Published:Updated:

சொல்வனம்

ஓவியங்கள்: ஸ்யாம்

மந்திரக்காரி! 

என்னை ஒரு நாய்க்குட்டியாக

சொல்வனம்

இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக

தலையணை மெத்தையாக

கண்ணீர்த்துளிகளை ஒற்றி

மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக

மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல்

அவளிடம் இருக்கிறது.

பிறர் காணும்போது

அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும்

என்னை மாற்றிக்காட்டும்

மாயவித்தைக்காரி அவள்.

வார நாட்களில்

என்னை நானாக்கி

வாசல் நிலையில் சாய்ந்து நின்று

வழியனுப்பிவைப்பாள்

மந்திரக்கோலை முதுகில் மறைத்து!

- சேயோன் யாழ்வேந்தன்

நீயும்... நானும்!

லட்சுமி வீட்டுக்கும் பக்கத்து வீடுதான் கீர்த்தி வீடும்.

லட்சுமியும் கீர்த்தியும் விளையாடுவது சேர்ந்துதான்.

சொல்வனம்

லட்சுமி நாய்க்குப் பயப்படுவதைப்போல

கீர்த்திக்கும் நாயென்றால் பயம்.

லட்சுமிக்கும் கீர்த்திக்கும் ஜெம்ஸ் மிட்டாய் உயிர்.

லட்சுமி வைத்துள்ள

மஞ்சள் கலர் பென்சில் பெட்டிபோலவே

கீர்த்தியும் வாங்கிக்கொண்டாள்.

லட்சுமியும் மூன்றாம் வகுப்புதான்

கீர்த்தியும் மூன்றாம் வகுப்புதான்.

லட்சுமி படிப்பது பஞ்சாயத்துப் பள்ளியில்

கீர்த்தி படிப்பது ஆங்கிலப் பள்ளியில்!

- ந.கன்னியக்குமார் 

வடியும் வன்மம்!

வகுப்பினிடையே

சுண்டுவிரல் உயர்த்தி

அனுமதிபெற்றுச் சென்ற

சொல்வனம்

ஆறாம் வகுப்புச் சிறுவன்

சத்துணவுக்கூடத்தின் சுற்றுச்சுவர் அருகே

சமையல் வாசனையைச் சுகித்தபடி

சென்ற ஆண்டு மாணவர்கள்

கிழித்தெறிந்துவிட்டுப் போன புத்தகம் ஒன்றின்

சிதைந்த அட்டை மீது நின்றபடியே போய்க்கொண்டிருக்கிறான்.

பிடிக்காத பாடம்

பிடிக்காத ஆசிரியர்

பிடிக்காத பள்ளியென

அவனது வன்மம் வடிய வடிய

சிறுநீரில் ஊறித் திளைத்தபடியிருக்கிறார்

நமது மாண்புமிகு மெக்காலே!

- கே.ஸ்டாலின்

பாடல் வரலாறு!

கரகர குரல்கள்கொண்ட

தவளையின் பாடல்கள் தொடர்கின்றன.

இன்னிசைப் பாடல்களின் முன்பு

சொல்வனம்

அவை இரைச்சலாகப் படலாம்.

தவளையின் பாடல்கள்

தல வரலாறு கொண்டவை.

அப்பார்ட்மென்டுக்குள்

மியூசிக் பிளேயர்களும்

5.1 ஸ்பீக்கர்களும்

முளைத்து வரும் வரை

அங்கு வயல்கள் இருந்தன.

வயல்களில் தவளைகள்

பாடிக்கொண்டிருந்தன.

அதே தவளைகள்

இப்போது அப்பார்ட்மென்டிலும்

பாடத்தான் செய்கின்றன

'டிஸ்கவரி’யிலும்

'நேஷனல் ஜியாகிரபி’யிலும்!

- விகடபாரதி