மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 4

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: தி.விஜய், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

குடியின் கேடுகளுக்கு உதாரணங்களைத் தேடி அலையவேண்டியது இல்லை. தமிழ்நாட்டின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும், குடிநோயாளிகள் இருக்கிறார்கள். அந்தக் குடும்பம், குடியின் அத்தனை தீங்குகளையும் சுமக்கிறது. எல்லாவற்றுக்கும் உச்சமாக இருக்கிறது திருப்பூர்-அனுப்பர்பாளையம் பகுதி. 

திருப்பூர் நகரத்தை ஒட்டிய புறநகரான அனுப்பர்பாளையத்தில், எந்தப் பக்கம்       திரும்பினாலும் குடிநோயாளிகள் பெருகி வழிகின்றனர். அதில் நாகராஜின் கதையைக் கேட்டாலே மனம் நடுங்குகிறது.

நாகராஜ், பித்தளைப் பாத்திரங்கள் தயார்செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த தொழிலாளி. பல ஆண்டுகளாக அதுதான் அவருக்கு வேலை. ஆனால், அது மட்டுமே அல்ல... குடியும் அவரது அன்றாடப் பணிகளில் ஒன்று. நாள் தவறாமல் குடித்தார். குடியின் அளவு, அன்று கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்தது. பையன் குடிக்கிறான் என்றால், தமிழ்நாட்டில் என்ன செய்வார்கள்? 'ஒரு கல்யாணத்தைப் பண்ணிவெச்சா எல்லாம் சரியாகிடும்’ என்பது, குடிநோய்க்கு தமிழ்ச் சமூகம் பரிந்துரைக்கும் நாட்டு மருந்து. 'இது நாட்டு மருந்து அல்ல; அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு வைக்கப்படும் வெடிமருந்து’ என்பதை, குடிகாரர்களுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்ட மனைவிகளைக் கேட்டால் சொல்வார்கள். இப்படித்தான் நாகராஜுக்கும் திருமணம் செய்துவைத்தார்கள்.

'அவ பேர் சர்மிளா. அத்தை பொண்ணு. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம். இவனுக்கு, இவதான்னு எல்லாருக்கும் தெரியும். அந்த நிலைமையிலதான் எங்களுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சாங்க. அப்பவே டெய்லியும் குடிப்பேன். 'இப்படிக் குடிக்காத, குறைச்சுக்க... குறைச்சுக்க’னு சொல்வா. 'சரி.. சரி’னு தலையாட்டிக்கிட்டு போவேன். ஆனா, வேலை முடிஞ்சு வந்தா குடிச்சுட்டுத்தான் வர்றது. அந்த நிலைமையிலதான் மூத்தப் பொண்ணு பொறந்தா. ஆஸ்பத்திரி செலவு, அது இதுனு குழந்தையை வளர்க்கிறதுக்கு நிறைய செலவாச்சு. வீட்டுச் செலவும் அதிகரிச்சுது. ஆனா, அப்போ இது எதுவும் புத்திக்கு எட்டலை. குடியையும் நிறுத்தலை. ரெண்டு வருஷம் கழிச்சு ரெண்டாவதா பையன் பொறந்தப்பவும் குடியை விடலை. அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சு மூணாவது பொண்ணு பொறந்தப்பவும் குடியை விடலை. மூணு பிள்ளைங்களை வெச்சுக்கிட்டுச் சமாளிக்க அவ ரொம்பக் கஷ்டப்பட்டா. போதையில எனக்கு எதுவும் மண்டைக்கு ஏறலை.

குடி குடியைக் கெடுக்கும் - 4

அந்தச் சமயத்துல பாத்திர கம்பெனி வேலை குறைஞ்சுபோச்சு. எனக்கு வேலை இல்லை. கடன் வாங்கிக் குடிக்க ஆரம்பிச்சேன். பிறகு, பனியன் கம்பெனியில டெய்லர் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல சம்பளம். வாரத்துக்கு 3,000 ரூபாய் கிடைச்சது. எல்லாத்தையும் குடிச்சே அழிச்சேன். வீட்டு வாடகை 1,500 ரூபாய், சமையல் பொருட்கள், துணிமணி... எல்லாத்துக்கும் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்கிற எண்ணமே இருக்காது. குடி போக கையில ஏதாச்சும் காசு மிஞ்சினா, வீட்ல குடுப்பேன். பிள்ளைங்களுக்கு பால்கூட வாங்கித் தராம அந்தக் காசை வெச்சுக் குடிச்சிருக்கேன்'' - தேம்பித் தேம்பி அழுகிறார். அவரது குரலில் கடந்தகாலத்தின் வலியும் எதிர்காலத்தின் அச்சமும் படர்ந்திருக்கின்றன. வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்க, துடைக்க வந்துகொண்டே இருக்கிறது.

'எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளைக்கு மூணு குவார்ட்டர் ஆகிடும். ஞாயித்துக்கிழமையில அது இன்னும் அதிகமாவும். எந்நேரமும் போதையிலதான் இருப்பேன். சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம், நல்லது, கெட்டதுக்குக்கூட குடிச்சுட்டுத்தான் போவேன். என்னைக் குடிக்காமப் பார்த்தவங்க குறைவு. வீட்டுல தினசரி சண்டை நடக்கும். என் பொண்டாட்டி என்னைக் கெட்ட, கெட்ட வார்த்தையால திட்டுவா. நான் பண்றது தப்புங்குறதால எதிர்த்துப் பேச மாட்டேன். பேசாம படுத்துக்குவேன்.

2014-ம் வருஷம் ஜனவரி மாசம், பொங்கல் சமயம். 'சிலிண்டர் வாங்கவும், பொங்கல் செலவுக்கும் அஞ்சாயிரம் வேணும்’னு கேட்டா. நான் ரெண்டாயிரம்தான் குடுத்தேன். திட்டிக்கிட்டே போயி, வேற யார்கிட்டயோ கடன் வாங்கி, மேற்கொண்டு பணத்தை ரெடி பண்ணியிருக்கா போலிருக்கு. அது எனக்குத் தெரியலை. பொங்கலுக்காக கம்பெனியில ஒரு வாரம் லீவு விட்டிருந்தாங்க. ஒவ்வொரு நாளும் காலையில எந்திரிச்சதுலேர்ந்து குடிக்க ஆரம்பிச்சேன். கையில வெச்சிருந்த காசெல்லாம் முடிஞ்சு, கடன் வாங்கியும் குடிச்சேன். அப்படியும் காசு வேணும். என்ன பண்றதுனு 'இவ ஏதாவது வெச்சிருக்காளானு பார்ப்போம்’னு நினைச்சு பீரோவைத் துலாவுனேன். உள்ளே 4,200 ரூபாய் இருந்துச்சு. எடுத்தா சண்டை போடுவானு தெரியும். ஆனா போதைவெறி, அதையெல்லாம் யோசிக்கவிடலை. அதுல ஒரு 200 ரூபாயை எடுத்துட்டுப் போய் குடிச்சுட்டு வந்துட்டேன். வந்து பார்த்தவ வழக்கம்போல காச்மூச்னு சத்தம் போட்டா. '200 ரூபாதானே... நாளைக்கே திருப்பி வெச்சுடுறேன் விடு’னு சொன்னேன். அவ கேட்கலை. சாயங்காலம் வரைக்கும் ஒரே சண்டை. சோறுகூட வடிக்கலை.

நைட் போல, 'அப்பா பசிக்குது’னு பிள்ளைங்க கேட்டுச்சு. சர்மிளா எங்கயோ வெளியில போயிருந்தா. பீரோவைத் திறந்து இருந்த பணத்துலேர்ந்து 200 ரூபா எடுத்துட்டுப் போய் பிள்ளைங்களுக்கு பரோட்டா வாங்கிக் குடுத்துட்டு, மீதிக் காசுக்குக் குடிச்சுட்டு வந்தேன். கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்தவ, பிள்ளைங்க சாப்பிடுறது... நான் குடிச்சிருக்கிறதைப் பார்த்துட்டு பீரோவைப் பார்த்தா. பணம் எடுத்தது  தெரிஞ்சுபோச்சு. ஒண்ணுமே சொல்லாம கம்முனு  போனா. நான் ஒரு ஓரமா படுத்துட்டேன். கொஞ்ச நேரத்துல என்னைக் கூப்பிடுற சத்தம் கேட்குது. திரும்பிப் பார்த்தா, மண்ணெண்ணையை உடம்பு பூரா ஊத்திக்கிட்டு, ஒரு கையில தீப்பெட்டி, மறு கையில தீக்குச்சியோட நிக்கிறா. 'பத்த வைக்கவா, பத்த வைக்கவா?’னு கேட்டுக்கிட்டு இருக்கும்போதே அவ கை, லேசா தீப்பெட்டில உராய்ஞ்சு... குபீர்னு பத்திக்கிச்சு. 'என்னை காப்பாத்துங்க’னு அலர்றா. படுத்திருந்த நான் அப்படியே முட்டிபோட்டு எந்திருச்சு, அவளை இடுப்போடு சேர்த்துப் பிடிக்கிறேன். என் கழுத்தைக் கோத்துக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு, 'காப்பாத்து, காப்பாத்து’னு கத்துறா. ரெண்டு பேர் உடம்பும் தீப்பத்தி எரியுது. என்ன நடக்குதுன்னே தெரியலை. அதுக்குப் பிறகு எனக்கு நினைவு இல்லை...' - முகம் வெந்து, தலை வெந்து, தீ தின்ற கைகளுடன் பேசுகிறார் நாகராஜ்.

குடி குடியைக் கெடுக்கும் - 4

மோசமான தீக்காயங்களுடன் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். நாகராஜுக்குக் குறைந்த தீக்காயம் என்பதால் திருப்பூரிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்மிளாவுக்கு மோசமான காயம் என்பதால், கோவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 10 நாட்களுக்கு மேல் தொடர்ந்த சிகிச்சையில் சர்மிளாவைக் காப்பாற்ற முடியவில்லை.

'அவ செத்தது எனக்கு மூணு மாசம் கழிச்சுத்தான் தெரியும். அதுவரைக்கும் நான் ஆஸ்பத்திரிலேயே இருந்தேன். அவ சாவை எனக்கு யாரும் சொல்லலை. ஒண்ணரை வருஷத்துக்கு மேல ஆவுது சர்மிளா செத்து. அவளோட அருமை இப்போதான் தெரியுது. இந்தப் பக்கமா வந்திட மாட்டாளா, அந்தப் பக்கமா வந்திட மாட்டாளானு ஏக்கமா பார்க்குறேன். மூணு பிள்ளைகளை வெச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளும் செத்துப் பொழைக்கிறேன். செத்தேபோயிடலாம்னு தோணுது. இப்போ விட்டாக்கூட, அவ போன இடத்துக்கே போயிருவேன். ஆனா, இந்தப் பிள்ளைங்க

மூஞ்சியை நினைச்சாத்தான் முடியலை. அம்மா, அப்பா இல்லாத அநாதைப்புள்ளைங்க ஆயிடுமே... இப்போ மட்டும் என்னா, நான் இருந்தும் என்ன பிரயோஜனம்? இந்த உடம்புக்கு என்ன வேலை செய்ய முடியும்? இப்போ கட்டணக் கழிப்பறையில காசு வாங்கிப் போடுற வேலைக்குப் போறேன். அதுவும் எத்தனை நாளைக்கோ தெரியலை.

குடிக்கிற காலத்துல ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்குக்கூட குடிச்சிருக்கேன். ஆனா, இன்னைக்கு மூணு பிள்ளைகளுக்கும் சேர்த்து 10 ரூபா பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் குடுக்க நாதி இல்லை. வீட்டு வாடகை 1,500 ரூபாயைக்கூட சுத்தியிருக்கிறவங்க உதவியாலதான் குடுக்குறேன். என் மாமியார்தான் இப்போ பிள்ளைகளைப் பார்த்துக்கிறாங்க. அவங்கதான் எனக்கு தெய்வம் மாதிரி' - நடுங்கும் குரலுடன் பேசுகிறார் நாகராஜ்.  

நாகராஜின் மூத்த பெண் லோகேஸ்வரிக்கு 8 வயது. 3-ம் வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது பையன் பரணீஷ§க்கு 6 வயது. 1-ம் வகுப்புப் படிக்கிறான். இருவரும் அருகில் இருக்கும் அரசுப் பள்ளிக்குச் செல்கின்றனர். கடைசிக் குழந்தை 4 வயது திப்ஷிகா, பால்வாடி போகிறாள். மூன்று பேரும் துறுதுறுப்பு நிறைந்த அழகுக் குழந்தைகளாக இருக்கிறார்கள்.

'டாஸ்மாக் கடைன்னா என்னன்னு தெரியுமா?' என லோகேஸ்வரியிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். சட்டென அவள் முகம் இறுகிப்போனது.

குடி குடியைக் கெடுக்கும் - 4

'எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பத்தி மட்டும் பேசாதீங்க' என முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் முகத்தில் பேரச்சம் நிரம்பிய எதிர்காலம் உறைந்திருப்பதைக் கண்டேன். நாளை, நாகராஜுக்கு வயதாகிவிடும். இப்போது கவனித்துக்கொள்ளும் பாட்டிக்கும் வயதாகிவிடும். தம்பியையும் தங்கையையும் கவனித்து கரைசேர்க்கும் பெரும் சுமை, இந்தச் சின்னப் பெண்ணின் தலையில்தான் விடியும். அல்லது 6 வயது சிறுவன் பரணீஷ் வளர்ந்து வந்து, தன் அக்காவையும் தங்கையையும் காப்பாற்ற வேண்டும். எப்படிப் பார்த்தாலும், இந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலம் பெரும் அபாயம் சூழ்ந்த இருள்பாதையாகவே நீள்கிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 4

'எல்லாத்துக்கும் நான்தாங்க காரணம். முறையா பார்த்தா, என் பொண்டாட்டி சாவுக்கு நான்தான் காரணம்னு என்னைப் பிடிச்சு உள்ளே போடணும். குடி, குடி, குடி... நான் அழிய முழுக் காரணம் குடிதான். போதை மயக்கத்துல என்ன செய்யுறோம்னே தெரியலை. நானும் கெட்டு, பிள்ளைகளையும் நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துட்டேன். குடிக்கிறவங்க தயவுசெஞ்சு இந்தக் கருமத்தை விட்டுத்தொலைங்க. குடியினால குடும்பம் எவ்வளவு கஷ்டப்படுதுனு கொஞ்சம் நினைச்சுப்பாருங்க. நானும் மூணு குழந்தைகளும் இன்னைக்கு நடுத்தெருவுல நிற்கிறோம். என்னைப் பார்த்தாவது திருந்துங்க. இப்போ கடையை மூடப்போறாங்கன்னு சொல்றதை நானும் பாத்துக்கிட்டேதான் இருக்கேன். மூடுனா ரொம்ப நல்லது. ஆனா மொத்தமா மூடணும். கடையைக் குறைக்கிறோம், நேரத்தைக் குறைக்கிறோம்னா, அதுனால பிரயோஜனம் இல்லை. குடிக்கிறவன், எங்கே இருந்தாலும் தேடிக் குடிச்சிருவான். இருக்கவே கூடாது. அப்பதான் குடி ஒழியும்' என்கிறார் நாகராஜ்.

இந்தக் கதை நாகராஜுடையது மட்டுமா... தமிழ்நாட்டில் இருப்பது ஒரே ஒரு நாகராஜ்தானா?

- போதை தெளிவோம்...

''ஊமைப் பிள்ளைங்களை வேலைக்கு அனுப்புறேன்!''

இது அனுப்பர்பாளையம் முனுசாமியின் கதை. நெடுநெடுவென ஆறடி உயரம் இருக்கிறார். ஆனால், நடந்துவரும்போதே உடல் பாகங்கள் நடுங்குகின்றன; கைகள் தடுமாறுகின்றன. உடல் எங்கும் கட்டி, கட்டியாக புண். கண் பார்வை கிட்டத்தட்ட இல்லை. சத்தம் வரும் திசையை நோக்கி உத்தேசமாகப் பார்க்கிறார்.

''பாத்திர வேலைதானுங்க பார்த்தேன். பத்து, பதினஞ்சு வருஷமா விடாம குடி. வாங்குற காசுல முக்காவாசியை குடிச்சே அழிச்சிருவேன். இப்போ ரெண்டு, மூணு வருஷமா உடம்பு சுத்தமா முடியாமப்போச்சு. உடம்பு பூரா புண். நரம்புநோய்ன்னு சொல்றாங்க. கை, கால் எல்லாம் அப்படியே இழுத்துக்கிட்டு நடுங்குது. மருந்து, மாத்திரைக்கு ஒண்ணும் கேக்க மாட்டேங்குது. கண் பார்வை வேற போச்சுங்க. இப்போ நீங்க நிக்கிறது, இருட்டா ஏதோ ஒரு உருவமாட்டம் தெரியுது, அவ்வளவுதான்.  

குடி குடியைக் கெடுக்கும் - 4

மொத்தம் மூணு பிள்ளைங்க. மூத்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அடுத்தது ஒரு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு பேருக்கும் காது கேக்காது; வாய் பேச வராது. அவங்க ரெண்டு பேரும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போறாங்க. அந்தக் காசுலதான் குடும்பம் ஓடுதுங்க. ஊமைப் பிள்ளைங்களை வேலைக்கு அனுப்பி கஞ்சி குடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாயிட்டமேனு ஒவ்வொரு நாளும் வேதனையா இருக்குதுங்க. செத்துப்போகணும்னா, எழுந்திருச்சிப் போயி விஷம் வாங்கக் கூட கையில காசு இல்லைங்க... வழி பார்த்துப் போறதுக்கு கண்ணும் தெரியலைங்க.'