Published:Updated:

வைகை நதி நாகரிகம் ! - 5

வைகை நதி நாகரிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம்

சரிந்து நீளும் நிழல்களை வைத்து மனிதன் கண்டறிய நினைத்தது என்ன..?!

வைகை நதி, மலை இறங்கித் தரை தொடும் பகுதியில் இருக்கும் கிராமங்களில் ஒன்று, வெம்பூர். இது ஒரு பள்ளத்தாக்கைப் போன்ற பகுதி. வெம்பூரின் தோட்டந்துரவுக்குள் பெரும் பெரும் பாறைகள் நடப்பட்டு வரிசைவரிசையாக நிற்கின்றன. இவை நடப்பட்டு சுமார் 3,000 ஆண்டுகள் இருக்கும். இதுபோன்ற பாறைகளை, 'குத்துக்கற்கள் வரிசைகள்’ (Menhirs) என்கிறார்கள். உலகின் பல்வேறு இடங்களில் இத்தகைய குத்துக்கற்கள் வரிசைகள் கண்டறியப்பட்டுள்ளன. 

ஐரோப்பாவில் கண்டறியப்பட்டபோது, 'இவ்வளவு பெரிய பாறைகளை மனிதர்கள் எப்படித் தூக்கி நிறுத்த முடியும்? இது மனிதர்கள் செய்தது அல்ல, ஏலியன்கள் நட்டுச்சென்ற கற்கள்’ எனக் கதை சொல்லப்பட்டது. இன்று வரை அந்தக் கதையை நம்புபவர்களும் இருக்கிறார்கள். இப்படியான குத்துக்கற்கள் வெம்பூரில் நீள்வரிசையில் நிற்கின்றன. மனிதர்கள் இதை ஏன் நட்டார்கள்? அறுவடை முடிந்தவுடனோ அல்லது துக்க காரியத்துக்காகவோ நடப்பட்டிருக்கலாம். அப்படி எனில், நீள்வரிசையில் மட்டும் ஏன் நடப்பட்டன? அதற்கான காரணங்கள் என்ன? சரிந்து நீளும் நிழல்களை வைத்து மனிதன் கண்டறிய நினைத்தது என்ன? - விடை தெரியாத கேள்விகள்!

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

நட்சத்திரங்களை அடிப்படையாகக்கொண்டு வானியலைக் கணிக்கும் முயற்சியாக இது இருக்கலாம். அதனால்தான் ஒரே திசை நோக்கி இவை இருக்கின்றன என சிலர் கூறுகின்றனர். இறந்த வீரர்களின் நினைவாக இவை நடப்பட்டன என்பது பொது உண்மை. இது நடுகல்லுக்கு முந்தைய வடிவம். மனிதன் இறந்தவுடன், அவனைப் புதைத்த இடத்தில் பெரும் பாறைகளைக் கொண்டுவந்து நட்டுவைத்தான். அதன் பின்னர் எழுத்துக்கள் கண்டறியப்பட்டவுடன், சிறிய கற்களைக் கொண்டுவந்து நட்டு அதில் இறந்தவனைப் பற்றி எழுதத் தொடங்கினான். இறந்தவனின் அடையாளமாக பெரிய பாறை இருப்பதைவிட, சிறிய எழுத்துக்கள் இருப்பதே சிறப்பு என அவன் கண்டறிந்ததே, நாகரிகத்தின் அடுத்த கட்டம். ஆக, எழுத்துக்கள் பிறக்கும்போதே பெரும் பாறைகளை உருட்டிவிட்டுத்தான் பிறந்திருக்கின்றன. எழுத்தின் வலிமை, அது தொடங்கிய இடத்தில் இருந்தே தொடங்கிவிடுகிறது. மன்னர் ஆட்சிக்காலம் தொடங்கி இன்றைய மக்கள் ஆட்சிக்காலம் வரை எழுத்துக்களை சவால் நிறைந்த ஒன்றாகப் பார்ப்பதற்குக் காரணம், அவற்றால் எவ்வளவு வலிமையான ஒன்றையும் சாய்த்துவிட முடியும் என்பதுதான். வெம்பூர் குத்துக்கற்கள் கைவிடப்பட்ட ஒரு பழக்கத்தின் கடைசி எச்சமாக இன்றும் இருக்கின்றன. யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு புதிராக உறைந்து நிற்கின்றன.  

மனிதன் எடுத்தவுடன் எழுத்துக்களைக் கண்டறிந்துவிடவில்லை. குழந்தை முதலில் பென்சிலால் கிறுக்கி, குறுக்கும்நெடுக்குமாகக் கோடுகளைப் போட்டு, பின்னர் எழுதப் பழகுவதைப்போலத்தான் மனிதகுலமும். மனிதன் முதலில் ஓவியத்தைத்தான் வரைந்தான். அவனது கோடுகள், பழக்கத்துக்கு ஏற்ப கட்டுப்பட்டு, வளைந்து, நெளிந்து ஒரு வடிவத்தை அடைந்தபோது அவை எழுத்துக்கள் ஆகின. ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவம்தான் எழுத்துக்கள். ஓவியமும் எழுத்தும் தாயும் சேயும்போல. ஓவியத்துக்கு வயது சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் என்றால், எழுத்தின் வயது சுமார் 3,000 ஆண்டுகள்தான். கோடுகளின் கடைக்குட்டிதான் எழுத்து.

ஆதிமனிதனின் முதல் கலைவெளிப்பாடாக உலகம் எங்கும் பாறை ஓவியங்களே இருக்கின்றன. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் பாறை ஓவியங்கள் மிக முக்கிய சாட்சியம். எழுதப்பட்ட வரலாறுகளால் எட்டித் தொட முடியாத எல்லையை ஆதிமனிதனின் முதல் கிறுக்கல்கள்தான் ஆவணப்படுத்தியுள்ளன. வைகைக் கரையில் வளர்ந்த நாகரிகமும் தனது பழைமையான சாட்சியங்களை பாறை ஓவியங்களில்தான் பாதுகாத்துவைத்துள்ளது.

மனிதன் வேட்டையாடி வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் அவனுக்குப் பெரும் ஓய்வு நேரம் கிடைத்தது. அந்த நேரங்களில், தான் இருந்த குகைகளில் ஓவியங்களை வரைய ஆரம்பித்தான். அப்படி வரையப்பட்ட ஓவியங்களில் ஒன்று ஆண்டிபட்டி - உசிலம்பட்டி கணவாய் பகுதியில், உள்ள சித்திரக்கல் பொடவில் உள்ளது. கலை வரலாற்று ஆய்வாளர்  காந்திராஜன், முனைவர் செல்வக்குமார் இருவரும் இந்த ஓவியத்தைக் கண்டறிந்தனர். இந்த ஓவியத்தில் ஒரு யானையை ஆயுதங்களோடு சூழ்ந்து நின்று மனிதர்கள் வேட்டையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இன்றுபோல் யானைகளைத் தந்தங்களுக்காக வேட்டையாட வேண்டிய தேவை எதுவும் அன்றைய நாளில் உருவாகவில்லை. அப்படி எனில், இந்த ஓவியம் எதை உணர்த்துகிறது? மனிதன் யானைகளை ஏன் சுற்றிவளைக்கத் தொடங்கினான்?

யானைகளைப் பற்றி சங்க இலக்கியங்களில் எண்ணிலடங்கா குறிப்புகள் உள்ளன. காலத்தால் மிகப் பழமையான இலக்கியத் தொகுதிகளில் யானைகளைப் பற்றிய குறிப்புகள் இவ்வளவு அதிகம் இடம்பெற்றிருக்கும் மொழியாக தமிழ் மொழியே இருக்கக்கூடும். மலைகளே இல்லாத சோழர்களிடமே 60,000 யானைகள் இருந்தது என்றால், பெரும் மலைத்தொடர்களைக்கொண்ட சேரர்களிடமும் பாண்டியர்களிடமும் அதைவிட அதிக எண்ணிக்கையில் யானைகள் இருந்திருக்க வேண்டும். யானைகளைப் பற்றி நீண்ட நெடுங்கால அனுபவ அறிவு, நமது முன்னோர்களுக்கு உண்டு. அந்த அறிவின் பயனாகத்தான் யானையைப் பற்றி 'கரிநூல்’ என்ற நூலை உருவாக்கியுள்ளனர்.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

ஆனால், இந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை. மறைந்துபோன அறிவுச்சொத்தில் இதுவும் ஒன்று. தமிழ்த்தாத்தா உ.வே.சா., யானைப் பாகர்கள் பலரிடம் யானை நூலைப் பார்த்ததாகப் பதிவுசெய்துள்ளார். யானைகளின் குணநலன்கள், அவற்றுக்கு வரக்கூடிய வியாதிகள், அதைத் தீர்க்கும் முறை முதலியவை அந்தச் சுவடியில் இருந்ததாகக் கூறுகிறார். சாஸ்திர நூல் ஒன்று சொல்கிறது, 'குற்றம் செய்த பாகன், யானைக்கு முன் ஓடிப் பிழைத்தால் அவன் குற்றமற்றவன் ஆவான். யானையால் கொல்லப்பட்டு விட்டால் பாவமற்றவன் ஆவான்’ என்கிறது. கரிநூலும் யானைகளின் பலநூறு ரகசியங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு காலத்துக்கு முன் ஓடித் தப்பித்துவிட்டது. யானைகள் தாங்கள் குற்றமற்றவை என்பதை மனிதன் எழுதிய விதியை வைத்தே மனிதனுக்குச் சொல்லிச் சென்றுவிட்டன. கரிநூல் கிடைக்காவிட்டாலும், தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட சான்றுகளில் இருந்தும், வடமொழியில் எழுதப்பட்ட நூல்களில் இருந்தும் நாம் பல தகவல்களை அறிந்துகொள்கிறோம். யானைகளை எப்போது பிடிக்க வேண்டும், எப்போது பிடிக்கக் கூடாது, எந்த வகை யானைகளைப் பிடிக்கலாம், எந்த வகை யானைகளைப் பிடிக்கக் கூடாது, பிடிப்பதற்கு எந்த வழிகளைக் கையாள்வது போன்ற வழிமுறைகளை அறிய முடிகிறது.

உதாரணமாக, முதுவேனில் பருவத்தில் வெப்ப மிகுதியால் யானையின் ஆற்றல் குறைந்திருக்கும். அந்தக் காலம் யானைகளைப் பிடிக்க ஏற்ற காலம். அதேபோல இளங்கன்றுகளைப் பிடிக்கக் கூடாது, கருக்கொண்ட யானைகளையும், பாலூட்டும் யானைகளையும் பிடிக்கவே கூடாது என்கிறது பழங்குறிப்புகள்.

'பயப்பு’ என்றால் யானை பிடிக்க வெட்டப்படும் குழி என அர்த்தம். பெண் யானை இந்தக் குழியில் விழுந்துவிட்டதைக் கண்டு ஆண் யானை பேரொலி எழுப்புவதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று சொல்கிறது. யானையின் பிளிறலில் இருந்து பீறிடும் காதலின் தவிப்பைப் பதிவுசெய்கிறது அந்தப் பாடல். மலையில் பெய்த பெருவெள்ளம் மரம், செடி கொடிகளை இழுத்துக்கொண்டு வைகை நதியை வந்தடைந்தது. அவ்வாறு வரும்போது யானையைப் பிடிக்கத் தோண்டப்பட்டிருந்த குழியை அது மேவிவிட்டது என்கிறது பரிபாடல். குழிவெட்டி யானைகளைப் பிடிப்பதைப் பற்றியும், பயிற்றுவிக்கப்பட்ட பெண் யானைகள் மூலம் ஆண் யானைகளைக் குறிப்பிட்ட பகுதிக்கு வரவைத்துப் பிடிப்பதைப் பற்றியும் பல சான்றுகள் பதிவாகியுள்ளன.

ஆனால், இதற்கு எல்லாம் முன் மனிதர்கள் வேல், வில் போன்ற எளிய ஆயுதங்களைக் கொண்டு யானையைப் பிடிக்க முயன்றுள்ளனர். எவ்வளவு பெரிய ஒரு வேலையும் முதல் அடியில்தான் தொடங்குகிறது என்பதைப்போல யானையைப் பிடிக்கும் மனித முயற்சியின் ஆரம்பகட்டமாக இதுவே இருந்துள்ளது. இந்த தொடக்கநிலையை எடுத்துச்சொல்லும் வரலாற்றுச் சான்றாக, சித்திரக்கல் பொடவில் உள்ள ஓவியம் இருக்கிறது. யானைகளைப் பிடிக்க தொடர்ந்து சண்டையிட்டு, பல உயிர்களை இழந்த மக்கள், ஒருநாள் யானையை வீழ்த்திய சந்தோஷத்தில் வரைந்த ஓவியமாக இது இருக்கலாம். மனதுக்குள் இருந்த ஆவேசத்தின் வெளிப்பாடாகவோ அல்லது சந்தோஷத்தின் பிரதிபலிப்பாகவோ இந்த ஓவியத்தைக் கருதலாம்.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

இந்த ஓவியம் முக்கியமான செய்திகளை நமக்குச் சொல்கிறது. காட்டுக்குள் வேட்டை சமூகமாக மக்கள் இருந்த நிலையில், மதுரையில் அரசு ஒன்று உருவாகிவிட்டது. அந்த அரசின் தேவைக்காக யானைகளைப் பிடிக்கும் பொறுப்பு, காடுகளில் இருந்த பழங்குடி மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் யானையை வெல்லத் தொடங்கிவிட்டான். அதே நேரம் அரசுக்குக் கட்டுப்படவும் தொடங்கிவிட்டான். 'வீழ்ந்தது, சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த யானை மட்டுமா... அல்லது மனிதனுமா?’ என்ற விடை தெரியாத கேள்வியும் தோன்றிவிட்டது.

பாறையில் வரையப்பட்ட ஓவியம் சொல்லும் வரலாறு இது என்றால், பானை ஓட்டில் வரையப்பட்ட ஓர் ஓவியமோ கடல் கடந்த கதையைச் சொல்கிறது!

- ரகசியம் விரியும்...

- சு.வெங்கடேசன்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி,

ஓவியம்: ஸ்யாம்