
முகில்
2011-ம் ஆண்டின் கோடைகாலம். உச்சிவேளையில் சூரியனால் சூடாகிக்கொண்டிருந்தது சூடானின் மேய்ச்சல் நிலம் ஒன்று. மாடு மேய்க்கும் 14 வயது டேனியல், தூரத்தில் போர் விமானம் வரும் சத்தம் கேட்டு, பயத்துடன் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். சத்தம் தன்னை நெருங்குவதை உணர்ந்து மிரட்சியுடன் மேலே பார்த்தான். அந்தப் போர் விமானம் வீசிய குண்டு ஒன்று, அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. பதறி எழுந்து, பாய்ந்து ஓடினான். சற்றுத் தள்ளித் தெரிந்த பெரிய மரம் ஒன்றை இறுகக் கட்டிப்பிடித்த நொடியில், குண்டு பெரும் சத்தத்துடன் மரத்தின் மறுபுறம் விழுந்து, வெடித்துச் சிதறியது.
மரத்தோடு மரமாக உயிர்துடிக்க நின்றிருந்த டேனியல், புகைமூட்டம் சற்றே கலைந்த கணத்தில் மரத்தைவிட்டு விலகி, தன் கைகளை நோக்கினான். அவை இல்லை. கைகள் இரண்டுமே, முழங்கைக்குக் கீழ் சிதைந்து காணாமல்போயிருந்தன. ரத்தம் ஒழுக, சதை பிய்ந்து தொங்கியது. கதறி அழக்கூடத் திராணி இல்லாமல், நடைபிணம்போல கொஞ்ச தூரம் நடந்து சென்ற டேனியல், ஓர் இடத்தில் அப்படியே மயங்கி விழுந்தான்.
ஒரு சிலர் ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒரு காரும் கிடைத்தது. டேனியலைத் தூக்கிப்போட்டுக்கொண்டு, நுபா மலைப்பிரதேசத்தின் 'மதர் ஆஃப் மெர்ஸி மருத்துவமனை’க்குக் கிளம்பினர். சாலைகள் எல்லாம் கிடையாது. காடு, மேடு, மலைப்பாதை என சில மணி நேரங்கள் பயணம் செய்தால்தான், அங்கே போக முடியும். வேறு வழி இல்லை. அந்தப் பிரதேசத்தில் உள்ள ஒரே மருத்துவமனை அது மட்டும்தான். ஒரு சில கிளினிக்குகள் இருந்தாலும், அங்கே மருத்துவர்களே கிடையாது (இன்று வரை!). அந்த 90 மைல் சுற்றளவில் வாழும் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களும் நம்பியிருப்பது 'மதர் ஆஃப் மெர்ஸி மருத்துவமனை’யைத்தான். அத்தனை பேருக்கும் சேர்த்து, அங்கே கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணியில் இருப்பது ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே. அவர், தாமஸ் கேட்டினா என்கிற 'டாக்டர் டாம்’!

இத்தனைக்கும் டாம் அந்த மண்ணின் மைந்தர் அல்ல; அமெரிக்கர். டேனியலின் மீது விழுந்த குண்டு, டாமின் மீதும் எந்தக் கணத்திலும் விழலாம். தவிர, குண்டு வீசுவதும் எதிரி நாடு அல்ல. சூடான் அரசேதான். சொந்த மக்களை அரசே கொல்லும் அந்த நிலப்பரப்பில், மரண பயத்தை வென்று, மனிதநேயம் கொண்டு, அப்பாவி சூடான் மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவ சேவைக்காக, தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார் டாக்டர் டாம்.
அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் ஆம்ஸ்டர்டாமில் பிறந்தவர் டாம். பெற்றோர், ஜெனி-நான்ஸி. அவர்களுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். ஐந்தாவதாகப் பிறந்தவர் தாமஸ் கேட்டினா. செல்லப்பெயர் டாம். பால்யத்திலேயே டாம் அதிகம் அடம்பிடிக்காத, எதையும் விட்டுக்கொடுக்கிற சமர்த்துக் குழந்தை. சர்ச்சில் பிரார்த்தனை, பைபிள் கதைகள், அடுத்தவருக்கு உதவுதல் போன்றவை டாமுக்குப் பிடித்த விஷயங்கள். படிப்பில் கெட்டி; விளையாட்டுகளில் சுட்டி.
12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அஸிசியைச் சேர்ந்த பிரான்ஸிஸ் என்கிற புனிதரின் வாழ்க்கைக் கதை, சிறுவன் டாமின் மனதில் ஆழப் பதிந்தது. அது 'இறை ஊழியம்’ செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்தது.
இன்ஜினீயரிங் படிப்பு முடித்தாலும், 'மக்கள் சேவை’ என்பதே டாம் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது. நேவி ஸ்காலர்ஷிப் கிடைக்க, நார்த் கரோலினாவின் டியூக் பல்கலைக்கழகத்தில், மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் டாம். மருத்துவப் படிப்பின் நான்காவது வருடத்தில், கென்யாவில் இரண்டு மாதங்கள் தங்கி மருத்துவச் சேவை செய்தார் டாம். கென்யா நாட்டின் மொழி, டாமுக்குத் தெரியாது. ஆனால், அந்த மக்களின் பரிதாப முகங்கள், அவற்றில் நிறைந்திருந்த ஏக்கம், நோய், வலி, நிவாரணம் கிடைத்தபோது கண்களில் பெருகிய நன்றி உணர்வு... டாக்டர் டாம் உறுதியாகத் தீர்மானித்தார். 'இதுவே என் பாதை; இதுவே நான் விரும்பிய வாழ்க்கை’!
1999-ம் ஆண்டில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத கென்யா நாட்டின் கிராமம் ஒன்றின் மருத்துவமனையில் தன் பணியை ஆரம்பித்தார். அங்கே இரண்டு ஆண்டுகள். அடுத்து நைரோபியில் செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் ஆறு ஆண்டுகள் பணி. இருண்ட கண்டத்தின் இன்னல்கள் ஒவ்வொன்றும் டாமுக்குப் புரிய ஆரம்பித்தது. கறுப்பின மக்கள் மீதான அவரது அன்பு, பாசம், அக்கறை அதிகரித்துக்கொண்டேபோனது.
2007-ம் ஆண்டு. அடுத்து அவர் சேவைக்காகத் தேர்ந்தெடுத்த பகுதி, முன்னேற்றத்தின் எந்தவித அடிச்சுவடும் பதியாத சூடானின் நுபா மலைகள் சூழ்ந்த 'கிடெல்’ என்ற ஊர். அங்கே பல மைல் சுற்றளவில் எங்கும் மருத்துவமனையே கிடையாது. மிஷனரி பண உதவி செய்தது. மக்கள் வியர்வை சிந்தினார்கள். நுபா மலைகளில் இருந்து கொண்டுவந்த கற்கள் மருத்துவமனைக் கட்டடம் எழ உதவின. 300 படுக்கைகள், பரிசோதனைக் கூடம், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் நிறைந்த மருத்துவமனை... 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயங்கத் தொடங்கியது. மிஷனரி மாதம்தோறும் வழங்கும் $350 மட்டுமே டாமின் வருமானம். அதை எல்லாம் யோசிக்காமல், 'மக்களின் டாக்டராக’ டாம், தன் மருத்துவச் சேவைகளை அங்கே தொடர்ந்தார். 2011-ம் ஆண்டு வரை பெரிய அளவில் பிரச்னை இல்லை. ஆனால், சூடானில் இருந்து 'தெற்கு சூடான்’ தனி நாடாகப் பிரிந்த கணத்தில், நுபா பிரதேசம் 'திரிசங்கு நரகம்’ ஆனது. இந்தப் பிரச்னையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, சூடானின் சூடான அரசியல் வரலாறு இங்கே அவசியம். ஆகவே...
நில அமைப்பின்படி பார்த்தால், சவுதி அரேபியாவில் இருந்து செங்கடல் தாண்டி வந்தால் சூடான். ஆக, அங்கே காலங்காலமாக அரேபியர்களின் ஆதிக்கம் அதிகம். இஸ்லாமியர்களே பெரும்பான்மையானவர்கள். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சூடான், பிரிட்டனின் காலனி நாடு. 1956-ம் ஆண்டில் பிரிட்டன் பெட்டிப் படுக்கையுடன் சூடானைவிட்டுக் கிளம்பும்போது, அரபு மொழி பேசும் பெரும்பான்மையினரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றது. இதுவே தீவிரப் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி. காரணம், வட சூடான் பகுதியில் அரபு மொழி பேசும் இஸ்லாமியர்களே பெரும்பான்மையானோர். தென்சூடான் பகுதியில் பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் அதிகம். தென் பகுதியினர் சூடான் முழுவதும் அரபு தேசமாக்கப்படுவதை எதிர்த்தனர். 1956-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை, தெற்கு சூடானியர்களின் முதல் உள்நாட்டு யுத்தம் நடந்தது. முடிவில் ஓர் ஒப்பந்தத்தின் மூலம் தெற்கு சூடானுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 1971-ம் ஆண்டில் சூடானில் எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட, உதவி என்ற பெயரில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா போன்ற சகுனி நாடுகள் தங்கள் பங்குக்குத் தாயம் உருட்ட ஆரம்பித்தன. 1983-ம் ஆண்டில் சூடான் அரசு, தெற்கு சூடானின் தன்னாட்சியை ரத்துசெய்தது. இரண்டாம் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானது. தெற்கு சூடானில் டிங்கா இனத்தவர் அதிகம். டிங்காக்கள் நிரம்பிய, 'தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின்- 'SPLM’ ராணுவப் பிரிவாக SPLA (Sudan People’s Liberation Army) செயல்பட்டது. அது, தங்கள் விடுதலைக்காக சூடான் அரசுக்கு எதிரான கெரில்லா போரை முன்னின்று நடத்தியது. இதில் 2005-ம் ஆண்டு வரையில் கொல்லப்பட்ட தெற்கு சூடானியர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனுக்கும் மேல். 2005-ம் ஆண்டில் மீண்டும் ஓர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி அடுத்த ஆறு வருடங்களுக்கு, தெற்கு சூடான் தன்னாட்சி அதிகாரத்துடன் இருக்கும் என்றும், அதற்குப் பிறகு மக்கள் வாக்கெடுப்பு மூலம் தனி நாடு உரிமை வழங்கப்படலாமா, வேண்டாமா என முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு ஜனவரியில் தெற்கு சூடானில் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜூலை மாதம் 99 சதவிகித மக்கள் ஆதரவுடன் தெற்கு சூடான், உலகின் 193-வது நாடாக உதயம் ஆனது.
நுபா மலைப்பிரதேசத்தினர் தீராச் சிக்கலில் விழுந்ததும் அப்போதுதான். நுபா பகுதி மக்கள் அரபு ஆதிக்கத்தை விரும்பாதவர்கள். அவர்களும் அதுவரை தெற்கு சூடானுக்கு ஆதரவாக SPLA உடன் இணைந்தே போராடி வந்தனர். ஆனால், நுபா பிரதேசத்தில் பிரிவினைக்கான வாக்கெடுப்பு நடத்த சூடான் அரசு மறுத்துவிட்டது. (காரணம், அந்தப் பிரதேசம் எண்ணெய் வளமும், நிலக்கரி வளமும், தங்கம் உள்ளிட்ட தாது வளமும் நிரம்பிய பகுதி. அதை விட்டுக்கொடுக்க அது விரும்பவில்லை) தெற்கு சூடான் உதயமானபோது, நுபா பிரதேசம் வட சூடானிலேயே விடுபட்டுப்போனது.
சூடான் அரசு, 2011-ம் ஆண்டில் 'நுபா இனப்படுகொலைகளை’ ஆரம்பித்துவைத்தது. 'நிறைந்துகிடக்கும் கறுப்பு பிளாஸ்டிக் பைகளைச் சுத்தம்செய்ய முடிவெடித்திருக்கிறோம்’ என ஒருநாள் சூடானின் ரேடியோ ஒன்று அறிவித்தது. கறுப்பு பிளாஸ்டிக் பைகள் = நுபா மக்கள். திடீரென போர் விமானங்கள் பறந்துவரும்; கொத்துக்கொத்தாகக் குண்டுகளை வீசும். 'மண்ணைக் காலிசெய்துவிட்டு ஓடிப் போ அல்லது மண்ணோடு உடல் சிதறிச் செத்துப்போ’ - இதுவே தன் தேச மக்கள் மீதே தாக்குதல் நடத்தும் சூடான் அரசின் நல்லெண்ணம். இந்த நிலையில் புதிதாகப் பிறந்த தெற்கு சூடானும், தன் உள்நாட்டில் மிகுந்துவிட்ட திருகுவலிக் குழப்பங்களால், நுபாவைக் கைவிட்டுவிட்டது. ஆகவே, திரிசங்கு நரகத்தில்...
ஆரம்பத்தில் மதர் ஆஃப் மெர்ஸி மருத்துவமனையில் டாக்டர் டாம் உடன் ஒரு லேப் டெக்னீஷியன், மருந்தாளுநர், மயக்க மருந்து கொடுக்கத் தெரிந்த நர்ஸ் உள்ளிட்ட சிலர் பணியாற்றினர். 2011-ம் ஆண்டில் விமான குண்டு தாக்குதல் ஆரம்பித்த சில நாட்களிலேயே அவர்கள் அனைவரும் 'உயிர் வாழ’ ஆசைப்பட்டு, இடத்தைக் காலிசெய்தனர். ஆனால், மருத்துவமனை எங்கும் உயிருக்குப் போராடும் உடல்கள் நிறைந்து வழிய ஆரம்பித்தன. குண்டுவெடிப்பில் கைகள் சிதறி, வயிறு கிழிந்து, முகம் சிதைந்து, கால்கள் கழன்று, உடல் எங்கும் எரிந்து... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பாகுபாடு இல்லாமல் எங்கும் ரத்தம், வலியின் அவலம், உயிரின் கதறல். சகல திசைகளில் இருந்தும் வந்துகொண்டே இருந்தார்கள். அந்த அனைவரது ஒரே நம்பிக்கை, 'டாக்டர் டாம் காப்பாற்றிவிடுவார்.’
அதிர்ந்து உட்காரவோ, அய்யோ எனப் பதறவோ அவகாசம் இல்லாத சூழல். டாம், எந்தச் சலனத்தையும் முகத்தில் காட்டாமல், ஒவ்வொருவருக்கும் சிகிச்சைசெய்தார். ஒரே நாளில் பல ஆபரேஷன்கள். குடல் கிழிந்த ஒருவரது உயிரைப் பிழைக்கவைக்கப் போராடும்போதே, அடுத்த வார்டில் பெண் ஒருத்தி பிரசவ வலியில் துடிக்கிறாள் என அழைப்பு வரும். போகிற உயிரைப் பாதுகாக்கவா... வரப்போகும் உயிரை வரவேற்கவா? கொஞ்சமும் பதறாமல் இரண்டையுமே கவனிப்பார் டாம். ஆனால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துபோகும் சமயங்களில் மட்டும் டாமின் கண்கள் கட்டுப்பாடு இல்லாமல் கலங்கும்.
டாம், அதிகாலையிலேயே எழுந்து விடுவார். 6:30 மணிக்கு அங்கு உள்ள சிறிய தேவாலயத்துக்குச் செல்வார். 7 மணிக்கு எல்லாம் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 300 நோயாளிகளைப் பரிசோதிப்பார். ஒரு பேஷன்ட்டுக்கு ஓரிரு நிமிடங்களுக்கு மேல் ஒதுக்க முடியாது. காரணம், தொலைதூரங்களில் இருந்து மலைப்பாதைகளை எல்லாம் கடந்துவந்த புதிய நோயாளிகள், நூற்றுக்கணக்கில் வெளியே காத்திருப்பார்கள். அன்றைக்குச் செய்யவேண்டிய ஆபரேஷன்களுடன், புதிதாக வரும் நோயாளிகளுக்கும் அவசர ஆபரேஷன் செய்யவேண்டி இருக்கும். சாதாரணக் காய்ச்சல் முதல் கேன்சர் வரை அனைத்துக்கும் அவரே சிகிச்சை அளித்தாக வேண்டும். இப்படி பேஷன்ட்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, உள்ளூர் மக்களில் ஓரளவு படித்த சிலருக்கு 'நர்ஸிங்’ பயிற்சி அளித்து, தனக்கு உதவியாக வைத்துக்கொண்டார். அப்படி இவரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, வெளியூர்களில் 'பணத்துக்காக’ வேலைக்குச் செல்பவர்களைக்கூட டாம் நொந்துகொள்வது இல்லை; வாழ்த்தி விடைகொடுப்பார்.
நோயாளிகளுக்குப் போதுமான உணவு கிடையாது; மின் வசதி கிடையாது. சூரிய மின்சக்திதான் துணை. தண்ணீருக்கு ஓர் ஆழ்துளைக் கிணறு. மருத்துவமனைக்கு மிஷனரி அனுப்பும் மருந்துகளும் உணவுப்பொருட்களும் தடையின்றி வந்துசேர்ந்தாலே, பெரிய விஷயம். ஆனால், எந்தக் கஷ்டத்திலும் இருப்பதைக் கொண்டு சிறப்பாக மருத்துவம் பார்க்க, தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டுவருகிறார் டாக்டர் டாம்.
இரவில் கண்கள் அயர்ந்த வேளையில் அவசரம் என எப்போதும் அழைப்பு வரலாம். சிணுங்க மாட்டார். ஸ்டெத்தை எடுத்துக்கொண்டு ஓடுவார். ஆனால், டாமும் மனிதர்தானே. இருமுறை மலேரியாவால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போனார். 100 கிலோவுக்கும் மேல் இருந்த டாம், 70 கிலோவுக்குக் குறைந்துபோனார். பின் ஒருமுறை கைவிரலில் அடிபட்டு, நகம் துண்டாக வலியில் துடித்தார். ஆனால் மறுநாளே, விறுவிறுவென பல அறுவைசிகிச்சைகளைச் செய்யத் தவறவில்லை. ஒரு சில ரொட்டித் துண்டுகள், கொஞ்சம் தானியம்... இதுவே டாமின் தினசரி உணவு.
'என்றாவது ஒருநாள் மருத்துவமனை மீதும் குண்டு வீசப்படலாம்’ என டாம் அடிக்கடி நினைப்பது உண்டு. 2014-ம் ஆண்டு மே மாதத்தில் அதுவும் நடந்தது. மருத்துவமனை வளாகத்தில் சுமார் 11 குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. நோயாளிகள் எல்லாம் தரையோடு தரையாகப் பதறிப் படுத்தனர். பாதுகாப்புக்காக வெட்டிவைத்திருந்த பதுங்குகுழிகளுக்குள் பாய்ந்தனர்... டாமும்தான். நல்லவேளை உயிர்ச்சேதம் இல்லை. ஆனால், மரணத்தை நெருங்கிவிட்ட உணர்வு. அந்தச் சூழலிலும் 'நமக்கு என்ன தலையெழுத்தா?’ என விட்டுப்போக டாம் நினைக்கவில்லை. 'நம்மைவிட்டால் யார் இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்?’ என மட்டுமே நினைத்தார். 'வருங்காலத்தில் வெடிகுண்டுகளால் இந்த மருத்துவமனை தகர்க்கப்படலாம்; பரவாயில்லை. நுபா மலை இருக்கிறது. அங்கே குகைகள் இருக்கின்றன. அங்கேயே தங்கி என் சிகிச்சையைத் தொடர்வேன். என் பணி, இவர்கள் பிணி நீக்குவதே.’

நுபாவில் நடக்கும் கொடுமைகளை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தும் ஒரே நபர், டாக்டர் டாம் மட்டுமே. அவரது பெரும் முயற்சியினால், ஊடகங்களில் நுபாவின் அவலங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதற்கு முன்பே சர்வதேச நீதிமன்றத்தால் சூடான் அதிபர் அல்பஷிர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இன்னொரு பக்கம், இந்தப் பிரச்னையை
முன்வைத்து வல்லரசு நாடுகளும், தங்கள் பங்கு அரசியல் ஆட்டத்தை ஆடுகின்றன. எனினும் எந்த ஒரு நல்ல தீர்வும் எட்டப்படும் என்ற நம்பிக்கை, தொலைவில்கூடத் தென்படவில்லை.
நுபாவின் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, அவர்களது தினசரிப் பிரார்த்தனையில், 'இறைவனே! டாக்டர் டாம் நன்றாக இருக்க வேண்டும். அவருக்கு எந்தத் தீங்கும் நேரக் கூடாது’ என்ற கோரிக்கை நிச்சயம் உண்டு. அங்கு வாழும் கறுப்பின கிறிஸ்தவர்கள் சொல்லும் வார்த்தைகள் அத்தனை உணர்வுபூர்வமானவை. 'இயேசு என்ன செய்தார்? நோயாளிகளைக் குணப்படுத்தினார்; நடக்க முடியாதவர்களை நடக்கவைத்தார்; கண்கள் இல்லாதவர் களுக்குப் பார்வை கொடுத்தார். எங்கள் டாக்டர் டாமும் அதைத்தான் இங்கு செய்துகொண்டிருக்கிறார். எங்களுடைய இயேசு, டாக்டர் டாம்தான்!’
உலகின் நம்பர் ஒன் டாக்டர்!

'டைம்’ பத்திரிகை 2015-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள உலகின் மிக முக்கியமான 100 மனிதர்களில் டாக்டர் டாமும் இடம்பெற்றுள்ளார். பிரௌன் பல்கலைக்கழகம் தங்கப் பதக்கம் வழங்கி, டாமின் சேவையைக் கௌரவப்படுத்தியுள்ளது. இன்னும் பல அமைப்புகள் டாமின் சேவைக்கு என விருதுகளை வழங்கியிருக்கின்றன; வழங்கவும் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த விருதுகளை எல்லாம் அவ்வளவாக விரும்பாத டாம், 'நுபா பிரதேச மக்களுக்கு உதவி செய்யுங்கள்’ என நிதி திரட்டுவதிலும், நுபா பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதிலும்தான் கவனம் செலுத்துகிறார். 'நுபா மக்களுக்கு உதவுவதால் என் உயிரும்கூட சூடான் அரசுக்கு ஒரு பொருட்டு அல்ல’ என்கிறார் டாம். அப்பேர்ப்பட்ட சூழலிலும், ஏதோ ஒரு பகுதி மக்களின் உயிரைக் காக்க, ஒற்றை ஆளாகக் களத்தில் போராடிக்கொண்டிருக்கும் டாம், தன் தன்னலம் அற்ற மருத்துவ சேவையால் உலகின் நம்பர் ஒன் டாக்டரே!
'மதம்’ கொண்ட சர்ச்சை!

டாக்டர் டாம் வாழும் தெரசாவாகக் கருதப்படுகிறார். அதேசமயம் தெரசா எதிர்கொண்ட அதே சர்ச்சை டாம் மீதும் சொல்லப்படுகிறது. 'டாம், சேவை என்ற பெயரில் நுபா பழங்குடி மக்களைக் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்’ என்கிறார்கள். அதற்கு டாக்டர் டாம் சொல்லும் தீர்க்கமான பதில்... 'பல இடங்களில் சேவை என்ற பெயரில் மதமாற்றம் நடப்பது உண்மையே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இயேசு, மக்கள் சேவை என்றால் என்ன எனக் காட்டிச் சென்றிருக்கிறார். அவரைத்தான் நானும் பின்பற்றுகிறேன். ஒருவேளை கிறிஸ்தவனாகப் பிறந்திருக்காவிட்டால், இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேனா எனத் தெரியாது. தவிர, ஒருபோதும் நான் மதப்பிரசாரம் செய்தது கிடையாது. 'கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தான் அல்லது கிறிஸ்தவராக மாறினால்தான் சிகிச்சை அளிப்பேன்’ என எவரிடமும் சொன்னது கிடையாது. நான் இந்த மக்களை நேசிக்கிறேன். அவர்களும் என்னை நேசிக்கிறார்கள். அவர்களில் ஒருவராக, அவர்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவே!’
திருமணம்?

50 வயதை எட்டிவிட்டாலும் டாம் இன்னும் பேச்சுலர். இளவயதில் அவருக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தார். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவ சேவையே தனது லட்சியம் என டாம் உறுதியாக முடிவெடுத்தபோது, அந்தப் பெண் விலகிப்போனார். அதற்குப் பிறகு திருமணம் குறித்து டாம் யோசிக்கவே இல்லை. 'என் மீதி வாழ்க்கையும் இப்படியேதான் கழியும். இதே லட்சியம்கொண்ட, என்னுடன் சேர்ந்து பணிபுரியும் விருப்பம்கொண்ட ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்ளலாம். இதுவரை அப்படி ஒருவரையும் நான் சந்திக்கவில்லை’ என்கிறார் சின்ன சிரிப்புடன்!