கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்விகடன் டீம், படங்கள்: ஜி.வெங்கட்ராம்
ராகவா லாரன்ஸின் நல்ல கனவு நனவாகும் தருணம் இது!

'என்னை வாழவைக்கும் தமிழ் மண்ணுக்கு 1 கோடி ரூபாயை நான் நன்கொடை யாகக் கொடுக்கிறேன். கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்கு எனத் தகுதியானவர்களுக்கு இதை அளிக்க வேண்டும். ஊருக்கு நல்லது செய்ய விரும்புகிற 100 இளைஞர்கள் மூலம், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறேன்’ என்ற லாரன்ஸின் விருப்பம், இனிய சவாலாக இருந்தது. இதோ... 'கலாமின் காலடிச் சுவட்டில்... அறம் செய விரும்பு’ திட்டம் ஆரம்பம்!
திவ்யதர்ஷினி, நாகராஜன், கிரேஸ் பானு, கரு.அண்ணாமலை, ஆனந்த், காயத்ரி, வினோத்ராஜ் சேஷன், பாலாஜி, கவின் ஆண்டனி, கீதா இளங்கோவன் - இவர்களே 'அறம் செய விரும்பு’ திட்டத்தில் செயல்படத் தேர்வான முதல் 10 தமிழர்கள்.
தனது அதிரடிப் படங்களால் தமிழ்நாட்டைக் கலக்குகிற ராகவா லாரன்ஸுக்கு இந்த எண்ணம் தோன்றியது எப்படி?
'மொட்ட சிவா... இப்போ ரொம்ப நல்ல சிவா’ என்றதும் கலகலவெனச் சிரிக்கிறார்.
''அப்போ 'காஞ்சனா-1’ சூப்பர் ஹிட். குடும்பம் குடும்பமா வந்து பார்த்தாங்க. ஏவி.எம் ராஜேஸ்வரி தியேட்டர்ல டிக்கெட் வாங்க முண்டியடிக்கிற கூட்டத்தைப் பார்த்தபடி கார்ல உட்கார்ந்திருந்தேன். அப்ப கையில ஒரு பையன், இடுப்புல ஒரு குழந்தையோட டிக்கெட் கிடைக்காம அல்லாடுறாங்க ஒரு அம்மா. 'படம் பார்த்தே ஆகணும்’னு அந்தப் பையன் அழுவுறான். ஆனா, அந்த அம்மாகிட்ட காசு பத்தலை. இருட்டுல அடையாளம் தெரியாதுல்ல... நான் சட்டுனு அந்த அம்மாகிட்ட 100 ரூபா குடுத்தேன். என் முகத்தைக்கூடப் பார்க்கலை. 'ஐயா ரொம்ப நன்றிய்யா’னு சொல்லிட்டு டிக்கெட் வாங்கிட்டு தியேட்டருக்குள்ள ஓடுறாங்க. அப்ப அவங்க முகத்துல சிரிப்பைப் பார்க்கணுமே... அதைவிட இந்த உலகத்துல வேற எதுவுமே என்னைச் சந்தோஷப்படுத்திட முடியாது.

அந்த தியேட்டர் விசிட் முடிச்சுட்டு வந்த பிறகு ஒரே யோசனை. 'கஷ்டத்துல வாடுற ஒரு குடும்பத்துக்கு இப்படி ஓடிவந்து ஒரு சினிமா பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம் என்ன? அந்தக் கஷ்டத்தை கொஞ்ச நேரம் மறக்கவாச்சும் ஒரு படம் பார்க்கலாமேனு வர்றாங்களோ’னு என்னென்னவோ தோணுது. மறுநாள், '
'காஞ்சனா-2’ இன்னும் பெரிய ரேஞ்ச்ல பண்ணலாம்’னு தயாரிப்பாளர் வர்றாங்க; அட்வான்ஸ் தர்றாங்க. அவங்க தந்த பணம் எங்கே இருந்து வந்தது? தயாரிப்பாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் தர்றாங்க. அவங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தர்றாங்க. அவங்களுக்கு யார் கொடுக்கிறா? கஷ்டப்பட்டு உழைக்கிற பொதுமக்கள். பணத்தைக் கொட்டிக்கொடுக்கிறது மட்டும் இல்லாம, கைதட்டி விசிலடிச்சுப் பாராட்டிட்டுப் போறாங்க. அவங்கதான் நமக்கு நிஜ முதலாளி. அவங்க நமக்குக் கூலி தர்றாங்க.
நான் சாப்பிடுற ஒவ்வொரு வேளை சாப்பாட்டுலயும் ஒரு கைப்பிடிச் சோறு அப்பிடி அவங்க குடுத்தது. அதுதான் உண்மை. தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் ஒரு கைப்பிடிச் சோறு எனக்குக் குடுத்துட்டிருக்காங்க. அவங்களுக்கு நான் என்ன செய்றேன்? சரி, அவங்க பார்த்து சந்தோஷப்படும்படி அப்பப்போ படங்கள் பண்றேன். அதைத் தவிர என்ன செய்றதுனு கேள்வி வரும். என்ன வேணாலும் செய்ற அளவுக்கு சக்தி இருக்கிற சாமி இல்லை நான். ஆனா, சாப்பிடும்போது கொஞ்சம் சாப்பாட்டை சாமிக்காக, நம் முன்னோர்களுக்காக ஓரத்துல எடுத்துவைக்கிற மாதிரி நமக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதாவது திரும்பக் கொடுக்கணும்னு தோணிச்சு. 'காஞ்சனா-2’-வுக்கு அட்வான்ஸ் வாங்கும்போதே கொடுத்துடலாம்னு ஒரு கோடி ரூபாய் எடுத்துவெச்சேன். ஆனா, கொடுக்கலை. நானும் மனுஷன்தானே! எப்படி டக்குனு ஒரு கோடியை உதவிக்குனு எடுத்துக் கொடுத்துட முடியும்? 'அடுத்த படத்துல பாத்துக்குவோம்’னு சமாதானமாகிட்டேன்.

ஆனா, நாளாக நாளாக 'ச்சீ...’னு என்னை நினைச்சு எனக்கே கேவலமா இருந்துச்சு. இடையில எனக்கு உடம்பு முடியாமப்போச்சு. கழுத்துல அடி; ஆறு மாசம் பெட் ரெஸ்ட். அப்போ எத்தனை பேர் எனக்காக வேண்டிக்கிட்டாங்க தெரியுமா? திருப்பதி கோயில்ல முட்டியாலேயே நடந்துபோய் தரிசனம் பண்ணினவங்க, 'உங்க படம் ரிலீஸ் ஆனாதான் இந்த முடியை எடுப்பேன்’னு ஜடா முடியோடு சுத்தினவங்கனு, என் ரசிகர்களின் அந்த வேண்டுதல்கள்தான் என்னை இப்ப உங்க முன்னாடி உக்காரவெச்சிருக்கு. 'நீ அவங்களுக்கு ஒண்ணுமே பண்ணலை. உனக்கு எவ்வளவு பண்றாங்க பார்’னு மறுபடியும் மொத்த சிந்தனையிலும் அவங்கதான். 'காஞ்சனா-2’ 100 கோடி வசூலைத் தாண்டிடுச்சுனு சொல்றாங்க. 'இன்னோவா’ல போயிட்டு இருந்த நான் 'ஆடி’ கார் வாங்குறேன். என் மனசாட்சி என்னைக் கேள்விகேட்குது. சம்பளத்தை கையில வாங்கிவெச்சுக்கிட்டாதானே கொடுக்கலாமா வேணாமானு யோசனை?! வாங்கும்போதே கொடுத்துரலாம்னு முடிவெடுத்தேன்.
அந்தச் சமயத்துலதான் வேந்தர் மூவிஸ் வந்தாங்க. 'மொட்ட சிவா கெட்ட சிவா’, 'நாகா’ ரெண்டு படங்களைத் தயாரிக்கிறதா முடிவுபண்ணாங்க. ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தர்றதா சொன்னாங்க. அதை 'மேடையிலேயே கொடுங்க’னு சொல்லி கலாம் ஐயா பெயரில் உதவி பண்றதா அறிவிச்சுட்டேன். அதை நாலு பேருக்கு நல்லது செய்யணும்னு யோசிக்கிற, சாதிக்கத் துடிக்கிற, அடுத்தவங்க கஷ்டத்துக்காகவும் இதயம் துடிக்கிற,
100 இளைஞர்கள் மூலமா பண்ணணும். உதவி தேடுற மனுஷங்களையும் உதவத் துடிக்கிற இதயங்களையும் ஒண்ணுசேர்க்க, 'ஆனந்த விகடன்’ல முன்வந்தாங்க. அப்படித்தான் இந்த நல்ல விஷயம் ஆரம்பிச்சது!''
''இப்போ ஒரு கோடி ரூபாய் கொடுக்கும் லாரன்ஸின் ஆரம்பகாலப் பின்னணி என்ன?''
'' நான் நார்த் மெட்ராஸ் ராயபுரம் பையன். வறுமை, கஷ்டம், பசி... எல்லாம் உண்டு. அதிசயமா ரோஸ்மில்க் கிடைச்சா, அம்மாவும் நானும் ஆளுக்கு ஒரு வாய் மாத்தி மாத்திக் குடிச்சு சிரிச்சுப்போம். அப்போ திடீர்னு எனக்கு வலது பக்க மூளையில் டியூமர் பாதிப்பு. அதனால இடது பக்க கை, கால் விழுந்திருச்சு. டான்ஸ் ஆட ஆசைப்படுவேன். ஆனா, ஆட முடியாது. மூணு வருஷம் மாற்றுத்திறனாளியா இருந்தேன். எந்திரிச்சு உட்கார்ந்தாலே, மூச்சு வாங்கும். கடவுள் புண்ணியத்துல அதில் இருந்து மீண்டுவந்தேன். அப்படி இப்படினு அலைபாய்ஞ்சு சூப்பர் சுப்பராயன் மாஸ்டரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். 'உங்ககூட தினம் ஷூட்டிங் வர்றேன். அங்கே ஹீரோ யாராச்சும் வந்தா, அவங்க முன்னாடி ஆடிக் காட்டுறேன். எப்படியாவது நான் டான்ஸர் ஆகணும்’னு சொன்னேன். கார் துடைக்கிற வேலைக்குச் சேர்த்துக்கிட்டார்.
மாஸ்டர் பார்க்கத்தான் ஆள் கரடுமுரடா இருப்பார். ஆனா, மனசுல குழந்தை. ஆன்மிகத்துல அவர்தான் என் குரு. மாஸ்டர் கார்லயே போவோம். ஒருநாள் சரத்குமார் சார் முன்னாடி ஆடிக் காட்டினேன். 'பிரமாதமா ஆடுறியே’னு சொல்லி, 100 ரூபா கொடுத்தார். சந்தோஷம் தாங்கலை. ஏரியாவுல, 'சரத்குமார் முன்னாடி ஆடிக் காட்டினேன். 100 ரூபா கொடுத்தார்’னு செம அலம்பல்.
'தர்மதுரை’ இந்தி ரீ-மேக் ஷூட்டிங் ஆரம்பிச்சது. ரஜினி சார் ஷூட்டிங்னு தெரிஞ்சதும் தூக்கம் பிடிக்கலை. எப்படா அவர் முன்னாடி ஆடுவோம்னு காத்துட்டிருந்தேன். அந்த நேரமும் வந்தது. ஆட்டம்னா அப்படி ஒரு ஆட்டம். ஆடி முடிச்சதும், 'சூப்பர்... சூப்பர். நல்லா பண்றான்ல... சூப்பர்’னு சொல்லிட்டுப் போயிட்டார் ரஜினி சார். பெருசா எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமாயிருச்சு. ஏரியாவுல, 'தலைவர் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தார்’னு கப்ஸா விட்டுத் திரிஞ்சேன். ஆனா, உள்ளுக்குள்ள வலி. ஷூட்டிங்ல ரஜினியையே பார்த்துட் டிருப்பேன். கடைசி நாள் ஷூட். அவருக்கு என்ன தோணுச்சோ... 'தம்பி நாளைக்கு என் வீட்டுக்கு வர்றியா?’னு சொல்லிட்டுப் போயிட்டார். போனேன். சத்யநாராயணன் சார், 'கார் துடைக்கிற வேலையை விட்டுடச் சொன்னார் ரஜினி சார். உனக்கு லெட்டர் தந்திருக்கார். இந்த லெட்டரைக் கொண்டுபோய் டான்சர்ஸ் யூனியன்ல கொடு. அங்க உன்னை உறுப்பினரா சேர்த்துட்டு கார்டு கொடுப்பாங்க’னு சொன்னார். கண்ணு கலங்கிருச்சு. 'யூனியன்ல சேர்த்துக்கிறோம். 10 ஆயிரம் ரூபா கட்டணும்’னு சொன்னாங்க. ரஜினி சார் லெட்டர், சுப்பராயன் மாஸ்டர் தந்த பணம்.... இதான் என் வாழ்க்கையைத் தொடங்கிவெச்சது!
அப்புறம் எஸ்.எஸ்.சந்திரன் சார், சிரஞ்சீவி சார், பிரபுதேவா மாஸ்டர், சரண் சார், நாகார்ஜுனா சார்னு பலரோட உதவிகள், அவங்க என்னைத் தொட்டுத் தூக்கினதால்தான் இன்னிக்கு இங்கே இந்த நிலைமைக்கு நான் வந்திருக்கேன். என்னை மாதிரி இன்னும் நிறையப் பேரை உருவாக்கணும்னு ஆசை.தப்புகளைச் சுட்டிக்காட்டித் திருத்துறதுக்கும் நல்லதைத் தட்டிக்கொடுத்து வழிகாட்டுறதுக்கும் ஆள் இருந்தாபோதும், சாதிக்க இங்கே ஜனம் நிறைய இருக்கு!''
''யாருக்கும் என்ன உதவியும் பண்ணலாம். ஆனா, 'கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல்... மூணுக்கும் பிரதான முக்கியத்துவம்’னு ஏன் சொல்றீங்க?''
''சின்ன வயசுல பிரெயின் டியூமர். மாற்றுத் திறனாளியா இந்த உலகத்துல என்னவெல்லாம் கஷ்டத்தை அனுபவிக்கவேண்டியிருக்கும்னு எனக்குப் புரியும். அதான் மருத்துவம். மாற்றுத் திறனாளியா இருந்ததால், அப்போ என்னால படிக்க முடியாமலேபோச்சு. இப்பவும் மெசேஜ் அனுப்ப, கடிதம் எழுத, சக நடிகர்களோடு இங்கிலீஷ் பேச... எனக்கு யார் உதவியாவது வேணும். தமிழ் பேசுவேனே தவிர... கடகடனு வாசிக்க முடியாது. எவ்வளவோ சம்பாதிச்சும் என்ன? படிக்க வேண்டிய வயசுல படிக்கலையே! அந்தந்த வயசுல என்னென்ன பண்ணணுமோ, அதைப் பண்ணிரணும். அதான் காசு இல்லேன்னு யாரும் படிக்காம இருந்துடக் கூடாது.
படப்பிடிப்புக்காக அடிக்கடி கேரளா போவேன். அங்கே போயிட்டு இங்கே திரும்புறப்போ, சென்னையே ஏதோ கறுப்பா இருக்கிற மாதிரி இருக்கும். அதுக்குக் காரணம் கேரளாவுல ஒரு வீட்ல குறைந்தபட்சம் 30 செடிகளாவது வளர்ப்பாங்க. எவ்வளவு பழைய வீடா இருந்தாலும், அந்தப் பசுமையே ஒரு நிறைவைக் கொடுக்குது. அங்கே எல்லாரும் செடி, கொடி, மரங்களை ஃப்ரெண்டா பார்க்கிறாங்க. அந்த மண்ணு மட்டும் இல்லை... அதுக்கு ஒரு மனசும் வேணும். பெரியவங்களும் சின்னவங்களும் பசுமை அவ்வளவு முக்கியம்னு நினைக்கிறாங்க. அந்தப் பசுமையை, குளுமையை இங்கேயும் உணர்த்தணும். அதான்!''
''100 இளைஞர்கள் மூலமா உதவணும்னு நினைச்சது ஏன்?''
''என் நண்பன் ஒருத்தன் இருக்கான். 'உனக்கு என்னப்பா... உன்கிட்ட பணம் இருக்கு. குடுத்துடுற. எங்களுக்கும் உதவணும்னு எண்ணம் இருக்கு. ஆனா, பணம் இல்லியே’னு சொல்லிட்டே இருப்பான். இன்னொரு நண்பனுக்கு 25 ஆயிரம் ரூபா கொடுத்து, 'யாருக்கு வேணும்னாலும் உதவி பண்ணு. ஆனா, உண்மையிலேயே கஷ்டத்துல இருக்கிறவங்களுக்கு இந்த உதவி போகணும்’னு சொன்னேன். நல்லா விளையாடுற ஏழைப் பசங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிக் கொடுத்திருக்கான். நாலைஞ்சு குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டியிருக்கான். அதுல ஒரு குழந்தையோட பெற்றோர், அவன் கால்ல விழுந்து, 'நீ தெய்வம்ப்பா’னு கதறிட்டாங்க. 'மச்சான் ஏதோ பண்ணுதுடா... இனி நீ குடுத்து நான் செய்யக் கூடாதுடா. நானே சம்பாதிச்சு உதவுறேன்’னு சொன்னான். அப்போதான் எனக்குத் தோணுச்சு... மத்தவங்களுக்கு உதவுறதுதான் உலகத்துலயே பெரிய போதை. அதுக்கு அடிமையாகிட்டா மீள முடியாது... என்னை மாதிரி. அப்படி என்னை மாதிரி பலரை உருவாக்கணும்னு நினைச்சேன். இப்போ இந்த 100 பேர் மனசுல உண்டாகிற இந்த நல்ல எண்ணம், அடுத்து ஆயிரம் பேர் மனசுல பரவி உதவி செய்யத் தூண்டணும். அதுக்கு ஆனந்த விகடன் ஒரு களம் அமைச்சுக் கொடுத்தது... மிகப் பெரிய சந்தோஷம்!''
''இதை ஏன் அப்துல் கலாம் பேர்ல பண்ணத் திட்டமிட்டீங்க?''
''நான் எதுவா இருந்தாலும் என் அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்பேன். 'அப்துல் கலாம் அய்யா பேர்ல பண்ணு’னு சொன்னாங்க. கலாம் ஐயாவை நான் ஆரம்பத்துல இருந்தே ஃபாலோ பண்றேன்னு பொய் சொல்ல விரும்பலை. ஆனா, ஐயா இறந்ததும் ஏதோ என் வீட்ல யாரோ ஒருத்தர் இறந்துட்ட மாதிரியே ஒரு உணர்வு. என்னை மாதிரியே அவ்வளவு பேர் தன்னெழுச்சியா துக்கம் அனுசரிக்கிறதைப் பார்த்தப்பதான், இளைஞர்கள் மத்தியில அவரோட தாக்கம் புரிஞ்சது. இது சம்பந்தமா இறையன்பு சார்கிட்ட பேசினப்ப, 'ரொம்ப நல்ல விஷயம். 'கலாமின் காலடிச் சுவட்டில்...''னே பண்ணுங்கனு உற்சாகப்படுத்தினார். விகடன் ஆதரவும் கிடைச்சது. களம் இறங்கிட்டேன்!''
- இன்னும் விவரங்கள் அடுத்த இதழில்...
அறம் செய விரும்பு திட்டம் - எப்படிச் செயல்படும்?
ராகவா லாரன்ஸ் அவர்கள் 'வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்’டுக்கு 1 கோடி ரூபாயை அளித்துள்ளார். அந்த 1 கோடி ரூபாய் 100 தன்னார்வலர்களுக்கு தலா ஒரு லட்சம் என ஒதுக்கப்படும். அந்த 100 பேர் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல மக்கள் சேவைப் பணிகளுக்கு என உதவ, தகுதியான பயனாளிகளை தன்னார்வலர்கள் கண்டுபிடித்துப் பரிந்துரைக்க வேண்டும். லாரன்ஸ் மற்றும் விகடன் குழுமத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, தக்க பயனாளிகளுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப உதவித் தொகை நேரடியாக அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும்.
திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புவர்கள் / உதவி வேண்டுபவர்கள் aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்!
கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்
100 இளைஞர்களில் முதல் 10 நபர்களாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள் இவர்கள்.
திட்டத்தில் இவர்களின் பங்களிப்பு என்ன? இதோ சொல்கிறார்கள்...
திவ்யதர்ஷினி
திரை நட்சத்திரங்களின் கூச்சம் கலைத்து கலகலப்பாகப் பேசவைக்கும் தொலைக்காட்சித் தொகுப்பாளர். 'அறம் செய விரும்பு’வின் ஸ்டூடன்ட் நம்பர் 1. ஆம்... லாரன்ஸ் இந்தத் திட்டம் பற்றி அறிவித்ததுமே, 'நான் இதில் இணையலாமா?’ என உரிமையுடன் கேட்டு, முதல் ஆளாக இணைந்தவர்.
''எல்லாருக்கும் சமமான கல்வி கிடைச்சுட்டா, அதுவே மத்த தேவைகளைப் படிப்படியா நிறைவேத்திடும். அந்த வகையில் என் உதவி... கல்விக்கானதாகத்தான் இருக்கும். நான் ஏற்கெனவே களத்தில் இறங்கிட்டேன். கல்விக்கான உதவி தேவைப்படுபவர்களின் முதல் பட்டியலைக் கொடுத்திருக்கேன்!''

நாகராஜன்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர். 2013-ம் ஆண்டு சென்னை நகரத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மாற்றுத்திறனாளிகளின் 12 நாட்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்து, தங்கள் கோரிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளையும் பேச வைத்தவர்.
''இந்த உதவிகள் உரியவங்களுக்குப் போய்ச் சேரணும். முக்கியமா விழித்திறன் அற்ற மாணவர்களுக்கு ஒலி வடிவிலான நூலகம், சென்னையைச் சுற்றி உள்ள வட தமிழகத்தில்தான் அமைந்துள்ளது. தென் தமிழகத்திலும் இதுபோல ஒலி நூலகம் அமைக்க வேண்டும். இது விழித்திறன் அற்ற பல மாணவர்கள் பயில உதவியாக இருக்கும்!''
கிரேஸ் பானு
திருநங்கை. தமிழ்நாட்டின் முதல் பொறியியல் கல்லூரி திருநங்கை மாணவி. ப்ளஸ் டூ படிக்கும்போதே பெற்றோரால் கைவிடப்பட்டவர். தனது சொந்த முயற்சியால் பல்வேறு சிரமங்களைக் கடந்து படித்தவர். தற்போது அரக்கோணம் அருகே உள்ள கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் இன்ஜினீயரிங் படிக்கிறார்.
''உதவி தேவைப்படும் இடத்தில் இருக்கும் நான், உதவிசெய்யும் இடத்துக்கு வந்திருக்கிறேன் என்பதே பெருமகிழ்ச்சி. இது என் வாழ்வின் தங்கத்தருணம்!''

கரு.அண்ணாமலை
மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர், சினிமா மீதான தீவிரக் காதலால் வேலையை உதறினார். சினிமா என்பது, பொழுதுபோக்கு மட்டும் அல்ல; அது சமூக மாற்றத்துக்கான கருவி என்ற நம்பிக்கைகொண்ட உதவி இயக்குநர்.
'விளிம்பு நிலைகளில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு, கலை சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க விருப்பம். வறுமையில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, புகைப்படம் சார்ந்த பயிற்சிகளைக் கற்றுத்தர விரும்புகிறேன். அந்தக் குழந்தை களுக்கு உதவுவதே என் முன்னுரிமை!''
காயத்ரி
தடகள வீராங்கனை. தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் ஆறு முறை சிறந்த வீராங்கனையாகத் தேர்வுசெய்யப்பட்ட சாதனைத் தமிழச்சி. வடசென்னை ஏழைக் குடும்பம் ஒன்றில் இருந்துவரும் காயத்ரி, இன்று தடகளத்தில் தமிழ்நாட்டின் முகம், முகவரி.
'இங்கே நிறையத் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்காங்க. ஆனா, அவங்களுக்கான வசதி வாய்ப்புகள் இல்லாததால் அவர்கள் திறமை வெளிவராமலே போகிறது. என்னால் முடிந்தவரை இதற்கு முன்பும் சிலருக்கு உதவி செஞ்சுட்டிருக்கேன். இப்ப இந்த உதவித்தொகை மூலமா இன்னும் நிறையப் பேருக்கு உதவி செய்வேன்!''

ஆனந்த்
திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி கிராம அரசுப் பள்ளி ஆசிரியர். தன்னிடம் படிக்கும் மாணவர்களின் உறவினர்கள் பெரும் எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்வதைத் தெரிந்துகொண்டார். காளாச்சேரி கிராமத்தில் 'மாணவர்களின் விழிப்புஉணர்வு கலை நிகழ்ச்சி’யைத் தொடர்ச்சியாக நடத்தி, தற்கொலைகள் அடியோடு இல்லாமல் ஆக்கியவர்.
''பெற்றோர்களை இழந்த மாணவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு படிப்பாங்கனு எனக்குத் தெரியும். அவர்களுக்கு இந்த உதவித்தொகையை உரிய வகையில் கொண்டுசேர்ப்பேன். சமூகநலனில் அக்கறைகொண்ட ஆசிரியர்கள் பலர் என்னோடு இதில் கைகோக்க வருகிறார்கள்!''
வினோத்ராஜ் சேஷன்
சமூகப் போராளி. திருச்சி இளைஞர். குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராகச் செயல்படுபவர். நீர்நிலைகளைக் காப்பாற்றுவதற்காக 'தண்ணீர் இயக்கம்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார்.
'நம் சமூகம், தற்போது சுற்றுச்சூழல் பிரச்னைகளில் சிக்கிச் சிதைகிறது. சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கும், தமிழ்நாடு எங்கும் நிறைய மரங்கள் நடும் முயற்சிகளுக்கும் இந்த உதவித்தொகையைப் பயன்படுத்துவேன்!''

பாலாஜி
பண்பலை நேயர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் ஆர்.ஜே. பாலாஜி நல்ல அறிமுகம். கிண்டல், கலாய் காமெடிகளுக்கு மத்தியில் சமூகத்துக்குத் தேவையான நல்ல விஷயங்களையும் சொல்பவர்.
'என் உதவிகள் பலரையும் உதவிகள் செய்யத் தூண்டணும். 'நாமும் இதுபோல உதவி செய்யணும்’னு இன்னும் 100 பேர் முன்வரணும். அப்பதான் இது செயின் ரியாக்ஷனா மாறும். அப்படித்தான் என் உதவிகளை அமைச்சுக்குவேன்!''
கவின் ஆண்டனி
திரைப்பட உதவி இயக்குநர். பேருந்து விபத்தில் வலது கையை இழந்தவர், முடங்கி அமர்ந்துவிடவில்லை. 'அதிகாலை’ என்ற ஒரு குறும்படம் இயக்கினார். அதில் ஒரு விபத்து ஏன் நடக்கிறது, அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியவர். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர், இப்போது தனியாகப் படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.
''நண்பர்களின், நல்லவர்களின் ஆதரவால்தான் நான் இருக்கிறேன். அதனால், ஆதரவு இல்லாமல் போராடும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் வாழ்வாதாரங்களையே தொலைத்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதலில் உதவ நினைக்கிறேன்!''

கீதா இளங்கோவன்
PIB - ன் ஊடக அலுவலர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். மாதவிடாய் காலத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை, இந்தச் சமூகம் இன்னமும் ஒரு நோய்போல ஒதுக்கிவைக்கும் அவலத்தை தனது 'மாதவிடாய்’ ஆவணப்படம் மூலம் சொன்னவர், தற்போது 'நம்பிக்கை மனிதர்கள்’ என்ற தலைப்பில் தொடர் ஆவணப்படம் எடுத்துவருகிறார். 'நம்பிக்கை மனுஷிகள்’, 'விழியின் மொழி’ என இரண்டு ஆவணப்படங்கள் இந்தத் தொடரில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்தன.
''பழங்குடியினர் குழந்தைகள் பலருக்கு கல்வி உதவிகள், பயிற்சிகள் ஏற்படுத்திக்கொடுக்க விருப்பம். அடுத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறை வசதிகள் சரிவர இல்லை. ஒரு மாடல் கழிவறையைக் கட்ட வேண்டும் என்பதும் என் விருப்பம்!''