ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 200

சுத்தத்துக்கு `லீவு’ விடாதீர்கள்!
சமீபத்தில், பேரன் அட்மிஷன் விஷயமாக ஒரு தனியார் பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு மணி நேரம் காத்திருந்து, அட்மிஷன் முடிந்தது. என் பேரன் பாத்ரூம் போக வேண்டும் என்றதால், பள்ளியில் இருந்த டாய்லெட் பக்கம் அழைத்துப் போனேன். `ஏன் போனோம்?’ என்றாகிவிட்டது.
அந்தளவுக்கு அசுத்தமாக இருந்தது; துர்நாற்றம் தாங்கமுடிவில்லை. கர்ச்சீஃபால் மூக்கைப் பிடித்துக்கொண்டே போன பேரன், யூரின் போகாமலேயே வந்துவிட்டான். பள்ளி நடைபெறும் நாட்களில் மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? விடுமுறை நாட்களிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா? கலெக்ஷனில் குறியாக இருக்கும் பள்ளி நிர்வாகங்கள் சுத்தத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்!
- பிரேமா சாந்தாராம், சென்னை-110

அநாவசிய பேச்சு... அவஸ்தை!
உடல் நலம் சரியில்லாத உறவினரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அப்போது அவரை `டிஸ்சார்ஜ்’ செய்யும் நேரம் என்பதால், அவருடன் காரில் பேருந்து நிலையம் வரை வந்தோம். வரும் வழியில் உறவினர் வேகமாக ஓவர் டேக் செய்து செல்லும் வாகனங்களைத் திட்டிக்கொண்டே வந்தார். மோசமான சாலை விபத்துகளை பற்றியே விலாவாரியாக பேசிக்கொண்டு இருந்தார். அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த டிரைவர், `சார், வண்டியை ஒழுங்கா ஓட்டணும்னா நல்ல விஷயங்களைப் பேசுங்க. இப்படி ஆக்ஸிடென்ட் சமாசாரங்களைப் பேசிக்கிட்டே இருந்தா, வண்டி ஓட்டுபவரின் மனம் சஞ்சலப்படும்... இதனால உங்களுக்கும்தான் ரிஸ்க்’ என்று கூற, உறவினர் ‘கப்சிப்’ ஆனார்.
`இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது எப்போதுமே... குறிப்பாக, சாலை பயணங்களின்போது மிகவும் அவசியம்’ என்பதை உணர்த்திய அந்த டிரைவருக்கு ஒரு சல்யூட்!
- என்.குர்ஷித், நெல்லை

வேண்டாமே... அந்தக் கேள்வி!
நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் முதல் சில நாட்கள் பேசவோ, பழகவோ இல்லை; புன்னகையோடு சரி. பிறகு, ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி ‘நீங்க என்ன ஆளுக?’ என்பதுதான். விசாரிக்க வேண்டியவை எத்தனையோ இருக்க, ‘என்ன சாதி’ என்பதை அறியவே ஆர்வம் காட்டினர். நான் எனது சாதியை சொல்லவில்லை. நான் அவர்களிடம், ‘’என்னோட சாதியை சொன்னால்தான் என்னுடன் பழகுவதாக இருந்தால் நீங்கள் என்னோடு பழக வேண்டாம்” என்றேன், கண்டிப்புடன்! பிறகு சமாளித்துக்கொண்டு பேச முன்வந்தனர்.
படிக்கும் இடத்தில், பணிபுரியும் இடத்தில் ஒருவரின் சாதியை நேரடியாகக் கேட்பது பிற்போக்கான பண்பு என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம்!
- திவ்யா, மதுரை

மரியாதை... இரு வழி பாதை!
சமீபத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்தில், கும்பலாக உட்கார்ந்து திருமணம் நிச்சயம் ஆகிவிட்ட ஒரு பெண்ணைக் கலாய்த்துக்கொண்டிருந்தோம். உறவுப் பெண் ஒருத்தி மிகவும் கலகலப்பாக பேசி, சிரித்து மகிழ... அவளுடைய கணவர் இடையில் நுழைந்து, ``போதும்! ஓவரா பேசி, சிரிச்சி பிரச்னையில முடிக்காதே!’’ என்று எல்லோர் முன்னிலையிலும் கடுகடுத்தார். அந்தப் பெண் முகம் அமாவாசை வானம் போல் இருண்டது.
மரியாதை என்பது இருபாலருக்கும் பொருந்தும். மனைவி பேசிய விதத்தில் உடன்பாடு இல்லையென்றால், தனியாக இருக்கும்போது எடுத்துக்கூறுவதை விட்டுவிட்டு, சபையில் அவமானப்படுத்துவது என்ன நியாயம்? இது போன்ற கணவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். `குட்டக் குட்ட குனிகிறாள்' என்று நினைத்துவிடாதீர்கள்; நிமிர ஆரம்பித்தால், உங்கள் நிலை என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். மனைவியை மதியுங்கள்... அதுதான் உங்களுக்கும் நல்லது!
- ராஜேஸ்வரி, சென்னை-82
ஓவியங்கள்: சேகர்