மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 18 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம்படங்கள்: தே.சிலம்பரசன், ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா

ச்சர்யம்... 'அம்மா கேபினெட்’டில் பந்தாடப்படாத, துறை மாற்றப்படாத, கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன். அந்த அளவுக்குத் தன் துறையைச் சீரும் சிறப்புமாக வைத்திருக்கிறாரா?

   ஆரம்பமே அரசியல்தான்!

விழுப்புரம் சங்கராபுரம் வடக்கநந்தல் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மோகன். இவரின் அப்பா ஊரில் பெரிய மணியக்காரர். அந்த பந்தா, ஜபர்தஸ்து பார்த்துப் பழகியதாலோ என்னவோ, பி.ஏ படிக்கும்போதே மோகனுக்கும் அரசியல் ஆசை வந்தது. தி.மு.க மாணவர் அணியில் பரபரப்பாகச் செயல்பட ஆரம்பித்தார். பல்கலைக்கழகத்தில் மோகனுக்கு சீனியர், பொன்முடி. அவருடைய வழிகாட்டலில் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், பின்னர் அவரையே எதிர்த்து அரசியல் செய்தார்.

அரசியல் என்ட்ரிக்கு வாய்ப்புள்ள இடம் என்பதால், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் சேர்ந்தார் மோகன். ஆனால், படிப்பை முடிக்கும் வரைகூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஊருக்குத் திரும்பிவிட்டார். எம்.ஜி.ஆர் அப்போதுதான் கட்சி தொடங்கியிருந்த காலகட்டம். அ.தி.மு.க-வில் சேர்ந்தார். சின்ன சேலம் ஒன்றிய அமைப்பாளர், ஒன்றியச் செயலாளர் என கட்சியில் மோகன் உயரத் தொடங்கிய நேரத்தில், எம்.ஜி.ஆர்  மறைந்தார். அ.தி.மு.க இரண்டாக உடைய, 'ஜா’ அணியில் சேர்ந்தார். 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சின்ன சேலம் தொகுதிக்குக் குறிவைத்தே அந்த அணியில் சேர்ந்தார். அதற்காகவே பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தார். ஆனாலும், சின்ன சேலம் தொகுதி கிடைக்கவில்லை. நொந்துபோனவர், சுயேட்சையாகக் களமிறங்கி 10,546 வாக்குகள் பெற்றுத் தோற்றார். ஆனால், இவர் பிரித்த வாக்குகளால் 'ஜெ அணி’ வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இரண்டு அணிகளும் இணைய, அ.தி.மு.க-வில் கமுக்கமாக இருந்தார்.

மந்திரி தந்திரி - 18 !

தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி விவசாயம், கள்ளகுறிச்சியில் பிரின்டிங் பிரஸ் என பிழைப்பு ஓடியது. அப்போது மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர்செல்வத்துக்கும் சின்ன சேலம் ஒன்றியச் செயலாளர் பரமசிவத்துக்கும் இடையே ஈகோ யுத்தம்.  பரமசிவத்தை வீழ்த்த, மோகனை கொம்பு சீவிவிட்டார் பன்னீர்செல்வம். அவர் புண்ணியத்தில் பரமசிவத்தை வீழ்த்தி, மீண்டும் சின்ன சேலம் ஒன்றியச் செயலாளர் ஆனார் மோகன். அதன் பிறகு பன்னீர்செல்வம்தான், மோகனுக்கு அரசியல் குரு. சென்னை கோட்டூர்புரத்தில் வசித்துவந்த பன்னீர்செல்வம் வீட்டுக்கு வாராவாரம் அட்டெண்டன்ஸ் போடுவார். கிராமத்தில் விளைந்த காய்கறிகளைக் கொண்டுபோய்க் கொடுத்து 'ஸ்கோர்’ வாங்கினார். பன்னீரின் வீட்டில் டி.டி.வி தினகரன் அடிக்கடி தென்பட, அதை மோகன் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தினகரனுடனான தொடர்பு பெரும் தெம்பு தந்தது. ஒன்றியத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பரமசிவம், பின்னர் மாவட்டச் செயலாளர் ஆகியிருந்தார். அவரை இரண்டாவது முறையாக வீழ்த்தி, மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்தார் மோகன்... உபயம் டி.டி.வி தினகரன்.  

பதவியைப் பறித்த எஸ்மா!

தினகரனுடனான நட்பு இறுக்கமாகிவிட, 2001-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஸீட் வாங்கி 'மக்கள் பிரதிநிதி’ ஆகிறார். அடுத்தடுத்து லிஃப்ட் ஆனவருக்கு உச்சமாக அமைச்சர் பதவி ஜாக்பாட்டும் அடிக்கிறது. வனம், சுற்றுச்சூழல், கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளைக் கவனித்துவந்த மோகனின் பதவி, இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பதவிப் பறிப்புக்கு அவரது சொந்த அண்ணனே காரணம் ஆனார். அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா கொண்டுவந்த எஸ்மா, டெஸ்மா சட்டத்தை எதிர்த்து அரசுப் பள்ளி ஆசிரியரான மோகனின் அண்ணன் பாலசுப்ரமணி, பள்ளி ஒன்றுக்குப் பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அது புகைப்பட ஆதாரத்துடன் மேலிடத்துக்குப் போக, 'முன்னாள் அமைச்சர்’ ஆக்கப்பட்டார் மோகன். மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோனது. வீழ்த்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டபோதும் 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற அ.தி.மு.க வேட்பாளர் என்ற 'பெருமை’யைக் கட்சிக்கு வாங்கிக்கொடுத்தார் மோகன். பிறகு அடுத்தடுத்து தோல்விகள்... துவண்டுபோன மோகன், கட்சிக்காரர்களிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார்.

திடீர் விஸ்வரூபம்!

கட்சியில்தான் விலகி இருந்தார்; 'மன்னார்குடி மக்களுடனான’ தொடர்பில் அல்ல. மன்னார்குடி டச்சில் இருந்ததால், 2011-ம் ஆண்டு மூன்றாவது முறையாக ஸீட் கிடைத்தது. சட்டமன்ற உறுப்பினர், அரசு கொறடா, கூடவே மாவட்டச் செயலாளர் பதவியும் மோகனுக்குக் கை மாறியது. அப்போது மந்திரியாக இருந்த சி.வி.சண்முகம் மீது குற்றச்சாட்டுகள் எழ, 'எந்திரி’ என அவரை வெளியேற்றினார் ஜெயலலிதா. விளைவு, இரண்டாவது லட்டு தின்றார் மோகன். ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். அதன் பிறகு தொழிலாளர் நலத் துறையும் கூடுதலாகக் கிடைத்தது. கடந்த நான்கு வருடங்களாக மோகனின் வரலாற்றில் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி மட்டுமேதான்!

மந்திரி தந்திரி - 18 !

துறையில் சாதித்தது என்ன?

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையும் மோகன் வசம்தான் இருக்கிறது. இந்தத் தொழில் நிறுவனங்கள்தான் மாநிலத்தின்  பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகின்றன. சுமார் 9.68 லட்சம் நிறுவனங்கள் மூலம் 67,130 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. 63.18 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது. 6,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த முதலீடுகளில் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் துறை மீது அரசுக்குப் பெரிய அக்கறை இல்லை. சுலபக் கடன் வசதி, சாதகச் சூழல், தொழில்நுட்ப வசதி, சந்தைப்படுத்துதல், உள்கட்டமைப்புகள்... போன்ற ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ளும் இந்த நிறுவனங்களுக்கு, தீர்வு தரும் வழிவகைகளைச் சொல்லியிருந்தது 'தொலைநோக்குத் திட்டம்-2023’ அறிக்கை. ஆனால், அதைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. இந்த நிறுவனங்களுக்கான சிறப்புச் சலுகைத் தொகுப்பு  ஒன்றை சட்டமன்ற விதி 110-ன் கீழ் 2013-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார். 10 அறிவிப்புக்களை உள்ளடக்கியிருந்த அந்தச் சிறப்புச் சலுகைத் தொகுப்பு திட்டம் என்னவாயிற்று அமைச்சரே?

கடுமையான மின்வெட்டு, அதிக வட்டி, கடன் கிடைக்காமை போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் சுமார் 44 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் நலிவடைந்திருக்கின்றன. ஊறுகாய், ரொட்டி, மெழுகுவத்திகள், சலவை உப்பு, தீப்பெட்டி, பட்டாசு, ஊதுவத்தி, கண்ணாடி வளையல், மரச் சாமான்கள், அலமாரிகள், அலுமினியப் பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள், பதிவேடுகள் உள்பட 20 பொருட்களை சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அரசாணை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. சிறு, குறு தொழில்களை, பன்னாட்டு நிறுவனங்கள் கபளீகரம் செய்வதற்கு, பா.ஜ.க அரசு வாசலை திறந்துவிட்டதுகூடத் தெரியாமல் இருக்கிறார்  அமைச்சர் மோகன். வேளாண்மைத் தொழிலுக்கு அடுத்தபடியாக சிறு தொழில்கள் மூலம்தான் லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிலுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைக் களையவேண்டிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர், வேண்டாத வீட்டில் விருந்துக்கு வந்ததுபோல விட்டேத்தியாக இருக்கிறார்!

தொழிலாளர் துறை!

நீடித்த தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவது தொழிலாளர்கள்தான். இவர்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கிறது தொழிலாளர் துறை. 45-வது இந்தியத் தொழிலாளர் மாநாடு டெல்லியில் நடந்தபோது தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்ட மோகன், 'உரிய நேரத்தில் சமரச அலுவலர்கள் தலையிடுவதால், தமிழ்நாட்டில் வேலைநிறுத்தம், கதவடைப்பு ஆகியவை இல்லை’ எனச் சொல்லிக்கொண்டார். ஆனால், அது 'முழுப் பூசணியில்... சோறு’ கதை.  நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டன. அந்த நிறுவனங்களில் வேலைபார்த்த தொழிலாளர்களுக்காக தொழிலாளர் நலத் துறை, இது வரை என்ன செய்தது என்பது அமைச்சரின் மனசாட்சிக்கே வெளிச்சம். தொழிற்சாலைகளின் சட்டவிரோதக் கதவடைப்பை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் மீது, போலீஸ் பொய் வழக்குகள் போட்டு உள்ளே தள்ளுகிறது எனக் குமுறுகிறார்கள் ஊழியர்கள்.

தொழிலாளர் பிரச்னையின் இன்னொரு முகம், குழந்தைத் தொழிலாளர்கள். தெய்வத்தோடு குழந்தையை ஒப்பிடும் தமிழ்நாட்டில்தான் குழந்தைத் தொழிலாளர்கள் மிக அதிகம். கொத்தடிமைகளைவிட மோசமாக நடத்தப்படும் குழந்தைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க சட்டம் எல்லாம் இருந்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாமல் இருக்கிறது அரசு. வீட்டைவிட்டு வீதிக்கு வந்தால் கடைக்குக் கடை எத்தனை குழந்தைத் தொழிலாளிகள் நம் கண்ணில் படுகிறார்கள். இது, சிவப்பு விளக்கு சுழலும் காரில் போகும் மோகன் கண்களுக்கு மட்டும் இது தெரியாமல் போவது ஏன்?

அலைக்கழிக்கும் வேலைவாய்ப்புகள்!

2014-ம் ஆண்டு கணக்குப்படி அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வேலைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 84.78 லட்சம். 6 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் மோகன். அரசு காலிப் பணியிடங்கள் அதிகரித்துகொண்டே போனாலும், அதை நிரப்புவதற்கான முயற்சிகள் பெரிய அளவில் நடைபெறவில்லை.

மந்திரி தந்திரி - 18 !

ஜெயலலிதா எம்.எல்.ஏ-வாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை பிரமாண்டமாக நடத்தினார்கள். மற்ற மாவட்டங்களில் முகாம்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நடத்தப்படவில்லை.

22 இடங்களில் புதிதாகத் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அடுத்த தேர்தலே வரவிருக்கிறது... இன்னும் பல தொழிற்பேட்டைகள் கட்டுமான வேலைகள்கூட முழுமை அடையாமல்தான் இருக்கின்றன.

பிறகு என்னதான் செய்கிறார் மோகன்? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புஉணர்வு ஊர்வலத்தைத் தொடங்கிவைப்பார். டெல்லியில் நடக்கும் தொழிலாளர் நல மாநாட்டில் பங்கேற்பார். பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கிவைப்பார். இவை மட்டும்தான் ஓர் அமைச்சரின் வேலையா? சாதிக்காமல்போனால் மந்திரியும் கொலுபொம்மைதானே!

சிரிக்கிறாரா...முறைக்கிறாரா!

• மோகனின் மகன் 'அரசியலே வேண்டாம்’ என ஒதுங்கி, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதனால் மோகனின் அண்ணன் பாலசுப்ரமணியும் அவருடைய மகன் முருகனும்தான் மோகனின் லெஃப்ட் அண்ட் ரைட். விழுப்புரம் மாவட்டத்துக்குள் கான்ட்ராக்ட், டெண்டர் ஆகியவை இவர்கள் கண் அசைவு இல்லாமல் நடக்காது.

•  கட்சிக்காரர்களைக் கண்டுகொள்ளாத அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு அதிக மரியாதை கொடுப்பார். சுப, துக்க நிகழ்ச்சிகளில்கூட கட்சிக்காரர்கள் வீடுகளில் அதிகம் தலைகாட்ட மாட்டார்.

•  மோகன் பாக்கெட்டில் இருந்து கரன்சி வெளியே வராது. ஜெயலலிதா விடுதலைக்காக நடந்த யாகம், பூஜைகள் எதற்கும் மோகன் செலவு செய்யவில்லையாம். 'நாங்கள் செலவுசெய்து நடத்திய யாகத்தில் பங்கேற்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் மோகன்’ எனப் புலம்புகிறார்கள் கட்சிக்காரர்கள். ஆனால், அமைச்சரை அழைக்காமல் விழாவோ நிகழ்ச்சியோ நடந்தால், அது ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகாது!  

மந்திரி தந்திரி - 18 !

•  கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில், தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை தன்  சாதிக்காரர்களுக்கு மட்டுமே குத்தகைக்குவிட்டார் எனப் புகார். கச்சிராப்பாளையம் சர்க்கரை ஆலையில் உள்ள 17 உறுப்பினர்களில் 10 பேர் மோகன் சமூகத்தைச் சேர்ந்தவர்களாம்.  

•  மோகனின் சொந்த ஊரில்கூட அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்கு இல்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வடக்கநந்தல் பேரூராட்சி நான்காவது வார்டில், சொற்பமாக ஒன்பது வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் தோற்றுப்போனார். அந்த நான்காவது வார்டில்தான் மோகனின் வீடு இருக்கிறது. 'உங்க குடும்பத்தினர் ஓட்டு போட வந்திருந்தால்கூட, அ.தி.மு.க ஜெயித்திருக்கும்’ என மோகன் வீட்டு முன் புலம்பிச்சென்றார் தோற்ற வேட்பாளர்.

•  'சிரிக்கிறாரா... முறைக்கிறாரா..?’ எனக் கணிக்க முடியாத அளவுக்கு உணர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பார் அமைச்சர். அட, அமைச்சர் நாத்திகரா... ஆத்திகரா என்றுகூடக் கண்டுபிடிக்க முடியாது. காவடி எடுப்பது, தீச்சட்டி தூக்குவது, மண்சோறு சாப்பிடுவது என 'தலைவி விடுதலையாகவேண்டி’ எதுவும் செய்தது இல்லையாம். வேறு வழியே இல்லாததால் அப்போதைக்கு கோயில் கோயிலாக ஏறி இறங்கினார். ஜெயா டி.வி-க்கு போஸ் கொடுக்கும் வரை அமைச்சர் நெற்றியில் திருநீறு இருக்கும். காருக்குள் ஏறிவிட்டால், காணாமல் போய்விடும்.  

•  கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல வருடங்களாக பேசப்பட்டுவருகிறது. ஆனால், அதற்காக அமைச்சர் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட்டது இல்லை.

•  ஓர் அமைச்சராக மோகன் நினைத்திருந்தால், பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, சிறு குறு தொழில்களைக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், கடந்த நான்கு வருடங்களாக எந்தப் புதிய தொழிற்சாலையும் விழுப்புரத்தில் முளைக்கவில்லை.

•  அமைச்சரின் 'பொலிட்டிக்கல் பி.ஏ’ குணசேகரன். அவர், தன் தம்பியைக் கொலைசெய்ததாகக் கைதாகி சிறைக்குப் போனவர். அந்த வழக்கு இன்னும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.  

ஃபாஸ்ட்ஃபுட், பட்டாசு ஆலைகள், செங்கல் சூளை, துணிக்கடைகள், கட்டுமானப் பணிகளில் குறைந்த ஊதியத்தில், வார விடுமுறைகூட இல்லாமல் 12 மணி நேரத்துக்கு மேல் வதைபடுகிறார்கள் குழந்தைத் தொழிலாளர்கள். அவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வளிக்கும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்பது தொடர்பான ஆயிரக்கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக 'பெருமை பேசுகிறார்’ மோகன்!

மந்திரி தந்திரி - 18 !

இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் எண்ணிக்கை 83,348. அடுத்த வருடம் இது 1,16,393 என அதிகரித்த போதும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. முந்தைய வருடம் 5,83,436 பேர் வேலைவாய்ப்பு பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு 4,94,990 எனக் குறையத்தான் செய்தது!

மந்திரி தந்திரி - 18 !

அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தைத் தாண்டி எகிறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் அரசாங்கத்தில் காலிப் பணியிடங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இரு துருவங்களையும் இணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்படவே இல்லை!  

மந்திரி தந்திரி - 18 !