
மருத்துவர் கு.சிவராமன், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி
ஆயிரக்கணக்கான வருடங்களாக பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதி, கிலுக்கை ஆட்டிச் சிரித்துக் கொண்டிருந்த குழந்தைகளை, 'அதெல்லாம் ஆய்... அன்ஹைஜீனிக்’ என படித்த அம்மாவும் அப்பாவும் அதட்டியதில், Oleophobic coating tempered கண்ணாடியுடன் (கீறல்களைத் தவிர்க்க, டச் ஸ்கிரீன்களில் கெமிக்கல் தடவப்படும் நடைமுறை) இருக்கும் ஸ்மார்ட்போன்களை வைத்து விளையாடிச் சிரிக்கிறார்கள். 'பூவரசம்பூ பீப்பியை வாய்ல வைக்கலாமா?’ எனப் பயப்படும் புத்தி, 'புது சிலிக்கான் கெமிக்கல் நாவில் உரசலாமா?’ என அச்சப்படுவது இல்லை. கட்டற்றுத் திரியும் அலைபேசிகள், நம் ஆரோக்கியத்துக்கு என்ன உலைவைக்கப்போகின்றனவோ? கொஞ்சமும் உதாசீனப்படுத்தாமல் உற்றுப்பார்க்கத்தான் வேண்டும். அப்படி பல விஷயங்களை உற்றுப்பார்த்ததில், நாம் இப்போது ஓரளவு விவரம் தெரிந்துகொண்டிருக்கும் இன்னொரு விஷயம்... மார்பகப் புற்றுநோய்!
'அம்மாவுக்கு இருந்தால்தானே எனக்கு மார்பகப் புற்று வரும் அபாயம் உண்டு. ஏஞ்சலினா ஜோலிகூட தன் ரத்தச் சொந்தங்களுக்கு புற்றுநோய் இருந்ததாலும், தன் ரத்தத்திலும் அந்த மரபணு இருந்ததைக் கண்டறிந்த பிறகுதானே தன் மார்பகத்தை நீக்கிக்கொண்டார்? பாரம்பர்யக் காரணம் இல்லாமல் மார்பகப் புற்று வர வாய்ப்பு உண்டா?’ என்றெல்லாம் கேட்டால், 'ஆம்... வரக்கூடும்’ என்கின்றன Epidemiology எனும் நோய்ப்பரவு இயலைப் படிக்கும் துறைசார் முடிவுகள்.
இன்றைக்கும், மார்பகப் புற்றுநோயில் அதிகம் அவதிப்படுவோர் வளர்ந்த கண்டங்களான அமெரிக்க, ஐரோப்பிய தேசப் பெண்கள்தாம். உலகின் 24 சதவிகிதப் புற்றுநோயாளிகள் மார்பகப் புற்றுநோயினர்தான். மாதவிடாய் முடியும் சமயத்தில் அதிக உடல் எடையுடன் இருப்பது, குழந்தைப் பருவத்தில் அதிக ஊட்ட உணவால் ஏற்படும் உடல் எடை, அதனாலேயே வெகுவிரைவில் பூப்படைதல், தாய்ப்பால் கொடுக்காமல் இருத்தல், முதல் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடப் பயன் படுத்தும் கருத்தடை மாத்திரைகள்... என சில திட்டவட்டக் காரணங்களை மார்பகப் புற்றுக்கான காரணங்களாகச் சொல்கிறது மருத்துவ உலகம்.

வறுமையாலும் 'பெண்’ என்ற உதாசீனத்தாலும் மெலிந்து, ஒடுங்கி, தன் 15-வது வயதில் பூப்பெய்தி, 20 வயதுக்குள் திருமணமாகி, ரேஷன் கார்டில் அடிஷனல் ஷீட் வாங்கி ஒட்டி எழுதும் அளவுக்கு, ஒரு கிராமத்தையே பெற்றெடுத்த கொள்ளுப் பாட்டி, பாட்டி வகையறாக்களுக்கு மார்பகப் புற்று வந்தது இல்லையே... ஏன்? 15 வயது முதல் அவர்கள் உடலில் தொடர்ச்சியாக நடைபெற்ற ஹார்மோன் மாற்றங்களே மார்பகப் புற்று வராது இருக்க உதவியிருக்கக்கூடும் என்கிறது ஆய்வு அறிவியல். அதே பாட்டிகளில் பலர் இடையிடையே நடந்த கருச்சிதைவு, பிரசவகால ரத்தப்போக்கு என, பல காரணங்களால் அவதியுற்றதும் மரணமுற்றதும், இந்தப் பார்வையின் இன்னொரு பக்கம்.
ஆனால், இப்போது நகர்ப்புறத்துப் பெண் குழந்தைகளுக்கு, குறிப்பாக படித்த, பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் வீட்டுப் பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஊட்டம் கொஞ்சம் அதிகம்தான். மூன்று வயது வரை சாப்பிட மறுத்துவந்த குழந்தை, திடீரென அத்தனை குப்பை உணவுக்காகவும் அடம்பிடிக்கத் தொடங்க, ஆறு வயதிலேயே 'ஒபிசிட்டி’க்குக் குடியேறுகின்றனர். இதனாலேயே 10 வயதிலேயே பூப்பெய்தத் தொடங்குகின்றனர். இப்படி கூடுதலாகக் கொடுக்கப்படும் ஊட்ட உணவு, அந்தக் குழந்தையின் அன்னையின் மரபணுவில் தேமே என உறங்கிக்கிடந்த Oncogene - ஐ (சாதாரணச் செல்லை கேன்சர் செல் ஆக்கும் வல்லமைகொண்ட ஜீன்... ஆன்கோஜீன்) குழந்தையின் உடம்புக்குள், அடித்து எழுப்பிவிட வாய்ப்பு உள்ளது என்கிறது இன்றைய புரிதல்.
அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் புற்றுமரபை (Oncogene) உசுப்பிவிடும் பொருளில் ஒன்றாக 'சோயா’வை சமீபமாகச் சந்தேகிக்கிறது இன்றைய அறிவியல். புற்று வராமல் பாதுகாக்க உதவும் என முதலில் பேசப்பட்ட சோயா, இப்போது புற்றை உண்டாக்கும் காரணியோ என்றும் ஆராயப்படுகிறது. சோயா பால், மாதவிடாய் முடிவில் வரும் பிரச்னைகளுக்கு (Peri-menopausal syndrome) நல்லது எனவும் பரிந்துரைக்கப்பட்டது. காரணம் சோயா புரதம், ஒரு தாவர ஈஸ்ட்ரோஜன். மாதவிடாய் முடியும் சமயம் ஈஸ்ட்ரோஜன் குறைவால், மனப் பதற்றம், அடிக்கடி காரணம் இல்லாமல் திடீரென வியர்ப்பது, பயம், குழப்பம், எரிச்சல் எனும் பல குழப்பங்களைக் களைய இந்தத் தாவர ஈஸ்ட்ரோஜன் அடங்கிய சோயா பானம் பயன்பட்டது. ஆனால், சில நேரங்களில் அவசியம் இல்லாமல் இந்தத் தாவர ஈஸ்ட்ரோஜன் அதிகம் சேர்ந்தால், ஏற்கெனவே கொஞ்சம் கூடுதல் எடையுடன் இருக்கும் அந்தப் பருவத்துப் பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் பாசிட்டிவ் வகை மார்பகப் புற்று (அதுதான் உலகம் எங்கும் பெருவாரியாக வரும் மார்பகப் புற்று) வரக்கூடுமாம். அதே சமயம் ஆய்வாளர்கள், சோயாவை அதிகம் பயன்படுத்தும் மலேசியா, கொரியா, ஜப்பானில் இந்த வகைப் புற்று, அமெரிக்க, ஐரோப்பிய மகளிரை வருத்துவதுபோல அதிகம் இம்சிப்பது இல்லை என்கின்றனர். அது ஏனாம்? கிழக்கு ஆசிய நாடுகளில் சோயாவை அப்படியே சுண்டல் போன்றோ, அதன் பால் கட்டியாகவோ (டொஃபூ) அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் சோயாவில் இருந்து செறிவூட்டப்பட்ட Soy Isoflavones அடங்கிய புரதப் பொடியைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் செறிவூட்டப்பட்ட புரதம் இப்போது நம் நாட்டிலும் ஏராளமாக, காலையில் குடிக்கும் குறிப்பிட்ட ஊட்டத்துக்கான உணவாக, நியூட்ரிஷனல் பானமாக, 'இட்லி, தோசை எல்லாம் வேணாம். இந்தப் பானம் மட்டும் குடிங்க’ எனச் சந்தையில் விற்பனை செய்யப்படும் எடை குறைப்பு பானமாக, சில சாக்லேட்டுகளில் மென்மை தருபனவாக ஏராளமான வடிவங்களில் உட்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 8,000 வருடங்களாக சோயா, சீனாவிலும் ஜப்பானிலும் அன்றாட உணவாக இருந்த ஒன்று. கி.பி.1750-களில் கிழக்கு இந்திய கம்பெனியின் உலகளாவிய சுருட்டலில், சோயாவும் அமெரிக்காவுக்குப் போனது. அதன் பின்னர் 1997-ம் ஆண்டில் சோயாவில் Glyphosate tolerant எனும் மரபணு மாற்றம் செய்த மான்சாண்டோ நிறுவனம், 2010-ம் ஆண்டில் கிட்டத்தட்ட உலகின் 93 சதவிகித சோயாவையும் மரபணு மாற்றப்பட்ட சோயாவாக்கி, சோயா வணிகத்தில் கோலோச்சியது. அதே காலகட்டத்தில்தான் சோயாவை பெருவாரியாக முதன்மைப்படுத்தி வணிகப்படுத்தின அமெரிக்க நிறுவனங்கள். மிக விலை குறைவான கூடுதல் புரதம், வெஜிடேரியனின் முதல் தேர்வு, ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் குப்பி என்றெல்லாம் கூவிக் கூவி உலகம் எங்கும் சந்தைப்படுத்தப்பட்டது சோயா. அதே சோயா மீது இப்போது சந்தேகம் எக்கச்சக்கமாக எழும்பிவருகிறது. வணிகத்துக்கும் அறிவியலுக்குமான கூட்டணி இன்றைய அரசியல் கூட்டணியைவிட லாபவெறி கொண்டது. அவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை, மாதவிடாய் முடிவில் உள்ள, உடல் எடை அதிகம் உள்ள பெண்கள், பெண் குழந்தைகளில் கூடுதல் எடையுடன் இருப்பவர்கள் கொஞ்சம் சோயாவைத் தூர வைப்போம்.
'பால் கட்டியிருக்குன்னு நினைச்சேன் டாக்டர்’ எனப் பாலூட்டும் இளம் அன்னையும், 'இது மாதவிடாய்க்கு முந்தைய மார்பக வலின்னு நினைச்சேன்’ எனும் இளம் மகளிரும்கூட இன்று மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகும் கொடுமை அதிகரிக்கிறது. முன்பு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகம் வரும் என அறியப்பட்ட இந்தப் புற்று, இப்போதைய புள்ளிவிவரப்படி 30-40 வயதினரைக் குறிவைத்திருக்கிறது. அதிலும் அந்த வயதில் இருக்கும் நகர்ப்புறப் பெண்களுக்கான சவால்கள் ஏராளம். இப்படி இளம் தாய்மார்களுக்கு மார்பகப் புற்று அதிகரிக்க என்ன காரணம்? உணவுக்கும் வாழ்வியலுக்கும் மார்பகப் புற்றுக்குமான தொடர்பு மிக முக்கியம் என்கிறது எபிஜெனிட்டிக்ஸ் துறை.
நாம் உணவில் துளித்துளியாகச் சேர்க்கும் பல பொருட்கள் புற்று போன்ற அபாயங்களைத் தவிர்க்கும். குறிப்பாக மஞ்சள். கிட்டத்தட்ட 250 உயர்தர ஆய்வறிக்கைகள் மஞ்சளின் பயனை உறுதிப்படுத்தியுள்ளன. அதுவும் வெகு சமீபத்தில் மஞ்சளை முழுமையாக உட்கிரகிக்க பாலுடன் சேர்த்துப் பருக வேண்டும் எனச் சொல்லியுள்ளனர். இந்த விஷயம் தெரியாமலேயே நாட்டு மாட்டுப்பாலில் கொஞ்சம் மஞ்சள் பொடி, கொஞ்சம் மிளகுத்தூள் போட்டு, பனக்கற்கண்டு சேர்த்து வெங்கல டம்ளரில் நலம் பரிமாறினாள் எம்.பி.பி.எஸ் படிக்காத நமது கிராமத்து ஆத்தா.
மூளை நரம்புகளில் இருந்து செய்திகளைக் கடத்தும் செயல் முதல், உடலின் செல்களில் பல சிக்னல்களைத் தர உதவும் மிக முக்கியமான உணவுப்பொருள், Choline. இந்த Choline கீரை, முட்டை, மீன், பிரக்கோலி, தக்காளி, பச்சைப் பட்டாணி என சாதாரண உணவுகளில் உள்ள விஷயம். அவற்றை அடிக்கடி பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்!
ரயில் நெரிசலில், அலுவலக அழுத்தத்தில், வளர்ந்த குழந்தையின் உதாசீனத்தில், நடுத்தர வயதுப் பெண்ணுக்கான வலிகள் ஏராளம். இந்த வலிகள் தரும் மன அழுத்தம், நேரடியாக புற்றை விதைப்பதாக ஆய்வுகள் இன்னும் அழுத்தமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த மன அழுத்தத்தில் அவளது தவறான உணவுத்தேர்வு, அடிக்கடி மாறும் அவளது ரத்தச் சர்க்கரை அளவும் அதனால் அப்போது கூடுதலாக ரத்தத்தில் கரைந்து திரியும் குளூக்கோஸ், ஆன்கோஜீனை (புற்று மரபணுவை) உறுதியாக உசுப்பும் என்கிறது அறிவியல்.
மார்பகப் புற்றை விரட்ட தினமும் ஒரு கப் பச்சைத் தேநீர், இயற்கை விவசாயத்தில் விளைந்த தக்காளியில் செய்த குழம்பும் தொட்டுக்கொள்ள மஞ்சள் தூவிய புராக்கோலி பொரியலும், ஒமேகா3 உள்ள கடல் மீன் கொண்ட மெனு மட்டும் பத்தாது. அவள் விசும்பலைக் கேட்கும் மனமும், அதை ஆற்றுப்படுத்தும் அரவணைப்பும்கூட அவசியம்!
- உயிர்ப்போம்...