மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 17 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம்படம்: க.தனசேகரன், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி

லிந்துவரும் தொழில்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் விசைத்தறி தொழில் செய்த குடும்பத்தில் பிறந்த பி.தங்கமணி, இன்று தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர். நசிந்த தொழிலின் இயல்பு தெரிந்த அமைச்சர், பொதுவாகவே தொழில் துறையை வளப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ன செய்திருக்கிறார் நம் அமைச்சர்? தோண்டித் துருவிப் பார்த்தாலும், 'ம்ஹூம்’ பட்டியல்தான்!    

 நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையம், தங்கமணியின் சொந்த ஊர். இவரின் அப்பா பெருமாள், அ.தி.மு.க-வில் ஒன்றியப் பொறுப்பாளராக இருந்தவர். விசைத்தறி தொழிலில் கவனம் செலுத்தியதால், அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. அப்பாவின் நிறைவேறாத ஆசையை தன் லட்சியமாக்கிக்கொண்டார் தங்கமணி. அதற்காக காய் நகர்த்தி அரசியலில் தீவிரம் காட்டினாலும், கோவிந்தம்பாளையம் கிளைப் பிரதிநிதி என்ற பதவியைத் தாண்ட முடியவில்லை. அந்தச் சமயம்தான் அ.தி.மு.க அமைச்சராக செல்வாக்கோடு இருந்த செல்வகணபதியின் பி.ஏ சிவசுப்பிரமணியன் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் செல்வகணபதியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தங்கமணி, மாவட்டத்துக்குள் அவர் நிழலாகவே வளையவந்து ஒன்றியச் செயலாளர் பதவியைக் கைப்பற்றினார். 1996-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, செல்வகணபதியின் மீது வழக்குப் பாய்ந்தது. செல்வகணபதி வீட்டில் ரெய்டு நடந்தபோது, தங்கமணியின் வீட்டிலும் பூட்ஸ் கால்கள் நுழைந்தன. ஆனால், போலீஸ் எவ்வளவு துருவித் துருவிக் கேட்டபோதும் விட்டுக்கொடுக்கவில்லை தங்கமணி. 'செல்வகணபதி அண்ணனைப்போல ஒரு நல்லவரை இந்த உலகத்துல பார்க்க முடியாது’ என்றே காக்கிகளிடம் சான்றிதழ் கொடுத்தார்.

மந்திரி தந்திரி - 17 !

இதனாலேயே 2001-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பள்ளிப்பாளையம் ஒன்றிய சேர்மன் ஸீட்டை, தங்கமணிக்குப் பெற்றுக் கொடுத்தார் செல்வகணபதி. தேர்தலில் வென்று சேர்மனும் ஆனார் தங்கமணி. ஆனால், அதற்கு மேல் அரசியலில் வளர செல்வகணபதியின் ஆசீர்வாதம் மட்டும் போதவில்லை. அதற்காக பல சேனல்களில் முயன்றவருக்கு 'மன்னார்குடி சேனல்’ கை கொடுத்தது. 2006-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட ஸீட் பெற்றார்.

ஸீட் ஓ.கே. தேர்தலில் ஜெயிக்க வேண்டுமே! செல்வகணபதி உதவினார். தேர்தல் செலவுக்குப்

மந்திரி தந்திரி - 17 !

பணமும் கொடுத்து, பிரசாரத்துக்கும் வந்தார் செல்வகணபதி. 'என்னைவிட ரொம்ப நல்லவர் தங்கமணி. அவரை ஜெயிக்கவைக்க வேண்டியது உங்க பொறுப்பு. தங்கமணி ஜெயிச்சா, நானே ஜெயிச்ச மாதிரி!’ என நெக்குருகிப் பிரசாரம் செய்தார். கடுமையான போட்டிக்கு இடையே வெறும் 116 வாக்குகள் வித்தியாசத்தில், தி.மு.க-வின் காந்திசெல்வனை தேர்தலில் வீழ்த்தினார் தங்கமணி. இத்தனை இழுபறிகளுக்கு இடையில் தங்கமணி ஜெயிக்க மிக முக்கியக் காரணம், செல்வகணபதி. ஆனால், 'திருச்செங்கோடு மக்கள் பிரதிநிதி’யான பின் தங்கமணியின் சுயரூபம் மாறியது. நாளடைவில் செல்வகணபதிக்கு கட்சியில் செல்வாக்குக் குறைய, அவர் தி.மு.க-வுக்குத் தாவினார். அவரோடு பெரும் படை ஒன்றும் இடம் மாறியது. ஆனால், செல்வகணபதியின் சீனியர் சிஷ்யர் தங்கமணி, அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. செல்வகணபதியின் இடமாற்றம் அ.தி.மு.க-வில் உண்டாக்கிய வெற்றிடத்தை, தன் சமஸ்தானமாக மாற்றிக்கொண்டார் தங்கமணி. அது மட்டுமா... ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க, தங்கமணி பேசிய பேச்சு செம பாலிட்டிக்ஸ்!

அ.தி.மு.க-வின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் சென்னையில்தான் நடைபெறும். ஆனால், செல்வகணபதி வெளியேறியதால் முதல்முறையாக சென்னைக்கு வெளியே ராசிபுரத்தில் நடத்தி மாஸ் காட்ட நினைத்தார் ஜெயலலிதா. அந்தக் கூட்டத்தில், 'கட்சியைக் காட்டிக்கொடுத்த ஓர் எட்டப்பன் உங்களைவிட்டுப் போனாலும் லட்சக்கணக்கான ஊமைத்துரைகள் உங்கள் பக்கம்தான் நிற்கிறோம்’ என செல்வகணபதியைக் குறிவைத்து தங்கமணி பிரயோகித்த வார்த்தைகளை ஜெயலலிதா ரொம்பவே ரசித்தார். அவருடைய 'குட்புக்’கில் இடம்பிடித்தார் தங்கமணி. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் வென்று அமைச்சராக வந்து அமர்ந்தார். முதலில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர், இப்போது தொழில் துறையைக் கையில் வைத்திருக்கிறார். செந்தில் பாலாஜி வெளியேற்றப்பட்டதால் போக்குவரத்துத் துறையையும் கூடுதலாகக் கவனிக்கிறார்.  

அரசியலில் தன் இருப்பைத் தக்கவைக்க, ஜகஜ்ஜால வேலைகள் செய்த தங்கமணி, துறை முன்னேற்றத்துக்கு அந்தத் திறமையைப் பயன்படுத்தியிருக்கிறாரா? பார்ப்போம்!

துறையில் சாதித்தது என்ன?

வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது முதியோர் உதவித்தொகை வழங்கியதில் இவருடைய தொகுதியிலேயே ஏகத்துக்கும் முறைகேடுகள். கட்சிக்காரர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு வசதியானவர்களுக்கு எல்லாம் உதவித்தொகையை வாங்கிக் கொடுத்ததாகப் புகார் கிளம்பியது. ஆனால், அதை எல்லாம் லெஃப்ட்டில் அடித்துச் சாத்தியது தொழில் துறையில் அமைச்சரின் செயல்பாடுகள்!

பகாசுர கிரானைட் கொள்ளை!

தமிழ்நாட்டின் பிரமாண்ட கொள்ளையாக அரங்கேறிய கிரானைட் கொள்ளையைக் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்த வேண்டியது தொழில் துறை அமைச்சரின் தலையாய கடமைகளுள் ஒன்று. ஆனால், மதுரை ஆட்சியராக இருந்த சகாயம் கண்டுபிடித்த 16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை தொடர்பான அறிக்கை மீது, தொழில் துறை அமைச்சகம் துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. சொல்லப்போனால், அரசாங்கத்துக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டைபோடுவதிலேயே குறியாக இருக்கிறது அரசு. கிரானைட் முறைகேட்டில் தொடர்புடையவர்களை தொழில் துறையைச் சேர்ந்த அதிகார வட்டமே காப்பாற்றிவருகிறார்களாம். இது தொடர்பாக அமைச்சரிடம் விளக்கம் கேட்டால், 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்ன கதை’யாக எதையாவது சொல்கிறாராம்!

தமிழ்நாட்டை உதாசீனப்படுத்தும் முதலீட்டாளர்கள்!  

தொழில் துறையில் பல தங்குதடைகள் நிலவுவதால், பன்னாட்டு/உள்நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தயங்குகின்றன. அந்த முதலீட்டாளர்களை தமிழ்நாடு நோக்கி ஈர்க்க, ஒரு மாநாடு நடத்தக்கூட திறமை இல்லாமல், துவண்டு கிடக்கிறது தொழில் துறை அமைச்சகம்.

'குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச் சலுகையும் தருகிறோம்’ என தமிழ்நாட்டுக்கு வந்து கூட்டம் போட்டுச் சொல்லி, முதலீட்டாளர்களை ஆந்திரா, கர்நாடகாவுக்கு அழைத்துச் செல்கின்றன அந்த மாநில அரசுகள். ஆனால், ஒரு லட்சம் கோடிக்கு மேலான முதலீட்டை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான 'சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை’ தமிழ்நாட்டில் நடத்த அமைச்சர் பட்ட பாடு இருக்கிறதே!

'பல்வேறு இந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் வகையில், சென்னையில் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநாடு நடத்தப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என அறிவித்தார்கள். திடீரென மாநாட்டை 2015-ம் ஆண்டு மே மாதத்துக்கு மாற்றினார்கள். காரணம், ஜெயலலிதாவின் கைது. மாநாட்டையொட்டி நடந்த முன்னோட்ட நிகழ்ச்சியில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றார்கள். ஆனால், ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. அது மட்டும் அல்ல... அந்த நிகழ்ச்சியில் முதலீட்டாளர்கள் பலர் கலந்துகொள்ளவே இல்லை.

பின்னர் மாநாட்டுக்கு முதலீட்டாளர்களை அழைப்பதற்காக, இந்தியா முழுக்க முன்னோட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 'தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்’ என ஒவ்வொரு மாநிலக் கூட்டத்திலும் முழங்கினார் தங்கமணி. டெல்லி வரை சென்று தங்கமணி இப்படிக் கூட்டங்களை நடத்திய நிலையில், திடீரென செப்டம்பர் மாதத்துக்கு மாநாட்டை மீண்டும் தள்ளிப்போட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால், மாநாடு மாற்றப்பட்ட விவரம் முந்தைய தினம் வரையில் தங்கமணிக்குத் தெரியாது. அதுகூடத் தெரியாமல் உள்ளூர் தொழிலதிபர்களை அழைக்க, சேலம் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர்.

ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு, அவர் தலைமையில் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக அதைத் தள்ளித் தள்ளிப் போட்டவர்கள், 'மே மாதம் கடுமையான வெயில் இருக்கும் என்பதாலேயே தள்ளிவைக்கிறோம்’ எனப் பகீர் காரணம் சொன்னார்கள். 'மே மாதம் வெயில் அடித்தால், செப்டம்பரில் மழை அடித்து ஊற்றுமே!’ என தி.மு.க தலைவர் கருணாநிதியின் கிண்டலுக்கு அரசுத் தரப்பில் பதில் சொல்ல யாருமே இல்லை.  குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநாட்டை நடத்தி முதலீட்டை ஈர்த்திருந்தால்தானே, தொழிலைப் பெருக்கியிருக்க முடியும். தற்போது சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள், 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிவிடும். ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், யார் முதலீடு செய்ய வருவார்கள்? இந்தக் குறுகியகால இடைவெளியில் மாநாட்டை நடத்தி என்ன சாதிக்கப்போகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், மாநாட்டுக்கு வெளிநாட்டினரைக் கவர்ந்து இழுப்பதற்காக, தாம்தூம் பிரசாரங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் வெளிநாடுகளுக்குப் பறந்தவண்ணம் இருப்பதாகச் செய்திகள் படபடக்கின்றன. மாநாட்டுக்கு என ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாய் விரயமானதுதான் மிச்சம். இதுவரை ஓர் ஆணியைக்கூட உற்பத்திசெய்ய முடியவில்லை!

கண்ணுக்கு எட்டாத விஷன் - 2023  

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துப்போவதாகக் சொல்லி ஆட்சிக்கு வந்த புதிதில் 'தொலைநோக்குத் திட்டம்-2023’ (விஷன் - 2023) வெளியிட்டார் ஜெயலலிதா. 2014-ம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். ஆனால், 'விஷன் - 2023’ இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கியதாகத் தெரியவில்லை.

15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக 4.09 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 4,000 கோடிகூட ஒதுக்கப்படவில்லை. 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அனல்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இலக்கை எட்டவில்லை. செங்கல்பட்டு - தூத்துக்குடி, தூத்துக்குடி - கோவை, கோவை - செங்கல்பட்டு இடையே 24 ஆயிரம் கோடி ரூபாயில் முக்கோண 6 வழி மற்றும் 8 வழி சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் கானல் கனவாகவே இருக்கிறது. இவை நிறைவேற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் தொழில் வளர்ச்சி அடைந்திருக்கும். மொத்தத்தில் தொலைநோக்குத் திட்டமே, கண்ணுக்கு எட்டாத தொலைதூரத்தில்தான் இருக்கிறது.  

ஆனால், 'ஆந்திராவில் இருந்து தொழிலதிபர் ஒருவர் தமிழ்நாடு வந்தார். அம்மா உணவகத்தில் உணவு அருந்திவிட்டு ஹைதராபாத் சென்றுவிட்டார். அங்கு தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 'எல்லோரும் அம்மா உணவகம் பற்றி 'ஆகா... ஓகோ’வெனப் புகழ்ந்தார்கள். நானும் சென்று பார்த்தேன். இனிமேல் தமிழ்நாட்டில் அம்மா அவர்களைத் தவிர, வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாது’ எனக் கூறினார். அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவரே 'அம்மா ஆட்சிதான் இனிமேல்’ என்கிறார். குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்கூட, அம்மா உப்பு வேண்டும் எனக் கேட்கிறார்கள். தமிழ்நாட்டை அம்மா நாடு என அழைக்கிற நாள் வெகுதூரத்தில் இல்லை’ என சம்பந்தமே இல்லாமல் சட்டமன்றத்தில் முழங்கிக்கொண்டிருக்கிறார் தங்கமணி.

இவர் அமைச்சராக இருப்பது தமிழ்நாட்டுக்கா... கொடநாட்டுக்கா?!

நோட் போட்ட உளவுத் துறை!

செல்வகணபதியை எதிர்த்து அரசியல் செய்தால்தான் ஜெயலலிதாவின் பார்வை படும் என்பதால், அதைச் சரியாகவே செய்தார் தங்கமணி. பேனர், போராட்டம் என அனைத்தும் செல்வகணபதிக்கு எதிராகவே அவ்வப்போது அரங்கேறும். ஆனால் 'இதெல்லாம் வெளித் தோற்றம்தான். இருவருக்கும் இடையே இப்போதும் திரைமறைவுப் பாசம் உண்டு. செல்வகணபதி அமைச்சராக இருந்தபோது அவரிடம் பழக்கமான இ.பி.கே.மணி என்கிற பழனியப்பன்தான் இப்போது இருவருக்கும் மீடியேட்டர். மணியின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தால், தங்கமணி, செல்வகணபதியின் போன் நம்பர்கள் இடம்பெற்றிருக்கும். செல்வகணபதிக்குச் சொந்தமாக ஹனிமூர் பகுதியில் உள்ள பங்களாவில் ரகசிய சந்திப்புகள் நடைபெறுகின்றன’ எனக் கிசுகிசுக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். செல்வகணபதியின் உறவினர் ஒருவரை தங்கமணி சந்தித்த விவகாரத்தை கார்டனுக்கு நோட் போட்டு அனுப்பியிருக்கிறது உளவுத் துறை!

மகன்... மருமகன்... சம்பந்தி!

செல்வகணபதியிடம் 'அரசியல் ரூட்’ போட்டுக்கொடுத்த சிவசுப்பிரமணியன், பின்னர் தங்கமணிக்கே சம்பந்தி ஆனார்.  இதற்குப் பின்னால் இருக்கிறது ஒரு காதல் போராட்டம். சிவசுப்பிரமணியனும் தங்கமணியும் 'நட்பாக’ இருந்த காலகட்டத்தில் அவர்களின் பிள்ளைகள் 'காதலாகி’விட்டார்கள். தங்கமணியின் மகள் லதாஸ்ரீயும் சிவசுப்பிரமணியன் மகன் தினேஷ§ம் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். விஷயம் கேள்விப்பட்டதும் தங்கமணி வீட்டில் இடி, மின்னல். மகளை வீட்டுச் சிறையில் வைத்தார் தங்கமணி. செல்வகணபதி தலையிட்டும் தங்கமணியின் பிடிவாதம் மாறவில்லை. திடீரென ஒருநாள், 'எங்களைத் தேடாதீர்கள். நிம்மதியாக வாழப்போகிறோம்’ என எழுதிவைத்துவிட்டு காணாமல்போனார்கள் காதலர்கள். 'எம்.எல்.ஏ பொண்ணு பத்தி தாறுமாறா செய்தி வந்தா, உன் அரசியல் இமேஜுக்கு நல்லது இல்லை’ என செல்வகணபதி எச்சரிக்க, மகளின் காதல் திருமணத்துக்குச் சம்மதித்தார் தங்கமணி.

மந்திரி தந்திரி - 17 !

ஆனால், காதல் காலத்தில் முறுக்கி முரண்டு பிடித்த தினேஷ்தான், இப்போது மாமனார் தங்கமணிக்கு 'ஆல் இன் ஆல்’. டைல்ஸ் வியாபாரம் செய்வதோடு, தங்கமணியின் முக்கிய விவகாரங்களையும் கவனித்துக்கொள்கிறார். மாப்பிள்ளையிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தால் மட்டுமே எந்தக் காரியத்தையும் செய்வார் தங்கமணி. மாப்பிள்ளை மட்டும் அல்ல, சம்பந்தியும் தங்கமணிக்குப் பக்கபலமாக இருக்கிறார். தி.மு.க-வுக்குச் சென்று திரும்பிய சிவசுப்பிரமணியன், தற்போது தங்கமணியின் அறிவிக்கப்படாத பி.ஏ-வாக வலம்வருகிறார். தங்கமணியின் மகன் தரணீதரனுக்கும் தனி செல்வாக்கு உண்டு. ஆக, மகன் - மருமகன் - சம்பந்தி என முக்கோணக் கூட்டணிதான் தங்கமணியின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றன!

அம்மா சிமென்ட் அக்கப்போர்!

அம்மா சிமென்ட் திட்டம் நிஜமாகவே தங்கமணியின் சாதனைதான். ஆனால், அந்த சிமென்ட் விநியோகத்தில் ஏகத்துக்கும் முறைகேடுகள். தமிழ்நாடு சிமென்ட் நிறுவனம் மூலம்தான் அம்மா சிமென்ட் விற்பனையாகிறது. ஒவ்வொரு மாதமும் தனியார் சிமென்ட் நிறுவனங்களிடம் இருந்து 2 லட்சம் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்பட்டு, அரசு கிடங்குகள் மூலம் மூட்டை ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், அம்மா சிமென்ட் கேட்டு விண்ணப்பித்த பலருக்கும் சிமென்ட் கிடைப்பது இல்லை. விண்ணப்பித்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு பல ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையே நிலவுகிறது. அப்படி எனில், மாதம்தோறும் கொள்முதல் செய்யப்படும் 2 லட்சம் டன் சிமென்ட் எங்கே போகிறது? விலை குறைவான அந்த சிமென்டை ஆளும் கட்சியினரும் அதிகாரிகளும் கள்ளச் சந்தையில், அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்தன!

''செஞ்சிருவேன்!''

தங்கமணியின் அமைச்சர் பதவிக்கு உண்டாகும் சிக்கல்களைக் களைவது அ.தி.மு.க-வின் ஐவர் அணியில் இடம்பெற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியின் மச்சான் மகள் சாராவை, தன் மகன் தரணீதரனுக்கு மணம் முடித்திருக்கிறார் தங்கமணி. இந்த உறவுமுறை அலுவல்ரீதியாகவும் உதவுகிறது. கட்சியினரின் புகார்களை விசாரிப்பது ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் அணிதான். அதனால் தங்கமணி மீதான புகார்கள் தங்கமணிக்கே ஃபார்வர்டு செய்யப்படுகிறதாம். திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவர், தங்கமணி பற்றி புகார் தட்டிவிட்டிருக்கிறார். அவரை அழைத்து, அவர் எழுதிய மனுவை அவரிடமே தூக்கிப்போட்டிருக்கிறார் தங்கமணி. 'எனக்கு எல்லா இடத்திலும் ஆள் இருக்கு. உன்னால இவ்வளவுதான் செய்ய முடியும். ஆனா, நான் இதைவிட அதிகமாவே செஞ்சிருவேன்!’ எனச் சொல்லி அதிரவைத்திருக்கிறார்.

மந்திரி தந்திரி - 17 !

முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, பொன்னையன், செங்கோட்டையன் என மூன்று ஜாம்பவான்களை ஏறி மிதித்துவிட்டு, உச்சாணியில் அமர்ந்தவர் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி!

மந்திரி தந்திரி - 17 !

தமிழ்நாட்டில் செயல்படும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் விரிவாக்கம் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் அமையலாம். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த இசுஸு நிறுவனம் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது. சென்னையில் செயல்படும் செயின்ட் கோபைன் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தின் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்க ஆலை, ராஜஸ்தானுக்குச் சென்றுவிட்டது. தமிழ்நாட்டின் ராம்கோ சிமென்ட் நிறுவனமே, ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் தனது தொழிற்சாலையை, ஆந்திராவில் அமைக்க அனுமதி பெற்றிருக்கிறது. இவற்றை தமிழ்நாட்டில் தக்கவைக்கும் முனைப்புகளில்கூட கவனம் செலுத்தவில்லை தொழில் துறை அமைச்சகம்!

மந்திரி தந்திரி - 17 !

கிரானைட் கொள்ளையால் அரசுக்கு இழப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால், மோசடிக்குக் காரணமானவர்கள் மீதான விசாரணைக்கு முட்டுக் கட்டை போடுவதிலேயே குறியாக இருக்கிறது அரசு. கோடிகளில் கரன்சி மழை பொழிவதால், அதிகாரிகள் காட்டிலோ அடைமழை!

மந்திரி தந்திரி - 17 !

3 பெரிய துறைமுகங்கள், 7 சிறிய துறைமுகங்கள், 4 சர்வதேச விமான நிலையங்கள் இருந்தும் தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மிக மந்தமாக இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்திருக்கின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள்!

மந்திரி தந்திரி - 17 !

தமிழ்நாட்டில் ஒரு திட்டம் தொடங்க ஏக முட்டுக்கட்டைகள் எனப் புலம்புகிறார்கள் தொழிலதிபர்கள். தொழில் துறை அமைச்சரை  தொழிலதிபர்களால் சந்திக்கக்கூட முடிவதில்லை. மின்வெட்டு, நிர்வாகச் சிக்கல்கள், அதிகரிக்கும் செலவினங்கள் என, தொழில் முதலீட்டுக்குச் சாதகமான சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்பதால், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றும் முனைப்பில் இருக்கின்றன!

சென்னைத் துறைமுகத்தில் இருந்து, மதுரவாயல் வரையிலான மத்திய அரசின் பறக்கும் சாலைத் திட்டத்தை, தமிழ்நாடு அரசு பாதியில் நிறுத்திவிட்டது. இதற்காகப் போடப்பட்ட தூண்கள் மட்டும் நிராயுதபாணியாக நிற்கின்றன. இதனால் கார் தொழிற்சாலைகளில் இருந்து துறைமுகத்துக்கு கார்களை அனுப்புவதில் பிரச்னை. 48 மணி நேரத்துக்கு மேலாக கார்கள் துறைமுகத்திலேயே வீணாகக் காத்திருக்கவேண்டிய கட்டாயம். இதனால் பணமும் காலமும் விரயமாகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், சென்னையின் புறவழிச் சாலையில் இருந்து துறைமுகத்துக்கு எளிதாக சரக்குகளைக் கொண்டுபோயிருக்க முடியும். தொழில்கள் பல்கிப் பெருகியிருக்கும். ஆனால், அதற்கான கதவுகளை அடைத்துவிட்டது தமிழ்நாடு அரசு. இப்படித்தான் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையும் குறைந்துகொண்டே போவதால் தொழில் வளர்ச்சியும் குறைந்துகொண்டே போகிறது.

மந்திரி தந்திரி - 17 !

 புதிய முதலீடுகள் இல்லாததோடு, பல தொழிற்சாலைகள் மூடுவிழா காண்கின்றன. ஏழு ஆண்டுகளாக இயங்கிவந்த ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை, திடீரென இழுத்துச் சாத்தப்பட்டது. வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கிடைக்க, அமைச்சர் தங்கமணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மலிவு விலையில் நிலம், தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, வரிச்சலுகை, தொழிலாளர் சட்டம் செல்லுபடியாகாத விதத்தில் ஏற்பாடுகள் போன்ற சலுகைகளுடன் தொடங்கப்பட்டது நோக்கியா தொழிற்சாலை. அத்தனை லாபங்களையும் நுகர்ந்துவிட்டு, மத்திய - மாநில அரசுகளுக்குச் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச வரியைக்கூடச் செலுத்தவில்லை அந்த நிறுவனம். ஆனால், 'நோக்கியா ஆலை எங்கும் போகவில்லை. மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்போம்’ என சட்டமன்றத்தில் ஜம்பமாக அறிவித்தார் தங்கமணி. வழக்கம்போல அந்த அறிவிப்பும் காற்றில் பறந்த காகிதமாகிவிட்டது!