சார்லஸ், படம்: கே.ராஜசேகரன்
''இந்தியாவுக்கும் சென்னைக்கும் ஒரு கப் கெலிச்சிக்கொடுக்கணும் சார். அதுதான் இப்போ என் டார்கெட்'' என்கிறார் தனபால் கணேஷ். இந்திய கால்பந்து அணியின் மிட்ஃபீல்டர். அபிஷேக் பச்சன், மகேந்திர சிங் தோனியின் சென்னையின் எஃப்சி அணி வீரர். கடந்த ஆண்டு இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், அரை இறுதி வரை முன்னேறிய அணி சென்னையின் எஃப்சி. ஆனால், சென்னை வீரர் யாரும் அந்த அணியில் அப்போது இல்லை. இந்த ஆண்டு சென்னை வீரராக, தமிழராகக் களம் இறங்க இருக்கிறார் 21 வயதான தனபால் கணேஷ்.
''நான் பிறந்து வளர்ந்தது வியாசர்பாடி. அப்பா, பர்மா தமிழர். அம்மாவுக்கு வீட்டு வேலை. அண்ணன்கள் ரெண்டு பேரும் ராணுவத்துல இருக்காங்க. அப்பாவுக்கு சின்ன வயசுல இருந்தே என்னை ஃபுட்பால் பிளேயர் ஆக்கணும்னு ஆசை. பள்ளியில் ஃபுட்பால் விளையாட என்னை ஆர்வப்படுத்தினார். சென்னையில் பிரபலமான விளையாட்டு கிரிக்கெட்னாலும், வியாசர்பாடியில் நம்பர் ஒன் விளையாட்டு ஃபுட்பால்தான். சின்ன கிரவுண்டு கிடைச்சாலும் பசங்க ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. அதனால எனக்கும் ஃபுட்பால் வெறி தொத்திடுச்சு. ஆனால், இந்திய அணி வரைக்கும் வருவேன்னு யாருமே நினைக்கலை. ஏன்... என் அப்பாகூட எதிர்பார்க்கலை'' என அடக்கமாகப் பேசுகிறார் கணேஷ்.
''எட்டாவது வரை வியாசர்பாடி எம்.பி.தேவதாஸ் ஸ்கூல்லதான் படிச்சேன். என் திறமையைப் பார்த்து நெய்வேலி இந்திய ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர்த்துக்கிட்டாங்க. அங்கதான் ப்ளஸ் டூ வரை படிச்சேன். எந்த நேரமும் ஃபுட்பால்தான். நைட் தூங்கும்போதும் ஃபுட்பால் விளையாடுற கனவுதான் வரும். இந்திய ஸ்போர்ட்ஸ் அகாடமிக்காக விளையாட ஆரம்பிச்சதும், தமிழ்நாடு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைச்சது. சென்னையில் கால்பந்து இன்னும் அவ்வளவு பிரபலமாகலைங்கிறதால, வடமாநில அணிகளில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஐ-லீக் போட்டிகளில் புனேவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைச்சது. அங்கே இருந்து இப்போ லோன் மூலம் சென்னை அணிக்கு வந்திருக்கேன்.''

''லோன் மூலம் சென்னை அணிக்கு வர்றதுன்னா என்ன?''
''சென்னை அணிக்கு, புனே அணி என்னைக் கடன்கொடுத்திருக்கு. ஐ.எஸ்.எல் போட்டிகள் முடிஞ்சதும் நான் மறுபடியும் புனே அணிக்கு போயிடுவேன்.''
''ஐ-லீக் போட்டிகளைவிட ஐ.எஸ்.எல் போட்டிக்கு இந்தியா முழுக்க அதிகக் கவனம் கிடைச்சிருக்கு. தோனி, அபிஷேக் பச்சன்தான் சென்னை அணியின் உரிமையாளர்கள் எனும்போது, சென்னை அணி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கே?''
''ஆமாம்... போன வருஷம் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளை ஒரு பார்வையாளனாத்தான் பார்த்தேன். அப்போ சென்னை அணியில் ஒரு சென்னை வீரர்கூட இல்லை. எனக்கு வாய்ப்பு கிடைச்சா பின்னிபெடலெடுப்பேன்னு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டிருந்தேன். இப்போ அது நிஜமாகிருச்சு. ஐ-லீக் போட்டிகள்ல நான் விளையாடிருந்தாலும் சென்னையில விளையாடினது இல்லை. உலகத்துல எந்த மூலையில விளையாடினாலும் சென்னையில, நம்ம சொந்தங்கள் முன்னாடி விளையாடும்போது கிடைக்கும் ஃபீலே வேற.''
''லீக் போட்டிகளுக்காக உங்களை எப்படித் தயார்படுத்திக்கிறீங்க?''
''காலையில் ரெண்டு மணி நேரம், மாலையில் ரெண்டு மணி நேரம் கால்பந்து விளையாடுவேன். இடையில் உடற்பயிற்சி. கால்பந்து விளையாட ஸ்டாமினா ரொம்ப முக்கியம். அதுவும் மிட்ஃபீல்டர், ஒரு நொடிகூட ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கிட்டே இருக்கணும். அதனால் ஃபிட்னஸில் அதிகக் கவனம் செலுத்துவேன். ஐ.எஸ்.எல் போட்டிகளுக்காக இத்தாலியில் இந்த மாசக் கடைசியில் தொடங்க உள்ள பயிற்சிமுகாமில் கலந்துக்கப்போறேன். சென்னையின் எஃசி அணியின் பயிற்சியாளரும், நட்சத்திர வீரருமான மார்க்கோ மத்ராஸி மற்றும் பிரேசிலின் ஸ்டார் பிளேயர் இலானோவுடன் பயிற்சிபெறுவது எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய வாய்ப்பு. இதைச் சரியாகப் பயன்படுத்தி சென்னை அணி, இந்திய அணி இரண்டிலும் நிரந்தர வீரர் இடம் பிடிக்கணும்'' எனக் கைகுலுக்குகிறார் தனபால் கணேஷ்.
கலக்குங்க கணேஷ்!