கவிதை: லீனா மணிமேகலை, ஓவியம்: டிராட்ஸ்கி மருது
உரையாடல் சற்று இளகும்போது
கைகளின் பின்புறத்தில்
முத்தமிடத் தோன்றியிருந்த நாட்கள்
திரை மின்ன மின்ன
அழைப்பு வரும்போது
உன் உள்ளங்கை வெப்பமென
கைப்பேசி
என் கன்னங்கள் பழகியது
சாப்பிட்டியா

உன்னைத் தேடுது


செய்திகளை ஸ்மைலிகளை
தட்டச்சு செய்து செய்து
விசைகள் தேய்ந்த நாட்கள்
மௌனத்தை
குரல் பதிவுசெய்து அனுப்பிக்கொண்டோம்
கைப்பேசி அதிர்வுகளில்
நம் இதயத்துடிப்பு விகிதம்

உன் எண்ணை நிலவென்ற பெயரிலும்
என் எண்ணை மழையென்ற பெயரிலும்
நம் கைப்பேசிகளில் பதிந்துகொண்ட நாட்கள்
இரவையும் பகலையும்
அழைப்புகளே அறிவித்தன
உயிருடன் இருப்பதா இறப்பதா என்பதையும்கூட
குரல்களின் முடிச்சுகளே தீர்மானித்தன
ஒவ்வொரு கணத்தையும் அதன் வண்ணத்தோடு
உடனுக்குடன் பகிர்ந்துகொண்டோம்
நீ முதலில் தொலைபேசியை அணை
இல்லை நீ அணைத்துவிடு
முக்காலமும் முடிய பேசியும் மனமில்லாமல்
போட்டிபோட்ட நாட்கள்
கைப்பேசியின் முகப்பில் உன் புகைப்படம்
மூக்கையும் உதட்டையும் புன்னகையையும்
ஒவ்வொரு தரமும் புதிதாய்ப் பார்த்தும்
நெஞ்சோடு அணைத்தும்
போதாமை தூக்கமின்மை
என் அழைப்பை நீ தவிர்த்த நாட்கள்
மறுமுனையில் யாருமில்லை
எனத் தெரிந்தும்
பேசவேண்டியதைப் பேசித் தீர்த்துவிட்டுத்தான்
துண்டிப்பேன்
பேய் பூதங்களை
நீ நம்பத் தொடங்கியிருந்தாய்
கைப்பேசிக்குக் கால்கள் இல்லை என
முகநூலில்கூட நிலைத்தகவலிட்டிருந்தாய்
அன்பு என்பது
நிபந்தனையற்ற மதிப்பு என்றாய்
அன்பு என்பது உணவு மட்டுமல்ல உணர்வும்தான் என்றேன்
நாம் தொடர்புற்றிருக்கவே கூடாது
நீதான் தொடங்கிவைத்தாய்
இல்லை நீதான் முதலில்
குறுஞ்செய்தி அனுப்பினாய்
வார்த்தைகள் நொறுங்க உறவு உடைய
கைப்பேசி ரத்தம் கசிந்த நாட்கள்
பிரத்யேக ரிங்டோன்களை அழித்தோம்
எண்களை முடக்கினோம்
பின் நீக்கினோம்
பருவங்கள் மாறின
நேர்கண்டோம்
நீ நிலவாகவே இருந்தாய்
நானும் மழையாகவே இருந்தேன்
தவறவிட்டது காலமா நாமா
கண்கள் கேட்டுக்கொண்டன
கைப்பேசிகளுக்குப்
பிறகு வேலையிருக்கவில்லை!