மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 3

சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 3

அஞ்ஞானச் சிறுகதை

லக வங்கியின் தலைவர் ஜிம். மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத் திட்டங்கள் குறித்த ஒரு ரகசிய மீட்டிங்கை முடித்துக்கொண்டு இப்போதுதான் அறைக்குத் திரும்பியிருந்தார். இனி கார்ப்பரேட்களின் யுகம்தான் என மென்புன்னகையுடன் நினைத்துக்கொண்டார். 

கலைடாஸ்கோப் - 3

மேஜை மீது இருந்த, பரிசாக வந்திருந்த சிறிய சிவப்பு நிறப் பெட்டியைச் சந்தேகத்துடன் பார்த்தார். 'யார் தந்தது?’ என ஞாபகம் வரவில்லை. ஆவலுடன் பிரித்தார். ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் சிறிய, மிகச் சிறிய கார்ல் மார்க்ஸ் உட்கார்ந்திருந்தார். முதலில் பொம்மை என நினைத்த ஜிம், உற்றுப்பார்த்தபோதுதான் மார்க்ஸ் அசைவதைக் கவனித்தார். அதிர்ச்சியில் பெட்டியைக் கீழே போட்டார். கண்ணாடிப் பெட்டியுடன் சேர்ந்து மார்க்ஸ் பொம்மையும் உடைந்து சிதறியது.

அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சுவிட்ட அடுத்த கணம் அதைக் கவனித்தார். சிதறிய மார்க்ஸ் பொம்மையின் ஒவ்வோர் உடைசலும் ஒவ்வொரு மார்க்ஸாக உருமாறி அசைய ஆரம்பித்தது. ஜிம் கையில் கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து, வரிசையாக ஒவ்வொரு மார்க்ஸையும் உடைக்க ஆரம்பித்தார். மீண்டும் அந்த ஒவ்வோர் உடைசல்களும் ஒவ்வொரு...

கலைடாஸ்கோப் - 3

ருநாள் காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது, உங்கள் அருகில் இரண்டு மனைவிகள்

கலைடாஸ்கோப் - 3

படுத்திருக்கிறார்கள். ஐ மீன்... உங்கள் மனைவியை காப்பி பேஸ்ட் செய்ததுபோல அதே இன்னோர் உருவம். எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

சாலி - ஜாக் என்னும் இளம் தம்பதி மற்றும் ஒரு நாய். இவர்கள்தான் கதாபாத்திரங்கள். முற்றத்துப் புல்வெளியில், ஒரு மர்மமான ’திடுக்’ கணத்தில், அவர்களின் நாய் ஜெராக்ஸ்போல டூப்ளிகேட் செய்யப்படுகிறது. தம்பதி புரியாமல் முழிக்கிறார்கள். ஆர்வமும் பயமும் தொற்றிக்கொள்கின்றன. ஒருகட்டத்தில் சாலியும் தன்னை டூப்ளிகேட் செய்துகொள்கிறாள். ஜாக் மற்றும் இரண்டு சாலிகள். அவர்களுக்கு இடையிலான எமோஷனல் ப்ளே எங்கே சென்று முடிகிறது என்பதுதான் படம்.

ரே வாங் (Ray Wong)  இயக்கிய இந்தக் குறும்படம், 'லோ-ஃபை ஸை-ஃபை’ வகை எனச் சொல்லலாம். ஸை-ஃபை என்றாலே கிராஃபிக்ஸ் கிறுகிறுப்புத்தான் என்பதை முறியடிப்பவை இந்த வகைப் படங்கள். யதார்த்த சம்பவங்களுக்குள் நுட்பமாக அறிவியல் புனைவைப் பின்னுவது. ஸ்டான்லி குப்ரிக் போன்றவர்களின் பாதிப்பு தன்னிடம் உண்டு என ரே வாங்கே சொல்கிறார்.

கலைடாஸ்கோப் - 3

படத்தைக் காண: https://vimeo.com/83606636

கலைடாஸ்கோப் - 3

ஹைதராபாத் சாலார் ஜங் மியூசியத்துக்கு சிலதடவை சென்றிருக்கிறேன். ஹைதராபாத் சென்றால் பிரியாணியைப் பிரித்துமேய்வதோடு திரும்பாமல், இந்த மியூசியத்துக்கும் ஒரு நடை போய் வந்தால் சிறிது கண்களுக்கும் ஈயப்படும்.

அந்தக் கால நவாப்களின் ஆட்சியில், உலக நாடுகள் பலவற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்களின் ஒட்டுமொத்த கலெக்‌ஷன்களால் நிறைந்திருக்கும்  மியூசியம். அந்த கலெக்‌ஷன்களில் 'ஐவரி’ எனப்படும் தந்தங்களால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் முக்கியமானவை.

தந்தம் என்றால் யானைத் தந்தம் மட்டும் அல்ல; பிற விலங்கினங்களின் பல் மற்றும் கொம்புகளை உபயோகித்துச் செய்வதும் அடங்கும். இந்த விலங்குப் பற்களில் மேல்ப்பூச்சு 'டென்டல் எனாமல்’, உள்பகுதி ’டென்டைன்’ மற்றும் 'ஆஸ்டியோடென்டைன்’ என்னும் பொருட்களால் ஆனது. இதில் இந்த எனாமல் பகுதியைத் தேய்த்து, விலக்கிவிட்டு உட்பகுதியை 'கார்விங்’ என்னும் செதுக்குநுட்பத்தால் குடைந்து, சிலைகளை, இன்னபிற வடிவங்களை உருவாக்குவார்கள்.

4,000 வருடங்களுக்கு முன்பே, இந்தியாவில் இந்த மாதிரியான தந்தச் சிற்பங்கள் செதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் எங்கும் இப்படியான வரலாறு இருக்கிறது. ஆனால், கலைக்காக யானை உள்ளிட்ட விலங்குகள் கொலைசெய்யப்படுவது பற்றிய பார்வை, சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. உதாரணத்துக்கு, 80-களில் ஆப்பிரிக்காவில் மட்டும் 70 ஆயிரம் யானைகள் தந்தத்துக்காகக் கொலைசெய்யப்பட்டுள்ளன. இன்று உலகம் முழுக்க, இந்த வகை தந்தச் சிற்பங்கள் செதுக்க தடையும் சிக்கலும் உண்டு.

அதிகார மனோபாவம் மட்டும் அல்ல, அழகுணர்ச்சியும் மனிதனை வேட்டை மிருகமாக மாற்றும் என்ற உண்மையைச் சொல்லியபடி, உலகம் முழுக்க உறைந்து நிற்கின்றன இந்த 'ஐவரி’ சிற்பங்கள்!

கலைடாஸ்கோப் - 3

ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்த 40 மில்லி செகண்டிலேயே, அவரைப் பற்றிய ஓர் அபிப்பிராயத்தை நாம் உருவாக்கிக்கொள்கிறோம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. 40 மில்லி செகண்ட் என்பது, ஒரு செகண்டைப் பத்தாகப் பிரித்தால் அவற்றில் ஒன்றின் பாதியைவிடக் குறைவு. புரியவில்லையா? விட்டுத்தள்ளுங்கள்.

நம் ஆட்கள் அழகாக 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். அது போதும். எதற்காக இந்த பில்டப்? காரணம் இருக்கிறது.

இன்றைய சமூக வலைதள யுகத்தில் மனிதனுக்கு முகம் இருக்கிறதோ இல்லையோ, புரொஃபைல் படம் கட்டாயம் இருந்தாக வேண்டும். டி.பி எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த புரொஃபைல் படங்களை வைப்பது ஒரு கலை என ஆராய்ச்சிகள் செய்து, யூ-டியூபில் பாடம் நடத்துகிறார்கள் வெள்ளைக்காரர்கள்.

இவர்களின் ஆராய்ச்சி உள்ளூருக்குப் பொருந்துமா எனத் தெரியாது. ஆனாலும் சொல்லிவைப்பது நம் கடமை.

அதிகமான ஆட்கள் லைக்கிடும் டி.பி-களுக்கு எனச் சில பொதுக்குணங்கள் இருக்கின்றனவாம். பற்கள் தெரிய பவ்யமாகச் சிரிப்பது, அடர்த்தியான வண்ணம்கொண்ட ஆடைகள், தாடைக்கும் கழுத்துக்கும் நடுவிலான நிழல், புகைப்படக் கலையின் 'rule of thirds’ விதிப்படி கம்போஸ் செய்யப்பட்டிருப்பது, கண்களை லேசாகச் சுருக்கிப் பார்ப்பது எனப் பட்டியல் விரிகிறது.

உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் பார்ப்போம். இந்தக் கண்களை அகல விரிக்காமல், லேசாகச் சுருக்கி கீழ் இமையைச் சற்று மேல் நோக்கித் தூக்குவது (Squinch எனச் சொல்கிறார்கள்) முகத்தில் ஒரு சிநேக பாவனையைக் கொண்டுவந்துவிடுகிறதாம். வித்தியாசங்களைப் படங்களில் பாருங்கள்.

இப்படி இன்ச் பை இன்ச்சாக முகத்தைப் படம் வரைந்து பாவனை குறிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட கூலிங் கிளாஸ் அணிவது, தொப்பி போடுவது எல்லாம் லைக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்கிறார்கள். இது... கிளாமர் ஏற்றுவதற்காக கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு போஸ் கொடுக்கும் நமக்கு, மென் அதிர்ச்சிதான்.

இந்த ஆராய்ச்சி நாட்டாமைகளின் தீர்ப்பைச் சுருங்கச் சொன்னால், சிரிப்பும் கண்களும்தான் லைக்குகளைக் குவிக்குமாம். எனவே நம் ஊரில், முன்பு கேமராவின் சட்டைக்குள் தலையை நுழைத்துக்கொண்டு நம் போட்டோகிராபர் அண்ணன்கள் சொன்னதையே

நான் உங்களுக்குச் சொல்கிறேன்... 'ஸ்மைல் ப்ளீஸ்’!

காண்டம்

காண்டம் கண்டுபிடித்த வரலாற்றைத் தேடினால், அது 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட பிரெஞ்சு குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. எகிப்து, இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளின் ஹிஸ்டரியை நோண்டினால், கர்ப்பத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பெண்களின் தலையில் கட்டிவிட்டு, ஆண்கள் ஹாயாகக் காரியம் நடத்தியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

கலைடாஸ்கோப் - 3

சற்று பின்னோக்கி வந்தால், 'ஆண்டோனினஸ் லிபராலிஸ்’ என்னும் கிரேக்க அறிஞர்தான் 'மினோஸ்’ என்னும் நாட்டுப்புறக் கதையில் காண்டம் பற்றி பேசியிருக்கிறார். மினோஸ் என்கிற அரக்கன், தன் உயிர் அணுவில் கலந்துவரும் நாகங்களையும் தேள்களையும் 'ஃபில்டர்’ பண்ணுவதற்காகத்தான் காண்டம் உபயோகப்படுத்தினானாம். அதுவும் ஆட்டின் சிறுநீரகப் பையை காண்டமாக உபயோகித்தானாம்.

சீனர்கள் பட்டுத்துணியையும் எண்ணெய்க் காகிதங்களையும் காண்டமாக உபயோகித்திருக்கிறார்கள். எகிப்தியர்கள் விலங்குத் தோல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜப்பானியர்கள் சில விலங்குகளின் கொம்புகளையே பயன்படுத்தியிருப்பதைப் படிக்கும்போது 'கிர்’ரென இருக்கிறது.

15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, உலகம் எங்கும் படையெடுப்புகளை நடத்திய மேற்கத்திய நாடுகளின் படைவீரர்கள், 'சிப்லிஸ்’ என்னும் பால்வினை நோயால் அவதிப்பட, அவர்களின் அறிவியல் உலகம் விழித்துக்கொண்டு யோசித்திருக்கிறது.

கலைடாஸ்கோப் - 3

16-ம் நுற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த காப்ரியேல் ஃபெலாப்பியோ என்னும் மருத்துவரின் கடும்முயற்சியால், தற்போதைய காண்டத்தின் முதல் வடிவம் கிட்டத்தட்ட உருவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு சில நூற்றாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு நாம் இன்றுபார்க்கும் ரப்பரால் ஆன காண்டம் பல்வேறு ஆராய்ச்சிகளின் வழியாக உருவாகியிருக்கிறது. காண்டம் கதை, இப்படி பல 'காண்டங்களையும்’ 'கண்டங்களையும்’ தாண்டி, இந்த நூற்றாண்டிலும் எக்ஸ்ட்ராவாக நீள்கிறது!