சார்லஸ்
செம கலர்ஃபுல் செல்ஃபி கோலாகலமாக அரங்கேறியது தினேஷ் - தீபிகா காதல் திருமணம்.

கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் - தெலுங்கு இந்து; ஸ்குவாஷ் தீபிகா பலிக்கல் - மலையாளி கிறிஸ்தவர். எனவே, ஒரு நாள் கிறிஸ்தவ முறைப்படியும் இன்னொரு நாள் இந்து முறைப்படியும் 'இரு நாட்கள் திருவிழா’வாக அரங்கேறியது திருமணம்.
தீபிகாவுக்கும் தினேஷூக்கும் ஜிம் அறிமுகத்தில் முளைத்தது நட்பு. பல நட்புத் தருணங்களுக்குப் பிறகு ஸ்குவாஷ் விளையாட தீபிகா லண்டன் சென்றிருக்கிறார். 'வாரணம் ஆயிரம்’ சூர்யா ஸ்டைலில் லண்டனுக்குச் சென்று இறங்கி, தீபிகாவுக்கு ஆச்சர்யம் தந்திருக்கிறார் தினேஷ். 'பூக்கள் பூத்த தருணம்...’ நட்பு, காதலாக மாறிய கணங்கள் அவை. இருவரின் பெற்றோரும் காதலுக்கு 'டபுள் டிக்’ அடிக்க, மிக ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. இப்போது திருமணம்!
வழக்கமான சம்பிரதாயங்களுடன் புதுப்புது தீம் பிடித்து, ஜாலி கேலி கொண்டாட்டமாக திருமண விழாவைக் களைகட்டவைத்தது தீபிகாவின் விருப்பமாம். கிறிஸ்தவ முறைப்படி திருமணத்துக்கு 'வெட்டிங் கவுன்’ அமெரிக்காவில் வடிவமைத்துத் தயாரித்து இறக்குமதி செய்திருந்தார் தீபிகா. தினேஷ் கார்த்திக்கின் உறவினர்கள் தீபிகாவை, தங்கள் வீட்டுக்கு வரவேற்பதுபோல ஒரு வீடியோ தயாரித்திருந்தார்கள். தாலி கட்டும் வைபவம் முடிந்ததும் அந்த வீடியோவை சர்ப்ரைஸாக ஒளிபரப்பியிருக்கிறார்கள். 'ஓமணப்பெண்ணே...’ பாடலுடன் ஒளிபரப்பான அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்ததும் நெகிழ்ச்சியில் கண்கலங்கிவிட்டார் தீபிகா.
ஸ்குவாஷில் உலக நம்பர் 1 ஆவேன் என உறுதியோடு உழைத்துவரும் தீபிகா, தற்போது இருப்பது 13-வது ரேங்கில். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற வின்னிபெக் ஓப்பன் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றார் தீபிகா. 2012-ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2014-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்.

தனது கிரிக்கெட் வாழ்வில் ஃபிளைட் மோடில் இருக்கிறார் தினேஷ் கார்த்திக். ஐ.பி.எல்-லுக்குப் பின் எந்த கிரிக்கெட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. தேசிய அணியில் இடம்பிடிப்பதற்காக கடுமையாகப் பயிற்சி எடுத்துவருகிறார் மாப்பிள்ளை.
திருமணம், ரிசப்ஷன் முடிந்த பிறகு ஆட்டம் ஆரம்பம். இரவு 10 மணிக்குத் தொடங்கிய பார்ட்டி, நள்ளிரவு 2 மணியைத் தாண்டியும் நீடித்தது. ஐ.பி.எல் பாடலுடன் ஆரம்பமான பார்ட்டிக்கு ஹோட்டல் பால் ரூமுக்குள் சைக்கிளில் வந்து இறங்கினார் தினேஷ். பின்னர் புதுமணத் தம்பதி இந்தி மற்றும் தமிழ்ப் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். அந்த நடனத்துக்காக 10 நாட்கள் வீட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டாராம் தீபிகா. 'வாட் எ கர்வாட்’, 'டானு டானு...’ பாடல்களுக்கு தீபிகா ஆடிய ஆட்டம்... சினிமா ஹீரோயின்களுக்கே செம சவால் பெர்ஃபார்மன்ஸ்.

'லவ் ஆல்’ சொல்லி, ஸ்குவாஷ் மைதானங்களில் ஜொலித்த தீபிகாவின் வாழ்க்கையில்... 'லவ் தினேஷ்’ கேம் ஆரம்பம். வாழ்த்துகள் செல்லம்!