கவிதை: நரன், ஓவியம்: செந்தில்
இரவில் கனவில் வரும் நாய்களை விரட்ட
கனவின் வட மூலையில் சேமித்துவைத்திருக்கிறேன் கருங்கற்களை.
இதோ வந்துவிட்டன அவை.
ஆனால் நாய்கள் உடலை வளைத்துக்கொண்டு
வாலை தம் காலிடை நுழைத்துக்கொண்டு
என் முகத்தை தன் பெருநாவால் நக்குகின்றனவே.
அதன் முழங்காலிலிருக்கும் காயத்தின் மேல்
வீற்றிருக்கும் வெண்புழுக்களை அழிக்க
மஞ்சளைக் குழைத்துப் பூசச் சொல்லி
கால்களை நீட்டுகின்றனவே.

மேலும் மருந்திடும்போது
அதன் வயிற்றிலிருக்கும் குட்டிநாய்களும்
தத்தம் கால்களை நீட்டுகின்றனவே.
புழுக்களின் வயிற்றிலிருக்கும்
சிறிய புழுக்கள்
சிறிய நாய்களின் முழங்காலைக் குடைகின்றன.
கனவுக்குள்ளிருக்கும்
என் இந்தக் குட்டிக் கனவே.
நான்தான் அப்போதே சொன்னேனே
இந்தக் குட்டிநாய்களை விரட்ட
பெரிய கற்களுக்குள்
நிறைய சிறிய கற்களை மறைத்து...
மேலும், அவற்றை என் கர்ப்பவதி மனைவியின் அடி வயிற்றிலிருக்கும்
குழந்தையின் மடிந்த கைகளுக்குள்
அவற்றை ஒளித்துவைத்திருக்கிறேன்!