளை, ரணங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஒட்டுமொத்த திருநங்கைகளின் பிரதிநிதியாக உலகின் கவனம் ஈர்க்கிறார். தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக, உரக்கக் குரல் கொடுக்கிறார். திருநங்கை லெவர்ன் காக்ஸின் வாழ்க்கை, ஒரு வெற்றிக் கதை மட்டுமே அல்ல... அதற்கும் மேல்!
1984-ம் ஆண்டு, மே மாதம் 29-ம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மொபைல் என்ற நகரத்தில் வசித்த குளோரியாவுக்குப் பிரசவ வலி உண்டானது. மருத்துவமனையில் அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. அடுத்த ஏழாவது நிமிடத்தில் இன்னொரு குழந்தை பிறந்தது. 'ரெண்டும் ஆம்பளைப் புள்ளைங்க. உரிச்சுவெச்ச மாதிரி ஒண்ணா இருக்குதுங்க’ - மயக்கம் தெளிந்த குளோரியாவிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் நர்ஸ்.

முதல் மகனுக்கு 'லெவர்ன் காக்ஸ்’ என்றும், இரண்டாவது மகனுக்கு 'லாமர்’ என்றும் பெயர் சூட்டினார் குளோரியா. அவருக்குத் திருமணம் ஆகவில்லை. (பின்னாளிலும் குளோரியா தன் குழந்தைகளின் தந்தை பற்றி அவர்களிடம் எந்த விவரமும் பகிர்ந்துகொண்டது இல்லை) குளோரியாவுக்கு ஆதரவு, அவளது தாய் மட்டுமே. பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த குளோரியா, குழந்தைகளை வளர்க்க அந்த வருமானம் மட்டும் போதாமல், தனக்குக் கிடைத்த பகுதிநேர வேலைகளை எல்லாம் செய்தார்.
'நீ வக்கீல் ஆக வேண்டும்; நீ டாக்டர் ஆக வேண்டும்’ - குளோரியா தன் மகன்களிடம் கனவுகளை விதைத்தார். ஆசிரியராக இருந்ததால், தன் மகன்களைக் கவனமுடன் படிக்கவைத்தார். இருவருமே பள்ளிப் படிப்பில் கெட்டி. காக்ஸுக்கு பள்ளிக்குச் செல்வதும், பாடங்களைப் படிப்பதும், டாப் கிரேடில் இருப்பதும் அவ்வளவு பிடிக்கும். எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பான் அல்லது புத்தகங்களோடு பொழுதைக் கழிப்பான். அவனுக்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. அவனை யாரும் நண்பனாகச் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. காரணம், காக்ஸிடம் சிறுவயதில் இருந்தே மிளிர்ந்த பெண்தன்மை. '‘Sissy’ (பெண்தன்மை கொண்டவன்) என்ற வார்த்தையால்தான் சக மாணவர்கள் காக்ஸைக் கேலிசெய்தனர். அப்படி அடுத்தவர்கள் கேலி செய்யும்போது காக்ஸ் ஒடுங்கி, ஒதுங்கிச் சென்றான். ஆனால், விவரம் அறிந்த வயதில் அவனுக்குள் தோன்றியதும் அதே எண்ணம்தான். 'பிறப்பால் நான் ஓர் ஆண் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், நான் நிச்சயம் ஆண் அல்ல, பெண். பெண்தான்!’
மனதுக்குள் அப்படி நினைத்துக்கொள்வதுதான் 'அவளுக்கு’ப் பிடித்திருந்தது. 'டான்ஸ் கிளாஸ் போறேம்மா!’ என அடிக்கடி அம்மாவிடம் கெஞ்சுவாள். ஆனால், பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. எட்டாவது வயதில் நடன வகுப்பு ஒன்றில் இலவசமாகப் பயிலும் வாய்ப்பு அமைந்தது. அப்படியே சில ஷோக்களில் நடிக்கவும் வாய்ப்பு. காக்ஸ், தனக்குள் உலவிக்கொண்டிருந்த பெண்மையை நடனத்திலும் நடிப்பிலும் வெளிப்படுத்தி வடிகால் தேடிக்கொண்டாள். இருந்தாலும் வெளியில் பெண் எனச் சொல்லிக்கொள்ளத் தயக்கம். 'பசங்க எல்லாரும் வலது பக்கம் நில்லுங்க; பொண்ணுங்க எல்லாரும் இடது பக்கம் நில்லுங்க’ என, பள்ளியில் சொல்லும்போது இடது பக்கமாக மனதளவிலும், வலது பக்கமாக உடல் அளவில் மட்டும் சென்று நின்றாள்.
சகோதரன் லாமர் ஆணுக்கு உரிய இயல்புடனேயே வளர்ந்தாலும், அவனும் காக்ஸின் இரட்டை என்பதால் கேலிக்கும் சித்ரவதைக்கும் உள்ளானான். தினமும் பள்ளி முடிந்ததும் காக்ஸும் லாமரும் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் பேருந்தைப் பிடிக்க ஓடுவார்கள். பள்ளிக்குள் மற்ற மாணவர்களிடம் மாட்டிக்கொண்டால், அடி, உதை, கேலி, சித்ரவதை. பேருந்தில் மாணவர்கள் இருந்தாலும் பிரச்னை இல்லை. காரணம், கண்ணாடி வழியே பேருந்தில் நடப்பதைக் கவனித்துக்கொண்டிருப்பார் டிரைவர். பேருந்து நிறுத்தம் வந்த கணத்தில் காக்ஸும் லாமரும் இறங்கி, தலைதெறிக்க வீட்டை நோக்கி ஓடத் தொடங்குவார்கள். மாணவர்களின் கும்பல் ஒன்று அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடும். சிக்கிக்கொண்டால், கொடூர நிமிடங்கள். பல முறை சிக்கிய அனுபவம். ஆகவே காக்ஸ் சகோதரனின் கையை இறுகப் பிடித்துக்கொள்ள, உயிர் நடுநடுங்க ஓடுவார்கள். நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டால், கசப்பின் புன்னகையோடு சொல்லிக்கொள்வாள். 'இன்னிக்கு ரொம்ப வேகமா ஓடினோம். நாளைக்கும் எப்படியாவது தப்பிச்சுடணும்!’
குளோரியாவின் காதுகளிலும் இந்த விஷயங்கள் வந்து விழும். துடித்துப்போவார். 'அவங்க உங்களை அடிச்சாங்கன்னா, திருப்பி அடிக்கணும். இப்படிப் பயந்து ஓடக் கூடாது.’ ஆனால் காக்ஸுக்கு, எதிர்த்துப் போராட எல்லாம் தோன்றவில்லை. எப்படியாவது தப்பிப்பதே போதுமானதாக இருந்தது.
ஒருமுறை காக்ஸின் வகுப்பு ஆசிரியர், குளோரியாவிடம் புகார் வாசித்தார். 'இவனோட நடத்தையே சரியில்லை. இப்படியே விட்டா, ஒருநாள் பொண்ணுங்க டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு ரோடு ரோடா திரியப்போறான். உடனே, ஏதாவது டாக்டரைப் போய்ப் பாருங்க.’
காக்ஸுக்குள் பயம் விஸ்வரூபம் எடுத்தது. அம்மா, என்ன சொல்வாள்... அவளும் அடிப்பாளோ? ஆனால், குளோரியா அமைதியாக நகர்ந்துவிட்டார். காக்ஸிடம் எந்தக் கண்டிப்பும் காட்டவில்லை. அந்த அமைதியில் காக்ஸும் தனக்குள் அடங்கிப்போனாள். எனக்குத் தெரியும், நான் ஆண் அல்ல. ஆனால், நான் பெண்ணும் அல்ல என மற்றவர்கள் சொல்கிறார்கள். என்ன செய்வது? அம்மாவின் மனதைக் கஷ்டப்படுத்தக் கூடாது. லாமரும் பாவம். வேறு எதையும் யோசிக்காதே. படித்து முன்னேற வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பிரபலமாக வேண்டும். அதற்கு, நான் நானாக இருக்கக் கூடாது. காக்ஸ், தனக்குள் உலவிய பெண்ணை, மனச்சங்கிலியால் கட்டிப்போட்டாள். இருந்தாலும் இதயத்தின் ஒரு மூலையில் (போலி) நம்பிக்கை ஒன்று வளர்ந்துகொண்டிருந்தது. 'நான் பருவம் அடைந்துவிட்டால், முழுக்க முழுக்கப் பெண்ணாகிவிடுவேன். அப்போது எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.’
காக்ஸுக்கு 11 வயது இருக்கும்போது, மற்ற 'பையன்கள்’ மீது இயல்பான ஓர் ஈர்ப்பு உண்டாகத் தொடங்கியது. ஆனால், சர்ச்சில் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார்கள் 'ஒருபாலின ஈர்ப்பு, பெரும் பாவம். கடவுளுக்குப் பிடிக்காது’ என்று. என்னைப் பெண் எனப் புரிந்துகொள்ளாமல் உலகம் இதைத் தப்பாகத்தானே பார்க்கும். காக்ஸ் ஒன்றும் புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த அந்தப் பருவத்தில், அவளது பாட்டி இறந்துபோனார். குளோரியாவுக்குப் பேரிழப்பு. காக்ஸுக்கு, பாட்டி இறந்த சோகத்தைவிட, அவளுக்குள் சூழ்ந்த அச்சம்தான் பெரிதாகப்பட்டது. செத்துப்போன பாட்டி, சொர்க்கத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாளே. நான் ஆணாக இல்லாமல் பெண்ணாக விரும்புவதை, பெண் உடைகளை ரகசியமாக அணிவதை, யாருக்கும் தெரியாமல் ஒப்பனை செய்துகொள்வதை, பிற ஆண்களை ரசிப்பதை... எல்லாவற்றையுமே பார்த்து விடுவாளே! அய்யோ... வேண்டாம். இனி நான் உயிர் வாழ முடியாது. அம்மா வாங்கிவைத்திருந்த மாத்திரைகள் அடங்கிய ஒரு பாட்டில் கண்ணில் பட்டது. தூக்க மாத்திரைதான் என நினைத்து ஒன்றன் பின் ஒன்றாக விழுங்கினாள்... கணக்கே இல்லாமல். 'அம்மா... என்னை மன்னித்துவிடு’ - கண்கள் சுழலச் சரிந்தாள்.
காலையில் கடும் வயிற்றுவலியுடன் எழுந்தாள். நான் இன்னும் சாகவில்லையா? வயிற்றுவலியைவிட அது பெரிய வலியாகத் தெரிந்தது. அந்தத் தற்கொலை முயற்சி தோல்வி அடைந்த பின், மீண்டும் ஒருமுறை மரணத்தைத் தொட்டுப்பார்க்கும் துணிவு காக்ஸுக்கு வரவில்லை. (அமெரிக்காவில் 20 வயதைத் தொடுவதற்குள் திருநங்கை இனத்தவர்களில் பாதிப் பேராவது தற்கொலை செய்துகொள்கின்றனர் அல்லது அதற்காக ஒருமுறையாவது முயற்சி செய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்) அந்தப் பதின்பருவத்தில் தன் உடலில் பெண்மைக்கான மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என எதிர்பார்த்து ஏங்கி ஏமாந்துபோனாள் காக்ஸ். ஓர் ஆணும் பருவமடையும் வயது இதுதானே! அதுவும் நேரவில்லையே. நான் யார்? ஒற்றைக் கேள்வி மனதைக் குடைந்து ரணமாக்கியது. இருந்தாலும் தனக்கு ஒரே ஆறுதலான படிப்பில் கவனம் சிதறவிடவில்லை. அடுத்து வந்த கிறிஸ்துமஸ் தினத்தில் குளோரியா, காக்ஸுக்கு வாழ்த்து அட்டை ஒன்றை அளித்தார். பிரித்துப் பார்த்த காக்ஸ், சந்தோஷக் கண்ணீரில் குளித்தாள். 'என் அன்பு மகளுக்கு...’ என எழுதப்பட்ட மகளுக்கான வாழ்த்து அட்டை. திருநங்கைகள் எதிர்கொள்ளும் அதிமுக்கியப் பிரச்னை, குடும்பத்தினரின் புறக்கணிப்பு. ஆனால், என் தாயே என்னை ஏற்றுக்கொண்டாள், மகளாக. வேறு என்ன வேண்டும்?
14 வயதுடைய காக்ஸுக்கு, பிர்மிங்ஹாமில் உள்ள அலபாமா ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் கல்வி உதவித்தொகையுடன் இடம் கிடைத்தது. வேறு ஓர் ஊரில் தங்கிப் படிக்கவேண்டிய சூழல். பழகிய இடத்திலேயே வெளியில் சென்று வருவதற்குள் ஏகப்பட்ட வதைகள். தெரியாத ஊரில் கேட்க வேண்டுமா? ஏற்கெனவே கறுப்பு இனத்தவருக்கு எதிரான வெறிகொண்ட தேசம். அதிலும் ஒரு கறுப்பு இனத் திருநங்கை என்றால் கேட்கவே வேண்டாம். கறுப்பு இனத்தவர்களே கறுப்பு இனத் திருநங்கைகளைக் கொடுமைக்கு உள்ளாக்கும் அவலம் அங்கே சகஜம். எல்லாம் தெரிந்தும் காக்ஸ் யோசிக்கவில்லை. 'கலை’ மட்டுமே தன் வாழ்வின் களைகளை அகற்றும் என உறுதியாக நம்பினாள். மனோதிடத்துடன் கிளம்பினாள்.
கிரியேட்டிவ் ரைட்டிங் படிப்பு. கொஞ்சம் சுதந்திரக் காற்று சுவாசிக்கக் கிடைத்தது. தன் விருப்பம்போல நடை, உடை, பாவனை, ஒப்பனைகளை மாற்றிக்கொண்டாள். அங்கும் கேலியும் கிண்டல்களும் துளைத்தன. பழகிப்போயிருந்தது. அடுத்து இரண்டு வருட நடனப் பயிற்சி படிப்பு. முடித்துவிட்டு நியூயார்க் நகர்ந்தாள். மேரிமௌன்ட் மன்ஹாட்டன் கல்லூரி. பாலே நடனம் மற்றும் நடிப்புப் பயிற்சி. முதன்முதலாக ‘Andorra’ என்ற ஒரு நாடகத்தில் மேடையேறும் வாய்ப்பு. வசனங்களே இல்லாத பட்டிக்காட்டு முட்டாள் கேரக்டர். கிடைத்த கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக நிரப்பி, கைதட்டல்களை அள்ளினாள் காக்ஸ். எனக்கும் நடிப்பு வருகிறது. உள்ளுக்குள் நம்பிக்கை வேர்விட்டது.
நியூயார்க், மிக மோசமான நகரம்; பாலினத் தொந்தரவுகளால் பாதை மாறிப்போக வளமான வாய்ப்புகள் உள்ள நரகம். திருநங்கைகள் மீதான வன்முறை அதிகம். திருநங்கை என்றாலே குற்றவாளியாகத்தான் பார்ப்பார்கள். தங்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் கொஞ்சம் திமிறினாலும் கைக்காப்புடன் கடும் தண்டனையுடன் 'ஆண்கள் சிறை’யில் தள்ளிவிடுவார்கள். காக்ஸுக்கு ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. வெளியில் சென்று வருவதற்குள் உயிரும் வெளியேறிவிட்டு வந்தது. பெண்தன்மையை மறைக்கப் பிரயத்தனப்பட்டாள். மொட்டையடித்துக்கொண்டாள். ஆண்களுக்கான உடைகளை வாங்கினாள். நடையில் நளினத்தைத் தொலைக்க முயன்றாள். ஆனால், அவளால் 'இயல்பை’த் தொலைக்க இயலவில்லை. அவளுக்குள் வியாபித்து இருந்த பெண், திமிறி வெளியே வந்தாள் மீண்டும். புதிதாக பெண்களுக்கான 'விக்’ ஒன்றை வாங்கிப் பொருத்திக்கொண்டாள். நல்ல மருத்துவர் ஒருவர் அறிமுகம் ஆனார். இனியும் சுமையாக என்னில் துருத்திக்கொண்டிருக்கும் ஆணின் அடையாளம் எனக்கு எதற்கு?
இழந்து மீண்ட பொழுதில், இன்று புதிதாகப் பிறந்த உணர்வு; விட்டு விடுதலையான நிறைவு. லெவர்ன் காக்ஸ், முழுவதுமாகத் தன்னை திருநங்கையாக மாற்றிக்கொண்டார். சாதாரணமாகவே கறுப்பு இனத்தவருக்கு வேலைப் பஞ்சம். கறுப்பு இனத் திருநங்கை என்றால் கேட்கவே வேண்டாம். அடித்துத் துரத்துவார்கள். ஆனால், தினமும் பசிக்குமே. காக்ஸ், அதற்காக ஒழுக்கம் தவறவில்லை. வருமானத்துக்காக கிளப்களில் ஆடினார்; பாடினார். எங்கும் எல்லைக்கோட்டைத் தாண்டவில்லை. நடனம் அவருக்குப் பிடிக்கும், அவ்வளவே!
ஃபேஷன் டெக்னாலஜி படித்து முழுநேர டிசைனராக மாறிவிடலாமா? வாய்ப்புகள் உள்ள கௌரவமான தொழில். காக்ஸ் அந்தப் படிப்பில் இணைந்தார். இன்னொரு பக்கம், 'திருநங்கை நடிகை’யாகப் பெயரெடுக்க வேண்டும் என ஆசை. தனது புகைப்படங்களுடன் பல தயாரிப்பு நிறுவனங்களின் ஏஜென்ட்களைச் சென்று பார்த்தார். புகைப்படங்களை வாங்கி வைத்துக்கொண்டார்கள். 'பாவம், அவர்களுக்கு என்னைவைத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை.’
சில மாதங்கள் கழிந்தன. 2003-ம் ஆண்டு. ‘Daughter of Arabia’ என்ற ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. பாலினத் தொழிலாளி. காக்ஸுக்குச் சவாலாக இருந்தது. ஏற்றுக்கொண்டார். அடுத்தடுத்து சில வாய்ப்புகள் வந்தன. அவற்றில் பெரும்பான்மையானவை சபிக்கப்பட்ட அதே கதாபாத்திரங்களே. ஃபேஷன் படிப்பு பாதியிலேயே தடைபட்டுவிட, கிடைத்த 'ஆடை அவிழ்ப்பு’ கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு, வயிற்றுக்காக ரிசப்ஷனிஸ்ட், டேபிள் கிளீனர், ஆபீஸ் அசிஸ்டென்ட் என வாய்த்த வேலைகளைச் செய்தார் காக்ஸ்.
இன்னொரு புறம் புதுப்புது நிகழ்ச்சிகளுக்கான கான்செப்ட்களுடன் சேனல்களின் கதவைத் தட்டினார். அவர்கள் பதிலுக்கு உதிர்த்த ஏளனப் பார்வையை, சுடுசொற்களை, இளக்காரத்தை இதயத்தில் ஏற்றிக்கொள்ளவில்லை. எனக்கான சரியான வாய்ப்பு நிச்சயம் அமையும். கண்ணில் திரண்ட கண்ணீரில் நம்பிக்கையைக் கரையவிடவில்லை காக்ஸ்.
ஒருமுறை VH1 சேனலுக்கு, காக்ஸ் புதிய நிகழ்ச்சிக்கான யோசனையுடன் அணுகினார். அப்போது அங்கே ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கலந்துகொண்டார். அதில் காக்ஸ் மீது ஏற்பட்ட அபிமானத்தினால் 2010-ம் ஆண்டு ‘TRANSform Me’ என்ற திருநங்கைகளுக்கான ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தயாரிக்கும் வாய்ப்பை VH1 வழங்கியது. ஷோ ஹிட். அமெரிக்க சேனல் வரலாற்றில் நிகழ்ச்சி தயாரித்த முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கத் திருநங்கை. கிடைத்த பெயரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட காக்ஸ், அப்படியே சில பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். திருநங்கைகள் மீதான சமூகப் பார்வை முதல் திருநங்கைகளின் ஏக்கங்கள், எண்ணங்கள் வரை ஒவ்வொன்றையும் கிடைத்த இடங்களில் எல்லாம் பலமாகப் பதிவுசெய்தார்.
நெட்ஃப்ளிக்ஸ் என்ற இணைய சேனல், ' Orange is the new Black 'என்ற காமெடி சீரியலைத் தயாரிப்பதாக அறிவித்தது. அதில் கிரெடிட் கார்டு மோசடி செய்து ஜெயிலில் அடைபட்டிருக்கும் சோஃபியா என்கிற திருநங்கை கதாபாத்திரம் முதன்மையானது. பல்வேறு தேடல்களுக்குப் பிறகு, அந்த வாய்ப்பு காக்ஸின் கதவைத் தட்டியது. காக்ஸின் கண்களில் ஆனந்தச் சாரல். 'என் வாழ்க்கையில் முதன்முதலாக எனக்கான கதாபாத்திரம் கிடைத்துள்ளது’- சகோதரன் லாமரிடம் நெகிழ்ந்தார். (அதே சீரியலில் சோஃபியா, திருநங்கையாக மாறுவதற்கு முந்தைய இளமைக்கால பாத்திரத்தில் லாமர் நடித்தார்.)

பொதுவாக அமெரிக்க சீரியல்களிலும் (சினிமாக்களிலும்) திருநங்கை கதாபாத்திரம் என்பது, கெக்கேபிக்கே காமெடிக்கும் காம நெடி குணாதியசங்களுக்குமே நேர்ந்துவிடப்பட்டது. ஆனால், சோஃபியாவின் கதாபாத்திரம் அத்தனை வலுவானதாக, உண்மையானதாக எழுதப்பட்டிருந்தது. காக்ஸ், அதில் தன்னை இயல்பாகப் பொருத்திக்கொண்டார். இந்தச் சமூகம் திருநங்கைகளை எப்படிப் பார்க்கிறது, இந்தச் சமூகத்திடம் திருநங்கைகள் எதிர்பார்ப்பது என்ன, வாழ்வாதாரம் ஏதுமின்றி வயிற்றுக்காகத் திருநங்கைகள் அனுபவிக்கும் துன்பம், மற்றவர்களுக்காக வளையும் சட்டம், திருநங்கைகளை மட்டும் எப்படி எல்லாம் வளைத்துப் பிடித்து வதைக்கிறது எனப் பல விஷயங்களைப் பேசியது சோஃபியா கதாபாத்திரம். அந்த நகைச்சுவைத் தொடரிலும் காக்ஸின் உணர்வுபூர்வமான அசாத்திய நடிப்பு, அமெரிக்காவையே திரும்பிப் பார்க்கவைத்தது. திருநங்கைகள் குறித்த அமெரிக்கர்களின் 'ஆழ்மன மூடஎண்ணங்களை’ எல்லாம் புரட்டிப்போட்டது. திருநங்கைகளும் சக மனிதர்களே, அவர்களது குரலுக்கும் காது கொடுக்க வேண்டும் என விழிப்புஉணர்வின் வீரியம் பாய்ச்சியது.
அதிபர் ஒபாமாவைச் சந்திக்கும் வாய்ப்பு. மிச்செல் ஒபாமா, காக்ஸைச் சந்தித்த நொடியில், அன்பால் இறுக்கி அணைத்துக்கொள்ள, ஆகா... ஓகோ... என கவனம் பெற்றார் காக்ஸ். ஆனால், கிடைத்த புகழ் அலையில் அடுத்தடுத்த வாய்ப்புகளை வளைத்துப் பணம் குவிக்க நினைக்கவில்லை. ‘The T Word’ என்ற ஒரு மணி நேர ஆவணப்படத்தை எடுத்தார். அது, பல்வேறு திருநங்கைகள் தங்களது வாழ்வில் சந்தித்த கொடூரங்களை, தங்கள் கோரிக்கைகளை, 'சக மனித இனத்தின்’ முன்பு வைக்கும் ஆவணப்படம். 'அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரில் திருநங்கைகளே அதிகம். அதிலும் கறுப்பின திருநங்கைகளே மிக அதிகம். அமெரிக்காவில் நடக்கும் குற்றங்களில் திருநங்கைகள் மீது நிகழ்த்தப்படுபவை அதிகம். அதுவும் கறுப்பினத் திருநங்கைகள் மீது நிகழ்த்தப்படுவது மிகமிக அதிகம்.’ இப்படி பல உண்மை நிலவரங்களை உரக்கச் சொன்னார். அந்தப் படம், திருநங்கைகள் குறித்த உலகின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று.
அமெரிக்காவில் 2011-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, கறுப்பினத் திருநங்கைகள் வன்முறையிலோ அல்லது மர்மமான முறையிலோ கொலை செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. தவிர, பல நிகழ்வுகளில் கறுப்பினத் திருநங்கைகளைப் பெரும் குற்றவாளியாக்கி, கடும் தண்டனைகளுடன் ஆண்கள் சிறையில் அடைக்கும் நடைமுறையும் இருந்தது. 2011-ம் ஆண்டில் சிசி மெக்டொனால்டு என்கிற 22 வயது கறுப்பினத் திருநங்கை, தன் சக கறுப்பினத் தோழிகளுடன் உணவுவிடுதி ஒன்றில் இனவெறி, பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானாள். அதில் ஒருகட்டத்தில் ஸிமிட்ஸ் என்கிற வெள்ளைக்காரனால் கொலைவெறித் தாக்குதலுக்கும் ஆட்பட்டாள். தன்னைத் தற்காத்துக்கொள்ள சிசி தொடுத்த எதிர்த் தாக்குதலில் ஸிமிட்ஸ் கொலை செய்யப்பட்டான். சிசி, கடுமையான சிறைத் தண்டனையுடன் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டாள். சிசியின் விடுதலைக்காக ‘Free CeCe’ என்ற ஆவணப்படத்தை எடுத்தார் காக்ஸ். தொடர்ந்து நீதிக்காகப் போராடினார். 2014-ம் ஆண்டு ஜனவரியில் சிசி விடுதலை செய்யப்பட்டாள்.
LGBT (Lesbian, Gay, Bisexual & Transgender) - அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோரது அங்கீகாரத்துக்கும், சமூக உரிமைகளுக்குமாக பல காலமாகப் போராடிவரும் அமைப்பு. இந்த அமைப்பில் திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடும் முகமாக காக்ஸ் முன்னிறுத்தப்படுகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் ஓரின ஜோடிகளின் திருமணத்துக்கு, சட்ட அங்கீகாரம் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தப் போராட்டத்திலும் காக்ஸின் பங்கு முக்கியமானது.
காக்ஸ், இப்போது பல்வேறு பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். திருநங்கைகள் மீதான சமூகத்தின் அருவருப்புப் பார்வையை தன் அயராத முயற்சியால் மாற்றப் போராடிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் 2014-ம் ஆண்டில் 'டைம்’ இதழ் லெவர்ன் காக்ஸைத் தன் அட்டையில் பெருமையுடன் பிரசுரித்தது. 92 வருட டைம்ஸ் வரலாற்றில் அட்டையில் இடம்பெற்ற முதல் திருநங்கையான காக்ஸ், தன் சக திருநங்கைகளுக்கும் சமூகத்துக்கும் சொல்லும் செய்தி இதுவே.
'திருநங்கையாகப் பிறப்பதில் உன் பிழை ஏதும் இல்லை. அது இயற்கை. ஆனால், அதை உணராமல், வெட்கத்திலும் பயத்திலும் புழுங்கிப் புழுங்கிச் செத்துப்போவதைவிட, உண்மையை ஏற்றுக்கொண்டு, அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெளிவருதலே அவசியம். நான் என் அளவில் மிகமிக அழகானவள்; அற்புதமானவள். திருநங்கை என்ற என் அடையாளத்தை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வதே எனக்குப் பெருமை; பெரும் மகிழ்ச்சி. அதில் நான் முழுமையான சுதந்திரத்தை உணர்கிறேன். நான் நானாக வாழ முடிகிறது. நான் என்பது என் உடல், புறத்தோற்றம் மட்டும் அல்ல; என் மனம், உணர்வுகள், சிந்தனை, அறிவு, ஆன்மா அனைத்தும் சேர்ந்ததே!’
சுயசரிதை ஆன் தி வே!

ஒரு நடிகையாக சீரியல்களிலும் சினிமாக்களிலும் தொடர்ந்து நடித்துவரும் காக்ஸ், நிகழ்ச்சித் தயாரிப்பிலும், ஆவணப்படங்கள் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார்; சுயசரிதைப் புத்தகம் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்; அதற்காக தன் தாயுடன் சேர்ந்து தன் பால்ய கால கசப்பு - இனிப்பு நினைவுகளை எல்லாம் பதிவுசெய்துவருகிறார்!

2013-ம் ஆண்டில் Anti-Violence Project-ல் தைரியமான நபருக்கான விருது, 2014-ம் ஆண்டில் Glamour இதழ் தேர்ந்தெடுத்த 'ஆண்டின் சிறந்த பெண்’ விருது, 2014-ம் ஆண்டில் பிரிட்டனின் தி கார்டியன் பத்திரிகை தேர்ந்தெடுத்த மிகச் சக்தி வாய்ந்த LGBT நபர் விருது, People இதழ் 2015-ம் ஆண்டு பட்டியலிட்ட உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தது, 2015-ம் ஆண்டு Time 100 Most Influential People பட்டியலில் ஓர் இடம் என காக்ஸ் பெற்றிருக்கும் கௌரவம் அநேகம். 2014-ம் ஆண்டில் பிரைம்டைம் எம்மி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட முதல் திருநங்கை நடிகை என்ற சிறப்பு காக்ஸுக்கு உண்டு. Madame Tussauds சான் பிரான்சிஸ்கோ மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் காக்ஸின் சிலையும் இடம்பெற்றுள்ளது. ஒரு திருநங்கை இந்தப் பெருமையை அடைவது இதுவே முதல்முறை!

சான் பிரான்சிஸ்கோவில் 'சாக்லேட் ஆரஞ்சு’ ஐஸ்க்ரீம் ஒன்றுக்கு, காக்ஸின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது காக்ஸின் வாழ்க்கையில் ஐஸ்க்ரீமாகக் காதலும் நுழைந்திருக்கிறது. ஓர் ஆணுடன் காக்ஸ் டேட்டிங் சென்றதாகச் செய்திகள் வலம்வருகின்றன. அதற்கு காக்ஸ் சொல்லும் பதில் சந்தோஷப் புன்னகை. 'யார் எனச் சொல்ல விரும்பவில்லை. என் வாழ்க்கையில் இந்த உறவு சற்றே மாறுபட்ட ஒன்றுதான். நிச்சயம் எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை’!