Published:Updated:

இந்திய வானம் - 3

இந்திய வானம் - 3
News
இந்திய வானம் - 3

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

புத்தன் இல்லாத இடம் இல்லை 

நான் பார்த்த புத்தர் சிலைகளிலேயே மறக்க முடியாதது, ஹிரோஜிமா மியூசியத்தில் அணுகுண்டு வீச்சால் உடல் சிதைந்து உருகிப்போய், பாதி முகத்துடன் காணப்படும் புத்தர்.  

தன் தலை மீது ஓர் அணுகுண்டு வந்து விழும் என புத்தன் நினைத் திருக்க மாட்டான். லட்சக்கணக்கான மனிதர்களையும், மகா மௌனத்தில் உறைந்திருந்த புத்தனையும் அணுவின் கதிர்வீச்சு சிதைத்திருக்கிறது. பாதி சிதைந்துபோன அந்தப் புத்தனின் முகம், நம் காலத்தின் அடையாளம்.

நான் பார்க்க விரும்பும் புத்தர் சிற்பம் ஒன்று இருக்கிறது. அது பாகிஸ்தானின் லாகூர் மியூசியத்தில் உள்ள 'ஃபாஸ்ட்டிங் புத்தா’ என அழைக்கப்படும் சிற்பம். எலும்புகள் புடைத்து நிற்க, ஒட்டிய வயிற்றுடன் குழி விழுந்த கண்களுடன், பசியை வென்ற புத்தர் சிற்பம். அதிலும் கோடுபோல புன்னகை ஒளிரவே செய்கிறது.

நின்ற, சயனக் கோலத்தில் அழகும் சாந்தமும் நளினமும்கொண்ட புத்தரைத்தானே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் புத்தர் அப்படி அல்ல. உடலை ஒடுக்கிக்கொண்ட உக்கிரமும், ஆன்ம வேகம் பீறிடும் உடலும் கொண்ட புத்தர். குஷாணர் காலத்துச் சிலை அது. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம். இந்தச் சிலையின் நகல் வடிவங்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால், மூலத்தை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.

இந்திய வானம் - 3
இந்திய வானம் - 3

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை புத்தர் இல்லாத இடமே இல்லை. இன்று புத்தர் ஒரு விற்பனைப் பொருள். விதவிதமான வடிவங்களில், உயரங்களில், பிரமாண்டமான சிலைகளாகச் செய்யப்பட்டு விற்கப்படுகிறார். வரவேற்பறை அழகுப்பொருட்களில் ஒன்றாக, புத்தர் உருமாறிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என் எழுதும் மேஜையில் ஒரு புத்தர் சிலை இருக்கிறது. சாரநாத்தில் இருந்து வாங்கிவந்த கற்சிலை. 25 ஆண்டுகளாக தினமும் காலையில் அதைத் துடைத்து சுத்தம்செய்து, ஒரு மலரை அதன் முன்பாக வைக்கிறேன். புத்தரின் புன்னகைதான் எனது எழுத்துத் துணை.

மனம் சோர்ந்த தருணங்களில் அந்தப் புத்தரைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். ஊதுவத்தியில் இருந்து நறுமணப் புகை வருவதுபோல, அந்தச் சிலையில் இருந்து சாந்தம் மெள்ளப் பரவி என்னைப் பற்றுவதை உணர்ந்திருக்கிறேன். உலகின் புத்தருக்கு 2,500 வயதாகிவிட்டது. ஆனால், எனது மேஜையில் இருக்கும் புத்தருக்கு 25 வயதுதான்.

கருணை ததும்பும் முகம், சற்றே பெரிய கீழ் உதடு, நீண்டு தொங்கும் காதுகள், பத்மாசனக் கோலத்தில் தியானத்தில் அமர்ந்த நிலை. எனது பயணத்தில் இந்தியாவில் எத்தனையோ விதமான புத்தர் சிலைகளைக் கண்டிருக்கிறேன். சிறியதோ, பெரியதோ எல்லா புத்தர்களும் பேரழகுடன் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். யானையை எப்படிப் பார்த்தாலும், அதன் கம்பீரமும் அழகும் குறைவது இல்லைதானே? புத்தனும் அப்படித்தான் இருக்கிறான்.

உலகின் மிகப் பெரிய புத்தர் சிலைகளில் ஒன்றான, டோக்கியோவில் உள்ள காமகுரா புத்தர் சிலையைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். டோக்கியோவில் இருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் உள்ளது காமகுரா. அங்கே பிரமாண்டமான புத்தர் சிலை வெட்டவெளியில் அமைக்கப்பட்டிருக்கிறது. 13.35 மீட்டர் உயரம் உள்ள வெண்கலப் புத்தர் சிலை அது. 1252-ம் ஆண்டு அதைச் செய்திருக்கிறார்கள்.

இதை ஜப்பானில் உள்ள இரண்டாவது பெரிய புத்தர் சிலை என்கிறார்கள்; முதல் சிலை நாராவில் உள்ளது. காமகுரா புத்தர் சிலை முதலில் மரத்தில் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அது சிதைந்துவிடவே, வெண்கலத்தில் புதிய சிலை செய்யப்பட்டிருக்கிறது. வெட்டவெளியில் அப்படி ஒரு மகா புத்தனைக் காண்பது பெரும் பரவசம் தரக்கூடியது.  

பிரமாண்டமான அந்தப் புத்தர் சிலையின் உட்பகுதியைக் காண்பதற்கும் வழி அமைத்திருக்கிறார்கள். உள்ளுக்குள் வெற்றிடம். அதன் வழியே புத்தரைக் கண்டபோது, 'உருவம் இல்லாத இருப்பே புத்தர்’ என்ற அனுபவத்தை அடைந்தேன். அது ஓர் உணர்ச்சிபூர்வ நிலை; நமக்குள் இருக்கும் புத்தனை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் வழி. சிலையைவிட்டு அகல மனமே வரவில்லை. இளவெயில் ஒளிரத் தொடங்கியது. அந்த          இளஞ்சூரிய வெளிச்சத்தில் புத்தரைக் காண்பது பேரனுபவம்.

இந்திய வானம் - 3

புத்தர் ஏன் நமக்குத் தேவையாக இருக்கிறார்? இதற்கு நிறையப் பதில்கள் இருக்கின்றன. எனது பதிலுக்கு முன்பாக 'யெஸ் மேன்’ என்ற திரைப்படத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

இது ஜிம்கேரி நடித்த ஆங்கிலப் படம். இதில் அவர் ஒரு வங்கி ஊழியர்; மனைவியை விவாகரத்துசெய்தவர். எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவருக்கு எதிர்மறையான எண்ணங்களே தோன்றிக்கொண்டிருக்கும். இதனால் பலவிதமான சிரமங்களை அடைவார். எந்தச் செயலையும் அவரால் தைரியமாகச் செய்ய முடியாது. அப்போது அவர் ஓர் ஆலோசனை வகுப்பில், 'உங்கள் எதிர்மறை எண்ணங்களை மாற்ற எந்தச் சந்தர்ப்பமாவது கிடைத்தால், 'சரி செய்கிறேன்’ எனக் குதித்துவிடுங்கள். 'யெஸ்’ என்ற சொல் உங்களை மாற்றிவிடும்’ என்ற ஆலோசனையைப் பெறுகிறார். தனது வாழ்வில் அதை அவர் செயல்படுத்தவும் தொடங்குகிறார்.

அவர் நினைத்தே பார்க்காத மாற்றங்கள் எல்லாம் உருவாவதுடன், புதிய நட்பும், பதவி உயர்வும், பெண் துணையும், புதிய அனுபவங்களும் அவருக்குக் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் எதிர்மறை எண்ணங்களை விலக்கி, யெஸ் மேனாக வாழ ஆரம்பிக்கிறார். நெருக்கடியான சூழலில்கூட அவர் மனம், எதிர்மறை எண்ணங்களை வரவிடாமல்                தடுப்பதுடன், நேர்மறை எண்ணங்களை உருவாக்கித் தைரியமாக வெற்றிபெறச் செய்கிறது.

'யெஸ்’ என்ற ஒரு வார்த்தை, ஒரு மனிதனை இப்படிப் புரட்டிப்போட்டுவிடும் என்றால், நிகரற்ற அறநெறிகளின் தொகுப்பாக அமைந்த பௌத்தம், அதன் உயர்வான எண்ணங்கள் நம்மை எந்த அளவுக்கு மேம்படுத்தும்!

ஆம் நண்பர்களே... நமது மனம்தான் நம்மை வழிநடத்தும் கருவி. அதை ஆராயவும், சரிசெய்யவும், தூய்மைப்படுத்தவும், நல்ல சிந்தனைகளை, செயல்களை, நல்ல அறத்தைக் கைக்கொள்ளவும் புத்தரே நமக்கான ஞான குரு.

அகத்தை நெறிப்படுத்த மட்டும் புத்தர் நமக்கு வழிகாட்டவில்லை; சாதி, இன பேதம் இல்லாத, சமூக நீதியை முன்னிறுத்திய வாழ்க்கைமுறையை உயர்த்திப்பிடித்தவர் புத்தர். அக விடுதலையை முதன்மைப்படுத்திய புத்தர்தான், சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்குமான தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள முன்வந்து வழிகாட்டியவர். மன்னராக வாழ்ந்த காலத்தில் பல்லக்கிலும் குதிரையிலும் பவனி வந்த புத்தர், துறவியான பின்பு நடந்தே அலைந்தார். இந்தியாவில் புத்தர் அளவுக்கு நடந்த இன்னொரு மனிதர் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

புத்தர் தனது முதல் சொற்பொழிவை, வாரணாசியை ஒட்டிய சாரநாத்தில் நிகழ்த்தினார். மான்பூங்கா என அழைக்கப்பட்ட இடத்தில் அந்த உரை நிகழ்த்தப்பட்டது. அதை 'தர்மச் சக்கரம் சுழல்வது’ எனக் கூறுகிறார்கள். புத்தரின் முதல் உரை, பாலி மொழியில் நிகழ்த்தப்பட்டது. இன்று, அந்த மொழி பேச்சுவழக்கில் இல்லை. பாலி மொழிக்கு 'மாகதி’ எனவும் வேறு பெயர் உண்டு. மகத நாட்டில் வழங்கப்பட்டதால் அது 'மாகதி’ என அழைக்கப்பட்டது.

இந்திய வானம் - 3

தமிழ்நாட்டில் இருந்த பௌத்தர்கள் ஒருபோதும் பாலி மொழி பேசியது இல்லை. ஆனால், பௌத்த சமய தேரர்கள் பாலி மொழியில் இயற்றப்பட்ட அறநூல்களைப் படித்துவந்தார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, மானாவூர், துடிதபுரம், பாடலிபுரம், சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில், பாலி மொழியை நன்கு அறிந்திருந்த பௌத்த ஆசிரியர்கள் பண்டையக் காலத்தில் இருந்தார்கள்.

சாரநாத்தில் புத்தரின் அறவுரையைக் கேட்டவர்கள் கொண்டஞ்ஞர், பத்தியர், வப்பர், அஸ்ஸஜி மற்றும் மகாநாமர் ஆகிய ஐந்தே பேர்தான். அவர்களும் துறவிகளே. ஆடி மாதப் பௌர்ணமி அன்று இந்த உரை நிகழ்த்தப்பட்டது. அதனால்தான் இன்றும் ஆடி மாதப் பௌர்ணமியை 'குரு பூர்ணிமா’ என அழைக்கிறார்கள்.

புத்தருடைய காலத்தில் இல்லற வாழ்க்கையை விட்டு விலகி, காட்டுக்குள் சென்று, பல ஆண்டுகள் தவம்செய்து மட்டுமே ஞானம் பெற முடியும் என நம்பியிருந்தார்கள். புத்தரும் அப்படித்தான் ஆறு ஆண்டுகள் கடும் தவம் செய்திருந்தார். அதன் பின்னர் தன்னை வருத்திக்கொள்வதால் மட்டும் பயன் இல்லை என உணர்ந்து, அவர் மத்தியப் பாதை ஒன்றை உருவாக்கினார்.

சாரநாத்தில் புத்தரின் முதல் உரை, அவரது ஞானத்தை வெளிப்படுத்தும்விதமாக அமைந்திருந்தது. அன்று அதைக் கேட்ட ஐந்து பேருக்குப் பிறகு, ஆறாவது மனிதராக இன்று வரை அந்த உரையை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம்.

'தோற்றத்துக்கு உட்பட்டது எதுவானாலும், அது அழிவுக்கும் உட்பட்டதே என்பதைப் புரிந்து விழிப்புஉணர்வுடன் செயல்படுங்கள்.

சரியான புரிதல், சரியான எண்ணங்கள், சரியான சொல், சரியான செயல், சரியான வாழ்வாதாரம், சரியான முயற்சி, சரியான விழிப்புஉணர்வு, சரியான மனக்குவிப்பு... ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதவை’ என புத்தர் விளக்கினார்.

நேரியப் பேச்சு என்றால் என்ன? பிறருக்குத் தீங்கு இழைக்காத, கடும்சொல் எதுவும் கூறாத, அடுத்தவரின் அமைதியையும் இசைவையும் கெடுக்காத பேச்சே நேரியப் பேச்சு.

நாம் நேரியப் பேச்சைப் பயில வேண்டும். அன்றாடம், நான் நேரியப் பேச்சைக் கொண்டிருக்கிறேனா என, தன்னைத்தானே ஆராய்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

இதுபோலவே  நேரிய செய்கை.  ஒவ்வொரு செயலும் மனதிலேயே முதலில் தோன்றுகிறது. பின்பு அது பேச்சின் மூலம் வெளிவருகிறது; அடுத்து உடம்பால் செய்யும் செயலாக வெளிப்படுகிறது. இந்தச் செய்கை நேரியதாக, சரியானதாக, கச்சிதமானதாக இருக்க வேண்டும்.

கொல்லுதல், திருடுதல், தவறான பாலியல் இன்பம், போதையூட்டும் பொருட்களை உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்த்து, நேரிய செய்கையை ஒருவர் தம் வாழ்வின் ஒரு பகுதியாக்கிக்கொள்ள வேண்டும்.  

இதுபோலவே நேரிய வாழ்வாதாரம் அடுத்த அறம் ஆகும். நாம் வாழ்வதற்கு பணம் தேவை. ஆனால், அது எப்படிச் சம்பாதிக்கப்படுகிறது,  ஏதாவது தவறான வழியில், எவரையாவது ஏமாற்றிப் பெறப்பட்டதா என ஆராய வேண்டும்.

இந்தப் போதனையில் துன்பம் பற்றிய பேருண்மை, துன்பக் காரணம் பற்றிய பேருண்மை, துன்ப நீக்கத்துக்கான பேருண்மை, துன்ப நீக்கத்துக்குக் கொண்டுசெல்லும் நெறி பற்றிய பேருண்மை ஆகிய நான்கு பேருண்மைகளை எடுத்துச் சொன்னார் புத்தர். அத்துடன் மூன்று வழிகளில் பேருண்மைகளை உணர்ந்திருப்பதாகவும் அவர் விளக்கினார்.

பேருரையின் முடிவில் கொண்டஞ்ஞர், 'தோற்றத்துக்கு உட்பட்டது எதுவானாலும் அது அழிவுக்கும் உட்பட்டதே’ என்பதை முழுமையாக உணர்ந்தார். புத்த நெறியை ஏற்றுக்கொண்ட முதல் சீடர் அவரே. இந்த உரையின் மூலம் உலகில் தர்மச் சக்கரம் சுழலத் தொடங்கியது. புத்தருடைய ஞானத்தையும் தெள்ளிய அறிவையும் நாம் முழுமையாக உள்வாங்க புத்த ஞானத்தைப் பயில வேண்டும்.

ஞானத்தில் எவ்வாறு நிலைபெறுவது என்றும், புத்தர் தனது ஐந்து சகாக்களுக்கும் கற்பித்தார். ஐவரும் ஞானத்தில் நிலைபெற்று 'அரஹந்தர்கள்’ ஆனார்கள் எனக் குறிப்பு உள்ளது. வலுவான இரும்புத் தூண், புயல் காற்றில்கூட அசையாமல் இருப்பதைப்போல, இந்த உண்மைகள் அவர்களின் மனதில் அசையாத நெறியை உருவாக்கின.

புத்தர், ராஜகிரியில் இருந்து நாளந்தா வரை சில பிக்குகளுடன் சென்றுகொண்டிருந்தார். அந்தச் சமயம் ஒருவர் புத்தரை மிக மோசமான வசைகளால் திட்டி, பேசத் தொடங்கினார். அதைக் கேட்ட சீடர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆனால், புத்தரிடம் சலனமே இல்லை.  

'யுத்தக் களத்தில் செல்லும் யானை, எல்லா திசைகளில் இருந்து வரும் அம்புகளைப் பொறுத்துக்கொண்டு, தன் இலக்கை நோக்கி நடந்துபோவதுபோலத்தான் நான் செயல்படுவேன். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் எனக்கு ஒன்றே. இந்த இரு சூழ்நிலைகளிலும் சமநிலையுடன் இருப்பதே உண்மையான தம்மம் ஆகும்’ என புத்தர் விளக்கினார்.

புத்தரின் தோழமை நமக்குத் தேவையாக இருக்கிறது. மனிதர்களுக்கு அவர்களின் மனமே  ஒளி தரும் கருவி என்கிறார். புத்தர் எப்போதும் இனிமையான சொற்களையே பேசினார். சொல்லாலும் செயலாலும் எந்த மனிதனையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பது அவரது நெறி. அறிவுக்குப் பொருந்தாத எதன் மீதும் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. எளிய மக்களுக்காகவே அவர் பேசினார்.

அவர் பேசிய மொழி, பாலி. அது மகத நாட்டு மக்கள் பேசி வந்த மொழி. அதற்கு எழுத்துக்கள் இல்லை. அது மட்டும் அல்ல. அவர் காலத்தில் பாலி, பிராகிருதம், சம்ஸ்கிருதம் போன்ற எந்த மொழியும் எழுத்துமொழியாக இல்லை. எல்லாம் பேச்சுமொழிகளே. புத்தர் தன் காலத்தில் எதையும் எழுதவில்லை.

புத்தர் இறந்த பிறகு அவரது சீடர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தார்கள். அதில் புத்தரின் அறவுரைகளையும் செயல்பாடுகளையும் தொகுத்துவைப்பது என முடிவுசெய்தார்கள். வாழ்நாள் முழுவதும் புத்தரின் நிழல்போல் இருந்த ஆனந்தனிடம் 'சுத்த பிடகம்’, 'அபிதம்மப் பிடகம்’ இரண்டையும் தொகுக்கச் சொன்னார்கள். உபாலியிடம் 'விநய பிடகம்’ தொகுக்கச் சொன்னார்கள். பின்னர் ராஜகிருகத்தில் 500 பிட்சுக்கள் ஒன்றுகூடினார்கள். அதுதான் முதல் பௌத்த மாநாடு. அதில் இந்தத் தொகுப்புகள் முன்வைக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.  

மன்னர் அசோகன் பௌத்த ஞானத்தை ஏற்றுக்கொண்டு, கபிலவஸ்து, புத்தகயா, சாரநாத், ராஜகிருகம், குசிநரா போன்ற புத்தரின் வாழ்வோடு தொடர்புடைய முக்கியமான இடங்களில் எல்லாம் ஸ்தூபிகள் அமைத்தார். அவரின் ஞானமொழிகளை கல்வெட்டில் பொறித்துவைத்தார்.

கோபம், மோகம் அல்லது பயத்தை மனம் எதிர்கொண்டு எதிர்வினை புரியும்போது, மனம்  நெருக்கடிகளுக்கு உள்ளாகும்; அதனால் மிகவும் பதற்றப்படும்; அதன் காரணமாக உடலில் நடுக்கம், பீதி உண்டாகும். இதனால் மனக் குழப்பம் அதிகமாகும்; நிம்மதி போய்விடும். மனதைத் தூய்மைப்படுத்த, நெறிப்படுத்த புத்த விபஸ்ஸனா வழிகாட்டுகிறது.

பிறப்பில் இருந்து இறப்பு வரை, நமது மூச்சு உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாகவே இருந்துவருகிறது. இந்த மூச்சுதான் நமது மன ஒருமைக்கு உரிய பொருள். ஒருவர் மூச்சை உற்றுநோக்கி விழிப்புஉணர்வு பெறுவதே விபஸ்ஸனா. தூய்மையான உற்றுநோக்கலே அந்தப் பயிற்சி. கரையில் அமர்ந்திருப்பவர் ஆற்றோட்டத்தைக் கவனிப்பது போன்ற செயல் அது. இப்படி ஒருமைகொள்ள மனம் எளிதில் வசப்படாது. கடினமாகவே இருக்கும். இதற்காகவே ஒரு வழிகாட்டி, ஆசான் தேவை.

புத்தரைப் பின்தொடர்வது என்பது ஒரு நீண்ட பாதை; வாழ்நாள் முழுவதும் தொடரும் பணி. அதன் முதற்படியாக, சொல்லாலோ அல்லது உடலாலோ மற்றவர்களின் அமைதிக்கும் இசைவுக்கும் பாதிப்பு வரக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருத்தலே, புத்தர் காட்டும் எளிய வழி.

அலங்காரப் பொருளாக புத்தனை வீட்டில் வைத்திருப்பதைவிடவும் அவரது அறங்களில் ஒன்றைக் கைக்கொள்வதுதான் புத்தரைப் பின்தொடரும் உண்மையான வழி!

- சிறகடிக்கலாம்...