மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன் - 22

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

வேகம், அதிவேகம், அதீத வேகம்... இதுவே ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் வேதம்! 

உலகின் ஆபத்தான விளையாட்டுகளில் ஃபார்முலா 1 கார் பந்தயமும் ஒன்று. அதில் தற்போதைய நம்பர் 1 வீரர், லூயிஸ் ஹாமில்ட்டன்.

1984-ம் ஆண்டு கிறிஸ்துமஸ். இங்கிலாந்தின் ஸ்டீவனேஜ் நகரத்தில் ஆண்டனியும் அவரது மனைவி கார்மெனும் பண நெருக்கடியால் பாலகன் இயேசு பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை. ஆண்டனி ரயில்வேயில் சாதாரணத் தொழிலாளி. ஆனால், 1985-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பிறந்த அவரது மகனின் ஸ்பரிசத்தில், அவருக்குள் ஏதோ ஓர் உத்வேகம்.  அவர் தடகள வீரர் கார்ல் லூயிஸ் ரசிகர் என்பதால், மகனுக்கு 'லூயிஸ் கார்ல் டேவிட்சன் ஹாமில்ட்டன்’ என ரயில் நீளப் பெயர் வைத்தார்.

அதுவரைக்கும் ஆண்டனிக்கு வாய்த்தது ஓர் அவல வாழ்க்கைதான். ஆனால், எப்பாடுபட்டாவது தன் மகனுக்கு, இந்த உலகில் ஓர் அடையாளம் பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற வெறி ஆண்டனிக்குள் வேர்விட்டது. ஆனால், அவருக்கும் அவரது (வெள்ளை) மனைவி கார்மனுக்குமான கெமிஸ்ட்ரி, நாளடைவில் ஆவியானது. லூயிஸின் இரண்டாவது வயதில் இருவரும் விவாகரத்து பெற்றார்கள். லூயிஸ், அம்மாவிடமும் புதிய அப்பாவிடமும் வளர ஆரம்பித்தான்.

சிறுவயது முதலே லூயிஸுக்கு பொம்மைக் கார்கள் மீது காதல். அவற்றுடனேயே விளையாடுவான்; பேசுவான்; தூங்குவான். அவனது ஆறாவது வயதில் அம்மா கார்மன், ரிமோட் கார் வாங்கித் தந்தார். குழந்தைகள் சேனல் ஒன்று நடத்திய ரிமோட் கார் போட்டி ஒன்றில், 'பெரிய பசங்க’ளைத் தோற்கடித்து வாகை சூடினான் லூயிஸ். மகனைப் பார்க்க அடிக்கடி வந்துசென்ற ஆண்டனி, அவனது கார் காதலைக் கண்டுகொண்டார். karting என்ற சிறிய ரக, வேகம் குறைந்த கார் பந்தயங்களுக்கு மகனை அழைத்துச் சென்றார். ஒரு பார்வையாளராக மகன் காட்டிய உற்சாகம், தந்தையை முடிவெடுக்கச் செய்தது. லூயிஸின் எட்டாவது பிறந்த நாளில் சிறிய ரக கார் ஒன்றைப் பரிசாக அளித்தார் ஆண்டனி. டாப் கியர் மகிழ்ச்சியில் திளைத்தான் லூயிஸ்.

நம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன் - 22

'அப்பா, நான் ஃபார்முலா 1 வீரராகப் போகிறேன்’ -லூயிஸ் உறுதியாகச் சொன்னான். 'ஃபார்முலா 1... அய்யோ! அது பணக்கார விளையாட்டு. ஏழைக்கு ஏற்ற லாலிபாப்பாக வேறு ஏதாவது கேள் மகனே’ என்றெல்லாம் ஆண்டனி பின்வாங்கவில்லை. மகனுக்காக எதையும் செய்யும் துணிவுடன் களம் இறங்கினார். அதற்குப் பின் லூயிஸ், தந்தையிடமும் புதிய தாயிடமும் வளர ஆரம்பித்தான். அவர், லூயிஸிடம் சொன்ன விஷயம் ஒன்றுதான். 'எதைப் பற்றியும் யோசிக்காமல், நீ உன் லட்சியத்துக்காக உண்மை யாக உழை. இந்த வயதுக்கான சிற்றின்பங்களை மறந்துவிடு. அப்போதுதான் வருங்காலத்தில் வெற்றி உனக்குப் பேரின்பத்தைக் கொடுக்கும்.’

10-வது வயதில் லூயிஸ், இங்கிலாந்தின் Youngest Cadet Kart Champion விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டான். லண்டனில் நடந்த விழாவில் விருதை வழங்க வந்தவர் ரோன் டென்னிஸ். இங்கிலாந்தின் படா பிசினஸ்மேன்; மெக்லாரன் மெர்சிடிஸ் ஃபார்முலா 1 அணியின் தலைவர். லூயிஸின் ஆதர்சமான பிரேசிலைச் சேர்ந்த ஃபார்முலா 1 வீரர் அயிந்தோன் சென்னாகூட டென்னிஸின் மெக்லாரன் அணியில் இருந்து புகழ்பெற்றவரே. தனக்கு விருது வழங்கிய டென்னிஸிடம் லூயிஸ் சொன்ன வார்த்தைகளே அவன் வாழ்வின் திருப்புமுனையை ஏற்படுத்தின. 'நான் மெக்லாரன் அணியில் இணைந்து உலக சாம்பியன் ஆக விரும்புகிறேன்.’ இப்படித்தான் லூயிஸ், விருது விழாவில் டென்னிஸிடம் சொன்னான். அவர், லூயிஸுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துவிட்டுச் சொன்னார்... 'ஒன்பது வருடங்கள் கழித்து வந்து, என்னைப் பார்!’

ஃபார்முலா 1-தான் உலகின் அதிவேக கார் பந்தயம். இதில் அதிகபட்ச வேகம் மணிக்கு 360 கி.மீ. காரின் இன்ஜின்கள் நிமிடத்துக்கு 18,000 முறை சுழற்சி வேகத்தை எட்டக்கூடியவை. இந்த ஃபார்முலா 1-ல் நுழைய ஃபார்முலா 3-தான் நுழைவாயில்; அடுத்த அடி, ஃபார்முலா 2.

அடுத்தடுத்து ஜூனியர் கார் பந்தயங்களில் லூயிஸ் காட்டிய முனைப்பும், அடைந்த தொடர் வெற்றிகளும் மூன்று வருடங்களிலேயே டென்னிஸிடம் இருந்து அழைப்பை வரவழைத்தது. 'உனக்கு மெக்லாரன் பயிற்சி கொடுக்கும்’. 13-வது வயதிலேயே ஃபார்முலா 1 அணியில் இடம்பிடித்து புதிய சாதனை படைத்தார் லூயிஸ். 2000-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ரேஸிங் டிரைவர்ஸ் கிளப்பின் 'ரைஸிங் ஸ்டார்’ என அறிவிக்கப்பட்ட லூயிஸ், அடுத்த ஆண்டில் கார் பந்தய சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஷ§மேக்கருடன், காட்சிப் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அதில் ஷ§மேக்கர் 3-வது, லூயிஸ் 7-வது இடங்களைப் பிடித்தனர். அப்போதே லூயிஸின் செயல்திறனைக் கண்டு ஷுமேக்கர் சொன்ன வார்த்தைகள்... '16 வயதில் இந்தத் திறமை ஆச்சர்யமூட்டுகிறது. ரேஸ் வீரருக்கான அத்தனை அம்சங்களும் இவரிடம் இருக்கின்றன. நிச்சயம் இவர் சிறந்த ஃபார்முலா 1 வீரராக உருவெடுப்பார்.’

2005-ம் ஆண்டில் ஃபார்முலா 3 பிரிவின் உலக சாம்பியன் பட்டம் தட்டினார் ஹாமில்ட்டன். 2006-ம் ஆண்டில் ஃபார்முலா 2-க்கு முன்னேற்றம். கலந்துகொண்ட 21 பந்தயங்களில் ஐந்தில் முதல் இடம் பிடித்து அசாத்திய வெற்றிகள். பொதுவாக ஃபார்முலா 1 பந்தயங்களில், ஓர் அணியின் சார்பாக இரண்டு கார்கள் கலந்துகொள்ளலாம். இரண்டு முதன்மை வீரர்கள் தவிர, மேலும் இருவர் மாற்று வீரர்களாக இருப்பர். அணியானது குறைந்தபட்சம் ஒரு வருட ஒப்பந்தத்தில் சர்வதேச அளவில் வீரர்களை வளைத்துப்போடும். 2007-ம் ஆண்டு சீஸனுக்கான மெக்லாரன் மெர்சிடிஸ் ஃபார்முலா 1 அணியை டென்னிஸ் அறிவித்தார். முதல் வீரர், 2005, 2006-ம் ஆண்டுகளில் ஃபார்முலா 1 உலக சாம்பியன் ஃபெர்னாண்டோ அலான்ஸோ; (ஸ்பெயின் நாட்டுக்காரர். ரெனோ அணியில் இருந்து இடம் மாறியிருந்தார்) இரண்டாவது வீரர், லூயிஸ் ஹாமில்ட்டன்.

22 வயது லூயிஸுக்கு அனுபவம் போதாது. டென்னிஸ், தன் முடிவுக்காக வருத்தப்படப் போகிறார் என, பந்தய உலகின் சுப்புடுகள் விமர்சனம் வைத்தனர். இன்னொரு புறம், அலான்ஸோ - லூயிஸ் கூட்டணியில் மெக்லாரன் அணி மிரட்டப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியது. 2007-ம் ஆண்டின் முதல் பந்தயம் ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ. ரேஸ் தொடங்கப்போகிறது. தன் லட்சியக் கனவில் முதல் அடி வைத்த பூரிப்பில் 'நான்காவது பொசிஷனில்’ கொடி அசைப்புக்காக லூயிஸ் காத்திருக்கிறார். அந்த இடைவெளியில் ஃபார்முலா 1 பந்தய விதிகள் சிலவற்றைத் தெரிந்துகொள்வது வசதி.

வ்வொரு கிராண்ட் ப்ரீ போட்டியிலும் மூன்று தகுதிச் சுற்றுகள் நடக்கும். அதில் வீரர்கள் பெறும் இடங்களைப் பொறுத்து, அவர்களுக்கு ஃபைனலில் பொசிஷன் வழங்கப்படும். தகுதிச் சுற்றுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட வீரர், ஃபைனலில் 'முதல் பொசிஷனில்’ இருந்து காரைக் கிளப்பும் வாய்ப்பைப் பெறுவார். ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ பந்தயப் பாதையின் (Lap) சுற்றளவு 5.303 கி.மீ. அந்தப் பாதையை 58 முறை சுற்றி வரவேண்டும். மொத்தம் 307.574 கி.மீ. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் பந்தயப் பாதையின் வடிவம், தொலைவு எல்லாம் மாறுபடும். பொதுவாக முந்நூற்று சொச்ச கி.மீ பந்தயத் தொலைவுக்கான போட்டியானது, குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாவது நடைபெறும். பந்தயத்தின்போது வீரரும், அணியின் குழுவினரும் ரேடியோ தொடர்பில் இருப்பர். போட்டியின் நடுவே கார் டயர்களை மாற்ற, எரிபொருளை நிரப்ப, பழுதான ஒருசில பாகங்களை மாற்ற 'பிட் ஸ்டாப்’ (Pit stop) என்ற வசதி உண்டு. அது பந்தயப் பாதையை ஒட்டி தனி இணைப்புச் சாலையில் அமைந்திருக்கும் மெக்கானிக் ஷெட். போட்டியின் நடுவே அணி வீரர் பிட் ஸ்டாப்புக்கு வரும் கணத்தில், அணியின் குழுவினர் (சுமார் 20 பேர்) அங்கே தயாராகக் காத்திருப்பர். சட்டென நான்கு டயர்களைக் கழற்றி, புதிய டயர்களை மாட்டி, எரிபொருளை நிரப்பி, இன்னபிற விஷயங்களைச் சரிசெய்து முடிப்பதற்கான மொத்த அவகாசம் மிகச் சில நொடிகளே. அதில் தாமதம் உண்டானால், வீரரின் போட்டி முடிவில் பாதிப்பு உண்டாகும். போட்டியின்போது வீரர்கள் கார் பழுதினால் அல்லது வேறு காரணங்களினால் ரிட்டயர்டு ஆகலாம். போட்டியின் நடுவில் விபத்து ஏற்பட்டாலோ, வானிலை மோசமானாலோ மஞ்சள் கொடி சிக்னல் காட்டப்படும், Safety car என்ற ஒன்று பந்தயப் பாதைக்குள் நுழையும். விபத்துக்கு உள்ளான காரை மீட்புக்குழு கிளியர் செய்யும் வரை அல்லது வானிலையால் மோசமான பந்தயப் பாதை சரியாகும் வரை, சேஃப்டி காரைப் பின்பற்றித்தான் பந்தயக் கார்கள் செல்ல வேண்டும். முந்திச் செல்லக் கூடாது என்பது விதி.

லூயிஸ், 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் போட்டியிலேயே போடியம் பெருமை. (Podium என்றால் 1-2-3 என வெற்றி பெற்றவர்கள் நிற்கும் மேடை) ஷாம்பெய்னைப் பீய்ச்சியடித்து லூயிஸ் கொண்டாட, ஆண்டனியின் கண்களில் சந்தோஷச் சாரல். 'குருட்டாம்போக்குல ஜெயிச்சுட்டான்’ என விமர்சகர்கள் முகம் திருப்ப, அடுத்து நடந்த மலேசியா, பஹ்ரைன், ஸ்பெயின், மொனாக்கோ என நான்கு  ப்ரீக்களிலும், லூயிஸ் இரண்டாம் இடம் பிடித்து உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார். தான் கலந்துகொண்ட ஆறாவது போட்டியான கனடா கிராண்ட் ப்ரீயில் லூயிஸ், பிடித்தது முதல் இடம். மறுவாரம் நடந்த யு.எஸ் கிராண்ட் ப்ரீயிலும் முதல் இடம். தொடர்ந்து போடியம் கொண்டாட்டங்கள்.

இங்கிலாந்து மக்கள், தங்கள் தேசத்தின் புதிய ஹீரோ லூயிஸைக் கொண்டாடினர். இங்கிலாந்து போலீஸ், சாலையில் வேகமாக கார் ஓட்டுபவர்களை மறித்து 'உன் மனசுல  லூயிஸ்னு நினைப்பா?’ எனக் கேள்விகேட்கும் அளவுக்கு லூயிஸ் ஜுரம் எங்கெங்கும். தவிர, கறுப்பின மக்களை வெறுப்புடனோ அல்லது குற்றவாளியாகவோ பார்த்தே பழகிய ஆங்கிலக் கண்கள், சற்றே மரியாதையுடன் நோக்கத் தொடங்கின. உலக அளவில் கறுப்பினத்தவர் லூயிஸை உவகையுடன் நோக்கினார்கள்.

அடுத்த பந்தயத்திலும் லூயிஸ் முதல் இடம் பிடித்து, ஹாட்ரிக் சாதனை படைப்பார் என சகலரும் காத்திருக்க, அந்த பிரான்ஸ் பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த போட்டி இங்கிலாந்தில். சொந்த மண்ணில் எகிறிய எதிர்பார்ப்புடன் களம்கண்ட லூயிஸ் மூன்றாம் இடமே பிடித்தார். ஆனால், அறிமுக வீரராக தொடர்ந்து 9 போட்டிகளில் போடியம் ஏறி சாதனை படைத்தார். பத்தாவதில் (ஐரோப்பிய கிராண்ட் ப்ரிக்ஸ்) தகுதிச் சுற்றில் பெரும் விபத்தில் சிக்கினார். டயர் கழன்று தனியே ஓட, சுற்றுச்சுவரில் முட்டி காரின் ஒரு பகுதி சிதைய... அய்யோ, சென்னாவைப்போல லூயிஸையும் இழந்துவிட்டோமா என சில நொடிகள் அனைவரும் உறைய... காருக்குள்ளில் இருந்து மெதுவாக தன் கைகளை உயர்த்தி, அனைவரது நாடித் துடிப்பையும் இயல்பாக்கினார் லூயிஸ். மீண்டு வந்து ஃபைனலிலும் கலந்துகொண்டார். ஆனால், மழையின் குறுக்கீட்டால் தடுமாற்றம், டயர் பஞ்சர் போன்ற பிரச்னைகளால் 9-வது இடத்துக்குப் பின்தங்கினார். அந்த அக்டோபர் மாதத்தில் நடந்த சைனா கிராண்ட் ப்ரீயின் 30-வது சுற்றில் பிட் ஸ்டாப்புக்குச் செல்ல நினைத்து, வழிதவறிய ஆட்டுக்குட்டியாக ஓர் இடத்தில் சிக்கிய லூயிஸ், வேறு வழியின்றி ரிட்டயர்டு ஆனார். 'இவை எனக்குப் புது அனுபவம். தடுமாற்றங்களே புது மாற்றங்களுக்கு வழிவகுக்கும்!’  லூயிஸ் நம்பிக்கை ஸ்டீயரிங்கை இறுகப் பிடித்துக்கொண்டார்.

2007-ம் ஆண்டில் மொத்தம் 17 போட்டிகளில் கலந்துகொண்ட லூயிஸ் 109 புள்ளிகளுடன் அந்த வருடத்தில் உலக அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். சக மெக்லாரன் வீரரும், முந்தைய உலக சாம்பியனுமான அலான்ஸோ, அதே 109 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு இறங்க, அவருக்குள் ஈகோ கனல். நேற்று முளைத்த லூயிஸின் வளர்ச்சியை அலான்ஸோவால் ஜீரணிக்க முடியவில்லை. அணிக்குள் ஏகப்பட்ட முட்டல்கள், மோதல்கள், சர்ச்சைகள். அலான்ஸோ, மெக்லாரன் அணியில் இருந்து விலகினார். லூயிஸுடன் பின்லாந்தின் ஹெய்க்கி இரண்டாவது வீரராகச் சேர்ந்தார்.

ஃபார்முலா 1-ல் கலந்துகொள்ள வேண்டும்; பந்தயத்தில் முதல் இடம் பிடிக்க வேண்டும்; போடியத்தில் ஏற வேண்டும். நிறைவேறிய தன் ஒவ்வொரு கனவையும் டிக் செய்த லூயிஸ், அடுத்த கனவை வட்டமிட்டார். 'உலக சாம்பியன் ஆக வேண்டும்’! 2008-ம் ஆண்டு சீஸனில் லூயிஸ் கலந்துகொண்டவை 18 போட்டிகள். அதில் ஐந்தில் முதல் இடம். மொத்தம் 10 முறை போடியத்தில் ஷாம்பெய்ன் உடைத்தார். பஹ்ரைனில் 13-ம் இடம், ஜப்பானில் 12-ம் இடம், கனடாவில் ரிட்டயர்டு என பிரேக்டௌன்களும் உண்டு. இருந்தாலும் 2008-ம் ஆண்டு சீஸனில் ஒட்டுமொத்தமாக 98 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து 'உலக சாம்பியன்’ லட்சியத்தை அடைந்தார். அதைச் சாதித்த முதல் கறுப்பு இனத்தவர் லூயிஸ்.

2009-ம் ஆண்டின் ஆரம்பப் போட்டி ஆஸ்திரேலியா கிராண்ட் ப்ரீ. தகுதிச் சுற்றுகளிலேயே லூயிஸிடம் ஏதோ தடுமாற்றம். ஃபைனலுக்காக அவருக்குக் கிடைத்த பொசிஷன் 13. அதிலும் தகுதிச் சுற்றில் விதிமுறை மீறலாக 'கியர்பாக்ஸ்’ மாற்றியதால், 5 பொசிஷன் அபராதம் விதிக்கப்பட்டு, 18-க்குத் தள்ளப்பட்டார். அவ்வளவு பின்னால் இருந்து ரேஸை ஆரம்பிக்கும் எந்த ஒரு வீரரையும் அவநம்பிக்கையே அதிகாரம் செய்யும். ஆனால், லூயிஸ் எவ்வளவு பின்னால் இருந்து ரேஸை ஆரம்பித்தாலும், தன் சாதுர்ய வேகத்தால் வளைந்து நெளிந்து, இடைவெளியில் புயல் எனப் புகுந்து முதல் சுற்றில் பலரைப் பின்னுக்குத் தள்ளிவிடும் வல்லமைகொண்டவர். அன்றும் முதல் சுற்றின் முடிவில் 12-க்கு முன்னேறியிருந்தார். நான்காம் சுற்றில் 10-ம் இடம். 54-வது சுற்றில் 6-ம் இடம். 56-வது சுற்றில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் சென்றுகொண்டிருந்த செபாஸ்டியன் வெட்டலும் ராபர்ட் கியுபிகாவும் மோதிக்கொள்ள, சேஃப்டி கார் உள்ளே வருவதற்கான மஞ்சள் கொடி காண்பிக்கப்பட்டது. ஆக, போட்டியின் முடிவில் (58 சுற்று) லூயிஸ், நான்காவது இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தில் வந்த டொயாட்டோ அணி வீரர் ட்ரூலி, மஞ்சள் கொடி காண்பிக்கப்பட்ட பின் லூயிஸை முந்திச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ட்ரூலி போட்டியை முடித்த நேரத்துடன் அபராதமாக 25 நொடிகள் சேர்க்கப்பட்டு, அவர் 12-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். லூயிஸ் 3-ம் இடத்தில் சிரித்தார். ஆனால், 57-வது சுற்றில் லூயிஸ், தன் அணியிடருடன் நடத்திய ரேடியோ பேச்சு ஆதாரம், அத்தனையையும் புரட்டிப் போட்டது.

நடந்தது இதுவே. விபத்தால் சேஃப்டி காருக்காக மஞ்சள் கொடி காண்பிக்கப்பட்டதும், ட்ரூலி பந்தயப் பாதையைவிட்டு விலக, லூயிஸ் கணப்பொழுதில் முந்திச் சென்றுவிடுகிறார். பின், லூயிஸ் தவறை உணர்ந்து அணியினரிடம் ரேடியோவில் ஆலோசிக்கிறார். அணியினர் அறிவுரையின்படி ட்ரூலி மீண்டும் தன்னை முந்திச் செல்லும்படி வேண்டும் என்றே வேகத்தைக் குறைக்கிறார். வேறு வழியின்றி ட்ரூலி முந்திச் செல்ல, லூயிஸ் சமர்த்தாக நான்காவது இடத்தில் ரேஸை முடிக்கிறார். ஆக, தவறு ட்ரூலி மீது அல்ல, லூயிஸ் மீதுதான். மெக்லாரன் அணியினர் 'பொய் நாடகம்’ ஆடியிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட, லூயிஸ் அந்தப் போட்டியில் இருந்தே 'தகுதி நீக்கம்’ செய்யப்பட்டார்.

இதுவரையிலான தன் பந்தய வாழ்க்கையில் லூயிஸ் 'தகுதி நீக்கம்’ செய்யப்பட்டது அந்த ஒருமுறைதான். ஆனால், அதில் கிடைத்த அவப்பெயர் அவரை ஏகத்துக்கும் வதைத்தது. 'கறுப்பு இனத்தவர்களே இப்படித்தான். மோசடி மன்னர்கள்’ என்ற வார்த்தைகள் உயிரை எரித்தன. ஃபார்முலா 1 போட்டிகளை விட்டே விலகிவிடலாம் என்ற அளவுக்கு விரக்தியில் விழுந்தார். அடுத்தடுத்த போட்டிகளில் 13, 16, 18 இடங்களில் சரிந்து விழுந்தார். இனி லூயிஸ் அவ்வளவுதான்... காலி. போடியம் ஏறவே மாட்டார். வந்து விழுந்த வசவுகளை எல்லாம் டயருக்குக் கீழ் எலுமிச்சையாக நசுக்கித் தேய்த்துவிட்டு, அதே சீஸனில் ஹங்கேரியன் கிராண்ட் ப்ரீயில் முதல் இடம் பிடித்து, ஷாம்பெய்னுடன் பொங்கினார் லூயிஸ்.

நம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன் - 22

2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தனிப்பட்ட போட்டிகளில் முதல் இடம் வந்தாலும், லூயிஸால் மீண்டும் உலக சாம்பியன் ஆக முடியவில்லை. 4, 5-வது இடங்களைத்தான் பெற முடிந்தது. 2013-ம் ஆண்டில் அவர் மெர்சிடிஸ்பென்ஸ் அணிக்கு இடம் மாறினார். 2014-ம் ஆண்டின் ஆஸ்திரேலிய ரேஸ் தொடக்கமும் லூயிஸுக்குச் சோதனையாகத்தான் அமைந்தது. இரண்டாவது சுற்றிலேயே இன்ஜின் பழுதாக... எல்லாம் பாழ். 'லூயிஸ் எல்லாம் தற்காலிக அதிசயமே. அவரால் மீண்டும் உலக சாம்பியன் ஆக முடியாது’ என பந்தய உலக ரசிகர்கள், மற்ற வீரர்கள் மீது கவனம் குவிக்க ஆரம்பித்தனர்.

44 என்ற புதிய எண் கொண்ட காருடன் சிலிர்த்துக்கொண்டு சிறகை விரித்தார் லூயிஸ். 2014-ம் ஆண்டு சீஸனில் 19 போட்டிகளில் 11-ல் முதல் இடம் பிடித்தார். மூன்றில் 2-ம் இடம். இரண்டில் 3-ம் இடம். மூன்றில் ரிட்டயர்டு. மொத்தம் 384 புள்ளிகள். மீண்டும் உலக சாம்பியன். 2015-ம் ஆண்டிலும் அந்த வேகம் குறையவில்லை. கடந்த ஜூலை மாதம் வரை 5 போட்டிகளில் முதல் இடம் பிடித்து 202 புள்ளிகளுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். 30 வயதே ஆன லூயிஸ், இன்னும் பலமுறை உலக சாம்பியன் ஆகலாம். ஏழு முறை உலக சாம்பியனான மைக்கேல் ஷ§மேக்கரின் சாதனையை முறியடிக்கலாம். காலமும் களங்களும் காத்திருக்கின்றன.

'சுறா, இரைக்குத் தெரியாமல் பதுங்கி வந்து தாக்கும். சிறுத்தைதான் இரையைத் துரத்திவரும். தன் வேகத்தால் பிடித்தும்விடும். எனக்கு சுறா பிடிக்காது. சிறுத்தைதான் பிடிக்கும்’ - இது லூயிஸுக்குப் பிடித்த பன்ச்!

பயிற்சி திருவினையாக்கும்!

நம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன் - 22

ஃபார்முலா 1 வீரர்கள் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல், ஹாட் ஸீட்டில் உட்கார்ந்து ரேஸை முடிப்பதற்குள் வியர்வையிலேயே 3 கிலோ வரை எடை குறைந்துவிடுவார்கள். அதேசமயம் அதிக எடையும் ரேஸுக்கு ஆகாது. ஸ்டீயரிங் பிடிக்கும் கைகளும் பாதையை நோக்கும் கழுத்தும் தோள்பட்டையும் அதிக பலத்துடன் இருக்க வேண்டும். காலையில் இரண்டு மணி நேர ஓட்டம், ஒரு மணி நேரம் நீச்சல், பல மைல்களுக்கு சைக்கிளிங், நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஜிம்மில் கைகளுக்கும் தோள்பட்டைகளுக்குமான உடற்பயிற்சி... இவையே தன் உடலைப் பேண லூயிஸ் மேற்கொள்ளும் வழக்கமான பயிற்சிகள்!

டாப் கியர் சாகசம்!

2011-ம் ஆண்டு காலகட்டத்தில் ரேஸ் ட்ராக்கில் செபாஸ்டியன் வெட்டலின் (ஜெர்மனி) ஆதிக்கம்தான். 2011-ம் ஆண்டில் சீனா கிராண்ட் ப்ரீ (56 சுற்றுப் போட்டி) ஃபைனலில் முதல் பொசிஷனில் போட்டியைத் தொடங்கினார் வெட்டல்.  லூயிஸின் பொசிஷன் 3. போட்டி தொடங்கிய கணம், லூயிஸின் காரில் எரிபொருள் பிரச்னை. 35 நொடிகள் தாமதமாக இறுதி ஆளாகத்தான் ரேஸில் இறங்கினார். அத்தனை தாமதம் என்பது, ரேஸையே இழந்ததற்குச் சமம். ஆனால், லூயிஸ் இழந்த 35 நொடிகளை மறந்துவிட்டு, இருக்கிற 56 சுற்றுகளில் மட்டுமே கவனம் குவித்தார். சுற்றுக்குச் சுற்று வேகம் கூட்டினார். ஒவ்வொருவராகப் பின்னுக்குத் தள்ளினார். 52-வது சுற்றில் முதல் ஆளாகச் சென்ற வெட்டலையும் வெடுக்கென முந்தி, அடுத்த நான்கு சுற்றுகளிலும் விட்டே கொடுக்காமல் விரைந்து எல்லைக்கோட்டை முதல் ஆளாக எட்டினார்!

ஷாம்பெய்ன் சர்ச்சை!

நம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன் - 22

2015-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த சீன கிராண்ட் ப்ரீயில் லூயிஸ் முதல் இடம் பிடித்தார். போடியம் குதூகலத்தில் அருகில் இருந்த சீனப்பெண்ணின் முகத்தில் ஷாம்பெய்னைப் பீய்ச்சியடிக்க, அந்தப் பெண் தன் முகத்தில் விருப்பமின்மையை அப்பட்டமாகக் காட்ட சர்ச்சை பற்றிக்கொண்டது. 'இது பாலியல் அத்துமீறல்’, 'ரேஸ் வீரர்கள் பெண்ணை போகப்பொருளாகத்தான் நினைக்கிறார்கள்’, 'லூயிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கண்டனங்கள் எழுந்தன. ஆனால், போடியம் கொண்டாட்டத்தில் இது சகஜம் என்ற எதிர்க் கருத்துகளும் எழ, சர்ச்சை வலுவிழந்தது!