Published:Updated:

இன்குலாப்... புரட்சியின் வீரிய விதைநெல்! நினைவுதினப் பகிர்வு

இன்குலாப்... புரட்சியின் வீரிய விதைநெல்! நினைவுதினப் பகிர்வு

இன்குலாப்... புரட்சியின் வீரிய விதைநெல்! நினைவுதினப் பகிர்வு

Published:Updated:

இன்குலாப்... புரட்சியின் வீரிய விதைநெல்! நினைவுதினப் பகிர்வு

இன்குலாப்... புரட்சியின் வீரிய விதைநெல்! நினைவுதினப் பகிர்வு

இன்குலாப்... புரட்சியின் வீரிய விதைநெல்! நினைவுதினப் பகிர்வு

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்...

மனுசங்கடா நாங்க மனுசங்கடா..!

உன்னப்போல அவனப்போல எட்டு சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா..!

- கவிஞர் இன்குலாப்.

இவர், ஆதிக்கத்துக்கு எதிராக ஆவேசக் குரலெழுப்பிய மக்கள் கவிஞன். காணும் காட்சிவெளிகளையும், தனிமனித அறங்களையும் மட்டுமே வர்ணனை செய்துவந்த கவிஞர்களுக்கு மத்தியில், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் எழுதுகோலில் புரட்சி மையை ஊற்றியவர். இந்தச் சமூகத்தில் எந்தெந்தப் பிரச்னைகளை எல்லாம் முற்போக்குவாதிகள் பேச மறந்தார்களோ, தயங்கினார்களோ அவற்றையெல்லாம் மக்களிடையே கொண்டுசேர்த்த கவிஞர் இன்குலாப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் இன்குலாப். இவரது இயற்பெயர் சாகுல்ஹமீது. மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்த இன்குலாப், படிப்பு முடித்து சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், நா.காமராசன் போன்ற தன்னுடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து காத்திரமாகப் போராடியவர். தி.மு.க ஆதரவாளராக இருந்தவர், பிறகு மார்க்சிய சித்தாந்தத்தில் இயங்கினார்.

கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் எரிக்கப்பட்டபோது வெகுண்டெழுந்து அவர் இயற்றிய கவிதைகள், ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களுக்கு இன்று வரை புரட்சிகீதமாக முழங்குகிறது. எப்போதும் தான்கொண்ட கொள்கையில் சமரசமின்றி வாழ்ந்தவர். `பலகாலமாக நீதி, நெறி என நம்மிடையே சாஸ்திரங்கள் வழியாகவும், கல்வியின் வழியாகவும் புகுத்தப்பட்ட `துருப்பிடித்த குப்பைகளை' நாம் களைய முற்பட வேண்டும்' என முற்போக்குக் கருத்துகளை மேடைகளில் அழுத்தத்துடன் எடுத்துரைத்தவர். ``மக்களுக்குள் இருக்கும் அச்ச உணர்வுதான் அவர்களை அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்பவிடாமல் தடுக்கிறது. குரல்கொடுக்காதவர்கள் எல்லோரும் அநீதிக்குத் துணை போகிறவர்கள் அல்ல, அச்சமுடையவர்கள்'' எனக் கூறுவார். ``நம்மால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், வலிக்குமே என்ற அச்சத்தைத்தான் தாங்கிக்கொள்ள முடியாது'' எனக் குறிப்பிடுவார். மார்க்சிய லெனினிச அமைப்புகளில் இயங்கிய காலகட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இயங்கியவர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரில் சென்று சந்தித்து வந்தார். 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடந்த இன அழிப்பைக் கண்டித்து, தமிழக அரசு தனக்கு வழங்கிய கலைமாமணி விருதையும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் திருப்பி அளித்தார். 

பொது வெளிகளில் ஒரு வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்வில் தன் கொள்கைக்கு சற்றும் பொருத்தமில்லாத வாழ்க்கையையும் வாழ்ந்துவருபவர்களுக்கு மத்தியில், நேர்பட வாழ்ந்த பெருமைக்குரியவர். இறை நம்பிக்கைமேல் பற்று இல்லாத இன்குலாப், தன் முதல் மகனுக்கு `செல்வம்' எனப் பெயர் சூட்டினார். தன் இரண்டாவது மகனுக்கு `இன்குலாப்' எனப் பெயர் சூட்டி தன்னையே தனக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார்.

தன் படைப்புகளை, துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவின் வீரியத்துடன் படைத்தவர். தனது எழுத்துகள், நியாயங்களை நோக்கிய கேள்வியின் சாரம் என தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். இவரது அனைத்து கவிதைகளும் அடங்கிய  `ஒவ்வொரு புல்லாய்' என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது. `குரல்கள்', `துடி', `மீட்சி' என்ற மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். தான் எழுதிய கவிதைகளைப் பற்றி ஒரு கவிதை இயற்றியுள்ளார். அது,

`எழுதியதெல்லாம்

மொழிபெயர்ப்புதான்.

இளைஞர் விழிகளில்

எரியும் சுடர்களையும்,

போராடுவோரின்

நெற்றிச் சுழிப்புகளையும்

இதுவரை கவிதையென்று

மொழிபெயர்த்திருக்கிறேன்.'

`இலக்கியம் என்பது என்ன?' என்ற ஒரு கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

``இலக்கியம் என்பது, ஒரு கலை. அதனால், கலைத்தரத்தில் மேம்பட்டதாக இலக்கியம் இருக்க வேண்டும். பொறுப்பு உணர்வுடன் செய்யும் இலக்கியங்கள்தான் சமூகத்துக்கு அதனுடைய இலக்கியச் சுவையுணர்வை வளர்ப்பதிலும் மனித உணர்வுகளை மேம்படுத்துவதிலும் உதவும். ஒரு கலையின் மூலம் கலைஞன் சுயஅனுபவங்களை மட்டுமல்ல, சமூக அனுபவங்களையும் சொல்லிச் செல்கிறான். அந்தவிதம் சொல்வதே அவனது கடமை. கவிஞர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம்குறித்து பாரதியைப் பற்றி எழுதிய கவிதை ஒன்றில் `வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரையும், பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரையும் அரசு அங்கீகரிக்கும்' என எழுதியிருப்பார்.

மக்களின் பிரச்னைகளுக்காக குறைந்த அளவு மக்கள் மட்டுமே போராட்டங்களில் பங்குபெறுவது பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது, ``விதை நெல் குதிர்குதிராக நிரம்பி வழியாது. விதைநெல் அளவாகத்தான் இருக்கும்'' என்றார். தன் வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் தான்கொண்ட கொள்கையில் விலகாமல் நெறியுடன் வாழ்க்கையை வாழ்ந்தவர் இன்குலாப். அவர் இறந்தபிறகு அவரது விருப்பப்படி அவர் உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுத்தனர் அவரது குடும்பத்தினர். இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், இலங்கைத் தமிழர் போராட்டம் என எல்லா தரப்பு மக்களுக்காகவும் போராடியவர். தன் படைப்புகளின் வழியே போர்க்குணத்தைக் கடத்தியவர். மகத்தான கலைஞர்களாக வாழ்வதல்ல, மக்களுக்கான கவிஞராக வாழ்வதே வாழ்க்கை என்பதை வாழ்ந்துகாட்டியவர் இன்குலாப்.  

சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளி தோன்றும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதன் என்றொரு பாடலை இசைப்பேன்.

- கவிஞர் இன்குலாப்.

இன்குலாப் என்றால், புரட்சி என்று பொருள். புரட்சிக்கு ஏது மரணம்? சமூகநீதி மேடைகளில் முழங்கும் `மனுசங்கடா நாங்க மனுசங்கடா!'  பாடலில் எப்போதும் வாழ்ந்துகொண்டே இருப்பார் இன்குலாப்!