Published:Updated:

வைகை நதி நாகரிகம் ! - 6

வைகை நதி நாகரிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம்

மதுரை மண்ணுக்குள்.. ரகசியங்களின் ஆதிநிலம் !

வைகை நதி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் இருக்கும் இடம், அழகன்குளம். இது ஒரு துறைமுக நகரம். தூரதேசங்களில் இருந்து கப்பல்கள் சதா வந்து போய்க்கொண்டிருக்கும் இடம். 

பனை அடர்ந்த அதன் கடற்கரையில், ஒரு நண்பகல் நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடற்கரை மணலில் கால் வைக்க முடியவில்லை. வீட்டில் சமையல் செய்ய பானை ஒன்றை வாங்கிவந்த ஒருவன், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் கரையில் இருக்கும் பனைமர நிழலில் உட்கார்ந்தான்.  கண்கள் மூடி சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டவன், கண்களைத் திறந்து பார்த்தான். கடலில் அசைந்தாடியபடி கப்பல் ஒன்று கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்து போவது ஒன்றும் புதிது அல்ல. அவன் தன் வாழ்நாளில் எத்தனையோ கப்பல்களைப் பார்த்தவன்தான். ஆனால், நீல நிறக் கடலில் எழும் அலைகளினூடே ஏறி இறங்கியபடி வரும் அந்தக் கப்பல் தனித்துவமான அழகோடு இருப்பதை அவன் கூர்ந்து கவனித்தான். அதன் அழகு அவனை சும்மா இருக்கவிடவில்லை. தரையில் கிடந்த உலோகக் குச்சி ஒன்றை எடுத்தவன், அந்தக் கப்பலைப் பார்த்தபடியே கையில் வைத்திருக்கும் பானை ஓட்டின் மேல் கீற ஆரம்பித்தான். அவனது கீறல்களின் மூலம் கொஞ்ச கொஞ்சமாக அந்தக் கப்பல் கோட்டோவியமாகப் பதிவானது.

சிறிது நேரத்தில் கப்பல் துறைமுகம் வந்தடைந்தது. அவன் வெயில் தாழ்ந்தவுடன் எழுந்து வீட்டுக்குச் சென்றுவிட்டான். ஆனால் துடுப்புகள் இழுக்கப்பட்டு, அலைகளுக்கு இடையே முன்னேறும் அந்த ரோமானியக் கப்பலின் ஓவியம் மண்பானையில் நிலைகொண்டுவிட்டது. இது ஒரு தற்செயலான பதிவுதான்; ஆனால், தத்ரூபமான பதிவு.

பானை ஓட்டில் பதிவான இந்த ஓவியம், ஓர் அபூர்வ ஆவணமாக மாறும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கரையில் அலை விடாமல் மோதுவதுபோல காலம் வந்து அடித்து, அடித்து அந்தத் துறைமுகத்தையே மண்மூடச் செய்தது. காட்சிகள் மாறின; நூற்றாண்டுகள் உருண்டோடின; அந்த இடத்தில் ஒரு துறைமுகம் இருந்ததை இலக்கியத்தில்கூட யாரும் பதிவுசெய்யாமல் போயினர். தமிழர்களின் நினைவில் இருந்தே அழகன்குளம் அழிந்துபோனது. சுமார் 2,000 ஆண்டுகள் கழிந்த பின்னர், தமிழ்நாடு தொல்லியல் துறையினர் 'கோட்டைமேடு’ என மக்களால் இன்று அழைக்கப்படும் அந்த மண் மேவிய பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தினர்.

அப்போது மண்ணுக்குள் நொறுங்கிய நிலையில் சிதையுண்டு கிடந்த பானை ஓடுகள் கிடைத்தன. அதில் கையளவு அகலம் கொண்ட ஒரு பானை ஓட்டில் கீறி வரையப்பட்ட கப்பலின் கோட்டோவியம் ஒன்று இருந்தது. இதை ஆய்வுசெய்த தொல்லியலாளர்கள், இதில் வரையப்பட்டுள்ளது அன்றைய ரோமானியக் கப்பல் என்றும், இது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் உறுதிப்படுத்தினர். நெடுங்காலமாக கப்பல்கள் கடலில் இருந்து கரைக்கு வந்து சேர்ந்த ஒரு பழைய துறைமுகத்தில், முதன்முறையாக மண்ணுக்குள் இருந்து ஒரு கப்பல் மேலெழுந்து கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

பானை ஓட்டில் அந்தக் கப்பலின் கோட்டோவியம் வரையப்பட்டது என்னவோ ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆனால் தற்செயல்கள்தான், பல நேரங்களில் வரலாற்றை வழிநடத்துகின்றன. பல்லாயிரம் மைல் தொலைவு நடந்த வணிகத்துக்கு 16 சென்டிமீட்டர் அகலம்கொண்ட ஒரு பானை ஓடுதான் சாட்சியம். மண் பானையின் மகத்துவம் சமையலில் மட்டும் அல்ல... சரித்திரத்திலும் இருக்கிறது.

கிரேக்கர்களும் ரோம் நாட்டினரும் அந்தக் காலத்தில் 'யவனர்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் தமிழகத்தோடு நடத்திய கடல் வணிகம் குறித்து பல்வேறு சான்றுகள் உள்ளன.

புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம்... உள்ளிட்ட பல சங்க இலக்கிய நூல்களில் தமிழ்ப் புலவர்களும், கிரேக்கத்தைச் சேர்ந்த பெரிபுளஸ், ஸ்டிராபோ, பிளினி, தாலமி ஆகியோரும் இந்த வர்த்தகத்தை விரிவாகப் பதிவுசெய்துள்ளனர். இந்த நெடிய கடல் போக்குவரத்து பற்றி, எழுத்தில் எழுதப்பட்ட எண்ணற்ற ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்கள் உண்டா என்ற கேள்விக்கு, சமீப காலமாக பல இடங்களில் இருந்து பதில்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அழகன்குளத்தில் கண்டறியப்பட்ட பானை ஓட்டு ஓவியம். அவர்கள் அங்கு இருந்து வந்து வணிகம் செய்தனர். சரி, தமிழர்கள் அங்கே போய் வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உண்டா என்றால், நம்மை ஆச்சர்யப்படவைக்கும் தகவல்கள் நிறையவே உள்ளன.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டில் செங்கடல் கரையில் அமைந்துள்ள பண்டைய துறைமுகங்களான க்வெசிர் அல்காதிம், பெரெனிகே ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் 'க(ண்)ணன்’ 'சா(த்)தன்’ 'கொ(ற்)ற(ப்) பூமான்’ என்ற தமிழ்ப் பெயர்கள் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைத் துறைமுகமான அழகன்குளத்தில் ரோமானியக் கப்பல் ஒன்று பானை ஓட்டில் பதிவான அதே காலத்தில், எகிப்து நாட்டின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ரோம நாட்டுத் துறைமுகத்துக்கு தமிழ்ப் பெயர்கள் பதிவான மண் பானைகள் போய்ச் சேர்ந்தன. பாறையில் எழுதுவதைவிட பானையில் எழுதுவதே காலம்கடந்தும் நிலைத்திருக்கிறது. அதிசயம் என்ற சொல் இல்லாவிட்டால், இவற்றை எல்லாம் நாம் எப்படி வகைப்படுத்த முடியும் எனத் தெரியவில்லை.

இவையாவது வெறும் பெயர்கள் மட்டும்தான். ஆனால், பெயர் இல்லாத ஓர் அரிய கையெழுத்துச் சுவடி, ஆஸ்திரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ளது. ரோமானிய நாட்டு வணிகனுக்கும், தமிழகத்து வணிகனுக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் அது. பாப்பிரஸ் தாளில் எழுதப்பட்டது. இந்திய வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையான ஒப்பந்தம் இதுவே. முசிறி துறைமுகத்தில் பொருள் ஏற்றப்பட்டு, மத்தியத் தரைக்கடல் பகுதியில் நைல் நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா நகரைச் சென்று சேருவது சம்பந்தமான ஒப்பந்தம் அது. அங்கு இருந்து மத்தியத் தரைக்கடல் வழியாக ரோம் நாட்டை அடைவதற்கு, வேறு ஓர் ஒப்பந்தம் இருந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் கிரேக்க மொழியில் உள்ளதால், அந்த வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் வணிகனுக்கு, கிரேக்க மொழி தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அன்றைய தமிழகத்தில் கிரேக்கம் தெரிந்தவர்கள் பலரும் இருந்தனர் என்பதை நமது சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. பெருங்கதையின் நாயகன் உதயணனும், அவனது மனைவிகளில் ஒருத்தியான மான்னீகையும் யவன மொழியை அறிந்தவர்களாகச் சொல்லப்படுகின்றனர்.

நம் நூலகங்களில் இருக்கும் பெருங்கதை சொல்லும் உண்மையைத்தான், ஆஸ்திரியா நாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த ஒப்பந்தமும் சொல்கிறது. சரி, ஆஸ்திரியா எங்கே இருக்கிறது... அழகன்குளம் எங்கே இருக்கிறது. இவ்வளவு நெடுந்தொலைவு கடல் பயணம் எல்லாம் சங்கக் காலத்தில் எப்படிச் சாத்தியமானது எனக் கேட்டால், அரபிக் கடலில் அடிக்கும் பருவக்காற்றைப் பயன்படுத்தி இந்தப் பயணத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றனர். கடலில் வீசிய 16 வகையான காற்றையும், எண்ணற்ற கடல் நீரோட்டங்களைப் பற்றிய ஞானமுமே இந்தப் பயணத்துக்கு பாதை அமைத்திருக்கிறது. இயற்கையைப் பற்றிய அபரிமிதமான அறிவே, கடலைக் கடக்கும் ஆற்றலைத் தந்துள்ளது.

கி.பி முதல் நூற்றாண்டில் ஹிப்பலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியால் கிரேக்கத்தில் இருந்து அரபிக் கடலினூடே பயணம்செய்து, தமிழகத்துக்கு வந்து சேரும் ரகசியத்தைக் கண்டுபிடித்தான். அதற்கு முன்பு வரை கிரேக்கக் கப்பல்கள் கரை ஓரமாகவே நெடுந்தொலைவு சுற்றி, தமிழகத்துக்கு வந்துகொண்டிருந்தன. இந்தப் புதிய கண்டுபிடிப்புக்குப் பின், மிக விரைவாக தமிழகத்துக்கு வந்துசேர்ந்தன. கிரேக்கர்கள் அந்தப் பருவக்காற்றை, அதைக் கண்டுபிடித்த ஹிப்பலஸ்ஸின் பெயரிலேயே, 'ஹிப்பலஸ் பருவக்காற்று’ என அழைத்தனர்.

முசிறியில் இருந்து கப்பல்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செங்கடல் துறைமுகத்தை 40 நாட்களில் சென்று அடைந்திருக்கின்றன. அரபிக்கடலில் வீசும் பருவக்காற்றைப் பயன்படுத்தி நிகழ்ந்த பயணமாக இது இருந்துள்ளது.

பருவக்காற்றை நம்பிய இந்தக் கடல் பயணம், பெரும் செல்வத்தைத் தந்ததைப் போலவே பெருந்துயரத்தையும் தந்திருக்கிறது. பருவக்காற்றின் திசையைக் கணிக்க முடிந்த மனிதனால் அதன் வேகத்தையும் விபரீதத்தையும் கணிக்க முடியவில்லை. கப்பல் ஏறிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும், மீண்டும் கரை வந்து சேருவது என்பது சாதாரணமாக நடந்துவிடவில்லை. ஒவ்வொரு கடல் பயணமும் வாழ்வின் கடைசிப் பயணமாக அமையும் வாய்ப்பையே அதிகம் கொண்டிருந்தது.

சாதுவன் என்கிற வணிகன் பூம்புகாரில் இருந்து சாவக் தீவுக்கு வணிகம் செய்யப்போகிறான். அவன் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கிவிட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர். ஆனால், சாதுவன் மட்டும் கையில் கிடைத்த மரக்கட்டையின் உதவியால் நீந்தி நாகர் மலைத் தீவில் கரையேறி, பின்னர் நீண்ட காலம்கழித்து மீண்டும் ஊர் திரும்பும் கதையை மணிமேகலை கூறுகிறது.

கடல் பயணத்தில் இறந்துபோனதாகக் கருதப்பட்டவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பி வந்தபோது, நிலைமை எப்படி இருந்திருக்கும்? 'அய்யோ... வந்திருப்பது பேயோ, பிசாசோ..!’ என ஊரே அலறியடித்து ஓடியிருக்கும். ஓடும் கூட்டத்துக்குள் தனது மகளும் மகனும் இருப்பதைப் பார்த்தவன் என்னவாக ஆகியிருப்பான்? எந்த உயிர்களையும் உறவுகளையும் பார்ப்பதற்காக அவன் மரணத்தோடு போராடி மீண்டு வந்தானோ, அந்த உறவுகள் மரணத்தைவிட வலி நிறைந்த வாழ்வைப் பரிசாக வழங்கியிருக்கும்.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

இந்தக் கதை, அன்று கப்பல் ஏறிய ஒவ்வொரு மனிதனையும் பின்தொடர்ந்த கதைதான். காற்றையும் கடலையும் எதிர்கொள்ளும் நெடுந்தொலைவுப் பயணம், கணக்கு இல்லா கண்ணீரை தனது குடும்பத்தினர் சிந்துவதன் மூலம்தான் நிறைவேறியிருக்கும். வணிகத்தின் கொடுக்கல் வாங்கல் என்பது நாகரிகம், பண்பாடு, தொழில்நுட்பம் அனைத்தையும் ஓர் எல்லையில் இருந்து இன்னோர் எல்லைக்குக் கைமாற்றுகிறது. ஆனால் மாற்ற முடியாததாக இருந்தது, கடலில் போனவனுக்காக கரையில் இருந்தவர்கள் சிந்திய கண்ணீர்.

வரலாறு மற்றும் தொல்லியல் சான்றுகள் வணிகத்தால் ஏற்பட்ட வளமையைப் பேசின. ஆனால், அந்த வணிகக் குடும்பத்தினரின் தவிப்பையும் இழப்பையும், இலக்கியங்களும்  பண்பாடும்தான் பதிவுசெய்தன.

எகிப்து நாட்டின் துறைமுகத்தில் கிடைத்த பானை ஓடும், ஆஸ்திரியா நாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு வணிக ஒப்பந்தமும், அழகன்குளத்துப் பானை ஓட்டு ஓவியமும் இந்த வணிகம் சிறப்பாக நடந்ததற்கான விஞ்ஞானபூர்வமான சான்றை உலகுக்குத் தந்துள்ளன. அந்தச் சான்றை மேலும் உறுதிப்படுத்த இலக்கியம் கடல் அளவு கண்ணீரைத் தனக்குள் தேக்கிவைத்திருக்கிறது.

அந்தக் கண்ணீர் அழகன்குளத்துப் பானை ஓட்டில் வரையப்பட்ட கோட்டோவியத்துக்கு வேறு ஒரு கதையைச் சொல்கிறது!

- ரகசியம் விரியும்...

- சு.வெங்கடேசன், ஓவியம்: ஸ்யாம்