எண்ணம், வண்ணம். சந்தோஷ்நாராயணன்

பிரமாண்டமாக, அசைவற்று நின்றிருந்த ரோபோவைக் காட்டி, புரொஃபசர் மனாஸ், 'இதன் பெயர் ப்ரஹ். இது வெறும் ரோபோ அல்ல. உன்னை மாதிரி ரோபோக்களை உருவாக்கும் மதர் சிஸ்டம்' என்றார், பக்கத்தில் நின்றிருந்த குட்டி மஞ்சள் நிற ரோபோவிடம்.
கூடவே, 'இதன் தலைப்பகுதியில் இருந்து உருவானவன் நீ...' என்றார். மஞ்சள் ரோபோ புரொஃபசரை ஏறிட்டுப் பார்த்தது.
'தெரியும்... இதன் நெஞ்சில் இருந்து கருஞ்சிவப்பு, வயிற்றில் இருந்து வெள்ளை, காலில் இருந்து கடும் நீலம் என வெவ்வேறு வண்ணங்களில் ரோபோக்கள் உருவாகின்றன அல்லவா?' என்றது மஞ்சள் ரோபோ.
'ஆம்’ எனத் தலையசைத்தார் மனாஸ்.
'ஆனால், எங்கள் எல்லோருடைய பாடி மெட்டபாலிசமும் ஒன்றுதான். இப்படி வண்ணங்களை மாற்றி, எங்களை ஏமாற்றி நீங்கள் அடைவது என்ன?'

புரொஃபசர் மஞ்சள் ரோபாவை உற்றுப் பார்த்து, 'என்னுடைய இந்த அறிவியல் நகரம் என் கட்டுப்பாட்டில் இருக்க, இந்த வகைப்பாடுகள் தேவையாக இருக்கின்றன. உண்மையைச் சொல்லட்டுமா? இந்த ப்ரஹ் இல்லை என்றாலும் நீங்கள் உருவாகிவருவீர்கள். வெறும் வண்ணம் அடிக்கும் வேலையைத்தான் இந்த ப்ரஹ் செய்கிறது. நீ மஞ்சள் ரோபோவாக இருப்பதால், உன்னிடம் இதைச் சொல்கிறேன். ஆமாம், உனக்கு என்ன குறை... எல்லா அழுத்தங்களும் கடும் நீல நிற ரோபோக்களுக்குத்தானே' என்றார்.
சட்டென மஞ்சள் ரோபோ, ப்ரஹ் என்னும் அந்தப் பிரமாண்ட ரோபோவை அசைத்துத் தள்ளியது. ஒரு பெரிய கட்டடம்போல அது விழுந்து நொறுங்கிய அதிர்வு, காற்றாக அடித்தது. மனாஸ் நடுங்கியபடி அந்த மஞ்சள் ரோபோவைக் கவனித்தார். அதன் மஞ்சள் நிற சிலிக்கான் ஸ்கின், அடித்த காற்றின் அதிர்வில் இளகி, உதிர்ந்து பறந்தது. உள்ளே கடும் நீல நிறம் தெரிந்தது!
'கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு...’ எனப் பாடுவார் போல தென்கொரியாவைச் சேர்ந்த கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட் தேஹ்யூன் கிம் (Daehyun Kim) . அவருடைய ஓவியங்கள் முழுக்க முழுக்க கறுப்பு வண்ணத்தால் ஆனவை.
இங்க், பென், மார்க்கர், பேப்பர்... இவைதான் கிம்மின் உபகரணங்கள். இவற்றை வைத்துக்கொண்டு உலகக் கலை ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் கிம். வழக்கமான நவீன ஓவியர்கள்போல முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியைப் பின்பற்றவில்லை. சீயோலில் ஓவியக் கல்லூரியில் கிழக்கு ஆசியக் கலைகள் பற்றிய பாடத்தைப் பயின்றுவிட்டு, தங்கள் பாரம்பர்ய ஓவிய முறையை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டுசெல்கிறார். அமெரிக்க இல்லஸ்ட்ரேட்டர்களுடன் ஒரு குரூப் ஷோ வைத்து பிரத்யேகக் கவனம் ஈர்த்திருக்கிறார் கிம்.
'இது என் லைஃப்டைம் புராஜெக்ட்’ என இந்தக் கறுப்பு வண்ண ஓவியங்களைக் கை காட்டுகிறார். இந்த ஓவிய கலெக்ஷன்களுக்கு இவர் வைத்திருக்கும் பெயர் 'மூனாஸி சீரிஸ்’. மூனாஸி என்றால் 'அடையாளம் அற்றவர்கள்’ என விளக்கம் சொல்கிறார்.

'ஏன் கறுப்பு?’ என்றால், 'அதற்கெனப் பிரத்யேக, பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. சிம்பிளாகச் சொல்ல வேண்டுமானால், பிளாக் இங்க் உபயோகிக்கிறேன். கறுப்பு, ஆழமான, அடர்த்தியான, அழகான வண்ணம். அதனால்கூட இருக்கலாம்’ என்கிறார்.
'ஓவியத்தில் திரும்பத் திரும்ப வரும் இந்த உருவங்கள் யாருடையவை?’ எனக் கேட்டால், 'எந்த உணர்ச்சியையும் காட்டாத இந்த முகங்களை, நான் பௌத்தப் பாரம்பர்ய ஓவியங்களில் இருந்து எடுத்துக்கொண்டேன். காரணம், அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை, பார்வையாளர்களின் கற்பனைக்கு விட்டுவிடுவதே என் எண்ணம்’ என்கிற கிம், 'அதனால்தான் நான் வேண்டுமென்றே உருவங்களுக்கு பால் வேற்றுமையோ பின்னணியோ கொடுக்காமல் அப்படியே விட்டுவைக்கிறேன்’ என முடிக்கிறார்.

கிம்மின் கறுப்பு ஓவியங்கள் சொல்லும் வெள்ளைச் செய்தி இதுதான்... அடையாளம் இழந்தவர்களின் வலி!
வேலைகளை மறக்காமல் செய்ய, குறிப்பு எழுதி மஞ்சள் நிற 'போஸ்ட்இட்’ நோட்களை எங்கேயாவது ஒட்டிவைக்கிறோம். ஒட்டிய போஸ்ட்இட்களையே மறந்துபோகும் கஜினிகளை மறந்துவிட்டு அடுத்த வரிக்குப் போகலாம்.

கடந்த 30 வருடங்களாக உலகமே உபயோகித்துவரும் இந்த வகை போஸ்ட்இட் நோட்களின் கண்டுபிடிப்பு ஒரு 'விபத்து’ எனச் சொன்னால், நான் நம்புகிறேன்... காரணம், அதன் கதை.
'3M’ என்பது அமெரிக்காவில் ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம். 1968-ம் ஆண்டில் அங்கு வேலைசெய்த வேதியியல் விஞ்ஞானி ஸ்பென்சர் சில்வர், அதிரடியான ஓர் ஆராய்ச்சியில் இருந்தார். ஏரோபிளேன் கட்டுமானத்துக்குத் தேவையான, ஒரு சூப்பர் ஸ்ட்ராங் பசையைக் கண்டுபிடிப்பதே அவர் புராஜக்ட். ஆனால், முடிவோ... தலைகீழ். பசையின் ஃபார்முலா ஊத்திக்கொள்ள, அவருக்குக் கிடைத்ததோ உலகின் அதி'வீக்’கான பசை. உரித்து எடுத்தால் ஒட்டிய தடம்கூட இல்லாமல் பிரிந்துவரும். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல, அந்தப் பசைக்கு ‘Acrylate Copolymer Microspheres’ என கெமிக்கல் பெயரும் வைத்தார். அதை மார்க்கெட் பண்ணும் மார்க்கம் தெரியாததால், கடுப்பில் கம்பெனி கண்டுகொள்ளவே இல்லை.
சிலபல வருடங்களுக்குப் பிறகு சில்வரின் பணித் தோழர் ஆர்தர் ஃப்ரை, ஒரு மாற்று யோசனையுடன் வந்தார். தன் பைபிள் வகுப்பின் இசைக்குறிப்பு நோட்டில், எழுதி வைத்த குறுங்காகிதங்கள் நழுவி விழாமல் இருக்க, இந்த வீக்கான பசையை லேசாகப் போட்டால் போதும் என்பதுதான் அது. இசைக்குறிப்புக்கே இப்படி என்றால், உலகில் பல்லாயிரம் பேர் தினம் தினம் ஏதாவது குறித்து எளிதாக எங்கேனும் ஒட்டிவைக்க, காரியம் முடிந்ததும் கழற்றி, கசக்கி குப்பையில் போட, இந்த வீக் பசை தடவிய துண்டு காகிதங்களைப் பயன்படுத்தலாமே எனத் தோன்றியது இருவருக்கும். 3M முடன் விவாதித்து மார்க்கெட்டை டார்கெட் செய்து, அடுத்து வந்த ஐந்து வருடங்களில் உலகமே அதை உபயோகிக்கும்படி மாற்றிவிட்டார்கள். இன்றைய தேதிக்கு உலகம் முழுக்க விற்பனையாகும் ஐந்து ஆபீஸ் உபயோகப் பொருட்களில், இந்த மஞ்சள் நிற போஸ்ட்இட்களும் ஒன்று.
இன்னும் ஒரு சந்தேகம்... 'ஏன் மஞ்சள்?’ கேட்டால், 'அதுவும் ஒரு விபத்துதான். 'போஸ்ட்இட்களைக் கண்டுபிடித்த நாளில் எங்கள் லேபில் ஸ்டாக் இருந்தது மஞ்சள் நிற பேப்பர் மட்டுமே. அவசரத்துக்கு உபயோகித்தோம். ஆனால், அதுவே ஹிட் ஆகிருச்சு’ என்கிறார் சில்வர். 'நீங்க ஒரு 'விபத்து விஞ்ஞானி பாஸ்’ என ஒரு போஸ்ட்இட்டில் எழுதி, அவருக்கு போஸ்ட் செய்யலாம் என்றிருக்கிறேன்!

நீங்கள் காதலித்திருப்பீர்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த இடத்தில் நான் சொல்கிறேன்... உங்கள் காதலரின் உடலுக்காக அதாவது அவரோடு பாலுறவுகொள்வதற்காக, உங்கள் சந்ததிகளைப் பெருக்கிக்கொள்வதற்காக அதாவது இந்த மனித இனம் தழைத்திருக்க உடலின் சுரப்பிகளும் மூளையும் போடும் வேதியியல் நாடகம் மட்டும்தான் 'காதல்’ என்பது. இப்படித்தான் அறிவியல் சொல்கிறது. இதை ஒப்புக்கொள்கிறீர்களா? நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்படித் தர்க்கபூர்வமாக, அறிவியல்பூர்வமாக எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, 'அடடா இவ்வளவுதான் மேட்டரா?’ எனத் தெளிந்த பின்னும், நாளையோ அதற்கு மறுநாளோ உங்கள் காதலரைச் சந்திக்கும்போது, ஏதோ ஒன்று மெள்ள 'நுரை ததும்பி’ உங்களில் நிறையும்... அது என்ன?
கண்டிப்பாக அறிவோ தர்க்கமோ அல்ல... அது உணர்வு. இந்த உணர்வுதான் இயற்கையின் விருப்பமாக இருக்கிறது என யோசிக்கவைத்தது, நான் படித்த ஒரு இயற்கையியல் புத்தகம். 'முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’. ஆசிரியர், ம.செந்தமிழன்.
புத்தகத் தலைப்பைக் கவனியுங்கள். மரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும் என்பது நாம் அறிந்த லாஜிக். ஆனால், ஆதி பூமியில் மரங்கள் உருவாவதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே மழை பெய்துகொண்டிருந்தது. அது இயற்கையின் விருப்பம் என்னும் உணர்வு. அந்த விருப்பத்தின் துளிகள்தான் விலங்குகள், மனிதர்கள், மரங்கள்.
மனிதன் மட்டுமே இயற்கையின் மையம் அல்ல என்ற பேருண்மையை உணர்ந்துகொள்வோம் நாம்!
80-களில் இளைஞர்களாக (இளைஞிகளாக) இருந்தவர்களுக்கு டைப்ரைட்டர்களின் 'கட் கட கட் கட்’ என்ற சத்தம் நினைவில் இருக்கும். சிறுவர்களாக இருந்த எங்களுக்குக் கூடவே அந்த நீல கார்பன் பேப்பரும்.

நம் ஊரில் பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச் சென்ற கொடைகளில் ஒன்று டைப்ரைட்டர் மெஷின். 90-களின் கடைசி வரைக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையில் டைப்ரைட்டிங் வகுப்புகளுக்குப் போனவர்களைப் பார்த்திருக்கிறோம். அது சுத்த வேஸ்ட் இல்லை. டைப்ரைட்டர் கற்றுக்கொண்டவர்கள், பிற்காலத்தில் கம்ப்யூட்டர் கீ-போர்டில் டி.டி.பி கொடி நாட்டினார்கள்.
டைப்ரைட்டர் இன்ஸ்டிட்யூட்களுக்கும் ரொமான்ஸுக்கும், பேப்பரும் மையும்போல பிரிக்க முடியாத பந்தம். குட்டிக்குரா பவுடர் அடித்துக்கொண்டு பூப்போட்ட சட்டையுடன், உள்ளூர் இன்ஸ்டிட்யூட்களைச் சுற்றிவரும் பல 'மோகன்’களை அண்ணன்களின் உருவில் பார்த்திருக்கிறேன். எல்லோரையும் 'விதி’ மோகன்கள் எனச் சொல்ல முடியாது. சிலர் வேறு படங்களில் வரும் மோகன்களைப்போல உருகி உருகிக் காதல் செய்பவர்கள்.
டைப்ரைட்டரைப் பார்க்காதவர்கள்கூட, அதைப் படிக்கப்போனவர்களைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள். டைப்ரைட்டர் மட்டும் அல்ல, கூடவே ஷார்ட்ஹேண்டும் படிப்பார்கள். சினிமாவில் வரும் சி.ஐ.டி-களின் ரகசியக் கோடுகள்போல புரியாத மொழியில் இருக்கும் அதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். அந்த நோட்டுப் புத்தகங்களை எல்லாம் 'அணைத்து’க்கொண்டும், மழையோ வெயிலோ இல்லை என்றாலும் கூடவே ஒரு குடையையும் எடுத்துக்கொண்டும் ஒய்யாரம் பழகும் (மாருதியின் ஓவியங்களில் வருவதுபோல) தாவணி அக்காக்கள் ஞாபகத்தில் நடை பயில்கிறார்கள்!
கடாசிய கார்பன் பேப்பர்களை எடுத்து, கலை வளர்த்த சம்பவங்களின் நீலக் காப்பி இன்றும் நினைவில் பதிந்திருக்கிறது. கம்ப்யூட்டருக்கு வழியைவிட்டு முதுபாட்டிகள்போல இன்று நமது ஞாபக மேஜையில் சத்தம் இல்லாமல் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கின்றன டைப்ரைட்டர்கள். Carriage return.